எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கார்முகில் 3



"ஹரி என்ன பண்ணுறான்? உன் வீட்டுக்காரர் வீட்டுல இருக்காரா?" என்ற லட்சுமி அலைப்பேசி வழியே கேள்வி கேட்க,

"கீழ அவுங்க பாட்டிகிட்ட இருக்கான் மா அவரு இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேலைக்கு கிளம்பி போனார்??"

"என்ன டி மணி தாண்டிடுச்சு இன்னைக்கு லேட்டாவா போயிருக்காரு யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்களா??"

"ம்மா அவரு கவர்மென்ட் ஆபிசரு அவரை யாரு அங்க என்ன சொல்லிட முடியும்" என்ற சங்கவியின்‌ பேச்சில் கர்வம் அப்பட்டமாக தொனித்தது.

விக்ரம் தேனியில் வி.ஏ.ஓ பணியில் இருக்கிறான்.

"சரி டி நான் சொன்னதை பத்தி யோசிச்சியா??"

"ச்சு இதுல யோசிக்க என்னம்மா இருக்கு நான் சொன்னா இந்த வீட்டுல எடுபடுமா? பொண்ணு பாத்துட்டு வந்து இரண்டு நாளு ஆகிடுச்சு இப்போ போய் அந்த சம்மந்தம் வேண்டாம்னு வீட்ல போச சொல்லுற?" என்றவளின் குரல் சற்று கடுப்பாகவே வந்தது.

"அடியே கிறுக்கி நான் உன் நல்லதுக்கு தான சொல்லுறேன். பொண்ணு தான பாத்துட்டு வந்துருக்கோம் இதை உன்னால் தடுக்க முடியாதா??"

"ம்மா நிச்சயத்துக்கு தேதியும் குறிச்சாச்சு??"

"நீ ஒண்ணுத்துக்கும் லாயாக்கில்லைடி உனக்கு இப்போ தெரியாது அந்த பொண்ணு கல்யாணம் ஆகி வந்தப்பறம் தெரியும்? அப்ப நெனைப்ப அம்மா அப்பவே சொன்னாங்களே நம்ம கேட்கலையேன்னு?" என்க,

சங்கவிக்கு பெரும் தலைவேதனையாக இருந்தது இந்த இரண்டு நாட்களாக.

லட்சுமி சொல்வதை அவளால் ஏற்கவும் முடியவில்லை அதே சமயம் திட்டவட்டமாக மறுக்கவும் முடியாமல் அவள் மனம் நிலைதடுமாறி இருக்க அதனை லட்சுமி தன் இஷ்டத்திற்கு வளைக்க நினைக்க அதற்கே அவர் பெற்ற பெண்ணே தடையாய் இருக்கிறாள்.

"இங்க பாரு சங்கவி பொண்ணு பாக்க போனப்போ அந்த பொண்ணு போட்டுருந்த நகையை பாத்ததானே? சும்மா பொண்ணு தான பாக்க போனோம் அதுக்கு அத்தனையையும் மாட்டிகிட்டு நிக்கணுமா?? என்ன அவங்ககிட்ட இருக்குற நகையோட அளவை உனக்கு காட்டணும்னே அத்தனையும் மாட்டிட்டு வந்து நின்னுருக்க??" என்றவரிடம் அப்பட்டமான பொறாமை.

"ஏம்மா என்கிட்ட நகையே இல்லாத மாதிரி இருக்கு நீ பேசுறது"

"உன்கிட்ட இருக்குடி ஆனா அது எல்லாம் உன் புருஷன் வாங்கி தந்தது. ஆனா அவளுக்கு அப்புடி இல்லை என்‌ பொறந்த வீட்டுல எனக்கு வாங்கி கொடுத்துருக்குறத பாருன்னே அத்தனையையும் மாட்டிட்டு வந்துருக்கா இப்பவே இப்புடினா கல்யாணம் முடிஞ்சது அவ்வளவு தான் அவ பொறந்த வீட்டு ஆளுங்க நகையும் கட்டுமான அவளுக்கு சீர் செய்வாங்க

பொறந்த வீட்டு சீருன்னு பெருமை கொண்டாடுவா?அதை வச்சே உன்னை‌ மட்டம் தட்டி மூலையில உட்கார வச்சிட்டு அவ அதிகாரத்தை கையில எடுத்துக்குவா" என்றிட,

தாயின் இந்த ஒப்பீட்டு பேச்சில் சங்கவியினுள் சிறு எரிச்சல் பரவியது.

