"அக்கா பயமா இருக்கு. பேசாம நாளைக்கு நான் எங்கேயாவது காணாம போய்டவா?"
"எதே! அடேய் ஏன்டா ஏன்? உங்க அம்மா அப்பா என்னை ஊரைவிட்டே துரத்த ஐடியா பண்றியா?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் போறேன்"
"இப்போ உனக்கு என்ன பிரச்சினை"
"பயமா இருக்கு"
"என்ன பயம்?"
"நாளைக்கு நான் எப்படி பாடுவேனோன்னு பயமா இருக்கு. ப்ளேஸ் எடுக்கல்லைன்னா எல்லாரும் என்னென்ன பேசுவாங்கன்னு.."
"இதுவரை எப்படி பாடின?"
"சூப்பரா பாடினேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா நாளைக்கு ஃபைனல்ல எப்படி பாடுவேனோன்னு பயந்து வருதே"
"அதெல்லாம் வழக்கம் போல சூப்பரா தான் பாடுவ. உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு என் ஆண்டாள் மேல மலையளவு நம்பிக்கை இருக்கு" என்ற கூற்றில் மறுமுனையில் சில நொடிகள் அமைதி.
"என்னாச்சு? சத்தத்தை காணோம்"
"இப்படி சொல்லி தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஜூனியர் காம்படிஷனுக்கு அனுப்பி வெச்சீங்க. என்னாச்சு. செலக்ட்டாகாமலே வெளிய வந்தேன். இது சீனியர் காம்படிஷன்"
"அந்த தடவை அந்த சூழலை, புதிய ஆட்களை பெரிய பெரிய ஜட்ஜ்ஸைக் கண்டு பயந்து ஒழுங்கா பாடாம சொதப்பி செலக்ட்டாகாம வெளிய வந்தவ தான் இந்த தடவை ஒவ்வொரு படியா முன்னேறி ஃபைனல்ல போய் நிற்குற. மறந்துடாத. ஃபைனல்ல போய் உட்கார்ந்துட்டு இவளுக்கு பயந்து வருதாம்ல"
"எல்லாம் உங்களால தான்" செல்லக் கோபம் அவள் குரலில்.
"கண்டிப்பா என்னால தான். ஃபைனல்ல என்ன ஆனாலும் முழுப் பொறுப்பு நான் தான். இப்போ பேசாம போய் தூங்குறியா. ஒழுங்கு மரியாதையா நாளைக்கு நல்லபடியா பாடணும். ஃபைனல் டே. நிறைய பேர் வருவாங்க. ஜட்ஜஸ் மட்டும் இல்லாமல் புதுசா வேற யாரும் பாடகர்கள் வருவாங்க. யாரு வந்தாலும், என்ன நடந்தாலும் உனக்கு கவனம் உன் பாட்டுல மட்டும் தான் இருக்கணும். கவனம் சிதறுச்சு மவளே அப்புறம் இருக்கு உனக்கு.
"போங்க நான் கோவமா போறேன். என்னை இப்படி மாட்டி விடுறதே உங்க வேலை"
"போ, போ.. எங்க போனாலும் இங்க தான் வரணும்" என்றவள்,
"இங்க பாரு நான் இத்தனை நாளா சொன்னது தான். ஃபர்ஸ்ட் டைம் உனக்கு வாய்ப்பு கிடைக்கல்லை. இப்போ இந்த போட்டில வாய்ப்பு கிடைச்சது, உன் திறமையால ஃபைனல்ல போய் நிற்குற. இதுவே நமக்கு வெற்றி தான். நாளைய மேடை நீ உன் திறமைய காண்பிக்க கிடைக்குற கடைசி சான்ஸ்னு வெச்சுக்க. நீ ஒரு பாட்ட எடுத்து பாடினா அது எப்படி இருக்கும்னு காண்பிக்க போற. மறுபடியும் இந்த வாய்ப்பு கிடைக்காம போனாலும் கடைசி வாய்ப்ப சிறப்பா பயன்படுத்திட்டோம் எங்குற திருப்தி இருக்கணும் அதுக்காக மட்டுமே பாடு.
