எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 1

S.Theeba

Moderator
மதிய வேளையிலும் அந்த அறையை இருள் ஆட்சி செய்திருந்தது. சூரியனின் பொற்கதிர்கள் உட்புகாதபடி ஜன்னல்கள் இறுக மூடி திரை போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் இருந்தவளுக்கு வெளிச்சத்துடன் அப்படி என்ன கோபமோ? இல்லை அவளுக்கு கோபம் தன்மீதே… தன் இயலாமை மீதே… தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க முடியாத தன் மனதின் மீதே கோபம். அந்த ஆற்றாமையைத் தீர்க்கவே கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் இறுக மூடி அடைந்து கிடக்கின்றாள்.

கண்கள் தன்னை மீறி கண்ணீரை சொரிந்த படி இருக்க அடிக்கடி அதனைப் புறங்கையால் துடைத்தபடி இருந்தாள் அபிராமி. சுவர் ஓரமாகப் போடப்பட்டிருந்த அந்தக் கட்டிலில் அமர்ந்து சுவரில் தலை சாய்த்து பெரும் தவிப்பில் இருந்தாள். இரவு முழுவதும் தூக்கமின்றி அமர்ந்திருந்ததால் அயர்வாக இருந்தது. தூக்கமின்மையும் யோசனையுமாக சேர்ந்து தலை வலித்தது. ஒரு காஃபி குடித்தால் நல்லது என்று எண்ணம் உண்டானாலும் எழும்ப மனமின்றி தவித்தாள் அபிராமி.

கதவு மீண்டும் தட்டப்பட்டது. இத்தோடு ஐந்தாவது தடவையாக அபிராமியை அழைக்கிறாள் அவளின் அக்காவான நளாயினி. “இதோ வாறன் அக்கா” என்று கூறிவிட்டு அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அறையை விட்டு வெளியே சென்றால் அப்பாவும் அம்மாவும் நிச்சயம் முடிவைக் கேட்பார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லையே. கடவுளே நீயே எனக்கு உதவி செய் என்று மனமார வேண்டியபடி அமர்ந்திருந்தாள்.

அபிராமி நம் கதையின் நாயகி. ஐந்தடி உயரம் இருப்பாள். கொஞ்சம் பூசினால் போன்ற உடல்வாகு. இடைவரை நீண்ட கேசம். எப்போதும் சிரிக்கும் கண்களும் அமைதியான அவளது இயல்பும் அவளுடன் பழகும் அனைவரையும் அவள் பால் பேரன்பு கொள்ள வைக்கும். யாரையும் அதிர்ந்து பேசாத சுபாவம். தினசரி பத்திரிகை ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகின்றாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தவள் அறையைப் பூட்டிவிட்டு அதற்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

கட்டிலின் ஓரத்தில் இருந்த சிறிய மேசை மீது வைக்கப்பட்டிருந்த அவளது கைத்தொலைபேசி சிணுங்கவும் அதனை எடுத்துப் பார்த்தாள். அழைக்கும் இலக்கத்தை பார்த்ததும் ஐயோ... என்று இருந்தது அபிராமிக்கு. இவனும் விடாமல் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்கும் வரை விடமாட்டான். ஆனால் இங்கே…? குழப்பமும் தவிப்புமே அவளை ஆட்கொண்டது.

அலைபேசி அடித்து ஓயவும் மீண்டும் வந்து கதவைத் தட்டினாள் நளாயினி. “ அடியே குண்டச்சி, சீக்கிரம் வெளியே வாடி.. இந்த மதிய வேளையில் உனக்கு தூக்கம் வேண்டிக் கிடைக்கா.. முடியலடி சீக்கிரம் வா. நானும் இன்னும் சாப்பிடல. ரொம்பப் பசிக்குது. உனக்காகத் தான் வெயிட் பண்ணுறேன்”
“அக்கா, ஒரு ரென் மினிட்ஸ் வெயிட் பண்ணு. வாறேன்” என்ற அபிராமி தன் கவலைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு ஒரு முடிவோடு அவசர அவசரமாக முகத்தைக் கழுவி ரெடியாகி வெளியே வந்தாள்.

