எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வரமாக நீ 37

S.Theeba

Moderator
வரம் 37

கண்களை மெதுவாகத் திறந்தாள் வர்ஷனா. அவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்ததால் தலை வெகுவாகக் கனத்தது. தலையை அழுத்திப் பிடித்தபடி "அம்மா..." என்று வலியில் முனகினாள்.
"அண்ணி... என்ன செய்யுது... இருங்க அண்ணாவைக் கூப்பிடுறேன்." என்று கூறியபடித் தன் அலைபேசியில் தமையனுக்கு உடனேயே தகவலைத் தெரிவித்தாள் பானுமதி.அப்போதுதான் பானுமதி தன் அருகில் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள்.
"பானுக்கா, நீங்க எப்படி இங்கே...?" என்று கேட்டுவிட்டுத்தான்
சுற்றி நோட்டமிட்டாள். அந்தக் கடத்தல்காரர்கள் யாருமே அங்கு இல்லை. அப்பாடா என்று பெருமூச்சுடன் மீண்டும் நோட்டமிட்டாள். தான்தங்கள் அறையில் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.


நான் எப்படி இங்கே? என்று யோசித்தவளுக்குப் புரியவில்லை.
"பானுக்கா... நான் எப்படி இங்கே வந்தேன்? யார் என்னைக் காப்பாற்றியது?"
"அதுவா அண்ணி... அண்ணாதான் கண்டுபிடிச்சார்.." என்று அவள் சொல்லத் தொடங்கும்போதே அறைக்குள் நுழைந்தான் யதுநந்தன். அவன் பின்னாலேயே ஈஸ்வரும் சந்திரமதியும் இலக்கியாவும் வந்தனர். அருகில் வந்து அவள் தலையைத் தடவிவிட்ட சந்திரமதி "வர்ஷாம்மா இப்போ எப்படி இருக்கு?"
"எனக்கு எதுவுமில்லை அத்தை. மயக்க மருந்து தெளித்ததாலோ என்னவோ தலை லேசா வலிக்குது. அவ்வளவுதான்." என்றாள்.
கட்டிலில் ஏறி அவள் அருகில் சென்ற இலக்கியா
"அம்மா, வலிக்குதா...?" என்று கேட்டபடித் தன் பிஞ்சு விரல்களால் அவள் நெற்றியை வருடி விட்டாள். அந்த வருடலின் இதத்தில் மெய் மறந்தவள் அவளை அணைத்துக் கன்னங்களில் முத்தமிட்டாள்.
"என் லக்கிக் குட்டிய கிஸ் பண்ணியதும் வலி போச்சுதே..." என்றாள்.


அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களின் குடும்ப டாக்டர் வந்தார். அவளைப் பரிசோதித்தவர் அவளுக்கு அந்த மயக்க மருந்தின் வீரியத்தால்தான் தலைவலி ஏற்பட்டிருக்கிறது என்றும் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறிவிட்டு, தலைவலிக்கென ஒரு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். எந்தவித பிரச்சினையும் தற்போது இல்லை. சூடாக ஏதாவது கொடுக்க சொல்லிவிட்டுச் சென்றார். அவருடனேயே யதுநந்தனும் வெளியே சென்று விட்டான்.


சந்திரமதி உடனே சென்று அவளுக்கு ஹார்லிக்ஸ் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அவள் எழுந்திருந்து குடித்ததும் காலி கப்பை வாங்கியவர் "ஓகேமா நீ படுத்து ரெஸ்ட் எடு. டின்னரை நான் ரூமுக்கே கொண்டுவந்து தருகிறேன்" என்றவர் ஈஸ்வரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். பானுமதியும்
"அண்ணி ஏதாவது வேணும்னா என்னைக் கூப்பிடுங்க. இப்போ ரெஸ்ட் எடுங்க" என்றுவிட்டு இலக்கியாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.


வீட்டினரின் பாசமும் பரிவும் அவள் மனதுக்கு இதத்தைத் தந்தது. ஆனால், இவ்வளவு நேரத்துக்கு யது என்னிடம் எதுவும் பேசவில்லையே. என் மேல் ஏதாவது கோபமா? என்று யோசித்தபடிப் படுத்திருந்தாள்.


கதவுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்ததால் பானுமதி வெளியேற யதுநந்தன் உள்ளே வந்ததையோ கதவைச் சாத்திவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்று அவளையே பார்த்து நின்றதையோ கவனிக்கவில்லை. அவன் டாக்டரை வழியனுப்பி விட்டு அவர் குறித்துக் கொடுத்த மருந்துகளை வாங்க ஏற்பாடு செய்து விட்டு உடனேயே வந்திருந்தான்.


குறுகுறுப்புத் தோன்றவும் வாசலைத் திரும்பிப் பார்த்தாள். அவனைக் கண்டதும் அவள் சோர்ந்திருந்த முகம் பூவாய் மலர்ந்தது. அவள் பார்ப்பதைக் கண்டதும் நிதானமாகக் காலடி எடுத்து வைத்து அவள் அருகில் வந்தவன் "ஷனா" என்று மென்மையாக அழைத்தான். அவன் அழைப்பைக் கேட்டதும் துள்ளி எழுந்தாள்.
"மெதுவாம்மா... ரொம்ப சோர்ந்து போய் இருக்காய்." என்றவன் அவளைக் கட்டிலில் அமரவைத்துத் தானும் அருகில் அமர்ந்தான்.


"யது.. சாரி.."
"நீ எதுக்கும்மா என்கிட்ட சாரி கேட்குற?"
"என்னால் உங்களுக்கு எவ்வளவு அலைச்சல்... கஸ்ரம்..."
"ஷனா... அலைச்சலா? கஷ்டமா? அதுவும் உன்னால்... என்னால்தானே உனக்கு இவ்வளவு கஷ்டமும். கடைசியில் இந்த ஹரிணி இவ்வளவு தூரத்துக்குப் போவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உன்னைக் கடத்தியதுமில்லாமல் விற்கவேறு செய்திருக்காளே..."
அவளை இழுத்து இறுக அணைத்தான். அவனிடம் இருந்து அவளைப் பிரிப்பதென்பது நடவாது காரியம் என்பதை உணர்த்தும் வகையில் அந்த அணைப்பு இறுகியிருந்தது.


மெல்லக் குனிந்து அவள் உச்சியில் மென்மையாக முத்தமிட்டான். உடனேயே அவளை விடுவித்தவன் கைகளைப் பின்னால் ஊன்றி கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்து விட்டான்.
"உன்னைக் காணலை என்றதும் நான் தவிச்ச தவிப்பு இந்த ஜென்மத்துக்கும் போதும்... உன் காதலையும் என் காதலையும் உணரத்தான் இப்படி நடந்திருக்கு போல... இந்த சம்பவம் மண்டையில் ஆணியால் அடிச்ச மாதிரி உன் காதலை எனக்கு உணர்த்தியிருக்கு. நான் உன்னை எந்தளவுக்கு காதலிக்கிறேன் என்பதையும் எனக்குப் புரிய வைத்ததும் இந்தப் பிரிவு தான்." என்றவன் நிமிர்ந்து அமர்ந்து,
"இங்க வா" என கைகளை விரித்துக் கூப்பிட்டான். வெட்கத்தில் தடுமாறிய போதும் அந்தக் கைகளில் தஞ்சம் புகுவதற்கு அவள் தயங்கவில்லை. அவளை மென்மையாக அணைத்தவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான். அவளைக் கைவளைவிலே வைத்தபடி மேலே பேசினான்.


"என்னைப் பற்றி நீ முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் ஷனாம்மா..." என்றவன் தன் கடந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவளிடம் கூறினான். ஹரிணியைத் தான் முதன் முதலாகச் சந்தித்த நாளிலிருந்து நடந்தது அனைத்தையும் கூறினான்.


"ஹரிணியின் இந்த நடவடிக்கைகள்தான் எனக்கு பெண்கள் மீதே வெறுப்பை ஏற்படுத்தியது. எல்லாப் பெண்களும் அப்படித் தான் என்று தோன்றியது. பெண்களையே மதிக்காத குணம் என்னிடம் வளர்ந்தது.


நான் லக்கிக் குட்டியோட இங்கு வந்த கொஞ்ச நாளிலேயே அம்மாவும் நெருங்கிய சொந்தங்களும் இன்னுமொரு கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால், இனி என் வாழ்வில் எந்தப் பெண்ணுக்கும் இடமில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்... ஆனால், எல்லாம் உன்னை முதன்முதலாக சிவாவின் ஆபிஸில் பார்க்கும் வரைதான்."
"என்னது... அப்போதேவா...?"
"ம்ம்... அன்று உன்னைப் பார்த்த நேரம் முதல் அடிக்கடி உன் நினைவு என்னை வந்து வதைக்கும்..."
"எனக்கும்..."
"ஷனாம்மா நீ சொல்வது உண்மையா...? அப்போதே என்னை உனக்கும் பிடிக்குமா?"
"யது... உண்மையைச் சொன்னால் உங்களைக் கண்ட அந்த நிமிடமே நான் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இன்று வரை என் காதலில் எந்த மாற்றமுமில்லை. மாறப் போவதுமில்லை."
"தாங்ஸ் ஷனா... இந்தக் காதலைப் புரிந்து கொள்ளாமல் இத்தனை நாளும் நான் முட்டாளாக இருந்திருக்கிறேனே."
"ஆமா எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்?" என்று அவள் கேட்கவும்
அவன் நடந்தவற்றைச் சொன்னான்.
ஏற்கனவே கல்யாணத்தின்போதும் சிவானந்தைக் கடத்தியதையும் கூறினான்.


"உன்னைக் காணவில்லை எனவும் கொஞ்ச நேரத்திற்கு என் உயிர் என்னிடமேயில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் உலகமே இருட்டாகி விட்டது. அப்புறம் ஏதோ ஒரு நம்பிக்கை. உன்னை என்னிடமிருந்து யாராலும் பிரித்து விட முடியாது என்ற தைரியம் தான் மேற்கொண்டு என்னை செயற்பட வைத்ததுமா."
"யது... அவ... ஹரிணி..."
"ஹரிணியைக் கவனிக்கும் பொறுப்பை சிவானந்த்தான் பார்த்துக்கிட்டான். என்ன செய்தான்னு தெரியல. நேர்ல் வந்து சொல்றேன்னு சொன்னான்." என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைச் சென்று திறந்தான். வெளியே சிவானந்த் நின்றுகொண்டிருந்தான்.
"வாடா மச்சி... உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்."
"மச்சி, தனியா இருக்கும்போது ரொமான்ஸ் பண்ணுறத விட்டுட்டு என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறாயே. சுத்த வேஸ்ட்" என்று அவனது காதுக்குள் ரகசியம் பேசினான்.
"அதெல்லாம் நாங்க அப்புறம் பக்காவா ரொமான்ஸ் பண்ணுவோம்ல." என்று அவனும் உல்லாச சிரிப்புடன் கூறினான்.


"வாங்க சேர்" என்று எழுந்து நின்று வரவேற்றாள் வர்ஷனா.
"இந்த சேரை நீ விடுறதாய் இல்லையா? எத்தனை தடவை சொல்லி விட்டேன் என்னை பேர் சொல்லி கூப்பிடு என்று. கேட்கமாட்டியா? இப்போ நீ என் நந்தனின் சரிபாதி. அவனுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு"
"உங்களை எப்படி பேர் சொல்லி கூப்பிட முடியும். வேணும்னா அண்ணா என்று கூப்பிடவா?"
"தாராளமாய் கூப்பிடம்மா. எனக்கும் ஒரு தங்கச்சி இல்லை என்று நான் ரொம்ப நாளாய் கவலைப்பட்டிருக்கன். எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா என் நந்தனுக்கு கட்டிக் கொடுத்திருக்கலாம் என்று நினைப்பன். இப்போ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் தங்கச்சியைத்தான் அவன் கட்டியிருக்கான்."
"ஓகே அண்ணா, இருங்க உங்களுக்கு டீ போட்டு எடுத்து வாறன்"
"ஐயோ வர்ஷா நீ உட்காரு. நீ டயர்டா இருப்ப. அப்புறம் இந்த நந்தன் ஏண்டா என் பொண்டாட்டிய வேலை வாங்குற என்று என்னைக் கொண்ணுடுவான். இந்த டைமில் டீ குடிச்சா டின்னர் சாப்பிட முடியாமலும் போயிடும். அதிலும் இங்கு வந்துட்டு சந்திராம்மாட சாப்பாட்டை சாப்பிடாம இந்த சிவா போறதாவது" என்றான். அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தனர் யதுநந்தனும் சிவானந்தும். வர்ஷனா கட்டிலில் உட்கார்ந்தாள்.