இறுதிப் போட்டில ஆறு பேர்ல ஒருத்தரா நீ இருக்க. இதான் நமக்கு வேணும். வெற்றி தோல்வி எல்லாம் இதுக்குப் பிறகு இல்லவே இல்லை. நாளைய நாள் எப்படி வேணா மாறலாம், ஆனா உன்னளவுல சிறப்பான பங்களிப்பா இருக்கணும்.
நாலாவது ஐந்தாவது இடத்துல வந்தா கூட நான் ஒன்னும் சொல்லமாட்டேன். உங்க அம்மா அப்பா கூட ஒன்னும் சொல்லமாட்டாங்க. எங்க எல்லாருக்கும் நீ ஃபைனல் போனதே வெற்றி தான், சந்தோஷம் தான். எதையும் யோசிக்காம, உனக்கு கிடைச்ச மேடைக்கு நீ நியாயம் செய்யணும்னு மட்டும் யோசிச்சி நாளைக்கு பாடு. வேற ஒன்னும் எங்களுக்கு வேணாம்" என்க,
"லவ் யூ அக்கா. நாளைக்கு மார்னிங் பேசுறேன். குட்டு நைட்டு" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் ஆண்டாள்.
நல்ல குரல் வளமும் பாடுவதில் அதீத ஆர்வமும் கொண்டவள் ஆண்டாள். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் கலந்து கொள்ள வைக்க முயற்சி செய்ய முதல் கட்டத்தில் தேர்வாகியவள், அந்த அரங்கில் நடுவர்கள், ஒளிப்பதிவு சாதனங்கள் என அனைத்தையும் கண்டு மிரண்டு அச்சத்துடன் பாடியதில் வாய்ப்புக் கிடைக்காமல் போனது.
அடுத்து பாடுவதில் மட்டுமன்றி அனைத்தையும் எதிர் கொள்ளவும் தயார்படுத்தி அதே தொலைக்காட்சி நடாத்தும் பெரியவர்களுக்கான போட்டியில் பங்குபற்ற வைக்க இதோ இப்போது இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகி நிற்கிறாள்.
ஆனால் நாளைய போட்டியையும் முடிவையும் நினைக்கும் போது இயல்பாக அவள் கொண்ட பயம் மனதைக் கவ்விக் கொள்ள; அவளது நலன் விரும்பி, தோழி, தமக்கை என அனைத்துமாகியவளை அழைத்துப் புலம்பி தனக்கான ஆறுதலைப் பெற்றுக் கொண்டதும் மனது சமன்பட்டது, திடம் கொண்டது.
'நல்லா பாடணும், பாடி ஜெயிக்கணும்,அவர் கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கணும்' என்று நினைத்துக் கொண்டாள்.
இன்று இறுதி நாள்..
மதிய வேளையிலேயை அந்த பிரமாண்ட அரங்கில் போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.
ஆறு போட்டியாளர்களும் இவ்விரண்டு பாடல்கள் பாட இருந்தனர்.
தான் பாடப் போகும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருந்தவளுக்கு மனதில் இன்னும் ஒரு எண்ணம்.
'இன்னைக்கு கதிர் சார் வருவாங்களா? நான் ஜெயிச்சி அவங்க வராம போனா? லாஸ்ட் சீசன் ஃபைனலுக்கு அவங்க வரல்லை. இந்த சீசன்ல கூட அடிக்கடி வராம லீவ் போட்டாங்க. இன்னைக்கு வந்தா கண்டிப்பா..' என்ற அவளது சிந்தனை ஓட்டத்தை தடை செய்தது அலைபேசி ஒலி.
"ஹலோ அக்கா" என்றாள் துள்ளல் குரலில்.
"ஹாய்டா. அங்க எல்லாம் ஓகே தானே? நீ இப்போ எங்க இருக்க? எல்லாரும் அங்க போய்டீங்களா?"