'அம்மா சொல்றது உண்மையா இருக்குமோ எனக்கு காட்டணும்னே மாட்டிட்டு வந்து நின்னாளோ' என நினைத்தவளிற்கு அந்த எண்ணமே வேப்பங்காயை கசக்க அதில் சிறு துளி வருணாக்ஷியின் மீதும் விழுந்திற்று.

"சங்கவி?????"

"சொல்லுமா கேட்குது"

"என்னத்தை சொல்ல? சொல்லுறதை எல்லாம் நீ செஞ்சுடுறியா என்ன? இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன் எப்புடியாச்சும் அபர்ணாவ பேசுன்னு நீ கொஞ்சம்‌ முயற்சி எடுத்திருந்தா நடந்திருக்காதா??

அதுசரி உனக்கு உன் வாழ்க்கையவே பாக்க துப்பில்லை இதுல எங்க? நீ எங்களை பார்ப்ப அம்மா கஷ்டப்படுறாளே தங்கச்சியை எப்புடியாச்சும் நம்ம வீட்டுக்கு மருமகள கூட்டிட்டு வந்துட்டா அவுங்க நிம்மதியா இருப்பாங்களேன் எல்லாம் நீ எங்க யோசிக்கப் போற

எங்க தலையெழுத்து கடைசி வரைக்கும் இப்படியே இருந்து சாகணும்னு இருக்கு. எனக்கு வேலை இருக்கு போனை வைக்கிறேன் நான் என்ன உன்னை மாதிரி பெரிய‌ இடத்துலயா வாங்கப்பட்டு இருக்கேன் வேலைக்காரங்க சாப்பாடு செய்வாங்கன்னு உட்கார்ந்து கதை பேச அந்த அடுப்புல போய் நின்னு வெந்து நான்தானே சமைக்கணும்" என்றவர் அலைப்பேசியை வைத்து விட தலையை அழுந்த பற்றி கொண்டாள் சங்கவி.

தாயின் பேச்சு அவளை நன்கு குழப்பி விட்டிருக்க "ச்சு இவக்கிட்ட நகை இருந்தா அத்தனையையும் மாட்டிட்டு வந்து நிக்கணும்னு அவசியம் என்ன வந்தது? இப்போ நான்‌ தான் சிக்கிகிட்டு முழிக்கிறேன்" என முணங்கியவள் கீழே செல்ல ஹரிக்கு உணவினை கொடுத்து கொண்டிருந்தார் வனஜா.

அவரருகே சென்று அமைதியாக அமர்ந்து கொண்டவளுக்கு லஞ்சுமியின் தூபம் நன்றாய் மண்டையை கழுவியது.

"வனஜா க்கா" எனறழைத்தபடி பக்கத்து வீட்டு பெண்மணி வர,

"வா சுமதி என்ன வீட்டுல வேலை எல்லாம் முடிஞ்சதா??"

"அதெல்லாம் ஆச்சு கா முகிலனுக்கு பெண்ணு பாக்க போனதா தகவல் வந்துச்சு அதான் என்னன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்"

"அட பாருடா நாங்க போயிட்டு வந்து இரண்டு நாளு ஆகிடுச்சு இப்போ தான் உனக்கு தகவல் வந்துச்சா??"என்க அவரின் பேச்சில் அசடு வழிந்தார் சுமதி.

"சரி சரி பொண்ணைப் பத்தி சொல்லுங்க போட்டோ இருந்தா காட்டுங்க கா"

"ரூம்ல என்னோட பீரோல இருக்கு எடுத்துட்டு வா சங்கவி" என வனஜா கூற சரியென்று சென்றவள் போட்டோவினை‌ எடுத்து கொண்டு திரும்பியவள் அதனை சுமதியிடம் கொடுக்க வாங்கி பார்த்தவர்,

"பரவாயில்லை க்கா முகிலனுக்கு உங்க வளசல்லயே முடிச்சிட்டீங்க நான் கூட பெரியவனுக்கு முடிச்ச மாதிரி எங்க வேற பக்கம் பாப்பீங்களோன்னு இருந்தேன்.

என்ன தான் தங்கமா இருந்தாலும் நம்ம ஆளுங்க மாதிரி வருமா??" என்றிட எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது அப்பெண்மணியின் பேச்சு.

சுமதி பேச ஆரம்பித்ததும் சங்கவியின் முகம் மாறி விட கவனித்த வனஜா சட்டென பேச்சினை திசை மாற்றினார்.

