இருட்டில் கண்ணுக்கு ஒன்றும் புலப்படாதலால் இருவரும் கைகளை பிடித்துக்கொண்டு அங்கிருந்த சுவற்றை பற்றியபடியே நடந்தனர். அவர்களின் கண்களில் உயிரின் பயம் நன்கு தெரிந்தது.
அவ்வளவு நேரம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடியதால் இருவரும் வியர்வையில் குளித்திருந்தனர். அவர்கள் இருவரும் வேறு யாருமில்லை, நம் நண்பர்கள் கூட்டத்துடன் பயணம் செய்த மாலுமிகள் தான்.
ரிச்சர்ட், “மார்ட்டின், விக்டர் அப்புறம் நம்ம கூட வந்தவங்க யாரையுமே காணோம். நம்ம இடத்துக்கு எப்படி அந்த முதலைகள் வந்தது? அதுவும் நம்ம கண்ணு முன்னாடியே அலெக்ஸை..” என்று ஆரம்பித்த ரிச்சார்ட் தொடைக்குழி ஏறி இறங்க நிறுத்தினான். அவனின் கையை பற்றி அருகிலிருந்த படிக்கட்டில் அமரவைத்த டேனியல், தானும் அவனுடன் அமர்ந்தான்.
இரவுணவை முடித்த டேனியல், அலெக்ஸ் மற்றும் ரிச்சார்ட் மூவரும் படுக்கையறைக்கு வந்தனர். அந்நேரம் எதிர்பாராமல் ‘சமுத்திரா’ விளையாட்டினால் அந்த கப்பலிற்கு வந்த முதலை அவர்களை தாக்கியது. அதில் துரதிஷ்டவசமாக அந்த ராட்சச முதலையிடம் சிக்கிய அலெக்ஸ் தப்பிக்க போராடி உயிரிழந்தார்.
நண்பனை காப்பாற்ற முயன்ற இருவரின் கண்முன்னே அந்த கோர சம்பவம் நிகழ பரிதவித்தனர். அந்நேரம் மீண்டும் முதலை அவர்களிடம் வர, அங்கிருந்து தப்பித்து வேறொரு தளத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு தான் அங்கு வந்து பார்த்துவிட்டு மேலே வந்தான் விக்டர்.
அனைத்தையும் நினைத்து கலங்கிய மனத்தை சமன் செய்த டேனியல், “எனக்கும் ஒண்ணுமே புரியல ரிச்சார்ட். கப்பலுக்குள்ள யாரையும் காணோம். இவ்வளவு நேரம் எரிஞ்சிக்கிட்டு இருந்த விளக்கு எல்லாமே இப்ப மொத்தமா திடீர்னு அணைஞ்சிடுச்சி. இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல..” என இருளில் மூழ்கியிருந்த இடத்தை சுற்றியும் பார்த்துக்கொண்டே கூறினான் டேனியல்.
“நாம இப்ப இரண்டாவது தளத்துல இருக்கோம். எப்படியாவது அப்பர் டெக்(மேல் தளம்) போகலாம். அந்த பிரெண்ட்ஸ் கேங் அங்க இருக்க வாய்ப்பிருக்கு” என ரிச்சார்ட் சொன்னதும், “முதல்ல நமக்கு வெளிச்சம் வேணும். இந்த இருட்டுல உன்னோட முகம் கூட சரியா தெரியல.. இதுல எங்க ஐந்தாவது தளத்துக்கு போறது? இந்த இருட்டுல நாம மறுபடி அந்த முதலை கிட்ட மாட்டிக்கிட்டா?” என்ற டேனியலின் உடல் பயத்தில் நடுங்கியது.
“மேல இருக்க மாதிரியே இங்க கீழேயும் ஒரு ஜெனரேட்டர் ரூம் இருக்கு. நாம எப்படியாவது அங்க போய் லைட்ஸ் ஆன் பண்ணிட்டு மேல போகலாம்” என ரிச்சார்ட், நடுங்கி கொண்டிருந்த டேனியலை சமாதான படுத்தினான்.
