எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 9

S.Theeba

Moderator
காதல் 9

தன்னவன் வாங்கித் தந்த மொபைலில் என்னன்ன ஆப் இருக்கென்று நோண்டிக் கொண்டு இருந்தாள் நிஷாந்தினி. தன் உதட்டின் ஓரத்தைப் பற்களால் கடித்தபடி, தலையை சற்றே சரித்து அமர்ந்திருந்து மொபைலை பார்த்தாள். பக்கத்தில் இருந்த தனஞ்சயனோ தன் நாற்காலியை இழுத்து அவளுக்கு நெருக்கமாகப் போட்டதையோ,

அதன்பின்னர் தன் கன்னத்தில் கைவைத்து அவளது உதடுகளையும் முகவடிவையும் ஆசைதீர பார்த்ததையோ அவள் கவனிக்கவில்லை.

அந்த கடிபடும் இதழ்களை அவளது முத்துப் பற்களிடம் இருந்து விடுதலை செய்து தன் இதழ்களால் சிறை செய்ய வேண்டும் என்ற ஆசை அவனை பாடாய் படுத்தியது.

இன்னும் அருகில் நெருங்கியமர்ந்தவன் அவளது இடையை தனது இடது கையால் வளைத்தான். இடையில் கைபோடவும் திடுக்கிட்டவள், சுற்றுப்புறம் நினைவு வரவும் “அச்சச்சோ, கைய எடுங்க சார். யாராவது வந்திடப் போறாங்க” என்றாள். வெட்கத்தில் நெளிந்தவளின் இடையை இன்னும் இறுக்கமாக பற்றியவன்,
“இது தனி காஃபின். அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரமாட்டாங்க. அதைவிடுடி, ஆமா இப்போ என்னை எப்படி கூப்பிட்டாய்? சாரா..?”
“அது.. அது...”
“அது எதுவாவும் இருக்கட்டும். ஒழுங்கா மாமான்னு கூப்பிடு. கூப்பிடு பப்பு...” என்று அவன் மிக மென்மையாகவும் கிறக்கமாகவும் கேட்டு நின்றான். அந்தக் குரலே அவளை என்னவோ செய்தது.
“மா..மா..” என்று அவள் அழைக்கவும் தாபம் மேலிட அவளை இழுத்து அணைத்தவன் அவளின் இதழ் ஒற்றி முத்தமிட்டான். ஆரம்பத்தில் தடுத்தவள் மெல்ல மெல்ல தானும் அம்முத்தத்தில் கரைந்து போனாள்.

எத்தனை நேரம் அவர்கள் அப்படியே இருந்தார்களோ அவர்களுக்குத் தெரியவில்லை. காஃபின் கதவை மெல்லத் தட்டிய பணியாள் ஒருவன் “சார் சேர்விஸ் ஃபோய்” என்று அழைக்கவுமே இருவரும் சுய உணர்வு பெற்றனர். உல்லாச நகையுடன் சற்றுத் தள்ளி அமர்ந்தவன் “யெஸ் கம் இன்” என்றான்.

அவன் வந்து ஓடர் பண்ணிய உணவுகளை மேசையில் வைத்துவிட்டுச் செல்லவும் மீண்டும் நாற்காலியை இழுத்து அவளருகில் போட்டு அமர்ந்தான்.
வெட்கத்தில் அவள் முகம் சிவந்திருக்க அதைக் கண்டவன் மீண்டும் உன்மத்தம் கொண்டான்.
அவன் பார்வையின் பொருளை உணர்ந்தவள் அச்சச்சோ மீண்டுமா என்று தோன்றவும் அருகே முன்னேறிய அவனைத் தடுக்கும் பொருட்டு அவன் நெஞ்சில் தன் கையை வைத்தவள்,
“சா..மாமா… வேண்டாம்.. போதும்…” என்றாள்.
“போதாதே…” என்று இழுத்தான். தன் நெஞ்சில் இருந்த அவளது கையைப் பிடித்து முத்தம் கொடுத்தான்.
“மாமா..” என அவள் சிணுங்கவும்,
“என்னடி..” என்று தானும் சிணுக்கமாகக் கேட்டான்.
“ரொம்பவும் மோசம் நீங்க”
“அடியே, ஒரு கிஸ்தானே பண்ணன். இன்னும் எவ்வளவோ இருக்கு..”
“பிளீஸ்.. மாமா” என்று அவள் தவிப்புடன் கேட்கவும்
“ஓகே ஓகே.. அப்புறமாய் மீதியை வசூல் பண்ணிக்கிறன். இப்போ சாப்பிடுவோம்” என்றவன் அவளுக்கும் உணவைப் பரிமாறிவிட்டு பேசியபடியே தானும் சாப்பிட்டான். இடையிடையே அவளுக்கு ஊட்டிவிட்டதுடன் தானும் வாங்கி உண்டான்.

ஜோடிப் புறாக்கள் இரண்டும் உள்ளே தங்கள் காதலில் திளைத்திருக்க, அதனைப் பிரிப்பதற்கென இருவர் வெளியே திட்டம் போட்டுக்கொண்டு இருந்ததை அவர்கள் அறியவில்லை.

அந்த ஹோட்டலின் மிகப் பெரிய ஹாலில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரிய மேசைகளில் ஒன்றைச் சுற்றி நால்வர் அமர்ந்திருந்தனர். அவர்களில் பட்டு வேட்டி ஜிப்பாவும் கழுத்தில் தங்கச் சங்கிலி, கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரங்கள், தங்க நிற கைக்கடிகாரம் என ஆர்ப்பாட்டமாக அமர்ந்திருந்தார் ரவிச்சந்திரன். அடிக்கடி தன்னுடைய பெரிய மீசையை விரல்களால் தடவி விட்டபடி இருந்தார். இவர் வேதாச்சலம், ராஜலட்சுமி தம்பதியின் மருமகன்.

அத் தம்பதிக்கு விஜயன், அம்ருதா என இரு பிள்ளைகள். மூத்தவன் விஜயன் சுபத்திராவின் தந்தை ராஜ மாணிக்கத்தின் நிறுவனத்தில் சாதாரண மானேஜராக சேர்ந்தவர். தனது திறமையாலும் நேர்மையாலும் முன்னேறி அவரது நிறுவனத்தின் ஒட்டுமொத்த கிளைகளுக்கும் சிஈஓவாக பதவி வகித்தார். அவரது நற்பண்புகளும் உழைப்பின் மீது அவர் கொண்ட சிரத்தையும் பிடித்துப்போக வசதியைப் பற்றி எந்தக் கவலையுமின்றி தனது மருமகனாக்கிக் கொண்டார். அவரும் ராஜமாணிக்கத்தின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் தனது வாழ்வு முடியுமட்டும் சிறந்த மனிதராகவே வாழ்ந்தார். ராஜமாணிக்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் அவரது ஒரே வாரிசான சுபத்திராவின் பெயரில் இருந்தபோதும் அந்த சொத்தில் எந்தவித ஆசையுமின்றி தனது உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்.

அம்ருதாவும் தமையனைப் போன்று அன்பும் அமைதியும் நிறைந்தவர்தான். ஆனால், காலேஜில் படிக்கும் போதே ரவிச்சந்திரனைக் காதலித்து வீட்டிற்குத் தெரியாமலேயே திருமணமும் செய்து கொண்டார். ரவிச்சந்திரன் பேராசைக்காரர் என்றபோதும் ஒரே மகள் என்ற காரணத்தால் எல்லோரும் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

விஜயன் உயிருடன் இருக்கும் வரை அம்ருதாவின் மூலம் பெருந்தொகைப் பணத்தைக் கறந்து விடுவார் ரவிச்சந்திரன். தங்கை மீது அதிக பாசம் கொண்ட விஜயனும் அவர் கேட்கும்போதெல்லாம் தனது உழைப்பின் மூலம் வரும் வருமானத்தில் பெரும்பகுதியை அவருக்கு வழங்கி விடுவார். தான் உழைக்காவிட்டாலும் ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரவிச்சந்திரனும் மனைவி மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார்.

ஒரு கார் விபத்தில் ராஜமாணிக்கமும் விஜயனும் சிக்குண்டு இறக்கவும் அவரது உழைப்பின்றிய வருமானத்திலும் துண்டு விழுந்தது.

