Sowndharyacheliyan
Writer
தன் முன் இருந்த டிரஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னை அலங்கரித்து கொண்டு அமர்ந்திருந்தாள் வருணாக்ஷி
ஆரஞ்சு வண்ணத்தில் சில்க் பட்டு சேலை அணிந்து அதற்கு தோதாக கல்பதித்த குடை ஜிமிக்கியும் அதற்கு உண்டாண ஒற்றை ஆரமும் தலையில் சிறிதளவு மல்லிப் பூவும் அவ்வளவே அவளது அலங்காரம்.
அவ்வப்போது வந்து எட்டி பார்த்து செல்லும் தந்தை ஞானசம்பந்தரை கண்டு சிறிய முறுவல் வந்தது அவளிடம்.
ஞானசம்பந்தர்-திலகா அவர்களின் புதல்வி தான் வருணாக்ஷி. இவளிற்கு ஒரு அண்ணன் கல்கி. இருவரின் பெயர்களிலேயே தெரிந்துவிடலாம் ஞானசம்பந்தரின் தமிழ் பற்றை.
பெரியகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார்.திலகா வீட்டை பார்த்துக் கொள்ளும் தலைவி.
"வரு ரெடியா? ப்ச் நெனைச்சேன் நீ இப்புடி தான் உட்காந்துருப்பேன்னு பூ வச்சுருக்குற அழகைப் பாரு பொணணு பார்க்க வராங்க தலைய தலைய வச்சாதான் என்ன??கை அளவு கூட வைக்கலை" என அவளை கடிந்தவாறே அவள் வைத்திருந்த பூவை நீக்கி விட்டு நிறைய வைக்க,
"அம்மா!!!! ஃப்ரிட்ஜில இருந்து எடுத்து அப்புடியே தலையில வைக்காதே எனக்கு தலைவலி வந்துடும் பாரு இன்னும் பூவு கூட சில்லுன்னு இருக்கு" என அவள் அலற,
“வரு!!!" என் அதட்டலிட்டவர் ஒரு நாள் தானே தாங்கிக்க அவ்வளவு அறிவு இருக்குறவ மொதல்லையே நிறைய வச்சிருக்கணும் அதை விட்டு எனக்கு ரெண்டு வேலை வைக்கிற உன் அத்தைங்க சித்தி எல்லாம் வநதுட்டாளுக, எதுடா சாக்கு குறை சொல்லலாம்னு கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திட்டு உந்து பாத்துட்டு இருக்காங்க நீயே அவங்களுக்கு பேசுறதுக்கு வாய்ப்பு தந்துடாத" என்றவர் அவள் சொல்ல சொல்ல கேளாது பூவை மொத்தமும் அவள் தலையில் வைத்து விட,
எதுவும் பேச முடியாமல் அவரை முறைத்து பார்த்த வண்ணம் இருந்தவளுக்கு பூவின் அதிகப்படியான மணமும் அதன் குளிர்ச்சியும் சேர்ந்து அப்போது தலைவலி லேசாக ஆரம்பிக்க இனி அவர்கள் கிளம்பி செல்லும் வரை இதனை தாக்கியாக வேண்டுமே என நினைத்தவளிற்கு கண்கள் கரித்து கொண்டு வந்தன.
"இப்போ ஏன் டி கண்ணை கசக்குற நல்ல நாளு அதுவுமா என்னை நிம்மதியா இருக்க விடுறியா நீ??மொதல்ல துடை கண்ணை யாராச்சும் பார்த்தாங்க அவ்வளவு தான் தொலைச்சிடுவேன் உன்னை! என்ற போதே அறை திறக்கும் சத்தம் வர திலகாவிற்கு உயிரே போயிற்றே.
பின்னே யாரேனும் இவள் அழுவதை பார்த்து விட்டால் என்ன செய்வது???இப்படி பெண் பார்க்க வரும் சமயம் பெண் அழுது கொண்டிருக்கிறாள் என்றால் எப்படி எல்லாம் கண் காது மூக்கு வைத்து பேசுவார்கள் என அவர் அறியாததா??
வருணாக்ஷி எதற்கு அழுகிறாள் என திலகாவிற்கு தெரியும் என்றாலும் மற்றவர்களுக்கு தெரியும் உண்மை காரணத்தை சொன்னாலும் நம்புவார்களா??