கடற்கொள்ளையர்களிடம் அகப்பட கூடாது என விளக்கினை அணைத்து வைத்திருந்தனர் நண்பர்கள் கூட்டம். ஆனால், அதை பற்றி அறியாத இவர்கள் இருவரும் இப்பொழுது அதனை உயிர்ப்பிக்க கீழ் தளத்திற்கு செல்ல தொடங்கினர்.
**********
மேலே, சக்தி பகடையை உருட்டி முடித்தவுடன் வட்டமாக அமர்ந்திருந்த நண்பர்களின் கூட்டத்திடம், “அதான் போட்டாச்சே என்ன வந்திருக்கனு பாருங்க..” என மார்ட்டின் வலியுறுத்தினார்.
“வருகை தருவாள் இந்திரலோகத்து
சுந்தரி!
வினைத்தீர்க்கும் வஞ்சியுமவளே..”
என்று குமிழில் மின்னிய எழுத்துக்களை சக்தியின் கைபேசியில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் படித்தனர் விலோவும் ப்ரதீப்பும்.
அதனை கேட்டபடியே, “இந்திர லோகத்துல இருந்து அழகி வர போறா போல. ப்ரதீப் உனக்கு ஜாலி தான் டா..” என்று ரங்கா கிண்டலாக சொன்னான். அதற்கு முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி ஈயென சிரித்த ப்ரதீப், “ஆனா, ஏதோ வினைன்னு வேற போட்டிருக்கே?” என்று முழித்தான்.
“ஆமா டா உனக்கு செய்வினை வைக்க வர போகுது போல.. உஷாரா இரு” என்று விலோ அவனை வாரினாள்.
“அட அப்ரசன்டீங்களா வினைனா, செயல்னு அர்த்தம். அது எதையோ செய்ய வருது போல” என்ற அமரன் யோசனையுடன் தாடையை தடவினான் “ஹம்க்கும். வேற என்ன? நம்மள தான் வெச்சி செய்ய வருதுன்னு சொல்லு” என ப்ரதீப் அலுப்புடன் சொன்னான்.
‘யார் வர போகிறார்? எப்படி வர போகிறார்?’ என அனைவரும் அங்குமிங்கும் சுற்றி பார்த்தனர். ஆனால், அந்த கப்பலில் எந்த ஒரு மாற்றமும் அந்த இருளில் அவர்களுக்கு தென்படவில்லை.
“எனக்கு ஒரு ஐடியா தோணுது” என்ற விலோ, “நாம எல்லாரும் டக்கு டக்குனு ஒரு ஒருத்தரா மாத்தி மாத்தி போட்டு கேமை முடிச்சா எப்படி இருக்கும்?” என அனைவரையும் பார்த்தாள்.
“ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனா, ஒரே நேரத்துல எல்லாமே கிளம்பிடுச்சின்னா என்ன பண்ணுறது? நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் கூட பண்ண முடியாதே..” என்று ஷிவன்யா சொல்ல, “அதுவும் சரிதான் ஷிவ்” என விலோ ஒப்புக்கொண்டாள்.
அந்நேரம் அவர்களின் அருகே உள்ள நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரில் சலசலப்பு சத்தம் வந்தது. “ரைட்டு. அடுத்தது கிளம்பிடுச்சு!” என ப்ரதீப் கூறியதும் சக்தி அவனின் கைபேசியை நீச்சல் குளத்தின் பக்கம் திருப்பினான். அந்த கைபேசியின் வெளிச்சத்தில் நீச்சல் குளத்தை தான் அனைவரும் கவனித்தனர்.
