எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 8

S.Theeba

Moderator
காதல் 8

தனஞ்சயனின் காதலுடன் அக்காவிற்கு குட்டிப் பாப்பா வரப் போகின்றது என்பதும் சேர்ந்து கொள்ள இரட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்தாள் நிஷாந்தினி. சிறகில்லாமலேயே வானில் பறப்பது போன்ற உணர்வு அவளுக்குள் உண்டானது.

அன்று இரவு அவளால் தூங்கவே முடியவில்லை. அவனைப் பற்றிய நினைவே அவளை முழுமையாக ஆட்கொண்டு இருந்தது.

அவனின் நிலையும் அதுவாகவே இருந்தது. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். ம்கூம்.. தூக்கம் தான் அவனுடன் கோபித்துக் கொண்டு கிட்டயே வரமாட்டேன் என்று தூர ஓடிப்போய் நின்றது. எழுந்து பால்கனிக்கு வந்தவன் அங்கிருந்த பிரம்பாலான ஊஞ்சலில் அமர்ந்தான். அங்கே அவன் ஆசையாக வைத்திருந்த பலவர்ண ரோஜாச்செடிகள் பூத்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. அந்த சுகந்தத்தை அனுபவிக்கும் போதே அவள் நினைவுகள் அவனை இம்சித்தன. அவளை அணைத்திருந்தபோது அவளிடமிருந்து வீசிய மெல்லிய நறுமணத்தை இப்பொழுதும் அவன் நாசியில் உணரமுடிந்தது.
‘பாப்பு என்ன செய்து கொண்டிருப்பாள். தூங்கியிருப்பாளா? ம்ம்.. அவளுடன் பேசவேண்டும் போல் இருக்கு. ச்ச.. அவளது மொபைல் நம்பர் வாங்காமல் வந்துவிட்டேனே. முட்டாள்.. முட்டாள்..' என்று வாய்விட்டே தன்னைத் திட்டிக் கொண்டான். தலையைக் கோதியபடி ‘நானா இப்படி ஆகிவிட்டேன். எல்லோரும் என்னை எவ்வளவு அழுத்தக்காரன் என்பார்கள். ஆனால் நான் இப்படி பைத்தியம் மாதிரி புலம்பிக் கொண்டிருக்கின்றேனே. இந்தக் காதல் என்னை இவ்வளவு கொடுமைப்படுத்துகின்றதே’ என்று மருகினான். இப்பொழுதே அவளைப் போய் பார்க்க வேண்டும் என்று எழுந்த உத்வேகத்தை தலையிலேயே தட்டி அடக்கினான். அவளது வீட்டில் சூழ்நிலை எப்படியோ? அவளே அவளது அத்தை வீட்டில் இருப்பதாகக் கூறினாள். நான் போய் அவளுக்கு சங்கடத்தைக் கொடுக்கக்கூடாது என்று நினைத்தவன் அவளைப் பற்றி நினைத்துக்கொண்டு அங்கேயே தூங்கிப் போனான்.

சுபாஷினி கர்ப்பமாயிருப்பது சகோதரிகள் இருவரையும் தவிர அந்த வீட்டில் வேறு யாருக்குமே அவ்வளவு உவப்பானதாயில்லை. அத்தை தனம் அவள் வயிற்றில் வளர்வது தன் பேரக்குழந்தை, தங்கள் வீட்டு வாரிசு என்பதையே மறந்து சுபாஷினியுடன் வயிற்றிலுள்ள சிசுவையும் சேர்த்து திட்டித் தீர்ப்பார். அவளது கணவனோ அதற்கு மேல். அவளிடம் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு ஏற்படுவதைப் போல சுபாஷினியையும் அன்றிலிருந்தே உடல் உபாதைகள் வாட்டி வதைக்கத் தொடங்கின. வாந்தி மயக்கம் என மாறி மாறி அவளை எழுந்து நிற்கவே முடியாத அளவுக்கு மாற்றி விட்டது. அந்த நேரத்தில் கூட அவள் வீட்டு வேலைகளைச் செய்தாள்தான். ஆனால், அவர்களின் தேவைகள் சற்றுத் தாமதமானதால் சஞ்யுக்தா உட்பட எல்லோருமே அவளை வதைக்கத் தொடங்கினர். சற்றே அயர்ந்து உட்கார்ந்தால் கூட “மகாராணிக்கு கால் பிடிச்சு விடவா?” என்று கேட்பர். அக்காவின் நிலையை பார்த்து மனம் வெதும்பியவள், அடுத்து வந்த நாட்களில் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துவிட்டு எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்யத் தொடங்கினாள். ஒரு வாரம் அவள் அசைய முடியாத நிலை. வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியவில்லை. அக்காவிற்காக திட்டு வாங்குவதையும் பொறுத்துக் கொண்டு தளராமல் வேலைகளைச் செய்தாள்.

