எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

KK- 11

subasini

Moderator
களவு – 11

ஒளிமயமான கடந்தகால வாழ்க்கையின் வெளிச்சம், எதிர்காலத்தை வழிநடத்திச் செல்லும் ... இதைப் புரிந்து வாழும் மனிதனுக்கு, வாழ்வில் நிம்மதியான வாழ்க்கை அமையும்..

இத்தனை நாள் கனவு என்று நினைத்தது, விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையே ருத்ரனை நிம்மதியான உறக்கத்திற்கு இட்டுச் சென்றது. உறக்கத்தைத் தொலைத்தப்படி இருளைக் கரைக்க, வானில் நடக்கும் வர்ணஜாலத்தில், தனக்கான நிம்மதியைத் தேடிய நிலையில் விடியலுக்காய்க் காத்திருந்தார் நீலகண்டேஷ்வரன்.

மருத்துவமனைக்கென்றே உள்ள நெடியைச் சுவாசித்தப்படி ருத்ரனின் காலைப் பொழுது புலர்ந்தது.

மெல்ல உறக்கத்தின் பிடியில் இருந்து இமைகளைப் பிரித்தவனின் முன், உறங்காமல் கண்கள் சிவப்பேறிய நிலையில், முகமெல்லாம் சோர்ந்துப் போய் இருக்கும் நீலக்கண்டேஷ்வரனின் தரிசனம் தான் கிடைத்தது.

அவரைப் பார்த்தவன் “ அப்பா எனக்குக் காலில் சின்ன அடித் தான், அதுக்கு ஏன் இப்படி ஒரு ப்லீங்கு” என அவரைக் கிண்டல் செய்தபடியே மெல்லப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான்.

தந்தையின் சோர்ந்த இந்த முகத்தை, பார்க்கப் பிடிக்காமல் ஆன மட்டும் அவரைக் கேலிச் செய்தான்....

கேலிச் செய்த மகனை முறைத்தபடியே “திமிருடா உனக்கு ” என்றவர் மெல்ல,

“என்ன முடிவு எடுத்து இருக்க ருத்ரா” என நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

“ என்ன முடிவு அப்பா, எதைப் பத்திப் பேசறீங்க” எதுவும் தெரியாதது போல, முகம் வைத்தவனைப் பார்த்து “நடிக்காதடா இந்நேரம் உன் அம்மாவ எப்படி வீட்டுக்குக் கூட்டி வரனும் என்று , பக்காவாகத் திட்டம் போட்டு இருப்ப, அந்தத் திட்டத்தில் நான் என்ன செய்யனும் சொல்லு முதலில்” என அவர் கேட்டதிலேயே, தந்தையைத் தவிர யாராலும் தன்னைப் புரிந்துப் கொள்ள முடியாது என உணர்ந்தான்.


“ஆமா நீங்க தான் மெச்சிக்கனும் என்று நகைத்தவன், மெல்ல உள்ளே போன குரலில் , நான் சொல்லுவேன் ஆனால் நீங்க , உங்களுக்கு ” என வார்த்தைகளை முடிக்காமல் தயங்கியபடி அவரையே பார்த்தான்.


அவன் முகத்தையே பார்த்தவர் “ம்ம்ம் சொல்லு, இனி வாழ்க்கையில் வருத்தப்படப் புதுசா என்னடா இருக்கு , நீ தயங்காமல் சொல்லு” என்று அவன் மனதில் இருப்பதை அறிய முனைந்தார்.


“இல்லப்பா , ம்ம் எப்படிச் சொல்ல” என்று மிகவும் கவனமாக வார்த்தைகளைத் தேடினான்.


அவன் உதிர்க்கும் வார்த்தைகளின் கணம் தந்தையைச் சாய்காமல் இருக்க மனதளவில் போராடியவன், பின் தைரியம் பெற்றவனாக, "அம்மா மனதில் ஆழமாகப் பதிந்த விஷயம் என்னோட பிறப்பின் ரகசியம் என்று நான் நினைக்கிறேன் அப்பா, அதை அவங்க மனதிற்கு நம்பிக்கையைத் தரும் புரியும் படிச் சொல்லி விட்டால், எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடும், நீங்க என்ன சொல்லறீங்க” எனக் கேட்டான் தந்தையின் முகம் படிக்க முயன்றவாறே ...

