எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 3

Status
Not open for further replies.

Banu Novels

Moderator
இதயம் 3கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன ஆதீஸ்வரன் ஶ்ரீனிகாவின் வாழ்வில் மிகப்பெரும் புயல் வீசி..


அந்த நிகழ்வுகளின் தாக்கங்களும் அதனால் ஏற்பட்ட ரணங்களும் யார் மனதிலும் இல்லாமலில்லை..


குறிப்பாக தேஜஸ்வினி, ஶ்ரீனிகாவின் அன்னை அமிர்தா, ஆதீஸ்வரனின் அக்கா யமுனா, உத்ராவின் அன்னை வரலக்ஷ்மி ஆகியோருக்கு இப்போதுவரை ஆதீஸ்வரனையும் ஶ்ரீனிகாவையும் பார்த்தால் நெஞ்சம் வலித்து துடிக்கும்.

யாரும், யாரிடமும், எதையும் காட்டிக் கொள்ளாமல் வாழப் பழகியிருந்தனர். மறந்தும் கூட அவர்கள் பழைய விடயங்களை பேசிக்கொள்வதில்லை.

ஆதீஸ்வரனின் அன்னை ஜானகி, தியாகராஜன் மற்றும் யசோதா ஆகியோர் காலமாகியிருந்தனர்.

சில வருடங்களிலேயே மனநல காப்பகத்திலிருந்து வெளிவந்த மித்ரேஷ் தியாகராஜன் இருக்கும்வரை அவருடனே தங்கியிருந்தான். அவரது மரணத்தின் பின் எங்கு சென்றான் என்றே தெரியாமல் காணாமல் போயிருந்தான். அவனை யாரும் தேடவும் இல்லை யசோதா உட்பட.

உத்ரா தன் அன்னையுடன் லண்டனில் வசித்துக் கொண்டிருந்தாள்.

வரலக்ஷ்மிக்கு மகளுடன் சென்று வசிக்க துளிக்கூட இஷ்டமில்லாவிட்டாலும் ஒற்றை பெண் பிள்ளை கணவனை பிரிந்து, பெற்ற குழந்தையையும் ஆதியிடம் கொடுத்துவிட்டு, தந்தையின் மரணத்துக்கு தான்தான் காரணம் என்ற குற்றவுணர்வுடன் இருப்பவளை தனியாக விட்டுவிட மனமில்லாததால் அவளுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தவருக்கு அங்கிருந்த தனிமையான சூழல் சுத்தமாக ஒத்து வரவில்லை. பலகாலமாக ஊருக்கு போக வேண்டி மகளை நச்சரித்துக்கொண்டே இருந்தார். அவள் இந்தியா பக்கம் திரும்பி கூட பார்ப்பதாக தெரியவில்லை. இறுதியில் என்ன நினைத்தாளோ அன்னையை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு சென்றாள் உத்ரா. அங்கு யமுனாவும் குடும்பத்துடன் வசித்து வந்ததால் வரலக்ஷ்மிக்கு அதுவே பெரும் ஆறுதலாக இருந்தது.

யசோதா இறுதிவரை தியாகராஜன் வீட்டுக்கு செல்லவே இல்லை. அவர் மரணித்தபோது சென்று பார்த்துவிட்டு வந்ததுதான். மகளுக்கு திருமணம் செய்து அனுப்பி வைத்தவர் அத்தனை காலம் ஒடுங்கிப்போய் அன்னையின் வீட்டில்தான் இருந்தார்.

மகன் காணாமல் போய்விட்டான் என்று அறிந்தபோது பெற்ற தாயாக உள்ளம் பதறத்தான் செய்தது. ஆனால் யாரிடமும் அவனை தேட சொல்லும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை. அவன் எங்காவது நன்றாக இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்வார். வாழ்வே வெறுத்த நிலையில் இருக்கும்போது மீண்டும் அவருக்கு உயிர்ப்பளித்தது ஜியாஶ்ரீதான்.

“யசோ அத்தை” என்று அவள் அழைத்துக்கொண்டு அருகில் வரும்போதெல்லாம் ‘நான் உனக்கு அத்தையில்லை.. உன் தந்தையை பெற்றவள்.. நீ என்னுடைய வாரிசு’ என்று மனம் கிடந்து அரற்றும்.

ஆனால் அதனை அவளிடம் சொல்லிவிட முடியாமல் மனம் குற்றவுணர்வில் தத்தளிக்க ஆரம்பித்துவிடும். வாயே திறக்க மாட்டார். மனம் வலித்தாலும் அவளை “மருமகளே” என்றுதான் அழைப்பார்.

அவளைப் பார்க்கும்போதெல்லாம் அத்தனை ஆனந்தம் அவருக்கு.. அதனை உணர்ந்தவனாக மாதம் ஒரு முறையாவது மகளை அன்னையின் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவான் ஆதீஸ்வரன்.

அத்தனை காலம் வரை ஜியாவிடம் யாரும் எந்த உண்மையும் சொன்னதில்லை. அவள் ஆதீஸ்வரன், ஶ்ரீனிகாவின் மகளாகத்தான் வளர்ந்து வந்தாள்.

அவளுடைய பதினைந்தாம் வயதின்போது ஜானகி உடல்நிலை சரியில்லாமல் மரணத்தருவாயில் இருந்தவர் மகனிடம் தன்னுடைய இறுதி வேண்டுகோளாக ஜியாவை பெற்றவர்களை பற்றி அவளிடம் அனைத்து உண்மையும் கூறிவிடுமாறு சொன்னார்.

