எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நாம் கொண்ட சொந்தம் நெடுங்கால பந்தம்- கதை திரி

Anitha G

Moderator
ஆமாம், அவன் போக்கே சரியில்ல அகல்யா. மதியம் கூட சாப்பிட வரலை.

அவனுக்கு கால் பண்ணவா.

வேண்டாம் ஏற்கெனவே நான் பல முறை கால் பண்ணிட்டேன். எடுக்க மாட்டேங்கறான். எங்க இருக்கேன்னாவது சொல்லலாமில்ல. இல்லை வர லேட்டாகுமுன்னு சொன்னா கூட பரவாயில்லை.

விடும்மா அவன் வந்தா நான் என்னன்னு விசாரிக்கறேன்.

கேட்டா மட்டும் பதில் சொல்லவா போறான். எதிர்த்து பேசி சண்டை தான் போடுவான்.

வீணா வீட்டுக்குள்ள பிரச்சனை தான் வரும். உங்கப்பாவுக்கு தெரிஞ்சா வேற வினையே வேண்டாம். என்னதான் திட்டுவார்.

அதுக்காக அவன்கிட்ட எதுவும் கேக்காம இருக்க முடியாதேம்மா.

சரிதான் ஆனா கேட்டா பிரச்சனை பண்ணுவான். கேக்கவே பயமா இருக்கு.

அம்மா நான் அவன்கிட்ட பேசிக்கிறேன் கவலைப்படாத.

என்னமோ போ அவனும் ஓழுங்கா வேலைக்கு போனா உன்னோட சுமை பாதியா குறையுமில்ல. எத்தனை சொன்னாலும் அவனுக்கு புரியவே மாட்டேங்குது.

விடும்மா.

பின்ன யார் கையில் காலிலாவது விழுந்து ஒரு வேலைக்கு சேர்த்துவிட்டா அந்த வேலைக்கு ஒரு மாசம் கூட போறதில்லை.

ஒரு மாசத்துல எனக்கு இந்த வேலை பிடிக்கலை இனிமேல் நான் போக மாட்டேன்னு சொல்றான். இருபத்தி நாலு வயசு ஆகுது இன்னும் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை.

இந்த ஏரியா பசங்களோட சேர்ந்து ஊர் சுத்திக்கிட்டு தண்ணி அடிச்சுட்டு திரியறான்.

எனக்கு பல நேரம் சந்தேகமா இருக்கு இப்படி ஒரு பிள்ளையை நான் தான் பெத்தேனா என.

அம்மா அளவுக்கு அதிகமா நீ யோசிக்கற. அவனை சின்ன வயசில் இருந்தே ரொம்ப செல்லமா பார்த்து விட்டதால் அவனுக்கு வீட்டு கஷ்டம் புரியவே இல்ல.

கொஞ்ச நாள் ஆனால் எல்லாம் சரியாயிடும்.

எங்க சரியாகப் போறான். அவன் மட்டும் ஒழுங்கா வேலை வெட்டிக்கு போயிட்டு இருந்தா நீ வேலைக்கு போற காசை வச்சு உனக்கு சேர்த்து வைத்திருக்கலாம்.

உன்னோட சம்பளத்தை வைத்திருந்தா கூட ஏதாவது நகைநட்டு செய்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தா காலாகாலத்துல உனக்கும் கல்யாணமாகி கையில் ரெண்டு குழந்தை இருந்திருக்கும்.

ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கு தெரியுமா.

உன்னோட காசுல நாங்க எல்லாருமே வாழ்ந்துகிட்டு இருக்கோம். ஆனா உனக்கு எங்களால எதுவுமே சேர்த்து வைக்க முடியல. அப்பா சம்பளம் எதுக்கும் பத்த மாட்டேங்குது.

இதுல என்னோட மருத்துவ செலவு வேற.

இந்த பையன் இப்படி இருக்கான் நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா.

அம்மா ஏன் இப்படி எல்லாம் பேசுற உங்களுக்கெல்லாம் நான் செய்யாமல் வேற யார் செய்வா.

நீ பேசும் போது கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஆனால் ஒரு பொண்ணு பெத்தவளா ஒவ்வொரு நாளும் மனசு வருத்தமாக இருக்கு.

உன்ன மாதிரியே நல்ல புள்ளையா அவனையும் பெத்திருந்தா இந்நேரம் எனக்கும் எந்த கஷ்டமும் இல்லாம இருந்திருக்கும்.

