ஏழுமணி..
சூரியன் மறைந்து இருள் சூழ்ந்த இரவு நேரம்.
வானில் பவனி வரும் பிறைநிலவின் ஒளி அந்த இடத்தில் பரவியிருந்தது.
தூரத்தில் ஆர்ப்பரித்து எழுந்து, சிறிதாக அமிழ்ந்து நகர்ந்து வந்து கரையைத் தொட்டு விட்டு மீண்டும் கடலை நோக்கிச் செல்லும் அலைகளில் பேரோசையையும் தாண்டி ஒலித்தது அவளின் குரல்.
"யாமினி.. முன்னால போகாதடா. அங்கேயே நில்லு" என்ற,
தன் தாயைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்து ஆமோதிப்பாக தலையசைத்தாள் யாமினி.
பாதங்களை கடல் மணலில் புதைத்து, கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு, கடற்காற்று முகத்தில் மோதி தலைமுடியை கலைத்து விட புன்னகையுடன் நின்றாள் யாமினி. இடைக்கிடையே கண்களில் விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டபடி நின்றவளுக்கு தன் காலை நனைத்துச் செல்லும் அலைகளைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு.
பக்கத்தில் துணையாக தந்தை நிரஞ்சன் இருக்க பயம் சிறிதுமின்றி நின்றிருந்தாள் யாமினி.
விடுமுறை நாளாக இருந்த போதும் அந்தக் கடற்கரையில் பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் குழுவாக, குடும்பமாக அமர்ந்திருந்தார்கள்.
ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த படகுகளின் ஒன்றின் அருகே அமர்ந்திருந்தாள் யாதவி. மனம் கனத்துக் கிடந்தாலும் வெளிக்காட்டவில்லை அவள். மகளுக்காக வந்து ஏனோதானோவென அமர்ந்திருக்கிறாள்.
"நீங்களும் வாங்கம்மா.." என்ற வழமையான அழைப்பு யாமினியிடம்.
"இல்ல நான் இங்கேயே இருக்கேன்" என்ற வழமையான மறுப்பு யாதவிடம்.
"ஏன் ப்பா.. இந்த அம்மா இப்படி இருக்காங்க? அவங்களும் வந்து கால் நனைய இங்க நிற்கலாம்ல? ஜாலியா இருக்கும். பீச்சுக்கு வந்து இப்படி உட்கார்ந்து இருக்குறது நல்லாவா இருக்கு?" என்று நிரஞ்சனிடம் கூறியவள்,
என்றும் இல்லாதவாறு யாதவியை அழைத்து வரும் நோக்கத்துடன் அவளிடம் ஓடினாள்.
நிரஞ்சனும் அவள் பின்னே வர,
"அம்மாவ வர சொல்லுங்கப்பா. வழக்கமா நான் தான் கூப்பிடுவேன் அம்மா முடியாதுன்னு சொல்லுவாங்க. இன்னைக்கு நீங்க கூப்பிடுங்க வாறாங்களான்னு பார்க்கலாம்" என்றாள் யாதவியின் கையைப் பிடித்துக் கொண்டு.
"நான் கூப்பிட்டாலும் அம்மா வர மாட்டாங்கடா"
"ஏன் அப்படி? நீங்க கூப்பிட்டிருக்கீங்களா? இல்லையே, நீங்க கூப்பிட்டு நான் பார்த்ததே இல்லையே" என்றவளை இழுத்தெடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள் யாதவி.
நிரஞ்சனும் அவளருகே அமர வர,
"நீங்க போய் இவளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்க" என்று அனுப்பினாள்.
சிறிது நேரம் மௌனமாக இருந்தவளின் மடியில் இருந்த யாமினியும் எதுவும் பேசவில்லை.
"யாமினி இந்தக் கடல் எப்படி இருக்கு?" என்றாள் திடீரென.