ஆதி, ஶ்ரீனிகா இருவருமே ஒன்றாக மறுத்தனர்.

“இப்ப எதுக்கும்மா அவகிட்ட இதெல்லாம் அவகிட்ட சொல்லிக்கிட்டு.. அவ வருத்தப்படுவா அதெல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்றான் ஆதீஸ்வரன்.

“ஜியா வளர்ந்துட்டா ஆதி. உண்மைய ரொம்ப காலத்துக்கு மறைச்சு வைக்க முடியாது. உன் அக்கா பையனும் அண்ணன் பொண்ணும் இன்னும் உயிரோடதான் இருக்காங்க. அவங்க ரெண்டு பேரையும் நம்ப முடியாது. அவங்க சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்வாங்க. ஜியாவுக்கு இப்பவே அவங்கள பத்தி சொன்னாதான் பின்னாடி எந்த பிரச்சினையும் வராம இருக்கும்.. இதை நான் எல்லாரோட நல்லதுக்காகவும்தான் சொல்றேன். நாளைக்கு யாரும் வந்து ஜியா மனச கலைச்சி உன்கிட்ட இருந்து பிரிச்சிட கூடாது பாரு”

ஏனோ ஆதிக்கு இதில் துளிக்கூட உடன்பாடு இருக்கவில்லை.

“யார் என்ன சொன்னாலும் அவ எப்பவும் என் பொண்ணுதான்மா.. அப்படில்லாம் ஒருத்தரும் அவ மனச மாத்தி என்கிட்ட இருந்து பிரிச்சிட முடியாது” என்றான் உறுதியான குரலில்.

அவன் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. ஏனோ இதற்காகவே எமனுடன் போராடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பவரைப் போல அந்த மரணத்தருவாயிலும் அவரிடம் அத்தனை பிடிவாதம்.

இறுதியில் வேறு வழியில்லாமல் அவன்தான் இறங்கி வர வேண்டியதாயிற்று.

“சரி என்னமோ செய்ங்க” என்றான் கோபமாக “ஆனா நான் அவகிட்ட எதுவும் சொல்லமாட்டேன்.. என்னால முடியாது”

“நீ சொல்ல வேண்டாம். நான் சொல்றேன்” என்றார் ஜானகி.

இது அத்தனை பேருக்கும் மனவேதனையை கொடுக்கும் என்று அவர் அறியாமலில்லை.. பிற்காலத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்தார்.************************************
அன்று அந்த நாளில் எந்த வேதனையை அனுபவித்தாளோ இதோ இப்போதும் துளிக்கூட குறையாமல் அதே வேதனையை அனுபவித்தவளாக அழுது கொண்டிருந்தாள் ஜியாஶ்ரீ.


ஆதீஸ்வரனும் ஶ்ரீனிகாவும் உன்னை பெற்றவர்களில்லை என்று ஜானகி சொன்னபோது முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதனை உள்வாங்கிக் கொள்வதற்கே அவளுக்கு சிலபல நிமிடங்கள் தேவைப்பட்டன. அதன்பிறகு அவர் சொன்ன ஒவ்வொரு விடயங்களும் அவளது காதுக்குள் இடியாகத்தான் வந்திறங்கின.

முழுவதுமாக பக்குவப்பட்டுவிட்ட என்று சொல்லவும் முடியாத அதே சமயம் பக்குவப்படாத என்றும் சொல்ல முடியாது அந்த ரெண்டும்கெட்டான் வயதில் இதனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தடுமாறித்தான் போனாள் அவள்.

அவர் சொன்ன அத்தனையும் கேட்டுவிட்டு ஆதீஸ்வரனிடம் ஓடிச்சென்று “நான் உங்க பொண்ணு இல்லையா டாடி” என்று அவனை அணைத்துக் கொண்டு கதறியது எல்லாம் இப்போதுபோல் நினைவில் வந்து அவளை கலங்கடித்தது.

ஆதீஸ்வரனும் ஶ்ரீனிகாவும்தான் அத்தனை முயற்சிகள் செய்து அவளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்திருந்தனர்.

எதைப்பற்றியும் நினைக்கக்கூடாது என்று அவர்கள் எவ்வளவு சொல்லியிருந்தும் அவளையும் மீறி அவ்வப்போது அந்த விடயங்கள் மனத்தில் தோன்றி அவளை அரித்துக்கொண்டுதான் இருந்தன.

அதுவும் அவளை பெற்றவர்கள் இருவரும் செய்த செயல்களை அவளால் என்றைக்குமே ஜீரணிக்க முடிந்ததில்லை.

எப்படி ஒருவனால் தான் சிறுவயதிலிருந்து விரும்பிய பெண்ணை ஏமாற்றி, அவள்மீது தகாத பழி போட்டு.. இடையில் வந்த இன்னொரு பெண்ணுக்காக எப்படி இத்தனையும் செய்ய முடிந்தது. அதோடு விட்டானா தனக்கு திருமணமான பிறகு கட்டியவளுக்கு உண்மையாக இல்லாமல் மீண்டும் பழைய காதலியை தேடிச்சென்றிருக்கிறான்.