காற்று சுழற்றியடிக்க அந்த நீச்சல் குளத்தின் மையத்திலிருந்து அப்சரஸ் போன்று ஒரு பெண் மெல்ல மேலே எழும்பினாள். அவளின் மேல்பாதியான இடுப்புவரை மட்டும் வெளியே வர கீழ்பாதி உடல் தண்ணீரில் இருந்தபடி நீந்தியே நீச்சல்குளத்தின் கரைக்கு வரதொடங்கினாள்.
அவளின் அழகில் நண்பர்கள் கூட்டம் மட்டுமில்லாமல் இரு மாலுமிகளும் அவளை மெய்மறந்து பார்த்தனர். பிரம்மா அவளை படைக்கும் பொழுது மிகுந்த சந்தோஷத்தில் இருந்திருப்பார் போல், அந்த ரதியே அந்த கப்பலிற்கு வருகை தந்தது போன்று அழகில் மிளிர்ந்தாள் பாவை. ஊதா நிற உடை கச்சிதமாய் அவளின் உடலோடு பொருந்தியிருக்க அவளின் வளைவு நெளிவுகளை கண்ணுக்கு உறுத்தாதவாறு அழகாக எடுத்துக்காட்டியது.
அந்த இருண்ட வானத்தில் இல்லாத பிறை தான் அவளின் நெற்றியோ என்று சிந்திக்கும் வண்ணம் அமைந்திருந்தது பெண்ணவளின் நூதல். அதற்கு கீழ் நீண்ட கூர் நாசி; அதற்கு கீழ் வசீகரமான சின்ன சிவந்த இதழ்கள் என அனைவரையும் சுண்டியிலுக்கும் அழகுடன் மெல்ல நீச்சல் குளத்தில் இருந்து நீந்தி மேலேறினாள்.
அனைவரும் கண்ணைக்கூட சிமிட்டாமல் அவளின் அசைவுகளை தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். “என்னா பொண்ணு டா! எவ்ளோ அழகா இருக்கா..” என ப்ரதீப் வாயை பிளந்தான். ஆடவர் மட்டுமின்றி பெண்களும் அதிசயித்து தான் அவளை பார்த்தனர்.
மேலேறியவளின் கூந்தல் மயில் தோகைப்போல் அவளின் முதுகில் பரவி படர்ந்தது. அவளின் முகத்தில் இருந்த ஈரம் சொட்டு சொட்டாய் வெண்சங்கு போல் இருந்த கழுத்தில் பயணித்தது. கழுத்தின் கீழ் தாராளமாக அமைந்திருந்த செழுமைகள் என செழித்து காணப்பட்டால் சுந்தரியவள். அதனை கடந்து இறங்கினால், ‘உடுக்கை போன்ற இடை’ என்ற அடைமொழிக்கு சொந்தகாரியாக இருப்பாளோ என்று ஐயம் கொள்ளும் வகை மெலிந்து வலைந்திருந்தது மங்கையவளின் இடை.
அதுவரை அவளின் தலை முதல் இடைவரை ரசித்து பார்த்த கண்கள் இடுப்பின் கீழ்பாகத்தை பார்த்ததும் சற்றே அதிர்ச்சி அடைந்தது.
ஏனெனில், வந்திருந்தவளிற்கு மேல் பாதி உடல் பெண்ணின் தோற்றத்தையும், கீழ் பாதி உடல் செதில்கள் நிறைந்த மீனின் தோற்றத்தையும் பெற்றிருந்தது. ஆக, கடற்கன்னி தான் நீச்சல் குளத்தில் இருந்து மேலெழுந்து அவர்களுக்கு தரிசனம் கொடுத்தாள்.
“கடற்கன்னியை தான் இந்துரலோகத்து சுந்தரினு சொல்லிருக்காங்க போல..” என்ற சக்தி சொன்னான்.
“கடற்கன்னிலம் உண்மையாவே இருக்காங்களா?” - விலோ.
