எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 15

Fa.Shafana

Moderator
முன் மாலைப்பொழுது..

பரபரப்புக்குக் குறைவில்லாத நெடுஞ்சாலையதில் வாகனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நேரம்.

சாலையின் இருமருங்கிலும் நடந்து செல்லும் பாதசாரிகளும், அவர்களுக்கான அந்த நேர அவசரத்தில் இருக்க,
ஒரு ஓரமாக அமர்ந்திருந்து தன் வலது கையை நீட்டி அவன் எழுப்பிய ஓசையை யாரும் கவனிப்பதாய் இல்லை, கவனித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருத்தில் கொள்வதாய் இல்லை.

ஆனாலும் சிலருக்கு அவனிடம் நின்று, குனிந்து தங்களிடம் இருந்தவற்றில் ஒரு நாணயத்தை அவன் கையில் சேர்க்குமளவு கனிவும் பொறுமையும் மனிதாபிமானமும் இருந்தது தான்.

அப்படியான ஒரு சிலரின் தயவில் தான் அவனின் காலமும் கழிகிறது.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அவன் கையில் விழுந்து மெல்லொலி எழுப்பிய நாணயங்களில் அரவமும் குறைந்து, தேய்ந்து சிறிது நேரத்தில் இல்லாமலே போனது.

மெதுவாக எழுந்தவன் அழுக்கும் தூசியும் கலந்து கறுப்பு நிறமாக மாறியிருக்கும் தன் பையை எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

பை மட்டுமா? அவனுமே அப்படித்தான் இருந்தான்!

பரட்டைத் தலை, நீண்டு வளர்ந்து வளைந்த நகங்கள், குழி விழுந்த கன்னங்களை மறைத்த தாடி மீசை, சோர்வையன்றி வேறெதையும் காட்டாத கண்கள், பசியால் வாடி, மெலிந்து, கூனுன்ற அழுக்குப் படிந்த தேகம், எப்போதோ அணிந்த கந்தையான ஆடை, இரண்டு கால்களிலும் இரண்டு விதமான, இரண்டு அளவுகளிலான செருப்பு. உச்சி முதல் பாதம் வரை இல்லை அதையும் தாண்டி செருப்பு வரை ஒரே நிறத்தில் சிறு வித்தியாசமும் இல்லாமல்; ஒரு யாசகனுக்குரிய அத்தனையும் அவனிடம் குறைவில்லாமல் இருந்தன.

வெகு நேரமாக நடந்தவன் ஒரு கடைக்கு முன் சென்று நின்றான். கையில் இருந்த பணத்தைக் கொடுத்து ரொட்டியும் சம்பலும் கேட்டவன் தன் பையில் இருந்த கோப்பையை நீட்டி அதில் தண்ணீரும் வாங்கிக் கொண்டான்.

அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்தக் கடையில் இருந்து சிறிது தூரமாக சென்று பூட்டியிருந்த கடை ஒன்றின் படியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்தவன் அப்படியே சாய்ந்து படுத்துக் கொண்டான். அவனுக்குத் துணையாக எங்கிருந்தோ வந்த நாயும் குட்டியும் அவனருகில் படுத்துக் கொண்டன.

அடுத்த நாள் காலையில் கடை திறக்கும் முன் எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்து விடுவான்.

இலக்கின்றிய அவனது பயணத்தில் ஒற்றைத் தேடலாக பசிக்கான உணவு மட்டுமே. அதுவும் கையேந்தி யாசித்து அதில் கிடைக்கும் பணத்தில் தான் அவன் பசியாறுவது.

நா‌ள் முழுவதும் பட்டினியில் கிடந்தாலும் பணம் கொடுக்காமல் உணவு உண்டதில்லை அவன்.

அவன் கொடுக்கும் சிறு தொகைப் பணத்தை எடுத்துக் கொண்டு தாராளமா உண்ணக் கூடியளவு உணவு கொடுத்தவர்களும் உண்டு. அதையும் அவன் அறிவான். பசிக்கிறது, பணம் இல்லை, உணவு கொடுங்கள் என்று அவனாகக் கேட்டதில்லை இதுவரை. அவன் உழைத்து அவன் உண்கிறான். அவனைப் பொறுத்தவரை அவனது உணவுக்கான உழைப்பு இது.

அவன் கையில் விழும் உலோக நாணயங்களுக்குள் புதைந்திருந்தது அவனது நாணயம்.

