எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 12

Fa.Shafana

Moderator
பள்ளி விட்டு வந்த பார்க்கவி குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து அறையில் இருந்த கண்ணாடி மேசை அருகே நின்று தன் கூந்தலைப் பின்னலிட்டுவிட்டு, ஒட்டுப் பொட்டொன்றை எடுத்தவள் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக கண்ணாடியை நெருங்கியபடி தன் முகத்தைக் கொண்டு சென்றவள் சீராக நெற்றியில் வைத்து ஒட்டினாள்.

அந்த அறையில் கட்டிலில் சாய்ந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளது தந்தை முரளி,

“ஏனம்மா பார்க்கவி.. சும்மா கேட்கறேன், இந்தக் கண்ணாடி முன் நிற்கும் போது உன் முகம் தவிர்த்து இந்தக் கண்ணாடிய நீ எப்பவாச்சும் கவனிச்சுப் பார்த்ததுண்டாம்மா?” என்றார்.

அவரைத் திரும்பிப் பார்த்து,

“புரியல்லை ப்பா. கண்ணாடியக் கவனிச்சு..” என்று கூறிக் கொண்டே மீண்டும் திரும்பி கண்ணாடியைப் பார்த்தவள், இடவலமாகத் தன் தலையை அசைத்து,

“இல்லைலப்பா.. யாருமே அப்படிக் கவனிச்சிருக்க மாட்டாங்கல்ல? தலை வாரி, பவுடர் போட்டு, பொட்டு வெச்சுட்டு போய்ட்டே இருப்பாங்கல்ல!” என்றாள்.

“ம்ம்ம்.. அப்படிக் கவனிச்சா தானே அதுல தூசு இருக்கா, இல்லையான்னே தெரியும்? உத்துப் பார்த்து படிஞ்சிருக்குற தூசிய கவனிக்கிறதும், துடைச்சு விடுறதும் கொஞ்சம் பேர் தான்” என்றார் புன்னகையுடன்.

மீண்டும் கண்ணாடியை நெருங்கி உற்றுபார்த்து விரலால் வருடி எடுத்து விரலைப் பார்த்தவள்,

“தூசு இல்லை அம்மா துடைச்சு இருப்பாங்க” என்று புன்னகைத்து,

“ஆமா.. நீங்க பேசுறது வேற என்னவோ சொல்ல வர்ற மாதிரியே இருக்கே ப்பா..”
என்றாள்.

நிமிர்ந்து அமர்ந்து தலையணை ஒன்றை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்ட முரளி,

“சமத்து, டக்குன்னு புரிஞ்சுக்கிட்ட” என்றார்.

“சொல்லுங்க சொல்லுங்க” என்று கதை கேட்க ஆர்வமாகிவள் அவரருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

“இந்தக் கண்ணாடியும் மனிதர்கள் போல தான்ம்மா.. இதை நம்ம தேவைக்காக மட்டுமே நாம பாவிக்கிறோம். ஆனா அதுல இருக்குற தூசிய தட்டி துடைச்சு விட நினைக்கமாட்டோம் இல்லையா?

முகம் பார்க்குறத விடுத்து அதை கவனிச்சுப் பார்க்குற போல நம்மள சார்ந்தவர்களையும் அக்கறை எடுத்து நாம கவனிச்சுப் பார்த்தா தான் அவங்க தேவையும், கஷ்டங்களும் நமக்குப் புரியும். ஆனா மனிதர்களையும் தங்களோட தேவைக்கு மட்டுமே யூஸ் பண்ணிட்டு புறக்கணிக்கிறவங்களும் இருக்காங்க தான்” என்றார்.

எதுவும் கூறாமல் அவரையே பார்க்கவி பார்த்துக் கொண்டிருக்க; தொடர்ந்து,

“நமக்கானவங்க.. அது ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, ரிலேடிவ்ஸ், பக்கத்து வீட்டுல இருக்கிறவங்கன்னு யாராகவும் இருக்கலாம் ஒரு தேவைன்னு வரும் போது மட்டும் அவங்களை தேடுறதும், பேசுறதும் கூடாது.

அவங்களுக்காகவும் நாம இருப்போம்னு அவங்களை உணர வைக்கணும்.

அன்பா ஆறுதலா நாலு வார்த்தை பேசவோ, கஷ்டங்களையும் கவலைகளையும் பகிர்ந்துக்கவோ, ஏன் சிரிச்சுப் பேசி அவங்க தனிமைய போக்கவோ யாருமே இல்லாம நிறைய பேர் இருக்காங்க.

யாராவது நாம பேசுறத கேட்க மாட்டாங்களா, நம்ம மனசுல இருக்குற பாரம் கொஞ்சம் குறையாதான்னு ஏங்குறவங்க இருக்காங்க.

அவங்க நமக்கே தெரியாம நம்ம கூட, நம்மள சுத்தித் தான் இருப்பாங்க ஆனா நாம தான் அவங்கள கண்டுக்குறதில்லை.

நாம கொஞ்சம் அவங்களை உன்னிப்பா கவனிச்சுப் பார்த்தா புரியும். ஆனா நாம அதை செய்யாம அவங்க கிட்ட நமக்கான உரிமைய இல்லைன்னா உதவிய மட்டுமே எடுத்துட்டு அவங்களை விட்டுடுறோம்.

அவங்களும் அடுத்து நாம அவங்களை தேடிப் போகும் வரை காத்துட்டு இருப்பாங்க” என்று கூற

“உண்மை தான்ப்பா.. என் கிட்ட நோட்ஸ் வாங்கி எழுதுற ஃப்ரெண்ட்ஸ் நான் கேட்குறப்ப கொடுக்க மாட்டாங்க இல்லைன்னா லேட்டா அனுப்பி இரவெல்லாம் உட்கார்ந்து எழுதுற மாதிரி பண்ணுவாங்க வருத்தமா இருக்கும் அது” என்றாள்.


“அது போல நிறைய இருக்குடாம்மா. நமக்கு வருத்தம் தரக்கூடியத நாம எப்பவும் அடுத்தவங்களுக்கு செய்யக்கூடாது. மத்தவங்க கிட்ட ஹெல்ப் எடுத்துட்டு அவங்கள புறக்கணிக்கக் கூடாது” என்ற முரளியைப் பார்த்து,

“ஆனா பாதரசம் கெட்டுப் போன கண்ணாடி கூட இருக்கேப்பா, என்ன தான் அதுல இருக்குற தூசிய துடைச்சு விட்டாலும் முகம் பார்க்க முடியாது இல்லையா? அது போல மனிதர்களும் இருக்காங்க தானே?” என்று யோசனையாக பார்க்கவி கேட்க,

“பாசிடிவ்வானவங்க பற்றி ஒன்னு சொல்லும் போது இப்படி நெகட்டிவ்வானவங்க யோசிக்குற பாரு உன்னை எல்லாம்..” என்று அவளது தலையைப்
பிடித்து ஆட்டிவிட்டு சிரித்தவர்,

“என்ன தான் பாதரசம் கெட்டுப் போனாலும் அந்தக் கண்ணாடில ஒரு இடத்துலயாவது நம்ம முகத்த பார்க்கக் கூடிய மாதிரி இருக்கும்.

அது போல அப்படியான மனிதர்கள் கிட்ட கூட ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கத் தான் செய்யும்” என்றவர் தொடர்ந்து,

“ஏதாவது காரணங்களால இல்லை சூழ்நிலைகளால அப்படி ஆனவங்க தான் இங்க நிறைய பேர். என்னதான் அவங்க எதிர்மறை குணம் கொண்டவங்களா இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயம் அவங்க கிட்ட நல்லது இருக்கும். அவங்களோட எதிர்மறை இயல்புனால அது வெளிவராம, வெளி வந்தாலும் பெரிசா தெரியாம போய்டும்.

