எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 19

S.Theeba

Moderator
காயத்திரியை வைத்தியசாலையில் அந்தக் கோலத்தில் பார்த்ததும் தமிழினியனுக்கு வேதனையும் கோபமும் ஒருங்கே வந்தன. இப்படி ஒரு நிலையிலா அவளை நான் பார்க்க வேண்டும் என்று வேதனையும், அவள் இதுவரை நாளும் தங்கள் யாருடன் தொடர்பு கொள்ளாமல் இருந்ததை நினைத்து கோபமும் வந்தன.
அவள் தங்களை விட்டுப் பிரிவதற்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று அவன் கண்முன் விரிந்தது.
கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து சுற்றுலா ஒன்றிற்காக மலைப் பிரதேசத்தைத் தெரிவு செய்து சென்றிருந்தனர். அங்கே ஒரு மலைக் கிராமத்திற்குச் சென்றனர்.
அக்கிராமத்திலிருந்த மக்கள் மிகவும் வறுமையில் இருந்தனர். அவர்களுக்கென நிரந்தரத் தொழில் எதுவுமில்லை. படிப்பறிவற்ற அவர்கள் வேறு பிரதேசங்களுக்கு வேலை தேடிச் சென்றாலும் கிடைப்பது மிக மிக அரிதே. அக்கிராமத்தில் இருந்த குழந்தைகள் போதியளவு உணவு கிடைக்காமல் போஷாக்கின்றி ஒட்டி உலர்ந்த தேகத்துடன் காணப்பட்டனர்.
அவர்களைக் கண்டபோது அவர்களுக்கு மிகவும் மன வேதனையாக இருந்தாலும் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளானது காயத்திரியே. நண்பர்கள் சேர்ந்து தங்களிடம் இருந்த பணத்தைச் சேர்த்து பக்கத்திலிருந்த நகரிற்குச் சென்று சத்துணவுகளைக் கொள்வனவு செய்து குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தனர்.
ஆனால், காயத்திரிக்கோ அத்துடன் மனம் சமாதானம் அடைய மறுத்தது. இந்த கொஞ்ச உணவுடன் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகள் நிறைவேறாது என்று யோசித்தாள். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள். தமிழ்நாட்டில் எத்தனையோ கிராமங்களில் இதைப் போன்ற அவல நிலை இருக்கின்றது தான். எல்லாவற்றுக்கும் தீர்வு காண அவள் ஒருத்தியால் முடியாதுதான். ஆனால், இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையாவது முன்னேற ஏதாவது செய்யணும் என்று முடிவெடுத்தாள். நினைவு தெரிந்த நாள் முதல் தனக்கெனத் தாயிடம் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யுமாறு கேட்டதில்லை. இன்று இந்தப் பிள்ளைகளுக்காகத் தன் தாயிடம் உதவி கேட்டாள். கிராமத்திலுள்ள பெரியவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பை வழங்குமாறும், அது தொடர்பான பயிற்சிகளை வழங்குமாறும் கேட்டாள். அத்தோடு அவர்களின் சுயதொழிலின் பேற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறும் கேட்டாள். உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்தார் அமைச்சரான அவளது தாயார்.
அத்தோடு நில்லாமல் அவளுக்குத் தெரிந்த ட்ரெஸ்ட் ஒன்றின் மூலம் தொடர்ந்து அங்குள்ள பிள்ளைகளின் கல்விக்கும் சத்துணவுத் திட்டத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டே புறப்பட்டாள். அடுத்து வந்த மாதங்களில் நேரடியாக அவ்வூரிற்குச் சென்று முன்னேற்றத்தை அவதானித்ததுடன் மேலும் தன்னாலான உதவிகளையும் செய்து வந்தாள்.
அப்படி எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் படைத்தவள் இன்று யாருமற்ற அநாதை போல இருக்கிறாள். அதிலும் பல நாட்கள் பட்டினி கிடந்தவள் போன்ற அவளது தோற்றம் அவன் நெஞ்சை உலுக்கியது.
அவள் நினைவு திரும்பி பேசவும் அவள்மீது கோபம் வருவதற்குப் பதில் அளவில்லாத அன்பால் இரக்கமே உண்டானது. அதிலும் அவள் வினு என் பையன் என்று கூறவும் சந்தோசத்தில் அவன் உள்ளம் துள்ளியது.
