எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 36

S.Theeba

Moderator
வரம் 36

கண்களைத் திறந்த வர்ஷனாவுக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. தலை மிகவும் வலித்தது. ஏன் என் தலைக்குள் ஒருவித கிறுகிறுப்பாக இருக்கின்றது என்று சுற்றும்முற்றும் பார்த்தாள். இருக்குமிடம் புரியவில்லை. தலைவலியால் எதையும் சிந்திக்கவும் முடியவில்லை. கண்களை மூடித் தன்னை ஆசுவாசப்படுத்தியவள் மீண்டும் கண்களைத் திறந்தாள்.
'ஐயோ கடவுளே, என் யதுவுக்குத் தீக்காயம்பட்டு ஹொஸ்பிடலில் இருப்பதாகக் கூறினார்களே. நான் யதுவிடம் போகாமல் இங்கே ஏன் வந்தேன்?' என்று புலம்பியவள், என்ன நடந்தது என்று யோசித்துப் பார்த்தாள். 'காரில் வந்து கொண்டிருக்கும்போது இடையில் யாரோ ஏறினார்கள். எதையோ முகத்தில் ஸ்பிறே பண்ணினார்கள். அப்புறம்... நினைவு எதுவும் வரவில்லை. அப்படியென்றால் என்னை மயக்கமாக்கி இங்கே அழைத்து சீச்சி கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏன்...? யார்...?'
இந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் தெரியவில்லை.
'அது மட்டுமா... என் யதுவுக்கு உண்மையில் தீக்காயம் பட்டிருக்குமா? அது பொய்யா... இல்லையே வாட்ச்மேன் அண்ணாகூடச் சொன்னாரே. ஃபாக்டரியில் ஃபயர் ஆக்ஸிடன்ட் நடந்திருக்கு என்று... ஐயோ யது... நீங்க எங்கே இருக்கிங்க?'


கை கால்களை அசைக்கவும் முடியவில்லை. கையையும் காலையும் கயிற்றால் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள்.
எப்படி இங்கேயிருந்து செல்வதென யோசித்தாள்.


மெல்ல விழிகளைச் சுழற்றி அந்த அறையை நோட்டம் பார்த்தாள். மிகச் சிறிய அறை. ஒரேயொரு கதவு மட்டும் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. சிறிய கட்டில். அதிலேயே வர்ஷனாவைக் கட்டிப் போட்டிருந்தார்கள். ஒரு மூலையில் முக்காலி ஒன்று போடப்பட்டு அதன் மேல் மண்பானையும் அதனை மூடி ஒரு டம்ளரும் இருந்தது. அந்த அறையில் வேறு எந்தப் பொருளும் இல்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கைகால்கள் கட்டாமல் இருந்தால்கூட அந்தக் கதவை எப்படியாவது திறக்க முயற்சி செய்யலாம். அதற்கும் வழியில்லை. இறுதியாகச் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். கடத்தியவர்கள் எப்படியாவது உள்ளே வருவார்கள். அதன்பிறகு பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தவள் கண்களை மூடி என் யது எப்படியாவது நலமாயிருக்கணும் இறைவா என்று வேண்டிக் கொண்டாள்.


சில மணி நேரத்தில் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டுக் கண்களை மெல்லத் திறந்து பார்த்தாள். இரு தடியன்கள் வாயிலில் காவலுக்கு நிற்க இவள் இருந்த கட்டிலை நோக்கி வந்தான் ஒருவன். பார்ப்பதற்கு அவனும் ரௌடி போலவே தோற்றமளித்தான். இவள் விழித்திருப்பதைக் கண்டதும்,
"என்ன கண்ணு... முழிப்பு வந்திடுச்சா...?" என்று இழித்துக் கொண்டே கேட்டான்.
கண்ணைப் பறிக்கும் அளவுக்கு மஞ்சள் நிறத்தில் ஜிப்பாவும் சிவப்பு நிறத்தில் லுங்கியும் அணிந்திருந்தான். தன் கழுத்தில் போட்டிருந்த விரல் கடை அளவுள்ள தங்கச் சங்கிலி தெரியுமாறு ஜிப்பாவின் பட்டனைத் திறந்து விட்டிருந்தான். அவன் சிரிக்கும்போது வெற்றிலையால் காவி படிந்திருந்த பற்களும் முறுக்கு மீசையும். அவனைப் பார்க்கவே மனதில் பயம் உண்டானது. அந்தப் பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டே, " யார் நீ? என்னை எதுக்காகக் கடத்தி வந்தாய்?"
"ஹி ஹி ஹி... என்னம்மா இது கூடப் புரியலையா...? நீ இப்போது எனக்குச் சொந்தமான உடமை."
"என்ன உளறுகின்றாய்?"
"நானா உளறுகின்றேன். இதோ இப்ப தெரிஞ்சிடும் கண்ணு."
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்தவளைப் பார்த்ததும் வர்ஷனாவுக்கு அதிர்ச்சியானது.ஆம், அங்கே ஒரு ஆணும் பெண்ணும் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் பெண் ஹரிணி. இவள் எங்கே இங்கே? என்று சிந்தித்தவளுக்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.


