எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 29

S.Theeba

Moderator
வரம் 29


'நாளை விடிந்தால் கல்யாணம். இன்று வர்ஷனா கலையரசனாக இருக்கும் நான், காலையில் வர்ஷனா யதுநந்தனாகி விடுவேன். இந்தப் பெயரைச் சொல்லிப் பார்க்கவே எவ்வளவு இனிமையாக இருக்கின்றது. யது நான் நாளை காலையில் உன்னவளாகிடுவேன். அதன் பிறகு எப்போதும் உன் அருகிலேயே இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்' இவ்வாறு வாய்விட்டே புலம்பிக் கொண்டிருந்தாள் வர்ஷனா. தனது வீட்டின் பின்புறத்தில் தான் உருவாக்கியிருந்த சிறியளவிலான தோட்டத்தை அந்த நிலவொளியில் ரசித்தபடி நின்றிருந்தாள் வர்ஷனா. தன் அறையின் யன்னலருகே படரவிட்டிருந்த மல்லிகைப் பந்தலில் இருந்த மல்லிகையின் நறுமணம் காற்றில் தவழ்ந்து வந்து அவள் நாசியை நிறைத்தது. நிலவின் அழகும் மல்லிகையின் மணமும் அவள் யதுவின் நினைவை மேலும் அதிகமாக்கியது. இந்த மல்லிகையின் நறுமணம் போல யதுவும் என் சுவாசத்திலேயே கலந்து விட்டானே என்று எண்ணினாள்.


இரவு பதினொரு மணியாகியும் தன் மணாளனின் நினைவில் தூக்கம் வராது படுக்கையில் புரண்டவள் எழுந்து யன்னலருகே வந்திருந்தாள். கோயிலில் எளிமையாக, ஆடம்பரமின்றிக் கல்யாணம் நடத்தப்படவிருந்ததால் வேலைகள் அதிகம் இருக்கவில்லை. எனவே வீட்டிற்கு முதல்நாளே வந்திருந்த நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் தூங்கிவிட்டனர். பத்து மணிவரை கூடவே இருந்த மஞ்சுவும் காலையில் நேரத்திற்கு எழுந்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.


தன்னை மறந்து அவன் நினைவுகளில் மூழ்கியிருந்தவளை அவளது அலைபேசியின் மெல்லிய ஒலி கலைத்தது. வாட்சப்பில் குறுஞ்செய்தி வந்ததுக்கான ஒலியே அது. இந்த நேரத்தில் யார் அனுப்புவது என்று சிந்தித்தபடி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். புதிய இலக்கத்திலிருந்து 'ஹாய்' என்று வந்திருந்தது. தெரியாதவர்களுக்கு பதில் சொல்ல விரும்பாமல் அப்படியே விட்டாள். மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. 'தூங்கிட்டியா?' என்று கேட்டிருந்தது. யாராய் இருக்கும் என்று யோசித்தபடியே அமைதியாக இருந்தாள். இரு தடவையும் பதில் வரவில்லை எனவும் 'ஹாய் நான் யதுநந்தன்.' என்று வந்தது. அதை வாசித்ததும் அவள் மனம் சந்தோசத்தில் படபடத்தது. எதிர்பாரா நேரத்தில் எதிர்பாராத நபரிடமிருந்து குறுஞ்செய்தி வரும் என அவள் கனவுகூடக் காணவில்லை. என்ன பதில் அனுப்புவதென்று தடுமாறினாள். 'ஹாய்' என்று மட்டும் பதில் அனுப்பினாள். 'தூங்கலையா?'
'ம்ம். தூக்கம் வரல.'
'ஏன்?'
'தெரியல. நீங்க ஏன் தூங்கவில்லை?'
'எனக்கும் தூக்கம் வரவில்லை.'
அடுத்து என்ன பேசுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. அவனிடமிருந்தும் எதுவும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து 'ஓகே. நீ தூங்கு. மோர்னிங் நேரத்துக்கு எழுந்துக்கணும். குட்நைட்' என்று வந்தது. பதிலுக்கு அவளும் 'குட்நைட்' என்று அனுப்பிவிட்டு அந்த சந்தோஷத்திலேயே தூங்கினாள். கனவிலும் யதுநந்தனே ஆட்சி செய்தான்.


