எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 14

S.Theeba

Moderator
வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தாய் என்று கேட்டால் நிச்சயமாக நிஷாந்தினிக்குத் தெரியாது. மூளை மட்டுமல்ல உணர்வுகளும் மரத்துப் போனது போலவே தோன்றின. பார்க்கிலிருந்து புறப்பட்டவள் தன் போக்கிலேயே நடந்து வீடு வந்து சேர்ந்து விட்டாள். வீட்டில் அவளது நல்ல நேரத்திற்கு வரவேற்பறையில் யாரும் இல்லை. தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்தக் குட்டி அறைக்குள் புகுந்தவள்தான் இரவு வரை அசையாது அப்படியே இருந்தாள். அழுகை கூட வர மறுத்தது. எல்லாமே சூனியமாகிப் போன உணர்வு மட்டுமே. இருட்டிய பின்னரும் லைட்டைப் போடாமல் அந்த இருட்டிற்குள்ளேயே எதையோ பார்ப்பது போல் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளை இரவு சாப்பிட அழைக்கும் சுபாஷினிகூட வந்து அழைக்காததால் அப்படியே பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள். எப்போது சரிந்தாள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மறுநாள் இதைவிட மிகப் பெரிய இடி தலையில் இறங்கப் போவதை அறியாமல் தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை எழும்போது மனதைப் போல தலையும் வெகுவாகக் கனத்தது. தலையைக் கைகளில் தாங்கியபடி சிறிதுநேரம் அமர்ந்திருந்தவளால் தொடர்ந்து தலைப் பாரத்தை தாங்க முடியவில்லை. எழுந்து போய் தலைக்கு குளித்து விட்டு வந்தாள். ஒரு காஃபி குடித்தால் இந்த தலைப்பாரம் குறையலாம் என்று தோன்றவும் சமையலறைக்குச் சென்றாள். அங்கே காலை ஏழு மணியாகியும் போட்டது போட்டபடியே கிடந்தது. இரவு சாப்பிட்ட தட்டுக்களில் இருந்து சமையல் செய்த பாத்திரங்கள் வரை குவிந்து கிடந்தன. காலையில் காஃபி போட்டிருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக சமையல் கட்டெல்லாம் அலங்கோலமாகிக் கிடந்தது.
அக்கா இப்படி ஒருநாளும் விட மாட்டாளே? அவளுக்கு ஒவ்வொரு சின்ன விசயத்திலும் சுத்தமாக இருக்கணும். சமையல் செய்து கொண்டிருக்கும் போதே அப்பப்போ பாத்திரங்களைப் கழுவி அடுக்கி வைப்பாள். ஆனால், இன்று இந்த சமையலறை இவ்வளவு அலங்கோலமாக கிடக்கின்றதே.. ஒருவேளை அக்காவுக்கு மீண்டும் மசக்கை தொல்லை பண்ணத் தொடங்கிவிட்டதோ? பாவம் அக்கா என்று நினைத்தவள், உடனேயே தன் கவலை, தலைவலி எல்லாவற்றையும் மறந்து, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு சமையலறையைச் சுத்தம் செய்தாள். தனக்கு காஃபி போடும் போது தன் தமக்கைக்கும் சேர்த்து போட்டாள். தனது காஃபியை ஆற்றி மடமடவென குடித்தவள் மற்றையதை எடுத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்றாள். அங்கே அவளைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடியவள் முன்பகுதிக்குச் சென்றாள். அங்கே தனமும் சுபாஷினியின் கணவர் விக்னேஷ்வரனும் அமர்ந்திருந்தனர். விக்னேஷ்வரன் நாளிதழ் ஒன்றில் மூழ்கியிருந்தான். தனம் யாருடனோ அலைபேசியில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
விக்னேஸ்வரனிடம் வந்தவள்
“அத்தான் அக்கா எங்க போயிட்டா? வீட்டில் காணல. கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவன் பதிலேதும் சொல்லாமல் தாயின் முகத்தைப் பார்த்தான்.
தனம் அழைப்பை நிறுத்திவிட்டு “உனக்கென்ன பிரச்சினை?” என்றார்.
“இல்லை அத்தை, அக்காவைக் காணல அதுதான் அத்தானிடம் கேட்டேன்..” என்று இழுத்தாள்.
“ஓகோ பெரிய கழுதையத் தேடுறியா? அது புழக்கடையில கிடக்கு போய் பார்” என்றார்.
குழப்பத்துடனும் யோசனையுடனும் வீட்டின் பின்பக்கம் சென்றாள். அங்கே பல நாட்களுக்கு முன்னர் ஆடு வளர்ப்பதற்கென போடப்பட்டிருந்த கொட்டகை ஒன்று உள்ளது. அந்தக் கொட்டகைக்குள் வெறும் நிலத்தில் படுத்திருந்த சுபாஷினியைக் கண்டதும் அவளது சர்வநாடியும் ஒடுங்கியது. அவளருகே ஓடிச் சென்று அவளை அணைத்துத் தூக்கியவள்,
“அக்கா.. என்னாச்சுக்கா…? ஏன் இங்க வந்து படுத்திருக்காய்? அதுவும் இப்படியொரு இடத்தில்…” என்று பரிதவிப்புடன் கேட்டாள்.
“அது.. அது..” என்று பேசமுடியாமல் திக்கினாள் சுபாஷினி.
“அத நான் சொல்லுறன்” என்று பின்னால் குரல் கேட்கவும் திரும்பி பார்த்தாள். அங்கே தனமும் சஞ்யுக்தாவும் நின்றிருந்தனர்.
“அத்தை.. அக்கா ஏன் இங்க படுத்திருக்கா?”
“இதப் பாரு எனக்கு சுத்தி வளைச்சு பேசெல்லாம் தெரியாது. நேராகவே விசயத்துக்கு வாறன். உங்க அக்கா இனி வீட்டுக்க வரணும்னா அது உன் கையில் தான் இருக்கு”
“என்ன…? புரியல.”
“புரியும்படியா சொல்றேன். என் புருஷனின் அக்கா பையன் ஒருத்தன் இருக்கான். அங்க ஊரில அதுதான் ஈச்சம்பட்டி கிராமத்தில் இருக்கான். அவனை நீ கல்யாணம் பண்ணினா உன் அக்கா வீட்டுக்குள்ள வந்து சந்தோசமா வாழுவாள். இல்லையா இந்தக் கொட்டிலுக்க கிடந்தே சாகட்டும்”
“அத்த, அக்கா பாவம் வயிற்றுல பாப்பா இருக்கு”
“அதைத் தான் நானும் சொல்லுறன். வயிற்றுப்பிள்ளைக்காரி எத்தனை நாளைக்கு இப்படி பட்டினி கிடக்கேலும். நீதான் முடிவு பண்ணனும்”
“அத்த பிளீஸ்.. அக்காவ முதல்ல வீட்டுக்குள்ள கூட்டிப் போவோம். எதுவானாலும் அப்புறம்… பேசலாம்” என்று பீதியில் திணறினாள்.
“ஏய் எருமை, உனக்கு அம்மா சொல்றது புரியலையா? நீ ராசு மாமாவைக் கல்யாணம் பண்ணனும். அப்பதான் உங்க அக்கா இங்க வாழலாம்” என்றாள் சஞ்யுக்தா.
ஏற்கனவே ரணமாகியிருந்த மனசு இப்போது உடைந்தே விட்டது.
“அக்கா…” என்று தமக்கையைப் பரிதாபமாக அழைத்தாள்.
அவள் கண்ணீரோடு நிமிர்ந்து தங்கையைப் பார்த்தாள். தனது கையாலாகாத்தனத்தை எண்ணி அவளது உள்ளமும் உடைந்து அழுவது கூடப்பிறந்தவளுக்கு நன்கு புரிந்தது. ஏற்கனவே காதல் என்று நம்பி ஏமாந்து போய் நடைபிணமாய் இருப்பவளுக்கு அக்காவின் நிலை சொல்லி மாளாத வேதனையை அளித்தது. எழுந்து உட்காரக்கூட முடியாத அளவுக்கு சுபாஷினியின் உடல் பலகீனப்பட்டிருந்தது.
“அக்கா உனக்கு டீ கொண்டு வந்து தரவா?”
“தருவடி தருவ.. உன் அப்பன் வீட்டு சொத்து இங்க கொட்டிக் கிடக்கு.. இதப் பாரடி உங்க அக்கா நேற்றுக் காலையிலிருந்து வாயில பச்சைத் தண்ணி கூடக் குடிக்காம இங்கதான் கிடக்காள். நாங்கதான் குடுக்கல. இனியும் அப்படித்தான். இல்ல உங்க அக்கா மேல அக்கறை இருந்தால் நீ ராசுவக் கட்டிக்க சம்மதம் சொல்லு. இப்பவே உள்ள கூட்டிப் போறோம்” என்றார் தனம்.

அப்போது அங்கே வந்த விக்னேஷ்வரனைக் கண்ட நிஷாந்தினியும் எழுந்து அவனிடம் சென்று “அத்தான், அக்காவப் பாருங்க. நேற்றிலிருந்து தண்ணி கூடக் குடிக்கலையாம். ஏற்கனவே உடம்பு ரொம்ப வீக்காயிருக்கு என்று டாக்டர் சொல்லியிருந்தார். இப்போ இப்படி இருக்காளே.. பிளீஸ் அத்தான்” என்றாள். அவனோ யாருக்கோ வந்த வாழ்வு என்பது போல் அமைதியாகவே நின்றான்.
“அண்ணாதான், இங்க கொண்டு வந்து விட்டதே” என்றாள் சஞ்யுக்தா.
செய்வதறியாது கண்ணீரில் கரைந்து நின்றாள் நிஷாந்தினி. அக்காவை அழைத்துக் கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே செல்லக் கூட யாருமற்ற அநாதைகள். எங்கே தான் போவது. சுபாஷினி வேறு ஐந்து மாதக் கருவைச் சுமந்து நிற்கிறாள். இப்படியே எங்கே தான் போவது? ஐயோ கடவுளே ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கின்றாய்? ஒருத்தன் என்னை நம்ப வைத்து ஏமாற்றினான். இங்கே என்னடாவென்றால் அக்காவின் வாழ்க்கையைப் பணயம் வைத்து கல்யாணம் செய்யக் கேட்கின்றார்கள். ஏற்கனவே மிகவும் பலவீனமாக இருப்பவள். இப்போது இப்படியே இருந்தால்… ஐயோ அக்கா நான் என்ன செய்ய? எதுவுமே செய்ய முடியாதவளாக நிற்கிறேனே. பேசாமல் செத்துப் போய் விடலாமா? ஆனால், அக்காவின் கதி… என்று மனதால் புலம்பி அழுதாள். கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைச் சொரிந்தது.

தனது பலவீனமான கையால் தங்கையின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மெல்லத் துடைத்து விட்டாள். தேற்றுவாரின்றி இரு சகோதரிகளும் வேதனையில் தவித்தனர்.
“போதும்.. உங்க சென்டிமென்ட் ஸீன் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க எங்களால் முடியல. முதல்ல உன் முடிவைச் சொல்” என்று கத்தினாள் சஞ்யுக்தா.
“என்ன முடிவு?”
“அடியே இவ்வளவு நேரம் சொன்னது உன் மூளையில் ஏறலையா? நீ ராசுவக் கல்யாணம் பண்ணனும். வேறு எதுவும் இல்லை”
“அத்தை என் படிப்பு…?”
“பொல்லாத படிப்பு. நீ படிச்சு என்ன கலெக்டர் ஆகவா போற. அதெல்லாம் இன்றோடு மூட்டை கட்டி வச்சிடு” என்றார் தனம்.


தன் முடிந்து போன காதலை நினைத்தாள். இனி தன் வாழ்வில் சந்தோஷம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முடிவாயிற்று. இனி எது நடந்தாலும் ஒன்றுதான். அதையே அக்காவின் வாழ்க்கைக்காக நடக்கட்டும் என்று முடிவெடுத்தவள்,
“சரி அத்தை, நீங்க சொல்லுறபடியே நான் நடக்கிறேன். இப்போ அக்காவை உள்ளே கூட்டிப் போய் சாப்பிடக் கொடுக்கவா?” என்று பரிதாபமாகக் கேட்டாள்.
“இன்னொன்றையும் கேட்டுக்க. யாரோ ஒருத்தனகூட ஊர் சுத்துறியாமே? அதெல்லாம் இந்த நிமிஷத்திலிருந்து விட்டுடனும். அப்படி மீறி நடந்தின்னா.. அப்புறம் உங்க அக்கா பாடுதான்.. உனக்குப் புரியும்னு நினைக்கிறன்”
என்றார் தனம்.
அவளிடம் விரக்தியான பார்வை மட்டுமே பதிலாக இருந்தது.

சுபாஷினியை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள். படுக்கையில் படுக்க வைத்தவள் முதலில் காஃபி போட்டு வந்து பருக வைத்தாள். சுபாஷினி தன் தங்கையின் வாழ்க்கை தன்னால் அழிவதை எண்ணி கண்ணீர் வடித்தாள். அவளை ஆறுதலாக அணைத்த நிஷாந்தினி

“அக்கா, எனக்கு விதித்தது எதுவோ அதுவே நடக்கும். நீ எந்தக் கவலையுமில்லாம குட்டிப் பாப்பாவ நல்லபடியா பெறனும்” என்றாள்.
 
Top