எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 2

S.Theeba

Moderator
மிகப் பெரிய நிலப்பரப்பை உள்வாங்கி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது அந்தத் தென்னந்தோப்பு. இடையிடையே மா, பலா, முந்திரி என பழ மரங்கள் பூக்களும் காய்களுமாக நின்றன. அங்காங்கே பலர் நின்று தேங்காய் பறிப்பது, பாத்தி அமைப்பது, பழங்கள் பறிப்பது எனப் பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தோட்டத்தின் நடுவே சென்ற வீதியூடாக சென்றால் சுற்றிலும் பெரிய மதில்சுவருடன் பூ மரத் தோட்டத்தின் நடுவே அமைந்திருந்தது அந்தப் பெரிய வீடு. அந்த வீடு பழைய கால அரண்மனை போல் இருந்தாலும், தற்போதைய நவீன வசதிகள் அனைத்தும் பழமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பிரமாண்டமான வீட்டின் மாடியில் ஒரு குட்டி வீட்டையே உள்ளே அடக்கக் கூடிய அளவில் இருந்த அறையில் ஒருவன் குறுக்கும் நெடுக்குமாகப் பதட்டத்தோடு நடைபோட்டுக் கொண்டிருந்தான்.

அந்த அறை இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முன்பகுதியில் ஒருபுறம் சோஃபாக்களும் அலங்கார மேசையும் போடப்பட்டிருந்தன. ஒருபுறம் மிகப் பெரிய மர அலுமாரிகள் பொருத்தப்பட்டிருந்தன. மறுபுறம் அலங்காரக் கதவுகள் இரண்டு காணப்பட்டன. ஒன்று குளியலறைக்கும் மற்றையது பால்கனிக்கும் செல்லும் வழிகள்.

அந்த அறையின் மற்றைய பகுதியில் மிகப்பெரிய அலங்காரக் கட்டில் போடப்பட்டிருந்தது. அருகே பூச்சாடியில் தோட்டத்தில் பறித்த வாசனை மலர்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அந்த அறைக்கு இயற்கையான வாசனையை வாரி இறைத்தது. அழகிய, விலையுயர்ந்த திரைச்சீலைகளும் சுவரில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார விளக்குகளும் ஓவியங்களும் அந்த அறையையே ரம்மியமாக்கின.

அந்த சுகந்தத்தையோ அழகையோ ரசிக்கும் மனநிலையில் அங்கிருந்தவன் இல்லை. அவனோ அந்த அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான். அவன் மனம் புயலிலே சிக்கிய படகாக பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தப் பதட்டம் அவன் முகத்திலும் பிரதிபலித்தது. மீண்டும் அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டான். அப்போதும் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கவும் எரிச்சலில் அலைபேசியை தூக்கி கட்டிலில் எறிந்தான்.(கோபத்திலும் நிதானத்தை இழக்கல. அது சேதாரம் இன்றி தப்பிச்சுது) இவன் தாங்க நம் கதையின் நாயகன் தமிழினியன்.

ஆறடிக்கு மேல் உயரம். அகன்று விரிந்த மார்பும் அடர்த்தியான மீசையும் சீராக பராமரிக்கப்படும் தாடியும் அவனது ஆண்மையை மெருகூட்டின. எப்போதும் நிதானத்தை இழக்காத கம்பீரத் தோற்றம் அவனது அடையாளம். வசீகரிக்கும் அவனது புன்னகை எல்லோரையும் அவனது பேச்சுக்கு தலையாட்ட வைக்கும்.

இரண்டு மாடிக் கட்டடத்தில் சுப்பர் மார்க்கெட் ஒன்றை உருவாக்கி நகரிலேயே மிகப் பிரபலமானதாக மாற்றி இன்று ஐந்து மாடிகள் கொண்டதாக வளர்ச்சியடைய வைத்து அதனைத் திறம்பட நிர்வகித்து வருகின்றான்.

அவனது தந்தை பாலச்சந்திரன் என்கின்ற பாலா இதய அறுவை சிகிச்சை நிபுணர். தன்வந்திரி என்னும் பிரபல தனியார் மருத்துவமனையின் உரிமையாளர். தாய் நிலா, குடும்பத்தின் ஆணிவேராக, குடும்பத் தலைவியாக வீட்டை நிர்வகித்து வருகின்றார். பாலாவின் பூர்வீகத் தோட்டத்தை நிர்வகிப்பதும் அவரது பணியே. தமிழினியனின் ஒரே தங்கை சாவித்திரி. தந்தையின் வழியைப் பின்பற்றி வைத்தியராகும் கனவுடன் கல்லூரியில் முதல் வருடப் படிப்பில் நுழைந்துள்ளாள்.