இல்லையா அவங்களே அந்த நல்ல விஷயம் வெளிய வந்த அடுத்த நிமிஷம் ஏதாவது செய்து இல்லைன்னா பேசி மத்தவங்க பார்வைல விழாம கவனத்த கவராம செய்துவிட்டிருப்பாங்க.

அப்படியானவங்க ரொம்ப பாவம். அவங்களுக்கு ஒரு தேவை வரும் போது உதவி செய்ய யாரும் வர மாட்டாங்க, உதவி கேட்கவும் அவங்களுக்குத் தயக்கம் இருக்கும். அப்படியே அவங்க கேட்டு யாரும் உதவி செய்தாலுமே மனமுவந்து செய்ய மாட்டாங்க.

ஏதோ மனசாட்சிக்கு விரோதமில்லாம நடக்குறவங்க, இறைவனுக்காகன்னு நினைச்சு எதையும் செய்றவங்க யாராவது தான் அப்படியானவங்களுக்கு மனசார உதவி செய்வாங்க" என்றார்.

“ம்ம்ம்.. புரியுதுப்பா. அவங்க இயல்பே அவங்களை விட்டு மத்தவங்களை தூர நிறுத்திடும் இல்லையா? தனிமை தான் அவங்களுக்கு நிரந்தரமா இருக்கும் போல” என்றாள்.

“இதை எல்லாம் விட மோசமான கண்ணாடி ஒன்று இருக்கு தெரியுமா உனக்கு?” என்று கேட்டவர்,

“பாதரசம் பிழையாகப் பூசப்பட்ட கண்ணாடி” என்றார்.

“அதென்னதுப்பா. அது எப்படி இருக்கும்?”

“பார்க்க சாதாரண கண்ணாடி போல தான் இருக்கும். ஆனா பக்கத்துல போய் பார்த்தா நம்ம முகமா இதுன்னு நாமளே சந்தேகப்படுமளவு சில பிம்பங்கள் சிரிப்பா இருக்கும் சிலது ரொம்ப விகாரமா, பயப்படுற மாதிரி இருக்கும்.

இது போல மனிதர்களும் இருக்காங்க. நாம என்ன தான் நல்லது செய்தாலும்
அவங்க நமக்கு கெடுதி மட்டுமே தான் செய்வாங்க.

அதையும் தூர இருந்து பார்க்குறவங்களுக்கு தெரியாதளவுக்கு இருக்கும். அந்த கண்ணாடி போல அவங்க கிட்ட நெருங்கினா மட்டுமே தெரியுமே தவிர நாம சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. கெடுதியையும் அந்தளவுக்கு சூட்சுமமா செய்வாங்க” என்றவரைப் பார்த்து,

“ரொம்ப பயங்கரமானவாங்க போலயே” என்றாள் பார்க்கவி.

“இல்லம்மா.. அதை விட பயங்கரமான ஒன்று இருக்கு” என்ற முரளியைக் கேள்வியாகப் பார்க்க,

“அலங்கார கண்ணாடி” என்றார்.

“அழகு ஆபத்து கேட்டகரி” என்றாள் அவள்.

“ம்ம்ம்.. அப்படியும் சொல்லலாம். அவங்க செயல்கள் எல்லாம் அழகா இருக்குற மாதிரியே தான் இருக்கும். ஆனா கொஞ்சம் பிசகிட்டா ரொம்ப ஆபத்து.

பசுத் தோல் போத்தின புலி. தேவதை முகம் கொண்ட பிசாசுன்னு சொல்லப்படக் கூடியவங்க.

பார்க்கவும் பழகவும் ஏன் பேசவும் கூட ரொம்ப இனிமையானவங்களா, இதமானவங்களா தான் இருப்பாங்க. அவங்களைப் போல நல்லவங்களே இல்லை, ரொம்ப சாஃப்ட் கேரக்டர்னு நம்ப வைப்பாங்க. அவங்களோட உண்மை முகமும் இயல்பும் யாருக்குமே தெரியாது.