"சூப்பரா, அழகா இருக்கும்மா. உங்களுக்கே தெரியுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்"
"ம்ம்.. எனக்கும் அப்படித்தான் இருந்தது. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். உன்னைப் போல தான் சின்ன வயசுல நானும். பீச்ல விளையாட கொள்ளை ஆசை எனக்கு. அழகா, ஆர்ப்பாட்டமா ஏதோ ஒரு ஆளுமையா இருக்குன்ற மாதிரி தான் நானும் கடலைப் பார்த்து சந்தோஷமா ரசிச்சிருக்கேன், வியந்திருக்கேன். ஆனா அதோட இன்னொரு பக்கத்த கண்ட பின்னால ரசிக்கிற மனம் எனக்குள்ள இல்லைடா" என்றவளது குரல் கரகரத்தது.
"என்னம்மா? புரியல்லை" என்றாள் யாமினி.
"சுனாமி..!"
"ஓ.. அதை சொல்றீங்களா? சரியா இன்னையோட இருபது வருஷமாச்சுல்ல. 2004ல தானே சுனாமி வந்துச்சு?. இன்னைக்கு டிவில சொன்னாங்க" என்ற பத்து வயதேயான சிறியவளுக்கு யாதவியின் மனநிலை புரியவில்லை.
அவளின் இழப்பும், இழப்பினால் கொண்ட பாதிப்பும் தெரியவில்லை.
"அதைத்தான் சொல்றாங்க. அதனால அம்மா எவ்வளவு இழந்தாங்கன்னு உனக்கு தெரியாதுடாம்மா" என்றபடி அவர்களின் அருகே அமர்ந்தான் நிரஞ்சன். சாப்பிட ஏதோ சிற்றுண்டி வாங்கி வந்திருந்தான்.
கடந்த கால நிகழ்வுகளின் நினைவில் நெஞ்சம் வலி கொள்ள, தன் அணைப்பில் இருந்த மகளை மேலும் இறுக்கிக் கொள்ள கண்களில் கண்ணீர் வழிந்தது.
"அம்மா..!" என்று தன் தாயைத் திரும்பிப் பார்த்தவளுக்கு ஏதோ புரிவதாக.
"என்னாச்சு ம்மா? இன்னைக்கு தாத்தா பாட்டி மாமாவோட நினைவு நாள். அவங்க எல்லாம்.. சுனாமி தானா?" என்று கேட்டாள்.
இதுவரை யாமினியிடம் எதுவும் கூறி இருக்காததால் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
கடற்கரையை ஒன்றிய குடியிருப்புப் பகுதியில் தான் யாதவியின் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.
2004 டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறை காலம். யாதவி பத்தாம் வகுப்பு முடித்து அடுத்த வருடம் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருந்தாள்.
(இலங்கையில் பொதுத் தேர்வு, 11ம் வகுப்பில் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை என்று நடக்கும்)
பிரத்தியேக வகுப்புகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதி வரை நடைபெற்று இறுதி பத்து நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்க, விடுமுறைக்கு யாதவியின் வீட்டுக்கு வந்த அத்தையுடன் கிளம்பிச் சென்றாள். ஒரு வாரம் கழித்து வருவதாக கிளம்பியவளுக்கு அடுத்த மூன்று நாட்களில் இடியென செய்தி வந்தது.
சுனாமி..!
அது வரை கேட்டறியாத ஒரு பெயர் கொண்டு கோர தாண்டவமாடி தன் கோர முகத்தைக் காட்டி பல உயிர்களையும் உடமைகளையும் அழித்து உலகத்தையே கவிழ்த்து கொட்டியது போல ஒரு உலுக்கு உலுக்கி இருந்தது கடல். ஆழிப்பேரலை என தன் சீற்றத்தை காட்டியது.
இளையவர், முதியவர் என்ற வயது வித்தியாசமின்றி; ஆண், பெண் என்ற பாகுபாடின்றி; இன மத பேதமின்றி அனைவரும் ஒரு ஆட்டு ஆட்டுவித்து பல உயிர்களை பலி கொண்டு
அத்தனை காலமும் அழகாய் இருந்த கடல் அதன் ஆபத்தை உலகிற்கு அழுத்தமாகக் காட்டி இருந்தது.
முன் தினம் கிருஸ்துமஸ் பண்டிகை முடிந்து,
அழகாக விடிந்த அந்தப் பௌர்ணமி தினம் நொடிக்கு நொடி அகோரமாக நகர ஆரம்பித்தது.