காலையில் குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கி எழுப்பினாள் மஞ்சு. தூக்கத்தில் யதுநந்தனுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவள் அதேநினைப்பில் "சும்மா இரு யது." என்று சிணுங்கிவிட்டு, கனவில் அணைத்தவனைத் தள்ளிவிடுவதாக நினைத்து மஞ்சுவைத் தள்ளிவிட்டாள். கட்டிலில் இருந்து "அம்மாடி..." என்று அலறியபடிக் கீழே விழுந்தாள் மஞ்சு. அவள் அலறலில் கண்களைத் திறந்தவள் இந்த சத்தத்தைக் கேட்டு வெளியில் இருப்பவர்கள் வந்துவிடப் போகின்றார்கள் என்ற பயத்தில் பாய்ந்து அவள் வாயை இறுகப் பொத்தினாள். "ப்ளீஸ்டி... கத்தாத. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.
"ஏண்டி என்னைத் தள்ளி விட்டாய்?"
"அது அது..." என்று பதில் சொல்ல முடியாது அசடு வழிந்தாள்.
"ஓகோ... உன் யதுவோடு டூயட் கனவா? அதுக்கேனடி தள்ளிவிட்டாய்? இப்படித் தள்ளிவிட்டால் உன் யது எப்படியடி ரொமான்ஸ் பண்ணுவார்?" என்றாள். வெட்கத்தில் அவள் தடுமாறவும் "ஓகே ஓகே. இந்த வெட்கத்தை எல்லாம் உன் யதுகிட்டவே வச்சுக்க. இப்போ எழுந்து குளிக்கப் போடி. இன்னும் ரூ ஹவர்ல கோயில்ல இருக்கணுமாம்." என்றாள்.


வர்ஷனா எழுந்து குளித்துவிட்டு வந்தாள். அங்கே அறையில் மஞ்சுவைக் காணவில்லை. யதுநந்தன் தேர்வு செய்திருந்த பட்டுப் புடவையைக் கையில் எடுத்தவள் அதைத் தன் நெஞ்சோடு அணைத்தாள். அப்போது அறைக்குள் சிறு பெட்டியுடன் நுழைந்தனர் மஞ்சுவும் ராகவியும். அவள் நின்ற கோலத்தைப் பார்த்ததும் "வர்ஷூ, இது சாறி.. யது இல்லைடி.." என்றாள் ராகவி.
"அதையேண்டி கேட்கிறாய். தூங்கிட்டு இருந்தவளை எழுப்பினனா..." என மஞ்சு ஆரம்பிக்கவும் "போதும் போதும் நிறுத்துங்க... நான் ரெடியாக வேண்டாமா?" என்றாள் வர்ஷனா. விட்டால் இவள் ஊரெல்லாம் தம்பட்டம் அடித்து சொல்லிடுவாள் போல.


அவள் புடவையுடுத்து வரவும் தோழிகள் இருவரும் சேர்ந்து அவளை அலங்கரித்தனர். பெட்டியில் கொண்டு வந்திருந்த நகைகளை அணிவித்தனர். அந்த நகைகளை சந்திரமதி கொடுத்து அனுப்பியிருந்தார். அவை அவர்களின் குடும்ப நகைகள். அதையே திருமணத்தன்று போட்டு வரவேண்டும் என்று அவளிடம் கேட்டு, அவள் சம்மதித்ததும் அனுப்பியிருந்தார்.


மணமகள் அலங்காரத்தில் ஜொலித்த வர்ஷனாவின் முகத்தில் சந்தோஷ் இருமடங்காக நிறைந்திருந்தது. தன் மனதில் நிறைந்தவனே இன்று தன் மணாளனாகப் போவதை நினைத்தே அவள் முகத்தில் பூரிப்பு நிறைந்திருந்தது.