"ம்ம்.. ஹாலுக்கு வந்துட்டோம் அக்கா. உங்க ஃபோனுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
நாங்க ஆறு பேரும் ஒரு ரூம்ல இருக்கோம். அம்மா அப்பா எல்லாரும் வேற ரூம்ல இருக்காங்க. இந்த ஹால பார்க்கவே ஜெர்க்காகுது. ஆனாலும் இந்த ஃபீல் நல்லா இருக்கு. நல்லா பாடுவேன். நீங்களும் விஷ் பண்ணுங்க" என்று வாழ்த்தையும் வாங்கிக் கொண்டவள் அழைப்பைத் துண்டித்து அலைபேசியை அணைத்து வைத்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களை மேடைக்கு அழைக்க ஒவ்வொருவராக ஒவ்வொரு பாட்டுப் பாடினர்.
மேடையில் ஏறி நின்றவள் நடுவர்களைத் தான் முதலில் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தவன் அப்போது வரை வராமல் இருக்க ஏதோ ஒரு ஏமாற்றம் மனதில் எழுந்தது.
புன்னகையுடன் நின்றவளின் கண்களில் ஒரு நொடி வந்து போன அந்த பாவனையை; தன் வீட்டிலிருந்து நேரலையில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் கவனித்துவிட்டாள்.
"என்ன பண்ற ஆண்டாள்? உன் கவனம் எங்க போகுது. பாட்டுல மட்டும் கவனம் வை, வேற எதையும் இந்த நேரம் யோசிக்காத" என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள்.
தான் கூறுவது மேடையில் நிற்பவளை சென்று சேரும் என்று நினைத்தாளோ!
மேடையில் நின்றவளை பாடச் சொல்லி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இருவரும் கூற, அழகாக பாடி முடித்துவிட்டு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள்.
அடுத்தடுத்து பாடல்களும், நடனங்களும் அரங்கேறிய வண்ணமிருக்க இவர்களுக்கு இடைவேளையும் அடுத்த பாடலைப் பாடுவதற்கான தயார் செய்து கொள்ள நேரமும் கொடுக்கப்பட்டது.
அடுத்து முதலாவதாக மேடை ஏறிவளை ஏமாற்றாது அவள் எதிர்பார்த்தவன் நடுவர்களுக்கான இடத்தில் மற்றவர்களுடன் அமர்ந்திருந்தான்.
மனது துள்ளிக் குதிக்க, தான் பாட வந்த பாடலை அருமையாக பாட ஆரம்பித்தாள் ஆண்டாள்.
"யாருமில்லா தனி அரங்கில்.." என்று அவள் பாட ஆரம்பிக்க அந்த அரங்கமே அவள் குரலில் கட்டுண்டு இருந்தது.
பாடி முடித்ததும் அரங்கமே அதிர கரவொலி கேட்டது.
அவளது பெற்றோர் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நடுவர்களினதும் நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்களினதும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாகவே மேடையை விட்டு இறங்கினாள்.
அடுத்தடுத்து பாடகர்கள் பாடி முடித்து நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தில் வந்து நின்றது.
நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவரும் மேடைக்கு வந்து நிற்க அடுத்ததாக இறுதிப் போட்டியாளர்கள் ஆறு பேரும் வந்து நின்றார்கள்.
ஐந்தாவது, நான்காவது இடத்தில் இந்தவர்களை அறிவித்து முடிய ஆண்டாளுக்குள் ஏகத்துக்கும் கலக்கம்.
நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் அவளை வாழ்த்தி இருந்தாலும் முதல் முறை வாய்ப்பை இழந்தவள் இம்முறை என்ன செய்துவிடப் போகிறாள் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருந்தார்களே!
இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியதே வெற்றி தான் என நேர்மறையாக பலர் கூறினாலும், ஆறு பேரில் ஒருத்தியாக நின்று உன்னால் வெற்றி பெற முடியவில்லையே எனக் கூறி அவளை குட்டிக் குனிய வைக்கவும், குறுக வைக்கவும் ஆட்கள் இருந்தனரே!
அவர்களை நினைத்துத் தானே அவள் பயந்தது.
அடுத்ததாக மூன்றாவது இடம்!