"என்ன வர்ஷனா..., நான் ஏன் இங்கே வந்தேன் என்று யோசிக்கின்றாயா? நான்தான் உன்னை இங்கே கொண்டுவரச் செய்தேன்."
"ஏன்...?"
"இது என்ன கேள்வி... எதுக்காக உன்னைக் கடத்துவார்கள். எங்கள் காதல் வாழ்க்கையில் நீ இடைஞ்சலாக இருக்கின்றாய். அதுதான் உன்னை அகற்றுகின்றோம்."
"யார் காதல் வாழ்க்கைக்கு நான் இடைஞ்சலாக இருக்கின்றேன். புரியவில்லை..."
"எனக்கும் நந்துவுக்கும் இடையில்தான்"
"அவர்தான் உன்னை வேண்டாம் என்று சொல்லி டிவோர்ஸ் எடுத்தாச்சே"
"அது அப்போது. இன்று நிலைமையே வேறு. ஒருநாள் உனக்குச் சொன்னேன் நினைவிருக்கா...? நந்துவால் என்னை மறக்க முடியாது என்று. அதுதான் உண்மை. என்னை மறக்க முடியாமல் இப்போதும் என் காலடியில்தான் நந்து இருக்கான். உன்னை எப்படித் துரத்துவது என்று தெரியாமல் இருந்தான். அவனும் நானுமாகச் சேர்ந்தே திட்டமிட்டு உன்னைக் கடத்திட்டோம். நீ காணாமல் போய்விட்டதாகவோ அல்லது எவன் கூடவாவது ஓடிப் போய்விட்டாய் என்றோ சொல்லி இந்தக் கேஸை முடிச்சிடுவம். அப்புறம் நந்துவும் நானும் சந்தோஷமாய் இருப்போம்."
"பொய்... எதற்கு இந்தப் பொய். நீ சொல்வதை எல்லாம் நம்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை. என் யதுவைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் என் மீது கொண்டுள்ள காதலிலும் எனக்கு முழுமையான நம்பிக்கையிருக்கு. ஒருபோதும் என்னை விட்டு உன்னுடன் வாழ அவர் விரும்ப மாட்டார். அவர் இப்படிக் கடத்தல் வேலையெல்லாம் செய்யும் அளவுக்கு இறங்க மாட்டார். "
"நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. நீதான் திரும்பவும் வரமுடியாத இடத்திற்குப் போகப் போகின்றாயே. புரியவில்லையா...? உன்னை இவனுக்கு விற்று விட்டேன்."


அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள். அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. அவனது அருவருக்கத்தக்க இளிப்பும் அதன் உண்மையை உணர்த்தியது.


"ஓகே ராசு, நான் சொன்னபடி தந்திட்டேன். இனிமேல் இவள் உன் பொறுப்பு." என்று அங்கிருந்தவனிடம் சொன்னவள் தன்னுடன் கூடவந்தவனை அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டாள்.


"கண்ணு... இப்போது புரிஞ்சுதா. இனி அடம்பிடிக்காம இருக்கணும். இன்று நைட்டு மட்டும்தான் இங்கே. இந்த மாமனை சந்தோசப்படுத்து. . ஹி ஹி.. நாளை மும்பை போய்விடுவோம். அங்கே தினம்தினம் ஒவ்வொருத்தனா சந்தோஷப்படுத்த வேண்டியிருக்கும். அதனால் இன்று என்னை சந்தோஷப்படுத்து." என்றபடி அவளது கன்னத்தை வருடினான். அவன் தொடுகையில் அருவருத்துப் போனவள்
"சீ கையை எடுடா... என் யது இங்கே வந்தால் நீ தொலைந்தாய்."
"இங்கே யாரடி வருவது. இந்த வீடு எங்கேயிருக்குது தெரியுமா? இந்த இடத்தைத் தேடிப் பிடித்து யாரும் வரமாட்டார்கள்." என்றான். பயத்தில் அவளுக்கு நடுக்கமே ஏற்பட்டது.


அவளது நல்ல நேரம் போலும் அவனது அலைபேசி அடிக்கவும் அதனை எடுத்துப் பேசினான். முடிந்ததும்,
"நான் இப்போ வெளியில் போகணும். பகலில் நம்ம விளையாட்டு வேணாம். நைட்டுக்கு வச்சுக்குவம். இந்த மாமாவைக் குஷிப்படுத்த ரெடியா இரு கண்ணு..." என்றுவிட்டு அவள் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றான். அவனுடன் வந்த இருவரில் ஒருவர் முன்னே வந்து மீண்டும் அவள் முகத்தில் மயக்க மருந்தைத் தெளித்தான்.


இங்கே யதுநந்தனோ என்ன நடந்தது என்று திகைத்துப்போய் இருந்தது கொஞ்ச நேரம் மட்டுமே. ஏதோ யோசனை தோன்றவும் வாட்ச்மேனிடம் சென்றான். காலையில் வந்த கார் பற்றியும் அதன் டிரைவரின் அங்க அடையாளங்கள் பற்றியும் விவரம் கேட்டு அறிந்தவன் அவர் குறித்து வைத்திருந்த காரின் இலக்கத்தையும் வேண்டினான்.


சிவானந்தை அழைத்து உடனேயே வீட்டுக்கு வருமாறு அழைத்தான். அவன் வந்ததும் விவரத்தைச் சொன்னான் என்ன செய்யலாம் என இருவரும் ஆலோசனை நடத்தினர். இது கண்டிப்பாக ஹரிணியின் வேலையாகத்தான் இருக்கும் என்றான் சிவானந்த். ஆனால், ஆதாரமில்லாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது? அதிலும் வர்ஷனாவைக் காணவில்லை என்ற விசயம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


எதற்கும் தன்னைக் கடத்தி வைத்திருந்த இடத்திற்குச் சென்று பார்ப்போம் என்று சிவானந்த் கூறவும் அங்கே சென்றார்கள். அங்கே எந்தவிதத் தடயமும் இல்லை. அவனைக் கடத்திய இருவரும் இன்னும் ஜெயிலில் இருக்கின்றார்கள் என்பதையும் அவன் உறுதிப்படுத்திக் கொண்டான்.


இருவருக்கும் இருந்த செல்வாக்கும் உயர் அதிகாரிகளின் நட்பும் விஷயத்தை வெளியில் கசியவிடாது ஹரிணியைத் தேடுவதற்கும் அந்தக் காரையும் அதன் உரிமையாளரையும் தேடவும் உதவின. ஹரிணி தற்போது இருக்குமிடத்தை அறிந்துகொண்டு அவளிடம் சென்றான் யதுநந்தன். சிவானந்தை வெளியில் சற்றுத் தூரத்தில் நிற்குமாறு கூறிச் சென்றான்.


ஆனால் வர்ஷனா எங்கே என்று தனக்குத் தெரியாது என ஹரிணி அடித்துச் சொல்லிவிட்டாள். மிரட்டிப் பார்த்தாலும் பலன் இல்லை.
இறுதியில் தான் நினைத்து வந்த திட்டத்தைச் செயற்படுத்தினான். கையோடு கொண்டு வந்திருந்த ப்ரீப்கேஸைத் திறந்து காட்டினான். அது நிறைய ஆயிரம் ரூபாய் தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டதும் அவள் கண்கள் ஆசையில் பளபளத்தன. அவளின் பேராசையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினான். "எனக்கு வர்ஷனாவைப் பிடிக்கவில்லை. இலக்கியாவுக்காகத் தான் கல்யாணம் செய்தேன். பட், அவளுடன் சந்தோஷமாக வாழ என்னால் முடியவில்லை. அவளை எப்படியாவது விரட்டிவிடவே யோசித்திருந்தேன். அதற்கு வழி தெரியாமல் தான் இவ்வளவு நாளாய் தவித்தேன். இன்று அவள் காணாமல் போனதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பட், அவள் திரும்பி வந்திடுவாளோ என்றும் பயமாயிருக்கின்றது. அதுதான் அவள் எங்கே சென்றாள் என்று தெரிந்தால் நிம்மதிதானே. கடத்தல் என்றால் இந்தப் பணத்தைக் கொடுத்து கண்காணாத தேசத்துக்குக் கொண்டுபோகச் சொல்லலாம் என்றுதான் வந்தேன். எதுவும் புரியவில்லை." என்றான். ஆரம்பத்தில் அவன் பேச்சை நம்ப அவள் தயாராயில்லை.
"இல்லையே... நீ அவளைக் காதலிப்பதாகவும், உன் காதல் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவள் சொன்னாளே. உனக்கு ஒன்று என்றதும் துடித்துக் கொண்டு ஓடி வந்தாளே. நீ சொல்வது நம்பும்படியாக இல்லையே..." என்றாள் சந்தேகமாக.


அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் உயிர் வரை சென்றதை அவள் அறியவில்லை. ஆனாலும் அவள் சொல்வதில் இருந்தே அவளின் வேலைதான் என்பது தெளிவாகத் தெரியவும் "அவள் அப்படி நினைத்திருக்கலாம். பட், எனக்கு அவள் மீது துளியும் விருப்பமில்லை. ஓகே.. போனது போகட்டும். அவள் திரும்பி வராத வரைக்கும் சந்தோஷம்" என்றவன் பணத்தை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானான். பணத்தைக் கண்டதும் பேராசையில் துடித்த அவள் "ஓகே ஓகே.. நீ சொல்வதை நம்புகின்றேன். அந்தப் பணத்தைத் தந்துவிட்டுப் போ. உரியவர்களுக்கு நான் கொடுக்கிறேன்."
"உரியவர்கள் என்றால்..."
அவள் நடந்ததை அவனுக்குக் கூறினாள். தானே ஆள்வைத்துக் கடத்தியதாகவும் அவளை மும்பையைச் சேர்ந்த ஒருத்தனுக்கு விற்றுவிட்டதாகவும் கூறினாள்.


உள்ளே கனன்ற கொலை வெறியைப் பெரும்பாடு பட்டு அடக்கியவன், அவனின் விவரங்களைக் கேட்டான். அவனைப் பற்றித் தனக்கு அவ்வளவாகத் தெரியாது என்றும் தன் நண்பன் ராஜேஸ்தான் அவனை அறிமுகப்படுத்தியதாகவும் கூறினாள். ராஜேஷ் பற்றிய சில விவரங்களையும் கூறினாள்.
சரியென்று அவளிடம் பணத்தைக் கொடுத்தவன் வெளியில் வந்தான். காருக்குள் மறைந்திருந்த சிவானந்திடம் "ஓகேயா மச்சி..." எனவும் அவனும் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.


இதுவரை நேரமும் நடந்தவற்றை தனது அலைபேசி மூலம் கேட்டுக் கொண்டிருந்த சிவானந்த் உடனேயே அந்த ராஜேஷிடம் ஆட்களை அனுப்பி விட்டான். ராஜேஸ்தான் காரில் வர்ஷனாவை அழைத்துச் சென்றது என்பதும் தெரிந்தது. அவன் மூலம் அந்த ராசுவின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டனர்.
அரைமணி நேரத்திலேயே அந்த வீட்டை அடைந்தனர்.


தங்களுடன் சீராளனின் நண்பரான கமிஷனரையும் அவரின் நம்பிக்கைக்குரிய காவலர்கள் இருவரையும் அழைத்துச் சென்றனர்.


அந்த வீட்டில் கட்டிலோடு கட்டப்பட்டு மயக்கத்தில் கிடந்த வர்ஷனாவைக் காணவும் பதறிவிட்டான். வெளியில் சென்றிருந்த அந்த ராசுவை அடியாட்கள் மூலம் வரவைத்தனர். யதுநந்தன் ராசுவையும் அந்த இருவரையும் துவைத்து எடுத்துவிட்டான். அவன் கோபம் தீருமட்டும் அடிக்க விட்ட கமிஷனர், இனிமேல் அடித்தால் தாங்க மாட்டார்கள் என்பதைக் கண்டதும்
"விடுங்கள் யதுநந்தன். இவனை இனிமேல் சட்டம் பார்த்துக் கொள்ளும். இவன் மீது ஏற்கனவே நிறையக் கடத்தல் வழக்கும் இரண்டு கொலை வழக்கும் இருக்கு. இவனை டிபார்ட்மெண்டே தேடிச்சு. இவ்வளவு நாளாய் தலைமறைவாய் இருந்தவன். இன்று வசமாக மாட்டிட்டான். இனி ஆயுசுக்கும் வெளியில் வராதபடிப் பண்ணிடுறேன்" என்றார்.


மயக்கத்தில் இருந்த வர்ஷனாவை பூப்போலத் தூக்கி வந்தவன் சிவானந்தைக் காரை ஓட்டி வருமாறு கூறிவிட்டு பின்னிருக்கையில் அமர்ந்தான். தன் மடியில் வர்ஷனாவின் தலையை வைத்து ஆதூரத்தோடு தடவி விட்டான்.
திடீரென நினைவு வந்தவனாக "மச்சி அந்தக் ஹரிணியை..." என்று ஏதோ சொல்ல வந்தவனை இடைமறித்த சிவானந்த்,
"மச்சி, அவள் கதையை இனி நான் பார்த்துக்கிறேன். நீ வர்ஷனாவைக் கவனித்தால் போதும்." என்றான்.
 
Top