"ம்மா அப்பா உங்களை கூப்பிடுறாரு வாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பக்கத்துல வந்துட்டாங்க. கலா அத்தை மொத ஆளா வெளியே நிக்குறாங்க அவுங்கள வரவேற்கணும்னு ரூபா சித்தியும் அவுங்களுக்கு போட்டியா நிகாகுறாங்க. அவுங்கள சமாளிக்க அப்பாவால முடியலை நீங்க வாங்க தேடுறாரு" என்றபடி வந்தவனை கண்டு சற்றே நிம்மதி எழுந்தாலும்,
அவன் கூறியதை கேட்டு "அய்யோ" என்றிருந்தது அவருக்கு.
"என்னடா சொல்லுற அவுங்களை யாரு போக சொன்னது உமா பெரியம்மாவ தான் நான் நிக்க சொன்னேன்??"
"அய்யோ அம்மா நீ மொதல்ல போ அங்க உமா பாட்டி சொல்லுறதை அத்தையும் சித்தியும் காதுலையே வாங்கல ஒரு பஞ்சாயத்துக்கு ரெடி பண்ணிட்டு இருக்காங்க ரெண்டு பேரும் நீ போ " என அவன் விரட்ட,
"நான் யாருக்குடா பார்ப்பேன் இங்க உன் தங்கச்சிக்காரி பூவை வச்சுதுக்கு கண்ணுல தண்ணிய விட்டுட்டு உட்கார்ந்திருக்கா யாராச்சும் பாத்தாங்கன்னா என்ன ஆகும்??நல்ல நாள் அதுவுமா கூட என்னை நிம்மதியா இருக்க விடமாட்டிங்க போல நீ இவ பக்கத்துல இரு யாரையும் உள்ள விடாம பாத்துக்கோ நான் அங்க போறேன்" என்றவர் வருவை முறைக்க அதில் இருந்த எச்சரிக்கையில் தன் கண்களை அவள் துடைத்து கொள்ள அங்கிருந்து நகர்ந்தார்.
"என்னாச்சு வருணா எதுக்கு இப்போ அழுகை"
"ப்ரிட்ஜுல இருந்து அப்புடியே எடுத்து வச்சுட்டாங்க பூவை தலைவலிக்க ஆரம்பிச்சுடுச்சு. இனி அவங்க வந்துட்டு போற வரைக்கும் நான் இதை தாங்கிக்கனும்மா உங்க அம்மா சொல்லிட்டு போறாங்க" என அவள் வெடிக்க,
அவளது கோபத்தில் சிரித்தவன்,
"அவ்வளவு தான இரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் வரலை அப்புடியே வந்தாலும் உன்ன உடனே எல்லாம் கூப்பிட மாட்டாங்க நேரம் ஆகும் அதுவரைக்கும் இந்த பூவை எடுத்துடலாம்" என்றபடி அவள் தலையில் இருந்த பூவை எடுத்தவன் டேபிளில் வைத்தான்.
பூவின் குளிர்ச்சி அவன் உள்ளங்கைகளில் இறங்க "இந்தம்மா இருக்காங்களே" என பல்லை கடித்தவன் தண்ணீரை பூவின் மீது தெளித்து அதன் குளிர்ச்சியை போக்கும் முடிவில் இறங்கிட,
வெளியே ஞானசம்பந்தரின் நிலையே மிகவும் மோசமாக இருந்தது. அவரின் அக்காவான கலாவும் சரி திலகாவின் தங்கையான ரூபாவும் சரி அவரின் பேச்சை காது கொடுத்து கேட்காது ஒரு யுத்தத்திற்கு தயாராக இருக்க,
அவசரமாக அங்கே ஓடிவந்த திலாகவை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார் சம்பந்தர்.
வீட்டு அரசியலில் கை தேர்ந்தவர்களாக இருந்த இருவரையும் கட்டுப்படுத்துவது என்பது சற்றே சிரமமான காரியம் தான்.
அது என்னவோ திலகா மணம் முடித்து வந்து தினத்திலிருந்து அவரின் தங்கையான ரூபாவுக்கும், திலாகாவின் நாத்தனாரான கலாவுக்கும் சரி வாய்க்கால் தகராறு தான்.
தன் பிறந்த வீடு என்ற உரிமை கலாவிற்கும் தன் அக்காவின் வீடு என்ற உரிமை ரூபாவிற்கும் அதிகமாக இருந்தது தான் இவர்கள் தகராறிற்கு காரணம்.
