வாழ்க்கை வாழத்தானே! அதை வாழ்ந்து பார்ப்பதோ இல்லை அதில் வலியை சுவீகரிப்பதோ அது அவர் அவர் கைகளில்.
அவள் தன்னை, தன் அனுமதியின்றி தன் நிழலையும் தொட அனுமதியாள். முதல்முறை தன்னவனை அனுமதித்தாள். அவன் தொடுகையில் மயங்கினாள். அவன் வாரிசுக்கு தகுதியானாள்.
அந்த மயக்கமும் அதில் உண்டான உறுதி தந்த உரிமையில் இரண்டாம் முறை மயங்கினாள் தன் மகவு பிஞ்சுக் கரம் கொண்டு அவள் மார்புகளை பிடித்து பால் குடித்த தொடுகையில் தம் தாய்மையின் முத்தி நிலையை பெற்று பெண்ணாக பிறந்த வரத்தினை பெற்றாள்.
மூன்றாம் முறை மயங்கினாள் அவள் வயது, சபலம், இளமை அவளை சர்பமாக மாறி விழுங்கியது.. இதோ நான்காம் முறை மயங்கி விட்டாள் அவள் மயங்கிக் கிடப்பது காலத்தின் கைகளிலோ அல்லது காலனின் கைகளிலோ? அது தெரியவில்லை ஆனால் நிச்சயம் அந்த கைகள் பாசக்கயிறை கொண்டு அவளை இறுக்கி பிடித்து விட்டது. மரணத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறாள் ஒரு பெண் சிட்டு அவளோடு சேர்ந்து ஒரு உயிர் மெட்டும்..
பூஜை, புனஸ்காரம், சம்பரதாயம், பழைமை, ஆச்சாரம் என பெயர் போன கிராமம். பிராமண குளத்து சீமான்கள் வாழும் ஸ்ரீரங்கம். பார்க்கும் திசை எங்கும் பஜனைகளும், நெற்றியிலே குங்குமம், மஞ்சள் என வலம் வரும் மங்கையரும், வேதங்கள் உச்சரிக்கும் பிராமண குருக்களும் என குளிர்ச்சியாக காட்சியளிக்க, ஒரு வீட்டுக்குள் மட்டும் மங்கையின் நாவோ அமைதியாக வேதங்களை உச்சரித்தக் கொண்டே தன் ஒன்றரை வயது மகளுக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அவள்…
சுபங்கினி 24 வயது அழகு மங்கை. பார்வைக்கு மட்டுமல்ல பழகவும் இனிமையானவள். இளமையின் மன்மதன் கையில் இருக்கும் காலன் வடித்த சிற்பம்..
அவள் விதி, வாழ்க்கை என்னும் சிறைக்குள் அவளும் கைதியே. அவளை வாழ்க்கை வஞ்சித்ததா இல்லை வாழவிடாமல் சூழ இருப்பவர்கள் வஞ்சித்தார்களா அறிந்தவன் படைத்தவன் ஒருவனே..
அவள் பிறந்த சமூகம் ஆச்சாரம் எனும் போர்வையில் அவள் இளமைக்கு தீயிட்டு இதோ அவளை ஒரு இளம் கைம்பெணாக அந்த நங்கையின் சமூகம் அவள் மறுமணத்தை மறுத்துவிட்டது.
திருமணமாகி ஒரு வருடத்தில் சாலை விபத்து ஒன்றில் கணவனை பறி கொடுத்த நொடியிலிருந்து அவள் வாழ்க்கை போராட்டமாக அமைந்து போனது. அவள் செய்த கர்மாவோ என்னவோ கையில் குழந்தையுடன் தனித்து நின்றவளுக்கு வழக்கம் போல் பெண் பிள்ளையை வைத்து பிழைக்க தவிக்கும் தாய் எனும் போர்வைக்குள் உறவுகள் கைகொடுக்க பயந்தனர்.. அந்த உறவினர்களோ துக்கம் விசாரிக்க வந்து பத்து, நூறு கையில் கொடுத்துவிட்டு போனார்களே அன்றி அவள் பாதுகாப்பை பற்றி சிறிதும் யோசிக்கவில்லை.