தந்தைதான் இப்படியென்றால் தாய் அதற்கும் ஒருபடி மேல்.. இன்னொரு பெண்ணை விரும்புகிறான் என தெரிந்தும் வலுக்கட்டாயமாக குறுக்கே வந்து அத்தனையும் கெடுத்து அத்தை மகனை திருமணம் செய்திருக்கிறாள். கணவன் செய்த தவறுக்கு அப்பாவி ஶ்ரீனிகாவை பழிவாங்குவதற்காக வயிற்றிலிருக்கும் குழந்தையை பணயமாக வைத்து தந்தைக்கு நிகராக பாசம் காட்டி வளர்த்த ஆதீஸ்வரனின் காதலை பிரிக்க முயற்சி செய்திருக்கிறாள்.

ஜியாவுக்கு நினைக்கவே அருவருப்பாக இருந்தது.

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை அவர்களுக்கு குழந்தையே பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள்.

அவர்கள் இத்தனை செய்தும் அவர்கள் பெற்ற குழந்தையை தங்களுடைய சொந்த பிள்ளையாக வளர்த்திருக்கும் ஆதீஸ்வரனுக்கும் ஶ்ரீனிகாவுக்கும் தான் மகளாக பிறக்கவில்லையே என்ற ஏக்கம்தான் அவளுக்கு அதிகமாக இருந்தது.

ஒரு தடவை கூடவா தன் முகத்தை பார்க்கும்போது தன்னை பெற்றவர்கள் செய்த துரோகம் அவர்களுக்கு நினைவில் வந்திருக்காது. ஆனால் ஒருபோதும் அதனை வெளிப்படுத்தியதே இல்லையே.

சொல்லப்போனால் சொந்த பிள்ளையைவிட ஒருபடி மேலாகத்தான் அவளை வளர்த்திருக்கிறார்கள்.

பலமுறை அவள் எண்ணியெண்ணி நொந்துபோன விடயங்கள்தான் இன்று ஒருவன் அத்தனையும் வரி விடாமல் மீண்டும் சொல்லிக்காட்டி அவளது வேதனையை இருமடங்காக்கி விட்டான்.

அவளுக்கு என்ன கிரகமோ தேவையில்லாமல் அவனிடம் பேச சென்று வாங்கி கட்டிக் கொண்டாள்.

முதலில் அவனிடம் எதற்காக பேசப்போனோம் என்பதையே மறந்து பார்த்திருந்தவளுக்கு “அதுல உங்களுக்கு என்னங்க ப்ராப்ளம்?” என்று அவன் கேட்டபிறகுதான் தனக்கு என்ன பிரச்சினை என்பதே மெல்ல மெல்ல நினைவுக்கு வரத்துவங்கியது.

அம்ருதாவின் திருமணம்!

“உங்… உங்களாலதான் என் அக்கா கல்யாணம் ந.. நடக்காம தள்ளிப்போய்கிட்டே இருக்கு” என்றாள்.

பிரச்சினை நினைவு வந்ததும் அவளது பதட்ட நிலை சற்று குறைந்திருந்தது.

“என்ன?” என்றான் அவன் “புரியல”

அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை இவளுடைய அக்காவின் திருமணம் நடக்காமல் போவதற்கும் தனக்கும் என்ன சம்மந்தம் என்று.

அவன் புரியவில்லை என்றதும் அவளுக்கிருந்த கொஞ்சநஞ்ச பயமும் மறைந்து அந்த இடத்தை கோபம் ஆக்கிரமித்துக் கொண்டது.

‘இவனால அஞ்சு வருஷமா கல்யாணமே பண்ணிக்காம இருக்காங்க. இந்த எருமைக்கு புரியலையாமே’

“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்றாள் கோபமாக “அதான் உங்க காதல் ஏழு வருசத்துக்கு முன்னாடியே புட்டுகிச்சே அப்புறம் எதுக்கு இன்னும் அதையே புடிச்சி தொங்கிட்டு இருக்கீங்க. காலாகாலத்துல கல்யாணத்த பண்ணி தொலைக்க வேண்டியதுதானே.

அத்தனை நேரம் முகத்தில் இருந்த மெல்லிய உணர்வு மறைந்து விழிகள் இடுங்க புருவம் சுளித்தான் அவன்.

“இல்ல தெரியாமதான் கேக்கிறேன்.. கவின் மாமா உங்க சித்தப்பா பையன்தானே. கஸ்தூரி அத்தை உங்க அப்பாவோட தம்பி வொய்ஃப்தான? அப்புறம் எதுக்கு அவங்கள இந்த வீட்டுல அடிமை மாதிரி வெச்சிருக்கீங்க. இதுல உங்க அம்மா என்னடான்னா என் புள்ள கல்யாணம் பண்ணிக்காம கவினுக்கு கல்யாணமே நடக்க விடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுது. ஏன் மகாராஜா கல்யாணம் பண்ணிக்காம ஊர்ல உலகத்துல வேற யாரும் கல்யாணமே பண்ணிக்க கூடாதோ. என்ன மாதிரியான சுயநலம் இது”

இப்போது அவன் முகம் மொத்தமாக மாறிவிட்டது. கொஞ்ச நேரத்துக்கு முன்பு தன்னிடம் ஒற்றை வார்த்தை பேசக் கூட தடுமாறி நின்றவள் இப்போது கோபமாக பேசுவதை கண்டு தாடை என்புகள் இறுக அவளை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்.

