எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 20

S.Theeba

Moderator
வரம் 20

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய வர்ஷனாவிற்கு இன்று வீட்டிற்குள் செல்லவே பிடிக்கவில்லை. இப்படியே எங்காவது கண்காணா தேசத்திற்கு ஓடிப் போய்விட்டால் நல்லது என்றே தோன்றியது. ஆனால், தான் உயிரையே வைத்திருக்கும் பாசமான அம்மா, அப்பா, தம்பியை விட்டுத் தன்னால் கண்காணாத தூரத்திற்குப் போய் விட முடியுமா? என்னதான் செய்வது என்று சிந்திக்கவே தலை வலித்தது.

வாசலில் யோசனையுடன் நின்றவளைக் கண்ட மாலதி "ஏண்டி வாசலிலேயே நிற்கிறாய்? சீக்கிரமாகப் போய் ரெடியாகிற வேலையைப் பார். மசமசன்னு நிக்காத" என்று கூறிக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள்.

உள்ளே சென்று தன் அறைக்குள் புகுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள். அங்கே கட்டிலில் அழகிய பட்டுசேலையும் அதற்குத் தோதாக சிறிய நகைகளும் மல்லிகைச் சரமும் வைக்கப்பட்டிருந்தன. அதனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்போது அறைக்குள் நுழைந்தாள் மஞ்சு.
"என்னடி இன்னும் சாரியே கட்டாமல் இருக்க. சீக்கிரம் ரெடியாகு... அங்கே மாலதியம்மா கத்திட்டு இருக்கா. நான் லேட்டா வந்திட்டேன் என்று எனக்கு வேறு திட்டு விழுந்திச்சு. டைம் ஆச்சுடி" என்றவாறு அவளைத் தயார்படுத்த ஆரம்பித்தாள்.

இன்று வர்ஷனாவைப் பெண் பார்க்க வருகின்றார்கள். மாலதி அவளிடம் கொடுத்த ஃபோட்டோவை இன்று வரை அவள் பார்க்கவே இல்லை. பார்க்கத் தோன்றவும் இல்லை. இரண்டு நாட்கள் கழித்து கலையரசன் அவளிடம் கேட்டபோது
"உங்கள் விருப்பம் அப்பா" என்றிருந்தாள். "இல்லைம்மா, உனக்குப் பிடித்தால் மட்டுமே இந்த சம்பந்தத்தைப் பேசுவேன்."
"அப்பா, எனக்கு எது நல்லதென்று உங்களையும் அம்மாவையும் விட வேறு யாருக்கப்பா தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் கல்யாணம் பண்ணுவேன்." அவள் அப்படி சொல்லவும் அவளைப் பெற்றவர்களுக்கு சந்தோசத்தில் மனம் நிறைந்தது.
"வர்ஷாம்மா அப்படியென்றால் அவங்களை, சம்பிரதாயப்படி பொண்ணு பார்க்க வரச் சொல்லவா?"
"ம்ம். சரிப்பா" என்றிருந்தாள்.

எனவேதான் இன்று நாள் நன்றாக இருக்கிறதென்று கூறி பெண் பார்க்க அவர்கள் வருகின்றார்கள்.

மஞ்சு அவளைத் தயார்படுத்தினாள். அவளைக் கேலி பண்ணியபடித் தலைவாரி விட்டவள், மல்லிகைச் சரத்தைக் கொத்தாக அவள் தலையில் வைத்துவிட்டாள்.
"ரொம்ப அழகாய் இருக்கடி. என் கண்ணே பட்டிடும் போல இருக்கு." என்று கூறி திருஷ்டி பொட்டு ஒன்றும் வைத்துவிட்டாள்.

அப்போது அறைக்குள் வந்த கலையரசன் "வர்ஷாம்மா, ரெடியாச்சா? என் செல்லம் இன்று ரொம்ப அழகாய் இருக்கா." என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டார்.
"அப்பா ரொம்ப பாசத்தைக் கொட்டாதிங்க. நீங்க இந்த ரூம் ஃபுல்லா கொட்டுற பாசத்தில நான் தடுக்கி விழுந்திடப் போறேன்." என்றாள் மஞ்சு. "வாயாடி, உன் அப்பன் வெங்கட்டிடம் பேசணும். உனக்கும் சீக்கிரம் கல்யாணம் கட்டிவைக்கச் சொல்லணும்"
"அதான்பா நானும் ரொம்ப நாளாக வெயிட் பண்ணுறேன். எங்கே இந்த வெங்கட் என் கல்யாணப் பேச்சையே எடுக்கமாட்டேன் என்கிறாரே"
"பொறு, பொறு நாளைக்கு முதல் வேலை வெங்கட்டிடம் நான் பேசுவதுதான்"
"ஐயோ அப்பா, நான் சும்மா சொன்னேன். எனக்கெல்லாம் இப்போதைக்கு கல்யாணம் பண்ணுற எண்ணமே இல்லை." என்றாள் மஞ்சு. சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றார் கலையரசன்.