"என்ன பண்றேள். அவளை எப்படிண்ணா நம்மாத்துல வைத்துக் கொள்றது. நமக்கும் பெண் பிள்ளைங்க இருக்காலே அப்படி இருக்கச்ச அவாளுக்கு வரன் வரும் சமயம் இவளை அழைச்சிட்டு வராதேல். அங்கேயே விட்டுவிட்டு வாங்கோண்ணா." இப்படி ஒரு புறம் தேளாக கொத்த
இன்னுமொரு சுற்றமோ..
"அச்சோ மாமி என்ன இப்படி சொல்றேல் என்னோட ஆத்துக்காரர் ஏற்கனவே அப்படி, இப்படினு கொஞ்சம் ஒரு மாதிரி அசால்ட் பேர்வழி.. இதுல இவளையும் கூட்டிண்டு போய் என்னோட வாழ்க்கைக்கும் உலை வைக்க சொல்றேளா?"
மற்றுமொரு உறவு..
"மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கேள் பொருள் விக்கிற விலைவாசிக்கு இவளையும் வச்சி பார்க்க முடியுமோ என்ன. நீர் ஒரு ஆள்தான் உழைக்கிறீர் அதையும் தானம் பண்ண முடியுமோ என்ன. அதிலும் பொட்ட புள்ள பெத்து வைத்திருக்கிறாள் நாங்க அடிக்கடி வந்து பார்த்துவிட்டு போவோம் அது போரும்."
இப்படி சொல்லிவிட்டு போனவர்கள் தான் பிறகு வரவே இல்லை. கூலி வேலைக்குப் போகும் இடத்தில் கிழட்டு முதலாளியால் சுரண்டல் இதனால் ஒரு கிழமைக்கு மேல் எந்த கூலி வேலையும் செய்ய முடியவில்லை. அக்கம்பக்கத்து மாமிகளின் வீட்டில் வேலைக்கு சென்றாலும் இதே நிலைமை.
"ஏன் இந்த பச்சை பிள்ளையை வைத்துக் கொண்டு வெளியே திரிகிற? நோக்கு என்ன வயசாச்சு கொஞ்சம் என்னோட சமாளிச்சு போ. உன்னை ராணியாட்டம் வாழவைப்பேன். என்ன சொல்ற கொஞ்சம் சமாளிச்சு போறியோ?"
என்றபடி நாசுக்காக கேட்பவர்கள் சிலர். பச்சையாகவே கேட்பவர்கள் பலர். இதனால் எந்த வேலையிலும் அவளால் நிலைக்க முடியவில்லை. கடைத்தெருவுக்கு போனால், சந்தைக்குப் போனால், புதுத்துணி போட்டால்..
"ஆத்துக்காரன் போய் சேர்ந்து கொஞ்ச நாள்தான் ஆகுது அதுக்குள்ள இவளுக்கு வந்த வாழ்வை பாரேன்."
என்று ஊரே கூடி நின்று கதை பேசும். குழந்தைக்கு சத்துமாவு இவளுக்கு இரண்டு வேளையாவது சாப்பாடு இது இரண்டுக்கும் உழைக்க வேண்டிய அத்தியவசியமான நிலை. அவள் வயிற்றுக்கு தெரியுமா அவளின் நிலைமை. அவளால் சமாளிக்க முடியவில்லை ஆனாலும் வழிமாறி போக துணியவில்லை.
அவள் வாழும் திருச்சி நகரத்தில் வெளிநாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யும் கம்பெனி ஒன்றில் பொதியிடல் பகுதியில் வேலைக்குச் சேர்ந்தாள். நாட்கூலி வாங்கி சமாளிக்க பழகினாள். அது அவளுக்கு வசதியாகி போனது. நாட்கள் செல்ல செல்ல சிலவற்றை மறக்கவும், மன்னிக்கவும் பழகிக் கொண்டாள். அவளது தனிமையை காரணம்காட்டி அவளின் வாழ்க்கைக்குள் நுழைய எத்தனையோ பேர் முயற்சித்தார்கள் ஆனால் அவர்களிடமிருந்து தப்பித்து தன்மானத்தை காத்துக் கொண்டவள் மனதை மீண்டும் ஒருவனிடம் தொலைத்துவிட்டாள். அவள் தொலைத்த மனது பின்பு ஒரு காலத்தில் அவள் வாழ்வையும் சிதைக்கும் என்றால் அவள் நம்பி இருப்பாரோ என்னவோ?