அடிக்கடி அம்ருதாவிடமோ அல்லது யாதவ் வீட்டு வேலைக்காரர்களிடமோ அவனை பற்றி கழுவி ஊற்றுவதை வழக்கமாக வைத்திருந்தவள் இப்போது அவனிடமே அவனை கழுவி ஊற்றுகிறோம் என்பதை உணராமல் மனதிலிருந்த வன்மத்தையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“நிஜமாவே லவ் ஃபெயிலியர்னாலதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்களா என்ன?” என்றாள் நக்கலாக “இல்ல வெளிய சொல்ல முடியாத அளவுக்கு வேற ஏதாவது ரீசன் இருந்தா உங்க அம்மாகிட்டயே நேரடியா சொல்லிருக்கலாம் அம்மா அம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம் நான் கடைசி வரைக்கும் கட்டபிரம்மச்சாரியாவே இருந்துக்கிறேன்.. எனக்காக நீ அடுத்தவங்க வாழ்க்கையில துண்டு போட்டு விளையாடதேம்மான்னு”

அவனது பொறுமை மொத்தமாக காற்றில் பறந்திருந்தது.

“என் அக்காவா இருக்கப்போய் யார்கிட்டயும் சொல்லாம பார்த்துட்டு இருக்கா.. எங்க டாடிக்கு தெரிஞ்சா அவர் இந்த விஷயத்த டீல் பண்ற விதமே வேற மாதிரி இருந்திருக்கும்”

அவள் மட்டுமே பேசிக்கொண்டிருக்க அத்தனை நேரம் ஒற்றை வார்த்தை கூட பேசாமல் நின்றிருந்தவனின் இதழ்கள் ஏழனமாக வளைய ஆரம்பித்தன.

“டாடியா! யாரும்மா உன் டாடி? ஆதீஸ்வரனா?” சத்தமாக சிரித்தான் அவன்.


“உன்னை பெத்த அம்மா ஆசைப்பட்ட பையன கட்டிக்கிறதுக்காக அவன் காதலை பிரிச்சி, மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. உன் அப்பன் அதுக்கும் மேல காதலிச்ச பொண்ண கழட்டிவிட்டு உங்கம்மாவ கல்யாணம் பண்ணி அப்புறம் சலிச்சுப்போனதும் பழைய காதலிய தேடிப்போய்…….. கடைசியில அவங்க குழந்தையே பெத்துக்க முடியாம பண்ணின உத்தம்புத்திரன்”

“அதுங்க ரெண்டுக்கும் பொறந்த நீ உன்ன பெத்தவங்களால முழுசா பாதிக்கப்பட்ட ஆதீஸ்வரன், ஶ்ரீனிகா வீட்டுலயே அவங்களுக்கு பொண்ணா இத்தனை வருஷம் வளர்ந்திருக்க.. ஒரு குடும்பத்துல ஒருத்தர் ரெண்டு பேர் சுயநலமா இருக்கலாம் மொத்த குடும்பமே சுயநலமா இருக்கிறத இப்பதான் பார்க்கிறேன்.. இது எல்லாத்தையும் விட பெரிய காமெடி என்னன்னா நீ என்னை பார்த்து செல்ஃபிஷ்னு சொல்ற பார்த்தியா.. சிரிப்பா இல்ல ஹாஹாஹா…”

“ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல நீயெல்லாம் எப்படி எல்லா உண்மையும் தெரிஞ்சிருந்தும் அதே வீட்டுல அவங்க சாப்பாட்டையே சாப்பிட்டு அப்பா, அம்மான்னு உறவாடிக்கிட்டு உயிரோட இருக்க? உன் இடத்துல வெட்கம், மானம், சூடு, சொரணை இதெல்லாம் இருக்கிற வேற யாரா இருந்தாலும் எப்பவோ நாட்டுக்கிட்டு செத்திருப்பாங்க” எங்கு அடித்தால் அவளுக்கு வலிக்கும் என்று அறிந்திருந்தவனாக கூறி முடித்தவன் நீர் கோர்த்திருந்த ஜியாவின் விழிகளைக் கண்டு அவளைக் காயப்படுத்திவிட்ட திருப்தியுடன் அங்கிருந்து சென்றான்.

கன்னத்தில் கோடாக இறங்கிய கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் வேதனையுடன் நின்றிருந்தாள் ஜியாஶ்ரீ.

இவனைப்பற்றி தெரிந்திருந்தும் பேச வந்தது அவளுடைய தவறுதான். சும்மா நாட்களிலே இவன் இருக்கும் திசைப்பக்கம் கூட அவள் செல்வதில்லை. இப்போது வேறு வழியில்லாமல் அம்ருதாவுக்காகத்தான் பேச வந்திருந்தாள்.

இதுவரை யாருமே அவளது முகத்துக்கு நேராக அவளைப் பெற்றவர்களை பற்றியோ அவளது பிறப்பை பற்றியோ பேசியதில்லை. அப்படி யாராவது பேசினால் ஆதி அவர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய்திருப்பான். இப்போது கூட இவன் பேசியதை ஒரு வார்த்தை ஆதியிடம் சொன்னால் போதும். ஆனால் அதனை செய்ய முடியாமல் அவளது தமக்கையின் காதல் குறுக்காக நிற்கிறதே.

அதிலும் அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை ‘அவங்க குழந்தையே பெத்துக்க முடியாம செஞ்ச உத்தம்புத்திரன்’

அதுதான் அந்த வார்த்தைதான் பெண்ணவளின் உயிர்வரை சென்று குத்தி கிழித்து பதம் பார்த்துவிட்டிருந்தது.