அறிவிப்பைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஒரு பாடகி ஆண்டாள் என்ற பெயரை உச்சரிக்க, உறைந்து நின்றாள் அவள்.
முகம் மகிழ்ச்சியில் மலர கண்கள் கலங்கி என்னவென்று சொல்ல முடியாத ஒருநிலையில் நின்றவளை அவளுக்கு அருகே நின்ற சக போட்டியாளர்கள் அணைத்துக் கொண்டனர்.
நடுவராக இருந்த பாடகன் கதிர் வாழ்த்துக் கூறி அவளுக்கான பதக்கத்தை அணிவித்து விட வெற்றிக் கோப்பை, சான்றிதழ், பணப் பரிசுக்கான சான்றிதழ் என அடுத்தடுத்து அவளது கைகளை நிறைத்தன.
அடுத்து முதலாவது இரண்டாவது இடங்களைப் பிடித்த போட்டியாளர்களை அறிவித்து அவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
போட்டியாளர்கள், அவர்களுடன் வந்தவர்கள், நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் இரவுணவு தயார் நிலையில் இருக்க அனைவரும் அங்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் அருகே சென்று நின்றாள் ஆண்டாள்.
"ஜெயிச்சுட்ட ஆண்டாள். இப்போ சந்தோஷமா? இந்த முடிவு வரும் வரை உன் முகத்தை பார்க்கணுமே" என்று கிண்டல் செய்தவளை முறைத்தவள் அதைத் தொடர முடியாமல் சிரித்துவிட்டு,
"தாரா க்கா எனக்கு ஒரு ஹெல்ப்" என்றாள் பெரும் தயக்கத்துடன்.
"என்னடா?"
"அது.. அது வந்து. நம்ம கதிர் சார் கிட்ட பேசணும்"
"ஆண்டாள்..?" என்றாள் கேள்வியாக.
எதற்காக அவனுடன் பேசக் கேட்கிறாள் என்ற கேள்வி தாராவின் மனதில். சினிமா வாய்ப்புக்காக ஏதாவது பேச நினைக்கிறாளோ என்ற எண்ணம் வேறு வர அதை அப்படியே ஆண்டாளிடம் கேட்க,
"அச்சோ அக்கா நீங்க வேற. எனக்கு இதுவே போதும் சினிமா வாய்ப்பெல்லாம் வேண்டவே வேண்டாம். எனக்கு கதிர் சார் ஆட்டோகிராஃப் வேணும். நான் பேசணும்னு இல்லை. நீங்க எனக்காக வாங்கிட்டு வந்து கொடுக்குறீங்களா?" என்றாள் கெஞ்சலாக.
"அட இவ்வளவு தானா? நான் வாங்கிட்டு வரேன்"
"நான் க்ரீட்டிங் கார்ட் ஒன்னு தரேன் அதுல வாங்கிட்டு வாங்க அக்கா" என்று மகிழ்ச்சியுடன் கூறியவள் தன் அன்னையிடம் சென்று ஏற்கனவே கொடுத்து வைத்திருந்ததை வாங்கி வந்தாள்.
தாரா கதிரிடம் சென்று நின்று விடயத்தைக் கூற தாராவை விட்டு ஆண்டாளைத் தொட்டது அவனது பார்வை.
சற்று தூரத்தில் நின்று அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தவள் கதிர் தன்னைப் பார்ப்பதைக் கண்டு,
"அச்சோ பார்க்குறாரே, பார்க்குறாரே! ஆட்டோகிராஃப் கொடுக்க முடியாதுன்னு சொல்லிடுவாரோ?" என்று முணுமுணுக்க,
கதிர் தலையசைத்து ஆண்டாளை தன்னருகே அழைத்தான்.
தன்னையா அழைக்கிறான் என்று திரும்பி சுற்றிலும் பார்த்தவள் தாராவும் சேர்ந்து அழைக்க தயங்கிக் கொண்டே சென்றாள்.