கலா ஒன்று சொன்னால் ரூபா மறுப்பதும் ரூபா ஒன்று சொன்னால் கலா மறுப்பதும் அவர்களின் தினசரி போக்கு.
இதோ இப்போது கூட ஆளுக்கு முன்னே வந்து நின்று கொண்டவர்கள் மற்றவரின் முன் உரிமையை நிலைநாட்டி விடும் முயற்சியில் இறங்கிவிட்டிருந்தவர்களை கண்டு திலகாவிற்கு தான் படபடத்து வந்தது.
"அண்ணி இங்க என்ன பண்ணுறீங்க அங்க வர்றவங்களுக்கு காபி டிபன் எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு உங்கள நம்பி நீங்க பாத்துக்குவீங்கன்னு தான் நான் அடுப்படி பக்கமே போகல,நீங்க தான் சரியா எது கூட எது குறைவுன்னு சொல்லுவீங்க, இங்க நின்னீங்கன்னா அங்க என்ன கலவரம் பண்ணுறாங்கன்னு தெரியலையே அண்ணி" என அவர் நயமாக பேசி அவரை குளிர்விக்க,
"அட ஆமா திலகா இந்த திண்டுக்கல் பெரியம்மா தான் அடுப்படியில நின்னுட்டு இருந்தாங்க போச்சு அவுங்க எண்ணையை தண்ணி மாதிரில ஊத்துவாங்க?? "
"ஆமா அண்ணி வர்றவங்க எல்லாருக்கும் எண்ணை பலகாரம் ஒத்துக்குமான்னு தெரியலையே ஏதாவது ஆச்சுன்னா போச்சு உங்க தம்பி என்னை தொலைச்சிடுவாறு???
அவரு மொதல்லயே "அக்காவ தவிர வேற யாரையும் அடுப்படியில விட்டுடாதா அக்காவுக்கு தெரிஞ்ச அளவு வேற யாருக்கும் பக்குவம் தெரியாதுன்னு" சொன்னாரு நானும் நீங்க இருக்குற தைரியததுல அடுப்படி பக்கம் எட்டி பாக்காம விட்டுடேனே" என அவர் பாவமாக கூற,
'நான் எப்ப இதை சொன்னேன்' என்ற ரீதியில் சம்பந்தர் முழிக்க அவரை டீலில் விட்டார் திலகா.
"அடி ஆத்தி என் காதுல ஒத்த வார்த்தை ஓதியிருக்க கூடாதா நீ திலகா?? இந்தா போறேன் அடுப்படிக்கு" என்றவர் தம்பியை பாசமாக ஒரு பார்வை பார்த்து விட்டு நகர,
தன்னையே முறைத்து கொண்டிருந்த தங்கையை கண்டு தானும் முறைத்த திலகா,
"இங்க என்ன டி அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்க அங்க வருணா "சித்திய வர சொல்லுங்க அவங்க தான் அலங்காரம் பத்தி சரியா சொல்லுவாங்கன்னு" அவ உன்னை தேடிட்டு இருக்கா நீ என்னடான்னா இங்க நின்னு நாட்டாமை பண்ணிட்டு இருக்க" என்ற அதட்ட,
"வந்ததும் இதை சொல்ல மாட்டியாக்கா நீ" என அவரிடம் காய்ந்த ரூபா அடுத்த நொடி வருவின் அறையை நோக்கி சென்றிருந்தார்.
நடக்க இருந்த மூன்றாம் உலக யுத்தத்தை தற்போதைக்கு தடுத்து நிறுத்திய நிம்மதி திலகாவின் முகத்தில் படர,
அவரையே வியந்து பார்த்தார் அவரின் பிராணநாதர். பின்னே அரை மணி நேரமாக அவரால் தடுத்து நிறுத்த முடியாத யுத்தத்தை வந்த ஐந்தே நிமிடத்தில் நிறுத்தி விட்டிருந்தார் அல்லவே.
அவருக்கு ஒன்று தெரியவில்லை நாட்டு அரசியலில் எப்படியோ வீட்டு அரசியலில் பெண்களை மிஞ்சி ஒருவர் இருந்து விட முடியுமா என்ன??
"முன்னாடியே கூப்பிடமாட்டியா வரு நீ??வெளிய தான இருந்தேன் ஒரு சத்தம் கொடுத்தா வந்துருப்பேன்ல??எங்க எழுந்து நில்லு அலங்காரத்தை பாக்கலாம்" என்றபடி ரூபா வர,
அவரின் பேச்சில் கல்கி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் விழிக்க,
வரு நொடியில் கண்டு கொண்டாள் இது திலகாவின் வேலை என்று.
