எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 24

S.Theeba

Moderator
காரை அபி வீட்டின் முன் நிறுத்தும் போதே அவன் நெஞ்சம் படபடக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை இருந்த தெளிவும் தைரியமும் எங்கோ காற்றில் பறந்து விட்டதோ எனத் தோன்றியது தமிழினியனுக்கு. காரை நிறுத்தி விட்டு உள்ளேயே அமர்ந்திருந்தான். அபி தன்னை எப்படி எதிர்கொள்வாளோ என்ற பயம் அவனைத் தடுமாற வைத்தது. இவன் பதட்டத்துடன் அமர்ந்திருக்க அவனின் காரின் சத்தத்தை அறிந்த குமாரும் சரோஜாவும் வாசலுக்கே வந்து வரவேற்றனர். அவர்களின் புன்னகை முகமும் ஆரவாரமான வரவேற்புமே அபி இன்னும் இவர்களிடம் எதுவும் சொல்லவில்லை என்பதை உணர்த்தியது. மனதின் ஓரத்தில் மெல்லிய நிம்மதி பரவியது. உள்ளே சென்று அமர்ந்தவன் சுற்று முற்றும் பார்வையால் அபியைத் தேடினான். அவளை எங்கும் காணவில்லை. அவனுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்தார் சரோஜா. குமாரும் பொதுப்படையாக அவனது குடும்பத்தின் நலன் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். அவனும் குமாரின் உடல்நலம் குறித்து விசாரித்தான்.

சிறிதுநேரம் கழித்தும் அபிராமி அங்கு வரவில்லை என்றதும் அவன் மனம் தவித்தது. ஒருவேளை என்னைக் காண்பது பிடிக்காமல் வெளியில் வராமல் இருக்கிறாளோ? என்று எண்ணினான். அவளைப் பற்றி இவர்களிடம் எப்படிக் கேட்பது எனத் தடுமாறியவன், யோசித்துவிட்டு சரோஜாவிடம் "அத்தை ஸ்ரவன் எங்கே? சத்தமே இல்லை" என்றான்.
"ஸ்ரவனைக் கூட்டிக் கொண்டு நளாயினி பிரண்ட் வீட்டுக்குப் போயிருக்காள். அபிராமியும் அவங்ககூடத்தான் போனாள். கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் கிளம்பினாங்க"
“நீங்க எப்போ சிறிலங்கா புறப்படுறிங்க?” என்று கேட்டார் குமார்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை. நான் ஏன் சிறிலங்கா போறேன்? இவர் ஏன் இப்படி கேட்கிறார் என்று சிந்தித்தான்.
“அது அபிராமி தான் நீங்க சிறிலங்கா போனதால் திரும்பி வர்ர வரைக்கும் எங்கூட இருக்கலாம் என்று வந்ததாகச் சொன்னாள். அதுதான்…” என்று இழுத்தார் சரோஜா.
ஓகோ அபி இங்கு வந்ததுக்கு காரணம் இப்படி சொல்லிருக்காள் போல. சமாளிப்போம் என்று நினைத்தவன்
“இரண்டு நாளைக்கு பிறகுதான் டிக்கெட் போட்டிருக்கேன்.” என்றான்.
குமாருக்கும் சரோஜாவுக்கும் சந்தோஷமாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் சைகை செய்து கொண்டனர். ஒருநாள் கூட அபிராமியைப் பிரிந்திருக்க முடியாமல் தேடி வந்திருக்கார், அவ்வளவு அன்பு இருவருக்கும் இடையில் என்று எண்ணி பூரித்துப் போனார்கள்.
"சரி அத்தை, நான் மாமாவைப் பார்த்திட்டு போகலாம் என்றுதான் வந்தேன். அபிகிட்ட நான் அப்புறம் பேசிக்கிறேன். ஸ்டோர் குளோஸ் பண்ணுற டைம், அங்கு போகணும். புறப்படுறன் மாமா, அத்தை" என்றவன் இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்

அபிராமி தன் அக்கா நளாயினியை அழைத்துக் கொண்டு சென்றது காயத்திரியைக் காணவே.
நளாயினி தன் தங்கையிடம் தமிழினியனைக் காயத்திரியோடு கண்டதாகக் கூறியபோது அவர்களின் தூய நட்பையும் காயத்திரியின் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்களையும் பற்றி தமக்கையிடம் கூறியிருந்தாள். அவளுக்கும் காயத்திரி மீது இரக்கம் உண்டானாலும் தன் தங்கையின் வாழ்வை எண்ணி கவலையும் உண்டானது. அதிலும் அபிராமி எடுத்திருக்கும் முடிவில் துளி கூட உடன்பாடும் இல்லை. காயத்திரி வசிக்கும் இடத்தைப் பற்றி தமக்கை அறிந்திருந்ததால் அவளைப் பிடிவாதமாக அழைத்துக் கொண்டு புறப்பட்டாள். காயத்திரியிடம் இன்று எப்படியாவது தான் எடுத்திருக்கும் முடிவைப் பற்றிக் கூறிவிட வேண்டும். காயத்திரி நிச்சயம் அதற்கு சம்மதிக்க மாட்டாள் என்பது புரிந்தாலும் தன் முயற்சி நூறிற்கு இருநூறாக இருக்க வேண்டும் என்ற உறுதியோடே புறப்பட்டாள். அக் காரியத்தை நிறைவேற்றி தன் தமிழிற்கு மனநிம்மதியைக் கொடுக்க வேண்டும் என்ற முடிவும் அவளை உந்தியது.

நளாயினியின் நண்பி வீட்டிற்கு முதலில் சென்றவர்கள் சிறிதுநேரம் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் அவர்களைப் பேசிக் கொண்டிருக்குமாறும் வெளியில் ஒரு சிறு வேலை இருப்பதால் அதனை முடித்துவிட்டு உடனே வருவதாகவும் கூறிப் புறப்பட்டாள் அபிராமி. நளாயினி தானும் அவளுடன் வருவதாகக் கூறிய போதும் அதனை மறுத்துவிட்டுத் தான் மட்டுமே சென்றாள்.
காயத்திரியின் வீட்டு கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வெகு அமைதியாக இருந்தது வீடு. அதற்கு எதிர்மறையாக அபிராமியின் மனதிலோ பல ரயில்கள் ஒன்று சேர்ந்து ஓடிவது போன்ற இரைச்சல் ஏற்பட்டது. அந்தளவுக்கு அவளது மனதில் பதற்றம் குடிகொண்டிருந்தது.

உள் கதவருகே சென்றவள் சற்று நேரம் தயங்கி நின்றாள். ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டவள் கதவை மெதுவாகத் தட்டினாள்.
சற்றுநேரத்தில் கதவைத்திறந்த காயத்திரியின் விழிகள் அங்கே அபிராமியைக் காணவும் ஆச்சரியத்தில் மலர்ந்தன. அவளது முகமும் சந்தோசத்தில் பூரித்தது.

சொற்ப நேரமே அவள் ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றது. உடனேயே "வாங்க... உள்ள வாங்க" என்று அன்புடன் அழைத்தாள். உள்ளே சென்றவள் “நான்… அபிராமி…” என்று தயக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்தினாள்.
“உங்களை எனக்குத் தெரியுமே. நேரில் நாம் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் இனியனின் வைஃபை எனக்குத் தெரியாமல் இருக்குமா? உங்க வெடிங்கிற்கு என்னால் வரமுடியாமல் போய்விட்டது. அப்புறம் இனியனிடம் கேட்டு உங்க வெடிங் போட்டோஸ் எல்லாம் பார்த்தேன். சாரி சாரி… நான் பேசிக்கொண்டே இருக்குறேன். உட்காருங்க” என்று அவளை அமரவைத்தாள். அபிராமி சுற்றும்முற்றும் பார்த்தாள். வினுவை எங்கும் காணவில்லை. "எங்கே வினுவைக் காணவில்லை?"
"அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். உட்காருங்க அபிராமி"
அவள் அமர்ந்ததும் உள்ளே வேகமாக சென்றவள் கையில் ஒரு தட்டுடன் வந்தாள். "முதன் முதலில் எங்க வீட்டுக்கு வந்திருக்கிறிங்க. ஸ்வீட் சாப்பிடுங்க" என்று பால்கோவா இருந்த தட்டை நீட்டினாள். அபிராமி இருக்கும் மனநிலையில் இனிப்பு சாப்பிடவா முடியும். ஆனாலும் காயத்திரியின் மனம் வேதனைப்படக் கூடாது என நினைத்தவள் தட்டை வாங்கினாள். திரும்ப உள்ளே சென்ற காயத்திரி காபி போட்டுக்கொண்டு வந்து அபிராமியிடம் கொடுத்துவிட்டு எதிரே இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தாள்.

அபிராமி பால்கோவாவில் சிறிதளவை பிட்டு உண்டுவிட்டு தட்டை சோஃபாவின் முன் இருந்த சிறிய மேசை மீது வைத்தாள். அபிராமி தான் காயத்திரியிடம் பேச வந்த வந்த விடயத்தை பேசிவிடத்தான் முயன்றாள். ஆனாலும் தொண்டையில் பெரிய பாறாங்கல் இருந்து அமுக்குவது போன்ற உணர்வு தோன்றியது. வார்த்தைகள் வெளிவரத்தான் மறுத்தன. கஷ்டப்பட்டு பேச எத்தனிக்கையில் காயத்திரி பேச ஆரம்பித்தாள். "தினமும் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனாலும் இதுவரை முடியவில்லை. நீங்களே என்னைத் தேடி வந்ததில் ரொம்ப சந்தோஷம். உங்க வெடிங்கிற்கு என்னால் வர முடியவில்லை. என்னைத் தெரிந்தவர்கள் எல்லோரும் அங்கே வருவார்கள். என்னால் அவர்கள் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. போட்டோவில் அழகாய் இருந்திங்க. இப்போ நேரில் இன்னும் அழகாய் இருக்கிறிங்க. அப்புறமும் இனியனிடம் எப்பவும் கேட்டுக் கொண்டே இருந்தேன். உன் அபியை எப்போதடா கூட்டி வருவாய் பார்க்கணும் என்று. இதுவரை அவனுக்கு அதற்கு நேரமே கிடைக்கலை போல...