"உனக்கு எதுக்கு என்னோட ஆட்டோகிராஃப்னு கேட்பாரோ? ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்லை. கதிர் சார் ரொம்ப நல்லவர். ரொம்ப கைண்ட் பெர்சன்" என்று கேள்வியும் கேட்டு பதிலும் கூறிக்கொண்டே அவர்களருகே சென்று நின்றாள்.
"கங்கிராட்ஸ் ஆண்டாள்" என்றே கதிர் ஆரம்பிக்க,
"தேங்க்யூ சார்"
என்றவள் அவள் கொடுத்தனுப்பிய வாழ்த்து அட்டையையும் அவனையும் மாறி மாறிப் பார்த்து,
"என் அக்காவுக்காக தான் ஆட்டோகிராஃப் கேட்டேன். அவங்க உங்க பெரிய ஃபேன். அவங்க பேர் போட்டே சைன் பண்றீங்களா?" என்றாள்.
"ஓ.. சூர். அவங்க நேம்?"
"தியா.. சந்தியா!"
என்றதைக் கேட்டவன் கண்கள் இடுங்கின.
ஏற்கனவே ஆண்டாளின் ஊரை அறிந்திருந்தவன், சந்தியாவைக் கண்டு கொண்டான்.
"சந்தியா ஸ்ரீ. அம் ஐ ரைட்?" என்று அவன் கேட்டதில் ஆச்சரியமாக விழி விரியப் பார்த்தாள் ஆண்டாள்.
"ஆமா சார்! உங்களுக்கு எப்படி..?"
"அவ என் ஃப்ரண்ட் தான். ஒரே ஊர், ஒரே ஸ்கூல். ஸ்கூல் படிக்கும் போது தான் அவங்க அப்பா இறந்து, அவங்க அந்த ஊரை விட்டுட்டு பாட்டி வீட்டுக்கு போய்ட்டாங்க. நான் ஸ்கூல் முடிய காலேஜ் போய் பாட்டு, சினிமா வாய்ப்புன்னு லைஃபே மாறிப் போய்டுச்சு. இந்த இடைவெளில ஒவ்வொரு திசையிலயும் போய்ட்டோம். அவளை ஞாபகம் வந்தாலும் மீட் பண்ணனும்னு நினைச்சாலும் அதுக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை, நான் அமைச்சுக்கல்லைன்னு கூட சொல்லலாம். அவ ஃபோன் நம்பர் கொடுக்குறியா? நான் பேசணும்" என்றான் கதிர்.
"எங்க பக்கத்து வீடு தான் அவங்க. எனக்கு சொந்த அக்கா போல, எனக்கு எல்லாமே அவங்க தான். என்னை இங்க வரை அனுப்பினது, இன்னைக்கு நான் ஜெயிச்சதே அவங்களால தான் சார். உங்க பாட்டுன்னா அவ்வளவு பிடிக்கும். உங்க வீடியோ, குட்டி குட்டி ரீல்ஸ் எல்லாம் சேவ் பண்ணி வெச்சு பார்த்துட்டே இருப்பாங்க. நான் கூட கிண்டல் பண்ணுவேன்" என்றவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொள்ள, மிதமான சிரிப்பு கதிரிடம்.
"என்ன சொல்லி கிண்டல் பண்ணுவ?"
"நீங்க அவங்களோட க்ரஷ்னு சொல்லி.. சாரி சார். அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க. உங்களைப் பார்த்தா ஒரு எனர்ஜின்னு சொல்லுவாங்க. அதான் நானும் கிண்டல் பண்ணுவேன். ஆனா பாருங்க இப்போ நீங்க சொன்னத இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட அக்கா சொல்லவே இல்லை. நீங்க பெரிய இடம்னு சொல்லாம விட்டாங்க போல" என்றாள்.
"அவளுக்கும் பாடுறதுல ஆர்வம் இருந்தது. ஆனா அவங்க வீட்டுல சப்போர்ட் இல்லை. மேடை ஏறி பாடுறத அவங்க யாரும் விரும்பல்லை அதான் உன்னை திரி தூண்டி விட்டிருக்கா"
"ம்ம்.. அதை சொல்லி இருக்காங்க. நான் இங்க வந்து பாடணும், ஜெயிக்கணும், அவங்களுக்கு கிடைக்காதது எனக்கு கிடைக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க.