"ஆமா சித்தி இந்த மாட்டல் பாருங்க இந்த தோடுக்கு மேட்ச் ஆகுதா??" என அவரை பேச்சில் இழுத்து கொண்டவள் தமையனிடம் தான் பார்த்து கொள்வதாக கண் மூடி திறக்க அவனும் நிம்மதியுடன் அகன்றான்.
*************************
வெளியே கேட்ட பேச்சு குரலில் சட்டென்று ஒரு படபடப்பு வந்து ஒட்டி கொண்டது வருணாக்ஷியிடம்.
ஓடி கொண்டிருந்த காத்தாடியையும் மீறி சிறு சிறு வியர்வை துளிகள் அவளின் நெற்றியில் அரும்ப இதயத்தின் வேகம் சற்றே வேகப்பட்டது.
கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு இனம் புரியா ஒரு உணர்வு அவள் உருவம் அவளிற்கே அழகாய் இருப்பது போல் ஒரு உணர்வு.
ஒற்றை கல் வைத்த ஆரம் மட்டும் அணிந்திருந்தவளை ரூபா திட்டி மேலும் மூன்று நகைகளை அணிவித்திருக்க அதுவும் அழகாய் தான் இருந்தது பெண்ணிற்கு.
"வரு ரெடியா வா வா " என ரூபா வந்தழைக்க
"சித்தி!!!" என்றவாறு அவள் கைகளை அழுந்த பற்றி கொண்டவளின் நிலை ரூபாவிற்கு புரிய,
"அட!! வரு என்ன இது? ஏன் இப்படி" என சட்டென அவர் சிரித்து விட,
"சித்தி!!!" என சிணுங்கியவள் அழும் நிலைக்கு செல்ல,
"அடடே வாடி, பொண்ணு பாக்க தான வந்துருக்காங்க??"
"என் பக்கத்துலயே நில்லு சித்தி"
"சரி சரி வா டென்ஷன் ஆகாத" என்றவாறு அவளை வெளியே அழைத்து சென்றார்.
சபைக்கு வணக்கம் வைக்க சொல்ல செய்தவள் அவசரமாக கீழே விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்து கொண்டு ரூபாவின் மூத்த பெண்ணை தனக்கருகே இழுத்து அமர வைத்து கொண்டாள்.
ஜூஸ் டிரேயை எடுத்து கொண்டு வெளியே வந்த திலகா இவள் அமர்ந்திருப்பதை கண்டு திகைத்தவர் "இவளை" என பல்லை கடித்து கொண்டு முறைக்க,
அவரின் முறைப்பை உணர்ந்தாற் போல் அவர் புறம் திரும்பாது அமர்ந்திருந்தாள்.
எங்கே திரும்பினால் அவளை அழைத்து கையில் டிரேயை தந்து விடுவார்களோ என்ற அச்சம் தான்.
நேற்றைய இரவே இதற்கு ஒரு அலப்பரையை கூட்டியிருந்தாள்.
"பாரு ம்மா நாளைக்கு என் கையில எதையாச்சும் கொடுத்த பாத்துக்கோ???
என்னால எல்லாம் சர்வர் மாதிரி எல்லாருக்கும் நாளைக்கு காபி டம்பளரை நீட்டிட்டி இருக்க முடியாது" என,
"நீ கொடுக்காமா வேற யாரு கொடுப்பாங்களாம் உன்னை தான பாக்க வர்றாங்க??"
"ஆங்! அதுக்கு என்னால எல்லாம் கொடுக்க முடியாது நீ போய் கொடு" என்றிருந்தவள் எங்கே நின்றிருந்தாள் திலகா டிரேயை நீட்டி விடுவாரோ என்ற பயத்தில் தான் அமர்ந்து கொண்டது.
வேறே வழியின்றி திலகாவே அனைவருக்கும் கொடுக்க முகிலனிடம் நீட்டும் போது அவருக்கே சற்று சங்கோஜமாக இருந்தது.
'இவ இருக்காளே என்னமோ என்னை பாக்க வந்த மாதிரி நான் நீட்டிட்டு இருக்கேன் தட்டை' என சங்கடப்பட்டவருக்கு பல்லை கடிக்க மட்டும் தான் முடிந்தது.
