எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சமுத்திரா - 5

சமுத்திரா - 5:​

நடுக்கடலில் அடித்துக் கொண்டிருந்த சூறாவளி காற்றின் வேகத்திற்கு ஏற்ப கடலையையும் ஆர்ப்பரித்து சீறிக் கொண்டிருந்தது. அதனால், எப்பொழுது வேண்டுமென்றாலும் அங்கு புயல் உருவாகும் நிலை ஏற்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப நண்பர்கள் கூட்டம் சென்றுக் கொண்டிருந்த கப்பலும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.​

அந்த கப்பலின் உள்ளேயுள்ள தியேட்டரில் மிக பெரிய கடலாமை ஒன்று இருந்தது. அதனை தான் அவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.​

அந்த ஆமையின் ஓடு கருப்புநிறத்தில் இருக்க, அதனை அலங்கரிக்கும் பொருட்டு தங்கநிற கோடுகளை பெற்றிருந்தது. பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் வண்ணம் அழகாக இருந்தாலும், வலுபொருந்திய பல அடுக்கு எழும்பு தட்டுகளால் உருவான ஓடு அந்த உயிரினத்திற்கு பாதுகாப்பை வழங்கியது.​


downloadfile-8.jpg

சிறு குன்றுபோல் அந்த அறையில் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருந்த ஆமையை அதிர்ச்சியில் பார்த்த அனைவரின் விழிகளும் இப்பொழுது அதிசயித்து பார்த்தன.​

'இவ்வளவு நேரமும் இவ்வளவு பெரிய ஆமை மேலயா சாய்ந்திருந்தேன்!' என எண்ணிய அமரனின் உடலெல்லாம் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. ஆறடியில் இருக்கும் அவனை விட இருமடங்கு உயரம் கொண்ட ஆமையின் அருகில் சென்று தொட்டுப்பார்த்தான்.​

அனைவரின் பேச்சினையும் கருத்தினையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரங்காவின் போலீஸ் மூளை விழித்துக் கொள்ள, "நீங்க சொல்லுற மாதிரி இது எந்த ஒரு விளையாட்டும், மாய மந்திரமும் கிடையாது. சக்தி சொல்லுறது தான் சரி. நாம போய் அந்த மாஸ்டர்கிட்ட தான் முதல்ல விசாரிக்கணும். எனக்கென்னமோ இவங்க இதெல்லாம் கப்பல்ல கடத்துறாங்களோன்னு தோணுது.." முதலையையும் ஆமையையும் குறித்து தன் சந்தேகத்தினை அனைவரின் முன்னும் தெளிவான குரலில் விளக்கினான்.​

போலீஸ் மூளைக்கு சிறிதும் சலைக்காத பத்திரிகை மூளையுடைய விலோ, "இப்படி திறந்த வெளில நம்ம கண்ணுல படுறமாதிரியா மறைச்சு வைப்பாங்க?" சிரிப்புடனே கேட்டாள்.​

சிறுவயதில் இருந்து கடல்வாழ் உயிரினத்துடன் வளர்ந்த அமரன் அந்த ஆமையை ரசித்தபடி, "விலோ சொல்லுறது சரிதான் ரங்கா. காலைல இருந்து இந்த கப்பல்ல தான் நானும் சக்தியும் இருக்கோம். இப்ப தான் இந்த ஆமையை நான் இங்க பார்க்கிறேன்" என்றான்.​

"நான்தான் சொல்லுறேனே.. இது நிச்சயமா அந்த விளையாட்டுல இருந்து தான் வந்திருக்கு.." என்ற விலோவின் குரலில் யாராவது நம்பமாட்டார்களா என்ற தவிப்பு நிறைந்திருந்தது.​

அருகினில் இருந்த இருக்கையில் அமர்ந்த ப்ரதீப் மற்றவரையும் அமருமாறு கைகாட்ட, ‘இங்க என்ன போய்க்கிட்டு இருக்கு?’ என்று அனைவரும் அவனை முறைத்து பார்த்தனர்.​

"சமுத்திரம்னா கடல். கடலுக்கு வழிகாட்டின்னு ஆமையை சொல்லுவாங்களா..?" ஞாபகம் வந்தவளாக ஷிவன்யா சட்டென்று வினவினாள்.​