அதுவரை நேரமும் தானும் கலையரசன் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தபோது வர்ஷனா அமைதியாக இருந்தது மஞ்சுவிற்கு உறுத்தியது. இது வர்ஷனாவின் குணமே அல்ல. தான் வந்த நேரம்தொட்டு வர்ஷனா அதிகம் பேசவில்லை என்பதும் அவளுக்கு உறைத்தது. எப்போதும் கலகலவென்று எல்லோரையும் கலாய்ப்பவள் இன்று ஏன் அமைதியாக இருக்கின்றாள். வெட்கமா என்றால் அவளது முகத்தில் வெட்கத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை. மாறாக எதையோ பறிகொடுத்து நிற்பவள் போன்றே தோன்றியது.

கட்டிலில் அமர்ந்திருந்த வர்ஷனாவின் அருகில் சென்று அமர்ந்தாள் மஞ்சு.
"வர்ஷூ, உனக்கு என்னடி பிரச்சினை?. பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கு உன் மூஞ்சி..."
"ஒன்றுமில்லை."
"இல்லை. ஏதோ இருக்கு. என்கிட்ட மறைக்கிற."
அவள் பதிலேதும் சொல்லவில்லை.
"ஏண்டி உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலையா? அம்மா, அப்பா உனக்கு பிடிக்காததைச் செய்ய மாட்டார்களே?"
"ம்கூம்... நான் சம்மதம் சொன்ன பிறகுதான் அப்பா அவர்களை வரச் சொல்லி இருக்கார்"
"அப்புறம் ஏண்டி உன் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு"
"இஞ்சி தின்ன குரங்கை நீ நேரில பார்த்திருக்கிறாயா?"
"ஹி ஹி... அதெல்லாம் ஃப்ளோவில வாற வேர்ட்ஸ். சோ, அதெல்லாம் விடு. இல்லை... நீ உண்மையைச் சொல்லு."
வர்ஷனா எதுவும் பேசாமல் இருக்கவும் அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள்,
"ஏன் வர்ஷூ, நீ யாரையாவது லவ் பண்ணுகின்றாயா?" என்று நேரடியாகக் கேட்டாள

அவள் இப்படிக் கேட்கவும் அதிர்ச்சியில் கண்கள் விரிய அவளைப் பார்த்தாள் வர்ஷனா. அவள் அதிர்ச்சியும் பார்வையுமே உண்மையை மஞ்சுவிற்குப் புட்டுவைத்தது.
"அப்படியென்றால் உண்மையாகவே நீ ஒருத்தரை லவ் பண்ணுகின்றாயா? யாரடி அவன்? எனக்குக் கூட இத்தனை நாளாய் சொல்லவேயில்ல. எவ்வளவு காலமாய் இந்த லவ் போகுது?"
"சீ.சீ... அப்படியெல்லாம் இல்லைடி"
"எப்படியில்ல. நீ லவ் பண்ணுறாய் தானே?"
"ம்ம்"
"அப்புறம் என்னடி. எனக்குத் தெரியாமல் இவ்வளவு காலம் மறைச்சிருக்காய்தானே?"
"இல்லடி. நான்தான் லவ் பண்ணுறேன். அவருக்கு இது தெரியாது."
"என்னடி குழப்புகிறாய்?" என்று மஞ்சு கேட்கவும் வர்ஷனா தன் மனதில் உள்ளதை அப்படியே அவளிடம் கூறினாள்.

அவள் கூறுவதைக் கேட்டதும் மஞ்சுவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவளது காதல் சரியானதா என்று கூடத் தெளிவு ஏற்படவில்லை.

அந்நேரத்தில் அறைக்குள் நுழைந்த மாலதி "ரெண்டு பேரும் வம்பளந்து கொண்டிருக்கிங்களா? வர்ஷூ நீ ரெடியாச்சா? மஞ்சு, என்கூட வா. உனக்கொரு சின்ன வேலையிருக்கு" என்று கையோடே மஞ்சுவை அழைத்துச் சென்றாள். வர்ஷனாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே மாலதியுடன் சென்றாள் மஞ்சு.