இவளுக்கும் உணவைப் பரிமாறி விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தாள் நளாயினி. தமக்கை யின் கைமணத்தில் உருவான அந்த பிரியாணிகூட அவள் தொண்டையில் பாறாங்கல் போல இருந்தது. மிகவும் சிரமப்பட்டு உணவை உள்ளே தள்ளினாள். அவளது அவஸ்தையைக் கண்ட நளாயினி
“ஏன்டி என் சமையல் அவ்வளவு கேவலமாகவா இருக்குது? அப்பா கூட சாப்பிட்டு ஒன்றும் சொல்லலையே”
“அச்சோ.. அக்கா பிரியாணி சூப்பர்கா. பிரியாணி சமைக்கிறதில் அம்மா கூட உன்னோடு போட்டி போட முடியாது”
“அப்புறம் ஏன்டி ஏதோ பாவக்காயை பச்சையா வைத்த மாதிரி மூஞ்சிய வைச்சிட்டு சாப்பிடுறாய்?”
“ஒன்னுமில்லையக்கா.. ஒரு ஆர்டிகல் ஒன்று நாளை பிரிண்டுக்கு கொடுக்கணும். அதன் லேஅவுட் பற்றி யோசிச்சேன்.. ஓகே ஓகே சாப்பிடுவோம்” என்று விட்டு சிரமப்பட்டு முகத்தை இயல்பாக வைத்திருந்து உண்ணத் தொடங்கினாள்.

இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர்கள் போல குமாரும் சரோஜாவும் அங்கே பிரசன்னமானார்கள். நம்ம அபிராமியோட அப்பாவும் அம்மாவும்.
“அபிராமி யோசிச்சு சொல்றேன் என்றாய். ஆனால் இன்றுவரை எதுவும் சொல்லாமல் இருக்காயடி. இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. நீ என்ன தான் முடிவெடுத்திருக்கிற...?” என்று படபடத்தார் சரோஜா.
அபிராமி மௌனமாகத் தாயை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்தாள்.
“அடியே உன் மனதில் என்னதான்டி நினைச்சிருக்காய்.. எனக்கு வரும் கோபத்துக்கு....”
“விடு சரோ... நான் குட்டிமாவிடம் பேசுறன்” என்றார் குமார்.
“அப்பாவும் மகளும் என்னவோ பேசிக்குங்க. ஆனால் இன்று எனக்கு முடிவு தெரியணும். எவ்வளவு நாள் தான் அவங்களுக்கு நாம் பதில் சொல்லாம இப்படியே இருக்கிறது” புலம்பியபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார் சரோஜா.
அபிராமி அருகில் கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்த குமார் அவளின் தலையை ஆதரவாகத் தடவி விட்டார். வெளியே வருவேன் என்று அடம் பிடித்த கண்ணீரை அப்பாவும் அக்காவும் அறியாமல் நாசூக்காக துடைத்து விட்டாள்.

“ஏன் குட்டிமா? உனக்குப் பிடிக்கவில்லையா? எதுவானாலும் என்கிட்ட சொல்லுமா. உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம்” என்று மிக மென்மையாக கேட்டார்.

தாயின் அதட்டலும் தந்தையின் ஏக்கத்துடனான குரலும் அவளை வருடத்தின். வருவது வரட்டும்.. இதற்குமேல் யோசித்து எந்தப் பயனும் இல்லை. நடக்கப் போவதை எதிர்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள், தலையை உயர்த்தாமலே "எனக்கு ஓகே பா.. அம்மாவிடமும் சொல்லி விடுங்கள்..." என்றாள்.