இன்று காலையில் இருந்து உங்களை கட்டாயம் காணவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால், எதிர்பாராமல் நீங்களே இங்கே வரவும் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போய் விட்டேன். இன்று உங்களை சந்திக்க விரும்பியதற்கு ஒரு சுயநலமான காரணம் இருக்கு. உங்களிடம் நான் ஒரு முக்கியமான விஷயமாக பேச வேண்டும். இனியனிடமும் சொல்ல ட்ரை பண்ணினேன். பட் முடியல"

"நானும் உங்களை இன்று கட்டாயம் மீட் பண்ண வேண்டும் என்றுதான் வந்தன். உங்களிடம் நானும் முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள் அபிராமி.

"பாருங்க இரண்டுபேரும் ஒரே நேரத்தில் மீட் பண்ண ஆசைப்பட்டிருக்கம். சொல்லுங்க அபிராமி... என்ன விஷயம்?"

"இல்லை.. நீங்களே சொல்லுங்க. அப்புறமாக நான் சொல்லுறேன்."

"அபிராமி... நான் உங்களிடம் ஒரு சின்ன உதவி... ம்ஹூம் மிகப்பெரிய உதவி கேட்கப்போறன். அதுவும் என் வினுவுக்காக..." என்று காயத்திரி இழுக்கவும் அபிராமியின் நெஞ்சுக்குள் பந்தயக் குதிரை ஓடியது. நிச்சயமாக நான் சொல்ல வந்ததைத்தான் இவளும் கேட்கப் போகிறாள். வினுவுக்காக என் தமிழை விட்டுத் தருமாறு கேட்கப் போகின்றாள் என்றே தோன்றியது. அபிராமியின் மனது ஓவென்று அழுதது. துக்கம் தொண்டையை அடைக்க, நான் இப்போதே வெளியே வருவேன் என்று அடம்பிடித்த கண்ணீரை பிரயத்தனப்பட்டு உள்ளிழுத்தாள்.

"சொல்லுங்க காயத்திரி.. நான் என்ன உதவி செய்யணும் உங்களுக்கு. எதுவானாலும் தயங்காமல் கேளுங்க"

சிறிது நேரம் தயங்கிய காயத்திரி ஒரு முடிவுக்கு வந்தவள் போல தலையைக் குலுக்கிவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
"அபிராமி என்னைப் பற்றி நீங்கள் எல்லா விஷயமும் அறிந்திருப்பீர்கள். இதுவரை காலமும் இனியனுக்கு நான் ஒரு பாரமாக இருந்துவிட்டேன். இப்போது அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. நான் இங்கே வந்த நாள் தொடக்கம் அவுஸ்திரேலியா போறதுக்கு நிறைய ட்ரை பண்ணினேன். பட் இவ்வளவு நாளும் அது டிலேயாகிக் கொண்டே இருந்தது. லாஸ்ட் மன்த் ஒரு வேகன்சிக்கு அப்ளை பண்ணியிருந்தன். அது ஃபைனலா ரூ டேய்சுக்கு முன்னாடிதான் முடிவாச்சி. இன்னும் வன் வீக்கில் நான் அவுஸ்திரேலியா போகணும். அதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று இருக்கு... ம்ஹூம்... இரண்டு சிக்கல் இருக்கு. நான் வினுவை அங்கே கூட்டிப் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எதையும் இன்னும் செய்யல. அங்கே நான் வேர்க் போனால் வினுவை பார்த்துக்க முடியாது. செகண்ட் ப்ராப்ளம் இனியனை விட்டு வினு அங்கே வந்து இருக்க ரொம்ப கஷ்டப்படுவான். இப்போதெல்லாம் என்னைத் தேடுவதை விட இனியனைத் தான் அதிகம் தேடுவான். அவனுக்கு இனியன் மேல் அப்படி ஒரு பாசம். தினமும் அவனை பார்த்தாகணும். அதனால்... அபிராமி நான் உங்களிடம் இதை கேட்க முடியாதுதான். ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை..."

அவள் ஒரே மூச்சில் பேசிக் கொண்டிருந்ததை இடை நிறுத்தவும், அபிராமியும் தன் மூச்சை இழுத்துப் பிடித்தபடி அவள் என்ன சொல்லப் போகின்றாள் என்பதை அறிய ஆவலாக இல்லையில்லை.. மரண பீதியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
Top