அது ஒரு காலை பொழுது, சூரியன் வெளியே வந்து விடுமுறை முடிந்துவிட்டது என தன் வெளிச்சத்தால் சொல்லி தூங்கிய அனைவரையும் எழுப்பிக் கொண்டு இருந்தான்.
அது என்னவோ விடியக்காலை தான், ஆனால் அந்த இடமோ சென்னை ஆச்சே, கூட்டம் இல்லாமல் இருக்குமா?
மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பி வந்த அனைவரையும் தமிழ்நாட்டின் தலைநகர் வரவேற்றது.
வந்த அனைவரது கண்களிலும் ஒரு ஏக்கம் சொந்த மண்ணை பிரிந்து விட்டோம் என்று, ஆனால் சென்னை வந்து விட்டோம் என்ற சந்தோஷமும் அவர்களது கண்களில் இருந்தது.
ஊரே சத்தமுடன் ஓடிக்கொண்டு இருக்க, நமது கதாநாயகியின் வீட்டிலும் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது.
அது ஒரு அடுக்குமாடி கட்டடம், அதில் உள்ள ஒரு ப்ளாட்டில் (flat) தான் நமது கதாநாயகியின் குடும்பமும் வசித்து வந்தது.
கதாநாயகியின் வீட்டில்…
“நீங்க அவளை கண்டிக்க போறேங்களா? இல்லை நான் கண்டிக்கனுமா? வர வர அவ ஆட்டம் ரொம்ப அதிகம் ஆகுது. பொம்பளை புள்ள மாதிரியா நடந்துக்குறா?” என கிட்சனில் அடுப்புடன் சேர்ந்து வீட்டம்மாவின் கடுப்பும் அனல் பறந்தது.
இவை அனைத்தையும் ஹாலில் சோஃபாவில் அமர்ந்து காப்பி கப்புடன் பேப்பர் படித்துக் கொண்டு கேட்டுக்கொண்டு இருந்தார் கேசவ்.
“அம்மா லக்ஷ்மி, அந்த பாட்டு சவுண்டை கூட்டு” என இளையவளை சொல்ல
“ஹான் ப்பா” என அரை தோசையை அரை மணி நேரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த இளைய மகள் சத்தத்தை கூட்டினாள்.
டீவியில் போட போடி படத்தில் இருந்து ஒரு பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.
உங்கொப்பன் மவனே வாடா…
உங்கொப்பன் மவனே வாடா…
(காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க)
“அதுக்குள்ளயா வந்துட்டான் நான் இன்னும் ஏற்பாடு கூட பண்ணலை டா” என பார்த்துக் கொண்டு இருக்க
“மகா போய் கதவை திற, இங்க யாரும் வேலையையும் பார்க்க மாட்டாங்க, நாம சொல்லுவதை கேட்கவும் மாட்டாங்க, கதவை கூட திறக்க மாட்டாங்க” என கத்த
தன்னை தான் சொல்லுகிறாள் என்பதை புரிந்துகொண்ட கேசவ், மகாவை நிறுத்திவிட்டு கதவை திறக்க சென்றார்.
காலிங் பெல் விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது.
வெளியே வந்து பார்த்தால் ஒரு கூட்டமே நின்றுக் கொண்டு இருந்தது கேசவ் வீட்டின் முன்னே…
அனைவரும் கோவமாக நின்றுக் கொண்டு இருந்தனர்.
“அட வாங்க சுப்பாராவ் சார் என்ன என் வீட்டு பக்கம்?” என அங்கிருந்த ஒருவரை பார்த்து கேசவ் கேட்க
“நிப்பாட்டுங்க சார், இந்த அப்பார்ட்மெண்டில் நாங்களும் வாழ வேணாமா நீங்க மட்டும் இருந்தா போதுமா?” என கேட்க
“ஏன் சார் என்ன ஆச்சு?” என கேட்டார் கேசவ்.
“இங்க பாருங்க என் பையன” என அவரது பையனை காட்ட
அவனது முகம் வீங்கி போய் இருந்தது.
“அய்யோ என்னப்பா இப்படி வீங்கி போய் இருக்குது, கீழ விழுந்துட்டயா பார்த்து விளையாடக்கூடாது” என அவனது கண்ணத்தை பிடித்து கேட்க
“நிறுத்துங்க சார், இது கீழே விழுந்து வாங்குன அடி இல்லை, உங்க மூத்தபொண்ணு அடிச்ச அடி” என கேசவ்வின் மூத்த பொண்ணை குறை சொல்ல
“அதுமட்டும் இல்லை, உங்க பொண்ணு சண்டை போட்டு என் கடையை அடிச்சு நொறுக்கிட்டா இந்தாங்க அதுக்கு பில்லு” என கையில் தர
“அடித்ததடா லக்கு, கிடைச்சதடா சாக்கு” என கிட்சனில் இருந்த வீட்டம்மா வாசலுக்கே வந்துவிட்டார்.
“என்னது அடிச்சாளா?” என வந்து அவனை பார்க்க
“பார்த்தேங்களா எப்படி போட்டு அடிச்சு இருக்கா? இப்படியே போனா யாரு அவளை கட்டிப்பான் எந்த பையன் இவளை பார்ப்பான்” என மூத்தவளை கரித்து கொட்ட
“மொதல்ல என்ன ஆச்சுன்னு சொல்லுங்க?” என கேசவ் அவர்களை பார்த்து கேட்டார்.
லிஃப்ட் அந்த தளத்திற்கு வரும் சத்தம் கேட்டது.
அனைவரும் திரும்பி பார்க்க…
மணி 8 ஆகிவிட்டது என கடிகாரம் ஒலித்தது.
“8 ஆகிருச்சா இதோ அவளே வந்துட்டா அவட்டயே கேட்போம்” என கேசவ் சொன்னதும், சுப்பாராவ்வின் மகன் பயந்து சுப்பாராவ்வின் பின்னே செல்ல
லிஃப்ட் ஓப்பன் ஆனது.
ஒரு கருப்பு நிற குள்ளா வைச்ச ஜாக்கெட்டை போட்டுக் கொண்டு காதில் ஏர்போன் மாட்டிக்கொண்டு அவளது கைகளை அந்த ஜாக்கெட்டின் உள்ளே வைத்துக்கொண்டு ஏதும் நடக்காதது போல நடந்து வந்தாள் அகல்யா.
அவளது வீட்டின் முன்னே கூட்டம் நிற்பதை பார்த்தும் பார்க்காமலும் நடந்து வந்தாள்.
வீட்டின் அருகே வந்ததும் யாரும் வழி விடாமல் அவளை பார்த்துக் கொண்டே நின்றுக் கொண்டு இருந்தனர்.
அவள் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் விளையாட்டுத் தனமாக புகுந்து வந்து சுப்பாராவ்வின் முன்னே வந்து “அங்கிள் கொஞ்சம் வழி” என சொல்ல
அவ்வளவுதான் அனைவரும் அவளை கோவத்துடன் பார்த்தனர்.
( இன்னைக்கு கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டோமோ ) என அகல்யா மனதிற்குள் நினைத்துக் கொண்டு அதை கண்களில் காட்டாமல் வாயில் போட்டு மென்றுக்கொண்டு இருந்த பூமரை ஊதி வெடிக்க வைக்க
அகல்யாவை பற்றி அவளே கூறுகையில்…
( நான்தான் அகல்யா, இதோ கூட்டத்துக்கு நடுவுல என்மேல கோவமே படாம நின்னுக்கிட்டு இருக்காரே இவருதான் என் அப்பா கேசவ், என் அப்பாதான் என்னோட சூப்பர் ஹீரோ, பக்கத்துல என்மேல சரியான கோவத்துல நின்னுக்கிட்டு இருக்காங்களே இதான் என்னோட அம்மா வித்யா என்மேல பாசம் எல்லாம் இருக்கும் ஆனா வெளில காட்டாம சீன் போடுவா, நான் இப்போ 12th படிச்சு முடிச்சுட்டு ரிசல்ட்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன், நான் ரொம்ப நல்ல பொண்ணுதான் ஆனா இந்த ஒரு டயலாக் வரும்ல “எதுனாலும் மூஞ்சி முன்னாடி சொல்லு மூஞ்சி முன்னாடின்னு” அதே மாதிரி தான் நானும் மூஞ்சி முன்னாடி சொல்லிடுவேன், அதாங்க straight forward , அது மட்டும் இருந்தா கூட ஓகே ஆனா எனக்கு கோவமும் சட்டுனு வந்துரும், இந்த குறைங்க தான் என்கிட்ட சரி இப்போ கதைக்கு போகலாமா
( தங்க மாரி ஊதாரி … )
என்ன பாட்டு சத்தம் கேட்குது ஓஹோ இவளை மறந்துட்டேன்ல இவதான் என்னோட குட்டி தங்கச்சி பேரு அஷ்வினி, டீவி தான் இவளோட உலகமே அது இருந்தா போதும் அவளுக்கு, அப்பறம் இதோ வீட்டுல ஓரமா நிக்குறாங்கலே இவங்கதான் மகா அக்கா, எங்க வீட்டு வேலைக்காரி தான் ஆனா அப்போ அப்போ எனக்கு சொல்லிக் கொடுக்குற டீச்சர் ஆகிருவாங்க இவ்வளவுதான் என்னோட குடும்பம், ஹான் எனக்கு கோவம் வரும்னு சொன்னேன்ல அதுக்கு உதாரணம் இன்னைக்கு நடந்த சம்பவம் அதை சொல்லுறேன் )
காலை ஆறு மணி அளவில், அகல்யா எப்போதும் போல காதில் ஏர்போனை போட்டுக்கொண்டு அந்த அப்பார்ட்மெண்ட்டை சுற்றி ஜாக்கிங் செய்துக்கொண்டு இருந்தாள்.