அப்படி ஜெயிச்சா அன்னைக்கு என் சார்பா உங்க ஆட்டோகிராஃப் வாங்கிட்டு போய் கொடுக்கணும்னு நானும் நினைச்சிட்டே இருந்தேன். அவங்களுக்கு கொடுக்க இதைவிட பெரிய கிஃப்ட் வேற எதுவும் இல்லை. ரொம்ப சந்தோஷப்படுவாங்க அதான் இன்னைக்கு வாங்கலாம்னு. அதுவும் நீங்க இன்னைக்கு வர மாட்டீங்களோன்னு நினைச்சேன் சார்" என்றாள் படபடவென்று.
"இன்னைக்கு வேற ஒரு வேலையும் இருந்தது அது முடிய தான் இங்க வந்தேன். நல்லதா போச்சு இல்லைன்னா உன் அக்காவை பற்றி தெரியாம போய் இருக்கும். ஆமா இத்தனை நாள்ல ஒரு தடவை உன் அக்காவை பற்றி சொல்லி என்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கி இருக்கலாமே?"
"உங்க ஆட்டோகிராஃபுக்கு முன்ன என்னோட வெற்றிய அக்காவுக்கு கொடுக்க நினைச்சேன் சார். அப்போ தான் நிறைவான சந்தோஷமா இருக்கும்னு நினைச்சிட்டேன் சார். அதான் எப்படியாவது ஜெயிச்சுட்டு தான் ஆட்டோகிராஃப் வாங்கணும்னு எனக்கு நானே ஒரு கண்டிஷன் போட்டு வெச்சிருந்தேன்"
"இன்னைக்கு நான் வராம இருந்திருந்தா?"
"சோகமே சோகம்னு கிளம்பி போய் இருப்பேன். வேற என்ன பண்றது சார்?"
என்றாள்.
இவர்கள் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் தாரா அங்கிருந்து சென்றிருக்க அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு விடைபெற்றனர்.
அடுத்த நாள் விடியல் பொழுதில் ஊரை வந்து சேர்ந்திருந்த ஆண்டாளுக்கு வரவேற்பெல்லாம் முடிய
சந்தியாவைத் தனியாக இழுத்துக் கொண்டு வந்தாள்.
"உங்களுக்கு ஒரு கிஃப்ட் இருக்கு" என்று கூறி கதிர் கையொப்பமிட்ட வாழ்த்தட்டையைக் கொடுத்தவள் அவனுக்கு அழைப்பெடுத்து அலைபேசியை சந்தியாவின் காதில் வைத்தாள்.
"உங்களுக்கு டபுள் டமாக்கா அக்கா. என் வெற்றியோட சேர்த்து உங்க ஃப்ரெண்ட்டை உங்க கூட சேர்த்து வெச்சுட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு பெருசா ஏதாவது கிஃப்ட் கொடுக்கணும் சொல்லிட்டேன்" என்ற குரல் மறுமுனையில் இருந்த கதிரையும் அடைந்தது.
"நான் அவளுக்கு நல்லது பண்ண நினைச்சேன். எனக்குக் கிடைக்காத வாய்ப்பும் அங்கீகாரமும் அவளுக்கு கிடைக்கணும்னு நினைச்சேன். கடவுள் எனக்கு அதை விட பெருசா கொடுத்துட்டார் கதிர். மறுபடியும் உன்கிட்ட பேசக் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. இவ இப்படி உன்கிட்ட வந்து எல்லாம் சொல்லுவான்னு கூட நான் நினைக்கல்லை" என்றவள் குரல் ஏகத்துக்கும் நெகிழ்ந்து கலங்கி இருந்தது.
அவனது இசைப் பயணத்தையும் ஒரு காரணமாகக் கொண்டு முறிந்திருந்த நட்பு,
ஆண்டாளின் இசைப் பயணத்தால் மீண்டும் துளிர்த்தது.