எங்கள் காயுவிற்கு ஒரு பையன் கூட இருக்கின்றானாம் என்று சந்தோசப்பட்டான். ஆனால், தோன்றிய சந்தோசம் அவன் மனதில் தோன்றிய சந்தேகத்தால் நொடியிலேயே கரைந்திட உள்ளூரத் தோன்றிய பயத்தை வெளிப்படுத்தாமல், "காயூ, உன் மகனும்.. வினுவும் உன் கூடத்தான் அன்று வந்தானா?" என்று நெஞ்சம் பதைபதைக்கக் கேட்டான். "இல்லையே" என்று அவள் கூறவும் அப்பாடா என்று நிம்மதி ஏற்பட்டது.
"இனியா, நான் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில்தான் அக்ஸிடன்ட் ஆனது. வினுவை நான் வேலைக்குப் போகும்போதெல்லாம் வீட்டுக்கு அருகில் இருக்கும் கிரஷ்ஷில் விட்டுப் போவேன். திரும்ப வீட்டுக்குப் போகும் வழியில் அவனை கூட்டிப் போவேன். அவன் ரொம்ப சமத்துப் பையன். இந்த வயசிலேயே என்ன ஒரு புரிதல் தெரியுமா? நான் போய் கூப்பிடும் வரை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருப்பான்.” மகனைப் பற்றி பேசும் போது அவள் முகம் பூரித்துப் போனதைக் கண்டு அவனும் புன்முறுவல் பூத்தான்.
“ஆனால் இனியா, எனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி இங்கே வந்து மூன்று நாட்களாகி விட்டது என்கிறாயே. அப்படியானால் வினுவை அவர்கள் என்ன செய்திருப்பார்கள்… இன்று.. இன்று சண்டே தானே. சற்றர்டே, சண்டே கிரஷ் வேறு பூட்டே. ஐயோ! என் வினுவை என்ன செய்திருப்பார்கள்... இனியா எனக்குப் பயமாயிருக்கு" தனது இடது கையால் அவனது கையைப் பற்றியபடி அழுதாள்.
அவளது தலையில் ஆபரேஷன் என்பதால் அதிகம் யோசிக்க வைக்க வேண்டாம் என்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வரவும், அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
“என்ன காயூ நீ.. இப்படி பயப்படுகிறாய். கிரஷ்ஷில் அட்ரஸ் கொடுத்திருப்பாய்தானே வினுவை உன் வீட்டில் கொண்டுபோய் விட்டிருப்பார்கள் தானே" என்றான்.
"இல்லை இனியா. அவர்களிடம் அட்ரஸ் இருக்குதுதான். ஆனால்… ஆனால்… அங்கு… வீட்டில் யாரும் இல்லையே... நானும் வினுவும் மட்டும்தான்… எங்களுக்குன்னு யாருமே இ.. இல்லை..." என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தாள்.
தமிழினியனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவள் என்ன சொல்கின்றாள். தனியாக இருக்கிறாளா?அப்படியானால் இவள் புருஷன் கோபி எங்கே? என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்தது. ஆனால், காயத்திரி இருக்கும் நிலையில் அவளிடம் அதுபற்றி மேலும் கேட்பது உசிதமில்லை என்பதை உணர்ந்தான்.
“சரி காயு, நான் நேரில் போய் பார்க்கிறேன். கிரஷ்ஷில் போய் பார்க்கிறேன். அநேகமாக அங்குதான் இருப்பான். நீ வொர்ரி பண்ணிக்காதடா” என்றவன் அவளின் வீட்டின் முகவரியையும் அந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் முகவரியையும் அவளிடம் கேட்டுக் குறித்துக் கொண்டான், வினுவை அழைத்து வருவதாக அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு உடனேயே புறப்பட்டான்.
வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக் கொண்டு முதலில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்குச் சென்றான். அது பூட்டப்பட்டிருந்தது.
அங்கே பணியிலிருந்த காவலாளியிடம் வினுவைப் பற்றி விசாரித்தான். அவன் அந்த நிலையத்தை நிர்வகித்து வரும் கல்யாணி என்பவரின் தொலைபேசி இலக்கத்தையும் முகவரியையும் கொடுத்து அங்கே சென்று விசாரிக்குமாறு கூறினான்.