அது ஒரு கார்கால நாள். அன்று அவள் வேலை செய்யும் இடத்திற்கு அவளுக்கு மேலதிகாரியாக வந்தவனே சுந்தரம். எதிர்பாராமல் நிகழ்ந்தது இருவரின் சந்திப்பு.
"வாணி அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா? என் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. அவளுக்கு கொஞ்சம் வைத்தியம் பாக்கணும். இங்க எங்கேயாவது நல்ல டாக்டர் இருந்தா சொல்றேளா. நோக்கு என்னோட நிலைமை நல்லா தெரியும் தானே. என்னால நிறைய பணம் செலவழிக்க முடியாது. கொஞ்சம் சிக்கனமா மருத்துவ செலவு போகுற மாதிரி ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தா சொல்றேளா."
" இதுல என்ன தயக்கம் சுபாங்கி எனக்கு உங்க நிலைமை நல்லாவே தெரியும். இங்கு ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வர வைத்தியர் இருக்காரு. அவரை வேணா நீ போய் பாரு."
"அப்படியா அவரைப் போய் நீ பாரு அவ்வளவா காசு வாங்க மாட்டார்."
"ரொம்ப நன்றி அக்கா."
இவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சுந்தர் வேலை முடிந்து வெளியேறும் சமயம்.
"ஹலோ மிஸ்! ஒரு நிமிஷம் நில்லுங்க. நீங்க பேசினத நான் கேட்டுட்டே இருந்தேன்."
"சாரி சார் நான் மிஸ் இல்லை மிஸ்ஸஸ்."
"ஆமால உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா இல்லையா? நீங்க டாக்டரைப் பற்றி விசாரிச்சுட்டு இருந்தீங்க. செலவைப் பற்றி கவலைப் படாதீங்க கம்பெனியில் சொல்லி உங்களுக்கு முன்பணம் வாங்கி தாரேன் குழந்தைகளுடைய ஆரோக்கியம் ரொம்ப முக்கியமானது. உங்கள் பிள்ளைய நல்ல வைத்தியரிடம் அழைத்துச் சென்று நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்க சொல்லுங்க. நல்ல சத்தான உணவுகள் கொடுங்க. வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வு வரும் ஆனால் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். குழந்தையை பார்த்துக் கொள்ளுங்க."
என்றவன் அவள் கையில் 2000 நோட்டுகளை திணித்தான். அவளோ கடைசி வரை அதை வாங்க மறுத்தாள் ஆனால் அவனோ..
"நீங்கள் என்னிடம் இந்த பணத்தை வாங்க தயங்க வேண்டாம். இதை நான் கம்பெனியிலிருந்து உங்கள் பெயரில் முற்பணம் ஆகவே எடுத்த தந்திருக்கிறேன்."
சுபாங்கி அவனை தயக்கத்தோடு நோக்கவே, அவள் பார்வையின் பொருள் உணர்ந்தவன்.
"நானறிவேன் இங்கு வந்த சில நாட்களில் உங்களை பற்றி அறிந்து கொண்டேன். நீங்கள் யாரிடமும் உதவினு எதையும் கேளாதவர்."
என்றவன் வார்த்தையிலிருந்து மரியாதை அவளை இளக வைத்து. அவன் மீது ஒரு நம்பிக்கையை தோற்ற வைத்தது. முதல் முறை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆணை நம்பிக்கை கொண்ட கண்களால் காண முடிந்தது. அந்த நம்பிக்கையே செல்ல, செல்ல அவர்களுக்குள் ஒரு அன்பையும் அவர்கள் அறியாமல் உண்டு பண்ணியது. ஆனால் அதன் விளைவுதான் பாரதூரம்.
பாலைவன தூரல் போல இதமாகத் தான் இருந்தது அவர்களுக்குள் இருந்த உறவு. அவளை மதித்தான். அவளின் குட்டி தேவதையுடன் கொஞ்சி விளையாடினான். குறுகிய நாள் பழக்கம் இப்படி செல்ல, செல்ல அவர்களுக்குள் ஒரு நெருக்கமான உறவை ஒரு மணித்துளியில் எப்படி ஏற்படுத்தியது என்பதை இருவரும் அறியார். பாசம் என்பது நிஜமா? அல்லது நட்பாகவே இருப்பினும் அவனின் அன்பு உண்மையா? பொய்யா? என ஆய்வு செய்ய இவள் விரும்பவில்லை. ஆனால் பிடித்திருந்தது. அது தொடர வேண்டும் என அவள் மனம் கேட்டுக் கொண்டது. அது மட்டும் காரணமல்ல வாழ்க்கையில் வழித்துணைக்கும் மன ஆறுதலுக்கும் அவன் தேவைப்பட்டான். எல்லாமே கிடைத்து விட்டது போல மகிழ்ச்சி அவளுக்கு.
உண்மையில் அவர்களின் பேச்சில் காமம் கலக்கவில்லை. ஆனால் அன்று தானாக அவர்கள் உறவில் காமம் கலந்தது தான் விதி செய்த வினையும். அன்று மகா சிவராத்திரி பக்கத்து வீட்டுக்காரர்கள் கோயிலுக்கு போய் இருந்த சமயம். அமைதியான சூழலில் இவளை நாடி சுந்தர் இவள் வீட்டுக்குள் வந்தான். இருவரின் அணைக்கட்டுகளும் அந்த நிமிடம் தகர்ந்து போனது. இருவருக்குள்ளும் இருக்கும் தனிமையும், அன்பும், காதலாக தொடங்கி அங்கு காமமாக முடிந்தது. ஆனால் முறையற்ற உறவு, உரிமை இல்லாத இணைவு அங்கு நிகழ்ந்த நொடி அந்த உறவு உள்ளத்தால் கலக்காது உடலால் கலந்ததே அன்று தவறாகிப் போனது.
"என்னால உனக்கு ஒரு பிரச்சனையும் வராது. வேறு யாராலும் இனிமேல் எந்த பிரச்சனையையும் நான் வர விடமாட்டேன். நமக்குள் நடந்ததை தவறுனு எண்ணி உன் மனதை குழப்பிக் கொள்ளாமல் தைரியமாக இரு."
எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவள் மனம் கேட்பதாக இல்லை நடந்ததை அவமானமாக கருதினாள். ஒருவேளை அவன் உரிமையை கொடுத்திருந்தால் இந்த அத்துமீறல் கூட இனித்திருக்குமோ என்னமோ?
சுபங்கியால் அதிலிருந்து வெளி வரவே முடியவில்லை. தன் மகளின் மழலை பார்வையை கூட எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தாள்.
"உனக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதே. இப்படியே விட்டுவிட மாட்டேன். உன்னோட பேசாமல் என்னால் இருக்க முடியாது. நடந்ததுக்கு நான்தான் காரணம். என்னை மன்னிச்சுக்கோ இனி இப்படி நடக்காது."
என எத்தனையோ உறுதிமொழிகளையும், மன்னிப்பு படலங்களையும் சுந்தர் நிகழ்த்திவிட்டு அங்கிருந்து சென்றாலும் சுபாங்கியோ வீட்டை விட்டு வெளியில் வரவும் தயங்கினாள். அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. எப்படி ஒரு வாழ்க்கை வாழ கூடாது என நினைத்தாளோ அதையே செய்துவிட்டாள்.
மனதோடு சேர்ந்து உடலாலும் அவமானப்பட்ட ஒரு உணர்வு. 'பிறப்பு ஒருமுறை அதை பிடித்தவர்களுடன் வாழ்வதில் என்ன பிழை.' இந்த வார்த்தைகள் வாய் வார்த்தையாக சொல்லி விடலாம் ஆனால் நடைமுறைக்கு சரிவருமா? சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? என்றாள் அவள் உள் மன பதில் இல்லை என்பதே.
'எதிர்காலத்தை எப்படி வாழ்ந்து முடிப்போம். நானும் என் பிள்ளையும் வெளியில் எப்படி நடமாடுவது. அவன் என்னை ஏற்றுக் கொள்வானா? இல்லை என்னை காமத்தோடு பார்த்த ஆண்களை போல இவனும் என் இயலாமையை பயன்படுத்தி என்னை விட்டு விலகிவிடுவானா? இது வெளியில் தெரிந்தால் இத்தனை வருஷம் வாழ்ந்த என் வாழ்க்கையில் கரை படிந்து விடுமே.. இந்த அவமானத்தோடு நானும், என் மகளும் வாழத் தான் வேணுமா? நான் செய்த பிழைக்கு என் பிள்ளைக்கு இந்த சமூகம் நடத்தை கெட்டவளின் மகள் எனும் பட்டத்தை கொடுக்கணுமா? என் குழந்தை தண்டனையை அனுபவிக்க தான் வேணுமா?'