அவங்க யாரையும் காயப்படுத்தி அதை காயம்பட்டவங்க சொன்னா கூட மத்தவங்க யாரும் நம்ப மாட்டாங்க. அவங்களால காயம் படும் வரை அவங்க இயல்பு தெரியவே தெரியாது, யாரும் சொன்னா கூட நம்ப முடியாது. அந்தளவுக்கு நேர்த்தியா முகமூடிய போட்டு இருப்பாங்க. யாருக்கும் சந்தேகமே வராத மாதிரி காய் நகர்த்துவாங்க. அத்தனை தந்திரமும் இருக்கும் அவங்க கிட்ட. அவங்களே அவங்களை நல்லவங்களா அலங்காரம் பண்றது போக அவங்களோட உண்மையான முகமும் இயல்பும் தெரியாத மத்தவங்களும் அலங்காரம் பண்ணி விட்டுடுவாங்க, அதை சாதகமா பயன்படுத்தி ரொம்ப நல்லா நாடகமாடுவாங்க”
என்று பெருமூச்சொன்றை முரளி வெளியிட்டார்.

“உங்களுக்கு வயசும், காலமும் நிறைய அனுபவங்களை கொடுத்திருக்குல்ல அப்பா. அதோட தாத்தாவோட கண்ணாடிக் கடைல வேலை பார்த்து இப்ப வரை அதே தொழில் செய்ற நீங்க உங்களை சுற்றி இருக்கறவங்கள கண்ணாடிய வெச்சே பிரிச்சு பார்த்திருக்கீங்க போல” என்றாள்.

“ம்ம்ம்.. இந்த எல்லா வகை கண்ணாடியையும் அது போல மனிதர்களையும் பார்த்துப் பழகி கடந்து வந்தவன்டா உன் அப்பா. அதே போல என் கூடவே நான் சொல்லாத இன்னும் ஒரு கண்ணாடி இருக்கு. உடைந்த கண்ணாடி!” என்றார்.

“கூடவே இருக்கா?”

“ம்ம்ம்.. எனக்காக எல்லாம் செய்த எங்க அப்பா, அம்மா, நண்பர்கள்; என் கிட்ட உதவி வாங்கிட்டு எனக்கு ஒரு தேவைன்னு வந்த நேரம் திரும்பியும் பார்க்காத சொந்தங்களும், நண்பர்களும்; எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசி ஒரு கெட்ட உதாரணமா இருந்த ஒருவர்; நயமா பேசி கூட இருந்தே குழி பறிக்குற சக வியாபாரிகள்; நமக்கு நல்லது செய்ற மாதிரியே இருந்து அத்தனை கெட்டதும் செய்றவங்கன்னு அத்தனை பேரையும் பார்த்துட்டேன்.

அதே போல இந்த உடைந்த கண்ணாடி உங்கம்மா..” என்று கூற, ஆச்சரியமாக அவரைப் பார்த்து வைத்தாள்.

“உண்மை தான்ம்மா.. அந்த நாட்கள்ல உங்கம்மாவ நிறைய பேசி இருக்கேன். அவ உடைஞ்சு போறளவுக்கு நடந்திருக்கேன். வெளியில, வேலைல இருக்குற கஷ்ட நஷ்டம் எல்லாத்தையும் அவ கிட்ட தான் கொட்டுவேன். நிறைய கோவப்படுவேன். ஆனா நான் என்ன கோவப்பட்டாலும் என்னை தாங்கி நிற்குற தூணா அவ இப்போ வரை என் கூட இருக்கா. எனக்குள்ள ஒரு பக்குவம் வரும் வரை அவளை கஷ்டப்படுத்தி இருக்கேன். அவளும் அதை எல்லாம் தாங்கிட்டு இருந்தா. உரிமையா கோவப்பட்ட நான் அவளுக்கான உரிமைய கொடுத்ததே இல்லை. அவ அதை பெருசா எடுத்ததும் இல்லை.