சமையலறைக்குள் இருந்து இவள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த சரோஜா வெளியே வந்து
“அப்பாடா ஒரு வழியா உங்க பொண்ணு வாயைத் திறந்திட்டாள். இப்போதுதான் என் கவலை தீர்ந்து நிம்மதியாக இருக்கு. உடனடியாக அடுத்து நடக்க வேண்டியதைப் பாருங்க. அவர்கள் எவ்வளவு பெரிய இடம். நம்ம வசதிக்கு நாம தலைகீழா நின்றால் கூட இப்படி ஒரு சம்பந்தத்தைத் தேட முடியாது. தாமதிக்காமல் அவங்களோடு பேசிடுங்க” என்று கணவரிடம் கூறினார்.
அபிராமி தந்தையிடம் சம்மதம் சொல்லவும் எதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நளாயினி சடாரென நிமிர்ந்து தங்கையைப் பார்த்தாள். ஒரு வாரமாக எந்தப் பதிலும் சொல்லாமல், வேலைக்குச் செல்வதும் வந்ததும் அறைக்குள் அடைவதுமாகவே இருந்தவள். தாயின் தூண்டுதலால் தானும் இதுகுறித்து அவளிடம் கேட்டபோது விரக்தியான பாவனையில் “இன்னும் யோசிக்கல. அப்புறம் சொல்றேன்கா” என்றாள். இன்று காலையில் கேட்டபோதுகூட மௌனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்று அடைந்து விட்டாள். இவ்வாறு மௌனம் காத்த தங்கை இன்று அப்பாவிடம் சம்மதம் சொன்னதும் மனம் சந்தோசப்பட்டாலும் அவளது குரலின் மாறுபாடும் சற்று உறுத்த அவள் முகத்தை ஆராயும் நோக்கில் பார்த்தாள் நளாயினி.

தமக்கை தன்னை ஆராய்ச்சியாகப் பார்ப்பதை உணர்ந்த அபிராமி நாசூக்காக அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றாள்.

தன் அறைக்குள் சென்றவள் ஜன்னலைத் திறந்துவிட்டு தங்கள் வீட்டுத் தோட்டத்தை வெறித்தபடி நின்றாள். அக்காவின் உபயத்தில் அத்தோட்டம் எப்போதும் பூத்துக் குலுங்கும். ரோஜா, மல்லி என மணம் வீசும் மலர்கள் நிறைந்து அத் தோட்டத்தை சூழ நறுமணம் வீசிக்கொண்டிருந்தன.

அங்கே சிறியதாக இருந்த கொய்யா மரம் ஒன்றின் கிளையில் அமர்ந்து சிட்டுக்குருவிகள் இரண்டு கதைபேசிக் கொண்டிருந்தன. இயற்கையை எப்போதும் ரசிக்கும் அபிராமிக்கு இன்று ஏனோ அவை எதுவுமே ரசிக்கவில்லை


அவளது அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசையை எழுப்பியது. தன் அலைபேசியை எடுத்து ஆராய்ந்தாள். ஏற்கனவே எட்டு அழைப்புகள் வந்திருந்தன. அனைத்தும் ஒரே எண்ணிலிருந்துதான். அப்போது வந்த குறுஞ்செய்தியை வாசித்தாள். 'நான் சொன்னதை உன் பெற்றோரிடம் கூறி விட்டாயா? நிச்சயம் நான் சொன்னபடி நடந்திருப்பாய் என நம்புகிறேன். உன் பதிலை எதிர்பார்த்திருக்கின்றேன் -தமிழினியன்' என்று அச் செய்தி இருந்தது. அதனைப் பார்த்ததும் பதட்டத்துடன் அலைபேசியை அணைத்துவைத்தாள். இதற்கு மேலும் அழைப்பு வந்தால் அதனை எதிர்கொள்ளும் தைரியம் தன்னிடம் இல்லை என்று புலம்பினாள் கட்டிலில் சென்று படுத்த அபிராமி சில நாட்களாகத் தன் வாழ்வில் நடந்தவற்றை எண்ணியபடி புரண்டாள்...

அப்படி என்னதான் இந்த அபிராமிக்குப் பிரச்சினை... யார் இந்த தமிழினியன்... அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமே...
 

Nagajothi

Member
அருமை ???, அபிக்கு என்ன பிரச்சனை திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டால்
 
Top