எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 19

S.Theeba

Moderator
வரம் 19

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய வர்ஷனாவிற்கு இன்று வீட்டிற்குள் செல்லவே பிடிக்கவில்லை. இப்படியே எங்காவது கண்காணா தேசத்திற்கு ஓடிப் போய்விட்டால் நல்லது என்றே தோன்றியது. ஆனால், தான் உயிரையே வைத்திருக்கும் பாசமான அம்மா, அப்பா, தம்பியை விட்டுத் தன்னால் கண்காணாத தூரத்திற்குப் போய் விட முடியுமா? என்னதான் செய்வது என்று சிந்திக்கவே தலை வலித்தது.

வாசலில் யோசனையுடன் நின்றவளைக் கண்ட மாலதி "ஏண்டி வாசலிலேயே நிற்கிறாய்? சீக்கிரமாகப் போய் ரெடியாகிற வேலையைப் பார். மசமசன்னு நிக்காத" என்று கூறிக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள்.

உள்ளே சென்று தன் அறைக்குள் புகுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள். அங்கே கட்டிலில் அழகிய பட்டுசேலையும் அதற்குத் தோதாக சிறிய நகைகளும் மல்லிகைச் சரமும் வைக்கப்பட்டிருந்தன. அதனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது அறைக்குள் நுழைந்தாள் மஞ்சு.
"என்னடி இன்னும் சாரியே கட்டாமல் இருக்க. சீக்கிரம் ரெடியாகு... அங்கே மாலதியம்மா கத்திட்டு இருக்கா. நான் லேட்டா வந்திட்டேன் என்று எனக்கு வேறு திட்டு விழுந்திச்சு. டைம் ஆச்சுடி" என்றவாறு அவளைத் தயார்படுத்த ஆரம்பித்தாள்.

இன்று வர்ஷனாவைப் பெண் பார்க்க வருகின்றார்கள். மாலதி அவளிடம் கொடுத்த ஃபோட்டோவை இன்று வரை அவள் பார்க்கவே இல்லை. பார்க்கத் தோன்றவும் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து கலையரசன் அவளிடம் கேட்டபோது
"உங்கள் விருப்பம் அப்பா" என்றிருந்தாள். "இல்லைம்மா, உனக்குப் பிடித்தால் மட்டுமே இந்த சம்பந்தத்தைப் பேசுவேன்."
"அப்பா, எனக்கு எது நல்லதென்று உங்களையும் அம்மாவையும் விட வேறு யாருக்கப்பா தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் கல்யாணம் பண்ணுவேன்." அவள் அப்படி சொல்லவும் அவளைப் பெற்றவர்களுக்கு சந்தோசத்தில் மனம் நிறைந்தது.
"வர்ஷாம்மா அப்படியென்றால் அவங்களை, சம்பிரதாயப்படி பொண்ணு பார்க்க வரச் சொல்லவா?"
"ம்ம். சரிப்பா" என்றிருந்தாள்.

எனவேதான் இன்று நாள் நன்றாக இருக்கிறதென்று கூறி பெண் பார்க்க அவர்கள் வருகின்றார்கள்.

மஞ்சு அவளைத் தயார்படுத்தினாள். அவளைக் கேலி பண்ணியபடித் தலைவாரி விட்டவள், மல்லிகைச் சரத்தைக் கொத்தாக அவள் தலையில் வைத்துவிட்டாள்.
"ரொம்ப அழகாய் இருக்கடி. என் கண்ணே பட்டிடும் போல இருக்கு." என்று கூறி திருஷ்டி பொட்டு ஒன்றும் வைத்துவிட்டாள்.

அப்போது அறைக்குள் வந்த கலையரசன் "வர்ஷாம்மா, ரெடியாச்சா? என் செல்லம் இன்று ரொம்ப அழகாய் இருக்கா." என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டார்.
"அப்பா ரொம்ப பாசத்தைக் கொட்டாதிங்க. நீங்க இந்த ரூம் ஃபுல்லா கொட்டுற பாசத்தில நான் தடுக்கி விழுந்திடப் போறேன்." என்றாள் மஞ்சு. "வாயாடி, உன் அப்பன் வெங்கட்டிடம் பேசணும். உனக்கும் சீக்கிரம் கல்யாணம் கட்டிவைக்கச் சொல்லணும்"
"அதான்பா நானும் ரொம்ப நாளாக வெயிட் பண்ணுறேன். எங்கே இந்த வெங்கட் என் கல்யாணப் பேச்சையே எடுக்கமாட்டேன் என்கிறாரே"
"பொறு, பொறு நாளைக்கு முதல் வேலை வெங்கட்டிடம் நான் பேசுவதுதான்"
"ஐயோ அப்பா, நான் சும்மா சொன்னேன். எனக்கெல்லாம் இப்போதைக்கு கல்யாணம் பண்ணுற எண்ணமே இல்லை." என்றாள் மஞ்சு. சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றார் கலையரசன்.