ஆனா என்ன பண்றது எனக்கு தான் கொடுத்து வைக்கல. நாம சொல்ற எதையுமே அவன் கேட்கிறதில்லை.

பலநாள் அவனாலேயே எனக்கு உடம்பு சரியில்லாம போயிடுது.

அம்மா அதனாலதான் சொல்றேன் கண்டபடி யோசிக்காத. உன் உடம்பு தான் கெடும். இன்னைக்கு நாம எல்லாருமே சந்தோஷமா இருக்கோம் இதுதான் நிஜம் நாளைக்கு பற்றி யோசிக்காத.

நீதான சொல்லுவ அடிக்கடி அந்த மாதிரிதான். எனக்குன்னு ஒருத்தன் இனியா பிறக்கப் போறான். ஏற்கனவே பிறந்திருப்பான் அவனே என்னை தேடி வருவான் பாரு.

அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவுமில்லாம அம்மா இப்பதான் பொண்ணுங்களுக்கு முப்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்றது ரொம்ப சாதாரணமா போச்சு.

நீதான் என்னமோ பழங்காலம் மாதிரி உடனே பண்ணனும்னு நினைக்கிற.

அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது என் காலேஜ்ல படிச்ச நிறைய பிரெண்ட்ஸ்க்கு இன்னும் கல்யாணம் ஆகல.

எல்லாருமே ஏதாவது ஒரு விஷயத்தை சாதிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இருக்காங்க.

அவங்களுக்கு எல்லாம் பணம் இருக்கும்மா. அதனால எப்ப வேணாலும் பண்ணிக்கலாம் என இருப்பாங்க. ஆனா நம்ம நிலைமை அப்படி இல்லையே.

என்னம்மா எப்ப பாத்தாலும் சுத்தி சுத்தி கல்யாணத்துக்கே வந்து நிக்கற. பணம் இல்லாட்டி என்ன சேர்த்துக் கொள்ளலாம்.

பணம் வெறும் காகிதம் தான். அது நமக்கு பயன்பட்டா தான் பணம்.

இன்னைக்கு நம்ம தேவைக்கு சாப்பாடு இருக்கு. அடுத்த நாளைப் பற்றி யோசிக்காத.

எனக்கு என் கல்யாணத்தை விட உன் உடம்பு தான் முக்கியம். நீ எப்பவும் என் கூட இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.

சுஜாதா கண் கலங்கிய விழிகளோடு அவளைப் பார்த்து சிரித்தாள்.

என்னடி இந்த சாப்பாடு போதுமா.

போதும்மா.

இரண்டாவதா சாப்பாடு போட்டுக்ககலையா.

அம்மா இவ்வளவு தான் என்னால சாப்பிட முடியும்

எல்லாம் என் தப்புதான் சாப்பிடும் போது கண்டபடி பேசி இப்படி பாதி சாப்பாட்டில் எழ வச்சிட்டேன்.

ஐயோ அம்மா நீ பேசாட்டி கூட நான் இவ்வளவு தான் சாப்பிட்டிருப்பேன். ஏன்னா என் வயித்துல கெப்பாசிட்டி அவ்வளவு தான்.

என்னால் அவ்வளவு தான் சாப்பிட முடியும்.

இருந்தாலும், எல்லாம் என்னால தான்.

அம்மா இதுக்கு முன்னாடி நான் என்ன ஒரு குக்கர் சாப்பாட்டையா சாப்பிட்டுட்டு இருந்தேன்

இவ்வளவு தான்ம்மா. இன்னைக்கு கொஞ்சம் லேட்டா போச்சு.

அதுக்காக இன்னும் நிறைய சாப்பிடுன்னு சொன்னா எப்படி சாப்பிட முடியும்.

கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா உடம்பு கொஞ்சம் வரும் என பார்த்தால்.

நீ ஏம்மா இந்த உடம்புக்கு என்ன?

ஒல்லியா இருக்க. கொஞ்சம் உடம்பு போட்டா முகம் நல்லா கலர் வரும். பார்க்க இன்னும் நல்லா இருப்ப தெரியுமா.

அம்மா உடம்பு போட்டா கலர் வரும்ன்னு யாரு சொன்னா. அம்மா என்னை சாப்பிட வைக்க என்னென்னமோ பண்ணிப் பாக்கற.

ஆனால் என்னால் அவ்ளோ தான் முடியும் என சொல்லி விட்டு படுக்கச் சென்றாள்.

