எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 6

S.Theeba

Moderator
காதல் 6

நிஷாந்தினியின் படிப்புச் செலவுக்கென ஒரு ரூபாய் கூட செலவழிக்க தனம் விரும்பவில்லை. எனவே அதற்கென யோசித்தவள் பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க ஆரம்பித்தாள். சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கல்லூரி விடுமுறை நாட்களிலும் அவர்களின் வீடுகளுக்கு சென்று தனிப்பட்ட முறையில் கற்பிப்பாள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் ஒரு பகுதியைத் தனம் பறித்து விடுவார். “உனக்குத் தண்டச்சோறு போட உன் அப்பன் இங்கு கொட்டி வைச்சிட்டு போகல. இது உன் சாப்பாட்டுக்கு” என்று காரணம் கூறி விடுவார்.

அன்று சனிக்கிழமை. இவள் டியூசன் எடுக்கும் மாணவி சஸ்மிதாவின் பிறந்தநாள். அவளின் பெற்றோர் வசதி படைத்தவர்கள். எனினும், எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்காது சகஜமாகப் பழகுவார்கள். நிஷாந்தினியை அவளின் தாய் உஷாவிற்கு ரொம்பவும் பிடிக்கும்.
பிறந்த நாள் விழாவிற்கு மிகவும் வற்புறுத்தி அழைத்திருந்தார்கள். கட்டாயம் அவள் வந்தேயாகணும் என்பது சஸ்மிதாவின் உத்தரவும் கூட.

தன்னிடம் இருந்தவற்றில் நல்லதாகத் தேடி ஒரு சுடிதாரை அணிந்தாள். இளம் ஊதா நிறமும் சந்தன நிறமும் கலந்த சுடியில் சிறு கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்குத் தோதாக காதணி ஒன்றை அணிந்தவள், வலது கையில் கைக்கடிகாரத்தை அணிந்தாள்.
ஒற்றைப் பின்னலும் சிறிய பொட்டுமாக தனது அலங்காரத்தை முடித்தாள்.

வெளியே வந்து அவள் புறப்படத் தயாராகவும், வெளியில் சென்றிருந்த தனம் உள்நுழையவும் சரியாக இருந்தது. அவளை ஏற இறங்கப் பார்த்த தனம் “ஏய் சின்னக் கழுத. எங்க மினுக்கிக்கிட்டு புறப்பட்டாச்சு?”
“அது அத்த… நான்… டியூசன்..” என்று தடுமாறினாள்.
அந்த நேரத்தில் அவளைக் காப்பாற்ற ஓடி வந்தாள் சுபாஷினி.
“அத்த.. ஒருத்தங்க இன்று புதிசா டியூசன் எடுக்கிறது பற்றி பேச வரச் சொன்னாங்க. முதலே கொஞ்சம் நல்லா போனாத்தானே.. அவங்களுக்கு பிடிச்சு ஓகே பண்ணுவாங்க. அதுதான் இப்படி. இன்னும் ஒரு டியூசன் என்றால் வருமானம் கூடும்தானே”
வருமானம் என்றதும் உடனேயே அடங்கிய தனம், “சரி சரி.. போ” என்றார். தமக்கை கண்ணைக்காட்டவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்தாள்.

வழியில் சிறு பரிசுப் பொருள் ஒன்றை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டைச் சென்றடந்தாள்.

பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் வீட்டுத் தோட்டத்திலேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. மிகப்பெரிய தோட்டத்தில் ஒரு பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டு கேக் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. சிறு வட்ட மேசைகளும் கதிரைகளும் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உஷா இவளை வரவேற்று அமரவைத்து உபசரித்து விட்டு மேடைக்குச் சென்றுவிட்டாள்.

அருகில் இருந்த பெண்மணியுடன் பேசிக்கொண்டே அந்தத் தோட்டத்தில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வை சுற்றிவரும் போது எதேச்சையாக ஒரு மேசையை சுற்றி அமர்ந்திருந்தவர்களைக் கண்டது. ஆச்சரியத்தில் அவளது கண்கள் விரிந்தன. இந்த வளர்ந்து கெட்டவன் (தனது உயரத்துக்கு அவனது உயரம் அதிகம் என்பதால் அவள் வைத்த பட்டப் பெயர்) இங்கே எப்படி? என்று மூளை யோசிக்க அவளது மனமோ சந்தோசத்தில் சிறகடித்து பறந்தது.

