எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 18

S.Theeba

Moderator
தமிழினியனின் அலைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் யோசித்தான். இது தனிப்பட்ட எண். தொழிலுக்கென அவன் வேறொரு எண்ணை பயன்படுத்துவான். எனவேதான் அவன் யோசித்தான், புரிபடவில்லை.

அழைப்பை ஏற்று "ஹலோ" என்றான்.
மறுமுனையில் இனிமையான ஒரு பெண் குரல் கேட்டது.
"ஹலோ, குட்மார்னிங் சார். ஆர் யூ தமிழினியன்?"
"குட்மார்னிங்.. யெஸ். ஐ ஆம் தமிழினியன்."
"சேர், நான் பெங்களூர் மித்ரா ஹொஸ்பிடலில் இருந்து ரிசப்சனிஸ்ட் பேசுறன். இங்க ஒரு பேஷன்ட் அட்மிட் ஆகியிருக்காங்க. ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. அவங்க சுயநினைவில்லாம இருக்காங்க. அவங்ககூடவும் யாருமில்லை. த்ரீ டேய்ஸ் ஆச்சு. பட் இதுவரை யாரும் தேடி வரவுமில்லை. அதுதான் அவங்க ஹான்ட்பாக்க செக் பண்ணதில சின்ன டயறி ஒன்று இருந்தது. அதில் இருந்த சில நம்பரை நோட் பண்ணியிருந்தோம். அந்த நம்பர்ஸூக்கு ஹோல் பண்ணினோம். சில நம்பர்ஸ் வேர்க் பண்ணல. இப்ப உங்க நம்பருக்கு ட்ரை பண்ணினோம்."
"மேடம், எனக்கு புரியல. உங்க ஹொஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கிறவங்க யாரு? எனக்கு பெங்களூரில் யாரும் இல்லையே? அவங்க நேம் தெரியுமா?"
"அவங்க டயறியில் காயத்திரி என்ற நேம் போட்டிருக்கு சேர்." என்றாள்.
அந்தப் பெண் காயத்திரியின் பெயரைக் கூறியதும் சில நொடிகள் அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவள் எங்கள் காயத்திரியா? அவள் பெங்களூரில் எப்படி? அதுவும் ஹொஸ்பிடலில் என்று நொடிக்குள் பல கேள்விகள் மனதிற்குள் குடைய நின்றான். மறுமுனையில் "ஹலோ... ஹலோ..." என்று அழைக்கவும் யோசனையில் "ம்ம்" என்று மட்டும் பதிலளித்தான்.
"சார், லைன்ல இருக்கிறிங்களா?"
"யெஸ் மெடம், சாரி மெடம் கொஞ்சம் யோசனையா நின்றுட்டன்.”
“இட்ஸ் ஓகே சார். உங்களுக்கு வெரிபை பண்ண வேணும்னா அவங்க ஐடியை போட்டோ எடுத்து உங்க நம்பருக்கு சென்ட் பண்ணவா சார்?”
“தங்க்யூ மெடம். பிளீஸ் சென்ட் பண்ணுங்க” என்றான்.
“வன் மினிட்” என்ற அப்பெண் அழைப்பிலிருந்தபடியே தனது அலைபேசியில் ஐடியை போட்டோ பிடித்து அவனது எண்ணுக்கு அனுப்பினான். அதனைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சியானது. அது அவர்களின் காயத்திரியேதான்.
“மெடம் அவங்க எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவங்க தான்.. என் பெஸ்ட் பிரண்ட். உங்க ஹொஸ்பிடல் அட்ரஸ் சொல்லுங்க. நான் உடனேயே புறப்பட்டு அங்கு வாறன்" என்றான்.

அந்த நர்ஸ் கூறிய முகவரியைக் குறித்துக் கொண்டவன், அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டிய செலவுகளைத் தான் வந்ததும் பொறுப்பேற்பதாகவும் கூறிவிட்டு அழைப்பை நிறுத்தினான்.

இந்த விடயத்தை லக்ஷ்மனிடமும் ஈசனிடமும் தெரியப்படுத்துவோமா என்று நினைத்தவன், முதலில் தானே சென்று அவளது நிலைமையைப் பார்த்துவிட்டு அப்புறமாக இவர்களை அழைக்க வேண்டும். தான் போவதற்குள் அவளது கணவன் வந்திருக்கலாம். இவ்வளவு நாளும் எங்களில் யாரையும் அவள் தொடர்பும் கொள்ளவில்லை. அவள் குடும்ப நிலைமை எப்படியோ தெரியாது. எனவே, தான் மட்டும் செல்வதுதான் நல்லது என்று முடிவெடுத்தான்.

உடனேயே தன் அங்காடியின் மேனேஜரை அழைத்தவன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுப் புறப்பட்டான். தாய் தந்தையிடமும் அவன் எந்த விடயத்தையும் கூறவில்லை. அங்கே போய் வந்தபின் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் வியாபார விடயமாகப் பெங்களூர் செல்வதாகக் கூறிவிட்டு விமானத்தில் புறப்பட்டான்.