திலகாவின் அவஸ்தையை அவரின் உடல் மொழியில் புரிந்த கொண்ட வருணாவிற்கு சிரிப்பு வர இதழ் ஓரத்தில் பூக்கவிருந்த முறுவலை உதட்டை மடக்கி அடக்கி கொண்டு கண்களால் அவரை பார்த்து கிண்டலாக அவள் சிரிக்க,
யாரின் கண்ணிற்கும் அகப்படாத அந்த புன்னகை வந்ததிலிருந்து அவள் மேல் பார்வையை அலைய விட்டவனின் கண்ணிற்கு அவளின் புன்னகையும் அதற்கான காரணமும் சட்டென பிடிபட்டு விட்டதில் தானாக,
'சரியான குறும்புக்காரிய இருப்பா போலயே நமக்கு ஒத்து வருவாளா??' என்ற எண்ணம் தோன்றி விட்டிருந்தது.
அடுத்தது என்ன என்ற யோசிக்கும் வேளையிலேயே தட்டை மாற்றி உறுதி பூ வைத்திருந்தனர்.
"பொண்ணுகிட்ட ஏதும் மாப்பிளை தம்பி பேசணும்னு விருப்படுறாப்புலையா??" என ஒருவர் ஆரம்பிக்க,
"இல்லை வேண்டாம் அவசியமில்லை" என்ற முகிலனின் பதிலில் சட்டென பூத்த சிறு வெட்கப்புன்னகை மறைந்து விட்டது வருவிற்கு.
நேற்றைய இரவில் இருந்து இப்புடி ஒரு நிகழ்வு வரும் என எதிர்பார்த்து என்ன பேசுவது என ஒத்திகை பார்த்து வைத்திருந்தவளுக்கு முகிலனின் இந்த பதில் சிறு ஏமாற்றத்தை தந்திட,
அவளின் முகம் லேசாக வாடிவிட்டது. அவளின் வாட்டத்தை கண்டு கொண்ட கல்கிக்கு என்னவோ போல் இருந்தது.
இரண்டு நாட்களாக "டேய் அண்ணா மாப்பிள்ளை கிட்ட பேச சொன்னா என்னடா பேச? அவுங்க ஹைட் என்னன்னு கேட்கவா இல்லை என்னை பிடிச்சிருக்கான்னு கேட்கவா??எதுக்கு என்னை பிடிச்சுட்டு கேட்கவா" உளறி கொட்டியவளை அவன் விசித்திரமாக பார்க்க,
"ஏதாவது டிப்ஸ் கொடுண்ணா பசங்களோட எதிர்பார்ப்பு உனக்கு நல்லாவே தெரியும்ல" என அவனை பாடாய்படுத்தியிருந்தாளே.
'அப்பா!!' என கல்கி பேச எண்ணி வாயை திறந்த நொடி,அதற்கு முன்னே வாயுவின் முகமாற்றத்தை கவனித்து விட்டிருந்த முகிலன்,
"இல்லை பேசணும்!!" என எழுந்து நின்று விட
அனைவருக்கும் சரி என்று சொல்லுவதை தவிர வேறு வழியில்லை.
"கல்கி" என சம்பந்தர் அழைக்க,
"ம்ம்ம் ப்பா கூட்டிட்டி போறேன்" என்றவன்,
"வாங்க" என கூறி முகிலனை அழைத்து கொண்டு பின்கட்டுக்கு சென்று அங்கிருந்த மாடியை காட்டிட,
முகிலனும் வேறு பேசாது அந்த படிகளின் வழியே ஏறி சென்றிட சில நொடிகளிலேயே வரு வந்து விட,
அதிக படபடப்புடன் வந்தவள் "கல்கி" என அவன் கை பிடிக்க,
"போ போய் பேசு என்ன கேட்கணும்னு நெனைக்கிறியே அதை மனசுல வச்சுக்காம கேட்டிடு நான் இருக்கேன் போ அவரு வெயிட் பண்ணிட்டு இருக்காரு" என சிறு சிரிப்புடன் கூற,
அண்ணனின் வார்த்தைகள் ஆறுதலை தர மேலேறினாள்.
பின்கட்டு இருந்த இடத்தில் தோட்டம் போல் அமைத்திருந்தனர்.ஓங்கி வாய்ந்த தென்னை மரம் ஒன்று தனது கிளைகளை நன்கு பரப்பி மாடியில் ஒரு பகுதி முழுவதையும் நிழலால் நிரப்பியிருக்க,
அடித்த வெயிலிற்கு இணையாக மெல்லிய தென்னை மரத்தின் காற்று வீசி சற்றே வெப்பத்தை தணிக்க முயன்று கொண்டிருக்க அந்த இடத்தில் நின்றிருந்தான் முகிலன் அவனருகே வருணா.