தான் சொல்லபோகும் விஷயம் , தந்தை நினைத்திருந்தால் என்றோ செய்து, தன் மனைவியைத் தன்னோடு இருத்தி இருக்க முடியும், ஆனால் அவர் செய்யாததே அவர் மனநிலையை உரைப்பதாக இருந்தது...


அவரிடம் இருந்து பதிலேதும் வராமல் போக, அவர் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக மாற்றியவன் , மீண்டும் “அதற்கு அவங்கச் சொன்னது போல” என மெல்லச் சத்தமே இல்லாமல் அவர் உயிரை உருவிடும் வார்த்தைகளை உதிர்த்தான் ருத்ரன்.


இப்போது மனதில் அன்னையின் துயரத்தைப் போக்கிடும் வேகம் மட்டுமே இருந்தது. அப்பாவின் மனதை உடைக்கிறோம் என்ற எண்ணம் மனதில் வேதனையை அளித்த போதும், தாயின் துயரைத் தீர்ப்பது தலைமகனின் கடமையாகச் சிந்தித்தான் ருத்ரன்.


தன் வலியை மறைத்து, அவளுக்கான கேள்விக்குப் பதில் கிடைக்காமல், காதலை மனதிலும், சினத்தைச் சிந்தையிலும் கொண்டு, கட்டிய கணவன் முன்னே வாழ்வது, ஒரு பெண்ணிற்கு அதுவும் ஒரு தாய்க்கு மரணத்தைக் காட்டிலும் வலியைத் தரும்.


இந்த வலியோடு இவ்வளவு வருடமும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாள் என் அம்மா, அது சாதாரணமானக் காரியம் இல்லை என்று நினைத்தான் ருத்ரேஷ்வரன்.


தன்னிடம் 'டி என் ஏ டெஸ்ட்' எடுக்கவேண்டும் என்ற மகன் கூறிய வார்த்தைகள் கேட்டுத் தன்னை, யாரோ தீயிலிட்டு உயிராடு உருக்கியது போல உணர்ந்த நீலக்கண்டேஷ்வரன்.

மெல்லச் சுரத்தே இல்லாமல் “அம்மவும் பையனும் என்ன பண்ணனும் முடிவுப் பண்ணிட்டீங்க, அப்பறம் எங்கிட்ட ஏன் கேட்கற, அவள் உனக்கு மேலே போய், எனக்குத் தெரியக்கூடாது என்று சொல்லறா, மனதில் என்ன நினைச்சுட்டு இருக்காப் பைத்தியக்காரி. என்ன செய்ய நினைத்தாலும், என்னை மீறிப் எதுவுமே நடக்காது, இத்தனைக்கால அவள் வாழ்ந்தத் தனிமையே நான் நினைத்ததால் தான், என்று மறக்க வேண்டாம் ருத்ரா.


“ஏன்டா வாழ்க்கை என்ன கதையா! இல்லை பார்க்கும் சினிமாவா, மறைத்துக் கடைசியில் சஸ்பென்ஸ உடைக்க... நீ பிறக்கும் நேரம் நடந்தது என்ன என்று, எதுவும் தெரியாமல் கண்டப் படிக் கற்பனைப் பண்ணி, நம்ம வாழ்க்கை மட்டும் இல்லாமல் மாயாவதியின் வாழ்க்கையும் சேர்த்துத் திசைத் திருப்பிவிட்டாள் உங்க அம்மா, அன்று நடந்தது தெரிந்தால் தான் உனக்கு எல்லாம் சுலபமாகப் புரியும் ருத்ரா” என்றவர் நடந்ததை விளக்கினார்...

“ சுமித்ரா அத்தை வாழ்க்கையைக் சரி பண்ணப் போய்ப் பெரிய பிரச்சனையில் மாட்டிட்டோம் டா" என்றார்.


"புரியும் படி, சொல்லுங்க அப்பா" என்றான் ருத்ரன்.


சுமித்ராவின் வாழ்க்கையில் அவளுக்கு என்று இருந்தது அவள் கணவன் மட்டுமே, ஆனால் அவனும் சரியில்லை, அவனுக்கு என்று சரியான வேலையில்லை, தவறான ஆட்களோடு நட்பு, பல கெட்டப் பழக்கங்கள் எல்லாம் இருந்தது.