அங்கே போய் இறங்கியதும் விமான நிலையத்திலிருந்து நேராக வைத்தியசாலைக்குச் சென்றான். ரிஷப்ஷனை அடைந்து விவரத்தைக் கேட்டான். அவனை காயத்திரி இருந்த விசேட சிகிச்சைப் பிரிவு அறைக்கு அனுப்பி வைத்தனர்.

படபடக்கும் மனதுடன் அந்த அறைக்குள் சென்றான். அங்கே தலையிலும் வலது கையிலும் பெரிய பெரிய கட்டுகளுடன் ஒரு பக்கம் குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருக்க மயக்கத்தில் கிடந்தாள் காயத்திரி. அவளைக் கண்டதும் இவனது கண்கள் தன்னையறியாமல் கண்ணீர் சிந்தின.

அவளது உருவம் அவனை நிலைகுலைய வைத்தது. கொழு கொழு என்று மிகவும் அழகாக இருந்த காயத்திரியா இது என அவனால் நம்ப முடியவில்லை. கறுத்து, மிகவும் மெலிந்து ஒட்டிய தேகத்துடன் இருந்தாள். பல காலமாகப் பட்டினி கிடந்தவள் போன்ற அவளது தோற்றம் அவனது மனதை அரித்தது. வைத்தியசாலையின் உடையில் கட்டிலோடு கட்டிலாக ஒட்டியபடி கிடப்பது காயத்திரியா? கண்களில் நீர் சொரிய அவளது இடது கையைப் பற்றியவன் மெதுவாக அதனை நீவி விட்டான்.
"காயூ... ஏன்மா இப்படியிருக்காய்? இத்தனை வருஷம் கழிச்சு இப்படியா உன்னை நான் பார்க்கணும். இத்தனை நாட்களில் ஒருநாள் கூட உனக்கு எங்கள் நினைவு இல்லையாடா" என்று புலம்பி அழுதான்.

அவள் மயக்கத்திலேயே இருக்கவும் எழுந்து வெளியில் இருந்த நர்ஸ்ஸிடம் கேட்டுக்கொண்டு காயத்திரிக்கு சிகிச்சையளிக்கும் டாக்டரைப் போய் சந்தித்தான். அவர் இவனுக்கு முழு விவரத்தையும் கூறினார்.
"மூன்று நாட்களுக்கு முன்னர் அக்ஸிடன்ட் ஆகியிருக்கு. சாலையின் குறுக்கே கடந்திருக்காங்க. அப்போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று இவரை அடித்துத் தூக்கி எறிந்து விட்டது. அங்கே நின்றவர்கள் இந்த ஹொஸ்பிடல்தான் அருகில் இருந்ததால் இங்கே கொண்டு வந்து அட்மிட் பண்ணினாங்க. நாங்களும் சீரியல் கேஸ் என்பதால் எந்த பார்மாலிட்டியும் பார்க்காம அட்மிட் பண்ணோம். அப்புறம் பொலிஸிற்கு இன்ஃபார்ம் பண்ணி அவங்களும் வந்து விசாரித்தனர். அட்மிட் பண்ணிய இருவருக்கும் அவரை யாரென்று தெரியலை அவருக்கு நினைவு திரும்பியவுடன் அறிவிக்குமாறு பொலிஸ் கூறியுள்ளது. அவருடைய ஹான்ட்பாக் இங்க இருக்கு. அதில் சிறிய டயறி ஒன்று இருந்தது. அதில் இருந்து இரண்டு மூன்று நம்பரை நோட் பண்ணி வைத்திருந்தோம். இரண்டு நாளாக போலிஸ் கண்டுபிடிச்சிடும் அல்லது யாராவது தேடி வருவாங்க என்று வெயிட் பண்ணினோம். நோ யூஸ். சோ, உங்களுக்கு தகவல் தெரிவித்தோம். நீங்க அவருக்கு என்ன உறவு?"
"நான் அவளோட பெஸ்ட் ஃபிரண்ட். டாக்டர் காயத்திரியின் கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு?"
"ஆக்சிடன்டில் தலையில் பலமான அடி. சோ மேஜர் ஆபரேஷன் பண்ணியிருக்கோம். அதுதான் த்ரீ டேய்ஸா மயக்கத்திலேயே இருக்காங்க. இன்னும் நினைவு திரும்பல. எப்பவேணாலும் நினைவு திரும்பலாம். நௌ சீ இஸ் ஆல்ரைட் " என்று கூறிய டாக்டர், அவளுக்கு ஆக்சிடன்டில் நடந்த பாதிப்புக் குறித்தும் வழங்கிய சிகிச்சைகள் குறித்தும் அவனுக்கு விளக்கினார்.

அந்த நேரம் டாக்டரின் அறைக்குள் பரபரவென ஓடிவந்த நர்ஸ் ஒருத்தி காயத்திரிக்கு நினைவு திரும்பி விட்டதாகவும் அவள் யாரையோ அழைக்கிறாள் என்றும் தகவல் தெரிவித்தாள். உடனேயே டாக்டரும் தமிழினியனும் காயத்திரியை அனுமதித்திருந்த அறைக்கு ஓட்டமும் நடையுமாக விரைந்தனர்.

அங்கே காயத்திரி கண்முழித்து யாரையோ அழைத்தபடி இருந்தாள். "வினு... வினு..." என அழைத்தபடி கைகளால் காற்றைத் துளாவியபடி கத்திக் கொண்டிருந்தாள். யார் அந்த வினு என்பது புரியவில்லை. டாக்டர் அவளை அமைதிப்படுத்தியபடி பரிசோதித்து ஒரு ஊசியைப் போட்டார். அவள் கொஞ்சம் அமைதியாகி மீண்டும் கண்களை மூடினாள். தமிழினியனிடம் பார்த்துக்கொள்ளும் படியும் சற்று நேரத்தில் மீண்டும் கண் விழிப்பாள் என்றும் தலையில் ஆபரேஷன் செய்துள்ளதால் அவளை அதிகம் யோசிக்க வைக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார்.

டாக்டரும் நர்ஸூம் வெளியேறவும் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கைகளைப் பற்றியபடி இருந்தான். அவளைப் பார்க்கப் பார்க்க வேதனை மனதை அரித்தது. எப்படி வளர்ந்தவள். அவளது கண்ணசைவிலேயே அவளுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கென எத்தனை பேர்… தாய், தந்தை அருகில் இல்லாவிட்டாலும் அவளது தேவைகளை நிறைவேற்றவென எத்தனை பேர், எத்தனை வசதிகள். காயத்திரி ஆடம்பரத்தை விரும்பாதவள் என்ற போதும் அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பார்த்து கொண்டனர். ஆனால், இன்று இப்படிக் கிடக்கிறாளே… இவளது தோற்றமே அவள் நிலைமையைச் சொல்கின்றதே. அவளது கணவன் என்னதான் செய்து கொண்டிருக்கான். கட்டின பொண்டாட்டியைக் கவனிக்காமல் என்னதான் செய்கிறானோ என்று அவன்மீது பெரும் கோபமும் உண்டானது. வரட்டும் அவனை உண்டு இல்லை என்று ஆக்கிடுறேன் என்று மனதிற்குள் புலம்பினான்.

அப்போது காயத்திரி கண்விழிக்கவும் "காயூ..." என்று மிக மென்மையாக அழைத்தான் தமிழினியன். குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. "இனியா... நீ...நீ...” மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தாள். அவளது தோளை ஆதரவாகத் தடவி விட்டான். இருவரும் எதுவும் பேசாது சில நொடிகளை அமைதியாகக் கடந்தனர். அந்த மௌனத்தை உடைத்தாள் காயத்திரி, “இனியா நீ எப்படி இங்கே? நான்... இ.. இங்கே இருப்பது உ.. உனக்கு எப்படித் தெரியும்?" என்று தடுமாற்றத்துடன் மெதுவாகக் கேட்டாள். 'இது எங்கள் காயுவே இல்லை. அவள் எவ்வளவு நிதானமானவள். ஐவரிலும் அவளே எத்தனை பிரச்சினை வந்தாலும் துணிவுடன் எதிர்த்து நிற்கக் கூடியவள். தாய், தந்தை அருகில் இல்லாமல் சிறுவயது முதல் தனித்து வளர்ந்ததால் எப்போதும் ஒரு வைராக்கியம் அவளுக்குள் இருக்கும். ஆளுமையானவள். அதுவே அவளது தனித்தன்மை. இன்று இப்படி உடைந்து போய் இருக்காளே' என்று தனக்குள் புலம்பியவன், இதற்குக் காரணம் என்ன என்று கேட்கத் துடித்தான். ஆனால், இப்போது அவளிடம் கேட்பது உசிதமில்லை. டாக்டர் ஏற்கனவே சொல்லியிருக்கார் காயத்திரியை அதிகம் யோசிக்க வைக்க வேண்டாம் என்று. அதை உணர்ந்து வேறு பேசினான்.
"காயூ, இப்போ எப்படி இருக்கு? தலையில் நோவு இருக்குதா?"
"பரவாயில்லை. கொஞ்சம்தான் நோகுது. இனியா நீ இங்கு எப்படி வந்தாய்?”
“ஹொஸ்பிடலில் இருந்துதான் ஹோல் பண்ணி விவரம் சொன்னார்கள்”
“ஓஓ.. ஆமா.. நான் இங்கு ஹொஸ்பிடல் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?"
"நேரமா? மூன்று நாள் முடிஞ்சுதாம். இன்று நாலாவது நாள்."
"கடவுளே... நாலு நாள் ஆகிடுச்சா? அப்போ என் வினு.. வினு..." என்றவள் மேலே பேசமுடியாது திணறினாள்.
"ரிலாக்ஸ் காயூ, ரிலாக்ஸ். வினு யாருடா?"

"இனியா, வினு என் பையன்" என அழுகையினூடே கூறினாள் காயத்திரி.
 
Top