அக்கேள்விக்கு சிறிதும் யோசிக்காத அமர், "ஆமா ஷிவ். இப்ப தான் புதுசு புதுசா டெக்னாலஜிஸ் வந்து நம்ம கப்பலுக்கு மேப்பா பயன்படுத்துறோம். அந்த காலத்துல கடல்ல பாதை மாறி போகாம இருக்க வழிகாட்டியா ஆமையை தான் பயன்படுத்தியிருக்காங்கன்னு நான் கேள்வி பட்டிருக்கேன். சில ஆராய்ச்சில அதை நிரூபிக்கவும் செய்திருக்காங்க" என்று கடலோடியான அமரன் சொன்னான்.​

‘நம் தமிழ் மன்னர்கள் அயல் நாட்டினை கைப்பற்றுவதற்கும், அங்கே வாணிபம் செய்வதற்கும் கடல் கடந்து செல்ல வழிகாட்டியவை கடல் ஆமைகள் தான்!’ என்று இன்றளவும் நம்பப்படுகிறது. அனைத்து நிறங்களையும் பார்க்கக்கூடிய தன்மையை உடைய ஆமையின் முன்னிருக்கால்கள் துடுப்புபோல் உள்ளதால் அது நீந்துவதற்கு எதுவாக இருக்கும்.​

தரையில் மெதுவாக செல்லும் ஆமை தான், கடலில் அதன் நீரோட்டத்தைப் பயன்படுத்திப் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை மிக எளிதாகக் கடக்கும் இயல்புடையது. அப்படிப்பட்ட ஆமைகளின் பாதையைப் பின்தொடர்ந்தே ஆயிரம் காலத்துக்கு முன் வழி தவறாமல் கடல் பயணம் மேற்கொண்டனர்.​

“‘சமுத்திர உலகத்தின் வழிகாட்டி வரவேற்க காத்திருக்கிறான்னு’ தான் எனக்கு வந்துச்சு. நாமலாதான இது கிட்ட வந்திருக்கோம். என்னோட கணிப்பு, எனக்கு வந்த க்ளூக்காக தான் இந்த ஆமை இங்க வந்திருக்கணும்" என்றாள் ஷிவன்யா.​

“அப்படினா இது நம்மள வரவேற்கணுமே..” என்று ப்ரதீப் வினவ,​

“ஆமா நீ மாமியார் வீட்டு விருந்துக்கு வந்திருக்க பாரு. வெத்தலை பாக்கு வெச்சி உன்னை வரவேற்க.. உனக்கு இதுவே போதும்னு நினைச்சிடுச்சி போல” என்று அவள் முடித்தபொழுது சிறு குன்றுப்போல் இருந்த ஆமை அவர்களை பார்த்து கண்ணை சிமிட்டியது.​


“ஹே! அது கண்ணை சிமுட்டுச்சில..? அது தான் நமக்கான வரவேற்பு போல..” என்று ஷிவன்யா சிரிக்க,​

“இப்பவாது நாங்க சொல்லுறத எல்லாரும் நம்புறீங்களா..?” என சக்தி, அமர் மற்றும் ரங்காவை பார்த்தாள் விலோ.​

"எது எப்படி இருந்தாலும் நான் நம்ப போறதில்லை! முதல்ல நான் நீங்க சொன்ன அந்த பெட்டியை பார்க்கணும்" என்று திடமான குரலில் கூறிய சக்தியை ரங்காவும் ஆமோதித்தான்.​

‘இவன் இப்படி தான் கூறுவான்’ என்று அறிந்திருந்த ஷிவன்யா அவனிடம் எதுவும் பேசமுனையவில்லை. அந்த சமுத்திரா பெட்டியுடன் முதலைகள் வெளியே இருக்க, இன்னமும் அந்த சமுத்திர மாயவலையில் அவர்கள் சிக்கிக் கொண்டதை நம்பாமல் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர்.​

"நான் ஒன்னு சொல்லட்டா..?" நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்திருந்த ப்ரதீப் கேட்க,​

