ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..” என்று அறுபது வருடங்களுக்கு முன் வெளியான துள்ளல் நிறைந்த பாடல் ப்ரதீப்பின் அலைபேசியில் காற்றின் ஓசையை கிழித்துக்கொண்டு ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த பாடலின் மெட்டுக்கேற்ப கால்கள் இரண்டையும் நீச்சல் குளத்தில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் ப்ரதீப்.
சதுர வடிவில் கப்பலின் திறந்த வெளி மேல்தளத்தில் நீச்சல் குளம் இருந்தது. அதன் உள்ளே கால்களை விட்டு ரங்கா, விலோ ஒருபுறமும், சக்தி, ப்ரதீப் மற்றொரு புறமும் அமர்ந்திருந்தனர்.
அன்று பௌர்ணமி என்பதால் நிலவின் பிரகாசம் அளவுகதிகமாகவே இருந்தது. அதற்கு துணையாக நட்சத்திரமும் அதனின் இருப்பை ஆங்காங்கே மின்னி தெரிவித்துக் கொண்டிருந்தது.
அந்த முழுநிலவின் உதவியால் கடலிலும் அலைகள் தங்கமாக ஜொலித்தது. பௌர்ணமி தினமாதலால் கடலலையும் அதனின் பங்கிற்கு சீறிக்கொண்டும் நுரைப்பொங்க தலும்பிக்கொண்டும் இருந்தது.
நிலவின் ஒளியுடன் போட்டி போடும் அளவிற்கு பல விளக்குகளின் வெளிச்சத்தில், நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தது அவர்கள் சென்றுக்கொண்டிருந்த கப்பல். அதன் மேல்தளத்தின் கைப்பிடி வளைவின் பக்கத்தில் ஷிவன்யா நின்றுக் கொண்டிருந்தாள்.
அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேமராவினால், இருள் வானில் தோன்றிய பூர்ண சந்திரனையும் அதனின் தோழிகளுமான நட்சத்திரங்களையும் படமெடுக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.
மற்றொரு புறம், உப்புக்காற்று முகத்தில் மோத தன்னிரு கைகளை கட்டிக்கொண்டு அதனை ஆழ்ந்து சுவாசித்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொடிருந்தான் அமரன். கட்டம் போட்ட சட்டை அணிந்து அதனை கைமுட்டிவரை மடக்கிவிட்டிருந்தவன் அதற்கு தகுந்தவாறு கருப்பு நிற கால்சாராய் அணிந்திருந்தான். ஈரத்தன்மை நிறைந்த உப்பு காற்று அவனின் கேசம் கலைத்து உடலை தழுவி செல்ல கண்மூடி அந்த தீண்டலை அனுபவித்து ரசித்தபடி நின்றுக் கொண்டிருந்தான்.
அமரன் பிறந்து வளர்ந்ததெல்லாம் கடற்கரையில் தான். ‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி’ என்ற பாடலை அமரனுக்கு ஏற்றவாறு மாற்றினால், “அலையோடு விளையாடி, கடலோடு உறவாடி” என்று சொல்லும் அளவிற்கு சிறுவயதிலிருந்தே கடல் மேல் பெரும் அவா கொண்டவன். தன் அப்பாவின் பேச்சையும் மீறி பலமுறை மீன்பிடிக்க சென்றுவிடுவான். அதனாலே அவனை கட்டுப்படுத்த, கட்டாயப்படுத்தி பெங்களூர் அனுப்பி படிக்க வைத்தார் அந்தோணி.
அமரனை பார்த்த விலோ, “இவன் என்னடா இப்படி நின்னுட்டு இருக்கான்..? டைட்டானிக் ஜாக் மாதிரி..”
“அவன் அப்படித்தான். கேட்டா கடல், காத்து, இயற்கைன்னு ஏதாவது கதை சொல்லுவான். அதுக்காக டைட்டானிக் ஜாக் அளவுக்கெல்லாம் அவனுக்கு சீன் இல்லை..” என்று தண்ணீரில் காலை ஆட்டிக்கொண்டிருந்த பிரதீப் ஷிவன்யாயை பார்த்துவிட்டு, "அவ பேசவே மாட்டாளா விலோ..? தனியாவே இருக்கா? அவங்க வீட்லயும் இப்படி தான் இருப்பாளோ..?" ஷிவன்யாயை பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலுடன் தலையை திருப்பி விலோவிடம் வினவினான்.