"ம்ஹூம் என்ன படிச்சிருக்க??" என அவன் பேச்சினை துவக்க,
"அது கூட தெரியாமலா பொண்ணு பாக்க வந்தீங்க" என அவள் சட்டென கேட்டிருக்க நெற்றியை தேய்த்து விட்டவன் 'கொஞ்சம் அகராதியும் போலயே' என நினைக்க,
"ஓஹ் அப்போ என்னை பத்தி எல்லாம் தெரியுமா உனக்கு??" என்றிட,
"ம்ம்ம் பேரு முகிலன் ஆர்க்கிடெக்ஜர்ல மாஸ்டர் முடிச்சிருக்கீங்க தேனில இருக்குற கார்முகில் ஸ்டீல்ஸ் அண்ட் வுட் (steals & wood) கம்பெனி வச்சு நடத்திட்டு இருக்கீங்க. உங்களுக்கு வரையறது ஆர்ட் மேல் ரொம்பவே ஆர்வம்.
அதனால கட்டில், பீரோ, ஷோபான்னு வீட்டுக்கு தேவையான எல்லா பர்னிச்சர்கள் ஐட்டமும் ஸ்டீல்லயும் வுட்லயும் நீங்களே டிசைன் பண்ணி விக்கிறதுக்கு நீங்க சொந்தமா ஒரு பர்னிச்சர்ஸ் ஷோ ரூமூம் இப்போ மூணு வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு அது சக்சஸ் புல்லா போயிட்டு இருக்கு.” என்றவள்,
“ம்ம்ம் இவ்வளவு இவ்வளவே இவ்வளவு குட்டி விசயங்கள் தான் உங்களை பத்தி எனக்கு தெரியும்" என அவள் விரல்களை குட்டியாக்கி காட்ட,
அதில் அவனிற்கு சிரிப்பு வர அவளிடம் அதனை மறைக்க தோன்றாது அழகிய புன்னகையை சித்தினான்.
பின்னே அவனின் சர்வத்தையே கூறி விட்டு கொஞ்சம் என்கிறாளே!!!!
பல் வரிசை தெரியாது இதழ்களை விரித்தவனின் சிரிப்பே அவளை தடுமாற செய்ய அவனையே பார்த்த வண்ணம் இருந்தாள்.
அவளின் பார்வையை உணர்ந்தவனிற்கு காது மடல்கள் சூடாகும் உணர்வு!!!!
"ம்ஹீம் கீழ போகலாம் காத்துட்டு இருப்பாங்க" என அவன் படியிறங்கி செல்ல,
"என்னை பத்தி எதுவும் கேட்காம தெரிஞ்சுக்காம போறீங்களே??" என்றவளின் கேள்வி அவளின் தைரியத்தையும் வாய்துடுக்கையும் பறைசாற்ற,
"சேட்டைக்காரி அதிகப்பிரசங்கின்னு மட்டும் இல்லை வாய்துடுக்கும் உனக்கு அதிகமா தான் இருக்கு.மொதல்ல இது ஒத்து வருமான்னு யோசிச்சேன்" என்றவனின் பேச்சில் அவள் முகம் நொடியில் சிறுத்து விட,
"ப்ச் சொல்லுறதை முழுசா காது கொடுத்து கேட்கணும்??" என அதட்டியவன்,
"மொதல்ல யோசிச்சேன் தான் ஆனா இப்போ ஒத்து வரலைனாலும் பரவாயில்லை, உன்னை விட முடியாதுன்னு தோணுது!” என்றதும் அவள் முகம் மலர்ந்து விட,
மலர்ந்த அவளின் முகத்தை ரசித்தவன்,
"அதான் வாழ் நாள் முழுக்க சேர்ந்து தானே இருக்க போறோம். பொறுமையா தெரிஞ்சுக்கிறேன் உ
ன்னை பத்தி உன் மூலமாவே!!" என்றவன் மறைமுகமாக அவனின் பிடித்தத்தை உரைத்து விட,
அடுத்து என்ன அங்கே மடமடவென நிச்சயத்திற்கு நாள் குறிக்கப்பட
கார்முகிலன் - வருணாக்ஷியின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது.
படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.