அவன் சென்றபிறகும் கூட அவனுடைய அறையில் அதே நிலையில் அப்படியே நின்றிருந்தவள் வெகு நேரத்திற்கு பிறகுதான் சுற்றம் உணர்ந்து அங்கிருந்து வெளியேறினாள்.

மாடியிலிருந்து இவள் இறங்கி வருவதை கண்ட கஸ்தூரி ஏதோ சொல்லவர பெண்ணவளோ எதையும் உணரும் நிலையில் இல்லை. கஸ்தூரி கூப்பிட கூப்பிட திரும்பியும் பாராமல் பிரம்மை பிடித்தவள் போல் சென்று கொண்டிருந்தாள். எப்படி அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வந்தாள் என்பது அவளே அறியாள்.


**********************************


யாதவ வர்மன் மாலை ஏழு மணியளவில் தன்னுடைய அலுவலகத்திலிருந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நட்சத்திர விடுதியை பார்வையிடுவதற்காக வந்திருந்தான்.


வழக்கமாக காலை வேளைகளில்தான் வருவான். ஏனோ சில நாட்களாக நிழல் தொடர்வதை போல் ஷன்மதி அவனை பின்தொடர்ந்து கொண்டு இருக்கிறாள். அவனுக்கு அது பிடித்தும் இருந்தது பிடிக்காமலும் இருந்தது.

அவள் தன்னிடம் தனிமையில் பேச விரும்புவதை கண்டுகொண்டவன் அவளுக்கு அதற்கான வாய்ப்பே கொடுக்காமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான். அதனால்தான் இப்போதும் இந்த நேரத்தில் வந்திருந்தான்.

யாரிடமும் எதுவும் அறிவிக்காமல் தனியாகவே சென்று வேலை நடந்து கொண்டிருக்கும் இடங்களை பார்வையிட்டவன் அந்த விடுதியில் அவனுக்கென்றிருந்த பிரத்தியேக அறையை நோக்கி சென்றான்.

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய அங்கிருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தது சாட்சாத் ஷன்மதியேதான்.

அவளெதிரில் நின்று கொண்டு எதையோ சொல்லிருக் கொண்டிருந்த அந்த விடுதியின் மேனேஜர் யாதவ வர்மனை கண்டதும் “சார்” நடுநடுங்கியவனாக இவனிடம் வந்தவன் “நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம இங்கேயே இருக்காங்க சார்” என்றான்.

ஷன்மதியின் முகத்திலேயே பார்வையை பதித்திருந்த யாதவ வர்மன் “நீ போ” என்றான் மேனேஜரிடம்.

கிரேப் வயலட் வண்ணத்தில் அவள் அணிந்திருந்த புடவை அவளது எலுமிச்சை நிறத்திற்கு அத்தனை எடுப்பாக இருந்தது. அவனால் அவளிடமிருந்து விழிகளை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர்த்தவே முடியவில்லை.

காதலிக்கும் நாட்களில் எத்தனையோ தடவை அவளை புடவை கட்ட சொல்லியிருக்கிறான். அவள் ஒரு தடவை கூட கட்டியதில்லை. இப்போதோ அவன் கண்ணில் படும் நேரங்களிலெல்லாம் புடவையில்தான் தென்படுகிறாள்.

அவனுக்குள் கோபம் துளிர்த்தது.

அதனை அவளும் உணர்ந்தாளோ என்னவோ முத்துப் பல்வரிசை தெரிய அழகாக சிரித்துக் கொண்டே “இன்னைக்கு நீ எப்படியும் வருவேன்னு தெரியும் யாதவ்” என்றாள்.

“என்ன வேணும் உனக்கு?” அவன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை.

“உன்கிட்ட ஒன்னு கேக்கனும்.. அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டேன்னா உன்ன விட்ருவேன்”

“கேளு” என்றான் ஒற்றை வார்த்தையாக.

“எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற?”

இதே கேள்வியை இன்று இன்னொருத்தியும் அவனிடம் கேட்டிருந்தாள். அதனை அப்போதே மறந்தும் விட்டிருந்தான். இப்போது இவள் கேட்கவும் அந்த நினைவும் சேர்ந்து வந்து அவன் முகம் இறுகியது. கூடவே அவள் பேசிய துடுக்குத்தனமான பேச்சுக்களும்.

பல்லைக் கடித்தவன் “கவலபடாதே உன் கல்யாணம் நடக்கிறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி என் கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கும்” என்றான்.
“ஓஹ்” என்றாள் அவள் “அப்போ நீ கடைசி வரைக்கும் உன் மனசுல இருக்கிறத சொல்லவே மாட்டேல்ல யது”

அவளுக்கு தேவையென்றால் அவன் பெயர் சுருங்கி யது ஆகிவிடும்.

தாடையை தடவினான் அவன் “அப்படி என்ன விஷயம் எனக்கே தெரியாம என் மனசுல இருக்கு.. அதுவும் உனக்கு மட்டும் தெரிஞ்சிருக்கு” என்றான் நக்கலாக.