அவனின் கேள்வியில் அனைவருமே ஷிவன்யாவை பார்த்தனர். வெண்ணிற சட்டை, ஜீன்ஸ் அணிந்திருந்தவள் அந்த நிலவொளியில் ஓவியம் போல் மிளிர்ந்தாள். காற்றில் கேசம் பறக்க அதனை கோதிய படியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஷிவன்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “யார்கிட்டயுமே அவசியமில்லாம பேச மாட்டா ப்ரதீப். நானுமே அவகிட்ட போராடி தான் ஃபிரண்ட் ஆனேன். அவ வளர்ந்தது எல்லாமே ஒரு இல்லத்தில் தான். படிப்பு முடிஞ்சதும் அங்க இருந்து வெளியே வந்துட்டா. இப்ப எங்க வீட்டு மாடில தான் குடியிருக்கா" என அவளின் தோழியை பற்றி கூறினாள். அதை கேட்டுக்கொண்டிருந்த ப்ரதீப் அமைதியாக தலையசைத்தான்.
ரங்கா, "நீ எதுக்கு அவளை பற்றி கேட்கிற?" என்றான் புருவ சுழிப்புடன்.
ப்ரதீப் கண்ணடித்து, "சும்மா தெரிஞ்சிக்க தான் டா.." என்று சிரிப்புடன் சொல்ல, சக்தி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினான்.
அவ்வளவு நேரம் கடலின் உப்புக்காற்றில் நின்று இரவின் அழகை ரசித்துவிட்டு அவர்களின் பேச்சை கேட்டபடியே வந்து ப்ரதீப்பின் அருகில் அமர்ந்தான் அமரன். அதோடு அவனின் கையில் உள்ள வெள்ளி காப்பை ஏற்றிக்கொண்டே, "அவனுக்கு மட்டுமில்லை இனி உனக்குமே அவ தங்கச்சி தான்" மிரட்டும் தொனியில் ப்ரதீப்பிடம் கூறினான்.
"இப்படி பார்க்கிற பொண்ணுங்க எல்லாரையும் எனக்கு தங்கச்சி ஆக்குனா நானெப்ப தான் கமிட் ஆகுறது..?" என்று நொந்துக்கொண்ட ப்ரதீப், "இப்படி காட்டான் மாதிரி ரெண்டு அண்ணனுங்க இருக்க பொண்ணு எனக்கும் வேண்டாம்" என முறுக்கிக்கொண்டான்.
“நீ வேணும்னு சொன்னாலும் உனக்கு கிடைக்காது..” என்று விலோ கிண்டலடிக்க அனைவரும் சிரித்துவிட்டனர். அதற்கு அவளை முறைத்து வைத்தான் ப்ரதீப்.
“சரி சொல்லு ப்ரதீப்.. உன்னோட டீம்ல புதுசா ஜூனியர்ஸ் வரபோராங்க.. நான் கமிட் ஆக போறேன்னு சொன்ன..?” என்று நக்கல் குரலில் ரங்கா கேட்டான்.
“டேய் மச்சான்! நாம படிக்கிறப்ப நாற்பது பேர் ஒரு க்ளாஸ்ல இருந்தா ஆறேழு பேர் தான கமிட் ஆகிருப்பாங்க.. இப்பலாம் ஆறேழு பேர் தான் டா சிங்களா இருக்காங்க. இதுல நான் எங்க போய் எனக்கானவளை தேட..” என்று பெருமூச்சுடன் முடித்தான்.
அதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஷிவன்யாயும் அவர்களின் பக்கம் வந்து விலோவின் அருகில் அமர்ந்தாள்.
“ஏன் டா பொண்ணு பொண்ணுன்னு அலையுற?” என்ற ரங்காவின் கேள்விக்கு,
“இந்த மனித பிறவி.. பெண் அன்பினில் அடங்கிடும்..” என்று பாடிக்கொண்டே மல்லாக்க படுத்து தலைக்கு கீழ் கைகளைவைத்தப்படி வானை வெறித்தான் ப்ரதீப்.
“நீ வாயை மூடு” என்ற ப்ரதீப், “ஆமா சிரிப்பு போலீஸ்க்கு எப்படி லீவு கிடைச்சுது?” என்றான் ரங்காவை பார்த்து.