“இங்க நடக்குற எதையும் நம்பவே முடியல. அதுல இதுவும் ஒன்னு” என்ற ஷிவன்யா பார்வையாலே கடற்கன்னியை எடைபோட்டாள்.
“எவ்ளோ அழகா இருக்காங்கல? அப்படியே ஏஞ்சல் மாதிரி..” என ப்ரதீப் மீண்டும் வாயை பிளந்தான். “போதும் வாய மூடு. இல்ல வாய்க்குள்ள ஏதாவது போய்ட போகுது..” என விலோ சொல்ல, “உனக்கு பொறாமை! உன்னைவிட அவ அழகா இருக்கானு..” என ப்ரதீப் சொல்ல அனைவரும் சிரித்தனர்.
ஆளை விழுங்கும் வண்ணம் அமைந்திருந்த கடற்கன்னியின் நீலநிற விழிகளோ வந்ததில் இருந்து ரங்கராஜிடம் மட்டுமே மையம் கொண்டிருந்தது. அதற்கே விலோ அந்த கடற்கன்னியை இப்பொழுது முறைக்க தொடங்கிவிட்டாள்.
“யார் அது கிட்ட போய் பேச போறது? அவங்க வேற எதுக்கு வந்திருக்காங்கனு தெரியலையே..” என்று அனைவரின் முகத்தையும் கேள்வியுடன் பார்த்தாள் ஷிவன்யா.
“வேற யாரு ப்ரதீப் தான்..” - அமரன்.
“டேய் நான் தூரத்துல இருந்தே பார்த்துகிறேன் டா. அது கிட்ட போய் கண்டிப்பா பேசனுமா என்ன?” என பின்வாங்கினான் ப்ரதீப்.
“ஆமா டா. ஏதோ வினைன்னு வேற போட்டிருக்கு. போய் எதுக்கு வந்திருக்குன்னு யாராவது கேட்கணும் தான?” என சக்தி சொல்ல, “அதுக்கு தமிழ் தெரியலான?” என ப்ரதீப் மேலும் சந்தேகம் கேட்க, “நீ சொல்லிக்கொடு..” என்று விலோ அவனின் முதுகில் கைவைத்து தள்ளினாள்.
ப்ரதீப், ரங்காவின் கரத்தையும் பற்றிக்கொண்டே கடற்கன்னியிடம் சென்றான். “ஐயோ! இவனை எதுக்கு அவகிட்ட கூட்டிட்டு போற?” என்று கத்திக்கொண்டே விலோவும் அவர்களின் பின்னே கடற்கன்னியிடம் சென்றாள். பின், சக்தி, ஷிவன்யா மற்றும் அமரனும் அவர்களை தொடர்ந்துச் சென்றனர்.
அவர்களின் வருகையை உணர்ந்தாலும் அந்த நீலவிழி நங்கையவள் ரங்கராஜை தான் குறிப்பாய் பார்த்தாள். காரிருளில் பிரகாசமாக ஒளிர்ந்துக் கொண்டிருந்தவளை பார்த்தபடியே, “இந்தாம்மா பொண்ணு! கடற்கன்னி! ஏஞ்சல்!” என்று அவளை பலப்பெயர்களில் அழைத்த ப்ரதீப், “நீ பார்க்கிறவனுக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம். அவக்கூட பக்கத்துல தான் உன்ன பார்வையாலே எரிச்சிட்டு இருக்கா..” என்றவன் விலோவை பார்த்து சிரித்தான்.
“டேய் வாய மூடுடா. விலோ வேற என்னை முறைக்கிற..” என ரங்கா சொன்னதும், “நீயெல்லாம் போலீஸ்னு வெளிய சொல்லிகாத..” என்ற ப்ரதீப் மீண்டும் கடற்கன்னியிடம் திரும்பினான்.
