எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 27

S.Theeba

Moderator
வரம் 27

வர்ஷனா அறைக்குள் நுழையவும் அவள் பின்னாலேயே மஞ்சுவும் வந்தாள். இங்க என்ன நடக்கிறது என்று அவளிடம் கேட்க முனையும்போது "வர்ஷூ, வேகமாக ரெடியாகு. சும்மாவே லேட் ஆயிட்டு. மஞ்சு... நீ வருணுக்கு ஒருவாட்டி ஹோல் பண்ணு. பூவும் பழமும் வாங்கிவர அனுப்பியிருந்தன். இன்னும் அவன் வரல" என்றபடி வர்ஷனா ஆயத்தமாவதற்கு வேண்டிய ஆடை, அணிகலன்களை எடுத்துக் கட்டிலில் வைத்தாள் மாலதி. மஞ்சு வருணியனுக்கு அழைப்பெடுக்க வெளியே சென்றாள். தங்காவின் மகளான இந்துமதியும் மாலதி கூடவே வந்திருந்தாள்.
"இந்து, மஞ்சுவோட சேர்ந்து வர்ஷூவ ரெடி பண்ணு" என்றுவிட்டு வெளியேற முயன்றாள் மாலதி.
"மாலு..." என்று கத்திக் கூப்பிட்டாள் வர்ஷனா."என்னடி? எதுக்கு இப்போ கத்துற?"
"எதுக்கு இப்போ நான் ரெடியாகணும்?"
"உங்க அப்பா உனக்கொரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். அவங்க வீட்டிலிருந்து உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அதுக்குத்தான் உன்னை ரெடியாகச் சொல்லுறன்"
"என்ன...?" என்று அவள் அதிர்ச்சியாகி நிற்கவும் வேறு எதுவும் சொல்லாமல் மாலதி அறையை விட்டு வெளியேறினாள்.
என்ன செய்வதென்று தெரியாத தவிப்பில் மனம் கனக்க தன் கட்டிலில் உட்கார்ந்தாள் வர்ஷனா. 'இன்றுதான் சிவா சார் சொன்னார். யது வீட்டிலிருந்து வருவார்கள் என்று. ஆனால், அதற்கிடையில் அப்பா மாப்பிள்ளை பார்த்தது மட்டுமல்லாமல் இன்று அவர்களை வீட்டிற்கு வேறு வரச் சொல்லியிருக்கிறாரே. கருமாரியம்மனே இப்போதுதானே உன்கிட்ட வேண்டுதல் வச்சன். என்னை ஏமாத்திட்டாயே' என்று மனதோடு பேசினாள்.


"வர்ஷாக்கா, இன்னும் சாறிகூட உடுத்தல. எழும்புங்க டைம் ஆகுது." என்று அவளை உசுப்பினாள் இந்துமதி. "ம்ம்" என்றவள் அசையாது கட்டிலிலேயே அமர்ந்திருந்தாள். அறைக்குள் வந்த மஞ்சு "என்ன செல்லக்குட்டி, அப்படியே உட்கார்ந்திருக்காய். ரெடியாகல?" என்று கேட்டாள். அவளைக் கோபமாக உறுத்துப் பார்த்தாள். 'எல்லாம் தெரிந்துகொண்டும் எப்படி உன்னால் சந்தோசமாக இருக்க முடியுது? என் கஸ்ரம் உனக்குப் புரியலையா?' என்று கண்களால் மஞ்சுவிடம் பேசினாள். "இந்து நீ போய் மாலதியம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு. நான் இவளை ரெடி பண்ணுறன்." என்று இந்துமதியை வெளியே அனுப்பிவிட்டு வர்ஷனாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.