“வேணாம்னு சொன்னா விடவா போற..?” என்ற விலோவை பொருட்படுத்தாத ப்ரதீப்,​

"ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு சொல்லுவாங்க. சின்ன ஆமைக்கே அப்படி சொன்னா? இங்க நம்ம கண்ணுக்கு முன்னாடி மாமிச மலையே இருக்கே! நமக்கு எதாவது ஆகுமா?" கொஞ்சம் மிரட்சியுடன் ஆமையை பார்த்துக் கொண்டேக் கேட்டான்.​

அந்த ஆமையை கண்டதிலிருந்து அதனை வருடிக்கொண்டே இருந்த அமர், "ச்ச. இந்த வாயில்லா ஜீவன் நம்மள என்ன செய்ய போகுது.? நம்மால இதுக்கு எந்த ஆபத்தும் வராம இருந்தாலே போதும்"​

“ஆமை உன்னை என்னடா பண்ணப் போகுது? பாற்கடலை கடையுறதுக்கு கூர்ம அவதாரமான ஆமை ரூபத்தில் மகாவிஷ்ணுவே வந்திருக்கிறார். அப்படி இருக்கப்ப இதனால நமக்கு என்ன கெட்டது நடக்கப்போகுது..?" என விலோவும் சீறினாள்.​

“ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு சொல்லுறதுல ஆமைன்னு வர்றது உயிரினம் இல்லை ப்ரதீப். மனிதனை அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் ஐந்து ஆமைகள் - கல்லாமை, இயலாமை, முயலாமை, அறியாமை, தீண்டாமை தான். இந்த ஆமைகள் எல்லாம் நம்ம வீட்ல புகுந்தா நம்ம வீடு முன்னேறாம, உருப்படாம போகும்! அதுக்கு தான் அப்படி சொல்லிருக்காங்க" என்று தெளிவாக ஷிவன்யா விளக்கினாள்.​

அவளை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்த ப்ரதீப் அதிசயத்துடன், "ஒரு பழமொழில இவ்வளவு இருக்கா..?"​

"ஆமா. எல்லா பழமொழியையும் நம்ம பேச்சு வழக்கிற்கு ஏத்த மாதிரி உருவி மருவி மாத்திகிட்டிருக்கோம். அத பொருள் தெரிந்து உபயோகப்படுத்தினா இன்னும் நல்லது" ஆற்றாமையுடன் ஷிவன்யா சொன்னாள்.​

“உனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?” - ப்ரதீப்​

“அவ எங்க சேனல்ல தமிழ் ரிப்போர்ட்டர் டா. இப்ப சமீபமா தமிழ் பழமொழியை பற்றி ரிசர்ச் பண்ணிட்டு இருக்கா” என்று தோழியை பற்றி பெருமையாக விலோ கூறினாள்.​

"உங்க எல்லாரோட சொற்பொழிவை முடிச்சிட்டீங்கன்னா? நாம அடுத்த வேலைய பார்க்கலாமா?" கைகளிரண்டையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டு, தலையை சாய்த்து கேட்ட சக்தியின் குரலில் நக்கல் வழிந்தோடியது. பெருமூச்சுடன் தன் முகத்தை திரும்பிக் கொண்டாள் ஷிவன்யா.​

IMG-20241030-WA0012.jpg

‘இதற்குமேல் வாயடித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக திட்டிவிடுவான்’ என்று சக்தியை பற்றி நன்கு அறிந்த ப்ரதீப் கதவின் அருகினில் சென்று துவாரத்தின் வழி வெளியே பார்த்தவன், "இப்ப வெளிய எந்த முதலையும் இல்லை. நாம பயப்படவேண்டாம்" என்றான் அச்சம் நீங்கிய குரலில்.​

ரங்கா, "அதுங்க அங்க இல்லனா..? பக்கத்து அறைக்கு தான் எங்கேயாவது போயிருக்கும் டா. பேசி நேரத்தை வீணாக்காம என்ன பண்ணலாம் சொல்லுங்க..?" என்றவன் யோசனை சுமந்த விழிகளால் அனைவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தான்.​

