அத்தியாயம்-10
"என்னடா இப்படி ஆயிடுச்சு" என்று ஜான் இதழ் பிதுக்க,
சற்றே யோசித்த மதி, "ஏ.. விஷ் எங்க?" என்றான்.
"வீட்ல தான் இருப்பான்னு நினைக்குறேன்" என்று ஜான் கூற,
"அவன்கிட்ட இந்த நம்பர் கொடுத்து இதோட கால் ஹிஸ்ட்ரி அன்ட் லொகேஷன் பார்த்துத் தரசொல்லி கேட்போம் ஜானு.. அவனுக்குத்தான் இந்த ஹாக்கிங்லாம் தெரியுமே" என்று மதி கூறினான்.
"டேய் நைஸ் ஐடியாடா" என்ற ஜான் உடனே 'காண்பரென்ஸ்' போட்டுவிட, துருவன் சட்டென அலைப்புக்குள் வந்தான்.
"நீதான்டா போட்டவுடனே வந்துட்ட" என்று ஜான் கூற,
"அவன் ஒருத்தன் தான் சிங்கில். அதனால கமிட்மென்ட் இல்லாம வந்துட்டான்" என்று மதி கூறினான்.
"அவன் சிங்கில்னு நீ பார்த்தியா?" என்று ஜான் மதியிடம் வாதாட, இங்குத் துருவனுக்கு சரியாகப் புரையேறியது.
அப்போதே விஷ் மற்றும் அகா அழைப்பில் இணைய, "துருவன் தான் எங்க எல்லாருக்கும் முன்ன இருந்தே லவ் பண்ற ஆளு மகி" என்று பல வருடம் தன் மனதோடு பூட்டிவைத்திருந்த ரகசியத்தை ஜான் பளிச்சென்று போட்டிருந்தாள்.
"துருவன் லவ் பண்றானா? யார?" என்று விஷ் வினவ,
"நம்ம வாண்டு குட்டிய தான்டா" என்று ஜானும் கூறிவிட்டாள்.
"ஏதே?" என்று அகா வினவியதும் தான் அவளும் அழைப்பிற்குள் வந்துவிட்டதைக் கண்டு அதிர்ந்த ஜான், "அச்சச்சோ உளறிட்டன்" என்க,
மகி "உனக்கெப்டி தெரியும்?" என்றான்.
துருவன் மனதிலும் அதே கேள்வி எழுந்தபோதும் அதை அவன் கேட்டுக்கொள்ள வில்லை. அவனுக்கு அகா தன்னை என்ன நினைப்பாளோ என்ற பயம் தான் இருந்தது.
"அ..அது ரொம்ப வருஷம் முன்ன" என்று தடுமாறியவள், "து..துரு" என்க,
"நீங்கப் பேசுங்க நான் அப்றம் வரேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
"போச்சு" என்றவள், "அகா.." என்க,
"நான் அப்றம் பேசுறேன் ஜான்" என்று அவளும் இணைப்பிலிருந்து விலகியிருந்தாள்.
"அடராமா" என்றவள், "டேய் நீயும் போய்டாதடா" என்று கூற,
"இருக்கேன் இருக்கேன். என் பொண்டாட்டி அம்மாவோட கோவிலுக்குப் போயிருக்கா. அவ வர்றதுக்குள்ள பேசிமுடி" என்றான்.
"அதுசரி.. உனக்கு ஒரு நம்பர் அனுப்பினா அதோட கால் ஹிஸ்ட்ரி, லொகேஷன் எல்லாம் அனுப்ப முடியுமா?" என்று ஜான் கேட்க,
"முடியும். எதுக்கு உனக்கு? யார் நம்பர்?" என்றான்.
மதி கூறிய அனைத்தையும் சுருக்கமாகக் கூறி முடித்தவள், "கொஞ்சம் சீக்கிரம் முடியுமாடா?" என்க,
"ம்ம் முடியும் ஜான். மாடிக்கு வரவா?" என்றான்.
"ம்ம் சரிடா" என்று இணைப்பைத் துண்டித்தவள் மாடிக்கு வந்திட, அவனும் தனது மடிக்கணினி மற்றும் அலைப்பேசியோடு மாடிக்கு வந்திருந்தான்.
அங்குத் துருவன் வீட்டுக்குள் நுழைந்த அகாவைக் கண்ட வித்யா, "வா அகா" என்க,
"எங்க அத்தை அவன்?" என்றாள்.
அவள் சத்தம் கேட்டு அறைக்கதவைத் திறந்துக் கொண்டு வந்த துருவன், அவளை அழுத்தமாகப் பார்க்க, "வெளிய போனும் வா" என்றாள்.
"என்னடா எதும் பிரச்சினையா? சண்டையா உங்களுக்கு?" என்று வித்யா கேட்க,
"இல்லை அத்த. கோவிலுக்குப் போகனும்னு கூப்பிட்டிருந்தேன். இன்னும் ஆளைக்காணும்னு தான்" என்றாள்.
"சரிடா" என்றவர் சென்றுவிட, அவளுடன் வெளியேறினான். அமைதியாக இருவரும் அவர்கள் எப்போதும் செல்லும் பூங்காவை அடைய, "ஏன்டா என்கிட்ட சொல்லலை?" என்றாள்.
"ஏ நான் யார்கிட்டயுமே சொல்லலை" என்று அவன் கூற,
"அப்ப ஜானுக்கு எப்படி தெரியும்?" என்றாள்.
"சத்தியமா எனக்கும் அது தெரியலை அகா" என்று துரு கூற,
"சரி எப்போதிருந்து?" என்று கேட்டாள்.
தன் பின்னந்தலையைக் கோதியபடி, "தெரியலை" என்று அவன் கூற,
"என்னடா உலறுற?" என்றாள்.
"அகா சத்தியமா நான் அவளை இன்னவரை தப்பா ஒரு பார்வை பார்த்தது இல்லை" என்று அவன் முடிக்கும் முன் பளாரென்று ஒரு அறை விட்டாளே பார்க்கனும்.
அதில் அரண்டு விழித்தவனைப் பார்த்து முறைத்தவள், "நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு" என்று கூற,
"நா.. நான் சின்ன வயசுல இ..இருந்தேதான். அ..அப்போ லவ்னு தெரியலை. ஆனா.. பிறகு வளர வளரப் புரிஞ்சுது" என்றான்.
மேலும் தானே தொடர்ந்தவன், "யார்கிட்டேயும் சொல்லத் தோனலை என்பதைவிட சொல்லப் பயம். நம்ம வீட்டு பொண்ணு மாதிரி பார்த்த பொண்ணு மேல எனக்கு மட்டும் வேற எண்ணம்னு சொன்னா என்ன நினைப்பாங்களோனு" என்று கூற,
"அவளுக்கும் தெரியாதா?" என்று கேட்டாள்.
'தெரியாது' என்பதுபோல் தலையசைத்தவன், "எனக்கு இளானா ரொம்ப பிடிக்கும். துருதுருனு இருப்பா. அது பிடிக்கும். எப்படி எந்தப் பாயிண்ட்ல லவ்னுலாம் தெரியலை அகா. ஆனா வளர்ந்து காலேஜ் வாழ்க்கை பாதி கடந்த பிறகு தான் அவளை நான் லவ் பண்றேன்னே ரியலைஸ் பண்ணேன். அப்ப அவ ஸ்கூல் கிட். எனக்கு எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுனு தெரியலை. ரொம்ப சின்னப் பொண்ணுனு நானும் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டேன்" என்றான்.
"நாங்க உன்னைத் தப்பா நினைப்போம்ன்னு நினைச்சியா துரு?" என்று அகா கேட்க,
"ஏ..இல்ல.." என்றவனுக்கு வேறு என்ன பேசவென்று தெரியவில்லை.
அவள் கேட்ட கேள்வியும் உண்மை தானே என்று மனம் எடுத்துக் கூறியதால் கூட இருக்கலாம்.
"நம்ம பிரண்ட்ஸ்னு நீ எல்லாத்தையும் சொல்லனும்னு எதிர்ப்பார்க்கலை துரு. ஆனா நீ, நாங்க உன்னைத் தப்பா நினைச்சுப்போம்னு மறைச்சது தான் வலிக்குது" என்று அகா கூற,
"நீ கேட்குறதுக்கு பதில் சொல்ல முடியலை அகா. நிஜமா அது உண்மை தான். நீங்க என்ன நினைப்பீங்களோனு தான் மறைச்சேன். நீங்க எல்லாரும் குழந்தையா பார்க்கும் ஒருத்திய நான் காதலியா பார்க்குறேன்னு சொன்னா என்ன நினைப்பீங்களோனு பயம். ஆ..ஆனா" என்றவனுக்கு அதை நியாயம் செய்யக் காரணங்கள் கிடைக்கவில்லை.
"யாரோ ஒருத்தருக்கு பார்த்துக் கட்டி வைக்குறதுக்கு இளாவை உனக்குக் கொடுப்பதில் எங்களுக்கு என்னடா பிரச்சினை?" என்று அகா கூற,
"நீ இளாவுக்கு அக்காவா இருக்கலாம். ஆனா இதை அத்தை மாமா சொல்லனும் அகா" என்று கூறினான்.
"அவங்க சின்ன வயசுல இருந்து உன்னைப் பார்க்குறாங்கடா. உன்னைப் பத்தி நல்லா தெரியும். நல்ல பையன், நல்ல வேலைல இருக்க, நல்ல குடும்பம்னு இருக்கும்போது என்ன சொல்லப் போறாங்க? நீ எதுவும் லூசுபோல யோசிக்காத" என்று அகா கூற, மெல்ல தலையசைத்தான்.