"ஆமா மச்சி அந்த ஹரிணியை சும்மா விட்டியா?"
"அதெப்படிடா சும்மா விடுவேன். அவளுடைய டீரெயில் எல்லாம் ஏற்கனவே கலெக்ட் பண்ணி வச்சிருந்தேன். அவள் லண்டன் சிட்டிசன். ரூறிஸ்ற் விசாவில் தான் இந்தியா வந்திருக்காள். விசா முடிஞ்சும் அவள் இங்க தங்கியிருக்காள். இங்க வந்தும் அவள் திருந்தல. ராஜேஷ், அதான் பொலிஸ் அரெஸ்ட் பண்ணிச்சே. அவன்கூடத்தான் ஒன்றாய் இருந்திருக்காள். அவன் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவன். நீ அவளிடம் பெட்டியோட பணத்தைக் கொடுத்திட்டு வந்திட்ட. நாம் அந்தப் பக்கம் போனதும் அவள் வீட்டை பொலிஸ் ரவுண்ட் அப் பண்ணிற்று. அவ்வளவு பணத்தோட அவள் வீட்டில் கொஞ்சமா போதைப் பொருள்களும் இருந்திருக்கு. ஆதாரத்தோடு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கேஸ் நடந்தாலும் ஸ்ட்ரோங் ரீசன் இருப்பதால் ஜெயில் தான். அதுவும் லண்டனுக்கு நாடு கடத்திடுவாங்க. இனி ஆயுசுக்கும் அவ இந்தியாப் பக்கம் வரமுடியாது. அவள் தொல்லை இனி இல்லை." என்றான்.


வர்ஷனா எதுவும் சொல்லவில்லை. எனினும் அவள் மீது கொஞ்சமாக இரக்கம் தோன்றியது.
'அவள் உண்மையிலேயே தன் மகள் மீது பாசம் கொண்டிருக்கக் கூடாதா? ஏன் அவள் தன் வாழ்க்கையைத் தானே அழித்தாள்.' என்று பரிதாபப்பட்டாள்.
"அவளுக்குக் காசுதான் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் கேட்டிருக்கலாம். ஆனால், கடத்தல்... சீ... எப்படியோ போய் தொலையட்டும்." என்றான் யதுநந்தன்.


கையில் உணவுத் தட்டோடு உள்ளே வந்த சந்திரமதி "பேசியது போதும் நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடப் போங்க. நான் வர்ஷாவுக்கு சாப்பாடு கொடுத்திட்டு வாறேன்." என்றார். அவருடன் கூடவே இலக்கியாவும் வந்திருந்தாள்.
"குட்டிம்மா... நீ மாமா கூட வா... நாம சேர்ந்து சாப்பிடுவோம்" என்று அழைத்தான் சிவானந்த்.
"ம்கூம்.. நான் அம்மாகூட" என்றாள் குழந்தை.
"பானுவும் இவளை சாப்பிடக் கூப்பிட்டாள். அம்மா கூடத்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து இங்கே வந்திட்டாள்." என்றார் சந்திரமதி.


ஆண்கள் இருவரும் கீழே சாப்பிடச் செல்லவும் வர்ஷனா உணவை வாங்கி இலக்கியாவுக்கு ஊட்டியபடி தானும் சாப்பிட்டாள். சந்திரமதியை அவர்களுக்கு உணவு பரிமாற அனுப்பி விட்டாள். உண்டபின் அவளுடன் கதை பேசியபடி மடியிலேயே உறங்கி விட்டாள் இலக்கியா.
 
Top