மஞ்சுவை முறைத்துக் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷனா. "இப்போ எதுக்கு செல்லம் என்னை முறைக்கிற"
"ஏண்டி ரொம்ப சந்தோசமாய் இருக்கா? எனக்கு அப்பா மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் என்றது உனக்கு சந்தோசமா?"
"என்ன செல்லம் இப்படிக் கேட்கிறாய்? உனக்குக் கல்யாணம் என்றால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தானே. அதிலும் அப்பா சொன்னார், இந்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவராம். நீ சந்தோசமாய் இருப்பியாம் என்று..."
கோபமாய் அவள் கழுத்தை நெரிப்பதுபோலக் கையைக் கொண்டு போனவள் "கொல்லுவன்டி உன்னை. என் மனதைப் பற்றி முழுதாய் தெரிந்த நீயே இப்படிப் பேசுறியேடி. என் யது இல்லாமல் வேறு ஒருத்தன் கையால் எப்படியடி தாலியை வாங்கிப்பேன். அப்பா என் மேல் நம்பிக்கை வைத்து இந்தக் கல்யாணத்தைப் பேசுறார். அவரிடம் போய் எப்படிச் சொல்லுவேன்" என்று கண்கள் கலங்கப் பேசினாள்.
"வர்ஷூக்குட்டி, நீ எதைப்பற்றியும் யோசிக்காமல் ரெடியாகு. அவங்க வந்திட்டுப் போகட்டும். அப்புறம் இதைப்பற்றி அப்பாவிடம் பேசுவோம். உனக்காக நான் இருப்பேன் எப்போதும். ஓகேயா. இப்போ எழும்பு. ரெடியாகு" என்று அவள் கையைப் பற்றி எழுப்பியவள், அவளைத் தயார்படுத்தினாள்.அழகிய பட்டுச்சேலையும் கழுத்தில் ஆரமும் காதில் சிறிய குடைச்சிமிக்கியும் கைகளில் சேலையின் நிறத்திற்கேற்ப கண்ணாடி வளையல்களும் தலைநிறைய மல்லிகைப்பூவும் சூடி மிகவும் அழகாகத் தயாராகியிருந்தாள். ஆனால், அவள் முகத்தில் சந்தோஷம் மட்டும் தொலைந்திருந்தது.


சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்துவிட்டார்கள். வரவேற்பறையிலிருந்து கலகலவெனப் பேச்சுக் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. மஞ்சு யன்னல் ஊடாக எட்டிப் பார்த்துவிட்டு வந்தாள். "வர்ஷூ... மாப்பிள்ளை ரொம்ப ஹான்ட்ஸமாய் இருக்..கா...ரு...." பேச ஆரம்பித்தவள் தோழியின் சுட்டெரிக்கும் பார்வையைக் கண்டு அடங்கினாள்.


தங்கா வந்து வர்ஷனாவை அழைத்தார். அவள் முகத்தில் சோகத்தைப் பார்த்தவர், அவளை அணைத்து உச்சி முகர்ந்தார்.
"என்ன வர்ஷூக்குட்டி டல்லா இருக்க. எப்பவும் நீ சந்தோசமாய் இருக்கணும். நாங்க ஒருநாளும் உனக்குப் பிடிக்காததைச் செய்யமாட்டோம். சரியாடா?" என்று கேட்டார். அவருக்காக வலுக்கட்டாயமாகத் தன் முகத்தில் சிறிது புன்னகையைப் பூசியபடி வெளியில் வந்தாள். எல்லோருக்கும் வணக்கம் வைக்கச் சொன்னவர் அவளை ஓரிடத்தில் அமர வைத்தார். குனிந்த தலை நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அப்போது "வர்ஷனா மேடம் நிமிர்ந்து பார்க்க மாட்டிங்களோ?" என்று மிகப் பரிச்சயமான குரல் கேட்கவும் திடுக்கிட்டு குரல் வந்த திசையை நோக்கினாள். அங்கே அமர்ந்திருந்தவன் சிவானந்த்.


அவனைக் கண்டதும் இவளுக்கு எதுவுமே புரியவில்லை. அங்கே இருந்தவர்களை ஒருதடவை நோட்டம் விட்டாள். ஆனால், அவளது தேடலுக்கு உரியவன் அங்கே இல்லை. அப்படியானால் சிவா சார் எதுக்கு வந்தார் என்று குழப்பத்துடன் அவன் முகத்தையே கேள்வியாய் நோக்கினாள். அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவன் கண்களால் அவளது வீட்டின் வாயிலைக் காட்டினான். அங்கே திரும்பிப் பார்த்தவளின் பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றது.