என அந்த நிகழ்வு நடந்த நாளிலிருந்து தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தாள் சுபாங்கி. இப்படியே வாரங்கள் செல்ல ஒரு காலை வேளையில் பக்கத்து வீட்டு ஐயர் பெண்மணி, புளிக்குழம்புக்கு புளி தீர்ந்துவிட்டது என இவள் வீட்டுக்கதவை நீண்ட நேரமாக தட்டிய வண்ணம் இருந்தவள்.
என்ற எண்ணத்தில் மீண்டும், மீண்டும் கதவை தட்டினாள்.
"எங்கேயும் போறதுனா சொல்லிட்டு தானே போவா? என்ன நடந்துச்சு. இவளுக்கு.
ஏன்னா! இங்க செத்த வாறேளா? இந்த சுபாங்கி பொண்ணு ஆத்துக்குள்ள இருந்துகொண்டு கதவை திறக்கிறாள் இல்லண்ணா.. ரொம்ப நேரமா தட்டிண்டே இருக்கேன். வெளிய அவளை காணலண்ணா. செத்த இங்க வந்து பார்க்கிறேளா?"
ராமலிங்கமோ.
"இந்த பொண்ணு எங்க போனாளோ தெரியலையே?" புலம்பிய வண்ணம் இருந்தவளை ஒதுக்கிவிட்டு.
"ஏண்டி வாசலாண்ட நின்னு இப்படி கத்திண்டு இருக்க."
"என்னண்ணா இப்படி சாதாரணமா கேட்டுட்டேள். பச்சை பிள்ளையை வைச்சுட்டு நேற்று முழுக்க இவ வெளியவே வரலை. நானும் தட்டிண்டு இருக்கேன் சத்தத்தையே காணோம். குழந்தையோட சத்ததையும் காணலைண்ணா. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்குது. கொஞ்சம் என்னன்னு பாருங்க."
"சரிடி போய் நம்ம வீட்டில இருக்க ஏதாவது பழைய சாவி இருந்தா எடுத்துண்டு வா.. இவா வீட்டு கதவுக்கு போகுதுதானு பார்ப்போம்."
என்ற கணவனின் வார்த்தையை அடுத்து அந்த பக்கத்து வீட்டு பெண்மணி குடு குடுவென ஓடிச்சென்று அந்த பழைய சாவி கொத்துடன் வந்தாள்.
"இங்கே கொடுடி பார்க்கலாம்."
என்ற வண்ணம் நீண்ட முயற்சியின் பின் கதவை திறந்தவர்கள் உள்ளே சென்ற சமயம் கண்டது வீட்டினுள் இரண்டு உயிர்களும் காற்றோடு அடைக்கலமாகி வெறும் உடலால் மட்டுமே தரிசனம் தந்ததை. ஆம் அவளை சிறைவைத்த வாழ்க்கை மீண்டும் அவள் மகளோடு சேர்த்து மரணத்துக்கும் சிறைவைத்து விட்டது. வாழ்க்கையில் இருக்கும் பிணைப்புகள், குற்ற உணர்ச்சியில் இருந்து வெளி வராத வண்ணம் அவளுக்குள் முழக்கமிட மரணத்தை அவமானத்துக்கு மருந்தாக தழுவிக்கொண்டாள்.
"ஐயோ! பச்ச பிள்ளையையும் யோசிக்காமல் பாவி மக பாதியில் போயிட்டாளே! என்ன வயசாகுது, எண்ணத்தை அனுபவிச்சானு இப்படி பாதியிலேயே வாழ வேண்டிய குருத்தையும் அழித்துவிட்டு அவளும் அழிஞ்சு போயிட்டாலே."
என்ற கதறல்கள் மூலைகள் எல்லாம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அவள் வாழும்போது துணையாக இப்படி யாரேனும் ஒரு துளி அக்கறையை காட்டி இருந்தாலும் இப்படி ஒரு நிலைமைக்கு தன்னை சிறை வைத்திருக்க மாட்டாள்.
பின்னர் போலீஸ் வந்து சட்ட நடவடிக்கைகளை ஆராய அந்த அபலைப் பெண்ணின் உடலை அக்கம்பக்கத்தினர் அடக்கம் செய்தனர்.