"பொண்ணு பேரு வருணாக்ஷி. தேனில ஒரு‌ ஸ்கூல்ல வேலைக்கு போயிட்டு இருக்கா" என அவர் கூற,

"ஓ பரவாயில்லையே க்கா டீச்சர் பொண்ணா பாத்துட்டீங்களா நல்லது கல்யாணத்துக்கு அப்பறமும் வேலைக்கு போக சொல்லுங்க நம்ம சங்கவி மாதிரி வீட்டுல இருந்துட போறா அப்பறம் கஷ்டப்பட்டு படிச்சதுக்கு என்ன ப்ரோயோஜ்ஜனம்" என்றிட,

ஜிவ்வென ஏறியது சங்கவிக்கு.

"அதெல்லாம் அவ விருப்பம் தான் சுமதி நம்ம இதுல சொலலுறதுக்கு என்ன இருக்கு??" என சிவகாமி கூறிட,

'என்னை இவுங்க வேலைக்கு போகமா வீட்டுல இருக்கேன்னு குத்தி பேசுறாங்க அதை என்னன்னு கேட்காம அத்தையும் அமைதியா இருக்காங்கன்னா என்ன அர்த்தம் அப்போ அவுங்களுக்கு மனசுல அந்த எண்ணம் இருக்கா' என நினைத்தவளின் கோபம் எல்லாம் பராபட்சமின்றி எல்லார் மீதும் திரும்பியது.

அதன்பிறகும் அவர் வருணாவின் குடும்பம்,வேலை, சொத்துகள் என‌‌ ஒரு அலச அவருக்கு தக்கப்படி வனஜாவும் அவரின் கேள்விகளுக்கு பதில் கூற
கேட்டு கொண்டிருந்த சங்கவிக்கு தான் வருணாவை விட தான் கீழோ என்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை.

வெகுநேரம் பேசி கொண்டிருந்தவர் ஒருவழியாக கிளம்பி விட,
"ஏன் அத்தை இந்த இடம் ஒத்து வரும்னு நெனைக்கிறீங்களா??" என சங்கவி அதுவரை மனதில் வைத்திருந்த கேள்வியை கேட்டு விட திடுக்கிட்டு போனார் வனஜா.

"என்ன சொல்ற நீ??" உள்ளுக்குள் அவர் பதறினாலும் நிதானமாக வார்த்தைகள் வெளிவர,

"இல்லை அந்த பொண்ணுக்கும் நம்ம முகிலனுக்கும் ஒத்து போகுமா?அந்த பிள்ளை படிச்ச பிள்ளை டீச்சர் வேலை பாக்குது ஆனா நம்ம முகிலன் அப்புடி இல்லையே??" என அவள் சுமதி சற்று முன் பேசியதை மனதில் வைத்து பேச,

"ஏன் முகிலன் படிக்கலையா என்ன??"

"படிச்சும் ஒரு ப்ரோஜ்ஜனம் இல்லையே. வந்த நல்ல நல்ல வேலை எல்லாம் விட்டுட்டு இப்புடி கடைய வச்சிட்டு உட்காந்துருக்காரே? இப்போ இருக்குற பொண்ணுங்க எல்லாம் படிச்ச உத்தியோகத்துல இருக்குற மாப்பிள்ளையை தான எதிர்பாக்குதுங்க.

அதுவும் முகிலன் என் புருஷன் மாதிரி கவர்மென்ட் வேலை பாக்கலனாலும் ஏதாவது தனியார் கம்பெனியிலையவாது சேர்ந்துருந்துக்கலாம்" என கூறியவளின் பேச்சில் விக்ரமின் வேலை நினைத்து கர்வமாக உரைக்க,

சுமதி பேசியதற்கு தான் மருமகள் பதிலடி கொடுக்கிறாள் என நொடியில் புரிந்து கொண்டவருக்கு வருத்தம் தான் எழுந்தது அவளின் புரியாத பேச்சில்.

இருந்தும் அவள் இளையமகனை பற்றி கூறியது அவருக்கு லேசான கோவத்தை தூண்ட,

"என் பிள்ளைங்களுக்கு இடையில நான் எப்பவும் பார்பட்சம் பார்த்தது இல்லை இப்போ நீ உன் புருஷன்னு சொன்னதல உன் புருஷன்ன பத்தி பேசுறேன்" என அந்த புருஷன் என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்தவர்,

"உன் புருஷன் கவர்மெண்ட் உத்தியோகம்னா அதுக்கு கொஞ்சமும் சளைச்சது இல்லை முகிலனோட வேலை.சொல்லப் போனா இங்க அவனே ராஜா அவனே மந்திரி உன் புருஷன் மாதிரி யாருக்கு கீழேயும் அவன் வேலை பாக்கல அவனுக்கு கீழ் தான் அம்பது பேரு வேலை பாக்குறாங்க.

