Asha Evander
Moderator
அழியா நினைவின் அழகிய நிதர்சனமே!
(கதை முழுவதும் கற்பனை காட்சிகளே. பெயரோ, கதையில் குறிப்பிட்ட இடங்களோ நிஜத்தில் யாரையும் குறிப்பிட்டு உருவாக்க பட்டவை அல்ல)
அத்தியாயம் 1
“தோற்றங்கள் மாறிப்போகும்
தோல் நிறம் மாறிப் போகும்
மாற்றங்கள் வந்து போகும்
மறுபடி மாறிப் போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறிப் போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறாதம்மா!”
தமிழ்நாடு எல்லையில் சோலையம்மன் வீற்றிருக்கும் ஊர் சோலையூர். எவரும் சீக்கிரத்தில் சென்று விட முடியாதபடி பல கட்டுப்பாடுகளை கொண்ட சிறிய கிராமம். பார்க்க கிராமம் என்றாலும் பேச்சு வழக்கிலும் சரி, அவர்களின் பழக்க வழக்கங்களிலும் சரி நகர்புற அளவிற்கு தோரணை இருக்கும். அவர்களின் குலதெய்வம் சோலையம்மன் எந்த குறையும் வைக்காமல் அவர்களை கருத்தாய் பாதுக்காப்பதால் இன்னும் வறுமை எனும் சொல் அவர்களை நெருங்காமல் செழிப்புடன் அவ்வூர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில், தனது சிறிய ஓட்டு வீட்டில் சமையலறைக்குள் புளி பானைக்குள் தலையை விட்டு தேடிக் கொண்டிருந்தாள் அலர்மேல் வள்ளி.
“இங்க தானே வச்சேன். மச்சான் போகும் போது கூட எடுத்து பார்த்தேனே. அதுக்குள்ள எங்க போச்சு?” என தனது குட்டி தலையால் அந்த பெரிய பானை முழுவதும் தேய்த்து தேடி அலசியும் அவள் தேடியது கிடைக்காமல் போகவே மனம் சுணங்கியது.
“என்னோட ரொம்ப பிடிச்ச எள்ளு உருண்டையை இந்த மச்சான் தான் தூக்கிட்டு போயிருக்கணும்” என அவனை திட்டியவள், நிமிர்ந்து மணியை பார்க்க ஒன்பதரையை காட்டியது.
“அச்சோ மச்சான் காலை சாப்பாடு இன்னும் சாப்பிடலையே” என பதறியவள் அவளின் மச்சானுக்கு பிடித்த உணவை எடுத்து கொண்டு வயலுக்கு போகும் வழி நோக்கி நடந்தாள்.
மனதில் எள்ளு உருண்டை உறுத்தினாலும், இன்னும் சில நாட்களே அவளின் மாதவிடாய் வர இருப்பதால் அவன் ஒளித்து வைத்திருக்கலாம் என மனதை தேற்றிக் கொண்டாள்.
"மாமனே உன்னை தாங்காம
மத்தியில் சோறும் பொங்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலும்
கதவு தான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே"
பாடலை பாடிக் கொண்டே வயல் வரப்பில் கையில் தன் மச்சானுக்கான காலை உணவை கூடையில் வைத்து கொண்டு நடந்தாள் அலர்மேல் வள்ளி. அனைவருக்கும் "வள்ளி". அவளின் மச்சானுக்கு மட்டும் "அலர்".
"நாரா போனது போலயா இருக்க? நல்லா உன் மச்சான் வாங்கி போட்டத தின்னு தின்னு பத்து கிலோ கூடி இல்ல இருக்க"
அவளின் பாட்டை கேட்ட ஒரு பாட்டி சொல்லிவிட்டு போக,
"என் மச்சான் வாங்கி குடுக்குறார். நான் சாப்பிடுறேன். உனக்கென்ன கிழவி" என்று கத்தியவள் குடுகுடுவென தங்கள் வயலுக்கு ஓடினாள்.
அவளின் சத்தத்தை தூரத்தில் இருந்தே கண்டுக்கொண்டவன் அவள் ஓடவும் பதற்றத்தில் கையில் இருந்த மண்வெட்டியை கீழே போட்டு விட்டு அவசரமாக வரப்பில் ஏறினான் அவளின் மச்சான், இளந்திரை மாறன்.