தொலைபேசியில் பேசுவதைவிட நேரில் சென்று கேட்பதே நல்லது என்று தோன்ற உடனேயே அவரது வீட்டிற்குச் சென்றான்.
வினுவைப் பற்றி அவன் விசாரிக்கவும் அவனை ஏற இறங்கப் பார்த்தார் அந்த நிர்வாகி. சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி. "ஓகோ நீங்கதான் துபாயில் வேலை செய்யும் காயத்திரியின் கணவரா? மிஸ்டர் கோபிகிருஷ்ணன் தானே?" என்று கேட்டார்.
எடுத்ததும் அவர் அப்படிக் கேட்கவும் திகைத்தான். ஓகோ.. அதுதான் காயத்திரி தனியாக இருக்காளா என்று யோசித்தான்.
“என்ன மிஸ்டர் கோபிகிருஷ்ணன் எதுவும் சொல்லாமல் அமைதியா இருக்கிறிங்க?”
தான் கோபிகிருஷ்ணன் இல்லை என்று சொல்ல முனைந்த தமிழினியன் ஏதோ தோன்றவும்
“ஒன்றுமில்லை மெடம்.. சும்மாதான்” என்று பதிலளித்தான். தான் கோபிகிருஷ்ணன் இல்லை என்று கூறினால் குழந்தையைத் தன்னிடம் தர யோசிப்பார்கள். பிரண்ட் என்று சொன்னால் என்ன சொல்வார்களோ என்று அவனுக்குத் தோன்றியது.
"நல்லது... நீங்கள் மீண்டும் நாட்டிற்கு வந்தது சந்தோசமே. ஆமா மூன்று நாட்களாகிடுச்சு. இதுவரை பையனைத் தேடி காயத்திரி வரவில்லையே.. என்னாச்சு?"
"அவளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அக்ஸிடன்ட் ஆகிடுச்சு மேடம். இன்றுதான் நினைவு திரும்பிச்சு"
"கடவுளே! என்ன நடந்திச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்.
அவன் நடந்தவற்றை விவரித்தான். வைத்தியசாலையில் இருந்து தனக்குத் தகவல் கூறியதால் தான் உடனே வந்ததாகவும் தெரிவித்தான்.
வினுவைப் பற்றி அவரிடம் கேட்டான். "வெள்ளிக்கிழமை காலையில் வழமைபோல காயத்திரி வினுவைக் கொண்டு வந்து விட்டுட்டுப் போனார். மாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு தவறாமல் கூப்பிட வருவார். அன்றும் காயத்திரி வருவார் என்று ஏழு மணிவரை வினுவை பராமரிப்பு நிலையத்திலேயே வைத்திருந்துள்ளார்கள். வரவில்லை எனவும் அவரது நம்பருக்கு ஹோல் பண்ணினார்கள். பட் போன் சுவிட்ச் ஓவ் என்று வரவும் எனக்கு உடனேயே அறிவித்தார்கள். நான் அவரது ஆபிஸூக்கு ஹோல் பண்ணிக் கேட்டேன். வேர்க் முடிந்து ஐந்து மணிக்கே போய்விட்டார் என்றார்கள். நான் சென்று வினுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். அங்கேயும் வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றோம். அந்தப் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்யும் பெண் ஒருத்தி அந்த பையனைத் தான் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவும் காயத்திரி வந்ததும் ஒப்படைப்பதாகவும் கூறி அவனைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். நேற்றும் காயத்திரி வரவில்லை எனவும் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளோம்." என்றார் அந்த நிர்வாகி.
‘அப்பாடா, வினு பாதுகாப்பான ஓர் இடத்தில் தான் இருக்கிறான்’ என்ற நிம்மதி அவனுக்கு ஏற்பட்டது.