ஒரு நாள் முழுப் போதையில் யாரோ ஒருத்தனை நண்பன் என்று வீட்டிற்குக் கூட்டி வந்தான். அந்த நண்பன் அவளிடம் தகாத முறையில் பலவந்தப்படுத்த, எனக்குப் போன் செய்து அழைத்தாள், நான் போய் அவளைக் காப்பாற்றினேன்.


இதெல்லாம் உன் அம்மாவுக்கும் தெரியும். இப்படி ஒருவனோடு இந்த வாழ்க்கையை நீ வாழனுமா என்ற கேள்விக்கு, அவளிடம் இருந்து வந்த பதில் ‘எனக்கு விவாகரத்து வாங்கித் தாங்க அண்ணா’ என்பது தான். அவனிடம் இருந்து விவாகரத்து வாங்கிக் குடுத்துட்டேன்.


வேலைவெட்டி இல்லாத அவனுக்கு இந்த விவாகரத்து விருப்பம் இல்லை. ஆனால் என்னோட செல்வாக்கை உபயோகித்து வாங்கிக் குடுத்துட்டேன். அதே போல அவளை நெருங்க விடாமல் என் பாதுகாப்பில் வைத்திருந்தேன். அதனால் அவனுக்கு என் மேல் கோபம் இருந்தது.


அந்த நேரத்தில் தான் பிரசவத்திற்காக , உன் அம்மாவை நான் மருத்துவமணையில் சேர்த்திருந்தேன். காசு இல்லாமல் சுத்திட்டு இருந்தவன், அந்த மருத்துவமணையில் தான் வேலைப் பார்க்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப்பார்த்ததும், ‘அவன் இழி நிலைக்குக் காரணம் நான் தான்’ என்ற வன்மம் மனதில் தோன்றியது.


என்னைப் பழி வாங்க, உன்னைத் தூக்கிப் போய்க் கொல்லப்பார்த்தான். அவனிடம் இருந்து உன்னைக் காப்பாற்றி அவனைப் போலீஸிலும் பிடித்துக்கொடுத்தேன். அவர்களின் கவனக்குறைவால் தப்பித்து , இனி எப்படியும் தன் வாழ்க்கை ஜெயில் உறுதி என்பதை உணர்ந்ததவின் வன்மம் மட்டும் குறையவே இல்லை. உன்னைக் கொல்ல மீண்டும் முயற்சிச் செய்தான். அவன் கண்டு பிடிக்க முழுதாக ஒரு வாரம் ஆனது.


உன் அம்மாவிற்கோ சுகப்பிரசவம் இல்லை, அவளுக்குச் சி-செக்‌ஷன் வேற அவளோட இரத்த அழுத்தம், பயத்தின் காரணம் குறையவே இல்லை. அவள் கண் முழிக்க முழுதாக் இருபத்தி நான்கு மணி நேரம் ஆனது. அவனுக்குப் பயந்து உன்னை மாயாவதியிடம் கொடுத்து வைத்திருந்தேன்.


கண் விழித்ததும் உன்னைத்தான் கேட்டாள், அதற்கு நான்... என்று அவர் இழுக்கவும்.


"நான் செத்துட்டேன் சொல்லிட்டீங்காளா?" என்றான் ருத்ரன்.


"ருத்ரா, நீயும் அவசரப் பட்டு வார்த்தையை விடாதே" என்றவர். இப்படித்தான் அவளிடமும் சொல்லத் தயங்கியனினேன், நான் எதிர்பாராத சம்பவம் என்னவென்றால், உன் அம்மா தவறாக எல்லாம் புரிந்து கொண்டது தான்... மயக்கம் தெளிந்து உன்னை அவள் அருகில் தேடி இருக்கா, ஆனால் அங்கே நீ இல்லை எனத் தெரிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி, சிசேரியன் காரணமாக, மயக்க மருந்தின் தாக்கமும் மற்றும் முதல் பிரசவத்தின் பயம் , பதட்டம், எல்லாமே, நீ இறந்து பிறந்ததாகக் கற்பனை மனதில் ஆழமாகப் பதிய, இரத்த அழுத்தம் கட்டுபாட்டை இழந்து, அவளுக்கு மைல்ட் அட்டாக் வந்திருச்சு.