“நடிக்காத யாதவ்.. உன் மனசுல நான் இல்ல”

“இல்லவே இல்ல” என்றான் அவன் “நீ வேண்டாம்னு தானே ஏழு வருஷத்துக்கு முன்னாடியே உன்ன விட்டு விலகி வந்தேன்.. வேண்டாம்னு தூக்கிப்போட்டுட்டு போனதையெல்லாம் மனசுல வெச்சிட்டு இருக்கிற பழக்கம் எனக்கு மட்டுமில்ல என் பரம்பரைக்கே கிடையாது”

அதுதான் அவளுக்கும் பிரச்சினையாக இருந்தது. அவளை முதன்முதலாக வேண்டாம் என்று மறுத்துவிட்டு சென்றது அவன்தான். தன்னை ஒருவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனதே அ்அத்தனை காலமும் வன்மமாக தீயாக அவள் மனதில் கனன்று கொண்டே இருக்கிறது.
“அப்ப கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே.. உன் சித்தப்பா பையன் கவினுக்கே அடுத்த மாசம் கல்யாணம் ஆகப்போகுது. நீ மட்டும் இப்படி தனிமரமா நின்னுட்டு இருக்க. இதுல உன் அம்மா என்னடான்னா தினமும் என் அம்மாவுக்கு கால் பண்ணி என் பையன் உங்க பொண்ண தவிர வேற யாரையும் கல்யாணமே பண்ணிக்க மாட்டான் சம்மந்தினு சொல்லிட்டு இருக்காங்க” என்றாள் நக்கலாக.

அன்னையை நினைத்து அவன் முகம் மேலும் இறுகியது.

“நான் கல்யாணம் பண்ணிக்கலன்னு எல்லாரையும்விட நீதான் ரொம்ப ஃபீல் பண்ற போலருக்கு.. உன்னை சந்தோசப்படுத்துற மாதிரி ரொம்ப சீக்கிரமாவே என் கல்யாண இன்விடேஷன் உன் வீடு தேடி வரும்.. வந்து வாழ்த்திட்டு போ” என்றான் கோபமாக.

அவள் அசையாமல் அங்கேயே நிற்கவும் “அதான் உன் கேள்விக்கு பதில் கிடைச்சுடுச்சுல நீ கிளம்பலாம்” என்றான்.

“என்ன உன்கிட்ட வேலை பார்க்கிற எவளுக்காவது பணம் கொடுத்து பொண்டாட்டினு கூட்டிட்டு வரப்போறியா? அதான் அழகான பொண்ணுங்களா பார்த்து பார்த்து வேலைக்கு வெச்சிருக்கியே” பல நாட்களாக அவளுக்கு அவன்மீது இந்த கோபம் உண்டு.

அதை உணர்ந்தவன் போல் லேசாக சிரித்தவன் “நான் ஜஸ்ட் காதலிக்கிறதுக்கே பார்த்து பார்த்து ஷன்மதி ராம்குமார சூஸ் பண்ணின ஆளு.. கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உன்னைவிட எல்லாவிதத்துலயும் பெட்டரான ஒருத்தியதான் கட்டிக்குவேன்.. இன்னும் கொஞ்ச நாள்ள உனக்கே தெரிய வரும்.. இப்ப கிளம்புறீங்களா மேடம்” என்றான்.

அவள் கோபமாக திரும்பி செல்வதை பார்த்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தவன் சிறு பெருமூச்சுடன் தலைமுடியை கோதி விட்டுக் கொண்டான்.

அவன் வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் பெண்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒன்று அவனுடைய அம்மாவை பெற்ற பாட்டி. அவர் இப்போது உயிருடன் இல்லை. இன்னொன்று அவனுடைய மது அத்தை. மதுபாலா.

சிறுவயதிலிருந்தே மதுபாலாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அத்தனை ஆளுமையுடன் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டியாள்பவள் வீட்டில் இந்திரஜித்தின் காதல் மனைவி, அவளுடைய குழந்தைகளுக்கு அன்பான தாய். அவர்களை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வாள்.

இந்திரஜித் ஒன்றும் மதுபாலா அளவுக்கு வசதியெல்லாம் கிடையாது. ஆதீஸ்வரனிடம்தான் வேலை செய்து கொண்டிருந்தான். தன்னுடைய உழைப்பில் சேமித்த பணத்தை கொண்டு அவன் தொழில் ஆரம்பிக்க தொடங்கியபோது ஆதியும் மதுபாலாவும் பண உதவிகள் செய்ய முன்வந்தபோது அவன் மறுத்துவிட்டான்.

அவனுடைய மனதை புரிந்து கொண்டவளாக அவனுக்கு மனதளவில் உறுதுணையாக இருந்தாள் மதுபாலா.

எப்போதும் தாழ்வுமனப்பான்மையிலேயே இருந்தவனுக்கு மதுபாலா கொடுத்ததெல்லாம் தன்னம்பிக்கையும் உனக்கு எப்போதும் பக்கபலமாக நான் இருக்கிறேன் என்கிற உணர்வையும்தான். இப்போது இந்திரஜித் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறான்.

அதனை கண்முன்னே பார்த்து வளர்ந்தவனுக்கு தன்னுடைய அம்மா ஏன் இப்படி இல்லாமல் போனார் என்ற எண்ணம் எப்போதுமே மனத்தில் தோன்றிக்கொண்டே இருக்கும்.

ரேனுகாவுக்கு செல்லுமிடத்திலெல்லாம் அதிகாரம் செய்வது மட்டும்தான் பழக்கமாக இருந்தது. கணவனையே அத்தனை காலம் அடிமையாகத்தான் வைத்திருந்தாள்.

