எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 10

S.Theeba

Moderator
காலை ஒன்பது மணிக்கே மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அமுதம் அங்காடி.

தமிழினியன் வணிகத்துறையில் எம்.ஏ. முடித்தவன். அவன் சிறுவயது முதலே பெரிய கடை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. வளர வளர அந்த ஆசை சுப்பர் மார்க்கெட் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற இலட்சியமாக மாறியது. படித்து முடித்ததும் தன் ஆசையைப் பெற்றோரிடம் கூறினான். அவனது ஆசைக்கு பெற்றோரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவனுக்கு ஊக்கம் அளித்ததோடு ஆரம்பகட்ட நிதியையும் கொடுத்து உதவினர்.

ஆரம்பத்தில் சிறிய இரண்டு மாடிக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அமுதம் என்ற பெயரில் பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றை ஆரம்பித்தான் தமிழினியன். தன் கடின உழைப்பாலும் அயராத முயற்சியினாலும் ஐந்து வருடங்களில் சொந்தமாகவே ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டடத்தை எழுப்பி மிகப் பிரம்மாண்டமாகவும் நவீன முறையிலும் அமுதம் அங்காடி என்ற பெயரிலேயே சுப்பர் மார்க்கெட்ட உருவாக்கினான்.

அமுதத்தில் கிடைக்காத பொருட்கள் என்று எதுவும் இல்லை. பார்த்து பார்த்து அந்த அங்காடியை உருவாக்கியுள்ளான். கீழ்த்தளத்தில் ஒரு வீட்டு சமையலறைக்கு என்ன தேவையோ அவை அனைத்தும் இருந்தன. சிறிதாக ஒரு பார்மசியும் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது தளத்தில் மின் உபகரணங்கள், மூன்றாவது தளத்தில் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு அழகுசாதனப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் என பகுதி பகுதியாக வைக்கப்பட்டிருந்தன. அடுத்த இரு தளங்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை சகலருக்குமான ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன.

அமுதத்திற்குள் நுழைந்தவன் ஒருமுறை சகல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டான். முடிந்ததும் தனக்கென ஐந்தாவது தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று அமர்ந்தான். அமுதத்தின் மானேஜரை அழைத்து, வியாபாரம் விடயமாகக் கலந்தாலோசித்தான். தொடர்ந்து கல்யாண வேலை காரணமாகப் பார்வையிடாது வைத்திருந்த கணக்குகளைப் பார்வையிட்டான்.

வேலை முடிய மதியம் ஆகிவிட்டது.
‘இன்று கேசவன் அங்கிள் வருவதாக அப்பா கூறியிருந்தாரே. ம்ம்.. நேரத்துக்கே போக வேண்டும்' என்று யோசித்தவன், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். அவன் பார்வைக்கு மேசையில் இதய வடிவ பிரேமில் வைக்கப்பட்டிருந்த போட்டோ தென்பட்டது. அந்தப் போட்டோவையே கண்கொட்டாமல் பார்த்தான். தன்னையறியாமலே புன்னகை அவன் வதனத்தை ஆக்கிரமித்தது. சில நாட்களாகவே அந்தப் போட்டோவைப் பார்த்ததும் உடம்பிலும் மனதிலுமுள்ள சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதைப் போலவே இன்றும் உணர்ந்தான்.

அந்த மேசையில் சிறிய இதய வடிவ பிரேமிட்ட அபிராமியின் படம் வைக்கப்பட்டிருந்தது. சம்பந்தம் பேசும்போது மாப்பிள்ளை வீட்டிற்கு அந்தப் படத்தைக் கொடுத்திருந்தார்கள். அந்தப் போட்டோவை நிலா அவனிடம் கொடுத்த போது அவன் அதனை வாங்கவேயில்லை. நிலாவுக்கும் அவனது பிடிவாதம் தெரியும். முதலில் தனது ஸ்டோரை பெரியளவில் உருவாக்கி விட்டே கல்யாணம் என்றான். அது சிறப்பாக முடியவும் மீண்டும் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். ஆனால் அதன்பிறகு தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாக நின்றான். இப்படியே விட்டால் சரிவராது என்று உணர்ந்த நிலா அவனிடம் கேட்காமலேயே பொண்ணு பார்க்க தொடங்கினார். அபிராமியைப் பற்றி அறிந்ததும் விசாரித்தனர். சாதகமும் நன்கு பொருந்தவுமே போட்டோவை வாங்கியிருந்தார். அவன் அலட்சியமாகப் பார்க்காமல் இருக்கவும் அவனது அறையில் இருந்த மேசையில் போட்டோவை வைத்துவிட்டு
“என்ன செய்தாலும். அந்தப் பெண்தான் உனக்கு மனைவி. நான் முடிவெடுத்து விட்டேன்” என்று சொல்லிச் சென்றார். இரண்டு நாட்கள் வரை கோபத்தில் அந்தப் போட்டோவை அவன் பார்க்கவேயில்லை. அந்த மேசையில் இருந்த ஒரு ஃபைலை எடுக்கும்போது அந்தப் போட்டோ தவறி கீழே விழுந்தது. அதை எடுக்கும் போது பார்த்தவன் மனதில் அவளது உருவம் அப்படியே பதிந்துவிட்டது. அந்தப் படத்தையே பிரேமிற்குள் அடக்கியிருந்தான். (என்னாது…..)

அழகிய நீல நிறப் புடவையில் தலைநிறைய மல்லிகைப்பூ வைத்து அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் அதனுடன் பேசத் தொடங்கினான். "அபி... ஏன் என்னை சித்திரவதை செய்கிறாய். இதற்குத்தானே உன்னை ஒதுங்கி போகச் சொன்னேன். கேட்டியா... எத்தனை தரம் சொன்னேன் இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று. கேட்காமல் முடிவெடுத்தாய். இன்று உன்னை நான் கஸ்ரப்படுத்துற நிலைமைக்கு ஆளாக்கி விட்டாயே.... உன்னிடம் பேசாமல் ஒதுங்கிப் போவது எவ்வளவு கஸ்டம் தெரியுமா?” (ரொம்பக் குழப்புறானே…) என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு படத்தை மேசையில் வைத்துவிட்டு தன்னை சமனப்படுத்திக் கொண்டு "யெஸ் கமின்" என்றான். அப்போது உள்ளே வந்த மானேஜர் “சார் டீலர்ஸ் எல்லோரும் இன்னும் ஃபைவ் மினிட்ஷில் ஸூம் மீட்டிங் வந்திடுவாங்க” என்று நினைவுபடுத்தினார்.
“ஓகே ரெடி பண்ணுங்க” என்றவன் மீட்டிங்கிற்கு ஆயத்தமானான். தொடர்ந்து வேலை அவனை நெட்டித் தள்ள அனைத்தையும் மறந்து வேலையில் மூழ்கிவிட்டான்

பிற்பகல் நான்கு மணிக்கு மானேஜரை அழைத்து சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.

சந்தன நிறத்தில் அரக்கு வண்ணக்கரையில் தங்க மயில் ஜரிகையிட்ட அழகிய காட்டன் புடவை அணிந்திருந்தாள் அபிராமி. கழுத்தில் மின்னும் புது மஞ்சள் தாலியுடன் அரக்கு நிறக் கற்கள் பதித்த ஆரமும் அதற்குத் தோதான பெரிய ஜிமிக்கியும் அணிந்திருந்தாள். கைகளில் இரு தங்க வளையல்கள் நடுவில் அரக்கு நிற கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள்.
தன் மாமியார் தொடுத்துத் தந்த மல்லிகைச் சரங்களைத் தன் தலையில் சூடியவள், எதிரேயிருந்த கண்ணாடியில் தன்னையே பார்த்திருந்தாள்.

‘அடியே அபிராமி.. லூசாடி நீ… இத்தனை அலங்காரமும் எதற்காக செய்கிறாய்? இதனை ரசிக்க வேண்டியவன் கண்களுக்கு நீ ஒரு பொருட்டாகவே தென்படமாட்டாய். சும்மாவே உன் மூஞ்சியப் பார்க்க மாட்டார். இதில் நீ மேக்கப் போட்டால் மட்டும் பார்த்திடுவாரா? அப்புறம் ஏன் இந்த அலங்காரம்' என்று சலித்துக் கொண்டாள்.

மாலையில் பாலாவின் நண்பர் குடும்பத்தோடு வருவதால் புதுமணத் தம்பதிகளாக இருவரும் ரெடியாகி இருக்கணும் என்று நிலா கூறியிருந்தார். சாவித்திரியின் ஆலோசனைக்கமைய புடவையைத் தேர்ந்தெடுத்து அபிராமி ரெடியாகியிருந்தாள்.

நான் ஆயத்தமாகிவிட்டேன். இன்னும் அவரைக் காணவில்லையே என்று யோசித்தவளுக்கு அவனை உடனேயே பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உண்டானது. சீச்சி இந்த அறைக்குள் இருந்தால் மனம் தேவையில்லாத ஆசையெல்லாம் படுதே. பேசாமல் கீழே சென்று சாவித்திரியுடனாவது பேசிக் கொண்டிருப்போம் என்று எண்ணியவள் வெளியே செல்ல சாத்தியிருந்த கதவைத் திறக்க முயன்றாள். அப்போது வெளியிலிருந்து அறைக்குள் வர கதவைத் திறந்தான் தமிழினியன். திடீரென கதவு திறந்ததும் நிலைதடுமாறிக் கீழே விழப்போனாள்.

அவளை விழாமல் உடனேயே தாங்கிப் பிடித்தான். பிடிமானமாக ஒரு கையை அவளது இடையைச் சுற்றிச் செலுத்தியிருந்தான். வலது கை அவளது தோளை அழுத்தமாகப் பற்றியிருந்தது. அவளோ பதட்டத்தில் அவனது சட்டையைப் பற்றியிருந்தாள்.

சிறிது நேரம் இருவரும் தம்மை மறந்து ஒருவரையொருவர் கண்வெட்டாது பார்த்தனர். மூச்சுக்காற்று உரசும் தூரத்திலேயே இருவரின் முகமும் இருந்தது. அவனின் முகம் இன்னும் நெருங்கி வந்தது. அந்த நெருக்கம் அவளது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது. பயத்தில் தொண்டைக்குழியில் எதுவோ அடைப்பது போல தோன்றவும் எச்சில விழுங்கி தொண்டையை சரிப்படுத்தினாள்.
அவளும் அவனும் கண்களால் பேசிக்கொண்டனர். சில மணித்துளிகள் வார்த்தைகள் இன்றி மௌனமொழியில் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டனர். அவள் கன்னங்களில் செம்மை பரவவும் அவன் கண்கள் பளபளத்தன. அவனது கண்களில் ஈரத்தில் மினுமினுத்த அவளின் சிவந்த உதடுகள் பட்டன. அவை அவனை வா என அழைப்பது போல அவனுக்குத் தோன்றியது. அதில் ஈர்க்கப்பட்டவன் அந்த உதடுகளில் முத்தமிடக் குனிந்தான். நெருங்கி வந்த அவனது முகத்தை மிக அருகில் காணவும் அவள் கண்கள் தவிப்பால் படபடத்தன.

ஆனால் அந்த ஒற்றை முத்தம் வைப்பதுகூடப் பொறுக்கவில்லை போலும் எங்கிருந்தோ சாவித்திரி அண்ணி.. அண்ணி.. என அழைக்கும் குரல் கேட்டது. திடீரென ஏதோ நினைவில் மனமும் உடலும் இறுகிட தன் முகத்தை அவள் முகத்துக்கருகில் இருந்து மீட்டெடுத்தான். நிற்கும் நிலை உணர்ந்தாற்போல திடுக்கிட்டு அவளைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டான் தமிழினியன். அவன் தள்ளிய வேகத்தில் மீண்டும் விழப் போனவள் அருகிலிருந்த கதவை எட்டிப் பிடித்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

‘ராட்சசன்.. என்ன ஆள் இவர், பொண்டாட்டிய ஆசையாய் கட்டி அணைக்காவிட்டாலும் இப்படி தள்ளி விடாமலாவது இருக்கலாம்' என்று முணுமுணுத்தபடி எழுந்து நின்றாள்.
 

Nagajothi

Member
அருமை ???, ஆக இனியனுக்கு அபியை பிடித்து இருக்கு ஏனோ அவளை பிட்டுக்காத மாதிரி நடிக்கிறான் என்னவாக இருக்கும் ??????
 
Top