ஆம், அங்கே நின்றது யதுநந்தன்தான். அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். ஆனால், அவனது பார்வையோ வர்ஷனாவையே தீண்டிக் கொண்டிருந்தது. இவள் திரும்பி அவனைப் பார்க்கவும்தான் பேசிக்கொண்டிருந்த அழைப்பை நிறுத்தி விட்டு வந்து அமர்ந்தான். அப்போதும் அவளையே பார்த்திருந்தான். அதன் பிறகு தான் சுற்றி அமர்ந்திருந்தவர்களைக் கவனித்தாள். அங்கே ஈஸ்வர், சந்திரமதி, பானுமதி, சிவானந்த், இவர்களுடன் ஈஸ்வருக்கு தங்கை முறையான இரு பெண்களும் அமர்ந்திருந்தனர். இலக்கியா சுதாமதியின் மடியில் உட்கார்ந்து அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். முதலில் யதுவைத் தேடும் ஆவலில் அங்கிருந்தவர்கள் யாரென்பதையே அவள் கவனிக்கவில்லை. அங்கிருந்தவர்களையும் தன் யதுவையும் பார்த்ததில் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள். மஞ்சுவைப் பார்த்தாள். சந்தோஷமா என்று தலையசைப்பில் கேட்டாள் மஞ்சு. 'சஸ்பென்ஸ் வைக்குறியா? இருடி எல்லோரும் போகட்டும். இருக்கு உனக்கு சங்காபிஷேகம்' என்று மனதிற்குள் செல்லமாகத் திட்டினாள்.


யதுநந்தனுடன் தனியாகப் பேசுமாறு அவளது அறைக்கு அனுப்பி வைத்தனர். உள்ளே போனதும் என்ன பேசுவதென அவளுக்குப் புரியவில்லை. அங்கே போட்டிருந்த நாற்காலியில் அவனை உட்காருமாறு சொன்னவள், அதன்பிறகு அமைதியாக இருந்தாள்.
"நீயும் கட்டிலில் உட்காரலாமே" என்று அவன் கூறவும் கட்டிலில் அமர்ந்தாள்.
"நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கு எல்லாம் உனக்குத் தெரியும். எதுவானாலும் உன் விருப்பம்தான். சிவா உனக்கும் விருப்பம் என்று சொன்னதால் தான் உங்க வீட்டுக்கு வந்தோம்." என்றவன் சற்றுத் தயங்கிவிட்டு "உனக்கு என்னைக் கட்டிக்க சம்மதமா?"என்றான்.
அவளுக்கு வார்த்தை எதுவும் வரவில்லை. "ம்ம்" என்று மட்டும் பதிலளித்தாள். "கல்யாணம் தடபுடலாக செய்ய வேண்டாம். எளிமையாக கோயிலில் செய்ய உனக்கு சம்மதமா?"
"ம்ம்" என்று மீண்டும் தலையாட்டினாள். அவளையே பார்த்திருந்தவன் "வேறு ஏதாவது கேட்கணுமா?" என்றான். "இல்லை" என்று அவள் சொல்லவும், அவளை ஆழ்ந்து பார்த்தவன், "இற்ஸ் ஓகே.. அப்போ கல்யாணத்தில் சந்திப்போம்." என்றவன் எழுந்து வெளியே சென்றான். இருவீட்டினரின் சம்மதத்தோடு அங்கேயே நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த வாரத்திலேயே திருமணத் திகதியும் குறிக்கப்பட்டது.


அவர்கள் விடைபெற்றுச் செல்லவும் அறைக்குள் வந்த வர்ஷனாவுக்கு தான் நிஜவுலகில் வாழ்கிறேனா என்று சந்தேகம் உண்டானது. எப்படி இது சாத்தியமாகும் என்று குழம்பினாள். அறைக்குள் வந்த மஞ்சு அவள் குழப்பத்தைத் பார்த்து அவள் அருகில் வந்து கட்டிக்கொண்டாள். "என் செல்லத்துக்கு இப்போ சந்தோசமா? என்று கேட்டாள். "எனக்கு எதுவும் புரியல. எப்படி?"
"எல்லாம் உங்க சிவா சாரின் கைங்கர்யம் தான்" என்றவள் சிவானந்த் செய்த ஏற்பாடுகளைப் பற்றித் தனக்குத் தெரிந்ததைக் கூறினாள்.
 
Top