“நான் ஒரு இன்ஸ்பெக்டர். என்னை பார்த்து சிரிப்பு போலீஸ்னு சொல்லுற? இனி கேஸ்ல யாரும் மாட்டாம இருந்தா உன்னைய புடிச்சி உள்ள வெச்சிடுறேன்” என்றான் ரங்கா.
“சரி விடு. அப்பறம் எப்ப பேச்சிலர் பார்ட்டி கொடுக்க போற..? உனக்கு அடுத்து சக்தி கொடுக்க ரெடியா இருக்கான்” என்று ப்ரதீப் கூற,
“அப்படியா சக்தி..? எப்ப கல்யாணம்? என்கிட்டே சொல்லவே இல்லை” என்று விலோ கேட்க,
“எனக்கே தெரியாது! இந்த தடியன் தான் உளறுறான்” என்று கடுப்புடன் சக்தி சொல்ல,
“நீ உன்னோட அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறதா அந்த நியூஸ் பேப்பர்ல போட்டாங்களே..!” என்று சக்தி கடந்தவாரம் சக்தியை பற்றி வந்த கிசுகிசுப்பை கூறினான்.
“இந்த ரிப்போர்ட்டர்ஸ்கு தான் உருப்படியா செய்ய வேலை எதுவும் இல்லாம கண்டதையும் கிறுக்குவாங்க. நீ அதை நம்பி எங்கிட்டயே கேட்குற..” என்ற சக்தி ஓரக்கண்ணால் ஷிவன்யாவை பார்த்துவிட்டு கூறினான். ஷிவன்யா, அவன் சொல்வது காதில் விழுந்தாலும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அவளின் கேமராவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சக்தி வேண்டுமென்றே தான் ஷிவன்யாவை வம்பிழுகிறான் என்று புரிந்துக்கொண்டார்கள் விலோ, ரங்கா, அமர் மூவரும். விலோ சக்தியை விழிகளால் பேசாதே என்று சொல்ல அதற்குமேல் சக்தி எதுவும் பேசாமல் அமைதியானான்.
“ச்சா ட்ரீட் மிஸ் ஆகிடுச்சே..” என்று ப்ரதீப் ஏமாற்றமாய் சொன்னான்.
ரங்கா, “சக்தி” என்று சக்திவேலை மெதுவாக அழைத்து சமிக்ஞை செய்தான். சக்தி சிரித்துக்கொண்டே ப்ரதீப்பின் கையில் இருந்த ஃபோனை பறித்த மறுநொடி அவனை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டிருந்தான் அமரன்.
“பாவிகளா..” என்று அலறிக்கொண்டே பத்தடி ஆழத்தில் இருந்த நீச்சல் குளத்தின் அடிவரை சென்று வந்தான்.
“ஓவரா பேசுனா இப்படி தான்” - ரங்கா
ப்ரதீப் முகத்தில் இருந்த நீரை வழித்தப்படி, “என்னோட அலெக்சா..” என்று அலறினான்.
“அவ சக்தி கைல தான் பத்திரமா இருக்கா” என்ற அமரன் சிரிப்புடன், “இந்த நாய் அந்த அலெக்சா கிட்டலாம் கடலை போடுறான் டா” என்றான்.
“ஆள் இல்லாத சிங்கிள்ஸ்க்கு அலெக்சா தான் டா ஆளு என் வென்று” என்றவன் தண்ணீரை அனைவரின் மேல் தெளிக்க, “எருமை எருமை” என்று அவனை திட்டிக்கொண்டே அனைவரும் எழுந்துவிட்டனர்.
“ரொம்ப குளிருது! நான் உள்ள போறேன்” என்று ப்ரதீப் சென்றுவிட்டான். ப்ரதீப்பின் கைபேசியை அமரனிடம் கொடுத்த சக்தி நகர்ந்துவிட்டான்.
“இங்க சிக்னல் கிடைக்காதா விலோ. எடிட்டர்க்கு ஒரு ஃபோன் பண்ணனும்” என்று ஷிவன்யா கேட்க,
“கடல்ல சிக்னல் கிடைக்காது ஷிவ். வைஃபை இருக்கு. அதை யூஸ் பண்ணிக்கோ” என்ற அமர் அவளுக்கு உதவினான். அவளும் ஃபோனை வாங்கிக்கொண்டு நகர பார்க்க,
“இங்க வேணாம் எல்லாரும் உள்ள போகலாம்” என்று அமரன் சொன்னான்.