அதனால் மறைத்தேன், அவள் உடல் நிலைச் சரியானதுக்கு அப்பறம் சொல்லிக்கலாம் , அது மட்டும் இல்லை அவளுடைய இந்த இதயம் இப்படிப் பலகீனமாக இருப்பதால், அவள் உயிருக்கு எதாவது ஆகிருமோ என்ற பயம் எனக்கு இருந்தது.


டாக்டரிடம் நடந்ததைக் கூறினேன் , அவங்க இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் குழந்தைப் பாதுகாப்பு மட்டும் இல்லை , உங்க மனைவி உடல்நிலையும் பார்க்கனும் என்றவர் அவங்கக் கொஞ்சம் தெளிவான மனநிலைக்கு வரவேண்டும்” என்றார். மாயா வீட்டில் அவள் அண்ணன் பிரச்சனைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்.


அதனால ஒரு நாள் மெதுவாக நான் உன்னைப் பற்றிப் பேசியதும் “ பட்டுக்கு என்ன ஆச்சு ” என்று கேட்டது தான் தாமதம், அவள் உடல் வியர்த்துக் கைகள் நடுங்கியபடி, என் முகம் பார்த்தபடி மயங்கி விழுந்துட்டாள். அவளை நான் டாக்டரிடம் கூட்டிப்போனேன் அவள் நிலையைக் கண்டதும் பயந்தே போனேன். என் உயிர் என்னிடம் இல்லையடா! என்றவர்

சரிக்கொஞ்சம் நாட்கள் போகட்டும் அவள் உடல் நிலை, சரியாகட்டும் என்ற என் காத்திருப்பு நான்கு வருடங்களைக் கடந்தது. மீண்டும் உண்மையைக் கூற முயன்றதும், அதைக் கேட்டு அவள் மயங்கி விழுந்துட்டாள். அப்பறம் டாக்டர் வந்து அவளைப் பரிசோதித்ததில் ப்ரனவ் நம் வாழ்க்கையில் உதித்தான், அப்பறம் அவள் ஒரளவிக்கு உடல் மற்றும் மனநிலைத் தேறி வரவும் உன்னை வீட்டுக்கு அழைத்து வந்தேன்" என்ற ஈஷ்வர்,


"அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் தான் உனக்கே தெரியுமே” எனத் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவம் எல்லாம் சொல்லி முடித்தப்படி ருத்ரனைப் பார்த்தார் ஈஷ்வர்.


தன் தந்தை கூறியப் பழைய நிகழ்வுகளைக் கேட்ட ருத்ரன் மனதிலோ ‘என்னைய பிரிந்துச் சோகமா இருந்த என் அம்மாவை, பாசமாப் பாத்துக்கிறேன் என்று சொல்லிச் சொல்லி, அவங்களத் திரும்ப அம்மா ஆக்கிருக்காரு இந்த மனுஷன், இதில் ப்லீங்கு வேற’ எனக் கிண்டலடித்த அவன் மனதின் குரலை மட்டும் அவர் கேட்டு இருந்தார் எனில், இன்னொரு காலுக்கும் கட்டுப் போட வேண்டி வந்திருக்கும்... இப்படித் தன் மகன் யோசிப்பது தெரியாமல் மேலும்,


“உன் அம்மாவிற்கு மனதில் சில விஷயம் பதிந்தால் அதை மாற்றிக் கொள்வது கிடையாது . அதன் பின் உன்னைப் பற்றி அவளிடம் நான் இப்ப வரை பேசவில்லை" என்றார்.


“ ம்ம் புரியுதுப்பா, நம்ம ப்ரனவ் மனதில் என்ன இருக்குத் தெரியலையே... அவன் உங்களைப் பார்க்க வருவான் நினைக்கிறேன், நீங்க ஆபீஸ் போங்க... நான் இங்கே மேனேஜ் பண்ணிக்கிறேன், சக்தி வரச்சொல்லியிருக்கேன், நீங்க வருத்தப்படாம ஆபீஸ் போங்கப்பா” ...

“ ரொம்ப நாட்களுக்கு அப்பறம் இரண்டு பேரும் சந்திக்கப் போறீங்க, அவன் மேல உங்களுக்கு அன்பும் பாசமும் வேற அதிகம், என்ன தானே எப்பவுமே டிலில் விடறது” என அவரைச் சீண்டினான் ருத்ரன்...