அடுத்தடுத்த நாட்களும்
மனதை திடுக்கிட வைக்கும் பயங்கரமான நாட்களாகவே இருந்தன.
நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட கரையோர பிரதேசங்களுக்குச் சென்று மீட்புக்குழுவினருடன் சேர்ந்து கொண்டனர்.
இறந்தவர்கள், காணாமல் போனோர், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களின் ஓலங்கள், ஓங்காரங்கள் என கறுப்பு நாட்களாகவே இருந்தன ஒவ்வொரு நாளும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு யாதவியின் தாயும் தம்பியும் சடலங்களாக மீட்கப்பட்டனர். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து தந்தையின் சடலம் கிடைத்தும் அவளை பார்க்கவிடல்லை, பார்க்கும் விதமாக இருக்கவில்லை என்றனர்.
பெற்றோரையும் சகோதரனையும் வாழ்ந்த வீட்டையும் இழந்தாலும் அவை எவற்றையும் உணரும் நிலையில் யாதவி இல்லை. பித்துபிடித்தவளைப் போல இருந்தாள்.
அத்தனையும் முடிந்து யாதவி அவளது அத்தை வீட்டில் தங்கி இருந்தாலும் மனம் அந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து வெளி வர முடியாது சண்டித்தனம் செய்தது. பல மாதங்களாகியும் மனம் சமன்பட மறுத்தது.
தான் அத்தையுடன் செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் தானும் அவர்களுடனே போயிருக்கலாமே என்று எண்ணம் மட்டுமே அவள் மனதில் வலம் வந்து கொண்டிருந்தது.
நேரடியான பாதிப்புகள் மட்டுமல்லாமல் கண்டவை கேட்டவை என அவளை வந்தடையும் செய்திகள் இன்னும் இன்னும் அவள் மனதை பலவீனமாக்கின.
அவளின் எண்ணப்போக்கு
புரிந்த அவளது அத்தையும் மாமாவும் மருத்துவ ஆலோசனைக்காக அழைத்துச் சென்றார்கள். முதலில் முரண்டு பிடித்தாலும் அடுத்தடுத்த அமர்வுகளில் மருத்துவரின் அணுகுமுறையில் ஒரு நிலையானாள். மனம் சமன்பட்டது.
ஆனால் அவளிடம் முன் இருந்த கலகலப்பும், துறுதுறுப்பும் இல்லாமலே போய் இருந்தது.
யாதவியின் சக தோழிகள், ஆசிரியர் என பலர் அந்த அனர்த்தத்தில் இறந்துவிட்டிருக்க படிப்பைத் தொடர்வதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தவளை மனமாற்றம் வேண்டி தையல் வகுப்பிலும் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி வகுப்பிலும் சேர்த்துவிட்டார்கள்.
நாட்களில் ஓட்டத்தில் கால மாற்றத்தில் வருடங்கள் சில கழியும் போது, வயது ஏறும் போது யாதவியின் மனமும் பக்குவப்பட்டது. நிதர்சனம் புரிந்தது அவளுக்கு.
தன் நிலை, அத்தை மாமாவை வருத்தும் என்று உணர்ந்தவள் முயன்று தன்னை மீட்டுக் கொண்டாள். அவர்களின் பிள்ளைகளோடு ஒருத்தியாக வளர்ந்தவளுக்கு அந்தப் பிள்ளைகளுக்குப் போலவே திருமணம் செய்ய நினைத்தார்கள்.
மனமுவந்து ஒப்புக் கொண்டு திருமணம் செய்து கொண்டாள்.
காலம் மாறினாலும் காயங்கள் ஆறினாலும்
ரணம் உள்ளுக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது.
யாதவியின் கடந்த காலத்தை மேலோட்டமாக யாமினியிடம் கூறினான் நிரஞ்சன்.
"இப்போ புரியுதா அம்மா ஏன் பீச்ல விளையாட வர மாட்டாங்கன்னு?"
"புரியுது ப்பா.." என்றவள்,
"கடல்னு சொன்னாலே உங்களுக்கு கஷ்டமா இருக்குமே ம்மா, பிறகு ஏன்ம்மா என்னை கூட்டிட்டு வாறீங்க? நான் கேட்கும் போது முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே. என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த பழக்கம் வராம தடுத்திருக்கலாமே?" என்று கேட்டாள் பெரிய மனித தோரணையில்.
"அதெப்படிடா? நானே சின்ன வயசுல பீச்ல ரொம்ப ஆசையா விளையாடுவேன். சுனாமிக்கு பிறகு தான் கடல்னா வெறுப்பு. என்னோட வெறுப்புக்காக, என் ஆழ் மன பயத்துக்காக நீ அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்த கெடுக்கணுமா?
உனக்கு கடல நினைச்சு எந்தப் பாதிப்பும் இல்லை. உனக்கு அழகா தெரியுது, இங்க வந்தா சந்தோஷமா இருக்குற பிறகு உன்னை நான் தடுப்பானேன். நீ என்ஜாய் பண்ணுடா" என்றவள்,
"ஒவ்வொரு விஷயத்துலயும் ஒவ்வொருத்தர் பார்வையும் வேறுபடும். எனக்கு சின்ன வயசுல சந்தோஷம் தந்த கடல், பிறகு ஒரு கட்டத்துல என் கிட்ட இருந்த எல்லாத்தையும் பறிச்செடுத்துட்டு கவலையையும் கண்ணீரையும் பயத்தையும் தந்துச்சு. அநாதையா நிற்க வெச்சது. அதனால எனக்கு கடல்னா வெறுப்பு. உனக்கு அப்படி இல்லையே.
அது மட்டுமில்ல ஒவ்வொரு முறையும் நீ கடல் அலைல நிற்கும் போதும் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்க முடியாத கடல் உன் கால்ல வந்து விழுந்து மன்னிப்புக் கேட்குறதா தோனும். அப்படி நினைச்சு நானே என் மனச சமாதானம் பண்ணிப்பேன்" என்று புன்னகைத்தாள்.
அந்த மெல்லிய புன்னகைக்குள் நிரம்பி வழிந்தது அவளது ஏக்கமும் வலியும்.
"ஒவ்வொரு முறையும் பீச்சுக்கு வரும் போது கோவில் போய்ட்டு தான் வரணும்னு நீங்க ஸ்ட்ரிக்ட் ஓடர் போடுறது ஏன்னு இப்போ தான் புரியுதும்மா" என்றாள் யாமினி.
"இருபது வருஷமாச்சு இன்னும் எத்தனை வருஷமானாலும் எனக்கு இதெல்லாம் மறக்க முடியாது, மறக்காத மனம் பயத்த மட்டும் விலக்கி வைக்குமா? இல்லையே. நான் இருக்குற வரைக்கும் என் மனசுக்குள்ள இதெல்லாம் இருக்கும். அதுக்காக உன்னைத் தடுக்க முடியாதேடா. உன் ஆசைக்கு கூட்டிட்டு வந்தாலும் எனக்குள்ள அந்த பயம் இன்னும் இருக்கு யாமினி. அதான் அப்படி பழக்கி விட்டேன். சாமி கும்பிட்டுட்டு வந்தா இறைவன் துணை இருப்பார்னு எனக்கு ஒரு நம்பிக்கை" என்றாள்.
"நல்லது கெட்டது எல்லாம் சேர்ந்தது தான் இயற்கை. கெட்டதுக்கு பயந்து நல்லத அனுபவிக்காம விட முடியாதே! அதுக்கு ஒரு பிடிமானமா இறைவனோட துணைய வேண்டிக்கிடக்கிறது தான்" என்றவளுக்குள்
இறந்து போன தன் தாய், தந்தை, தம்பி, நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரது ஆத்ம சாந்திக்கான வேண்டுதலும் சேர்ந்திருந்தது.
==================
20 வருடங்களாகியும் மறக்க முடியாத ரணமாக அந்நாட்களில்
நினைவுகள்!
இன்றும் கண்களுக்குள் வந்து செல்கின்றன அக்காட்சிகள்....
- - - - - - - - - - - - - - - - - -
கதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே!