எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 16

S.Theeba

Moderator
‘காரணம் என் மகன் வினு' என்று தமிழினியன் கூறவும் அபிராமிக்கு சில நொடிகள் உலகமே ஸ்தம்பித்து விட்டது. தன் காதுகளில் விழுந்த வார்த்தைகள் நிஜமா? அல்லது கனவு எதுவும் காண்கிறேனா? என்று குழம்பிப் போனாள்.
குழப்பமும் தவிப்புமாய் அவன் முகத்தையே பார்த்தாள். அவளது தவிப்பு புரிந்தவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவள் கையைப் பிடித்தான்.
“அபி பிளீஸ்… தப்பு என் மேலதான். உனக்கு ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கணும். ஆனால், என்னால் முடியல. உன்னை ஒரேயடியா என்னிடம் இருந்து தூர வைக்க என்னால் முடியல. இரண்டும் கெட்டான் மனநிலையில் இருந்தேன். நீ எனக்கு வேண்டும் என்று ஒரு மனமும் நீ என்னைக் கல்யாணம் பண்ணி கஸ்டப்படக்கூடாது என்று ஒரு மனமும் சொன்னது.அதனால்தான்…”

அவன் வார்த்தைகள் காதில் விழுந்தன தவிர அதனை கிரகிக்கும் மனநிலையில் அவள் இல்லை. தன் ஏமாற்றத்தையும் கண்ணீரையும் மறைக்கப் போராடிக் கொண்டிருந்தவளைக் கண்ணுற்றதும்,
“அபி வினு எனக்குப் பிறந்த குழந்தை அல்ல. ஆனால், என் மகன்தான் அவன்” என்றான்.
அப்போது தான் கொஞ்சம் தன் மனதைக் திடப்படுத்தியவள் சிந்திக்க ஆரம்பித்தாள். 'என்ன குழப்புகின்றார். எனக்குப் பிறக்கவில்லை. ஆனால் என் மகன்தான் என்கிறார். புரியவில்லையே' என்ற குழப்பத்துடன் அவனிடம் அதற்கான விளக்கத்தை எதிர்பார்த்து நின்றாள்.
“அபி நான் எல்லாவற்றையும் உனக்கு விளக்கமாக சொன்னால்தான் புரியும். என்னை நீ புரிந்து கொள்வாய் என்றவன் மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

சிறு வயது முதல் அவர்கள் ஐவரும் மிகவும் நெருங்கிய தோழர்கள். முதலாம் வகுப்பில் சேர்ந்த நாளிலேயே அந்த ஐவரும் கூட்டுச் சேர்ந்தவர்கள்தான். கல்லூரிக்குள் நுழையும் போதும் தாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் ஒரே பாடத்தைத் தேர்ந்தெடுத்து ஒரே கல்லூரிக்குள் புகுந்தனர். கல்லூரியை விட்டு அவர்கள் நிற்கும் வரை அந்த நட்பில் என்றும் விரிசல் வந்ததில்லை.

லக்ஷ்மன், ஈசன், காயத்திரி, அனிதா, தமிழினியன் இந்த ஐவரையும் பஞ்சபாண்டவர்கள் என்றே கல்லூரியில் அழைப்பார்கள். அவர்கள் இல்லாத இடமும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டால் எந்த நிகழ்வுகளும் இல்லை. அந்த அளவிற்கு பள்ளியிலும் கல்லூரியிலும் இந்த ஐவரும் ஆதிக்கம் செலுத்தினர்.


அனிதாவும் லக்ஷ்மனும் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அனிதாவின் தந்தை அரச பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் கூடப் பிறந்தவர்கள். சாதாரண குடும்பமாக இருந்தாலும் மிகுந்த பாசமான குடும்பம்.

லக்ஷ்மனின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவனுக்கு இரண்டு அக்காவும் ஒரு தங்கையும் உள்ளனர். இவன் மட்டுமே ஆண் வாரிசு. தங்கை இவனுடன் ஒன்றாக இரட்டை வாரிசாகப் பிறந்தவள். அவனது தாய் இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது ஏற்பட்ட சிக்கலில் பிரசவத்திலேயே இறந்துவிட்டார்.
மூத்த தமக்கையே தாயாக இருந்து அவர்களை வளர்க்கிறார். இவனுடன் பிறந்த இரட்டை சகோதரி ரதிவாணி. அவள் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு இப்பொழுதுதான் அரச பள்ளி ஒன்றில் ஆசிரியராக இணைந்துள்ளாள்.

ஈசன் மல்டி மில்லினரின் மூன்றாவது மகன். இரண்டு அண்ணன்களும் படித்துவிட்டுத் தந்தையுடன் சேர்ந்து பிஸ்னஸைப் பார்த்துக் கொள்கின்றார்கள். எனவே, வீட்டில் கடைக்குட்டியான அவன் ரொம்பவும் செல்லம். லக்ஷ்மனின் தங்கை ரதிவாணியை ஈசன் காதலிக்கின்றான். அக்காதல் இரு வீட்டாருக்கும் தெரியும்.

தமிழினியனைப் பற்றி ஏற்கனவே நாம் அறிந்ததுதான்.

காயத்திரி அவளது தாய் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சகுந்தலாதேவி ராஜமாணிக்கம். அவளது தந்தை ராஜமாணிக்கம் மனைவியின் அரசியல் வாழ்விற்கு ஊக்கசக்தியாகப் பின்னாலிருந்து செயற்படுபவர். இருவரின் ஒரே புதல்வி காயத்திரி. காயத்திரி பிறந்த நாள் தொட்டே சகுந்தலாதேவி அரசியலில் இருப்பதால் அவளைப் பார்த்துக் கொள்வது வேலையாட்கள் மட்டுமே. இப்பொழுது மத்திய அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார், அவர் தமிழ்நாட்டில் அதிகம் இருப்பதில்லை. தமிழ்நாட்டில் அவர் இருப்பது மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. எனவே, காயத்திரி சிறு வயது முதலே பாசத்துக்காக ரொம்பவும் ஏங்குவாள். அவளது நண்பர்களே அவளுக்குக் குடும்பமாக மாறிவிட்டது. தான் ஒரு அமைச்சரின் மகள் என்று வெளியில் சொல்ல அவள் விரும்புவதில்லை. அதனால் வரும் எந்த ஒரு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள். அமைதியும் சாந்தமும் அவளிடம் எப்போதும் குடிகொண்டிருக்கும்.

அன்று அவர்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா. காலையிலேயே மிகவும் பரபரப்பாக இருந்தது வளாகம். மாணவர்கள் சிறகு விரித்த பட்டாம்பூச்சிகளாய் வளாகம் முழுவதும் சுற்றித் திரிந்தார்கள்.

பஞ்சபாண்டவர்களும் அதாங்க நம்ம தமிழினியன் அன்ட் பிரண்ட்ஸூம் அழகாக உடுத்திக் கொண்டு கல்லூரியை வலம் வந்தார்கள். காலை பத்து மணிக்கே நிகழ்வுகள் ஆரம்பமாகும். எனவே, கல்லூரியைச் சுற்றி லூட்டி அடித்தவர்கள், ஓய்ந்து போய் கல்லூரியின் பின்பக்கம் ஒரு மரத்தின் கீழ் இருந்த சிமெந்து இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

"மாப்பிள்ளை, இன்று எல்லா கேர்ள்ஸூம் ரொம்ப கியூட்டா இருக்காங்கல்ல." என்றான் ஈசன்.
"அதிலும் அந்த பவி ஜொலிக்குறாதானே?" என்றாள் அனிதா. "ஆமா" என்று சொன்ன பின்புதான் ஈசனுக்கு அவள் தன்னைக் கலாய்ப்பதே புரிந்தது. "போடி சோத்து மூட்டை" என்றவனின் முதுகில் ஓங்கி ஒன்று போட்டாள் அனிதா. "என்னையாடி அடிக்கிற உன்னை..." என்றபடி அவளை அடிக்கத் துரத்தினான்.
"பொறுடா உன்னைய ரதி கிட்ட மாட்டிவிடுறன். சைட்டா அடிக்குற"
ரதியின் பெயரைக் கேட்டதும் கப்சிப்பென்று அடங்கிப் போய் இருந்துவிட்டான். "அந்தப் பயம் இருக்கணும்" என்றபடி அனிதாவும் வந்து அமர்ந்தாள்.