கண்ணாலேயே கட்டளையிடும் தாயும் அதனை தலையால் ஏற்று நிறைவேற்றும் தந்தையும் பார்த்தால் யாதவ வர்மனுக்கு அத்தனை எரிச்சலாக இருக்கும்

அவனுடைய இளமைக்காலங்கள் பெரும்பாலும் மதுபாலாவின் வீட்டில்தான் கழிந்தது. அங்கு சென்றால்தான் அவனுக்கு தாய்வீட்டில் இருக்கும் உணர்வே கிடைக்கப்பெறும். அவனையும் தங்களுடைய பிள்ளைபோல்தான் மதுபாலாவும் இந்திரஜித்தும் பார்த்துக் கொண்டனர்.

அதையும் பொறுக்க முடியாமல் ஒரே பிள்ளையை ஹாஸ்டலில் சேர்த்துவிட்ட பெருமையெல்லாம் ரேணுகாவையே சாரும்.

அதற்காக அவனுக்கு ரேனுகா மீது பாசமே இல்லை என்றெல்லாம் கிடையாது. பெற்ற தாய் என்கிற வகையில் அவள் மீது மரியாதையும் அன்பும் இருக்கத்தான் செய்தது. ஆனால் வேறு எந்த விதத்திலும் ரேனுகாவை பிடிக்காது.

அதற்காக தந்தையை பிடிக்குமா என்று கேட்டால் அவரையும் அவனுக்கு பிடிக்காது. பெற்ற பிள்ளை என்றெல்லாம் அவர் எப்போதும் அவனை உரிமை கொண்டாடியது கிடையாது. அவருடைய எஜமானி ரேணுகாவின் மகன் என்கிற ரீதியில்தான் அவனை நடத்துவார்.

அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பார். அவனை ஒரு இளவரசனைப் போல்தான் நடத்துவார் அவனது தந்தை பிரகாஷ். ஆனால் அவனுக்கு நினைவு தெரிந்து ஒருநாள் கூட அவனை அன்பாக முத்தமிட்டதோ, பாசமாக அவனுடன் பேசியதோ கிடையாது. மகனிடமும் தான் ஒரு அடிமையென்பதை உணர்த்தும் விதத்தில்தான் எப்போதும் அவரது செயல்கள் இருக்கும்.

அப்பா, அம்மா என்று அவன் ஆசையாக பேச அவர்கள் இருவரும் என்றைக்கும் கணவன் மனைவியாக இருந்ததே இல்லை. ஆண்டான் அடிமையாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் ஒருவித ஏக்கத்துடன் வளர்ந்தவனுக்கு தன்னுடைய கல்லூரி காலத்தில் முதன்முதலாக ஷன்மதியை பார்த்தபோது மதுபாலாவையே பார்ப்பது போல்தான் இருந்தது.

அவளுடைய நடை, உடை, பாவனை அத்தனையும் அவனுக்கு மதுபாலாவையே நினைவு படுத்தியது. அவனுக்கு வரப்போகும் மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென அவன் நினைத்திருந்தானோ அப்படியெல்லாம் அவள் இருந்தாள்.

அவள் எதை செய்தாலுல் அதில் ஒருவித நேர்த்தி இருக்கும். அவள் ஓரிடத்தில் நின்றாலே அத்தனை பேரின் பார்வையும் அவள்மீதுதான் இருக்கும். பேரழகி வேறு.

அதற்குமேல் அவன் எதையும் யோசிக்கவில்லை.

காதலிக்க ஆரம்பித்தபிறகு ஆரம்பத்தில் என்னவோ நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. போகப்போகத்தான் அவள் வெளித்தோற்றத்துக்கு மட்டும் தான் மதுபாலா என்பதை அறிந்து ஏமாந்து போனான்.

அவளுக்கு தேவை அவள் சொல்வதையெல்லாம் கேட்டு அவள் பின்னால் நாய்குட்டி போல் சுற்றித்திரியும் அடிமை. அதுவும் அந்த அடிமை அழகானவனாகவும், பணக்காரணாகவும், ஆளுமை மிக்கவனாகவும் இருக்க வேண்டும்.

மதுபாலாவை தேடிப்போய் குட்டி ரேனுகாவிடம் மாட்டிக்கொண்டதை போல் ஆகிவிட்டது அவன் நிலமை. இருந்தாலும் அவன் அவளை உண்மையாகத்தான் காதலித்தான். அந்த காதலுக்காகவே மூன்று ஆண்டுகள் இழுத்துப்பிடித்து பொறுமையாகத்தான் இருந்தான்.

அதற்குமேல் முடியாமல் அவன் விலகிவந்ததை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் எப்படி என்னை வேண்டாமென்று சொல்லலாம் என்ற அகங்காரம்.

அவனை கடுப்பேற்றவென்றே அவனுக்கு பிடித்த உடைகளை உடுத்துவாள், அவனுக்கு பிடிக்காத ஆண்களுடன் பழகுவாள். அதைக்கண்டு அவன் கோபப்படுவதை பார்ப்பதில் அவளுக்கு ஒரு அற்ப சந்தோசம்.

அவனும் ஒன்றும் சாதாரணப்பட்டவன் இல்லை. வேண்டுமென்றே அழகான பெண்களாக பார்த்து வேலைக்கு வைத்து ஏதாவது மீட்டிங், பார்ட்டி என்றால் கூடவே அவர்களை அழைத்துச் சென்று இவளை கடுப்பேற்றுவது.

இருவரும் இதை வாடிக்கையாகவே வைத்திருந்தனர்.