"இளாக்கிட்ட சொல்லனும்னு உனக்குத் தோனலையா? எப்படிடா அவ்வளவு நம்பிக்கை? அவ வேற யாரையும் லவ் பண்ணிருந்தா என்ன பண்ணுவ?" என்று அகா வினவ,
லேசாகச் சிரித்தவன், "அவள பத்தி உனக்குத் தெரியாதா? புத்தக புழு. அவ படிப்பைத் தவிர வேற எதையும் யோசிக்க மாட்டா. அன்ட் அவ லவ் பண்ண மாட்டானு என் உள்மனசு சொல்லிச்சு. ஒரு நம்பிக்கை அகா. உனக்குப் புரியாதா என்ன? நம்ம லவ் பண்ற ஒருத்தங்க.. அவங்கள பத்தி நல்லா தெரிஞ்ச பிறகு.. ப்ச்.. அது ஒரு ஃபீல். அவ எனக்குதான்னு" என்றான்.
அதில் மென்மையான புன்னகையுடன் "ஷி இஸ் லக்கி" என்று அகா கூற,
"ம்ஹீம்.. அவ கிடைச்சுட்டா நான் தான் லக்கி" என்றான்.
அங்குத் தீவிரமாகத் தனது மடிக்கணினியில் செயல்பட்ட விஷ், "லொகேஷன் ரொம்ப ஈசியா புடிச்சிடலாம். நான் சொல்றேன் மதி போய் அங்க பார்க்கட்டும். அப்ப நீ கால் பண்ணு அவன் ஐடென்டிபை பண்ணிப்பான்" என்று கூற,
"ம்ம் நல்ல ஐடியாடா. மகி இவன் சொல்ற ஏரியா போய் நீ கால் பண்ணு. நாங்க இன்ஸ்டிரக்ட் பண்ணுறோம். அவன் இருக்குற இடத்துக்கு நீ பக்கத்துல போனதும் நான் அவனுக்குக் கால் பண்றேன்" என்று ஜான் படபடவென்று கூறினாள்.
அவள் தலையிலேயே நறுக்கென்று கொட்டிய விஷ், "அவன் செத்துட்டான் பக்கி. அவன்கிட்ட ஏது ஃபோனு?" என்று கேட்க,
"அய்யோ மறந்துட்டேன்டா" என்றாள்.
"பரவால நான் வந்து வந்து கேட்டுப்பேன். நான் இடம் மாற எம்புட்டு நேரம் ஆகப்போகுது. கண்ண மூடித் திறந்தா இங்க வந்துட்டு திரும்ப அங்க போகப் போறேன்" என்று மதி கூற, அகாவும் துருவும் வந்து சேர்ந்தனர்.
ஜான் திருதிருவென விழிக்க, "என்ன நடக்குது இங்க?" என்று அகா கேட்டாள்.
விஷ் சுருக்கமா அனைத்தையும் கூறி முடிக்க, "நைஸ் ப்ளான்டா" என்று துரு கூறினான்.
அவனது லேசாகச் சிவந்த கன்னத்தின் ஓரத்தைப் பார்த்து அரண்டு போன ஜான் 'அடி வாங்கிருக்கான் போலயே? ஆனா அகாக்கு இவன் இளாவ லவ் பண்றதுக்கு பிராப்ளம் இருக்காதே? எதுக்கு அடி வாங்கிருப்பான்?' என்று எண்ணியபடி,
"துரு சாரிடா" என்றாள்.
"ஏ ஆமா உனக்கு எப்படி தெரியும்?" என்று அகா வினவ,
"அதுவா.." என்றவள் அன்றைய நினைவைக் கூறினாள்.
அவர்கள் கல்லூரி பயின்று கொண்டிருந்த காலம் அது.. அன்று ஒரு மாலைப் பொழுது அகாவின் வீட்டில் அகா, துரு மற்றும் விஷ் அகநகையின் தாய் தந்தை கல்யாண புகைப்படங்கள், அவர்களது சிறு வயது படங்கள் கொண்ட ஆல்பத்தினைப் பார்த்துக் கொண்டிருக்க, விஷ்வேஷின் அலைப்பேசி ஒலித்தது.
எடுத்துக் கொண்டு பால்கனி சென்றவன் பேச, அகாவையும் அவளது தாய் அழைத்தார்.
அவள் எழுந்து சமையலறை செல்ல, ஆல்பத்தில் அடுத்த பக்கத்தைத் திருப்பிவிட்டு துருவன் கண்கள் பளபளக்க அதைப் பார்த்தான்.
அப்போதே அங்கு வந்த ஜான், அவனது கண்களின் மின்னல் வெட்டில் புருவம் சுருக்க, திருட்டுத்தனமாகச் சமையலறலயைப் பார்த்துக் கொண்டவன், ஒரு புகைப்படத்தினை எடுத்துத் தனது சட்டைப்பையில் மறைத்துக் கொண்டு அடுத்த பக்கத்தினைத் திருப்பினான்.
அதைப் புரியாத பார்வையோடு பார்த்தபடி வந்த ஜான் அவனருகே அமர, சட்டென வந்தவள் அரவத்தில் திடுக்கிட்டுத் திரும்பினான்.
"என்னடா இவ்வளவு ஷாக்கு?" என்று அவள் வினவ,
"திடீர்னு வந்து இப்டி உக்காந்தா.. அதான்" என்று சமாளித்தான்.
அவன் சட்டைப் பையில் எட்டி எட்டி பார்க்க முயற்சித்தவள், "டேய்.. அந்த ரிமோட்ட எடுத்துத் தாடா" என்க,
"இங்க தான இருக்கு" என்றபடி குனிந்து அதை எடுத்தான்.
அப்போது திறந்துகொடுத்த சட்டைப் பைக்காட்டிய புகைப்படத்தில் சிறு குழந்தையாய் பட்டுப்பாவாடை சட்டையில் சிரிக்கும் இளாவின் முகம் லேசாகத் தெரிய, 'இளா மாதிரி இருக்கே' என்று எண்ணியவள் ஆல்பத்தைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
அகா பழச்சாறுடன் வர, விஷ்ஷும் வந்து அமர்ந்தான். முன் பக்கத்தைத் திருப்பிய ஜான், "ஏ இங்க என்ன போட்டோவ காணும்?" என்க,
அதைப் பார்த்த அகா, "ஏ அங்க இளா ஃபோட்டோ இருக்கும் ப்பா. இதோ இந்தப் பிக்ல நான் போட்டிருக்குற இதே போலப் பாவட சட்டை போட்டு உச்சு குடுமி போட்டுட்டு செம்ம கியூட்டா இருப்பா" என்றபடி கீழே தேடிய அகா, "காணும்போல" என்றாள்.
சற்றே பதட்டமடைந்த துரு, "எடுக்கும்போது உள்ள எங்கேயும் விழுந்துருக்கும் அகா. தேடிபாரு. இங்க தான் இருக்கும்" என்று கூற,
"ம்ம்.. உள்ள விழுந்துருக்கும்னு நினைக்குறேன்" என்று கூறினாள்.
'அடப்பாவி.. நீயே எடுத்து வச்சுகிட்டு என்னமா நடிக்குற? ம்ம்.. அப்படி போகுதா கதை.. சரிடா ராசா சரி' என்று எண்ணிக் கொண்ட ஜானுக்கு சிரிப்பாகத்தான் வந்தது.
மேலும் ஒருநாள் அந்தப் புகைப்படத்தைத் தனது புலனத்தில் ஸ்டேடஸில் வைத்து ஒரே நிமிடத்தில் அவன் அதை எடுத்தும் இருக்க, அந்த ஒருநிமிட இடைவெளியில் அதைப் பார்த்துவிட்ட ஜான் 'பய உண்மைலயே லவ் தான் பண்றான் போல' என்று கூறிக் கொண்டாள்.
அதன் பிறகு இளா முன்பான அவனது முகபாவங்களை வைத்துச் சிரித்துக் கொள்பவள், அவனாகக் கூறாது அதைப் பற்றிக் காட்டிக் கொள்ளாது இருந்தாள்.
பாவை அனைத்தையும் கூறி முடிக்க, “நீ எப்புடி ஜானு சீக்ரெட்லாம் மெயிண்டேன் பண்ண இத்தனை வருஷம்?" என்று மதி வியந்தான்.
"அப்பவே தெரியுமா உனக்கு" என்று கேட்ட துருவனுக்கு லேசாக வெட்கம் எட்டிப் பார்க்க, தன் தலையைக் கோதி தன்னை சமன் செய்துக் கொண்டான்.
"சரி இப்ப என் பொணத்த தேடுவோமா?" என்று மதி யாவரையும் நடப்புக்குக் கொண்டுவர,
"டேய் ஆமாண்டா.. என் மகிய கண்டுபிடிக்கனும்" என்று ஜான் கூறினாள்.
மீண்டும் அவனது இலக்கத்தின் பயன்பாடுள்ள இடத்தைப் பார்த்து விஷ் கூற,
துருவன், "டேய்… நானும் மதியும் போறோம். என்னோட ஃபோன் வச்சு டிராக் பண்ணி ரெண்டு லோகேஷனோட டிஸ்டன்ஸ சொல்லு" என்று கூறி மதியுடன் புறப்பட்டான்.
-வருவான்...