கல்லூரிக்கோ டியூசனுக்கோ செல்லாததால் தனஞ்சயனையும் அவளால் பார்க்கவும் முடியவில்லை, பேசவும் வழியில்லை. அவளிடம் கைத்தொலைபேசியும் இல்லை. இருந்தாலும் அவனது எண் இல்லையே என்று நினைத்தவள் ரொம்பவும் தவித்துப் போனாள். அவனது நினைவுகள் அவளை வாட்டி வதைத்தன. அவனைக் காணாமல் ஒவ்வொரு நாளும் இல்லையில்லை ஒவ்வொரு மணித்துளியும் நகர்வது அவளுக்கு ஒரு யுகம் போலத் தோன்றியது.

ஒரு வாரம் முடிந்த நிலையில் அடுத்த சனிக்கிழமை சுபாஷினியே அவளை வற்புறுத்தி டியூசன் எடுக்க அனுப்பி வைத்தாள். தொடர்ந்து கல்லூரிக்கும் செல்ல வேண்டும் என்றும் பணித்தாள். இவள் இப்படியே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தால் தனம் அவளது படிப்பை அப்படியே நிறுத்தி விடுவார். தன் நிலை தன் தங்கைக்கும் வரக்கூடாது. அவள் நன்கு படித்து நல்ல ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அந்தப் பேதையின் நெஞ்சம் தவித்தது. எனவேதான் அவளை வற்புறுத்தி அனுப்பினாள்.

காலையில் மூன்று பிள்ளைகளுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று கற்பித்தவள் இரண்டு மணிக்கே சஸ்மிதா வீட்டிற்குச் செல்ல வேண்டும். வழமையாக வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து செல்வாள். இன்று அவளுக்கு வீட்டிற்குப் போய் வரப் பிடிக்காமல் அருகில் இருந்த பார்க்கில் அமர்ந்திருந்து விட்டு சஸ்மிதா வீட்டிற்குச் சென்றாள்.

தோட்டத்தின் ஊடாகச் செல்லும்போதே தனஞ்சயனை அன்று இதே இடத்தில் சந்தித்ததும் அதன்பின் நடந்தவையும் அவள் மனக்கண் முன் தோன்றி இம்சித்தன.

உள்ளே சென்று பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு புறப்பட்டவளை மறித்த உஷா “ரீச்சர் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டாள். “அதற்கென்ன சொல்லுங்க என்னால் முடிந்தால் கட்டாயம் செய்வன்” என்றாள்.
“ரீச்சர் பிளீஸ் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. வந்து சொல்றேன்” என்று அவளை சோஃபாவில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். என்னவாக இருக்கும் என்று யோசனையோடு அமர்ந்திருந்தாள். வாசல் பக்கம் ஆள் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள். அங்கே பார்மல் உடையில் கம்பீரமாகக் நடைபோட்டு இவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் தனஞ்சயன்.

இவள் இங்கு வந்தவுடனேயே ஹோல் பண்ணி சொல்லிவிட்டாள் உஷா. அவன் வரும்வரை அவளை தாமதப்படுத்தவே ஹெல்ப் என்று கேட்டு உட்கார வைத்திருந்தாள்.

இறுதியாக நிஷாந்தினியைச் சந்தித்துவிட்டு சென்றபிறகு அவளைக் காணாது தவித்து விட்டான். அவளை எப்படித் தொடர்பு கொள்வதென்றும் தெரியவில்லை. மூன்று நாட்களின் பின்னர் தான், சஸ்மிதாவிற்கு டியூசன் எடுக்க வருவாள் என்பதை நினைவுகூர்ந்தவன், உடனேயே உஷாவைத் தொடர்பு கொண்டான். உஷாவும் அவளை நீ ஏன் கேட்கிறாய் என்று தூண்டித்துருவி கேட்டாள். அவர்களின் காதலை அறிந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டவள், அடுத்த சனிக்கிழமையே வருவாள் என்பதைத் தெரிவித்தாள். அவளின் தொலைபேசி இலக்கத்தை கேட்டபோது அவளிடம் மொபைலே இல்லை என்பதையும் தெரிவித்தாள். எனவேதான் எப்போது அவள் வந்தாலும் உடனேயே தனக்குத் தகவல் தர வேண்டும் என்று அவன் கூறியிருந்தான்.