திருமணம் என்று வருகையில் இருவருக்குமே இத்தனை காலம் மனம் முரண்டிக்கொண்டே இருந்தது. அவனுக்கு அவளைத்தவிர வேறு பெண்ணை திருமணம் செய்ய தோன்றியதே இல்லை. அவளுக்கும் அப்படித்தான்.

ஆனால் இப்போது அவன் என்னவோ அவளை மறக்க முடியாமல்தான் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறாள் என்று அடிக்கடி அவனை சீண்டிக் கொண்டிருக்கிறாள்.

அதுதான் உண்மை என்றாலும் அவள் எப்படி அப்படி நினைக்கலாம். அதற்கு இடம் கொடுக்கவே கூடாதே. நிச்சயம் அவளை கலங்கடிக்கும் வகையில் அவன் வெகு சீக்கிரமாக திருமணம் செய்தே ஆகவேண்டும்.

அவன் முடிவெடுத்து விட்டான்.

********************************
வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் காரிலிருந்து இறங்குமுன்னரே முகத்தை அழுந்த துடைத்து அழுத அடையாளமே தெரியாமல் முகத்தில் அழகாக புன்னகையை தவழவிட்டுக் கொண்டுதான் உள்ளே சென்றாள் ஜியாஶ்ரீ.


அவளை கண்டதுமே விக்னேஷ் சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லிக் கொண்டுவர பதிலுக்கு அவளும் சிரித்தாள், பேசினாள்.

ஶ்ரீனிகா, ஆதி, அம்ருதா, அபிமன்யு அனைவருக்கும் நாள் முழுக்க பேசி சிரித்து அரட்டையடித்து அத்தனையும் செய்தாள்.

இரவு உணவை ஶ்ரீனிகா ஊட்டிவிட சாப்பிட்டு முடித்து வீட்டிலுள்ள அத்தனை பேருக்கும் வேலைக்காரர்கள் முதற்கொண்டு இரவு வணக்கம் கூறிவிட்டு அறைக்குள் வந்து முடங்கியவள்தான் நள்ளிரவு வரை கண்ணீரிலேயே கரைந்து கிடந்தாள்.

அவள் அப்படித்தான். உள்ளே பிரளயம் நடந்து கொண்டிருந்தாலும் வெளியில் துரும்பளவு கூட காண்பிக்க மாட்டாள். சிரித்துக்கொண்டுதான் இருப்பாள்.

இப்போது இரவின் தனிமையில் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளை வாள் கொண்டு அறுப்பதை போல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன.

எவ்வளவுதான் நினைக்கவே கூடாது மறந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தாலும் இது ஒரு சாபம் போல் அவளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அழுதழுது அப்படியே உறக்கம் அவளை மெல்லத் தழுவிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அலைப்பேசி ஒலிக்க ஆரம்பித்தது.

தூக்கம் கலைய அலைப்பேசியை எடுத்து பார்த்தவள் புதிய எண்ணாக இருந்ததில் இந்த நேரத்தில் யார் என்று எண்ணியவளாக அழுதழுது கமறிப்போய் கிடந்த தொண்டையை செருமி சரி செய்துவிட்டு “ஹலோ” என்றாள் மெல்லிய குரல்.

மறுபுறம் பதிலேதும் இல்லாமல் போக மீண்டும் “ஹலோ யாரு?” என்கவும் “யாதவ்” என்று பதில் வந்தது அவனிடமிருந்து.

பெயரை கேட்ட நொடியே ஏதோ பேய் துரத்தியது போல் அழைப்பை துண்டித்து சைலண்டில் போட்டுவிட்டு அலைப்பேசியை தூக்கி தூரப்போட்டாள். அவன் எதற்காக இந்த நேரத்தில் அழைக்கிறான் என்று யோசித்து பார்க்க அவளுக்கு தெம்பிருக்கவில்லை.

உடலும் மனமும் வெகுவாக களைத்திருந்ததால் மயக்கம் போல் கண்ணை சுழற்றிக்கொண்டு வர அப்படியே உறங்கியும் போனாள்.

இரவு தாமதமாக தூங்கியதால் மறுநாள் காலை அவள் எழுந்து கொள்வதற்கே வெகு நேரமாகிவிட்டது. பதினோரு மணிக்கு மேல்தான் கண்விழித்தாள். முதல்நாள் பயணம் செய்து வந்த களைப்பில் உறங்குகிறாள் என யாரும் அவளை எழுப்ப முனையவும் இல்லை.

எழுந்து குளித்து தயாராகி வந்தவள் அப்போதுதான் தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பார்க்க கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் ஒரே எண்ணிலிருந்து வந்திருக்க ‘யார்?’ என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் அவன் அர்த்த ராத்திரியில் அழைத்து ‘யாதவ்’ என்று சொன்னது நினைவு வந்தது.

“ஓ மைட் காட் எதுக்கு கால் பண்ணியிருக்கான். அதுவும் இத்தன கால்” அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் அடுத்த அழைப்பு வந்தது.

எடுத்துப் பேச மனமே இல்லை.. நேற்று அந்தப் பேச்சு பேசிவிட்டு இப்போது எதற்கு இத்தனை தடவை அழைத்திருக்கிறான். அதுவும் இவனுக்கு எப்படி என்னுடைய நம்பர் கிடைத்தது என ஆயிரம் கேள்விகள் உள்ளே ஓடிக் கொண்டிருக்க அவளது கைகள் ஃபோனை ஆன் செய்து காதில் வைத்தது.

“ஹ… ஹலோ” என்றாள்.லயமாகும்….
 
Status
Not open for further replies.
Top