“ஒரு வார்த்தை சொன்னா கேட்க மாட்டா” என புலம்பியவன்,
"அடியே! மெதுவா வாடி. எந்த கோட்டையை பிடிக்க இத்தனை வேகமா ஓடுற. அலரு மெதுவா நட" என தூரத்தில் இருந்தே கத்த, அவனுக்காக மெதுவாக நடந்தாள் அலர்மேல் வள்ளி.
முகத்தில் களைப்பு இருந்தாலும் தங்கமென ஜொலித்து நடந்து வந்தவளை அவன் கண்கள் ரசனையாய் படம் பிடித்துக் கொண்டது.
அவளோ மாமரத்து நிழலில் போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்து மூச்சு வாங்க, வேகமாக அவளின் அருகில் வந்தான் இளந்திரை மாறன். அவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
அவளோ வயலில் இத்தனை நேரம் வேலை செய்ததால் உடல் வேர்த்து, கால்களில் சகதியுடன் நின்றவனை ஆசையாக பார்த்தாள்.
“என்னடி பார்வை இது? எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்ட, அப்படி தானே? இதுல திருட்டுதனமா எள்ளு வேற சாப்பிடுற” அவன் கோபத்தில் பல்லை கடிக்க,
"வாசமா இருக்க மச்சான்" என்று அவனை தன்னருகில் அமர்த்திக் கொண்டாள் அலர்.
"எது? இந்த வேர்வை நாற்றம் உனக்கு வாசமா இருக்கா? பைத்தியம் தான் நீ" என்றவன் முகத்தை கழுவி விட்டு, மரத்தில் கழட்டி போட்டிருந்த சட்டைக்கு அருகில் இருந்த துண்டை எடுத்து முகத்தையும் உடலையும் துடைத்து விட்டு கட்டிலில் அதை போட்டான்.
"உனக்கு நிறைய தடவை சொல்லிட்டேன் அலரு. இப்படி ஓடி வரது உன் உடம்புக்கு நல்லது இல்ல. என் பேச்சை கேட்கவே மாட்டியாடி?"
அவன் திட்ட அவளோ அவன் போட்ட துண்டில் வாசம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
"நான் என்ன சொல்லுறேன் நீ என்ன பண்ணுற அலரு. புள்ளை வேணும்னு அழுதா மட்டும் போதாது. சில விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும்"
"ம்ம் சரி மச்சான். இனி ஓடல போதுமா? இப்போ நீங்க சாப்பிடுங்க. வழக்கம் போல பழைய கஞ்சி தான்" என்றவள், பழைய கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கருவாட்டு குழம்பை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள்.
"சமையல்ல நல்லா தேறிட்டடி" அவளின் கைபக்குவத்தை ரசித்து உண்ண,
“ஹ்ம், எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டது தான் மச்சான். இந்த ஏழு வருசத்துல இது கூட பண்ண தெரியாம இருந்தா நான் வேஸ்ட் தான்” என சிரித்தவள்,
“எள்ளு உருண்டைய எங்க வச்சீங்க மச்சான்?” என மெதுவாக அவனின் காதருகில் கேட்டாள்.
“எங்க வச்சா உனக்கு என்ன? கொஞ்சமாச்சும் புத்தி வேணும் உனக்கு. ஏழு வருஷமா குழந்தை வேணும்னு சோலையம்மன் கிட்ட வேண்டிக்க தெரியுது தானே. அப்போ பொறுப்பாகவும் இருக்கணும். எள்ளு சாப்பிடுறதுல பிரச்சனை இல்ல. ஆனா இப்போ ஒரு பாதுகாப்புக்காக வேண்டாம் சொல்லுறேன் அவ்ளோ தான். புரிஞ்சு நடந்துக்கோ அலரு” அவன் தீவிரமாக எடுத்துச் சொல்ல,
அவளோ "மச்சான் நான் வயல்ல இறங்கவா?" என்று கெஞ்சலாக கேட்டு எழும்பினாள்.
"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்?” என சீறியவன், பின் அவளின் முகத்தை பார்த்து, “நாளைக்கு பார்க்கலாம் அலரு. இன்னைக்கு வீட்டுக்கு போ" என்றான்.
சாப்பிட்டு தட்டை கழுவி அவளிடம் கொடுத்தவன், "மதிய சாப்பாட்டுக்கு நானே வீட்டுக்கு வருவேன். நீ வெயில்ல அலையாதடி" என அவளின் உச்சி முகர்ந்தான்.
அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.
"என்னை விட நீ தான் வாசம்டி"
"ஆமா ஆமா இனி உன் வாசனை திரவியத்துக்கு பதில் என்னை யூஸ் பண்ணிக்கோ" என்று நொடித்துக் கொண்டாள்.
"தினமும் ராத்திரி அதானே பண்ணுறேன். நாளைக்கு கண்டிப்பா வயல்ல இறங்க விடுவேன். நீ ஓடாமல் நடந்து வரணும். இன்னைக்கு இவளோ நேரத்துல எத்தனை முறை மூச்சு விட கஷ்ட பட்டிருக்க. இனியும் உன்னை இறங்க விட்டா இந்த இடத்தையே அதகளம் பண்ணிடுவ. கிளம்பு"
அவனை முறைத்துக் கொண்டே வீட்டுக்கு நடந்தாள் அலர். அவளையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.
அவர்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் முடிந்து விட்டது. சில பிரச்சனைகளால் திருமணம் முடிந்த உடனேயே இந்த ஊருக்கு வந்தவர்கள், தங்கள் உழைப்பால் சிறு நிலத்தை வாங்கி விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தையை கையில் ஏந்தும் பாக்கியம் முழுமையாக கிட்டவில்லை. இரண்டு முறை கரு கலைந்து விட, அடுத்து அவள் கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக இருப்பதால் இப்போதைக்கு கர்ப்பமாக கூடாது என்று மருத்துவர் கூறி விட்டார்.
இத்தனை வருடங்களாக அவள் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனாலும் மீண்டும் கருவுற முடியவில்லை.
அவளை விட அவனுக்கு அதன் வலி அதிகமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாள்கள் தள்ளி போனால் கர்ப்ப சோதனை செய்யும் கருவியை வாங்கி வர சொல்லி, சோதனை செய்து அதில் எதிர்மறையான முடிவு வந்தால் அவளை சமாதானப்படுத்துவது இவனுக்கு பெரிய வேலை.
நாள் முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் சோலையம்மன் கோவிலில் தவம் கிடப்பாள். அவளை பற்றி ஊருக்கே தெரியும் என்பதால் பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டார்கள்.
இருபத்தியெட்டு வயது ஆனாலும் இன்னும் சின்ன குழந்தை தான் அவள். வயதுக்கு ஏற்ற முதிர்ச்சி இன்னும் அவள் செயலில் வந்திருக்கவில்லை. அவளுக்கும் சேர்த்து மாறன் தான் முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்வான். அவளை பற்றிய யோசனையிலேயே மீண்டும் வயலில் இறங்கியவன் பாதியில் விட்ட வேலையை தொடர்ந்தான்.
வீட்டிற்கு வந்த அலர் சிறிது நேரம் சோர்வாக அமர்ந்தவள், பின் சாப்பிட்டு அன்றைய மாத்திரையை போட்டு விட்டு மதிய உணவிற்கான வேலையை தொடங்கினாள். முழுநேர மனைவி பதவி தான் அவளுக்கு அவன் கொடுத்திருந்தான். அலரும் படித்த பெண் தான். ஆனால் சில காரணத்தால் அவளால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
திருமணம் முடிந்த இரண்டு வருடங்கள் அவனுடன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தவளுக்கு அதன் பின் குழந்தை பற்றிய ஏக்கம் வர, அவர்களும் முயற்சித்து இரண்டு முறை கரு கலைந்த போது தான் மன அழுத்தத்திற்கு ஆளானாள் அலர். அவளை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வர வேலைக்கு போக சொன்னான். ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை. எனவே கணவனுடன் வயல் வேலைகளில் உதவ ஆரம்பித்து முழுநேரமும் அவனுக்காக வாழ ஆரம்பித்து, இப்போது தன் ஏக்கத்தை அவனுள் கரைத்துக் கொண்டிருக்கிறாள்.
அனைத்தையும் ஒதுக்கி விட்டு கணவனுக்காக மதியம் சாப்பாட்டை தயார் செய்ய துவங்கினாள். அவன் எப்போதும் காய்கறி உணவுகளையே அதிகம் உண்பதால் சாதம், ரசம், புடலங்காய் பருப்பு கூட்டு, வெண்டைக்காய் பொரியல், அப்பளம் என முடித்தவள் அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள். ஆனாலும் கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டு தான் இருந்தது.