சரியாக ஆறு மணியளவில் பரபரவென உள்ளே வந்த வருணியன் "அக்கா, மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சு. அப்பா உன்னிடம் சொல்லச் சொன்னார்." என்றான்.

அக்கா மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சு என்று வருணியன் வந்து கூறவும் வர்ஷனாவுக்கு இந்த உலகமே வெறுத்தது போல ஆகிவிட்டது. தன் மனதில் துளிர்த்த காதல் உரியவனுக்கே தெரியாமல் அழிந்து போய்விடும் என்றே தோன்றியது.

உள்ளே நுழைந்த மஞ்சுவுடனும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஏனெனில், மாலதி அழைத்துச் சென்றபின் இப்போதுதான் மீண்டும் வர்ஷனாவிடம் அவள் வந்தாள். அவளுடன் கூடவே வர்ஷனாவின் அத்தை தங்காவின் மகள்களான இந்துமதியும் சுதாமதியும் உள்ளே வந்தனர். எனவே இருவரும் மேற்கொண்டு அவளின் காதல் குறித்துப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

வந்தவர்களைக் கலையரசனும் மாலதியும் வரவேற்றனர். தங்காவும் அவரது கணவரான செல்வாவும் அவர்களுடன் கூட நின்று வரவேற்றனர். பையன் வீட்டிலிருந்து ஒரு ஊரே கிளம்பி வந்தது போல நிறையபேர் வந்திருந்தனர்.

எல்லோரையும் வரவேற்று அமரவைத்து விட்டு அவர்களுக்கு சிற்றுண்டிகளைப் பரிமாறினார்கள். எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வந்திருந்ததால், ஆண்களைக் கதிரைகளிலும் பெண்களை விரிப்புகளிலும் அமர வைத்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஒரு அம்மா "ஏன் வனஜா குருவிக் கூடு மாதிரி வீடு இருக்கே. நம்ம சொந்த பந்தம் எல்லோரும் வந்தால் தெருவில்தான் குந்தனும் போல."
"ம்ம்"என்றபடி பையனின் தாய் வீட்டை நோட்டம் விட்டார். இன்னுமொரு பெண், "இருப்பதற்குக் கதிரைகள் கூட இல்லை. என்னதான் வாழுறாங்களோ" என்றார்.
"ஓகே. ஓகே பெண்ணை வரச் சொல்லுங்க பார்ப்போம்." என்றார் வந்தவர்களில் பெரியவர் ஒருவர்.

வர்ஷனாவை அழைத்து வந்தார்கள். எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தவள் தன் தாயின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளிடம் மாப்பிள்ளையைப் பார்க்குமாறு தங்கா கூறினாள். அங்கே அமர்ந்திருந்தவர்களை அவள் ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். அதில் யார் மாப்பிள்ளை என்று அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்தாலும் ஆர்வமாகப் பார்க்கும் மனநிலையிலும் அவள் இல்லை.

அப்போது பையனின் தாய் பேசினார். "எங்களுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கு. பையனுக்கும் சம்மதம். உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம்" என்றார்.

வர்ஷனாவை அறைக்குள் அழைத்துச் சென்ற மாலதி அவளிடம் கேட்டாள். அதற்கு அவள் உங்கள் விருப்பம் என்றாள். "இல்லை வர்ஷூ, உன் விருப்பம்தான் முக்கியம். வாழப் போறது நீதான். உன் விருப்பப்படிதான் நாங்க நடப்போம். நீ தயங்காம சொல்லும்மா."
"எனக்கு சம்மதம்மா" என்று அவள் சொல்லவும் சந்தோசத்துடன் வெளியே சென்றாள் மாலதி.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மஞ்சு அதிர்ச்சியில் வர்ஷனாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். மாலதி வெளியேறவும் வர்ஷனாவின் அருகில் வந்தவள், "ஏண்டி நீ யோசித்துத்தான் பேசுகின்றாயா? அம்மாவிடம் சம்மதம் சொல்லுகின்றாய்."
"நான் என்னடி செய்ய?"
"என்னடி இப்படிக் கேட்கிறாய்? உன் லவ்..."
"அதற்குத் தான் ஆயுள் இல்லையே. சொல்லப்படாத காதல் எப்படி வாழும்"
"எனக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லடி."

இவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்கும்போது வெளியில் வந்த மாலதி கலையரசனிடம் வர்ஷனாவின் சம்மதத்தைக் கூறினாள். அவரும் பையன் வீட்டினரிடம் சம்மதத்தைக் கூறினார்.
"அப்படியென்றால் மேற்கொண்டு பேசவேண்டியதுதானே." என்றார் ஒரு பெரியவர்.
"நாங்க பெரிசா ஒன்றும் ஆசைப்படல. எல்லாம் உங்க பொண்ணுக்காகத் தான்." என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் பையனின் தாய். தொடர்ந்து,
"நாங்க அதிகம் ஆசைப்படமாட்டோம். என் பெரிய பையன்கள் இருவருக்கும் நாங்க பெரிய இடங்களில் பொண்ணு எடுத்திருந்தோம். அவங்க நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே செய்திருந்தாங்க. உங்ககிட்ட அந்தளவுக்கு எதிர்பார்க்க மாட்டேன். உங்களாலேயும் அந்த அளவுக்கு செய்ய முடியாது." என்றவர் சிறிது தாமதப்படுத்திவிட்டு மீண்டும் பேசினார்.
"என் பையன் பெரிய வேலையில் இருக்கான். கைநிறைய சம்பாதிக்கிறான். அதனால் நீங்கள் அவனுக்கு இப்போ புதுசா வந்திருக்குற மாடல்ல கார் ஒன்று வாங்கிக் கொடுத்துடுங்க. அப்புறம் என் மூத்த மருமகள்கள் இரண்டு பேரும் இருநூறு பவுணில் நகை கொண்டு வந்தாங்க. உங்க பொண்ணுக்கு அவ்வளவு போடத் தேவையில்லை. நூறு பவுண் போட்டால் போதும். அப்புறம் வீடெல்லாம் தேவையில்லை." என்று அவர் சொல்லவும் கலையரசனுக்கும் மாலதிக்கும் அப்பாடா என்று இருந்தது. இந்த அளவோடு அவரது எதிர்பார்ப்பு முடிந்ததே என்று பெருமூச்சு விட்டனர்.

ஆனால், அவர் இன்னும் முடிக்கவில்லை. நிறைய பேசியதால் தன்னை ஆசுவாசப்படுத்தவும் தண்ணீர் குடிக்கவுமே அவர் இடைவேளை விட்டுள்ளார், மீண்டும் ஆரம்பித்தார்.
"எங்களுக்கே பெரிய வீடு இருப்பதால் வீடெல்லாம் தேவையில்லை. கல்யாண செலவு அது இது என்று நிறைய போயிடும். அதனால் ஒரு ஐம்பது லட்சம் ரொக்கம் தந்தாப் போதும். அதிகமெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன்." என்று முடிக்கவும், திகைத்துப்போய் என்ன சொல்வதென்றே புரியாமல் இருந்துவிட்டனர் கலையரசனும் மாலதியும்.

பக்கத்தில் நின்ற இந்துமதியிடம் உள்ளடக்கப்பட்ட கோபத்துடன்
"இதைவிட குறைவாக யாராலும் கேட்டுவிட முடியாது." என்றான் வருணியன்.
"அத்தான், சும்மாயிருங்க. அவங்களுக்குக் கேட்கப்போகுது." என்றாள் இந்துமதி.

கலையரசன் திணறுவது புரிந்ததும் தங்காவின் கணவர் செல்வாவே பேச்சை ஆரம்பித்தார்.
"நீங்க கேட்டதெல்லாம் சரி. நாங்க வீட்டில் எல்லோரும் கலந்து பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கின்றோம்." என்றார்.
"நல்ல முடிவா சொல்லுங்க. எங்ககிட்ட நிறைய பேர் சம்மந்தம் பேசி வாறாங்க. ஆனால் எங்களுக்கு உங்களோடு சம்மந்தம் வச்சுக்குறதில விருப்பம். சரி நாங்க புறப்படுறோம். சீக்கிரமா தகவல் தெரியப்படுத்துங்க" என்ற பையனின் தாயார் அனைவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

அவர்கள் வந்த நேரம் தொட்டு புறப்படும் வரை மாப்பிள்ளையாக வந்தவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சிரிப்புக்குக் கூட அவர் முகத்தில் பஞ்சம். கையில் வைத்திருந்த தொலைபேசியிலேயே மூழ்கியிருந்தார்.