“இவங்க சொல்லுற மாதிரி அந்த கேம் தான் இதுக்கெல்லாம் காரணமான்னு தெரிஞ்சிக்கணும் ரங்கா. அதுக்குன்னு நாம இங்கயே இருக்க முடியாது! இந்த ஆமையே பாதி இடத்தை அடைச்சிட்டு இருக்கு” என்று அந்த ஆமையை மேலும் கீழும் பார்த்தவன்,​

“அது லேசா நகர்ந்தாலும் நாம இங்கயே மாட்டிக்க சான்ஸ் இருக்கு. சோ, நாம அந்த பெட்டியை எடுத்துக்கிட்டு மேல போய்டலாம். அங்க போய் என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம்” என்று ரங்காவிடம் சொன்னாலும் அமரனையும் ஒரு பார்வை பார்த்தான் சக்தி.​

அந்த ஆமையை விட்டு நீங்கி வந்த அமரன், "ஓகே சக்தி. இந்தப்பக்கம் கார்னர்ல இருக்க படிக்கட்டு வழியா நீங்க எல்லாரும் மேல போங்க. நானும் ப்ரதீப்பும் அந்த பெட்டியை எடுத்துட்டு வரோம்"​

"இல்ல அமர். நான் உன்கூட வரேன். ப்ரதீப் அவங்க கூட போகட்டும்" என்ற சக்தி அமருடன் இணைந்துக் கொண்டான்.​

"நீங்க பார்த்து போங்க.." என்ற ரங்காவிற்கு தலையசைத்து சக்தியும் அமரனும் விடைபெற்றனர். அங்கிருந்த படியேறி மேலே சென்ற நால்வருக்கும் அடுத்த அதிர்ச்சி அங்கு காத்திருந்தது!​

 

மெதுவாக கதவை திறந்த அமரனின் பின் சக்தியும் வர, அங்கிருந்த பெட்டியை நோக்கி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர்.​

முதலில் பெட்டியையும், அதனருகில் இருந்த பகடையையும் எடுத்தவர்கள், அங்கிருந்த அவர்களின் ஃபோனையும் எடுத்துக்கொண்டு அறைக்கு செல்ல திரும்பினர். அங்கே நீண்ட நடைபாதையில் முதலையொன்று ஒரு அறைக்குள்ளிருந்து எதிரே இருந்த மற்றொரு அறைக்குள் சென்றதை பார்த்துவிட்டு விரைவாக உள்ளே வந்து கதவை அடைத்தனர்.​

அமரன் மட்டும் அங்கிருந்த ஆமையை தன் பார்வையால் வருடியபடியே கடந்தான். பின், அங்கிருந்த படிகளின் வழியே மேலேறி, மேலிருந்த கதவினையும் வெளிப்பக்கமாக அடைத்து சாத்திவிட்டனர்.​

இவர்களுக்கு முன்னாகவே அங்கு சென்றிருந்த நால்வரும் அங்கிருந்த மேசையில் அமர்ந்திருக்க, அவர்களுடன் இணைந்த சக்தி, "என்னடா கப்பல் இப்படி இருக்கு..?" என அதிர்ச்சியுடனே சுற்றியும் பார்த்தான்.​

தற்காலத்திற்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன கப்பல் இப்பொழுது பல அடுக்கு வெண்ணிற இறக்கைகளைக் கொண்ட பாய்மரக்கப்பலை போன்று காட்சியளித்தது. இவர்களின் கப்பலில் இருந்த அனைத்து வசதிகளையும் இணைத்து பழங்காலத்தில் இருந்த கப்பலை போன்று உருமாறி இருந்தது, அவர்களின் கப்பல்.​

நீட்டமாக இருக்கும் கப்பலின் இரண்டு மூலைகளிலும் மேடாக எழும்பி இருந்தது. அதற்கு செல்ல படிகள் அமைத்து பிறை நிலா போன்று கப்பலின் வடிவமும் மாறியிருந்தது.​

04d3908195658548f3f0327a76c5f78b.jpg

சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நீச்சல் குளம் அப்படியே இருந்தது. ஆனால், அவர்கள் ரசித்த பௌர்ணமி நிலா மற்றும் அதனுடன் பவனி வந்த நட்சத்திரங்கள் அனைத்தும் காணாமல் வானம் இருட்டிக்கிடந்தது.​