அதிகாலையில் கேட்ட வாகனங்களின் இரைச்சலில் உறக்கம் கலைந்து எழுந்தவன் மெதுவாக நடந்து அடுத்து அடைந்த இடம் அந்த ஊரின் பொது பேரூந்து நிலையம்.

விடியலுக்கு முன் தூறிக் கொண்டிருந்த மழை நேரம் செல்லச் செல்ல வலுக்க ஆரம்பித்தது.
இப்படியே மழை பெய்து கொண்டிருந்தால் இன்றைய அவனது நாள் பசியுடன் தான் முடியும்.

பசி..!
பழகிவிட்டது தானே?
குளிரில் உடம்பு நடுங்கியது. அப்படியே ஒரு ஓரமாக சுருண்டு படுத்துக் கொண்டான்.

மழை விடும் போல தெரியவில்லை. எழுவதும் மழையை அவதானிப்பதும் படுப்பதும் என அன்றைய நாள் முடிந்து இரவு வந்தது. மழை விடுவதாக இல்லை. கோப்பையைப் பிடித்து சேகரித்த மழைநீர் மட்டுமே அவனது அன்றைய உணவாகியது.

இப்படியே நாட்கள் கடந்து, அவன் நடந்து நடந்து புதிதாக ஒரு ஊரை வந்து சேர்ந்திருந்தான்.

அன்றிரவு வீதி ஓரமாக இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தவன் உறங்குவதற்கு இடம் தேடி வீதியோரம் ஒரு மரத்தடியை அன்றைய உறைவிடமாக்கிக் கொண்டான்.


இரவு பத்து மணியளவில் தன் மீது விழுந்த பாரத்தில் அதிர்ந்து விழித்து எழுந்து அமர்ந்தான்.

அங்கே ஒருவர் தன் துவிச்சக்கர வண்டியுடன் அவனருகில்.

"பயப்படாத. காய்கறி தான். கட்டு அவுந்து விழுந்து, உருண்டு வந்து உன் மேல வந்து விழுந்துடுச்சு" என்றார் அவர்.

பார்த்த பார்வையில் அவனை இனம் கண்டு கொண்டிருப்பார் போலும்.

"ம்ம் பரவால்ல"

"இங்க உன்ன பாத்ததே இல்லயே.." என்று அவர் விசாரிக்க.

"நான் ஊரூரா போவேன். இன்னிக்கு இங்க" என்றான் அவன்.

"சாப்பிட்டியா?"

என்றோ ஒருநாள் தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வி; பல வருடங்களுக்குப் பின் மீண்டும் கேட்கப்பட,

"நான் மூனுவேள சாப்பிட குடுத்து வெக்கலைங்கய்யா. ஏதோ இன்னிக்கு பட்டினி இல்ல. தண்ணி குடிச்சிட்டு தூங்கிட்டேன். நாளைக்கு விடிய இங்கருந்து போய்டுவேன்" என்றான்.

"இரு வரேன்" என்றவர் விழுந்த பொதியைத் தூக்கிக் கொண்டு அவனிருந்த இடத்தின் எதிர்ப்புறம் இருந்த ஒரு வீட்டுக்குள் சென்று மறைந்தார். சிறிது நேரத்தில் வெளியே வரும் போது ஒரு தட்டில் உணவும் ஒரு போத்தலில் தண்ணீரும் கொண்டு வந்தவர் அவனிடம் கொடுக்க,

"தட்டு வேணாம் ஐயா.." என்றான்.

"தட்டில்லாம எப்படி சாப்பிட? இங்க இந்த நேரத்துல வாழல எல்லாம் தேடிட்டு இருக்க முடியாது. பேசாம சாப்பிடு" என்றவர் தன் வீட்டை நோக்கிச் சென்றார்.

"தட்டயும் தண்ணி போத்தலையும் நானே வெச்சுக்குறேன்" என்று அவன் கூறியது அவருக்கு கேட்கவே இல்லை போலும்.

காலையில் எழுந்து தான் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்.

இரவு உணவு கொடுத்தவரின் வீட்டின் வலது பக்கமாக சிறிய சாப்பாட்டுக்கடை இருந்தது.

அந்த விடியல் பொழுதிலேயே கடை திறந்திருக்க அவரும் இன்னொரு இளைஞனும் கடையில் இருந்தனர்.