“தன்னைச் சீண்டும் ருத்ரனைப் பார்த்தச் சிரித்தப்படி அவன் குழந்தை டா, அவனிடம் போய்ப் போட்டிப் போடுவியா?” என அவனை முறைத்தார்...


“ யாரு அவன் குழந்தையா, அப்படினு நீங்க நினைச்சுட்டே இருங்க , நீங்க சொன்ன அந்தக் குழந்தை, ஒரு பொண்ணை ஒன் சைட் லவ் பண்ணறான்” என்று தம்பியின் காதலை அப்பாவிடம் போட்டுக் கொடுத்தான்...


அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஈஷ்வர் “அவன் லவ் பண்ணறானா” என நம்பாமல் சிரித்தார்...


அதைப் பார்த்துக் கோபம் தான் வந்தது ருத்ரனுக்கு... “உங்க செல்லக்குட்டி லவ் பண்ணறான் சொல்லறேன், என்னமோ அவன் உலகச் சாதனைப் பண்ணின மாதிரி ரியாக்ட் பண்ணறீங்க, இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்ப்பா” என்று அவரை முறைத்தான்...


“என்ன பண்ண அவன் அண்ணன் மாதிரித் தானே அவனும் இருப்பான்” என்று, நேற்று அவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய காதல் தோல்வியைப் பற்றி மெல்லப் போட்டு வாங்கினார் ஈஷ்வர்.


“அவன் அண்ணன் என்ன பண்ணினான் , அவனே ஓரு அப்பாவி எனத் தனக்குத் தானே சப்போர்ட் பண்ணும் மகனின் குறும்பில் அவனைப் பார்த்து “அப்பாவியா? யாரு? நீ தானே, ம்ம் நம்பிட்டேன் டா, நீ அப்பாவியா, இல்லை அடப் பாவியா என்று, உன் எதிரியிடம் தான் கேட்கனும் , என்று 'என் காதுக்கும் அரசல் புரசலாக, உன்னுடை விஷயம் வருகிறது' என்பதைச் சொல்லாமல் சொன்னார்.

உன்னைப் பற்றி உன்னை விட எனக்குத் தெரியும் என்றபடி...


அதில் அவரைப் பார்த்துச் சத்தமாக் சிரித்தவன் “அப்போ என்னை நல்லா வேவுப் பார்க்கறீங்க” என்றான் கோபமாக.


“இரண்டு கம்பெனிப் பார்க்கும் நான், இவ்வளவு அலார்ட்டாக இல்லை என்றால் எப்படி” என்று தன் மீசையைத் தடவியத் தன் தந்தையின் ஸ்டைலில் மயங்கித் தான் போனான்... " என்னப்பா, பண்ணீங்க சக்தியை, அவன் அடிக்கடிசொல்லுவதே ‘சார், பாஸ் நினைச்சால் தான் கொஞ்சம் பயம்’ என்று தான். அவனுக்கு என்னைய விட உங்க மேல் தான் பயம்ப்பா" என்றான் ருத்ரன்.


சிரித்தப்படிச் “சரி ருத்ரா நான் கிளம்பறேன், நீ என்ன செய்யனும் நினைக்கிறியோ அதைச் செயல் படுத்து, நான் இருந்தா நல்லா இருக்காது" என்றவர் வெளியே செல்ல, “அப்பா சந்தேகம் என்பது ஒரு வியாதி என்று தானே சொல்லுவாங்க, அதுக்கு மருத்துவம் பார்ப்பதாக நினைச்சுக்கோங்க” என்றான்.


“அதன் முதல் படித் தான் இந்த டி என் ஏ டெஸ்ட் ப்பா” என்றவன் மேலும் “உங்க பிளட் சாம்பில் கொடுத்துட்டே போங்க ப்ளீஸ்” என்றான். அவரைப் பார்க்காமலேயே... அவரும் திரும்பி அவனைப் பார்க்காமலேயே 'சரி' எனத் தலை ஆட்டிச் சென்றார்.


தந்தையின் வேதனையை அறிந்தப் போதும் அவர் மனதை வலிக்கச் செய்தான்.


தங்கள் பிரிந்த உறவை இணைத்துத் தங்கள் குடும்பத்தைச் சீரமைக்கத் தன் தந்தைக்கு வலியைக் கொடுத்தான்...


தாயின் கண்ணீரைத் துடிக்க இன்று எடுத்த முடிவு , அவனைப் பெற்றவளை மீண்டும் எதிர்காலத்தில் வேதனைப் படுத்தும் என அறியவில்லை ருத்ரன்.


தன் அலைப்பேசியை எடுத்தவன் முதலில் அழைத்தது சுமித்ராவிற்குத் தான்...


“ஹாலே சுமி ஆன்டி, நான் ருத்ரன்" என்றதும், "ம்ம் ஹாய் ருத்ரா, எப்படி இருக்க? உனக்கு விபத்துக் கேள்வி பட்டேன், உன்னைப் பார்க்கத் தான் வந்துட்டு இருக்கேன், அதுக்குள்ள நீயே எனக்குப் போன் பண்ணிட்ட” என்ற அவள் வார்த்தைகளில் அவர் தன்னைக் காண வரும் நோக்கம் அறிந்தவன் சுத்தி வளைக்காமல் நேரடியாகப் பேசினான்.


“நீங்க என்னை எந்தக் காரணத்துக்குப் பார்க்க வரீங்களோ, அதற்கு நான் ரெடியாக இருக்கேன்" என்று அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கினான்...


அவன் தந்த அதிர்வில் இருந்து வெளி வர இயலாமல் அமைதியாக இருக்கும் சுமியின் மௌனத்தைக் கலைத்தவன் “ ஹலோ, ஆன்டி லைனில் இருக்கீங்ளா” எனக் கேட்டவனிடம் ...


“ஆமா ருத்ரா, நீ... என்ன சொல்ல வர எனக்குப் புரியவில்லை” என்றதும் ...


அவளிடம் “ நேற்று நீங்களும் அம்மாவும் பேசினது நான் கேட்டேன் ஆன்டி, நானும் அப்பாவும் ரெடி, இன்னைக்கு அப்பா ப்ளட் ஸாம்பிள் குடுத்து இருப்பாரு, நீங்க வந்து மீதிச் செயல்முறை பண்ணிருங்க” என்றான்...


தன் வேலையைச் சுலபமாக்கிய ருத்ரனுக்கு நன்றி கூறுவதா, இல்லை இதைச் செய்வதற்குத் துணிந்த இரண்டு ஆண்களின் மன வேதனைக்கு ஆறுதல் கூறவதா? இவை அனைத்திற்கும் பின் இருக்கும் காரணத்தைத் தன்னால் சொல்ல முடியாத, தன் சூழ்நிலையை நொந்தபடி மனதில் வருந்தினாள் சுமித்ரா.


மௌனமாக மனதில் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும், அவள் நிலையை உணர்ந்த ருத்ரன் “ஆன்டி ,நீங்க எதுவும் சங்கடப் பட வேண்டும், அம்மாவோட மனநிலைத் தெரிஞ்சுத் தான், நாங்க இந்த முடிவு எடுத்து இருக்கோம், நீங்க ஃப்ரீயா விடுங்க” என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ருத்ரன்.


“ சரி ருத்ரா நான் அப்பறம் பேசறேன்” என அழைப்பைத் துண்டித்தவள் மனமோ இந்தக் குடும்பத்தின் கஷ்டம் இத்தோடு முடித்து, இவர்களை இணைத்து விடு இறைவா! என வேண்டியது....


சுமித்ராவிடம் பேசிய பின் சக்தியை அழைத்து , செய்யது முடிக்க வேண்டிய அனைத்தையும் பட்டியலிட்டபடி, தனக்கு நடந்த விபத்தையும் கூறியவன் ,தனக்குக் குணமடையும் வரை இந்த டைட் செட்யூல்டு இருக்கும் எனக் கூறினான் ..


அவனும் "ஓகே சார்" தன் வேலைத் தொடரந்தான்... தன் வேலையை சக்தியிடம் ஒப்படைத்ததும் மெல்லக் கண் முடிப் படுத்தான்…


எல்லா கேள்விக்கும் பதில்

இருக்கும், அந்த பதில்

எல்லா நேரமும் நமக்கு

சாதகமாக இருக்காது...

நிதானம் நின்று தரும்

சினம் சிதறிவிடும்...


தொடரும்..
 
Top