எல்லோரும் புறப்பட்டுச் சென்றதும் செல்வா, கலையரசனின் பக்கத்தில் வந்து அமர்ந்தார். இருவரும் நண்பர்கள் என்பதால் இலகுவாகப் பேசுவார்கள்.
"என்ன செல்வா இப்படியெல்லாம் எதிர்பார்க்குறாங்க. நினைக்கவே கண்ணைக் கட்டுதே."
"யோசிக்காத அரசு. நம்மளால எவ்வளவு முடியுமோ நம்ம வர்ஷூக்கு நாம் செய்யலாம். ஆனால், இவங்க ரொம்பப் பெரிசா எதிர்பார்க்குறாங்க. என்கிட்டே காசாக எதுவும் இல்லை. நகையாக பத்துப் பவுண் தேறும் என்று நினைக்கிறேன். அதைத் தாரன். ஆனால் கார், ஐம்பது லட்சம், நூறு பவுண் எங்கடா போறது."
"இவங்க எதிர்பார்க்கிறதில பத்தில ஒரு பங்கு கூட நம்மளால செய்யமுடியாது. ஆரம்பத்திலேயே இவங்க இப்படி டிமாண்ட் பண்ணுவாங்க என்று தெரிந்திருந்தால் பொண்ணு பார்க்க வரவே சொல்லியிருக்க மாட்டேன். நம்மளால இந்த அளவுக்கு கனவுல கூட செய்ய முடியாது."
"அண்ணா யோசிக்காதிங்க. நம்ம வர்ஷூக்குட்டிக்கு ஏற்ற வரன் இது இல்லை. இப்படிப் பேராசை பிடித்தவர்கள் வீட்டுக்கு நம்ம வர்ஷூ போனால் சந்தோசமாக இருக்க மாட்டாள். நம்ம குட்டியின் குணத்துக்கு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுப் போவாள்." என்றாள் தங்கா.
"ஆமாடா, தங்கா சொல்லுறது சரிதான். தாயின் இவ்வளவு பேச்சுக்கும் அந்தப் பையன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவ்வளவு நேரமும் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். மாட்டுக்கு விலை பேசுற மாதிரி தன் மகனுக்கு விலை பேசுறார் அந்த அம்மா" என்றார் செல்வா.
கைதட்டிய வருணியன் "சரியா சொல்லுறிங்க மாமா. அந்த அம்மா தன் மகனுக்கு விலைதான் பேசினார்." என்றான்.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மாலதி எதுவும் பேசாது யோசனையுடன் அமர்ந்திருந்தாள். அதனைப் பார்த்த கலையரசன்
"மாலதி என்னம்மா யோசிக்கிறாய்?"
"எனக்கு நம்ம வர்ஷூவைப் பற்றித்தான் கவலை. அவ மனசுல ஆசையை ஏற்படுத்தி விட்டோமோ என்றுதான் பயமாய் இருக்கு"

தனது அறைக்குள் இருந்தபோதும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷனா தாயின் கவலையை அறிந்ததும் வெளியே வந்தாள்.
"மாலு... என்ன நீ இப்படிக் கவலைப்படுகின்றாய். எனக்கு எந்த ஆசையும் இல்லை. கவலையும் இல்லை."
"வர்ஷாம்மா, உனக்கு அந்தப் பையனைப் பிடித்திருந்ததா?" என்று தயக்கத்துடன் கேட்டார் கலையரசன்.
"ஐயோ அப்பா! என்ன நீங்கள். நான் ஒரு உண்மையைச் சொல்லவா? நான் அந்தப் போட்டோவையே பார்க்கவில்லை. இப்போதுகூட யார் மாப்பிள்ளை என்று தெரியாமல் சும்மா எல்லோரையும் பார்த்து வைச்சேன். உங்களுக்குப் பிடிச்சதாலதான் நான் சம்மதம் சொன்னேன். எனக்கு எது நல்லதென்று உங்களுக்குத் தெரியும் தானே. உங்களுக்கு எந்தப் ஃபீலும் தேவையில்லை. நிம்மதியாக இருங்க."
"என் அக்கா அக்காதான். இப்படியொரு மாப்பிள்ளை உனக்குத் தேவையேயில்லை. உனக்காக ஒரு பிரின்ஸ் வருவான்." என்று அவளை அணைத்துக் கொண்டு கூறினான் வருணியன்.
"பெரிய மனுஷன் ஆயிட்டான் என் தம்பி." என்று கூறி சந்தோசத்தில் மலர்ந்து சிரித்தாள் வர்ஷனா. அவளது சிரிப்பு அங்கிருந்தவர்களின் மனதில் இருந்த கவலையைப் போக்கடித்து நிம்மதியைத் தந்தது.

அவளது இந்த சந்தோஷத்துக்குக் காரணம் வேறு என்பது அவளுக்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுவிற்கும் மட்டுமே வெளிச்சம்.
 
Top