அடிக்கடி தன் தலைமுடியைக் கோதியபடி நடைபோட்டுக் கொண்டிருந்தான் தமிழினியன். தான் நேற்று மாலை அனுப்பிய குறுஞ்செய்திக்கு இதுவரை எந்த பதிலும் அவளிடம் இருந்து வரவில்லை. இப்பொழுது அலைபேசி நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது என்பதே அவனை சினங்கொள்ள வைத்தது.
‘சே.. இவள் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள். எத்தனை தடவை ஹோல் பண்ணிவிட்டேன். ஆன்ஸர் பண்ணவில்லை. படித்துப் படித்து அவளிடம் சொன்னபிறகும் அவள் தன் பெற்றோரிடம் கூறவில்லை போலும். அதனால்தான் எனது அழைப்பை அவள் தவிர்க்கிறாள்' என்று நினைத்தவனுக்கு வேறு என்ன முடிவெடுப்பது என்றும் குழப்பமாக இருந்தது.
ஒரு காஃபி குடித்தால் நல்லது என்று தோன்ற ல்இன்டர்காமை எடுத்து சொல்லப் போனவன் ஏதோ யோசனை தோன்றவும் அதைத் தாங்கியில் வைத்துவிட்டு கீழே வந்தான். ஹாலில் ரீவியில் சீரியல் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதில் கதாநாயகி அழுது அழுது உருகி உருகி வசனம் பேசிக் கொண்டிருந்தாள். அதனைப் பார்த்து வந்த அழுகையைத் தனது முந்தானையால் துடைத்துக் கொண்டே இரவு உணவுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார் ரேவதி. இந்த வீட்டின் ஆல் இன் ஆல் வேலைக்காரி -அப்படி சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும்- சகல வேலைகளையும் தானே பார்க்க வேண்டும் என்று இழுத்துப் போட்டு செய்வார். பாலா சிறு வயதாக இருக்கும்போதே இங்கே வேலைக்கு வந்தவர். இன்றுவரை இந்த வீடு மட்டுமே அவரது உலகமாயிற்று. தமிழினியனையும் சாவித்திரியையும் தூக்கி வளர்த்தவர்.
அவர் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்ததும் நிஜமென நம்பிய தமிழினியன் “ரேவதிம்மா என்ன நடந்தது? ஏன்மா அழுறிங்க?” என்று தவிப்போடு கேட்டான்.
“பாரு தம்பி, ஆனாலும் இந்த மாமியார் இந்தப் பொண்ணை இவ்வளவு கொடுமைப்படுத்தக் கூடாது.”
“யாரை யாரு கொடுமைப்படுத்திட்டாங்க?” புரியாமல் கேட்டான்.
“அதோ பாரு தம்பி. அந்த ராட்சசி தான் கொடுமைப்படுத்துறாள்” என்று டீவியைக் கை காட்டினார்.
திரும்பி டீவியைப் பார்த்தவன் புரிந்து வாய்விட்டே சிரித்துவிட்டான்.
“ரேவதிம்மா அம்மா எங்கே?”
“நிலாம்மா அங்கதான் இருக்கா.” என்று சமையலறையைக் கைகாட்டினார்.

அங்கே வீட்டிலுள்ளவர்களுக்காக மணக்க மணக்க காஃபி போட்டுக்கொண்டிருந்தார் நிலா. வீட்டில் எத்தனைபேர் வேலைக்கு இருந்தாலும் தன் கையால் சமையல் செய்வதையே விரும்புவார். அதில் தனக்கு ஒரு மனநிறைவு உள்ளதாகக் கூறுவார்.
அவரின் அருகில் வந்தவன்
“அம்மா, உங்க கைக்கு அப்படி என்ன மாயமோ நீங்க போடுற காஃபி வாசம் ஆளையே இங்க இழுத்துக் கொண்டு வந்திடுது”
“ம்ம்..” என்று புன்னகை சிந்தியவர் அவனுக்கான காஃபியைக்கொடுத்தார்.
தாய் அவனுக்கு கொடுத்த காஃபியை மெல்லப் பருகியபடி
“அம்மா, சாவி எங்கம்மா? காணலையே”
“மதிய தூக்கம் போட்டு இப்போதான் எழுந்து குளிக்கப் போயிருக்கிறாள்.”
“அம்மா....”
“என்ன இனியா?”
“அவங்க வீட்டிலிருந்து ஏதாவது சொன்னாங்களா...?”
“எவங்க வீட்டிலிருந்து? என்ன சொல்வாங்க?”
அவன் கேட்பது தெரிந்தும் வேண்டுமென்றே தெரியாத மாதிரி கேட்டார்
“அதுதான்மா… அவங்க… பொண்ணு வீட்டிலிருந்து..” என்று இழுத்தான். அவனது தயக்கத்தை வெட்கம் என் எண்ணி சிரித்த நிலா,
“இன்னும் போன் பண்ணல. அதுக்காகத்தான் வெயிட் பண்ணுறோம். ஆமா, சாருக்கு என்ன அவ்வளவு அவசரம்...”
“சும்மாதான் கேட்டன்....”
“படவா.. நான் உன்னைப் பெத்தவள். நீ எதுக்கு கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். மறுபடியும் வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏத்தாதே. நீ என்ன செய்தாலும் இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். எத்தனை நாளுக்கு தான் நீ இப்படி தனியா சுத்துவ. காலாகாலத்தில கல்யாணத்தைப் பண்ணி ஜோடியா சுத்த வேண்டாமா? அத்தோடு எனக்கும் உதவிக்கு ஒருத்தி வேணும். இந்த வீட்டை கட்டியாள நல்ல மருமகள் வேணும். எனக்கு அந்த அபிராமியை ரொம்பப் பிடிச்சிருக்கு. குணத்திலும் தங்கமாம். இதைவிட நல்ல மருமகள் கிடைக்கமாட்டாள். சோ நீ சமர்த்துப் பிள்ளையாய் இருக்கணும். நாங்க உனக்கு நல்லது மட்டுமே செய்வோம்” என்று ஒரு மூச்சுக்கு பேசியவர் திரும்பி தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.
“அது அம்மா.. நான்..”
“மூச்… பழைய பல்லவியை திரும்பப் பாடாதே. ” என்று அவர் கறாராகக் கூறவும் எதுவும் பேச முடியாது காஃபியுடன் வரவேற்பறை சோபாவில் வந்தமர்ந்தவன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவள் தன் வீட்டினரிடம் கூறியிருப்பாளா...? அவர்கள் என்ன முடிவெடுத்திருப்பார்கள்? என்று சிந்தனை வசப்பட்டவன் சாவித்திரி தன் அருகில் வந்து அமர்ந்ததைக் கவனிக்கவில்லை.
“ஹாய் அண்ணா...! என்ன செம திங்கிங் போல... அண்ணியைப் பற்றி யோசிக்கிறிங்களோ? செம டூயட் போல”
செல்லமாக அவள் தலையில் குட்டிய தமிழினியன் "ஏய் சாவி. பெரிய மனிசி மாதிரி பேசாத" என்றான்.
“நான் பெரிய மனிசிதானே. காலேஜ் போகத் தொடங்கிட்டேன்.”
“ஆமா ரொம்பப் பெரிய மனிசிதான்” என்றான்.

அப்போது உள்ளே வந்த பாலாவும் அவர்களது உரையாடலைக் கேட்டு புன்னகைத்தபடி சோபாவில் அமர்ந்து மகசின் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தார். அவர்கள் வந்ததைக் கண்டு நிலா பாலாவுக்கும் சாவித்திரிக்கும் காஃபியைக் கொண்டு வந்து பரிமாறினார்.
அப்போது அவர்கள் வீட்டு தொலைபேசி சத்தமிட்டது. பாலா தொலைபேசி ரிசீவரை காதுக்கு கொடுத்தார்.
"ஹலோ... ஆ.. எப்படி இருக்கிங்க.... ம்ம்.... சொல்லுங்க. உங்க போனுக்காகத் தான் வெயிட் பண்ணினேன்......
ஆ.. அப்படியா..... ரொம்ப சந்தோசம்.. நான் வீட்டில் சொல்லிவிடுறன்,.... ஓகே ஓகே..
வீட்டில் பேசிட்டு அப்புறமா உங்களுக்கு போன் பண்ணுறன்..."
தொலைபேசியை வைத்ததும் பாலா அங்கிருந்த மூவரையும் சந்தோச முகத்தோடு பார்த்தார்.
நிலா “யாருங்க போன் பண்ணியது. ரொம்ப சந்தோசமாய் இருக்கிங்க. என்ன விசேஷம்...”
“குமார்தான் பேசினார்" என்றார்.
அதைக் கேட்டதும் தமிழினியன் உஷாராகி தந்தை சொல்வதை அவதானித்தான்.
“அவங்களுக்கு நம்ம இனியனையும் நம்ம குடும்பத்தையும் ரொம்பப் பிடிச்சிருக்காம். நல்ல நாள் பார்த்து கூடிய சீக்கிரமே நிச்சயம் வைக்கலாம் என்றார்கள்.” என்றார்.
தமிழினியன் மீண்டும் சந்தேகமாகக் கேட்டான் “அப்பா அந்தப் பெண்ணிடம் பேசினார்களா? அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதமா என்று கேட்டார்களாமா?”
“அவர்கள் தங்கள் மகளிடம் பேசிவிட்டே முடிவைச் சொல்வதாகச் சொல்லியிருந்தாங்க. அதுதான் இன்று பேசிவிட்டு போன் பண்ணியிருக்காங்க. பெண்ணோட அப்பாதான் பேசினார். தங்கள் மகளுக்கும் மாப்பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு என்று தான் சொன்னார்.”

இதைக் கேட்டதும். தமிழினியன் எதுவும் கூறாது எழுந்து தன் அறைக்குச் சென்றான். ‘அவள்மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தேனே. இப்படி ஏமாற்றிவிட்டாளே’ என்று கோபத்தில் கண்கள் சிவக்க சுவரில் ஓங்கிக் குத்தினான்.
 

Nagajothi

Member
அருமை ???,அபியிடம் திருமணதிற்கு விருப்பம் இல்லை என்று சொல்ல சொல்லியிருபனோ இனியன் ??????
 
Top