இவன் கடையைப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு கையசைத்து அழைத்தார். அவர் தவசி.

"ராத்திரி கொடுத்த தட்ட கேப்பாரோ. கேட்டாலும், அழுக்கு வேணாம், குடுக்க முடியாதுன்னு சொல்லணும். " என்று முனுமுனுப்புடனே எழுந்து சென்றான்.

"டீ குடிக்கிறியா?"

"இல்ல வேணாம்"

"அப்ப சாப்பிடு"

"வேணாம் காசில்ல. ராத்திரியும் சாப்பாடு சும்மா தான் குடுத்தீங்க" என்றான்.

அவனது கூற்றில் ஆச்சரியமாக அவனைப் பார்த்தவர் திரும்பி தன் மகன் சபரியைப் பார்த்தார்.

"நான் காசு கேக்கவே இல்லயே"

"நீங்க கேக்கல்ல ஆனா நான் சும்மா சாப்பிட மாட்டேன். பிச்ச எடுத்து அந்த காச குடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிடுவேன். இல்லன்னா தண்ணிய குடிச்சிட்டு இருந்துடுவேன்" என்க

மற்ற இருவரின் கண்களும் இடுங்கின.

"உன் பேரென்ன? எப்படி இங்க வந்த?" என்றான் சபரி.

"என் பேர் துரையப்பா. அம்மா அப்பா யாரும் இல்ல. கல்யாணமும் பண்ணிக்கல்ல. ஊர்ல சின்ன பால் பண்ணைல வேல செஞ்சிட்டு இருந்தேன். கொரோனாவோ என்னவோ வந்துச்சே அந்த நேரம் நஷ்டமாகிடுச்சின்னு வேல இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

அந்த நேரம் சாப்பாட்டுக்கே கஷ்டம். வேல தேடினா கெடக்கல்ல ஊரூரா திரிய ஆரம்பிச்சேன்.

எல்லோருக்கும் கஷ்டம். நாம யாருகிட்டயும் சும்மா சாப்பாடு கேட்டு வாங்கணுமான்னு ஒருமாதிரி இருந்திச்சு. அப்ப வர நானும் ஒழச்சி சாப்பிட்டவன் தானே. என் பசியாத்த காசு வேணும், வேல எதுவும் கெடக்கல்ல. வேல எதுவும் கெடக்காம சாப்பிட வழி இல்லாம பிச்ச எடுக்க ஆரம்பிச்சேன். ஒருத்தர்ட இனாமா சாப்பிட வாங்குறத, பத்து பேர்ட காசு வாங்கி அத சேத்து நாலு நாளுக்கொரு தடவ சாப்பிட்டாலும் மனசாறிப் போகும்னு நெனச்சேன். காசில்லாதப்ப தண்ணிய குடிச்சிட்டு இருந்துடுவேன். அதுவே கொஞ்ச நாள்ல பழகிடுச்சு.

ரோட்டோடத்துலயும், பஸ்டான்ட்லயும் தான் பிச்சயெடுப்பேன். வீடுகள்ல பொம்புளைங்க கிட்ட போய் கேக்க சங்கடமா இருக்கும். அதுவும் நான் இருக்குற கோலத்துல கொழந்தைங்க இருக்க வீட்டுக்கு போனா பயந்து போய்டுவாங்களே. அதான் போக மாட்டேன். இல்லன்னா வீடுகள்ல சாப்பாடு போட்டு இருப்பாங்களா இருக்கும்.


கடைகள்ல நான் டீ கேட்டு குடுக்குற காச வாங்கிட்டு சாப்பாடு போட்டு புண்ணிவானுங்க இருக்காங்க. நல்லா இருக்கணும் ஒன்னுக்கு பத்தா கெடைக்கணும் அவங்களுக்கு.

ஆனா ராத்திரி நீங்க குடுத்த மாதிரி யாரும் இதுவர குடுத்ததில்லைங்கையா. பசியறிஞ்சு குடுத்தீங்க. நல்லா இருப்பீங்க. உங்களுக்கு ஒன்னுக்கு நூறாவே கெடைக்கும்" என்றவன் தொடர்ந்து,

"சரியான சாப்பாடு தூக்கம் இல்லாம ஒடம்பும் நலிஞ்சு போச்சு. இப்பல்லாம் வேல செய்ய ஒடம்புல தெம்பும் இல்ல. இருக்குற வர இப்பிடி இருந்துட்டு ஒருநாள் இல்லாமலே போய்டுவேன்" என்றவனுக்கு பதில் கூற முடியாது பார்த்தது பார்த்தபடி இருந்தார்கள் தந்தையும் மகனும்.