தயாராகி வெளியில் வந்தாள். அவளை கல்யாணக் கோலத்தில் பார்த்த அவளின் பெற்றோருக்கு சந்தோஷத்தில் விழிகள் நிறைந்தன. அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கியவள், தங்கா செல்வாவிடமும் ஆசீர்வாதம் வாங்கினாள். எல்லோரும் புறப்பட்டு கருமாரியம்மன் ஆலயத்தைச் சென்றடைந்தனர்.


முகூர்த்த நேரம் நெருங்கியது. மணமேடையில் ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். நெருங்கிய சொந்தத்திற்கு மட்டுமே அழைப்பு என்பதால் அங்கே கூட்டம் அதிகம் இல்லை. இருவீட்டாரும் மணவறையைச் சுற்றி நின்றிருந்தனர். அவர்கள் அனைவரின் முகத்திலும் நிறைவான சந்தோஷம் குடிகொண்டிருந்தது. யதுநந்தன் மனையில் அமர்ந்திருந்தான்.


மணமகனுக்குச் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை எல்லாம் செய்து முடித்ததும் மணமகளை அழைத்துவரக் கூறினார் ஐயர். தோழிகள் புடைசூழ வந்தாள் வர்ஷனா. அவளது கையைத் தனது தளிர்க் கரங்களால் பற்றியபடி அழைத்து வந்தாள் இலக்கியா. வர்ஷனாவின் புடவைக்கு மேட்சிங்கான பட்டுப் பாவாடை சட்டை அணிந்து சிறிய நகைகளும் அணிந்திருந்தாள். இருவரும் இணைந்து நடந்து வருவதைப் பார்க்கப் பாந்தமாக இருந்தது. வைத்த கண் வைத்தபடி இருவரையும் பார்த்திருந்தான் யதுநந்தன். அருகில் நின்றிருந்த சிவானந்த் அவனின் காதருகில் குனிந்து "ரொம்பவும் வழியுதடா. துடைச்சுக்கோ" என்றான்.


அருகில் வந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். கழுத்தில் ரோஜாமாலை அவன் அழகை இன்னும் கூட்டியது. சிவானந்த் குனிந்து அவன் காதருகில் பேசவும் வெண் பற்கள் பளீரிட புன்னகைத்தான். அவனையே வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டே வந்தவள் மஞ்சு மெதுவாகக் கையிலே சுரண்டவும் சுய உணர்வு பெற்றாள். 'என்னவனை யாருக்கும் தெரியாமல் ரசிக்கிறதை விட்டு, இப்படிப் பப்ளிக்கா சைட் அடிச்சிருக்கேனே. எப்போதையும் விட இன்றுக்கு ரொம்ப ஹான்ட்ஸமாயும் அழகாயும் இருக்கான்தான். அதுக்காக இப்படியா பார்த்துவைப்ப. எல்லோரும் கவனிச்சிருப்பாங்க. மானம் போச்சு' என்று மைன்ட் வாய்ஸில் பேசியவள் குனிந்த தலை நிமிராமல் மேடையில் வந்து அமர்ந்தாள். அவளுக்கு அருகிலேயே இலக்கியாவையும் அமர வைத்தாள்."கெட்டிமேளம் கெட்டிமேளம்..." என்று உரக்கக் கூறிய ஐயர் தாலி கோர்க்கப்பட்டிருந்த மங்கலநாணை எடுத்து யதுநந்தன் கையில் கொடுத்தார். தாலிக் கயிற்றைக் கையில் வாங்கியவன் வர்ஷனாவின் வதனத்தையே பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் கன்னங்களின் வெட்கச் சிவப்பும் அவன் மனதை நிறைக்க, அவள் கழுத்தில் தாலியைக் கட்டி அவளைத் தன்னவளாக்கிக் கொண்டான்.
 
Top