அப்போது லக்ஷ்மன் "அனி, உங்க வீட்டில் இருந்து யார் ஃபங்ஷனுக்கு வாறது?"
"எங்க வீட்டில் இருந்து அம்மா, அப்பா, அக்கா மூவரும் வருகினம். தம்பி எடியூக்கேஷன் டூர் போயிருக்கான். சோ, அவன் வரல. உன் வீட்டில இருந்து யார் யார் வாறாங்க?"
"பெரியக்கா, அத்தான், குட்டிப்பயல் சஞ்சு, சின்னக்கா அப்புறம்... ரதி எல்லோரும் வாறாங்க. அப்பா கொஞ்சம் லேட்டா வருவார்"
"அப்போ உன் வீட்டில?" என்று ஈசனிடம் கேட்டாள் அனிதா.
"அப்பா, அம்மா இரண்டு பேரும் வருவாங்க. அண்ணாக்கள் வருவாங்களோ தெரியாது"
"இனியா அப்போ உனக்கு...?" என்றான் ஈசன்.
"அம்மாவும் சாவித்திரியும் வருவாங்க. அப்பா பெங்களூர் போயிருக்கார்."
"ஏன் காயூ, உங்க அம்மா இந்தப் ஃபங்ஷனுக்காவது வருவாங்களா?"
"இல்லடா... அம்மா தாய்லாந்து போயிருக்கா. அப்பாவும் கூடப் போயிற்றார்." அவள் குரலில் ஏக்கம் தெரிந்தது.
"ஏண்டா அவளுக்கு நாங்க இல்லையா? நம்ம ஃபேமிலியிலிருந்து வரும் எல்லோரும் அவளுக்காகவும் தான் வர்றாங்க" என்றாள் அனிதா. காயத்திரியின் கவலையை மறக்க வைக்கும் நோக்கில் ஒருவருக்கொருவர் கலாய்க்கத் தொடங்கினர்.

அப்போது அந்த வழியால் இரு பெண்கள் சென்றனர். அவர்களை வழிமறித்த ஈசன் "ஹாய் பியூட்டிஸ், உங்க நேம் என்ன?"
"ராகவி"
"பி..பிரியா"
"ராகவி ரொம்ப அழகான நேம். உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா?"
"ஹலோ மிஸ்டர்.."
"ஏங்க... நான் உங்க வயசையா கேட்டேன்? நம்பரத்தானே கேட்டேன். உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம் என்று நம்பரக் கேட்டா..."
"ஹெல்ப்பா?"
"ஆமா, எப்படியும் நீங்க யாரையாவது கல்யாணம் பண்ணனும். அதுக்கு உங்க வீட்டில் மாப்பிள்ளை பார்க்கணும். எவ்வளவு அலைச்சல். அதுதான் ஆல்ரெடி எங்க டீமிலேயே மூன்று பேர் இருக்கோம். யாருக்காவது செட் ஆனா லவ் பண்ணுவோமே"
"ஹலோ பிரதர்ஸ்.."
"பிரதர்ஸ்ஸா..."
"ஆமா ப்ரோ, எங்க ரெண்டு பேருக்கும் ஆல்ரெடி லவ்வர்ஸ் இருக்கு. அதிலேயும் இவளது லவ்வர் கிக்பொக்ஸர்" என்று மற்றையவளைக் காட்டி விட்டு அங்கிருந்து இரு பெண்களும் சென்றுவிட்டனர்.
"என்னது..." என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு காயத்திரியின் மடியில் சரிந்து விழுந்தான் ஈசன்.
"பல்பு வாங்கிட்டான் பையன்" என்றாள் அனிதா. எல்லோரும் கலகலவெனச் சிரித்தனர்.

ஃபங்ஷனுக்கு டைம் ஆகவும் ஃபங்ஷன் நடக்கும் ஹாலுக்குள் செல்ல எழுந்தனர். காயத்திரி மட்டும் "நீங்க முன்னாடி போங்க, தேவிகா வாறன் என்றாள். அவளுக்கு ஸ்ரட் வேணுமென்றாள். குடுத்திட்டு வாறன்" என்றுவிட்டு அங்கேயே நின்று விட்டாள்.

அவர்கள் ஹாலுக்குள் சென்று அமர்ந்தனர். ஃபங்ஷன் ஆரம்பித்துவிட்டது. அவர்களின் பெற்றோர், சகோதரர்களும் வந்து அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தனர். ஆனால், காயத்திரி இன்னும் வரவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்து கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்.
“என்னடா காயூவக் காணல” என்று கேட்டாள் அனிதா.
“இரு அவளை போய் கூடவாறோம்” என்று கூறி விட்டு தமிழினியனும் ஈசனும் தாங்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்தை தேடிச் சென்றனர்.அங்கே காயத்திரி அழுதபடி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போய் தூரத்திலேயே நின்றனர். மரத்தடி இருக்கையில் ஒரு பையன் அமர்ந்திருக்க அவனது கையைப் பற்றியபடி சாவித்திரி அழுது கொண்டிருந்தாள். அவனை இதற்கு முதல் இவர்கள் கண்டதேயில்லை. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவள் அழுவதைக் காணப் பொறுக்காது அருகில் சென்றார்கள்.

அவர்கள் இருவரையும் கண்டதும் காயத்திரி அதிர்ந்து போய் எழுந்து நின்றாள். அந்தப் புதியவன் முகத்தில் எந்தவித மாற்றமும் இன்றி எழுந்து நின்றான்.
"காயு, யாரும்மா இது?" என்றான் தமிழினியன்.
"இனியன், இது.. இவர்... கோபி"
அவர்கள் எதுவும் பேசாது பார்த்துக் கொண்டிருந்தனர்.
"கோபி எங்க தூரத்து உறவுக்காரர். அம்மாவைப் பார்க்க அடிக்கடி வருவார். அதில் பழக்கமாகி நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறம்."
"எவ்வளவு நாளாய்?" தமிழினியன் குரலில் அவள் தங்களிடம் சொல்லவில்லையே என்ற கோபம் தெரிந்தது.
"திறீ இயரா இவரை எனக்குத் தெரியும். இவர் புரபோஸ் பண்ணியிருந்தார். முதல்ல அம்மா மேல இருந்த பயத்தில் முடியாது என்று சொல்லிட்டேன். அப்புறம் நான் ஓகே சொன்னேன். இப்போ வன் இயரா லவ் பண்ணுறம்"

அப்போது பெயர்கள் அறிவித்து பட்டம் வழங்கத் தொடங்கியிருந்தார்கள். எனவே, பேசிக்கொண்டு இருக்க நேரம் இல்லை என்று கூறிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றனர். கோபியை உறவினர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்றமருமாறு கூறிச் சென்றனர். காயத்திரி கோபியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி உள்ளே சென்றாள்.

தமிழினியன், ஈசனின் மனங்களில் காயத்திரி இதுவரை தங்களுக்கு சொல்லாமல் இருந்த கோபம் இருந்தாலும் அதைவிட அவள் அழுததே மனதைப் பாதித்தது. ஏன் அழுதுகொண்டு இருந்தாள் என்ற கேள்வி உறுத்தியது. அவர்கள் நட்பு வட்டத்திற்குள் காயத்திரி மீது எல்லோருமே மிகவும் அன்பை வைத்திருந்தனர். அவளுக்காக நால்வரும் உயிரைக்கூடக் கொடுப்பார்கள். அவள் முகம் வாடினால்கூட நால்வரும் துடித்துப் போய் விடுவார்கள். இன்றோ அவள் அழுதுகொண்டு இருந்தது ரொம்பவும் மனதைப் பாதித்தது.
 
Top