சிறுவர் பராமரிப்பு நிலைய நிர்வாகி அவனையும் அழைத்துக் கொண்டு அந்த ஆசிரியரின் வீட்டிற்குச் சென்றார். அங்கே தாயை இரண்டு நாட்களாகக் காணாத ஏக்கத்தில் அழுதழுது சோர்ந்து போய்ப் படுத்திருந்தான் வினு என அழைக்கப்படும் வினோஜிதன். நான்கே வயதான குழந்தை. அதனைக் கண்டதும் தமிழினியன் பாசமாக அணைத்துத் தூக்கி முத்தமிட்டான். குழந்தை மிரட்சியுடன் அவனைப் பார்த்தது.
"நீங்க யாரு?" என்று அந்த சோகத்திலும் தெளிவாகக் கேட்டது.
"நான் உன் அ... அப்பா" என்றான் தமிழினியன். அங்கிள் என்று சொல்ல ஆரம்பித்தவன் அருகிலேயே நின்று தங்களையே பார்த்துக்கொண்டு நின்ற நிர்வாகியையும் ஆசிரியரையும் பார்த்ததும் அப்பா என்று கூறினான். ஒரு பக்கம் பெரும் பயம் அவனை ஆட்கொண்டது. குழந்தைக்கு அதனது அப்பாவைத் தெரிந்திருக்குமோ? நீங்கள் என் அப்பா இல்லை என்று கூறிவிட்டால் தன் நிலை...?
பயத்துடன் குழந்தையே பார்த்து நின்றான். ஆனால், அப்பா என்று சொன்னதும் குழந்தையின் முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பின் பிரகாசம் போன்ற சந்தோசத்தைக் கண்டான். மகிழ்ச்சியில் அவனை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டது குழந்தை.
"என் அப்பா.. அப்பா.." என்று சந்தோச முத்தத்தை வாரி இறைத்தது.
நிர்வாகிக்குச் சந்தேகம் தோன்றியது. குழந்தைக்குத் தனது தந்தையைத் தெரியாது இருக்குமா? குழந்தை பிறக்கும் முன்னரே அவர் வெளிநாடு சென்றார் என்று காயத்திரி கூறியிருந்தாலும் அலைபேசியில் வீடியோ அழைப்பில் பார்த்திருப்பானே. ஆனால், நீங்கள் யார் என்று குழந்தை கேட்கிறதே என்று நினைத்தவர் அவனை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். அவரது பார்வையைப் புரிந்து கொண்டவன்
"மேடம், நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு மூன்று வருடங்களாகப் பேசிக்கல. அதுதான்... இவனுக்கு என்னைத் தெரியல." என்றான். எனினும் சந்தேகம் விலகாத நிர்வாகி அவனுடன் குழந்தையை அழைத்துக்கொண்டு தானும் வைத்தியசாலைக்கு வருவதாகக் கூறியதோடு, தான் பதிவு செய்திருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்தார்.

குழந்தையை அழைத்துக்கொண்டு காயத்திரியை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்குச் சென்றான். வினு தனது தாயைப் பார்த்ததும் பயந்துவிடக் கூடாது என்று வரும் வழியிலேயே அதற்குப் புரிகின்ற மாதிரிக் கூறி வைத்தான். அம்மா வழுக்கி விழுந்து தலையில் சின்னக் காயம். இப்போ ஆறிடும் என்று அதனிடம் கூறினான். வைத்தியசாலை வாசலில் இவர்கள் சென்ற கார் போய் நிற்கவும் பொலிஸ் ஜீப்பும் அங்கே வந்து சேர்ந்தது. குழந்தை குறித்து பொலிஸில் கேஸ் பதிவு செய்திருந்தபடியால் அதற்கான விசாரணை மேற்கொள்ள அவர்கள் வந்திருந்தனர். அவர்களைக் கண்டதும்தான் தமிழினியனுக்கு மேலும் மனக்கலக்கம் ஏற்பட்டது.
'அந்த நிர்வாகியிடம் நான் குழந்தையின் தந்தை என்று கூறிவிட்டேன். இப்போது காயத்திரியிடம் கேட்கும்போது அவள் பிரண்ட் என்றே கூறுவாள். பொய் சொன்னது தெரிந்துவிடுமே. ச்சே என்ன மடத்தனம் செய்து விட்டேன். ஒரு சின்ன பொய் சொல்லப் போய் இப்போது இப்படி பயந்து சாகின்றேனே' என்று மனதிற்குள் புலம்பினான்.
 
Top