அப்பொழுது தான் அந்த கடற்கன்னி அவனை பார்த்து ஸ்நேகமாக சிரித்தாள். ‘ஒருவழியா நம்மள பார்த்தாலே..’ என மனதிற்குள் நினைத்த ப்ரதீப், “ஹாய்!” என ஸ்டைலாக கையை நீட்டினான்.
கடற்கன்னி எதுவும் கூறாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை இங்கிலீஷ் தெரியாதோ..’ என யோசித்துக்கொண்டே, “வணக்கம்!” என்றான். “வணக்கம்” என்று மதுரமான குரலில் அவளும் பதில் மொழிந்தாள்.
“டேய். அதுக்கு தமிழ் தெரியும் போல டா” என ரங்காவிடம் சொல்லிவிட்டு, “உங்க நேம். அதாவது பெயர் என்ன?” என்றான் ப்ரதீப். “என்னுடைய பெயர் சௌந்தர்யம்” என கிளிப்பிள்ளையாய் சொன்னாள் கடற்கன்னி.
தலையில் இருந்த க்ரிடத்தில் பதிக்கப்பட்டிருந்த விலைமதிப்பில்லாத கற்கள், மற்றும் கையிலும், கழுத்திலும் அரியவகை கற்களாலும் முத்துகளாலும் செய்யப்பட்டிருந்த அணிகலன்களை அணிந்திருந்தவளை ஒருமுறை பார்த்த ப்ரதீப், “பார்த்தாலே தெரியுது. ரொம்ப சௌந்தர்யம் தான்” என்றவன், “நீங்க இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என மீண்டும் கேள்வி எழுப்பினான்.
“என்னை இங்கு செல்லுமாறு கட்டளை வந்தது. உடனே நொடியும் தாமதியாமல் இங்கு வந்துவிட்டேன்”
“ஓ. யார் உங்களுக்கு கட்டளையிட்டது?” என இம்முறை கேள்வி ரங்காவிடமிருந்து வந்தது.
“அதை கூற எனக்கு அனுமதி இல்லையே!” என அறியா பிள்ளைபோல் முகத்தை வைத்தபடி சொன்னாள் சௌந்தர்யம்.
‘யார் போக சொன்னது? யார் அனுமதி கொடுக்கணும்?’ என்று தோன்றினாலும், “சரி. இங்கயிருந்து எப்ப போவீங்க?” என மீண்டும் ரங்கா கேட்டான்.
“நான், இங்கு முடிக்க வேண்டிய செயல்கள் சில உள்ளது. அதனை முடிக்காமல் என்னால் இங்கிருந்து செல்ல இயலாது” என கடற்கன்னி சொன்னாள்.
அதுவரை அவர்களின் பேச்சுக்களை கைகளை கட்டியபடி கேட்டுக் கொண்டிருந்த ஷிவன்யா, “உங்களுக்கு எதுவும் சந்தேகமா தெரியலையா?” என்று அருகில் இருந்த அமரனின் காதை கடித்தாள். ஆனால் அவளின் மற்றொருப்பக்கம் நின்றிருந்த சக்திக்கும் அது தெளிவாக கேட்க, “என்ன சந்தேகம்?” என கேட்டான்.
“இந்த கடற்கன்னி எதையோ பொடி வெச்சி பேசுற மாதிரி இருக்கு. அதுவும் அதோட பார்வை..” என ஷிவன்யா கடற்கன்னியை பற்றி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, அந்த கடற்கன்னி ஷிவன்யாவையும் சக்தியையும் ஆழ்ந்து பார்த்தது. அதில் ஷிவன்யாவின் முதுகு தண்டே சில்லிட்டது.
கடற்கன்னியின் பார்வையை கவனித்த அமரன் ஷிவன்யாவின் கரத்தை பற்றியபடி, “அது கிட்ட போகலாம்” என சக்தியையும் அழைத்து சென்றான்.