அந்த ரம்மியமான சூழலை ரசித்தபடியே “ஹே! இங்க சூப்பரா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே..” என்று விலோ கேட்க,
“நோ விலோ! காலைல வரலாம். எட்டாகிடுச்சி. இன்னைக்கு பௌர்ணமி வேற.. அலை அதிகமா இருக்கும். நாம உள்ள போய்டலாம்” என்று அமர் சக்தியையும் அழைத்தான்.
“அடியே! ஒன்னும் ஆகாது. அலை வேகமா வந்து கப்பல்ல மோதும். அந்த வேகத்துல மேல நிக்கிற நாம டைவடிச்சி கீழ விழ கூடாதுன்னு சொல்லுறான்..” என்று அவளின் பதட்டத்தை குறைத்தான் ரங்கா.
யாராவது தெரியாமல் தவறி விழுந்தாலும், சட்டென்று போட்டை பைக், கார் போல் திருப்பிக்கொண்டு தேட முடியாது. அதிலும் மையிருட்டாக இருக்கும் கடலில் விழுந்தவர்களை எளிதில் கண்டுக்கொள்ளவும் முடியாது என்பதால் கடலில் இரவில் செல்ல இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ளன.
அவ்வளவு நேரம் ரசனைக்குரியதாகவும் ரம்மியமாகவும் இருந்த சூழல் இப்பொழுது அவர்களை மிரட்டுவது போல் இருந்தது. அமர் சொன்னதுபோல் அலை பெரிதாக வர துவங்க அதனை பார்த்த பெண்கள் இருவரும் சற்று மிரண்டு விட்டனர்.
பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் அமரன்.
இரவுணவை முடித்துவிட்டு நான்காவது தளத்தில் உள்ள முன்னுறையில், சக்தி அவனுடைய மடிக்கணினியுடன் சோபாவில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருக்க, மற்றொரு சோபாவில் அமர் மற்றும் ரங்கா எதை பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
கீழே விரிக்க பட்டிருந்த கார்பெட்டில் அமர்ந்திருந்த ஷிவன்யா தன் கேமராவில் இருந்த புகைப்படங்களை தன் மடிக்கணினியில் ஏற்றி கொண்டிருக்க, மற்றொரு ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்த ப்ரதீப் தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைவரையும், அவர்களின் செயல்களையும் பார்த்த விலோ எரிச்சலுடன், "இங்க எதுக்கு வந்திருக்கோம்..? எல்லாரும் அவங்கவங்க வேலைய பார்த்துட்டு இருக்கீங்க.."
மடிக்கணினியில் இருந்து தலையை உயர்த்திய சக்தி, "ரைட் சைடுல இருக்க ரூம்ல நீயும், உன்னோட ஃபிரண்டும் தங்கிக்கோங்க விலோ" என்றான்.
"நான் தூங்குறதுக்கு கேட்கலை சக்தி. மணி ஒன்பது தான ஆகுது. எல்லாரும் ஏதாவது விளையாடலாம்.." என்று அனைவரையும் பார்க்க,
சக்தி, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு விலோ. நீங்க விளையாடுங்க நான் பின்னாடி வந்து ஜாய்ன் பண்ணிக்குறேன்" என்று தன் வேலையை தொடர்ந்தான்.
அவனை தவிர மற்றவர்கள் அவளை கவனிக்க கூட இல்லை என்பதை பார்த்த ப்ரதீப், "அவனாவது பதில் சொன்னான், ஆனா உன்னோட ஆளு உன்னை கண்டுக்க கூட இல்லையே விலோ! சோ சாட்..", என்று ரங்காவை பற்றி கூறி உச் கொட்டி அவளை கடுப்பேத்தினான்.