அதுவரை நேரமும் தானும் கலையரசன் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தபோது வர்ஷனா அமைதியாக இருந்தது மஞ்சுவிற்கு உறுத்தியது. இது வர்ஷனாவின் குணமே அல்ல. தான் வந்த நேரம்தொட்டு வர்ஷனா அதிகம் பேசவில்லை என்பதும் அவளுக்கு உறைத்தது. எப்போதும் கலகலவென்று எல்லோரையும் கலாய்ப்பவள் இன்று ஏன் அமைதியாக இருக்கின்றாள். வெட்கமா என்றால் அவளது முகத்தில் வெட்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. மாறாக எதையோ பறிகொடுத்து நிற்பவள் போன்றே தோன்றியது.

கட்டிலில் அமர்ந்திருந்த வர்ஷனாவின் அருகில் சென்று அமர்ந்தாள் மஞ்சு.
"வர்ஷூ, உனக்கு என்னடி பிரச்சினை?. பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கு உன் மூஞ்சி..."
"ஒன்றுமில்லை."
"இல்லை. ஏதோ இருக்கு. என்கிட்ட மறைக்கிற."
அவள் பதிலேதும் சொல்லவில்லை.
"ஏண்டி உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலையா? அம்மா, அப்பா உனக்கு பிடிக்காததைச் செய்ய மாட்டார்களே?"
"ம்கூம்... நான் சம்மதம் சொன்ன பிறகுதான் அப்பா அவர்களை வரச் சொல்லி இருக்கார்"
"அப்புறம் ஏண்டி உன் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு"
"இஞ்சி தின்ன குரங்கை நீ நேரில பார்த்திருக்கிறாயா?"
"ஹி ஹி... அதெல்லாம் ஃப்ளோவில வாற வேர்ட்ஸ். சோ, அதெல்லாம் விடு. இல்லை... நீ உண்மையைச் சொல்லு."
வர்ஷனா எதுவும் பேசாமல் இருக்கவும் அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள்,
"ஏன் வர்ஷூ, நீ யாரையாவது லவ் பண்ணுகின்றாயா?" என்று நேரடியாகக் கேட்டாள

அவள் இப்படிக் கேட்கவும் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவளைப் பார்த்தாள் வர்ஷனா. அவள் அதிர்ச்சியும் பார்வையுமே உண்மையை மஞ்சுவிற்குப் புட்டுவைத்தது.
"அப்படியென்றால் உண்மையாகவே நீ ஒருத்தரை லவ் பண்ணுகின்றாயா? யாரடி அவன்? எனக்குக் கூட இத்தனை நாளாய் சொல்லவேயில்ல. எவ்வளவு காலமாய் இந்த லவ் போகுது?"
"சீ.சீ... அப்படியெல்லாம் இல்லைடி"
"எப்படியில்ல. நீ லவ் பண்ணுறாய் தானே?"
"ம்ம்"
"அப்புறம் என்னடி. எனக்குத் தெரியாமல் இவ்வளவு காலம் மறைச்சிருக்காய்தானே?"
"இல்லடி. நான்தான் லவ் பண்ணுறேன். அவருக்கு இது தெரியாது."
"என்னடி குழப்புகிறாய்?" என்று மஞ்சு கேட்கவும் வர்ஷனா தன் மனதில் உள்ளதை அப்படியே அவளிடம் கூறினாள்.

அவள் கூறுவதைக் கேட்டதும் மஞ்சுவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவளது காதல் சரியானதா என்று கூடத் தெளிவு ஏற்படவில்லை.

அந்நேரத்தில் அறைக்குள் நுழைந்த மாலதி "ரெண்டு பேரும் வம்பளந்து கொண்டிருக்கிங்களா? வர்ஷூ நீ ரெடியாச்சா? மஞ்சு, என்கூட வா. உனக்கொரு சின்ன வேலையிருக்கு" என்று கையோடே மஞ்சுவை அழைத்துச் சென்றாள். வர்ஷனாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே மாலதியுடன் சென்றாள் மஞ்சு.

சரியாக ஆறு மணியளவில் பரபரவென உள்ளே வந்த வருணியன் "அக்கா, மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சு. அப்பா உன்னிடம் சொல்லச் சொன்னார்." என்றான்
 
Top