சில நொடிகள் கழிய, "ஆக இப்ப வர உன் சாப்பாட்டுல உன் உழைப்பு இருக்குன்னு சொல்ற?" என்றான் சபரி.

"ஆமாங்கய்யா.." என்றான் திடமாக.

"இப்ப ஏதாவது வேல குடுத்தா செய்வியா?" என்ற மகனது கூற்று புரியாமல் கேள்வியாய் அவனை ஏறிட்ட தவசியிடம் பொறுமையாக இருக்கக் கூறி கண் காட்டி துரையப்பாவைக் கவனித்தான்.

"எனக்கு யாருங்கய்யா வேல குடுக்க? குடுத்தாலும் என் ஒடம்பு.."

"சரி முன்ன என்ன வேல தேடின? பண்ணைல என்ன செஞ்ச?" என்று சபரி கேட்க,

"பண்ணைல சாணி அள்ற வேல, கூட்டிப் பெருக்கி கழுவுற வேல எல்லாந்தான்"

"ம்ம்.. இங்கயும் அதே தான். எங்க வீட்ட சுத்தி செய்யணும். பக்கத்துல ஒரு சின்ன பள்ளிக்கூடம் இருக்கு. அதுலயும் பேசிடுறேன் அங்கயும் செய்யணும். பள்ளிக்கூடத்துல மாசம் கூலி குடுப்பாங்க. இங்க மூனு வேள சாப்பாடு, துணி எல்லாம் குடுக்குறோம் சரியா? செய்வியா?" என்றான் படபடவென்று.

"சபரி.." என்ற தவசியின் குரலைவிட அதிக ஒலியுடன்

"செய்றேனுங்கய்யா. என்ன ஒன்னு. வெரசா வேல செய்ய முடியாது மெதுவாத்தான் செய்வேன். பரவால்லயா? என்றான்.

"அதெல்லாம் பரவாயில்ல"

"சபரி.. இது சரி வருமா? அவனுக்கு ஒடம்புல தெம்பும் இல்லன்னு சொல்றான்"

"ஆனா உழைச்சு சாப்பிடணும்னு மனசுல தெம்பும் திடமும் இருக்குப்பா. கண்டிப்பா செய்வான் பாருங்க. வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஸ்டோர் ரூம்ல தங்க வெச்சுடலாம். அம்மாவுக்கு கூட்டிப் பெருக்குற வேல குறையும். ஒரு வாரம் நம்ம வீட்டுல மட்டும் வேல செஞ்சிட்டு இருக்கட்டும், அப்புறமா ஸ்கூல்ல வேல செய்யட்டும். நான் நம்ம சார் கிட்ட பேசுறேன். அவரும் ஆள் வேணும்னு தேடிட்டு இருந்தார்" என்றான்.

"முதல் இவன குளிக்க வைக்கணுமே?" என்று தவசி கூறவும்..

ஈ என்று சிரித்து, "குளிக்க எடம் தேடணும், துணி எல்லாம் மாத்தணும்னு குளிக்கிறதயே விட்டுட்டேன்" என்றான்.

"நல்லா விட்ட போ.." என்ற சபரி கடையில் இருந்து வெளியேறி, வீட்டிற்குள் சென்று ஒரு பையுடன் வந்து துரையப்பாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

"இதோ இருக்கு பாரு இதான் நான் சொன்ன பள்ளிக்கூடம். இங்க தான் வேல" என்று கூறிக் கொண்டே அவனைக் கூட்டிக் கொண்டு அருகில் இருந்த ஆற்றுக்குச் சென்றான்.

"உன் துணிய கழட்டி அந்த ஓரமா போட்டு எரிச்சுடு. இதுல கைலி, சோப்பு, மாத்து துணி எல்லாம் இருக்கு. குளிச்சிட்டு மாத்திக்க" என்று பையை அங்கே வைத்துவிட்டு தீப்பெட்டியையும் பழைய கைலி ஒன்றையும் அவனது கையில் கொடுத்தான்.

"நல்லா அழுக்கு போக தேச்சி குளி. இந்த சோப்பு மிச்சம் இல்லாம நாலு தடவ தேய்க்கணும் புரிஞ்சுதா? போ" என்றவன்

அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து தன் கைபேசியை எடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு அழைத்தான்.

துரையப்பா குளித்து உடை மாற்றி வரவும் அவனை அழைத்துக் கொண்டு சென்று முடியையும் வெட்டி தாடியை மீசை எல்லாம் திருத்தி அவனது அடையாளத்தை மாற்றி அழைத்து வந்தான்.

"கோடரி ஒன்னு வாங்க மறந்துட்டேன்"

"எதுக்குங்கய்யா. எனக்கு இப்ப மரமெல்லாம் வெட்ட முடியாதுங்களே. கொஞ்சம் நாள் கழிச்சி வெட்டுறேனுங்களே"

"மரம் இல்ல துரயப்பா உன் நகத்த வெட்ட. நகவெட்டி தாங்காது" என்று சிரித்து,

"உனக்கு எத்தன வயசு?" என்று கேட்க,

"நாப்பத்தஞ்சு" என்று சிரித்தான் அவன்.

******
"குட் மார்னிங் அங்கிள்"
"குட் மார்னிங் தாத்தா"
என்று அடுத்தடுத்து குரல்கள் கேட்க

"குட் மார்னிங் பாப்பா, குட் மார்னிங் தம்பி, குட் மார்னிங் ப்பா, குட் மார்னிங் ம்மா" என்று பதில் கூறியபடி பள்ளி நுழைவாயிலில் அருகே இருந்த கட்டில் அமர்ந்திருந்தான் துரையப்பா.

இந்த ஆறு மாத காலம் வெகுவாக அவனை மாற்றி இருந்தது. வேலை செய்வதில் ஆரம்பத்தில் சிறிது சிரமம் இருந்தாலும் நாள் செல்லச் செல்ல அவன் இழந்திருந்த தெம்பு மீண்டது. தனக்காக ஒரு கௌரவமான வேலை, கூலி, தங்குமிடம் என்ற மகிழ்ச்சியும் குதூகலமும் அவனை மீட்டெடுக்க சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் மாறினான்.

பள்ளியில் பிள்ளைகளுடனும் தவசியின் வீட்டிலும் ஒன்றினாலும் அவனது எல்லைக்குள் இருக்கவும் மறக்கவில்லை.

துரையப்பா இப்படியே இருக்கட்டும் இறுதி வரை!
===============
என் அபிமான வாசகி அக்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதிய சிறுகதை.

வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!
================
மேலும் என் சிறுகதைகள் வாசிக்க :

 
Last edited:

admin

Administrator
Staff member
wow shafana much appreciate.. after long time unga writing pidichu iruku.. very nice.. ஸ்டோரி ஆரம்பிச்சபோ same டௌட் துரையப்பாக்கு என்ன வயசு finally Got தி ஆன்சர்..
 

Fa.Shafana

Moderator
wow shafana much appreciate.. after long time unga writing pidichu iruku.. very nice.. ஸ்டோரி ஆரம்பிச்சபோ same டௌட் துரையப்பாக்கு என்ன வயசு finally Got தி ஆன்சர்..
Thank you so much da ❤️❤️❤️
 

Shamugasree

Well-known member
Wow super da baby. Sonnenla ne nalla eluthuva nu. Kai yenthi nikkurathu kodumaiyana vishayam. Chinna kuzhanthaiga bayapadum nu thuraiyappa veedugal la kaiyentha maten sonnare 🩷🩷🩷.
Sabari thavasi pola palar pala thuraiyappa vazhkai la matram konduvaranum nu vendikuren.
 

Fa.Shafana

Moderator
Wow super da baby. Sonnenla ne nalla eluthuva nu. Kai yenthi nikkurathu kodumaiyana vishayam. Chinna kuzhanthaiga bayapadum nu thuraiyappa veedugal la kaiyentha maten sonnare 🩷🩷🩷.
Sabari thavasi pola palar pala thuraiyappa vazhkai la matram konduvaranum nu vendikuren.
Thank you so much akka ❤️❤️❤️
யாசகர்களுக்கு மறுவாழ்வு மாதிரி எதுவும் கொண்டு வர முடியாதான்னு ஒரு எண்ணம் எனக்குள்ள எப்பவுமே இருக்கும் அக்கா.
 
Top