சுபத்திராவிடம் அவரது ஜம்பம் பலிக்கவில்லை. சுபத்திராவிற்கு அம்ருதா மீது பாசம் இருந்த போதும் ரவிச்சந்திரன் ரேஸ், சீட்டு என ஊதாரித்தனம் செய்வதை அறிந்ததால் அளவோடே கொடுத்தார். அவர்களது குடும்பச் செலவுக்கென தேவையான தொகையை மட்டும் வழங்குவார். இது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. அவரது மேலதிக தேவைகளுக்கு அது போதுமானதாய் இருக்கவில்லை. அதிலிருந்து சுலபமாகப் பணம் ஈட்டும் வழிகளை யோசித்தவர் ரியல் எஸ்டேட்டில் தரகு வேலைதான் சரி என முடிவெடுத்து அதில் இறங்கினார். அதிலும் ஓரளவு பணம் வந்தபோதும் அவரது எதிர்பார்ப்பு அதைவிட நூறு மடங்காக இருந்தது. இன்றும் ஒரு இடத்தை கைமாற்றி விடவே அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னர் தனஞ்சயன் லண்டனில் படித்துவிட்டு திரும்பி இருந்தான். இச் செய்தியை அறிந்தவர் மனைவியையும் அழைத்துக்கொண்டு அவனைக் காணச் சென்றார். அவனிடமிருந்தும் ஏதாவது கறந்துவிடலாம் என திட்டம் போட்டே அங்கே சென்றிருந்தார். அங்கே அவர் அறிந்த செய்தி அவருக்கு பலனளிக்கக் கூடியதாக இருந்தது. தனஞ்சயன் படிப்பை முடித்துவிட்டதால் நிறுவனத்தின் சகல பொறுப்புக்களையும் அவனிடமே சுபத்திரா ஒப்படைக்கப் போகின்றார் என அறிந்ததும் குறுகிய நேரத்திலேயே அவரது குறுக்கு மூளை பல திட்டங்களை தீட்டியது.

தனது திட்டத்தின் ஆரம்ப கட்டமாக வீட்டிற்கு வந்ததும் பெங்களூரில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த அவர்களது ஒரே மகளான மிருணாளினியை உடனேயே புறப்பட்டு வருமாறு அழைத்தார். தாயின் அழகையும் தந்தையின் குணத்தையும் கொண்டு பிறந்திருந்த மிருணாளினியும் இறுதிப் பரீட்சை என்பதால் இன்னும் இரண்டு மாதங்களில் வந்துவிடுவதாகக் கூறினாள்.

‘இதோ நாளை அவள் வரவிருக்கும் நிலையில் இவன் எவளோ ஒருத்தியை இழுத்து கொண்டு திரியிறானே. யாராக இருக்கும்? அதுவும் தனி காஃபின் புக் பண்ணி உள்ளே போயிருக்கிறான். ம்கூம்.. விடக்கூடாது. எவ்வளவு சொத்து… இதையெல்லாம் விள்ளாமல் விரியாமல் எவளும் ஆள்வதா? நாளை மிருணா வந்ததும் முதல் வேலையே இவர்களைப் பிரிப்பது தான்' எனத் திட்டம் தீட்டினார்.

அவரைத் தவிர இன்னுமொருவரும் இவர்களைக் கண்டதும் பொறாமையும் எரிச்சலும் உண்டாக உறுத்து விழித்துக் கொண்டிருந்தார்.

அவன் பெயர் ரகு. தனத்தின் வீட்டிற்கு பக்கத்து வீட்டுப் பையன். தனத்தின் கணவர் மூலம் தூரத்து உறவு. ஆரம்பத்தில் இவனுக்கு சஞ்யுக்தா மீது ஒரு கண் இருந்தது. ஆனால் அவளோ இவனை தூசாகவே மதித்தாள். தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டும் அவனுடன் பேசுவாள். மனசை ஓரளவு சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தபோது வந்து சேர்ந்தவள்தான் நிஷாந்தினி. இவளும் ஓரளவு அழகாய் தானே இருக்கிறாள் என நினைத்தவன் தற்போது நிஷாந்தினியை சுற்றி வருகின்றான்.

‘நானும் எத்தனை நாட்கள் திட்டம் போட்டு இவள் பின்னால் சுற்றுகின்றேன். என்னைக் கண்டுக்காதவள்.. இன்று காரைக் கண்டதும் பல்லை இழித்துக் கொண்டு அவன் பின்னால் போகின்றாள். விடமாட்டேன்.. என்ன செய்யலாம்?' என்று யோசித்தவனுக்கு சட்டென்று தோன்றியது சஞ்யுக்தா தான்.

'ஆமாம் அவள் தான் சரி. இந்த விசயத்தை அவள் காதில் போட்டு விட்டால் சரி. அவளுக்கு நிஷாந்தினி சாதாரணமாக சிரித்தாலே பொறுக்காது. அவள் ஒரு பணக்காரனுடன் ஊர் சுத்துறாள் என்று தெரிந்தால் போதும்.. கதம்..கதம்…' என்றவன் உடனடியாக புறப்பட்டான் சஞ்யுக்தாவைக் காண.
 
Top