எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 12

S.Theeba

Moderator
காதல் 12

தன் எதிரே வந்து நின்ற நிஷாந்தினியை காதல் பொங்க பார்த்தான் தனஞ்சயன். ஒரு மாதமாக அவளைக் காணாது தவித்த தவிப்பிற்கு அங்கேயே அவளைக் கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை மிகவும் பிரயத்தனப்பட்டு அடக்கினான்.

வந்ததிலிருந்து அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை என்பது சற்று உறுத்தினாலும் அதனைப் புறந் தள்ளிவிட்டு அவளுக்கென்று சிங்கப்பூரில் இருந்து வாங்கிக் கொண்டுவந்த நகைப்பெட்டியை எடுத்து அவள் முன் நீட்டினான்.
“பாப்பு.. இது உனக்காக நான் தேடியலைஞ்சு வாங்கினேன்மா. பிடிச்சிருக்கா?” என்று அவள் கிட்டே சென்று கொடுக்க முனைந்தான். இருவருக்கும் குறுக்கே புகுந்த தனம்
“இதோ பாரு தம்பி, இந்த கிஃப்ட் குடுக்குற வேலையெல்லாம் வேணாம். அதை அவள் கட்டிக்கப் போறவர் வாங்கிக் கொடுப்பார்” என்றார்.
“அதை என் பாப்பு சொல்லட்டும்” என்றான் ஓர் நிமிர்வுடன்.
அவனுக்கு தெரியும் அவனவளால் அப்படி ஒரு வார்த்தையைக் கூறமுடியாது என்று. அந்த நம்பிக்கை தந்த நிமிர்வே அது.

ஆனால் அவளிடம் இருந்து வெளிவந்த வார்த்தைகளோ அவன் மனதை சுக்குநூறாக உடைத்தது. தன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.
“பாப்பு.. நீ என்ன சொல்கிறாய்?” என்றான் தடுமாற்றத்துடன்.
அவள் மீண்டும் அதே வார்த்தைகளையே உதிர்த்தாள்.
“நான் அத்தை சொல்லும் மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் செய்வேன்” என்றாள்.
அவள் கூறியது அவன் உயிர் வரை சென்று ஆட்டம் காண வைத்தது.
“பாப்பு நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். என் கூட வா இப்பவே கூட்டிட்டு போயிடுறன். உன்னை மகாராணி மாதிரி வைச்சிருப்பேன். பிளீஸ் டி”
“ஹலோ அதுதான் அவள் சொல்றாளே. அப்புறம் என்ன..” என்று பேசிக் கொண்டிருந்த சஞ்யுக்தா அவனது தீப் பார்வையில் கப்பென்று வாயை மூடினாள்.
திரும்பி தன்னவளைப் பார்த்தான்.
“பாப்பு என்னாச்சுடி உனக்கு. முதல்ல என்னை நிமிர்ந்து பாரடி. யார் என்ன சொன்னாலும் அது பற்றி எனக்கு கவலையில்லை. உன்னைப் பார்க்காம, உன் கூட பேசாமல் நான் எவ்வளவு தவிச்சுப் போனேன் தெரியுமா? அந்தத் தவிப்பு உனக்கு இல்லையாடி?” என்றான்.
அவன் இவ்வளவு கேட்டும், தன் நிலையில் இருந்து இறங்கிவந்து கெஞ்சியும் அவள் அவனை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை எனவும் வருத்தமும் கோபமும் ஒருங்கே உண்டானது.
“என்னடி ஆச்சு உனக்கு? எனக்குப் பதில் சொல். இப்படி அமைதியாய் இருந்தால் எந்த முடிவும் கிடைக்காது. உன்னை விட்டு என்னால் இருக்க முடியாதுடி”
'ஓகோ… விட்டுட்டு இருக்கவே முடியாத தெய்வீகக் காதலா..?' என்று உள்ளுக்குள் நொறுங்கிக் கிடக்கும் மனதின் வலியை தனக்குள்ளேயே புதைத்தவள்,
“இங்க பாருங்க சார்.. அதுதான்… சொன்னேனே. இனி என் வாழ்வில் கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது அத்தை பார்க்கும் மாப்பிள்ளையுடன்… தா.. தான். என்னை மறந்திருங்க.. உங்களை நேசிக்கும் ஒருத்தியை நீங்க… கல்யாணம் பண்ணுங்க சார்” என்று விட்டு உள்ளே செல்லத் திரும்பினாள்.
“நில்லுடி..” என்று அவன் குரல் ஓங்கி ஒலித்தது.
அவனது குரலில் இருந்த கோபத்தினால் விளைந்த பயமா? அல்லது உரிமையான உணர்வை வெளிப்படுத்தும் தன்மையோ ஏதோ ஒன்று அவளைக் கட்டிப் போட அப்படியே திரும்பாமலேயே நின்றாள்.
அவளது சார் என்ற அழைப்பிலேயே அவளது முடிவின் தார்ப்பரியத்தையும் அவள் தன்னிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டாள் என்பதையும் உணர்ந்தவன்,
“நான் இன்னும் பேசி முடிக்கல. மாமா இப்போது சார் ஆகிவிட்டாரா? உன் காதல் அவ்வளவுதானா? ஒரு வார்த்தையிலேயே முடித்துக் கொண்டு போகின்றாய். உனக்கு வேறு யாராலும் ஏதாவது பிரச்சினை என்றால் அதை தூசு மாதிரி தட்டி விட்டு கூட்டிப் போக என்னால் முடியும். சொல்லுடி உன் மனசைத் திறந்து பேசு.. எதுக்காக இப்படி இருக்காய் சொல்லு”
அப்பொழுது ”அதுதான் அவள் உங்களைப் பார்க்கக்கூட விரும்பவில்லை என்று அவள் திரும்பாமல் நிற்பதிலேயே தெரியுதுதானே. வயசுக் கோளாறு உங்ககூட தெரியாம பழகிற்றாள். இப்போ அதை உணர்ந்துதான் அவள் நல்ல முடிவெடுத்திருக்காள். அப்புறம் இன்னமும் எதுக்கு இங்கே நிற்கிறிங்க. இப்படியே நின்றால் வேறு ஒருத்தரை கட்டிக்கப்போற பெண்ணை வீடு புகுந்து பிளாக்மெயில் பண்ணுறிங்க என்று பொலிஸில் கம்ளைன்ட் பண்ணிடுவோம் ” என்றார் தனம்
கட்டுப்படுத்த நினைத்த கோபம் அவர் வார்த்தைகளில் கட்டுக்கடங்காமல் கொதிநிலை யின் உச்சத்துக்கே சென்றது. திரும்பி அவன் பார்த்த பார்வையின் உக்கிரத்தில் தாயும் மகளும் அரண்டு போயினர்.

“ஒரு சின்ன பொண்ண லவ் பண்ணுறதா சொல்லி ஏமாத்தியிருக்கிங்க. உண்மையில் லவ்தானா அல்லது டைம்பாசா? யாருக்குத் தெரியும். அப்புறம் அவளை விட்டுப் போக முடியாத அளவுக்கு என்னதான் செய்தாளோ..” என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் இழுத்தாள் சஞ்யுக்தா.
“ஏய்..” என்று அவளைப் பார்த்து கத்தியவன் கை முஷ்டி இறுக
“எங்கள் காதல் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். அந்த ஆராய்ச்சி உனக்குத் தேவையில்லை. ” என்றவன் திரும்பி நிஷாந்தினியைப் பார்த்தான்.
அவள் வேண்டாம் என்று சொன்னபோதும் அவளைத் தப்பாக யாரும் பேசுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“ஓகே.. உன் முடிவை நீ சொல்லிட்ட. இந்த உலகத்தில் நான் விரும்பிய, காதல் பண்ணிய ஒருத்தி நீதான். நீ மட்டும்தான்.. உன்..” என்றவன் எதையோ சொல்லவந்து முடியாமல் அப்படியே சில நொடிகள் தடுமாறி நின்றான். எதுவும் பேசாது கண்களை இறுக்க மூடி தன்னை ஆசுவாசப்படுத்தியவன்
“ஓகே. உன் முடிவு அதுதான் என்றால் என்னாலும் நீ இன்றி வாழ முடியும்.. வாழ்ந்து காட்டுறேன்” என்று கூறிவிட்டு திரும்பியவன் தன் கையிலிருந்த நகைப்பெட்டியை சுவரில் ஓங்கி அடித்துவிட்டு கடகடவென்று வெளியேறினான்.

அவன் செல்வதை சத்தத்தில் அறிந்தவளது நெஞ்சமோ ஹோவென்று கதறியழ வந்த அழுகையை வாயைப் பொத்தி அடக்கிய படி தன் அறைக்குள் ஓடினாள்.

உண்மையான காதல் கொண்ட இரு நெஞ்சங்களைப் பிரித்து மாபாதகம் புரிந்த குற்றவுணர்வு சிறிதுமின்றி அவன் வீசி எறிந்துவிட்டு சென்ற அந்த நகைப்பெட்டியை தேடி எடுத்தனர் தனமும் சஞ்யுக்தாவும்.

கண்ணைப் பறிக்கும் அழகில் இருந்த அந்த நகை செட் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் சிதறிக் கிடந்தன. அதனை ஒவ்வொன்றாகத் தேடி எடுத்தாள் சஞ்யுக்தா.
“அம்மா.. என்ன ஒரு அழகான செட். நல்ல காலம் இதை தூக்கி எறிஞ்சிட்டுப் போனான். நமக்கு அடிச்சது லக்”
“ஏன்டி, அவன் திரும்பிவந்து நகைகளைக் கேட்டால்…”
“வரமாட்டான்மா.. அவன் தூக்கி எறிஞ்சுவிட்டு சென்ற வேகத்தைப் பார்த்தால் அவன் இந்த நகைக்காக மட்டுமல்ல, இந்த பிச்சைக்காரிக்காகக் கூட இனி திரும்பி வரமாட்டான். அப்படி வந்தாலும் நாம குடுக்குற விதத்தில் குடுத்தால் அப்புறம் இந்த நகையைப் பற்றியா கேட்கப் போறான் “ என்றவள் ஆசையில் கண்கள் மின்ன அந்த நகைகளைப் பார்த்து நின்றாள். அதிலிருந்த நெக்லஸை எடுத்து தன் கழுத்தில் வைத்து கண்ணாடியில் பார்த்தவள்
“அம்மா எனக்காகவே சொல்லி செய்தது போலவே இருக்கல்லம்மா… அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியாய் மூச்சுவிடக் கூடியதாய் இருக்கு. இந்தப் பிச்சைக்காரிக்கு கோடீஸ்வர மாப்பிள்ளை கேட்குதாம்..” என்று கெக்கட்டம் இட்டு சிரித்தாள்.

தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் சென்றவளுக்கு மூச்சு முட்டுவது போல் தோன்றவும் அங்கிருந்த சிறிய கதவைத் திறந்துகொண்டு பின்கட்டுக்குச் சென்றாள். அங்கேயிருந்த கிணற்றின் கல்லில் அமர்ந்தவள் தேற்றுவார் யாருமின்றி ஏங்கி அழுதாள்.
இரண்டு வாரமாக உறக்கமும் உணவும் மறந்து தான் போனாள். இந்த அழுகை மட்டுமே அவளுக்கு ஆறுதலும் அரவணைப்பும் தந்தது.
தான் உயிராய் நினைத்தவனின் துரோகமும் பாசம் வைத்துள்ளவளின் துன்பமும் மனதை அரிக்க விடாமல் அழுதுகொண்டே இருந்தாள்.
'கடவுள் என் வாழ்க்கையை மட்டும் ஏன் இப்படி எழுதிவிட்டார். உண்மையான அன்பென்றது இந்த உலகிலேயே இல்லையா?' என்று புலம்பியவள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து இன்னும் வேதனையில் உழன்றாள்.


தனஞ்சயன் சிங்கப்பூர் சென்ற விடயம் தெரியாமலும் அவனை எப்படி தொடர்பு கொள்வதென்று புரியாமலும் தவித்துப் போனவள் மாலை கல்லூரி முடியவும் இருவரும் சேர்ந்து செல்லும் பார்க்கிலே சென்று அமர்ந்தாள். ஒருவேளை தன்னை தொடர்பு கொள்ள முடியாமல் அவனும் தன்னைத் தேடி இங்கே வரக்கூடுமோ என்ற நப்பாசையிலேயே அங்கே வந்திருந்தாள். வழியில் வாங்கிவந்த பாப்கார்னைக் கொறித்தபடி அங்கே விளையாடிய இரண்டு சிறுவர்களை ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால், மனம் முழுவதும் தன்னவன் தன்னைத் தேடி இங்கே வரவேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது.
 
Last edited:
Top