“நீங்க இங்க எதையோ செய்ய வந்திருக்கீங்க. அப்ப இங்க என்ன நடக்க போகுதுன்னு உங்களுக்கு தெரியும் தான?” என்ற ரங்காவின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் அமைதியையே கடைபிடித்தது கடற்கன்னி.
“நான் தான் சொல்லுறனே.. இது எதையோ நம்மகிட்ட இருந்து மறைக்குது!” என ஷிவன்யா இம்முறை சத்தமாகவே கூறினாள். “அட நீ எந்த மேக்? அது எவ்ளோ அழகா வந்து உட்கார்ந்திருக்கு. அதை பார்த்து இப்படி குறை சொல்லிட்டு இருக்க?” என்று ப்ரதீப் கூறியதும் தீயாய் அவனை முறைத்தாள்.
“அமைதியா இருங்க!” என இருவரையும் அடக்கிய அமர், “எங்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லுங்க. நாங்க இந்த விளையாட்டை முடிப்போமா? எங்க உலகத்துக்கு திரும்பி போவோமா?” என்று சௌந்தர்யத்திடம் கேட்டான்.
அனைவரையும் ஒருநொடி கூர்ந்து நோக்கியவள் கண்ணை ஒரு நொடி மூடி திறந்தாள். பின், “நீங்கள் மேற்கொண்ட காரியம் சிரியதல்ல. உங்களது பயணத்தில் இடர்கள் பல காத்திருக்கிறது..” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, “ஏதே! இதுக்கும் மேலயா?” என ப்ரதீப் அதிர்ந்து கத்தினான்.
அதில் அவனை கூர்மையாக பார்த்த கடற்கன்னி, “இதுவரை நீங்கள் விளையாட்டின் ஆரம்ப கட்டத்தை மட்டும் தான் தாண்டியிருக்கிறீர்கள். இன்னும் இருக்கிறதே..” என கூறிவிட்டு மீண்டும் அமைதியானாள்.
“நாங்க முடிப்போமா இல்லையான்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?” என அமரன் விட்ட இடத்திற்கே வர,
பெருமூச்செடுத்து நிதானமடைந்த சௌந்தர்யம், “நேரத்தை வீணாக கடத்தாமல், அதனை உபயோகமாக பயன்படுத்த வேண்டும். வீணடிக்கும் நேரம் ஒவ்வொன்றும் ஆபத்துகளை நெருங்கும் மார்க்கமாக அமையும். மேலும், நீங்கள் செல்லும் வழியில் கவன சிதரல்களிடம் அகப்படாமல் சாதுரியமாக செயல்பட வேண்டும். உயிருக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் முன்னேறி கொண்டேயிருந்தால் நிச்சயம் இலக்கை அடைவீர்கள்” என சொல்லி முடித்துவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.
“என்ன டா. நம்ம ஊர்ல குறி சொல்லுறவங்க மாதிரி சொல்லுது..” என்று ப்ரதீப் மண்டையை சொரிந்தான். ‘உயிருக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க கூடாதா..’ என்ற எண்ணம் மட்டும் அனைவரின் மனதையும் வண்டாய் குடைந்தது.
“இப்போதைக்கு அவங்க சொன்னது எதுவும் சரியா புரிய போறது இல்லை. ஷிவ், நீ தான அடுத்து போடணும்?” என்று ராங்க வினவ, ‘ஆம்’ என்ற தலையசைப்புடன் சக்தியின் கையில் இருந்த பகடையை வாங்கிக்கொண்டாள்.
ஆட்டத்தின் முதல் சுற்று முடிந்திருந்தது. அதில் ஷிவன்யா, விலோ, ப்ரதீப், அமர், ராங்க, சக்தி என்ற வரிசையின் முறையே மூன்று, நான்கு, ஆறு, இரண்டு, ஐந்து, ஏழு என்ற கட்டத்தில் இருந்தனர். அடுத்த சுற்றை ஆட துவங்கினாள் ஷிவன்யா. அவளின் கரத்தில் இருந்து விழுந்த பகடையில் ஐந்து வர, ஏற்கனவே மூன்றில் இருந்த அவளின் நீல நிற காயின் இப்பொழுது எட்டில் சென்று நின்றது. வழக்கம் போல் நீர்குமிழில் எழுத்துக்கள் தோன்ற துவங்கியது.
"இடியின் ஓசை மிரளவைக்க..
புயலின் வேகம் கைகொடுக்க..
தூவலாக தோன்றி அடர்த்தியாய் வலுப்பெற்று,
மூழ்கவைக்கும் வல்லவனவன்!"
என்ற குறிப்பை வாசித்த ஷிவன்யா, “இடி, புயல், மழை எல்லாமே வர போகுது” என்றாள் அனைவரிடமும். “மழையா? நாம வேணா உள்ள போய்டலாமா?” என்று விலோ யோசனை சொன்னாள்.
“அது பாதுகாப்பு இல்லை விலோ! ஏற்கனவே அ..அலெக்ஸ் இறந்ததா விக்டர் சொன்னாரு. நாம உள்ள போய் மாட்டிக்கிட்டா கேமை முடிக்க முடியாம போய்ட போகுது..” என சக்தி அதனை மறுத்துவிட்டான்.
“சக்தி சொல்லுறது சரிதான். நாம இங்கயே இருக்கலாம். அதோ அங்க நீச்சல் குளத்துக்கு பக்கத்துல நிழற்குடை மாதிரி இருக்கே. அதுக்கு கீழ போய் நிற்கலாம்” என்று அமரன் சொன்னதும் பலம்வாய்ந்த இடியின் ஓசை அவர்களின் செவியை கிழித்தது.
அந்த குறிப்பில் போட்டிருப்பது போல் அந்த ஓசை அவர்களை மிரள தான் செய்தது. இடியின் ஓசை துவங்கிய நொடியே காற்றின் வேகமும் அதிகரிக்க பூந்தூரலாய் மழை பெய்ய தொடங்கியது.
“நாம இந்த பாய்களையெல்லாம் சுருட்டனும்..” என்று மார்ட்டின் அனைவரிடமும் வலியுறுத்தினார். “அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. மழை பெருசா வரதுக்குள்ள எல்லாரும் ஒடுங்க” என ப்ரதீப் கூறியதும்,
“டேய் லூசு. புயல் காத்துல இந்த பாய்மறக்கப்பல் காத்தோட திசைக்கு போகும் டா. அதுக்கு தான் மார்ட்டின் அப்படி சொல்றாரு..” என்ற அமரன் அங்கிருந்த பாயை சுருட்ட முயன்றான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் அனைத்து பாய்களையும் சுருட்டினர். அனைத்தையும் பார்த்தபடியே நீச்சல் குளத்தின் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள் கடற்கன்னியான சௌந்தர்யா.
அனைத்து பாய்களையும் சுருட்டிய அனைவரும் அந்த நீச்சல் குளத்தின் நிழற்குடையின் கீழ் சென்று நின்றனர். ஆனாலும் காற்றின் வேகத்தில் மழையின் சாரல் அனைவரையும் நனைத்துவிட்டது.
சிறிது நேரத்தில் சாரலாய் தோன்றிய மழை வலுத்து பேய்மழையாய் பொழிந்தது. அதில் ஏற்பட்ட குளிரில் அனைவரும் வெடவெடுத்து நின்றனர்.
“அங்க பாருங்க. அந்த கடற்கன்னி மட்டும் இந்த மழையில் கூட அப்படியே உட்கார்ந்திருக்கா” என்று குளிரில் நடுங்கியபடியே விலோ அவளை சுட்டிக்காட்டினாள். “அவங்க கடல்லையே இருந்ததால பழகிருக்கும் போல..” என ரங்கா சொன்னான்.
அந்நேரம் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து புயலாய் சீறியது. அலையின் உயரமும் ஆர்பரிப்பும் கூட அதிகரித்திருந்தது. அதன் விளைவால் கப்பல் பெண்டுலம் போல் ஆட்டம் காண தொடங்கியது. கப்பல் இங்கிட்டும் அங்கிட்டுமாக அடிக்கொண்டிருக்க, அதில் இருந்த அனைவரும் தவிக்க தொடங்கினர்.
“எல்லாரும் இந்த புயல் போற வரைக்கும் பத்திரமா எதையாவது கெட்டியா பிடிச்சிக்கோங்க..” என்ற அமரனின் கத்தல் ஓரளவு அனைவருக்கும் கேட்க, அருகில் இருந்த பாய்கள் அற்ற பாய்மரத்தை இறுக பற்றிக்கொண்டனர்.
அடுத்து வந்த பெரிய அலையில் கப்பல் ஒருபக்கமாக சாய கையின் பிடிமானத்தை விட்டுவிட்டான் சக்தி. காற்றும் அதனின் வேகத்தில் அவனை இழுத்துச்செல்ல சுருக்கியபடியே கப்பலின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு சறுக்க தொடங்கினான். “சக்தி!” என்ற குரல் காற்றில் காணாமல் போனது.
ஒரு மென் கரம் சக்தியின் கையை பற்றி அவனை மேலும் சறுக்க விடாமல் காப்பாற்றியது. மெல்ல நிமிர்ந்து யார் என்று சக்தி பார்க்க, ஆழ்ந்த பார்வையுடன் கடற்கன்னி சிரித்தாள்.
அதனை பார்த்த நண்பர்கள் கூட்டம் ஆசுவாசமடைந்தனர். “என்னமோ கடற்கன்னியை பற்றி தப்பு தப்பா சொன்ன? இப்ப பாரு ஏஞ்சல் மாதிரி அவதான் சக்தியை காப்பாத்திருக்கா..” என்று ப்ரதீப் ஷிவன்யாவை பார்த்து கூறினான்.
அத்துடன் புயல் அவர்களின் இடத்தை கடந்து செல்ல, அடித்துக்கொண்டிருந்த காற்றின் வேகம் மெல்ல குறைய தொடங்கியது. ஆனால் மழை மட்டும் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது. “இந்த மழை விடுற மாதிரி தெரியல. மேல இருக்க அவ்வளவு மழை தண்ணியும் கப்பலுக்குள்ள போகுது. இப்படியே போனா கப்பலே மூழ்கிடும் போல?" என்ற ரங்கா, "அடுத்து நீதான விலோ போடணும்?” என கேட்க, விலோ முழித்தாள்.
“நீ தான். உனக்கு அடுத்து தான் நான்..” என்ற ப்ரதீப் அவளின் காதின் அருகில் சென்று, “எதாவது தப்பு பண்ணியா? திருட்டு முழி முழிக்கிற?” என்றான். “நா..நான் எதுவும் பண்ணல..” என்று நடுங்கிக்கொண்டே அவனிடம் கூறினாள்.
“நீ போடு விலோ. அப்ப மழை விடுதான்னு பார்க்கலாம்” என்ற அமர், “அந்த போர்ட் எங்க?” என்றான்.
“இங்க தான் இருந்துச்சு” என்ற ஷிவன்யாவிற்கு இருட்டில் எதுவும் தெரியவில்லை. பின், சக்தியின் போன் வெளிச்சத்தில் அனைவரும் பார்க்க அவர்களின் கண்ணுக்கு அந்த சமுத்திரா பெட்டி அகப்படவில்லை.
“ஐயோ! அது இல்லனா எப்படி நாம கேமை முடிக்கிறது? எப்படி நம்ம உலகத்துக்கு போறது?” என்று ப்ரதீப் பதற, ஷிவன்யா மட்டும் அந்த கடற்கன்னியை சந்தேகமாக பார்த்தாள்.