வி.ஏ.ஓ னு உன் புருஷனோட வேலைய சொன்னாதான் மத்தவங்க மரியாதைய பாப்பாங்க ஆனா இரண்டுக்கு அப்புடியில்லை ஏன்னா இந்த தேனில கார்முகிலனோட பர்னிச்சர்ஸ்ஸை தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க.

உன் புருஷனோட ஒரு மாசம் சம்பளம் கர்ணனோட ஒரு நாள் வருமானம்" என்றிட,

அவர் கூறிய உண்மையில் சங்கவியின் முகம் சிறுத்து விட்டது. அதனை கண்டவர்,

"இதை எல்லாம் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும். இனியும் இந்த மாதிரி பைத்தியக்காரதனமா பேசுறதை நிறுத்திக்கோ" என நன்கு திருப்பி கொடுத்தவர் ஹரியை தூக்கி கொண்டு சென்று விட,

எதையோ பேச நினைத்து கடைசியில் சங்கவி அவமானப்பட்டது தான் மிச்சம்.

**********************

மரத்திலான கதவு ஒன்றை மேசை மீது வைத்து விட்டு அதன் மீது வரைவதற்கான கஸ்டமர் கொடுத்திருந்த டிசைன்ஸை ஒரு நொடி பார்த்தவன் அடுத்த நொடி அதன் மீது அதற்குண்டான பெரிய மிஷினை வைத்து அந்த டிசைனை வரைய ஆரம்பித்திருந்தான் முகிலன்.

ஆரம்பகால கட்டத்தில் இந்த மிஷின்கள் இல்லாத கைகளால் மட்டுமே வரைந்து கொண்டிருந்தவன் சிறுக சிறுக முன்னேறி அதன் பிறகே இந்த மிஷின்களை வாங்கியிருந்தான்.

பெரும் தொகையை இந்த மிஷினில் போட்டிருக்கிறான்.

இவர்களின் பர்னிச்சர்ஸ்ஸில் கஸ்டமர் கேட்கும் டிசைன்களும் தயார் செய்து கொடுக்கின்றனர் அதற்கு தனி விலை.

இருபுறமும் அழகிய மயில் தன் தோகையை விரித்து நின்று குளத்தில் நீர் அருந்துவது போல் இருந்த அந்த டிசைனை வடிவமைக்க கிட்டதட்ட மூன்று மணி நேரம் எடுத்தது முகிலனுக்கு.

ஒருவழியாக அதனை முடித்து விட்டு அவன் நிமிர மதிய உணவு நேரமே வந்துவிட்டிருந்தது.

உதவிக்கு இருந்த கடைப் பையன்களை அனுப்பி விட்டு ஷோ ரூமை மதிய உணவு இடைவெளி பொருட்டு ஒரு மணி நேரம் மூடியவன் பின் தன் வீட்டிற்கு புறப்பட்டு விட்டான்.

இவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வனஜா வந்ததும் உணவினை எடுத்து வைக்க அமைதியாக உண்டான்.

"முகிலா பொண்ணு வீட்டுல இருந்து போன்‌ பண்ணிருந்தாங்க" என்றதும் அவனின் அகத்தில் ஒரு நொடி மின்னலென வருணாக்ஷியின் முகம் மின்னி மறைந்தது.

"ம்ம்ம்" என்றவன் அவர் பேசுவதை கவனிப்பதாக காட்டி கொள்ள,

"நாளைக்கு நிச்சய புடவை எடுத்துடலாம். நாள் நல்ல இருக்குன்னு சொன்னாங்க அதோட பொண்ணுக்கும் நாளைக்கு ஏதோ கவர்மென்ட் லீவாம்"

"ஓஹோ அப்பா கிட்ட சொல்லிட்டீங்களம்மா??"

"சொல்லிட்டேன் உன் தோது கேட்டுக்க சொன்னாரு"

"ம்ம்ம் இங்க தானமா எடுக்க வர்றாங்க. வர்ற நேரம் சொல்லுங்க நான் கடையில இருந்து நேராக வந்துடுறேன்"

"இல்லை கர்ணா திண்டுக்கல் போகலாம் சொல்லிருக்காங்க"

"ஏனாம் ஏன் அங்க? இங்க நம்மூருல கடையே இல்லையா புடவை எடுக்க அவ்வளவு தூரம் போகணுமா??"

“வருவோட சிநேகிதி பிள்ளைய கட்டி கொடுத்துருக்குற புகுந்த வீட்டுக்காராங்க அங்க பெரிய ஜவுளி கடை வச்சிருகாங்களா நல்ல நல்ல டிசைன்ஸ் எல்லாம் அங்க இருக்காம்.

அந்த பிள்ளை எப்பவும் அங்க தான எடுக்குமாம் நல்ல கடை இந்த ப்ளவுஸீல ஆரி ஒர்க் எல்லாம் அங்கேயே பண்ணி தருவாங்களாம் வருணாவோட சிநேகிதின்றனால தரமானதாகவும் தருவாங்கன்னு பிள்ளை சொல்லுது அந்த பிள்ளை இவ்வளவு தூரம் சொல்லும் போது மறுக்க முடியுமா??

அந்த பிள்ளையோட விஷேஷம் தானா அது இஷ்டத்துக்கு தான் எடுக்கட்டுமே" என்க,

"சரி என்னவோ பண்ணுங்க" என்று விட்டு தனதறை‌ நோக்கி சென்றான் சிறு குட்டி தூக்கம் போடுவதற்கு.

கட்டிலில் வெறுமேன படுத்திருந்தவனின் அலைப்பேசி சத்தமிட்டு குறுஞ்செய்தி வந்ததை‌ காட்ட திறந்து பார்த்தான்.

"ஓய்!!!!" என இரு ஸ்மைலிகளை தாங்கி வருணாவிடம் இருந்து வந்திருந்தை கண்டவனின் இதழ்கள் ரகசிய புன்னகையை சிந்தின.

அவனிற்கான ப்ரத்யோக அழைப்பு இது அவளிடம்.

பெண் பார்த்து விட்ட அன்று இரவே புதிய எண்ணில் இருந்து "ஓய்" என்ற மெசேஜ் வர பார்த்தால் டி.பியில் அன்றைய தினம் இருந்த அலங்காரத்துடன் அழகாக அவள் சிரித்து கொண்டிருக்க கண்டு கொண்டவன்‌ பதிலுக்கு மெசேஜ் அனுப்ப என‌ அவர்கள் பேச்சு நீண்டது.

"நாளைக்கு வர்றீங்க தான??" என அடுத்தது அவளிடம் இருந்து வந்து குதிக்க

"வரணுமா??" என இவன்.

"பின்ன வர வேண்டாமா??" இப்போது அவள் உடன் இரண்டு கோப ஸ்மைலிகள்.

"ம்ம் பாக்கலாம்" என யோசிக்கும் பொம்மையை அனுப்ப

"ஏதே பாக்கலாமா??உங்களுக்காக உங்க கூட டைம் ஸ்பெண்ட் பணணனும்ன்றதுக்காவே திண்டுக்கலுக்கு போகணும்னு சொல்லிருக்கேன். நீங்க என்னடான்னா பாக்கலாம் சொல்லுறீங்க??" என அவள் உண்மையை கூற,

தனக்காக என்று அவள் கூறியதில் அவனது காதோரம் சூடேறியது.

"பார்றா ஃப்ளான் போடுற அளவுக்கு உனக்கு மூளை வேலை செய்யதா??" என கூறி சிரிக்கும் பொம்மையை அனுப்ப

"ஹலோ!!!" என்றவாறு முறைக்கும் பொம்மை அவளிடம் இருந்து பறந்து வந்தது.

"ஓகே ஓகே கூல் கூல்" அவள் முறைப்பிற்கு இவன் பதில் அனுப்ப,

"ப்ச் வருவீங்களா மாட்டீங்களா???"

"வரேன் வரேன் எனக்காக திட்டம் எல்லாம் பலமா போட்டுருக்க நான் வராமலா?? நான் இல்லாமா நிச்சய புடவை எடுத்துடுவியா நீ??" என்றவாறு புருவங்களை உயர்த்தி பார்க்கும் பொம்மையுடன் அவன் அனுப்ப

கன்னங்கள் சிவந்து வெட்கப்படும் ஸ்மைலி வந்தது அவளிடம் இருந்து.

"சரி சரி எனக்கு டைமாயிகிடுச்சு கடைக்கு போகணும் பாய்" என்றவாறு அவன் அனுப்பிட

அவளும் புரிந்து கொண்டு பதில் அனுப்பியிருந்தாள்.


அரைமணி நேரம் கண்களை மூடி அவன் உறங்க முயல அதற்கு விடாது வருவின் முகம் நினைவில் எழுந்து அவனை இம்சை செய்ய,

"ம்ஹீம் இது வேலைக்காகாது" என கூறியவன் எழுந்து கடைக்கு சென்றிருந்தான்.


படித்துவிட்டு உங்கள் நிறை குறைகளைக் இந்த திரியிலேயே என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே.




 
Top