எத்தனை வருட காத்திருப்பு! ஆனாலும் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை போலும்.
மதியம் வீட்டிற்கு வந்த மாறன் சமையலறைக்குள் அவளை தேட அங்கு தான் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அலர்.
"இன்னைக்கு எத்தனை மணி நேரம் அழுத?"
அவனின் கேள்வியில் முறைத்தவள், "உனக்கு கஷ்டமாவே இல்லையா மச்சான்?" எனக் கேட்டாள்.
"நான் அழுதா சரியா போகுமா இல்ல உடனே குழந்தை வருமா? அது என்ன கடையில் ஆர்டர் போட்டு வாங்குற பொருளா? கடவுள் குடுக்கும் வரம். கிடைக்குற நேரத்தில் கிடைக்கும். வா வந்து சாப்பிடு" என்று முன்னறைக்கு சென்று விட்டான்.
"மச்சான் நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்போமா?" தயங்கி தான் கேட்டாள்.
"அதை விட எனக்கு இன்னொரு கல்யாணம் நீயே பண்ணி வச்சிடேன்" அவனின் பதிலில் சட்டென அவனின் கன்னத்தில் அறைந்தாள்.
"என் கையால் சாக ஆசைன்னா சொல்லுங்க. நானே விஷம் தரேன். இனி இப்படி ஒரு நினைப்பு உங்க மனசுல வர கூடாது மச்சான்" அழுத்தமாக சொல்ல,
"உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்த பிறகு எத்தனை குழந்தை வேணும்னாலும் தத்து எடுக்கலாம்" என்று கூறிவிட்டு உணவை உண்டான் மாறன்.
அவளுக்கும் ஊட்டி விட வாங்கிக் கொண்டவள் அவனையே கட்டிக் கொண்டாள்.
அவளை ஒரு கையால் வாகாக அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை பார்த்தான்.
“என்ன மச்சான்?” அவனின் பார்வையில் வெட்கம் வந்தது.
“என் பொண்டாட்டி. நான் ரசிக்கிறேன்”
“யாரு வேணாம்னு சொன்னா? ஆசை தீர பார்க்கலாம். இப்போ சாப்பிடுங்க” என்றவள் அவனுக்கு பிடித்த வெண்டைக்காய் பொரியலை இன்னும் கொஞ்சம் வைத்தாள்.
“போதும் அலர்” என்றவன் மிச்சத்தை அவளுக்கு ஊட்டினான்.
"இப்போ வேலைக்கு போகணுமா மச்சான்" அவனின் கன்னத்தில் முத்தம் பதித்தவாறே கேட்க,
"உனக்கு வேண்டாம்னா நானும் போகல" என்றவன் கழுவாத கையால் அவள் இடுப்பை கிள்ளி விட்டான்.
"இளா" அவளின் குரல் கரைய,
எழுந்து சென்று கையை கழுவி விட்டு வந்தவன் அப்படியே அவளையும் தழுவிக் கொண்டான்.
"இளா"
"என்னடா?"
"இளந்தீரா"
அவளின் அழைப்பில் சட்டென எழுந்தமர்ந்தவனுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.
"இப்போ என்ன சொன்ன அலர்?"
"என்ன சொன்னேன்?" அவள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் சொன்ன வார்த்தை. இப்போது அவளுக்கே மறந்து போய் விட்டது.
"ஒன்னும் இல்லைடா" என்று அவளுக்கு தட்டி கொடுத்தவன் மனமெல்லாம் அழியாத நினைவலைகள்.
எங்கெங்கோ நினைவுகள் பயணிக்க, அவளின் காதல் பார்வைகளும், கோப விழிகளும் கண்ணுக்குள் இம்சிக்க அவனால் அதற்கு மேல் தொடர முடியவில்லை.
சட்டென அவள் மேல் படர்ந்திருந்தவன் எழும்ப, ஒன்றும் புரியாமல் “மச்சான்” என அவனை இழுக்க,
“சாரி அலரு. ஒரு வேலையை மறந்துட்டேன்” என்றவன் அவளை விட்டு விலகி எழும்பினான்.
அவனையே புரியாமல் பார்த்து நின்றாள் அலர்மேல்வள்ளி. ஆனால் அவளை விட்டு விலகியவனோ மனதின் நினைவுகள் கொடுத்த வலியை மறக்க முடியாமல் வயலை நோக்கி நடந்தான்.
Last edited: