எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 31

S.Theeba

Moderator
வரம் 31

தினமும் எழுந்து பழக்கப்பட்டதில் காலை ஐந்து முப்பது மணிக்கே முழிப்பு வந்தது. ஆனால் வழமைக்கு மாறாகத் தன் அருகில் இலக்கியாவுக்குப் பதிலாக வர்ஷனா படுத்திருப்பதை உணர்ந்தான். அவள் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. வாயில் விரலை வைத்தபடித் தூங்கிக் கொண்டிருந்தாள். இலக்கியாவுக்கும் இவளுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். இவள் வளர்ந்த குழந்தை என்று எண்ணிக்கொண்டே எழுந்துக்க முயன்றான். அப்போதுதான் கவனித்தான். வர்ஷனா இடது கையால் அவனது ரீசேர்ட்டைப் பிடித்திருந்தாள். குழந்தையொன்று ஆதரவிற்காகத் தன் தாயின் உடையைப் பற்றிப் பிடித்திருப்பது போல் தோன்றியது. மெதுவாகத் தன் ரீசேட்டிலிருந்து கையை விடுவித்தவன் எழுந்து அமர்ந்தான். அவளை முழுமையாகப் பார்த்தவன் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். நேற்று இரவு உடுத்துவந்த சேலையுடனே தூங்கியிருந்தாள். அவளது சேலை விலகி இடையைத் தாராளமாகக் காட்டியது. இது போதாமல் அவள் புரண்டு புரண்டு படுத்ததில் போர்வை முழுமையாக விலகிக் கிடந்தது. முழங்கால் வரைக்கும் சேலை உயர்ந்திருந்தது. தன் பார்வையை முகத்தை நோக்கி வலுக்கட்டாயமாகத் திருப்பினான். அவள் வாய்க்குள் இருந்து விரலை எடுக்க முயற்சி செய்தான். ஆனால், அவளோ தூக்கக் கலக்கத்திலேயே "மாலு... கொஞ்ச நேரம் தூங்குறேனே..." என்று கெஞ்சி விட்டு மீண்டும் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போனாள். அவள் தலையை ஆதரவாகக் கோதிவிட்டவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

எழுந்து பிரஷ் பண்ணிவிட்டு வந்தவன் அறையோடு ஒட்டியபடி அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடத்திற்குச்சென்று தன் வழமையான பயிற்சிகளை மேற்கொண்டான்.

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு எழுந்தாள் வர்ஷனா. எழுந்து உடலை வளைத்துச் சோம்பல் முறித்தவள், கட்டில் அருகே இருந்த சிறிய மேசையில் வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். அது ஏழு பத்து எனக் காட்டியது. 'அடச்சீ... இந்த மாலுவுக்கு என்னாச்சு. இந்த டைமில் வந்து எழுப்புகிறா. ரொம்பவும் பாட் மம்மியாகின்றா. அப்பாட்ட சொல்லி சீக்கிரம் டிவோர்ஸ் எடுக்கணும்' என்று வாய்விட்டே புலம்பினாள்.

மீண்டும் தூங்குவோமா என்று அவள் சிந்திக்கும் போது மீண்டும் கதவு தட்டப்பட்டது. "மாலு நீ என் தூக்கத்தைக் கலைச்ச சத்துரு. என்னைத் தொல்லை பண்ணினால் என் சாபம் உன்னைச் சும்மா விடாது பார்" என்று மற்றும் சிணுங்கிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கினாள். திடீரென்று என்ன இது ஏதோ ஒன்று நம்மை உறுத்துதே என்று நினைத்தவள் சுற்றும்முற்றும் பார்த்தாள். தான் எங்கே இருக்கின்றோம் என்று புரிபடவில்லை. கண்களைக் கசக்கி விட்டு தன் உறக்கத்தை முழுமையாக விலக்கவுமே இருக்கும் இடம் புரிந்தது அவளுக்கு.

திரும்பிக் கட்டிவைத்து பார்த்தாள். அங்கே அவனைக் காணவில்லை. ரூமில் எங்கும் அவன் இல்லை. இவ்வளவு அதிகாலையிலேயே (ஏழுமணி??) எங்கே சென்றிருப்பான்? யார் வந்து கதவைத் தட்டுகின்றார்களோ? ஒருவேளை அவன்தான் வெளியில் போய்விட்டு வந்தானோ?' என்று நினைத்தவள் விறுவிறுவெனச் சென்று கதவைத் திறந்தாள். அங்கே அவர்கள் வீட்டில் பணியாற்றும் லட்சுமி நின்றிருந்தார். அவள் நின்ற கோலத்தைப் பார்த்ததும் அவருக்கே வெட்கமாகிவிட்டது. "மன்னிச்சுக்கங்க அம்மா, பெரிய அம்மா உங்களுக்கும் தம்பிக்கும் இந்த டீயைக் கொடுத்துவிட்டு வரச்சொன்னார். அதுதான்..." என்று தயக்கத்துடன் இழுத்தார்.
"இதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்குறிங்க. அப்புறம் அம்மா என்றெல்லாம் என்னைக் கூப்பிடாதிங்க. நான் உங்களைவிட சின்னவள். நீங்க எனக்கு அம்மா மாதிரி. சோ நீங்க என்னைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடனும். என் பெயர் வர்ஷனா. உங்க பெயர் என்ன?"
"என் பெயர் லட்சுமி"
"நான் உங்களை லச்சும்மா என்றே கூப்பிடுவேன். நீங்க என்னை வர்ஷா என்றுதான் கூப்பிடனும். சரியா லச்சும்மா..."
"சரிம்மா வர்ஷா" என்றவர் சந்தோஷத்துடன் டீ ட்ரேயை அவளிடம் கொடுத்துவிட்டு அவளை மேலும் கீழும் பார்த்து புன்னகையுடன் தலையாட்டிவிட்டுச் சென்றார்.

யது எங்கே போயிருப்பான் என் யோசித்தவள் பால்கணிக்குச் செல்லத் திரும்பும்போதே அங்கே இருந்த கண்ணாடிக் கதவினூடாக உடற்பயிற்சிக் கூடம் தெரிந்தது. அங்கே யதுநந்தனைக் காணவும் டீயை எடுத்துக்கொண்டு உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றாள். அங்கே உடற்பயிற்சி செய்வதற்கு வசதியாக கையற்ற பனியனும் அரைக்காற்சட்டையும் அணிந்து பயிற்சியைச் செய்துகொண்டிருந்தவனைக் கண்டாள். அவன் உடற்கட்டு அவளுக்கு ஆச்சரியத்துடன் பெருமையையும் தந்தது. தினமும் பயிற்சி செய்வதால் அவனது புஜங்கள் முறுக்கேறியிருந்தன. விரிந்த தோள்களும் பரந்த மார்பும் ஒட்டிய வயிறும் அவன் ஆண்மைக்கு இலக்கணமாக இருந்தன. தன்னவனை மெய்மறந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்திலேயே உள்ளுக்குள் தோன்றிய குறுகுறுப்பாலும் பெண்மையின் நாணத்தாலும் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் வந்ததைக் கண்டவன் சிறு தலையாட்டலுடன் தன் பயிற்சியைத் தொடர்ந்தான்.

பயிற்சிகளை முடித்துக் கொண்டு அவள் அருகில் வந்தவன் வெட்கத்தில் முகம் சிவந்து தலைகுனிந்து நின்றவளைக் காணவும் அவளை அணைத்திடத் துடித்திட்ட கைகளையும் மனதையும் பெரும் பிரயத்தனப்பட்டு அடக்கினான். அவன் அருகில் வந்ததை அறிந்து தலையை உயர்த்தி
"உங்களுக்கு டீ கொண்டுவந்தேன்." என்றாள். உடற்பயிற்சி செய்ததால் முத்துமுத்தாக வியர்த்திருந்த அவனது முறுக்கேறிய உடலை அருகில் காணவும் அவளுக்கு மூச்சு முட்டியது. அறைக்குள் செல்லத் திரும்பியவளிடம் "நீ டீ குடிக்கலையா?" என்று கேட்டான்.
"குடிக்கணும்"
"அப்போ வா ரெண்டு பேரும் சேர்ந்தே குடிப்போம்"
"இல்லை... நான் இன்னும் பிரஷ் பண்ணல." என்றவள் அங்கிருந்து வெளியேறினாள். அங்கே நிற்பதால் தன் மனம் தடுமாறுவதை அவளால் தடுக்கமுடியவில்லை. எனவே அங்கிருந்து ஓடிவந்துவிட்டாள்.

குளியலறைக்குள் புகுந்தவள் தலைக்குக் குளித்துத் தயாராகிக் கீழே வந்தாள். பூஜையறைக்குச் சென்று கும்பிட்டாள்.தன் பூஜையை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள். அங்கே சந்திரமதி காலைச் சமையலுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு உதவியாக லட்சுமியும் அவரின் மகளான கனகாவும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
"வாம்மா வர்ஷா" என்றார் சந்திரமதி. சிறிது நேரம் அவருடன் பேசியவள், "அத்தை நான் ஏதாவது வேலை செய்யவா?"
"ஒருவேலையும் இல்லம்மா. ஆ... இதோ இலக்கிக் குட்டிக்காக பால் காய்ச்சி வைச்சிருக்கேன். அதைக், கொண்டுபோய் கொடுக்கிறாயா?"
"ம்ம். தாங்க" என்றவள் பாலை வாங்கிக் கொண்டு இலக்கியாவைத் தேடி பானுமதியின் அறைக்குச் சென்றாள்.
அங்கே பானுமதி குளித்து உடைமாற்றி விட்டு தலைவாரிக் கொண்டிருந்தாள். இலக்கியாவும் அந்த நேரத்திற்கே எழுந்து குளித்துவிட்டுத் தன் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்."ஹாய் குட்மோர்னிங் குட்டிமா, குட்மோர்னிங் பானுக்கா" என்றாள். அவளைக் கண்டதும் இலக்கியா சந்தோஷத்துடன் "அம்மா..." என்று அழைத்தபடி ஓடி வந்தாள். குனிந்து அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். அப்போது அலுவலகம் செல்லத் தயாரானபடி அந்த அறைக்குள் வந்தான் யதுநந்தன்.
"என் லக்கிக் குட்டி ஸ்மார்ட் கேர்ள். ஏர்லி மோர்னிங் எழுந்து குளிச்சு ரெடியாகி இருக்கே" என்றான். தந்தையைக் கண்டதும் குஷியான குழந்தை,
"ஐ... டாடி..." என்று அழைத்தபடி அவனை அணைத்து "குட்மார்னிங் டாடி..." என்றது. பதிலுக்கு அவளுக்கு முத்தமழை பொழிந்துவிட்டு "குட்மார்னிங் லக்கிக் குட்டி" என்றான். "இன்று லக்கிக்குட்டி ஸ்கூலுக்குப் போகலையா?"
"நோ டாட்... நான் இன்று அம்மா கூடத்தான் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன்."
"ஓகே,ஓகே. அவங்க கூடவே இரு. இன்று ஸ்கூல் போகவேண்டாம்." என்றான்.
"பை லக்கிக்குட்டி.." என்றுவிட்டுத்
திரும்பிச் செல்ல கால்வைத்தவன் சிறிது தயங்கி விட்டு "வர்ஷனா, இன்று ஒன்பது மணிக்கு போர்ட் மீட்டிங் இருக்கு. அதற்கு முதல் சைட்டிலும் ஒரு சின்ன வேர்க் இருக்கு. சோ, நான் இன்றே ஆபிஸ் போகணும். பை..." என்று அவளிடமும் விடைபெற்றான். பானுமதியிடமும் கூறிக்கொண்டு சென்றான்.

கீழே வந்தவனைச் சந்திரமதி பிடித்துக் கொண்டார்.
"என்ன நந்தும்மா, எங்க புறப்பட்டாச்சு?"
"நம்ம ஆபிஸூக்குத் தான்மா"
"நல்லாயிருக்கப்பா... நேற்றுத்தான் மேரேஜ் ஆச்சு. இன்று ஆபிஸ் போகணும்கிற. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க."
"அம்மா, நம்ப ஆபிஸ் வேர்க்க நாமதானேம்மா பார்க்கணும்"
"அதுக்காக இன்றே புறப்படனுமா? வர்ஷனாவைப் பற்றி யோசிக்கிறதில்லையா."
"ஓகே, ஓகேம்மா.. இன்று போர்ட் மீட்டிங்மா. கட்டாயம் போகணும். அது முடிந்தவுடனே வந்திடுறேன். இப்போ நான் புறப்படவா?"
"நந்தும்மா டிபன் சாப்பிடலையா?"
"இல்லம்மா, சைட்டிலும் அவசரமாய் ஒரு சின்ன வேர்க்.. போகணும். சாப்பிட டைம் இல்லம்மா. நான் ஆபிஸிலே பார்த்துக்குறன். அப்பா எங்கே?"
"அவர் வாக்கிங் போயிற்று வந்து இப்பதான் ரூமுக்கு குளிக்கப் போறார்."
"ஓகேம்மா... பை" என்றுவிட்டுப் புறப்பட்டான்.

மறுநாள் மறுவீட்டு சம்பிரதாயத்திற்காக வர்ஷனாவின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று வந்தனர்.

அவர்கள் இருவரின் வாழ்வும் சாதாரணமாக எந்த மாற்றமும் இன்றி ஒரு மாதம் கடந்து சென்றுவிட்டது. வர்ஷனாவும் இலக்கியாவும் மிகவும் நெருங்கி பாசத்தால் இணைந்தனர். பானுமதியும் வர்ஷனாவும்கூட ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நண்பிகளாகியிருந்தனர்.

ஆனால், அவள்மீது காதல் கொண்டவனோ நெருங்குவதற்குத் தயங்கி நின்றான். ஏற்கனவே பட்ட காயம் இன்னும் அவனுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அளவுக்கதிகமாக நேசம் வைத்தால் அவள் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாளோ என்ற பயம் சிறிதளவில் மனதின் ஓரத்தில் குடிகொண்டிருந்தது.

ஆனாலும் அவள் தூங்கும்போது அவளை ரசிப்பதும் அவளை முத்தமிடுவதும் அதனால் தாபத்தால் தவிப்பதும் அவனது தினசரி வழக்கமானது.

அவள் மீது உள்ள காதலின் ஆழத்தை உணரவும் அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.
 
Top