சக்தியின் கேள்விக்கு, "தெரியல சக்தி நாங்க மேல வந்தப்பவே கப்பல் இப்படி தான் இருந்தது" என்றான் ரங்கா குழப்பத்துடன்.​

காலையில் இருந்து மனது சொல்ல முடியாத உணர்வில் ஆர்பரித்த காரணத்தை இப்பொழுது அறிந்துக் கொண்டான் சக்தி. 'மனதின் குரலை கேட்டிருக்க வேண்டுமோ..?' என்று காலம் கடந்து யோசிக்கவும் செய்தான்.​

"நான் தான் சொல்லிட்டே இருக்கேன்ல.. இதுவும் அந்த விளையாட்டால வந்தது தான்" - விலோ​

அதனையே கேட்டு சலித்துப்போன ரங்கா, "எல்லாத்துக்கும் துர்காதான் காரணம்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி நீ சொல்லிட்டு இருக்க விலோ.." என புலம்பியவன்,​

"நீங்க அந்த பெட்டியை எடுத்துட்டு வந்தீங்களா டா?" என வினவ, அமரனிடம் இருப்பதாக கைகாட்டினான் சக்தி.​

சக்தியின் கூடவே மேலேறி வந்த அமரன் அங்கிருந்த மாற்றங்களை பார்த்து சற்று அதிர்ந்துவிட்டான். திடீரென்று பலம்பொருந்திய மரக்கட்டைகள் மற்றும் இரும்புகளாலான தூண்கள் அந்த கப்பலின் மேல் தளத்தில் முளைத்திருக்க, அதனை இணைத்தவாறு பல அடுக்கில் பாய்கள் போன்ற வெண்ணிற துணி இருப்பதை போல் காட்சியளித்தது அந்த பாய்மரக்கப்பல்.​

அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமரனை நெருங்கினான் ரங்கா. அவனிடம் பெட்டியை கொடுத்தவன் கப்பலின் இரண்டு மூலைகளிலும் சென்று பார்த்தான்.​

கப்பலின் மாற்றமும்; கீழே நிகழ்ந்த நிகழ்வுகளும் அவனை சற்று அசைத்து பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் கலங்கரை விளக்கம் அங்கிருந்தே தெரிய, அதில் சற்று தெளிந்தான் அமரன்.​

"சமுத்திரா" பெட்டியில் இருந்த குறிப்புகளை படித்த சக்தியும் ரங்காவும் அமரனை வருமாறு கூறினார். அவனும் வர, அதில் குறிப்பிட்டிருந்ததை மூவரும் முழுமையாக படித்தனர்.​

"ஒரு விளையாட்டினால் இப்படி நடக்குமா..?" நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் வாய்விட்டு கேட்டேவிட்டான் சக்தி. ரங்காவின் நிலையும் அதே தான் என்று அவனின் முகத்தில் தோன்றிய குழப்ப ரேகைகளே கூறிவிட்டது.​

ஆனால் அதனை இப்பொழுது முழுமையாக நம்ப தொடங்கினான் அமரன்.​

நம்பியவனிற்கு அது நல்லதாக தோன்றவில்லை. ப்ரதீப், ஷிவன்யா, விலோ மூவரும் அமைதியையே கடைபிடித்தனர்.​

‘முதலையும், ஆமையும் விளையாட்டில் தான் வந்தது என்று அவர்கள் மூவரும் நம்பியிருந்தாலும், அவர்களின் மனதில் ஒரு சதவீதமாக அப்படி இருக்காது’ என்றே எண்ணியிருந்தனர். மேலே வந்து கப்பலின் நிலையை பார்த்ததுமே பகீர் என்றிருக்க எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்துக் கொண்டனர்.​

IMG-20241027-WA0002.jpg

“யார் இதை முதல்ல ஸ்டார்ட் பண்ணது..?” என்ற அமர் மூவரையும் பார்த்தான். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.​

விலோ, “ப்ரதீப் தான் ஷிவ் கிட்ட இருந்து டைஸை பிடுங்க பார்த்தான். அப்ப தான் ஸ்டார்ட் ஆச்சு” என்று விலோ முடித்ததும் அமர் ப்ரதீப்பை பார்க்க, “அவ தான டா எடுத்துட்டு வந்தா என்னை பார்க்கிற..” என்றான் ப்ரதீப் விலோவை முறைத்துக்கொண்டே.​

“இங்க இருக்க ரெண்டு காயின் ஷிவ் அண்ட் விலோ உடையதா..?" என்றான் ராங்க.​

அவனின் கேள்விக்கு, ஆமா என்னும் விதமாக மூவரும் தலையை மட்டும் அசைத்தனர்.​

“அடுத்து யார் போடணும்..?" - அமர்.​

"நாங்க இரண்டு பேர் விளையாடிட்டோம். அடுத்து ப்ரதீப் தான்" என்று விலோ ப்ரதீப்பை கைக்காட்டினாள்.​


ஏற்கனவே நிகழ்ந்ததை பார்த்திருந்த ப்ரதீப், "என்.. என்னால முடியாது. நீ.. நீங்க தான ஸ்டார்ட் பண்ணுனீங்க.. நீ.. நீங்களே முடிங்க" பயம் நிறைந்த குரலில் உதடு தந்தியடிக்க கூறினான்.​

"ப்ரதீப்! இங்க வா நீ .." என்ற அமரன் பகடையை கையில் எடுக்க,​

"டேய் என்னடா பண்ண போற..?" - ரங்கா.​

ஒரு பெருமூச்சுடன், "அதுல தான் தெளிவா போட்டிருக்கே ரங்கா. முழுசா முடிக்கலனா.. இந்த ஆமையும், இந்த முதலைங்களும் நம்ம கூடவே நம்ம ஊருக்கு தான் வரும். அண்ட் இப்படி இருக்க கப்பலை எப்படி நாம எடுத்துட்டு போக முடியும்?" என கப்பலின் மாற்றத்தை குறித்து அமரன் கேட்டான்.​

“இதை மறுபடி விளையாடி ஏற்கனவே இருக்க பிரச்சனையை பெருசாக்க வேண்டாமே அமர்.. என்னால இன்னும் நம்பவே முடியல..” என்ற சக்தி தளர்ந்து அமர்ந்தான்.​

"சில சமயம் நமக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் நடக்கும் சக்தி. நம்மால கூட அதனை தடுக்க முடியாது. அது மாதிரி தான் இதுவும். எதையும் பாதியிலே விட கூடாது. இரு ப்ரதீப்பை வெச்சி உன்னை நம்ப வைக்குறேன்" என்று சொன்ன அமர் விளையாட எதுவாக அந்த பெட்டியை வைத்தான்.​

‘இந்த கப்பல் பழைய நிலைக்கு மாற வேண்டும். இந்த விளையாட்டால் வந்த அனைத்து மாற்றமும் சரியாக வேண்டுமென்றால் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும்’ என்று தெரிந்துக் கொண்ட ரங்காவும் சக்தியை சம்மதிக்க வைத்தான்.​

"அப்படினா.. ஷிவ், விலோ ரெண்டு பேர் மட்டும் விளையாடட்டுமே..? அவங்களே இந்த கேமை முடிக்கட்டும்" என்று அதிமேதவியாக சொன்னான் ப்ரதீப்.​

"டேய்.. அதுக்காக பொண்ணுங்கள மட்டும் எப்படிடா தனியா விளையாடவிட முடியும்? இதுல அவங்க போய் எங்கேயாவது மாட்டிக்கிட்டா.. யாரு காப்பாத்துவாங்க..? நாம எல்லாருமே சேர்ந்து விளையாட போறோம். நீ பண்ண வேலைக்கு உன்னைய முதல்ல கும்மிருக்கணும்" எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறானே என்ற எரிச்சல் அமரனின் குரலில் தெளிவாக தெரிந்தது.​

"சரி டா. என்னால தான வந்தது நானே இதை சரி செய்யுறேன்" என்று ப்ரதீப் முறுக்கிக் கொண்டான்.​

அவர்களின் சண்டையை பார்த்த விலோ, “நான்தான் என்னையறியாம இதை எடுத்துட்டு வந்துட்டேன். சாரி கைஸ்” என்றாள் சிறுகுரலில்.​

“நாங்க திட்ட கூடாதுன்னு ரெண்டு பேரும் கேவலமா நடிக்காதீங்க.. நீங்க ரெண்டுபேரும் யாருன்னு எங்களுக்கு தெரியும்” என்ற சக்தியின் நக்கலில் விலோவும் ப்ரதீப்பும் முழிக்க, மற்றவர் சிரித்துவிட்டனர்.​

அவர்கள் அனைவரையும் பற்றி ஏற்கனவே தெரிந்த ஷிவன்யா, நண்பர்களுடன் தான் என்கிற கர்வம் இல்லாமல் பழகிய சக்தியை ஆச்சர்யத்துடன் பார்த்தவள், அவளோடு அவன் சண்டையிட்டதையும் நினைத்துக் கொண்டாள்.​

சக்தியும் எடுத்துரைக்க விளையாடும் எண்ணத்துடன் தன் பக்கம் வந்த ப்ரதீப்பின் தோளில் கைப்போட்ட அமரன், "எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் டா" என்று நம்பிக்கையையூட்டி அவனின் கையில் பகடையை திணித்தான்.​

‘நீங்க பார்ப்பீங்க டா, ஆனா அதை பார்க்குறதுக்கு நான் இருக்கணுமே..’ என்று மனதோடு நினைத்துக்கொண்ட ப்ரதீப், அவனின் கைகள் நடுங்க பகடையை உருட்டிவிட்டான். இருமுறை சுழன்ற பகடை ஆறு என்று விழுந்தது.​

கப்பலில் எரிந்துக் கொண்டிருந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் அனைவருக்கும் அது நன்றாகவே தெரிந்தது. அந்த பெட்டியினுள் இருந்த ரோஸ் நிற காயின் ஆறில் சென்று நின்றது.​

"இப்படித்தான் உங்களுக்கும் அதுவே நகர்ந்ததா..?" என்று சக்தி, ரங்கா, அமர் மூவரும் ஒன்றாக கேட்க, "ஆமா. அடுத்து அந்த நீர்குமிழ் மாதிரி இருக்குறதுக்குள்ள இருந்து க்ளூ வரும்" என்றனர்.​

'தனக்கு என்ன வர போகிறதோ..' என்ற பதைப்பதைப்புடன் அந்த நீர்குமிழையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான், பிரதீப்.​

"வரமளிக்க வருகிறான். கேட்கபடும் வரம் சமயத்தில் கிட்டும்!!!"​

என்று தோன்றிய எழுத்துக்களை படித்து முடித்தவவர்கள். “வரமா..?" என அதிசயித்தனர்.​

“வரம்னா.. இந்த கேம் முடியனும்னு கேளு ப்ரதீப்” என விலோ ஆலோசனை கூறினாள்.​

“ஆனா அதுல சமயம்னு போட்டிருக்கே? அந்த வரம் எப்ப கிடைக்கும்னு தெரியலையே!” என்ற ஷிவன்யா சொல்ல, “இப்ப யார் வரப்போரானு தெரியலையே” என்று ப்ரதீப் சுற்றியும் பார்த்தான்.​

அந்நேரம் காற்று சுழற்சி அடிக்க கடலலையின் சலசலப்பும் அதிகமாகியது. அந்த பெட்டியை ஓரமாக வைத்தவர்கள் என்னவென்று கப்பலின் கைப்பிடியில் இருந்து எட்டி கடலை பார்த்தனர். புயல்காற்றில் அலையின் உயரம் அதிகரிக்க உப்பு தண்ணீர் இவர்களின் மேல் தாராளமாகவே சாரலாய் தெளித்தது.​

கடலின் அடியில் இருந்து வெளிச்சக்கீற்று ஒன்று தோன்ற, அவர்கள் மேல் தெளித்த தண்ணீரை துடைத்தப்படியே கடலை கவனித்தனர்.​

அந்த கப்பலின் அருகில் உள்ள கடல் இரண்டாக பிளக்க அதில் இருந்து வந்த வெளிச்சக்கீற்று அவர்களின் கண்ணை கூச செய்தது. பின் அந்த பிளவிலிருந்து பொன்நிறத்தில் ஆழ்கடலின் ஆழத்தில் இருந்து வெளிவந்தது அலாவுதீன் அற்புத விளக்கு!​


அங்கிருந்த யாருமே நினைத்து பார்க்காதவகையில் இருந்ததை வியப்பு கூடிய ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பல வண்ணங்களில் புகைகள் சூழ தங்கநிற துகள்கள் மின்ன அதனினுடே மிளிர்ந்து கொண்டிருந்தது, அற்புத விளக்கு.​

downloadfile-6.jpg


அந்த விளக்கின் துவாரத்தில் இருந்து வெளியே வந்தது நீலவானின் நிறத்தையுடைய அற்புத பூதமான ஜீபூம்பா! அதனை பார்த்த அனைவரும் பேச்சினை மறந்து ஒருவித அதிர்ச்சியில் திளைத்தனர்.​

IMG-20241105-WA0016.jpg

கையிலும் கழுத்திலும் தங்கத்தால் ஆபரணங்கள் பூட்டி, தலையில் இருந்த நீளமுடியில் ஒரு குடுமியும் போட்டு அந்த இரவின் இருட்டில் பிரகாசமாக ஜொலித்தான் வரமளிக்க வந்த அற்புத பூதம்!​

சிறுவயதில் கதைகளில் கேட்டும்; படங்களிலும், பாட புத்தங்கங்களிலும் மட்டுமே பார்த்திருந்த பூதத்தை கண்ணுக்கு நேரெதிரே பார்த்த அனைவரின் முகத்திலும் புன்னகை பூக்கள் பூத்தது.​

“தரைல பார்த்தது திரைல வரும்னு சொல்லுவாங்க. இங்க என்னடான்னா திரைல பார்த்தது தரைல இல்ல இல்ல தண்ணில வருது..!” என்று ஆச்சார்யம் விலகாமல் விலோ சொல்ல, அனைவரும் அதனை ஆமோதித்தனர்.​

ப்ரதீப்பை கனிவாய் பார்த்த ஜீபூம்பா, "ஆணைவிடுங்கள் அரசே! உங்களுக்கான வரத்தை அளிக்க கடமைப் பட்டிருக்கிறேன்" என்று அடிமைப்போல் பணிவாக சொன்னது.​

IMG_20241105_205418.jpg


“இவன்லாம் அரசனா?”என்ற விலோவின் கேள்வியை அனைவரும் கவனிக்கும் நிலையில் இல்லை.​

"சமுத்திர விளையாட்டை சார்ந்திராத வரத்தை கண்ணை மூடி வேண்டிக் கொண்டு இந்த அற்புத விளக்கை தங்களின் கரங்களால் வருடுங்கள் அரசே! உங்களுக்கான வரம் அளிக்கப்படும்" என மென்மையாக சொல்ல,​

ப்ரதீப்பும் எதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போன்று கண்ணை மூடி வேண்டியவன், கண்ணை திறந்தான். அந்நேரம் பொன்னிறத்தில் கடலின் மேல் தோன்றிய விளக்கு அவனின் அருகில் இருக்க அதனை பயத்துடன் பார்த்தவன் வலக்கையை உயர்த்தி நடுங்கும் விரல்களால் வருடினான்.​

IMG-20241106-WA0003.jpg


வந்த வேலையை சிறப்பாக முடித்த ஜீபூம்பா, “உங்களுக்கான வரம் தக்க சமயத்தில் கிட்டும் அரசே! நான் விடைப்பெறுகிறேன்” என்று இருக்கரங்களையும் கூப்பி ப்ரதீப்பை வணங்கிவிட்டு அதனின் இருப்பிடமான பொன்நிற விளக்கின் உள்ளே மீண்டும் அடைந்துக் கொண்டது.​

தங்கநிற துகள்கள் பறக்க பிளந்திருந்த கடலின் வழியே அற்புத விளக்கும் அதனின் அன்னையான ஆழியின் ஆழத்திற்கு சென்ற அடுத்த நொடி இரண்டாக பிளந்திருந்த கடல் இணைந்துக் கொண்டது.​

-சமுத்திரா வருவாள்​

 
Last edited:
Top