அவனை பார்த்து வாயை மூடுமாறு சைகை செய்தவள், "ரங்ஸ்…" என்றழைக்க, "10 மினிட்ஸ் விலோ.." என்று அவளிடம் கூறிவிட்டு பத்து நிமிடம் கடந்தும் அமரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“அப்படி என்னத்தை தான் பேசுவானுங்களோ..” என்று முணுமுணுத்துக்கொண்டே வந்த விலோவை பார்த்து சிரித்த ப்ரதீப் மற்றும் ஷிவன்யாயை முறைத்த விலோ முகத்தை திருப்பினாள். "சரி நம்ம ட்ருத் ஓர் டேர் விளையாடலாமா விலோ?" பிரதீப் அழைக்க,
'அந்த கேம் விளையாடினால் ஒன்று ரங்காவை பற்றியே கூற சொல்லி கிண்டல் செய்வான். அல்லது டேர் என்று ரங்காவிடம் ப்ரொபோஸ் பண்ண சொல்லி கேலி பண்ணுவான்' என்று அனுபவத்தில் உணர்ந்த விலோ, "ஒன்னும் வேண்டாம்.." என்று சலிப்புடன் ஷிவன்யா பக்கத்தில் அமர்ந்தாள்.
"அப்ப போடி.. உனக்கு போய் ஹெல்ப் பண்ண பாரு" என முடிக்கும் முன், "ப்ரதீப்.." என்றான் ரங்கா அதட்டலுடன்.
"சரி டா உன்னோட ஆளை டி சொல்லல போதுமா", என்றவன், “அங்க உட்கார்ந்திருந்தாலும் காது இங்க இருக்கும் போல..” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
ரங்கா அதட்டியதை சிரிப்புடன் பார்த்த விலோவிடம், "உன்னோட லவ்க்காக உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன்..? அவன் என்னை திட்டுனா நீ சிரிக்குற..? உன் கூடலாம் விளையாட வர முடியாது போ.." என்றான்.
"போ டா.." என்று எழுந்தவள், "நா கப்பலை சுற்றி பார்க்க போறேன். நீயும் வரியா ஷிவ்?", என ஷிவன்யாயையும் துணைக்கு அழைத்தாள்.
"இல்ல விலோ! கேமரால இருக்குறத லேபப்டாப்ல ஏத்துனா தான் நாளைக்கு ஃபோட்டோ எடுக்க முடியும். நீ வேணா போய்ட்டு வா.. நான் நாளைக்கு காலைல பார்த்துக்குறேன்.."
அவளின் பதிலை கேட்ட விலோ அமைதியாக மீண்டும் அமர்ந்து விட்டாள். இதுவரை நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.
"தைரியம் இருந்தா? நீ தனியா போய்ட்டு வா விலோ" என்று விலோவை உசுப்பேற்றும் விதமாக சொல்லி வம்பை விலைக்கு.. இல்லையில்லை சும்மாவே வாங்கினான் ப்ரதீப்.
அவனிடம் எப்பொழுதும் ஏட்டிக்கு போட்டி செல்பவள் அவன் கூறியதும், “என்ன பெட் சொல்லு? நான் போய்ட்டு வரேன்”என்று விலோவும் தைரியமாக பந்தயத்திற்கு தயாரானாள்.
“ம்ம்ம்..” என்று யோசித்த ப்ரதீப், “நீ முதல்ல போய்ட்டு வா. சொல்லுறேன்” என்று அவளை தூண்டிவிட்டான்.
“போய்ட்டு வந்து உன்கிட்ட பேசிக்குறேன் டா” என்றவள், சிறிதும் யோசிக்காமல் ரங்காவிடம் அனுமதி கேட்டாள்.
ரங்கா, "நைட் நேரம் வேண்டாம் விலோ. நாம நாளைக்கு பகல்ல நல்லா வெளிச்சத்துல கப்பலை சுத்தி பார்க்கலாம்" என்றான் மென்மையாக.
ஏற்கனவே யாரும் விளையாட வராததால் அவளை நக்கலாக பார்த்த ப்ரதீப்பை எப்படியாவது கடுப்பேத்தும் முடிவுடன் இருந்த விலோ, "நான் சும்மா இப்படி போய்ட்டு அப்படி வந்துடுவேன் ரங்ஸ், ப்ளீஸ்.. இந்த ப்ரதீப் ஓவரா பண்ணுறான் தெரியுமா?” என்று கெஞ்ச தொடங்கினாள்.
அமர், "போய்ட்டு வரட்டும். விடுடா. மேல மட்டும் போக கூடாது விலோ. கப்பல்குள்ளயே போய்ட்டு வா" என்று விலோவை அமரன் போக சொன்னான்.
அந்த அறையில் இருந்து வெளியே செல்ல தொடங்கிய விலோவிடம் பிரதீப், "பார்த்து எதாவது பேய் இருக்க போகுது.."
"பேய்ய பார்த்தா ப்ரதீப் உள்ள தான் இருக்கானு உன்கிட்ட அனுப்பி வைக்கிறேன்..", என்று பதிலளித்துவிட்டு வெளியேறினாள்.
‘பேய் இருக்குமாம் பேய். லூசு பைய. பெட்ல வின் பண்ணிட்டு வந்து உன்னோட பர்ஸ் ஃபுல்லா காலி பண்ணுறேன் இருடா..’ என்று ப்ரதீப்பை மனதிற்குள் திட்டிக்கொண்டே, தன் கால் போன போக்கில் நடந்தாள்.
ஷிவன்யாயின் அருகில் வந்து அமர்ந்த ப்ரதீப், “உனக்கும் சக்திக்கும் சண்டையாமே விலோ சொன்னாள். எதுக்கு சண்டை..” என்றான் தெரிந்துகொள்ளும் ஆவலில்.
அவனை ஒரு முறை திரும்பி பார்த்தவள், “அதை நீங்க விலோகிட்டயே கேட்கலாமே..” என்று மடிக்கணினியில் புகைப்படங்களை ஏற்றிக்கொண்டிருந்தாள்.
“ஹம்க்கும். அவ சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பா. நீ சொல்லேன் ஷிவ். இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்”
அதில் நகைத்த ஷிவன்யா, “பெருசா ஒன்னுமில்லை. எனக்கு சினி பீல்ட்ல இருக்கவங்களை பிடிக்காது. உங்க ஃபிரென்ட் சக்திக்கு ரிப்போர்ட்டர்னா பிடிக்காது. சக்தி - தயாரிப்பாளர். நான் ரிப்போர்ட்டர். சோ சாதாரணமா தொடங்கிய வந்த பேச்சுவார்த்தை, வாக்குவாதமாகி, அப்படியே எங்களுக்குள்ள சண்டையாகிடுச்சி. “ என்று தோள்குளுக்கி கொண்டாள்.
“நீங்க செய்யுற வேலையை பற்றி உங்ககிட்டயே மட்டம் தட்டி பேசுனா உங்களுக்கு கோபம் வராதா..?” என்றவளின் கேள்விக்கு,
“கண்டிப்பா வரும். அதே மாதிரி சண்டை போடுறப்ப நீயும் சக்தியோட வேலையை பற்றி தான தப்பா பேசிருப்ப..? நாம சரியா இருந்தா தான அடுத்தவங்கிட்ட அதை எதிர்பார்க்க முடியும்” என்றவன் வேறெதுவும் பேசாமல் தள்ளி அமர்ந்துவிட்டான்.
அதுவரை அனைவரையும் நக்கலடித்து பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சு ஷிவன்யாவை யோசிக்க வைத்தது. நிச்சயமாய் ப்ரதீப் இப்படி பேசுவான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. அதை யோசித்தவள், “ஊப்” என்று தலையை உலுக்கிவிட்டு அவளின் வேலையை தொடர்ந்தாள்.
அவர்கள் அனைவரும் இருந்தது கப்பலின் மேல் தளதிற்கு அடுத்த தளம், அதற்கு கீழ் இன்னும் மூன்று தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளமாக பார்த்து கொண்டிருந்த விலோ, இறுதியில் அந்த கப்பலின் அடி மட்டத்திற்கு சென்றாள். அங்கு தேவையில்லாத பொருட்கள் மட்டுமே போட்டு வைக்கப்பட்டிருந்தது.
பொதுவாக கடலலையின் ஆட்டத்தில் கப்பலில் உள்ள பொருட்கள் கீழே விழாமல் இருக்க, அனைத்தையும் முடிந்த வரை கயிற்றோடு கட்டி வைத்திருப்பார்கள். இல்லையேல், காந்தகமோ ஆணியோ உபயோகித்து சுவற்றிலோ, தளத்திலோ ஒட்ட வைத்திருப்பார்கள். அந்த அறையில் உள்ள பொருட்களையும் அப்படி தான் சில அலமாரிகளில் கட்டிவைத்திருந்தனர்.
ஏதோ ஒரு உணர்வு! விலோவை உள்ளே போகுமாறு ஊந்த அந்த அறைக்குள் சென்றுவிட்டாள். சுற்றி பார்க்க அங்கிருந்த அலமாரியில் அனைத்து பொருட்களும் கட்டவைக்க பட்டிருந்தது. ஏனோ அவளின் மனம் படபடவென அடிக்க தொடங்கியது. ‘இங்கிருந்து உடனே செல்ல வேண்டும்’ என்ற மூளையின் எச்சரிக்கைக்கு உடன்பட்டவள் அந்த அறையில் இருந்து வெளியேற தயாரானாள்.
திடீரென்று பலத்த புயல் காற்று வீச ஆரம்பித்தது. கருமை நிற மேக கூட்டங்கள் அனைத்தும் முழுநிலவினை மறைத்துக் கொண்டு எப்பொழுது வேண்டுமென்றாலும் மழை பொழிய தயாரானது. இல்லை இனி இங்கு நிலவ போகும் அனர்த்தனங்களை பார்க்க நிலவிற்கு தெம்பில்லையோ? அதனால் தான் மேக்கூட்டதோடு தன்னை மறைத்துக் கொண்டது போல!
கடலலையும் தன் பங்கிற்கு அதனின் உயரத்தையும் வேகத்தையும் பலமடங்கு கூட்டி சீறிக் கொண்டிருந்தது.
புயலின் தாக்கத்திற்கும், அலையின் வேகத்திற்கும் கப்பல் ஆட்டம் காண.. வெளியே செல்ல ஓரடி எடுத்துவைத்த விலோ நிற்க கூட முடியாமல் தடுமாறி, "அம்மா.." என்ற கத்திக் கொண்டே அந்த அறையிலேயே கீழே விழுந்தாள். 'நல்ல வேளை இங்கிருக்க பொருட்கள அலமாரில கட்டி வெச்சிருக்காங்க, இல்லனா என் மேல தான் விழுந்துருக்கும்' என புலம்பிக் கொண்டே அவள் எழ முயற்சித்தாள்.
அப்பொழுது, இன்னோரு பெரிய அலையின் தாக்குதலில், மீண்டும் விழ, அதுவரை அங்கு எரிந்துகொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து அறையில் இருள் சூழ்ந்தது.
அந்த இருட்டிய அறையில் புயல் காற்றின் இரைச்சலும் கடலலையின் சத்தமும் நன்றாகவே அவளின் செவிகளை எட்டியது. ‘இந்த ப்ரதீப் பேச்சை கேட்டு வந்திருக்கவே கூடாது!’ என்று அந்த நிலையிலும் அவனை திட்டிக்கொண்டாள்.
வியர்வையில் குளித்திருந்த விலோவிற்கு பயமும் பதட்டமும் ஒருபுறம் இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டே இருட்டிற்கு தன் கண்களை ஓரளவிற்கு பழக்கியவள் மெல்ல எழும்ப முயற்சிக்க, டக்கென்று விளக்கு வந்து அவளின் கண்ணை கூச செய்தது. சிரமத்துடன் கண்ணை கசக்கிக்கொண்டு தெளிவானாள்.
அலையின் வேகத்திற்கு மீண்டும் கப்பல் ஆட, இந்த முறை கீழே விழாமல் அலமாரியை பற்றிக்கொண்டு திடமாக நின்ற விலோ, 'இங்கயிருந்து சீக்கிரம் போகணும்' என்று மெதுவாக நடக்க தொடங்கினாள்.
மீண்டும் விளக்கு அணைந்து, அந்த அலமாறியின் மேல் இருந்து எதுவோ..!? ஒன்று டம்மென்ற சத்தத்துடன் அவளின் காலடியில் வந்து விழுந்தது. அந்த ஒரு நொடி! அவளின் இதயம் நின்று துடிக்க.. எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டே, 'ஒன்னுமில்ல விலோ, ஒன்னுமில்லை!', என்று தனக்கு தானே தைரியம் கூறிக்கொண்டு நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டாள். பின் கீழே குனிந்து கைகளால் துழாவிப்பார்க்க ஒரு பெட்டி போன்றொரு பொருள் தட்டுப்பட, விளக்கு மறுபடி ஒளிர்ந்தது.
'எதுக்கு லைட் இப்படி விட்டு விட்டு எரியுது', என்ற எரிச்சலுடன் நினைத்துக்கொண்டே கீழே இருந்த செவ்வக வடிவ மரப்பெட்டியை பார்த்தவள், அதனை கையில் எடுத்து திறக்க முயற்சித்தாள்.
ஆனால், பலவருடமாக அது உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் நன்றாக தூசி படிந்து திறக்க முடியாமல் வலுவாக இருந்தது. 'சரி அலமாறிலேயே வெச்சிடலாம்' என அங்கேயே வைத்தாள். அது மறுபடி கீழே அவளின் காலின் அருகிலே விழுந்தது. மீண்டும் வைக்க; விழ என்று மூன்று முறை நடந்தது.
'இப்படி விழுந்துட்டே இருந்தா..? எங்கேயாவது இடிச்சி எதாவது ஆகிடுமே.. நம்ம எடுத்துட்டு போய் கேப்டன் கிட்ட கொடுக்கலாம்' என்று கையில் எடுத்தவள் அறியவில்லை, இதனால் எவ்வளவு இன்னல்கள் அவர்களுக்கு வர போகிறதென்று! பின் அவர்களின் நண்பர்கள் இருந்த இடத்தை நோக்கி செல்ல தொடங்கினாள்.
"இவ எங்க டா போனா? இன்னும் ஆளையே காணோமே..? நான் போய் பார்த்துட்டு வரேன்" அமரிடம் சொல்லிவிட்டு ரங்கா கிளம்ப,
கையில் பெட்டியுடன் வந்த விலோவை பார்த்தவன், "எங்க விலோ போன இவ்வளவு நேரம்? ஆமா கைல அதென்ன என்ன பெட்டி?" என்று வினவ, நடந்ததை அனைவரிடமும் கூறினாள்.
சக்தி, "நீ எதுக்கு அங்க போன? கேப்டன் எதாவது சொல்ல போறாங்க"
விலோ, "இது எதுலயாவது இடிச்சி கப்பலுக்கு சேதாரம் ஆகிருந்தா..? அவங்களுக்கு நல்லது தான நான் பண்ணிருக்கேன். சோ எதுவும் சொல்ல மாட்டாங்க" சொல்லிச் சென்றாள்.
கேமராவை சார்ஜில் போட்ட ஷிவன்யா, "இத திறந்து உள்ள என்ன இருக்குனு பார்த்தியா விலோ?” என்று ஆவலுடன் கேட்டாள்.
"இல்ல ஷிவ், ஒரே தூசியா படிஞ்சி இருக்கு தொடச்சிட்டு திறந்து பார்க்கலாம். நீ போய் ஒரு வேஸ்ட் துணி எடுத்துட்டு வா.." என்று ஷிவன்யாவை விலோ விரட்டினாள்.
பிரதீப் நக்கலுடன், "அப்படி என்ன புதையலா இருக்க போகுது? ஓவரா பில்டப் கொடுக்குற.."
“நான் பெட்ல வின் பண்ணிட்டேன். இந்த ட்ரிப்ல நான் கேட்குறதெல்லாத்தையும் ஒழுங்கா வாங்கி கொடுக்குற வழியா பாரு”
“பார்க்கலாம்”
விலோ அவனை முறைத்துக்கொண்டே, "முடிஞ்சா இதை திற வா..” என்று ப்ரதீப்பையும் அழைத்தாள்.
‘என்னமோ பண்ணிக்கொள்ளுங்கள்’ என்று சக்தி, ரங்கா, அமர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
ஷிவன்யா எடுத்துவந்த துணியை வைத்து பெட்டியின் அடியிலும் சைடிலும் முழுவதும் துடைத்தாள். இறுதியாக பெட்டியின் மேல் துடைக்க கை வைக்க, அதன் மேல் எழுத்துவடிவில் எதோ எழுதியிருப்பதை அவளின் கரங்களால் உணர முடிந்தது.
“இது மேல எதோ எழுதியிருக்கு..” என்று விலோ சொல்லிக்கொண்டே வேகமாக தூசியை துடைத்தாள்.
தூசியை துடைத்துக்கொண்டே, அதில் வரும் ஒவ்வொரு எழுத்தாக 'ச', 'மு', 'த்', 'தி', 'ரா' உச்சரித்தவள், இறுதியில் அதனை கோர்த்து ஒரே வார்த்தையாக "சமுத்திரா" என்று வாசித்து முடித்த அடுத்த நொடி அண்டசராசமும் அதிரும் வண்ணம் பலத்த ஓசையுடன் இடி மற்றும் மின்னல் அந்த கரும் வானில் தோன்றியது. அந்த இடியின் ஓசையில் அவர்கள் அறுவரும் நடுங்கியேவிட்டனர்.