அங்கே அவனைக் கண்டதும் சந்தோசத்தில் எழுந்து நின்றவளது கண்கள் கலங்கின. அருகில் வந்தவன் அவளது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவளது கைகளைப் பற்றி மெல்லத் தட்டிக் கொடுத்தான்.

“பாப்பு.. எங்கேயாவது வெளியில் போவோமா?” என்று கேட்டான். அவள் சம்மதமாகத் தலையாட்டவும் உஷாவை அழைத்து சொல்லிவிட்டு அவளது கைகளை விடாமலே பற்றி அழைத்துச் சென்றான். அவளும் சங்கடத்துடன் உஷாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டாள்.

அவனது கார் நேராகச் சென்ற இடம் ஒரு உயர்தர ஹோட்டல். அவள் இதுவரை இப்படியான ஹோட்டலுக்கு ஒரு தடவைகூட வந்ததில்லை. அவள் கல்லூரி நண்பர்களோடு கன்ரீனுக்கு மட்டும், அதிலும் எப்பவாவது மட்டுமே செல்வாள். ஒரேயொரு தடவை தாரணியின் பிறந்தநாள் ட்ரீட்டுக்கென சிறிய ஹோட்டலுக்குச் சென்றாள். அதன்பின்னர் யார் அழைத்தாலும் அவள் செல்வதில்லை.

இன்று அவனுடன் இந்தப் பிரமாண்டமான ஹோட்டலுக்குள் செல்லும்போது மிகவும் பிரமிப்பாக இருந்தது. அவன் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே அங்கே பணியாற்றுபவர்கள் அவனுடன் மிகவும் பணிவாக நடப்பதையும், மானேஜர் நேரில் வந்து அழைத்து அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காபினுக்குள் கூட்டிச்சென்றதையும் பார்க்கும்போதே அவன் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருபவன் என்பதையும் அதிலும் அவன் அவர்களுக்கு மிகவும் முக்கியமான வாடிக்கையாளர் என்பதையும் புரிந்து கொண்டாள்.
பிரமிப்புடன் ஒருவித பயத்தையும் அவளுள் தோற்றுவித்தது. அவன் பணக்காரன் என்பது ஓரளவு புரிந்து தான் இருந்தது. ஆனால் அவன் தான் நினைப்பதை விட வசதியானவனோ தான் தகுதிக்கு மீறி ஆசைப்படுகின்றோமோ என்றும் அவளைக் கலங்க வைத்தது.

அவளை இருக்கையில் அமரவைத்தவன் அதற்கு மேல் அவளை யோசிக்க விடவில்லை. உணவுக்கான மெனுவைப் படித்து அவளின் விருப்பத்தையும் கேட்டான். ஆனால் அவள் எதை சொல்வது என்று தெரியாமல் முழிக்கவும் அவளுக்கும் சேர்த்து தானே ஓடர் பண்ணினான்.
தன்னுடன் காரில் இருந்து எடுத்து வந்த ஒரு பையை அவளிடம் கொடுத்து, “என் பாப்புவிற்கு இந்த மாமாவின் கிஃப்ட்” என்றான்.
“எ..என்ன?” ன்று தயக்கத்துடன் கேட்டவளிடம்
“திறந்துதான் பாரேன்” என்றான்.
உள்ளே ஓர் அழகிய , விலையுயர்ந்த மொபைலும் ஒரு ஃபுளூரூத்தும் இருந்தன. ஆச்சரியத்தில் கண்கள் மலர்ந்தபோதும் அத்தைக்குத் தெரிந்தால் என்ற பயம் அவளைச் சூழ்ந்தது.
அவளது முக மாற்றங்களைப் பார்த்தவன்
“என்ன பாப்பு? இது உனக்காக நான் ஆசையாய் வாங்கிய கிஃப்ட். சோ நீ கட்டாயம் வாங்கணும். அப்புறம் அதில் சிம் போட்டிருக்கேன். என் நம்பரும் சேவ் பண்ணியிருக்கேன். நாம் அடிக்கடி பேசலாம். ஃபுளூரூத் போட்டு பேசு. எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றான்.

பிரச்சினை இந்த மொபைலால் இல்லை. அது வெளியே இரண்டு ஆட்கள் வடிவத்தில் காத்திருப்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் உள்ளே வந்ததையும் தனிக் ஃகாபினுக்குள் சென்றதையும் இரு ஜோடிக் கண்கள் அவதானித்ததை அவர்கள் அறியவில்லை. ஒருவர் குரோதத்துடனும் மற்றையவர் பொறாமையிலும் பார்த்தனர்
 
Top