"பாதகி! அந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன சொல்லி சாப்பாட்டில் நஞ்சு கலந்து ஊட்டினால் தெரியலையே? தன் பிள்ளையாக பிறந்த பாவத்திற்கு இதை சாப்பிடுனு சொல்லி ஊட்டி இருப்பாளா இல்லை இது உன் உடம்புக்கு நல்லது சாப்பிடுனு சொல்லி ஊட்டி இருப்பாளோ."
என்றெல்லாம் வேண்டாத சிலர் அவளையும், அவள் பிள்ளையையும் தூற்றிக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்த வண்ணம் நின்றனர்.
ஆனால் அவள் கட்டுப்பாடுகளையும், ஒழுக்க நெறிமுறைகளையும், அவள் பிறந்து வளர்ந்த சமூகத்தில் அவள் கடைபிடித்த இறுக்கிய தளைகளையும் அறிந்த யாரும் அவளை தப்பானவள் என்றோ, அவள் நடத்தை தவறு என்றோ கூறவில்லை. அந்த ஒரு வார்த்தைக்காக தானே அவள் வாழ்க்கையை சிதைத்து கொண்டாள்.
"வீட்டு கஷ்டம் போல உத்தமி தன் ஒற்றை பிள்ளையோடு கௌரவமா போய்ச் சேர்ந்துவிட்டாள்."
"வாழ்ந்து எடுக்கமுடியாத பெயரை சாவில் எடுத்து விட்டாள்."
என சிலர் முணுமுணுத்தனர்.
சுந்தர் அவனும் ஒரு மூலையில் நின்று அழுது கொண்டுதான் இருந்தான். மனசாட்சிக்கு முன் குற்றவாளியாக அவனின் ஆத்மா அவளின் மீது அவன் கொண்ட பாசம் உண்மை என்று கூறிக்கொண்டே இருந்தது. ஆனால் உரிமை கொடுக்காத உறவை தான் கொண்டதன் பயன் இது. இரு அப்பாவி உயிர்களை பறித்து விட்டதே எனும் குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருந்தான். அவன் வாழும் காலமெல்லாம் அவனை இந்த குற்ற உணர்ச்சி கொல்லாமல் கொல்லும். அவன் நிஜமான காதல் தான் செய்தான் ஆனால் அதை ஆணித்தரமாக அவளுக்குள் புரிய வைக்க தவறிப் போனான். அதன் விளைவே இந்த வாழ்க்கை சிறை..
உரிமையோடு அவர்களை நெருங்க நினைக்கவில்லை. "உத்தமி! பெற்ற குழந்தையோடு போகிறாள்." என்று மரணத்தில் அவள் எடுத்த கௌரவத்தை கெடுக்க நினைக்காது செத்துக் கொண்டிருக்கும் இதயத்தோடு தள்ளி இருந்து வேதனை கொண்டான்.
வாழ்க்கை பலரை வாழ மட்டுமல்ல அதற்குள் சிறை வைக்கவும் துணிந்தது. வாழ்க்கையில் போராடி வென்றவன் வெற்றியாளன் வாழ்க்கையில் புறமுதுகிட்டு தோற்றவன் அவன் வாழ்க்கைக்குள் சிறைக்கைதி ஆகிறான்.
போர்க்களம் பல கண்டாலும் போராடி வெல்லுவோம்! கோழையாக மாண்டு தோற்றுப் போக வேண்டாம்!
அவள் வாழ்க்கையை இழந்து தனியாக நிற்கும் போது சுற்றி இருந்த யாராவது ஒருத்தர் ஒரு சிறு நம்பிக்கை கொடுத்திருந்தாலும் இப்படி ஒரு வாழ்க்கை சிறைக்கு அவள் சென்றிருக்க மாட்டாள்.
நிச்சயமாக இப்படி ஒரு வாழ்க்கை சிறை எந்த பெண்ணிற்கும் வர வேண்டாம்
இரண்டு பேரும் அவசரப்பட்டுட்டாங்க.. அவனும் நிதானித்து அவளுக்கு உரிமையை கொடுத்துவிட்டு அவளை உரிமை கொண்டாடி இருக்கலாம். அவளும் அவசரப்பட்டு இந்த முடிவை தேடியிருக்க வேண்டாம். பாவம்