அன்று கோயிலில் கண்ட நாள்முதல் தினமும் அவன் நினைவுகள் இவளை இம்சித்ததே. அவளுக்கே புரியாத ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது. தினமும் அவனை மீண்டும் காண மாட்டோமா என்று செல்லும் வழியெல்லாம் அவனை மனம் தேடியதே. இன்று எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் அவனைக் கண்டதும் உள்ளம் துள்ளியது.

ஆம், அங்கே அமர்ந்திருந்தது தனஞ்சயனேதான். உஷாவும் தனஞ்சயனும் முதலாம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தவர்கள். காலேஜிலும் ஒரே பிரிவு. அவன் லண்டன் போகவும் அவள் கல்யாணம், பிள்ளை என்று செட்டிலாகி விட்டாள். ஆனாலும் அவர்களின் நட்பு குறைவில்லாமல் தொடர்கிறது.


உள்நுழையும்போதே அவளைக் கண்டவன் முகம் சந்தோசத்தை பூசிக் கொண்டது. அன்று கோயிலில் இருந்து திரும்பியதில் இருந்து ஒருவித அவஸ்தை அவனை ஆட்கொண்டது. எத்தனையோ அழகிகளை அவன் வாழ்வில் சந்தித்திருக்கிறான். சிலர் இவனைக் கவரவும் முயன்றனர். ஆனால் யாரும் இவன் மனதை ஆக்கிரமிக்கவில்லை. இவள் பேரழகி இல்லாவிட்டாலும் ஏனோ இவன் மனதை பார்த்த சில நிமிடங்களில் கொள்ளை கொண்டு விட்டாள். அவளைத் தேடி மனம் ஏங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை அவள் கோயிலுக்கு வரக்கூடுமோ என்று நினைத்தவன் அங்கே சென்றான். பாவம் அவள் அங்கே வரவில்லை. தன் மனம் ஏன் இப்படி தவிக்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தவள் எப்படி தன் மனதை ஆள முடியும் என்று குழம்பித் தவித்தான்.

இன்று எதிர்பாராமல் உஷா வீட்டில் அவளைக் காணவும் சந்தோசத்தில் திக்குமுக்காடினான். அவளையே அவனது பார்வை தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கத் தோன்றியது. அவளது எளிமையான தோற்றமும், துறுதுறு கண்களும் அவனை ஈர்த்தது. தன்னுடன் இருப்பவர் பேசிக்கொண்டிருக்க அதை காது கொடுத்து கேட்பதுபோல தலையாட்டிக் கொண்டிருந்தான். ஆனால், அவர் என்ன பேசினார் என்று கேட்டால் நிச்சயம் தெரியாது.

“நான் சொன்னது ஓகேதானே மிஸ்டர் தனஞ்சயன்?” என்று அவர் கேட்கவும் திடுக்கிட்டான். அவர் என்ன கேட்டார் என்று தெரியவில்லை. எதற்கும் சமாளித்து வைப்போம் என்று நினைத்தவன் “ஓகேதான் மிஸ்டர் சசிதரன், இதுபற்றி நாம் அப்புறம் பேசலாமே” என்று கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து அகன்றான்.
அங்கிருந்து சென்றவன் நேராக அவள் இருந்த மேசைக்கு எதிரே இருந்த மேசை காலியாக இருக்கவும் அதில் சென்று அமர்ந்தான். அவனது கண்களும் மனமும் அவளையே நாடின. அவளது பார்வையை சந்தித்ததும் அழகான புன்னகையை அவளை நோக்கி வீசினான்.
அவன் தொடர்ந்து தன்னையே பார்ப்பது நிஷாந்தினிக்கு சங்கடமாக இருந்தது. அவனது புன்னகையோ அவளைக் கவிழ்த்துப் போட்டது. ஒருவித பரவசம் உண்டானது. ஓரத்தில் சஞ்சலத்தையும் தோற்றுவித்தது.
“ஏன் என்னை இவர் இப்படி பார்க்கின்றார். அன்றைக்கு நான் திட்டியதை இன்னும் மனதில் வைத்திருப்பாரோ? கோபத்தில் பார்க்கிறாரா? அல்லது வேறு ஏதேனும்… சே.. சே.. அப்படி எதுவும் இருக்காது. எவ்வளவோ அழகான பெண்களெல்லாம்… இந்த பார்ட்டியிலேயே எத்தனை பேர் நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் விடுத்து என்னை அவர் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப் போவதில்லை. நிச்சயமாக நான் திட்டியதை மனதில் வைத்தே உள்ளார்” என்று தனக்குள் புலம்பினாள்.
தன் கையில் வைத்திருந்த ஜூஸை மெல்லப் பருகியபடி அமர்ந்திருந்தவன் அருகில் வந்தமர்ந்தாள் உஷா. “ஸாரிடா உன்னைத் தனியே விட்டதுக்கு. சஸ்மி குட்டியோடு போட்டோ ஷூட்டில் நிற்க வேண்டியதாச்சு. ஸாரிடா”
“ஓய் இதுக்கெல்லாம் போய் சாரி கேட்பியா. ஃபங்ஷன் என்றால் அப்படித்தான். நம்ம பானுவும் விஸ்வாவும் ஒன்த வே. உன்னிடம் சொல்லச் சொன்னார்கள்.” என்றவன், நிஷாந்தினியைக் கண்களால் காட்டி “உஷா, அது யாரு? புதுசா இருக்கா” என்று சும்மா காஸூவலா கேட்பதுபோல் கேட்டான்.
யாரென்று திரும்பிப் பார்த்தவள் “ஓ.. அவங்களா? நம்ம சஸ்மியின் டியூசன் ரீச்சர் நிஷாந்தினி. பி.எஸ்.சி செகன்ட் இயர் படிக்கிறாங்க. தன் படிப்பு செலவுக்காக டியூசன் எடுக்கிறாங்க. வா உன்னை அறிமுகப்படுத்துறன்” என்று அழைத்தாள்.அதற்கிடையில் ஃபோட்டோ ஷூட்டிற்கு அழைக்கவும் இரு வாறேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.

ரொம்ப நேரமாவதை உணர்ந்த நிஷாந்தினி தன்னுடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு உஷாவைத் தேடிச் சென்றாள். தான் புறப்படுவதைச் சொன்னதும் வெயிட் என்று சொல்லிவிட்டு உஷா தனஞ்சயனை நாடிச் சென்றாள்.
“தனா, சஞ்சுவின் ரீச்சர் இருக்காங்களே, அவங்க பஸ்ஸில் தான் போகணும். இருட்டத் தொடங்கிற்று. நீ போற வழியில் தான் ரீச்சர் வீடு. அவங்கள ட்ராப் பண்ணுறியா? ப்ளீஸ்டா..” என்று கெஞ்சும் தொனியில் கேட்டாள். அவனுக்கு கசக்கவா செய்யும்? மனம் ஆனந்தக் கூத்தாடியது.
எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஓகே,ஓகே உனக்காக இந்தக் ஹெல்ப் பண்ணுறன். வரச்சொல்லு அவங்கள” என்றான்.

தன்னை நிற்கச் சொல்லிவிட்டு சென்று உஷா அவனிடம் சென்று பேசவும் என்னவாக இருக்கும் என்று தன் மூளையை(?) கசக்கி யோசித்தாள். அவள் தன்னைக் காட்டித்தான் ஏதோ பேசுகிறாள் என்பது மட்டும் புரிந்தது.

அவனிடம் பேசிவிட்டு வந்த உஷா “ரீச்சர் லேட்டாகிட்டு. நானே உங்கள ட்ராப் பண்ணிடுவேன். பட் அசைய முடியாத சிற்றுவேஷன். சோ, அவன் என் பெஸ்ட் பிரண்ட் தனஞ்சயன். அவன் உங்களை ட்ராப் பண்ணுவான்” என்றாள்.
“எதுக்குங்க வீண் சிரமம். நான் பஸ்ஸிலேயை போயிடுவன்”
அவளது பதட்டத்தைப் பார்த்ததும் “ரீச்சர் நீங்க பயப்படத் தேவையில்லை. அவன் ரொம்ப நல்லவன். அவனை நம்பி நீங்க போகலாம்.”
“சேச்சே.. நம்பிக்கையில்லாமல் இல்லை. அவருக்கேன் வீண் சிரமம் என்றுதான் யோசித்தேன்”

“ஒரு சிரமமுமில்லை. அவன் அந்த வழியாகத்தான் போகிறான். சோ, அவன் உங்களை ட்ராப் பண்ணிட்டுப் போவான்” எனவும் மறுக்க முடியவில்லை அவளால்.
 
Last edited:
Top