எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 21

S.Theeba

Moderator
இந்தச் சூழ்நிலையிலேயே தொடர்ந்து அபிராமியுடனான கல்யாணப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. இப்போதுதான் அவனுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மனதுக்கு பிடித்தவளே தன் மணவாட்டியாக அமையப்போவது மனதில் பெரும் சந்தோஷத்தைத் தந்தது. அதிலும் தான் முதன்முதலாகப் பார்த்து ஆசைப்பட்டவள் எதிர்பாராமல் மனைவியாக அமைவது வரமே. ஆனால், வினுவை நினைக்கும்போது பெரும் தவிப்பாக இருந்தது.
‘இப்போது எத்தனை பெரிய சிக்கலில் மாட்டிவிட்டேன். என் வாழ்வில் சரிபாதியாக வருபவள் வினுவை ஏற்றுக் கொள்வாளா? அவன் அப்பா என்று பாசத்துடன் அழைப்பதை புரிந்து கொள்வாளா? அப்படிப் புரிந்து கொள்ளாவிட்டால் வினுவை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவனுடன் பழகிய இந்தச் சில நாட்களிலேயே என் வாழ்வோடு கலந்து விட்டான். அவன் அப்பா என்று அழைக்கும் போது எனக்குள் உருவாகும் பாசம் பிணைப்பை யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், மனைவியாக வருபவள் அதனைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதனால் வாழ்க்கையே சிதைந்து விடுமே. அத்தோடு எனக்கும் காயத்திரிக்கும் இடையில் இருக்கும் நட்பின் ஆழத்தை, அதன் புனிதத்தையும் அவள் புரிந்து கொள்வாளா?' என்ற மிகப் பெரிய கேள்விகள் அவன் மனதைக் குடைந்தன.

இதற்கு ஒரே தீர்வு கல்யாணமே பண்ணாமல் அவள் நினைவிலேயே வாழ்ந்து விடுவதே என்று முடிவெடுத்தவன் அதற்கான முயற்சியில் இறங்கினான். அதற்காகவே தாயிடம் சென்றவன்
'இந்தக் கல்யாணப் பேச்சை உடனேயே நிறுத்துமாறும், இப்போதைக்கு தனக்கு கல்யாணம் வேண்டாம் என்றும் கூறினான். தாய் அறியாத சூல் இல்லையே. அவன் அபிராமியை விரும்புகிறான் என்பதை போட்டோவை அவனுக்குக் காட்டியதிலிருந்து அவதானித்து அறிந்தவர் வேறு என்ன காரணம் என்று கேட்டார். தனது பிஸ்னஸை டெவலப் செய்துவிட்டு அப்புறம் கல்யாணம் செய்யலாம் என்று அவன் பதிலளிக்கவும் அதனை ஏற்றுக் கொள்ளாதவர் அந்தக் கல்யாணத்தில் பிடிவாதமாக நின்று விட்டார். உடனேயே பெண் பார்க்கும் சம்பிரதாயத்தை நடத்தினார். எனவே வேறு வழியில் முயற்சி செய்ய நினைத்தவன் அபிராமியிடம் பேசினான். ஆனால், அதுவும் பலனளிக்காமல் போகவும் செய்வதறியாது திகைத்து நின்றான். இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதற்கு சரியான காரணம் அவனால் சொல்ல முடியாதே. வினுவுக்காக என்றால் யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. சரி நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு அபிராமியை ஏமாற்றி விட்டோமோ என்று தோன்றத் தொடங்கியது. இன்னுமொருத்தியின் குழந்தையை, அது நண்பியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தன் அபிக்கு இருக்குமா என்று தெரியாது. அது தெரியாமல் உடலளவில் அவளைப் பலவீனப்படுத்த விரும்பாமல் தவித்து நின்றான்.

அவ்வளவு நேரம் தன் வாழ்விலும் தன் உயிர் நண்பியின் வாழ்விலும் நடந்த சம்பவங்களைக் கூறிக் கொண்டிருந்தவன் பக்கத்தில் "தம்பி சுண்டல் வாங்குறிங்களா?" என்று குரல் கேட்கவும் சுற்றுமுற்றும் பார்த்தான். அருகில் ஒரு முதியவர் சுண்டல் வாளியுடன் நின்றிருந்தார். அவரிடம் இரண்டு சுண்டல் சுருள்களை வாங்கியவன் அவளிடம் ஒன்றைக் கொடுத்தான்.

அவள் அதனை வாங்கி உண்ணாமல் அப்படியே வைத்திருக்கவும்
“ஏன் அபி உனக்கு இது பிடிக்காதா?” என்று கேட்டான்.
தலையாட்டிவிட்டு ஒவ்வொன்றாக எடுத்து உண்பது போல் பாவ்லா காட்டினாள். அவளது மனநிலை புரிந்தவன் எதையோ சொல்ல வாயெடுத்தவன் குரல் சற்று கமறியது.
செருமி தொண்டையை சரி செய்தவன் இருட்டில் கரும் நிறப் போர்வையாக தோன்றிய கடலில் நிலவின் ஒளி மின்னும் அழகை வெற்றுப் பார்வை பார்த்தபடி
“அபி, இப்போது நான் சொன்ன விடயங்கள் உனக்குக் கஷ்டமாக இருந்தால் சொல்லிவிடு. எனக்கு உன்னை விட்டு விலகி இருக்க முடியல. நீ அருகில் இருந்தால் போதும் என்றுதான் நினைத்திருந்தேன். அது இப்போது முடியல. ஆனால், வினுவை என்னால் விட முடியாது. அவன் எப்போதும் எனக்கு மகன்தான். காயத்திரியின் எதிர்காலமும் நல்லதாக அமைக்க வேண்டிய பொறுப்பு என்னதே. இதிலிருந்து என்னால் பின்வாங்க முடியாது. இனி முடிவு உன் கையில் தான். நீ என்ன முடிவெடுத்தாலும்… நான் அதனை… நிறைவேற்றுவேன்” என்றவன் சற்றுநேரம் அமைதியாகவே இருந்தான். அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தான்.
சில நிமிடங்கள் ஆகியும் அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை எனவும் திரும்பி அவளைப் பார்த்தான். அவளோ வெறித்த பார்வையாக கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தவன்
"அபி, ரொம்ப இருட்டிவிட்டது. குளிர்காத்து வேற வீசுது. புறப்படுவோமா? அம்மாவும் அப்பாவும் ரென்சனாய் இருப்பாங்க. காச்சல் வந்த உடம்பு வேறு. புறப்படும்போதே அம்மா சொன்னாங்க. இப்போ எனக்கு நல்ல திட்டுத்தான் விழப் போகுது. வா போகலாம்." என்று அழைத்தான். அவள் எதுவும் பேசாது எழுந்து அவனுடன் சென்றாள்.

வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசவில்லை. தமிழினியனுக்கு மனசுக்குள் ரொம்பப் பதட்டமாகவே இருந்தது. 'நடந்ததை அவளிடம் சொல்லி விட்டேன். வேறொருத்தியின் பிள்ளை தன் புருஷனை அப்பா என்று அழைப்பதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அபியும் என்ன மனநிலையில் இருக்கின்றாளோ? நான் இவ்வளவும் சொன்ன பிறகும் ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. என் மீது கோபமா...?' மனதுக்குள் பெரும் பிரளயமே அவனுக்குள் நடந்தது.

வீட்டிற்கு வந்ததும் அவன் நினைத்தது போலவே நிலாவும் பாலாவும் அவனை வாட்டி எடுத்து விட்டனர். காய்ச்சலுடன் இருந்தவளை வெளியில் கூட்டிப் போனதுமல்லாமல் இருட்டும்வரையும் கடற்கரைக் குளிர்காற்றில் அவளை இருக்க வைத்துள்ளாயே என்று திட்டித் தீர்த்து விட்டார்கள். அவ்வளவு பேச்சுக்கும் அபிராமியிடமிருந்து எந்த சலனமும் தோன்றவில்லை.

இரவு உணவு முடிந்ததும் ஆபிஸ் அறைக்குள் சென்றவன் அமுதத்தின் அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றான் தமிழினியன். காய்ச்சலால் ஏற்பட்ட சோர்வோ அல்லது மாத்திரைகளின் தாக்கமோ அபிராமி அந்நேரத்துக்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தன் மனதில் அழுத்திக் கெண்டிருந்த விடயத்தை அவளிடம் கூறிவிட்டதால் நீண்ட நாட்களாகத் தன் மனதில் இருந்த பாரம் குறைந்த நிம்மதி உணர்வு தோன்றியது அவனுக்கு. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வழமைபோல் சோஃபாவில் சென்று படுத்தான். ஆனால், தூக்கம்தான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது.
திரும்பி கட்டிலில் படுத்திருந்த தனது அபியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
'அபிம்மா நீ என் உயிருடா. நீ இல்லாத வாழ்க்கை என்பது எனக்கு நரகம்டா. ஆனால் வினுவையோ காயத்திரியையோ என்னால் விட்டுவிட முடியாதுடா. நட்பா காதலா என்று கேட்டால் எனக்கு இரண்டும் ஒன்றேதான். அபி ஒரு வார்த்தை கூட நீ பேசவில்லையே. என்னைத் தப்பாகப் புரிந்துகொண்டு விட்டாயோ. மற்றவர்கள் என்னைப் பற்றித் தப்பாகப் பேசினால் அதை சட்டை செய்யாமல் நகர்ந்து விடுவேன். ஆனால், என் அபி என்னைப்பற்றி தப்பாக நினைத்தால் என்னால் தாங்க முடியாதே' என்று அவளுடன் மனதால் பேசியபடி படுத்திருந்தான்.

எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவன் வழமை போலக் கட்டிலைப் பார்த்தான். தினமும் அவள் முகத்தைப் பார்த்து விட்டு எழ நினைத்தான். ஆனால், அங்கே அபிராமியைக் காணவில்லை.

எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்து குளித்து உடை மாற்றி தயாரானவன் சிறிது யோசனையுடன் அறையை சுற்றும்முற்றும் பார்த்தான். தினமும் அவன் குளித்து விட்டு வரும்போதே, அவன் பேசாது முகத்தைத் திருப்பினால் கூட முகம் கோணாது எப்போதும் இருக்கும் புன்னகை சற்றும் மட்டுப்படாது டீயுடன் அவன் முன்னே நிற்பாள். ஆனால், இன்று இவ்வளவு நேரம் ஆகியும் டீ கொண்டு வரவில்லையே என்று யோசித்தவன் கீழே இறங்கி வந்தான். அங்கும் அவளைக் காணவில்லை. அவன் வந்ததை அறிந்ததும் சமையலறையில் இருந்து டீயுடன் வந்தார் நிலா.
அவரிடம் டீயை வாங்கியவன் சுற்று முற்றும் அபிராமியைத் தேடினான். அவள் அங்கே இருப்பதற்கான எந்தத் தடயத்தையும் காணவில்லை. தாயிடம் கேட்க அவன் வாயைத் திறக்கவும்,
"இனியா, திடீரென அபிராமி போனதும் எனக்கு வீடே வெறிச்சோடிக் போனமாதிரி இருக்கு. ஆமா, எப்போ அபி திரும்ப வருவாளாம்? சாவியும் காலேஜ் போயிட்டால் எனக்குத்தான் வீட்டில் தனியாக இருக்க போரடிக்கும்." என்றார்.
அவனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அபி இந்தக் காலை வேளையிலேயே எங்கு சென்றாள். என்னிடம் எதுவும் சொல்லவில்லையே. கோயிலுக்குப் போயிருப்பாளோ? ஆனால், கோயிலுக்குப் போவதென்றால் அம்மாவிடம் சொல்லி விட்டுத் தானே போவாள். அம்மா என்னிடம் கேட்கின்றாரே..
"அண்ணா, அண்ணியிடம் சொல்லுங்கள். அவர் இங்கு இல்லாவிட்டால் எனக்கும் மிகவும் போரடிக்கும். இன்று எனக்கு இற்றாலியன் டீராமீசு டெசேர்ட் செய்து தாறேன் என்றாங்க. பட் இப்போ திடீரென போயிட்டாங்க. அப்பவும் நான் சொன்னேன். நேற்றே செய்து தரும்படி. என்னை ஏமாற்றிட்டாங்க. சீக்கிரம் வரச் சொல்லுங்கள்." என்று புலம்பியபடி வந்து அவன் அருகில் அமர்ந்தாள் சாவித்திரி.

எதுவும் சொல்லத் தோணவில்லை அவனுக்கு. காலை உணவை மறுத்துவிட்டு அமுதத்துக்குச் சென்று விட்டான். அங்கும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. வேலையில் கவனம் செலுத்தவும் அவனால் முடியவில்லை.
அபி எங்கே சென்றிருப்பாள் என்ற கேள்வி அவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
தாயிடம் அவள் எங்கே சென்றாள் என்று கேட்டால் தன்னிடம் சொல்லாமல் போயிருக்கிறாள், ஏதாவது பிரச்சினையோ என்று நினைத்துக் கவலைப்படுவார் என்பதால் கேட்க முடியவில்லை. தன்னிடம் கோபித்துக் கொண்டு சென்று விட்டாளோ என்ற பயம் மனதில் தோன்றியது. அவளிடம் பேசினால் மனது கொஞ்சம் அமைதியடையும் என நினைத்தவன் அபிராமிக்கு அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டான். ஆனால், அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.யோசித்து விட்டு சாவித்திரிக்கு அழைத்தான்.
"அண்ணா என்ன இந்த டைமில் ஹோல் பண்ணுறிங்க?"
"கிளாசில் இருக்கிறாயாடா? பாடம் நடக்குதா?"
"இல்லண்ணா, ஃப்ரீ டைம்தான் சொல்லுங்க"
"சாவித்திரி, உங்க அண்ணி இன்று போகப்போறதா நைட் சொன்னாதான். நான்தான் அதை மறந்து நல்லாத் தூங்கிட்டேன். கோபிச்சுக் கொண்டு எழுப்பாமலேயே போயிட்டாள். எப்படிப் போனாளோ... உனக்குத் தெரியுமா?"
"ஆ... அண்ணா, அவங்க உங்க கார்டில் தான் காப் புக் பண்ணிப் போனாங்க."
"ஓகே டா, நான் அவள்கிட்டப் பேசிக்கிறன்" என்றவன் அழைப்பை நிறுத்தி விட்டு தன் அக்கவுண்ட் டீடெயிலில் விவரம் பார்த்தான். அவள் வாடகைக் காரைத் தனது பெற்றோர் வீட்டு முகவரிக்கே அமர்த்தியிருக்கிறாள். அப்படியானால் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டாளோ. நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டாளோ? அல்லது என்னையே தவறாக நினைத்துவிட்டாளோ? நினைக்கும்போதே மனம் எல்லாம் வலித்தது. 'இதற்குத்தான் இந்தத் திருமணமே வேண்டாம் என்றிருந்தேன். அவளை நினைத்துக் கொண்டே வாழ்ந்திடுவோம் என்றிருந்தேன். ஆனால், இப்போது அருகில் இருந்துவிட்டு விலகிச் சென்றால்... அந்த நினைவே என்னை உயிரோடு கொல்லுதே... அபிம்மா வந்துவிடு என்னிடம்' என்று வாய் விட்டே புலம்பினான். என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போய் நின்றான். கண்களை மூடி கதிரையில் தலை சாய்த்து அமர்ந்திருந்தான். அவன் கண்ணிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீரே அவன் அபிமீது கொண்ட காதலின் அளவைப் பறைசாற்றியது.

அவனை வேதனையில் உழலவிடாமல் அவனது அலைபேசி சிணுங்கியது. அபிதான் அழைக்கின்றாளோ என்று பதட்டத்துடன் அதனை எடுத்துப் பார்த்தான். அழைப்பது காயத்திரி எனக் கண்டவன் தன் பதட்டத்தைத் தணிக்க ஒரு நெடு மூச்சை வெளியிட்டான்.
"சொல்லு காயூ..."
"இனியா, பிஸியாக இருக்கியா?"
"இல்லை காயூ நீ சொல்லு"
"இனியா, வினுவுக்கு நேற்று நைட்டிலிருந்து கொஞ்சம் ஃபீவராக இருக்குது. இப்போ ஃபீவரோட வாமிட்டும் வருதுடா"
"ஏய், நைட்டே ஹோல் பண்ணுறதுக்கென்ன?"
"இல்லடா நைட் டைம் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று..."
"எனக்கு வர்ற கோபத்துக்கு... விடு... வெயிட் நான் இப்போவே புறப்பட்டு வாறன். ஹொஸ்பிடல் போவோம்" என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு உடனேயே புறப்பட்டு காயத்திரி வீட்டுக்குச் சென்றான்.

அங்கே குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகிவிட்டது. காயத்திரியைத் திட்டிவிட்டு குழந்தையையும் காயத்திரியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே குழந்தையைப் பரிசோதித்த டாக்டர் மருந்தை வழங்கிவிட்டு மூன்று நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சல் குறையாவிட்டால் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பினார். அங்கே இருந்த பார்மசியில் மருந்துகளை வாங்கியவன் குழந்தையைத் தானே தூக்கிக் கொண்டு காயத்திரியையும் அழைத்துச் சென்றான். இதனை வைத்தியசாலையில் ஒரு ஜோடிக் கண்கள் அதிர்ச்சியுடன் பார்த்தன.
 
Top