நீ என்ன தான் என்ன சில்லு சில்லா உடைச்சாலும் உனக்குத் தேவைப்படும் போது உன் பிம்பத்த அழகா காட்டுவேன்னு சொல்ற கண்ணாடி போல தான் அவ.

அதுக்காக இப்ப வரை உங்கம்மா கிட்ட நான் மன்னிப்பெல்லாம் கேட்டதில்லை அது அவளுக்கும் சங்கடம்னு அப்படியே விட்டுட்டேன். ஆனா அவள கஷ்டப்படுத்தாம இருக்குறதே அவளுக்கு ஆறுதலா தான் இருக்கும்” என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு மலைத்துப் போய் நின்றது
அத்தனை நேரமும் இவர்களின் கவனம் கவராத அறை வாசலில் நின்ற முரளியின் மனைவி தான். வந்த தடமே இல்லாமல் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவரின் கண்களில் கண்ணீர்த்துளிகளும் இதழ்களில் புன்னகையும்.

“இத்தனை வகை மனிதர்கள கடந்த நீங்க அம்மாவ ஏன் அப்படி..” என்று தொடர்ந்து என்னவென்று கேட்கவெனத் தெரியாது பார்க்கவி நிறுத்த,

“தன் பிம்பம் தனக்குத் தெரியாத ஒரு கண்ணாடியா தான் நான் இருந்தேன். இன்னும் ஒரு கண்ணாடிய முன்னால வெச்சா அந்த இரண்டு கண்ணாடிகளோட பிம்பங்களும் தொடரா தெரியும். அது போல என்னைப் போல ஒரு குணம் கொண்ட என் நண்பன் அவன் மனைவிய இதே போல காயப்படுத்தினத பார்த்து, அன்னைக்கு அந்த பொண்ணு அழுது புலம்பினத பார்த்து தான் எனக்கும் நான் செய்துட்டு இருந்த தவறு புரிஞ்சது. என்னை நானே திருத்திக்கிட்டேன். ஒருவேளை உங்கம்மா எனக்குத் தெரியுற மாதிரி அழுது புலம்பி இருந்தா அப்பவே நான் திருந்தி இப்பேனோ என்னவோ” என்றார்.

“நாமாக தவற உணர்றதுக்கும் திருந்துறதுக்கும் கூட ஒரு மன வலிமையும் பக்குவமும் வேணும்லப்பா. அது உங்க கிட்ட இருந்து இருக்கு”

“ஆமாண்டா.. நீயும் இப்படி இருக்கணும். இந்த கண்ணாடி போல அத்தனை வகை மனிதர்களும் உன்னை சுற்றியும் இருக்காங்க. அவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு புரிஞ்சுக்கணும்.

நமக்கு நல்லது செய்றவங்களுக்கு நல்லது செய்யணும் கெட்டவங்க கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கணும். யாராவது ஒருத்தர பற்றி சொல்றாங்கன்னா, அது உனக்கு ரொம்ப நெருங்கினவங்களா கூட இருந்தாலும் கொஞ்சம் கவனமா அவங்கள கவனிக்கணும்” என்றார்.

“ம்ம்ம்.. புரியுதுப்பா” என்றவள் புன்னகையுடன் எழுந்து செல்ல மீண்டும் கட்டிலில் சாய்ந்து கொண்டார் முரளி.

கண்ணாடிகளும் அது பிரதிபலிக்கும் பிம்பங்களும் பலவிதம்; மனிதர்களும் அவர்கள் கொண்ட குணங்களும் பலவிதம்!

பார்வைக்கு கண்ணாடியும் வைரமும் ஒரே மாதிரியானது அதே போல தான் மனிதர்களும் நம் பிரித்தறியாதவரை!

===================

சின்ன ஒரு பதிவாக எழுத நினைத்து சிறுகதையாக எழுதி முடித்திருக்கிறேன்.
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!


 
Top