அவளது நண்பன் விக்கி அதை அப்பார்ட்மெண்ட்டின் வெளியில் நின்று இருந்து பார்த்து எத்தனை ரவுண்ட் என கணக்கெடுத்து டைமிங்கை நோட் செய்துக் கொண்டு இருந்தான்.
( விக்கி பக்கத்து குப்பத்தை சேர்ந்த பையன், அகல்யாவும், விக்கியும் பள்ளியில் நண்பர்கள் ஆகி விட்டனர் ).
சுப்பாராவ்வின் மகன் அங்கே நின்றுக்கொண்டு போகும் வரும் பெண்களை கேளி செய்ய, அதை விக்கி கவனித்தான்.
அதை அகல்யாவிடம் சொல்ல, ராக்கியை பார்த்தும் பார்க்காமலும் கடந்து சென்றாள்.
“வேணாம் அகல், இன்னைக்கு வம்பு இழுத்த வித்யா உன்னய புடலங்காயை நறுக்குற மாதிரி நறுக்கி போட்டுருவா, இருந்தாலும் ஓவராத்தான் போறான், சரி அடுத்த ரவுண்டும் இங்க இருந்தா பார்த்துக்கலாம்” என தனக்குத் தானே சொல்லிவிட்டு ஓட்டத்தை தொடர
அந்த தள்ளு வண்டிக்காரன் பொருட்களை விற்பதை பார்த்தாள்.
ஆனால் உன்னிப்பாக கவனித்தால், அவன் பொருட்களை கொடுக்கும் போது பெண்களின் கையை தடுவுவதிலேயே குறியாக இருந்தான். இதையும் அகல் நோட்டமிட்டாள்.
மீண்டும் அவளது மனம் இதற்கும் ஏதும் செய் என்று சொன்னது.
அலை பாய்ந்த அவளது மனதை ஒருநிலை படுத்த, அவளது தலையை அவளே அடித்துக் கொண்டாள்.
“வேணாம் அகல் வேணாம், இன்னைக்கு வம்பு பண்ணாத” என சொல்லிக்கொண்டு இருக்கும்போது மீண்டும் சுப்பாராவ்வின் மகன் ராக்கியும் அவனது நண்பர்களும் அடுத்த பெண்ணை கிண்டல் செய்வதை பார்த்ததும் அகல்யாவின் கோவம் தலைக்கு ஏறியது.
பேசுறது எல்லாம் என்னோட வரலாறுலயே இல்லை, நேரா போனதும் அடி உதை தான்.
அகல்யா ராக்கியின் கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விட, அவளது கைகளின் அச்சு அப்படியே பதிந்தது.
இதைப்பார்த்த விக்கி அய்யோ இவக்கிட்ட மறந்து போய் சொல்லிட்டேனே வூடு கட்டி அடிப்பாளே என அங்கிருந்த கேட்டை எகிறி குதித்து உள்ளே ஓடி வர
அவனது நண்பர்கள் அவளை பிடித்து இழுக்க, அவர்களையும் ஒரு கை பார்த்தாள் அகல்யா.
அவர்களது முகத்தில் குத்தி குத்தி இவளது கைகளில் காயம் ஏற்பட்டு இருக்கும் அதை மறக்கவே தனது கைகளை ஜாக்கெட்டின் உள்ளே வைத்துக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறாள் அகல்யா.
சரியாக சண்டை நடந்துக் கொண்டு இருக்கும்போது அந்த கடைக்காரன் வரவே, வேண்டும் என்றே அவனது கடையின் மீது இவர்களே தள்ளி விட்டாள்.
அவர்களிடம் அடி வாங்குவது போல் ஒரு அடியை வாங்கி அந்த கடைக்காரனின் தள்ளுவண்டி கடையின் மீதி விழுந்து, அங்கிருந்த பொருட்களை ராக்கி மற்றும் அவனது நண்பர்கள் மீது தூக்கி எறிந்தாள்.
இதுதான்ங்க நடந்தது இனிமே என்ன நடக்கும்னு நாளைக்கு வந்து மறக்காம பார்த்ததுட்டு போங்க டாட்டா…
தொடரும்…
Last edited: