எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 15

S.Theeba

Moderator
அறையை விட்டு வெளியேறியவன் வரவேற்பறை சோஃபாவில் வந்தமர்ந்தான். தலையைக் கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்தவன் மனதில் பல எண்ணங்கள் சுற்றிச் சுழன்றன. அபிராமி மீது கொண்ட வேட்கையும் அவள் தன் மனைவியே ஆனாலும் இப்படி காய்ச்சலில் படுத்திருப்பவளிடம் அத்துமீற முயன்ற தன்மீது கோபமும் ஒருங்கே உண்டானது.
தன்னை நிலைப்படுத்திக் கொள்ள பின்தோட்டம் வழியாக தென்னந் தோப்பினுள் புகுந்தான். இடையே காணப்பட்ட மாமரம் ஒன்றின் கீழ் வேலை செய்பவர்கள் இளைப்பாறுவதற்கென அமைக்கப்பட்டிருந்த கல்மேடையில் சென்று அமர்ந்தான். அவன் மனதில் என்ன குழப்பம் இருந்தாலும் உடனேயே இங்கே வந்துவிடுவான். தொழில் தொடர்பாக முக்கிய முடிவை எடுக்கவும் இங்கே வந்தே சிந்திப்பான். நிலவின் ஒளியும் குளிர்காற்றும் அவன் மனதை சாந்தப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். அவன் அங்கே அமர்ந்த சொற்ப நேரத்தில் அந்த இரவு வேளையிலும் அம் மரத்தின் தாழ்ந்த கிளையில் இரு அணில்கள் ஓடி விளையாடுவதைக் கண்டான். இரு அணில்களும் காதலர்கள் போலும். இடையிடேயே காதல் மொழி பேசி கொஞ்சுவதையும் கண்டான். அக்காதல் ஜோடியின் விளையாட்டுக்கள் அவன் மனதில் சலனத்தை விதைத்தவன்.

‘அவள் காதலிலோ மனைவிக்குரிய கடமையைச் செய்வதிலேயோ எந்தக் குறைவும் இல்லை. சொல்லப் போனால் அவள் கண்கள் எப்போதும் காதலுடனேயே என்னைப் பார்க்கின்றன. நான் தான் அதை உணராதவன் போல அவளை ஏமாற்றுகின்றேன். ஆனால் இப்போது என் மனம் என் கட்டுப்பாட்டை இழக்கின்றது. தினம் தினம் அவளை அணைக்கத் துடிக்கும் மனதின் ஆசையை அடக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு.. அவளறியாமலே அவளை ரசிக்கும் கண்கள். அணைக்கத் துடிக்கும் கைகள். எல்லாமே அவளைத் தான் யாசிக்கின்றன. என்னையும் மீறி அவளை நான் அடைந்துவிடுவேனோ? இல்லை… அப்படி எதுவும் நடக்கக் கூடாது. இனியும் தாமதித்தால் அது அபிக்கு நான் செய்யும் துரோகம். என் மீது தப்பை வைத்துக் கொண்டு அவளுக்குத் தண்டனை கொடுப்பது நியாயமே இல்லை. என் சுயநலத்திற்காக அவளையும் ஏங்க வைக்கின்றேனே. கட்டாயம் அபியிடம் என் நிலையை எடுத்துக் கூற வேண்டும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். இவ்வளவு நாள் என் மனதுக்குள் போட்டு பூட்டி வைத்து கஷ்டப்பட்டது போதும். எல்லாவற்றையும் அவளிடம் கூறுவோம். அதன்பிறகு அவள் என்ன முடிவெடுத்தாலும் ஏற்கும் மனம் வேண்டும். அவளது முடிவுக்கு நான் உடன்பட வேண்டும்' என்று தீர்மானித்தான். தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன், அவளுக்கு மருந்து கொடுக்கும் நேரம் என்பதைக் கண்டு உள்ளே சென்றான். குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி மாத்திரைகளைப் போட வைத்தான். சோஃபாவில் சென்று படுத்தவன் இடையிடையே சென்று அபிராமியின் உடல்நிலையையும் பார்த்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் அபிராமிக்குக் காய்ச்சல் குறைந்திருந்தது. காலையில் வந்த நிலா அவளைக் கவனித்துக் கொண்டார். பாலாவும் தன் டாக்டர் நண்பரிடம் அபிராமிக்கு வழங்கிய சிகிச்சை தொடர்பாக விவரம் கேட்டறிந்து மேலதிகமாகக் கவனித்துக் கொண்டார். தமிழினியன் கடைக்குச் சென்றிருந்தான். விநியோகஸ்தரோடு முக்கியமான சந்திப்பு இருந்ததால் தவிர்க்க முடியாமல் தனது அங்காடிக்குச் சென்றிருந்தான். எனினும் மணிக்கொரு தடவை தாய்க்கு அழைத்து அபிராமியின் உடல்நிலை குறித்து வினவினான்.

தமிழினியன் மாலை நான்கு மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டான். அபிராமி காய்ச்சல் முற்றிலும் குறைந்து தெளிந்த முகத்தோடு வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.

அவளைக் கண்டதும் உடல் நிலை குறித்து விசாரித்தான். இப்போது பரவாயில்லை என்று அவள் கூறவும் திருப்தியுடன் உள்ளே சென்றான்.

இவ்வாறு மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், அவள் நோயிலிருந்து முற்றாக குணமடைந்ததை அறிந்ததும் சுப்பர் அழுத்தத்திலிருந்து வேளைக்கே வந்தவன் அவளிடம் வெளியில் போய் வருவோமா என்று வினவினான். அவன் அப்படிக் கேட்கவும் அபிராமிக்கு திகைப்பாக இருந்தது. கல்யாணம் ஆகி இத்தனை நாட்களில் கடைக்கு மட்டும் அவ்வப்போது அழைத்துச் சென்றிருக்கான். வேறு எங்கும் இதுவரை அழைத்துச் சென்றதில்லை. திடீரென அவன் வெளியில் செல்வோமா எனக் கேட்டால் அவளுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும். ஆனாலும் அவன் கேட்கவும் எந்தக் கேள்வியும் கேட்காமல் உடனேயே தலையாட்டினாள்.

'அவளுக்கு இப்போது தான் காய்ச்சல் விட்டிருக்கு, இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டுமா' என்று கேட்ட நிலாவிடம் தான் கவனமாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டு அவளை பீச்சுக்கு அழைத்து வந்தான்.

மணல் பாங்கான பகுதியில் சென்று அமர்ந்தவன் அவளையும் வந்து அமருமாறு சைகை செய்தான். அவனுக்கு சற்றுத் தள்ளி அமர்ந்தாள். கடலலையின் தாளத்தையும் சூரியன் மறைவதற்குத் தன்னைத் தயார்படுத்துவதையும் ரசித்துக் கொண்டிருந்தனர்.


சிறிது நேரம் கழித்து தமிழினியன்
"அபிராமி" என்று சன்னமாக அழைத்தான். கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் கூப்பிட்டது கேட்கவேயில்லை. மீண்டும் அவளை "அபி..." என்று மிக மென்மையாக அழைத்தான். மயிலிறகால் வருடுவது போல் அவ்வழைப்பு அவளது செவிகளைத் தொட்டுத் தடவியது. அந்தக் குரல் அவளது உள்ளத்தைக் தொட திரும்பி அவனைப்
பார்த்தாள்.
'அவன் அபி என்ற அழைப்பு என்னை இவ்வளவு சந்தோஷப்படுத்த முடியுமா? இந்த உலகமே இவ்வளவு அழகாக மாறுமா?” என்று சந்தோஷ் வானில் சிறகடித்துப் பறந்தாள்.
அந்த சிறகையே ஒடித்து நெருப்பில் போட்டது போல அவனது அடுத்த பேச்சு அமைந்தது.


“அபி உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லவே இங்கே அழைத்து வந்தேன். நான் சொல்வதைக் கேட்டுவிட்டு நீ முடிவெடு. நிச்சயம் நீ எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். என்னை விட்டுப் போவதாக... நீ முடிவெடுத்தாலும் அதற்கு நான் வேண்டிய ஏற்பாடு செய்வேன்." என்றான்.

திடீரென அவன் அவ்வாறு சொல்லவும் அவளுக்கு மூச்சடைத்துப் போய்விட்டது.
'கடவுளே இவர் என்ன சொல்கிறார்? நான் இவரை விட்டுப் போவதா? ஏன் இப்படி உளறுகிறார். சிலவேளை, அவர் பிடிக்காமல் தானே என்னைக் கல்யாணம் பண்ணினார். அதுதான் மீண்டும் என்னைப் போகச் சொல்லப் போகின்றாரோ? அதற்குத் தான் என்னைத் தனியாக அழைத்து வந்தாரோ? அப்படிச் சொன்னால் நான் என்ன செய்வது? இவரை விட்டுப் பிரிந்து போவது என்னால் முடியாத காரியம். அது இந்தப் பிறவியில் நடக்காது' என்று மனதிற்குள் புலம்பினாள்.

நொடியில் உலகத்தையே சுற்றிவரும் மனது ஆயிரம் கேள்விகளை அவளைப் பார்த்துக் கேட்டது. அதற்குப் பதில்தான் கிடைக்கவில்லை. அவன் முகத்தைப் பார்த்திருந்தாள்..

“முதலில் ஒரு சில விஷயங்களை.. அது உனக்கு சந்தோஷத்தைத் தரக்கூடியதாக இருக்கும் விஷயங்களைச் சொல்கின்றேன். அபி... கல்யாணப் பேச்சு ஆரம்பித்த பிறகுதான் உனக்கு என்னைத் தெரியும். ஆனால், உன்னை ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியும்."
"எ.. எப்படி?"
"உன்னைத் தெரியும் என்பது மட்டுமில்லை. ஒரு வருடமாக உன்னை நான் காதலிக்கின்றேன் என்பதும் உண்மை."
"எ..எ..என்ன...?" என்று ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன. அதனை ரசனையுடன் நோக்கியவன்,
"உண்மை அபி… உன்னை நான் எப்போது முதல் முதல் பார்த்தேன் தெரியுமா? ஒருநாள் நீயும் உன் அக்காவும் ஸ்ரவன்கூட கோயிலுக்கு வந்திருந்திங்க. அன்று அம்மாவும் கோயிலுக்கு வந்திருந்தார். நான் அவரை அழைத்துச் செல்ல அங்கே வந்தேன். என்னைக் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிவிட்டு அம்மா ஐயரிடம் அபிஷேகம் பற்றி பேசச் சென்றிருந்தார். அப்போதுதான் கோயில் மண்டபத்தில் நீ ஸ்ரவனுடன் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்தாய். உன் சிரிப்பொலி கேட்டு உன்னைப் பார்த்தேன். பார்த்துக் கொண்டேயிருந்தேன். அம்மா வந்து அழைக்கவும்தான் அதிலிருந்து விடுபட்டேன். அம்மாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டேன். ஆனால், உன் முகம் மட்டும் என்னை விட்டுச் செல்லவில்லை. ஒருவாரம் கழித்து நான் கடைக்குச் செல்லும் போது வழியில் உன்னைச் சந்தித்தேன். நீ ஸ்கூட்டியில் உன் ஆபிஸூக்குச் சென்று கொண்டிருந்தாய். நான் செல்ல வேண்டிய பாதையை மறந்து உன் பின்னால் வந்தேன். நீ ஆபிஸூக்குள் போனதும் தான் திரும்பி வந்தேன்."
அவன் சொல்வதை ஆச்சரியத்துடன் கண்களை அகல விரித்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தாள் அபிராமி. அவளால் நம்பவே முடியவில்லை. முதலில் இடியை இறக்கினான். அப்புறம் பனி மழை பொழிகின்றான். இதில் எதை நான் எடுப்பது என்று திகைத்து நின்றாள்.

அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கவும் அதனைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
"அடிக்கடி உன் பின்னால் வந்திருக்கின்றேன். நீ என் மனதை ஆக்கிரமித்து விட்டாய். எப்போதும் உன் நினைவுதான். உன்னைப் பார்க்கவே அடுத்த வெள்ளியும் அம்மாவுடன் கோயில் வந்தேன். அன்றும் நீ என்னை ஏமாற்றவில்லை. உன்னிடம் பேச விரும்பினேன். அன்று உன் அம்மா கூட வந்திருந்தாய். அதனால் பேச முடியவில்லை…"
"என்னால் இதை நம்பமுடியவில்லையே?"
"அதுதான் உண்மை"
"லவ்தான் என்றால் என்னிடம் நீங்கள் புரபோஸ் பண்ணலையே?"
"சொல்லியிருக்கனே"
"என்னிடமா..?"
"ஆமாம்"
"எ.. எப்போது?"
"லாஸ்ட் இயர் செப்டெம்பர் நைன் அன்று"
"என்னது அன்றா? அன்று என் பேர்த்டே. அன்று உங்களை நான் சந்திக்கவில்லையே?"
"நேரில் நான் புரபோஸ் பண்ணவில்லை. ஆனால் அன்று ரெட் ரோஸ் பொக்கே ஒன்று என் காதலைச் சொல்ல வரலையா?"

அவன் அப்படிக் கேட்கவும் தான் அவளுக்கு நினைவு வந்தது. கடந்த வருடம் அவளது பிறந்தநாள் அன்று, அழகிய சிவப்பு நிற ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்து ஒன்றை டெலிவரி பையன் கொண்டு வந்து கொடுத்தான். அந்த பூங்கொத்தை யார் அனுப்பியது எனக் கேட்டதுக்கு, "தெரியவில்லை கடை முதலாளி தந்துவிட்டார். யார் ஓடர் பண்ணியது எனத் தெரியாது" எனக் கூறிவிட்டுச் சென்று விட்டான்.

அந்தப் பூங்கொத்தில் 'எனக்காக இந்தப் பூமியில் பிறந்த தேவதைக்கு இன்று பிறந்தநாள். ஹப்பி பேர்த் டே கண்ணம்மா' என்ற அட்டை இருந்தது. யார் என்று யோசித்தவள் அந்த அட்டையின் பின்புறம் திருப்பிப் பார்த்தாள். அதிலும் வாழ்த்துதான் எழுதியிருந்தது. அதை வாசித்ததும் பயந்தே விட்டாள். யாரோ தன்னிடம் விளையாடுகின்றார்கள் என்றே நினைத்தாள். அதில்
'என் செல்லப் பொண்டாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - காதலுடன் உன்னவன்' என்றிருந்தது. நல்லவேளை வீட்டில் யாரும் இந்த பூங்கொத்தை வாங்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். பயத்தில் அந்த வாழ்த்து அட்டையைக் கிழித்துப் போட்டாள். ஆனால், பூங்கொத்திலிருந்த பூக்களின் அழகில் அதனைக் கசக்கி எறிய மனமின்றி வைத்தாள்.

இன்று அது நினைவு வரவும் அவனிடம் "அப்படியென்றால் அன்று வந்த பொக்கே நீங்கள் அனுப்பியதா?"
"ம்ம். நான் தான் அனுப்பினேன்."
அவனை ஆழமாகப் பார்த்தவள்,
"நம்பும்படியாக இல்லையே. அப்படிக் காதலித்தவர் ஏன் கல்யாணத்தை நிறுத்த என்னைக் கட்டாயப்படுத்தினிங்க?" என்று கேட்டாள்.
"அதையும் சொல்றன்..." என்றவன்,
தொடர்ந்து கூறிய ஒரு வார்த்தையிலேயே அவளது உலகமே இருண்டது.

“அதற்குக் காரணம் என் மகன் வினு” என்றான்.
 
Top