எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 3

S.Theeba

Moderator
இரவு முழுவதும் தூக்கமின்றி புரண்ட அபிராமியை அதிகாலை நான்கு மணிக்கே தூக்கம் எட்டிப் பார்த்தது. தன்னை மறந்து தூங்கியவளை மேசையில் இருந்த சிறிய கடிகாரத்தின் அலார்ம் ஓசை எழுப்பியது. திரும்பி நேரத்தைப் பார்த்தவள் பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள். இன்று கட்டுரை ஒன்றை அவள் கொடுக்க வேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக தனக்கிருந்த குழப்பத்தில் அது தொடர்பாக ஒரு வரிகூட எழுதவில்லையே என்ற நினைவின் பதட்டமே அது.
நேரத்திற்கே ஆபிஸ் சென்று கட்டுரையை எழுத வேண்டும் என்று முடிவெடுத்து எழுந்தவள் கட்டிலில் கிடந்த அலைபேசியை அப்போதுதான் கவனித்தாள். நேற்று அவனுடன் பேசப் பயந்து அலைபேசியை நிறுத்தி வைத்தது நினைவில் வந்தது. அதனை கையில் எடுத்தவளுக்கு இப்போதும் அதனை ஆன் செய்யப் பயமாகத்தான் இருந்தது.
தன் முடிவு அவனுக்குத் தெரிந்திருக்கும். அதனைக் கேள்விப்பட்டதும் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கவே மனதில் கிலி உண்டானது. 'அவன் சொல்லை மீறி திருமணத்திற்கு நான் சம்மதம் சொன்னது அவனை எந்தளவிற்கு கோபப்படுத்தி இருக்குமோ..? நேற்று இரவு எத்தனை முறை அழைப்பை ஏற்படுத்தியிருப்பான்...? நான் மொபைலை ஓவ் பண்ணி வைத்தது வேறு அவனை சீண்டியிருக்குமே'
என்று யோசனையுடன் ஆன் செய்தாள். அவன் இரவும் பல அழைப்புகளை மேற்கொண்டிருந்தான். வந்திருந்த குறுந்தகவலை வாசித்தாள்.
‘நேரில் சந்திக்க வேண்டும். நேரத்தை குறிப்பிடவும்' என்று மிக மிக சுருக்கமாக அனுப்பியிருந்தான்.
‘நேரில் சந்திக்கும் போது அவனுக்கு என்ன பதிலை என்னால் சொல்ல முடியும். நான் செய்தது சரியா...? என் பெற்றோரின் மகிழ்ச்சிக்காக என் எதிர்கால வாழ்க்கையைப் பணயம் வைத்து விட்டேனோ...?' என்று மனம் பெரும் சிந்தனை வசப்பட்டிருந்தது.
‘ஏன் அவருக்கு இந்தத் திருமணம் பிடிக்காவிட்டால் அவரே தன் வீட்டில் சொல்வதுதானே...? என்னிடம் சொன்னதை அப்படியே அவர்கள் வீட்டில் சொல்வதுதானே?' என்று தனக்குத் தானே பேசியபடி அவனுக்கு எந்தப் பதிலும் அனுப்பாமலேயே அலுவலகம் செல்ல ஆயத்தமானாள்.
இளஞ்சிவப்பு நிறத்தில் அனார்கலி சல்வார் அணிந்து சிறிதளவு பவுடர், குட்டியாக ஒரு பொட்டு, ஒற்றைப் பின்னல் என மேலதிக ஒப்பனை எதுவுமின்றி ஆயத்தமாகித் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்ல புறப்பட்டாள்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்த நளாயினி அவளைக் கண்டதும்
“என்னடி இவ்வளவு நேரத்தோடு புறப்பட்டுட்ட. டீ, டிபன் எதுவும் சாப்பிடலையா?”
"இல்லக்கா, அவசரமாக ஆபிஸ் போகணும். எங்க ஸ்ரவன் குட்டி இன்னும் தூங்குறானா..?" (ஸ்ரவன் நளாயினியின் ஒரே மகன், மூன்று வயது சுட்டிப் பயல்)
“ஆமா இன்னும் எழுந்துக்கல”
“ஓகே பாய்க்கா..”
"இந்தா இந்த டீயையாவது குடிச்சிட்டுப் போ. சூடாத்திக் கொணர்ந்திருக்கன்" என்றபடி அவளது கையில் டீ கப்பைக் கொடுத்தார் சரோஜா.
"டைமாகுதம்மா.." என்று சிணுங்கியபடியே நின்று கொண்டே டீயைக் குடித்தாள்.
அதற்கிடையில் உள்ளே சென்று அபிராமிக்கு அலுவலகம் கொண்டு செல்லவென மதிய சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுத்த சரோஜாவிடம் "அப்பா எங்கம்மா?” என்றாள்
“அவரும் இன்று ஏதோ எக்ஸாம் இருக்கென்று வேளைக்கே காலேஜ் போயிற்றார்.(குமார் தனியார் கல்லூரியில் பேராசிரியர்).அப்புறம் மாப்பிள்ளை வீட்டில் சொல்லியாச்சு. நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வைச்சிடுவம் என்றாங்க. அவங்களும் நாள் பார்ப்பாங்க. நாமளும் நம்ம சர்மா ஐயாவிடம் சொல்லி பார்க்கணும். சீக்கிரமே கல்யாணத்தையும் செய்து முடிச்சாத்தான் எங்களுக்கு நிம்மதி...” என்றார்.
"ம்ம்ம்.." என்று மட்டும் பதிலளித்தாள்.
“நளாயினி நீயும் உன் புருஷன்கிட்ட தகவல் சொல்லிடு. அப்பா வந்ததும் பெரிய மாப்பிள்ளை கிட்ட பேசச் சொல்றன்.." என்றார். (நளாயினியின் கணவன் துவாரகன் சவுதியில் இஞ்சினியராக வேலை பார்க்கிறான்)
தாயிடமும் தமக்கையிடமும் கூறிவிட்டு தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு அலுவலகம் புறப்பட்டாள்.
அவள் அலுவலகம் வந்ததும் ஓடி வந்து அணைத்த அவளது தோழியும் குமாரின் தங்கை மகளுமான சரஸ்வதி "வாடி கல்யாணப் பெண்ணே... சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப்போகிறாய் போல" என்றாள்.
“எப்பவும் உனக்கு சாப்பாட்டு நினைப்புதான். சரியான சாப்பாட்டு ராமி”
என்றவள் பார்வையில் வியப்புடன் கூடிய கேள்வி இருந்தது. அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவள்
“நேற்று நைட்டு அத்தை ஹோல் பண்ணி அம்மாவுக்கு சொல்லிட்டாங்க. உடனேயே உனக்கு நான் ஹோல் பண்ணினேன். பட் உன் மொபைல் வேர்க் பண்ணல. என்னடி நைட் உன்னவருடன் கனவில் டூயட் பாட டிஸ்டர்ப்பாக இருக்குமென்று மொபைலை சுவிட்ச் ஓவ் பண்ணினாயோ” என்று கலாய்த்தாள்.
"நானே செம கடுப்பில் இருக்கன் நீ வேற"
"ஏன்டி...? என்ன ஆச்சு...? உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கென்றுதானே அத்தை சொன்னாங்க…"
தன்மீது கொண்ட அளவற்ற அக்கறையில், கவலையுடன் கேட்கும் தன் உயிர்த்தோழியிடம் தன் இக்கட்டான நிலையைக் கூறத் துடித்த மனதிற்கு ஒரு குட்டைப் போட்டு அடக்கி வைத்தவள், "ஒன்றுமில்லையடி..., வரும் வழியில் ஒரு சின்னத் தகராறு... அதுதான் ரென்சனாயிற்றன்.... சாரிடி...." என்றாள்.
சரஸ்வதி "ஓகே..., ஓகே..., ஆமா எப்போ நிச்சயதார்த்தம்....?"
"தெரியலடி... இனித்தான் நாள் பார்ப்பாங்க"
என்று கூறியபடியே தன் இருக்கையில் வந்தமர்ந்தவள், தன் பணியில் ஈடுபட்டாள்.
மாலையில் ஆபிஸிலிருந்து புறப்பட்ட அபிராமி அலுவலகம் இருக்கும் வீதியின் வளைவில் தன் ஸ்கூட்டியைத் திருப்பவும் எதிரே வந்த கார் ஒன்று அவள் ஸ்கூட்டிக்குக் குறுக்காக வந்து நிற்கவும் தடுமாறிப் போனாள். சடன்பிரேக் போட்டு ஸ்கூட்டியை நிறுத்தியவள் கோபத்துடன் அந்த காரை ஓட்டி வந்தவனைத் திட்ட வாயைத் திறந்தாள். அதிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் பசைபோட்டு ஒட்டினால் போல் வாய் தன்பாட்டிலேயே மூடிக்கொண்டது.
காரிலிருந்து இறங்கிய தமிழினியனைக் கண்டதும் உள்ளூர ஏற்பட்ட உதறலை வெளியில் காட்டாமல் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு இறங்கி நின்றாள்.
“ஆமா ஹோல் பண்ணினால் ஆன்ஸர் பண்ண மாட்டிங்களோ? மெசேஜுக்கும் ஒரு ரிப்ளை இல்லை..”
“அது.. அது..”
“ஓகே உன்கூட கொஞ்சம் பேசணும். நடுரோட்டில் நின்று பேசுவது அழகில்லை. சோ, அதோ தெரியுதே ரெஸ்டாரன்ட் அங்க போவோம்” என்று சொன்னவன் அவளை ஸ்கூட்டியை எடுக்குமாறு சைகை செய்து விட்டு தன் காரில் ஏறப் போனான்.
“அது எப்படி… ரெஸ்டாரன்ட்... யாரும் பார்த்தால்..”
“தப்பாக நினைக்க மாட்டார்கள். அதுதான் உங்க வீட்டில் ஓகே சொல்லிட்டியே” என்றவன் தன் காரில் ஏறி ஸ்ரார்ட் செய்தான். இன்று அவன் என்ன சொல்லப் போகின்றானோ என்று மனம் தவித்தாலும் வேறு வழியின்றி ஸ்கூட்டியை அந்த ரெஸ்டாரன்ட் நோக்கி செலுத்தினாள்.
அங்கே சென்று அமர்ந்ததும் வந்து நின்ற பணியாளிடம் இரண்டு மாதுளை ஜூஸ் கொண்டு வருமாறு பணித்தவன், அவளிடம் மாதுளை ஜூஸ் பிடிக்கும்தானே என்றும் கேட்கத் தவறவில்லை.
பணியாள் அகன்றதும் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்து அமர்ந்தவன்,
“ஓகே இப்போ சொல்லு..” என்றான்.
“எ.. என்ன?” என்று அவள் தடுமாறவும்,
“நான் உன்னிடம் தெளிவாகத் தானே கூறினேன்... கல்யாணம் பண்ணிக்க இப்போ என்னால் முடியாது என்று. உன் வீட்டில் என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லச் சொன்னேன்.... ஆனால் நீ என்ன பண்ணி வைச்சிருக்காய்...."
“அது.. நான்..”
“என்னைப் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தை சொல்வதில் உனக்கு என்ன கஷ்டம்?”
அவன் பேசியதில் சற்றே உண்டான எரிச்சலில் “என்னால் அப்படி எல்லாம் பட்டென்று வீட்டில் சொல்ல முடியாது. அவங்க இந்தக் கல்யாணத்தை நினைச்சு ரொம்பவே சந்தோசப்படுறாங்க. இந்த டைமில் என்னால் சொல்ல முடியவில்லை..” என்று தொடர்ந்து பேசியவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஊடுருவும் அவனது பார்வையின் வீரியத்தை தாங்க முடியாது மீண்டும் தலை குனிந்தவள்.
“அதுதான் அன்றே சொன்னேனே” என்றாள்.
“நானும் சொன்னேன் தானே.. எனக்கு இந்த கல்யாணமே பிடிக்கல என்று”
உள்ளூர எழுந்த சின்னத்தில்,
“என்னைப் பிடிக்காவிட்டால் நீங்களே உங்கள் வீட்டில் சொல்லி இந்தக் கல்யாணத்தைத் தடுத்திருக்கலாமே..."
“நான் உன்னைப் பிடிக்கவில்லை என்றால் அது உனக்கு அவமானம். நீ சொன்னால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”
“என்னால் என் வீட்டில் எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் நான் மறுப்பதற்குக் காரணம் கேட்பார்கள்”
“என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லு.”
“அதுதான் ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டால்....”
தமிழினியன் சொல்வதறியாது நின்றான். சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்தியவன் "இதோ பார், இன்னும் கல்யாண டேற் பிக்ஸ் பண்ணல. என்ன செய்யுறியோ... அது உன் பிரச்சினை. பட் கல்யாணத்தை நிறுத்தப் பார். இல்ல நீதான் பின்னாடி கவலைப்படுவாய்..."
சொல்லியபடியே வந்திருந்த ஜூஸை மடமடவென்று குடித்தான். அவள் குடிக்கும்வரை காத்திருந்தவன்,
“ஓகே.. இனி உன் விருப்பம்.. முடிவெடு” என்று கூறி விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தவளோ இனி விதிப்படி நடக்கட்டும் என்று முடிவெடுத்தாள்.
இரவு படுக்கையில் இருந்தவள் கடந்த வாரம் வீட்டில் நடைபெற்ற நிகழ்வை மீண்டும் அசைபோட்டாள்.
 

Nagajothi

Member
அருமை ???, இனியன் வீட்டில் திருமணத்தை நிறுத்த சொல்ல மாட்டானாம் எதை சொல்லி நிப்பாட்ட என்று அபி கேட்டால் அவனிடம் பதில் இல்லை ஆனால் அபி நிப்பாட்ட சொல்கிறான் ???
 
Top