அது ஒற்றை பெட்ரூம் கொண்ட வீடுதான். அகல்யாவும் சுஜாதாவும் பெட்ரூமில் படுத்துக்கொள்வார்கள். ஹாலில் மகாதேவனும் தினேஷூம் படுப்பார்கள்.

மகாதேவனுக்கு பெரும்பாலும் இரவு நேர வேலை தான்.

அகல்யா தூங்கச் செல்லும் போது மகாதேவன் உள்ளே வந்தார்

என் அப்பா இன்னைக்கு நைட் ஷிப்டுன்னு சொன்னிங்க. அதுக்குள்ள வந்துட்டீங்க

இல்லம்மா நைட்டுக்கு வேற ஒரு ஒருத்தர் வரறா சொல்லிட்டாங்க. அதனால நாளைக்கு காலையில போயிக்கலாம் என நானும் வந்துட்டேன்.

சாப்பிட்டிங்களா அப்பா.

இன்னும் இல்லம்மா. இன்னும் நேரம் இருக்குல்ல அதான் வீட்டிலேயே வந்து சாப்பிடலாம் என்று வந்துட்டேன்.

நீ சாப்டியா இல்லையா.

சாப்பிட்டேன் பா இப்பதான் சாப்பிட்டேன். எனக்கு தூக்கம் வருது, தூங்க போறேன்.

சரிடா நீ போய் படு நான் சாப்பிட்டுட்டு நான் போய்ப் படுத்துக்கறேன். சுஜாதா சாப்பாடு எடுத்து வை.

சரிங்க என சொல்லியபடி மறுபடியும் அனைத்து பாத்திரத்தையும் ஹாலில் கொண்டு வந்து வைத்தாள்.

சாப்பிடஉட்காந்த மகாதேவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கேட்டார்.

சுஜாதா தினேஷ் எங்க?

சுஜாதா சற்று தயக்கத்துடன் சொன்னாள். அவன் இன்னும் வீட்டுக்கு வரலை

வரலையா மணி 9.30 ஆக போகுது இன்னுமா வரல. மதியம் சாப்பிட வந்தானா இல்லையா?

இல்லங்க வரலை.

மதியமும் வரலையா போன் பண்ணி என்னன்னு கேட்டியா.

போன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறான்.

நல்ல தருதலையை பெத்து வச்சிருக்கோம். ஒரு பேச்சை கேட்கறதில்லை. ஊரெல்லாம் சுத்திட்டு வம்பிழுத்துட்டு வரான் என திட்டிய படியே மகாதேவன் சாப்பிட ஆரம்பித்தார்.

அகல்யா படுத்த சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள்.

தூங்கி ஒரு மணி நேரம் இருக்கலாம் வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்க திடுக்கிட்டு விழித்து பார்த்தாள்.

மணி சரியாக 11 என்ன சத்தம் என வெளிவந்த பார்க்க தினேஷ் அப்போது தான் வீட்டுக்குள் வந்திருப்பான் போலும்.

அப்பா ஆத்திரத்தில் அவனைத் திட்டிக் கொண்டிருந்தார்.

என்னதான் உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்க. கண்ட நேரத்துக்கு வந்துட்டுப் போக இது என்ன லாட்ஜா.

என்னைக்கு தான் நீ உருப்படப் போற.

என்னதான் உங்களுக்கு பிரச்சனை, என்ன எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கணுமா, இங்க நான் வரணுமா வேண்டாமா என தினேஷூம் பதிலுக்கு எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.

பேசுவ நல்லா பேசுவ, வேலைக்குப் போகாம ஊர் சுத்தற உனக்கு மூணு வேலையும் சோறு போட்டா, இது மட்டுமில்ல, இன்னும் பேசுவ.

ஊருக்குள்ள உன்னால ஒருத்தன் கூட எங்களை மதிக்க மாட்டேங்கறான்.

அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லை.

நீ ஏன் கவலைப் படணும், உன்னைப் பெத்ததுக்கு நாங்க தான் கவலைப்படணும்.

அகல்யாவுக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்பா விடுங்கப்பா இப்பதான் அவன் வந்திருக்கான், எதுவா இருந்தாலும் காலையில அவங்கிட்ட பேசிக்கலாம்.

காலையில பேச சார் வீட்டில இருக்கணுமே, கலெக்டர் உத்யோகம் பார்க்கிறார் இல்ல, அதனால அவரை நாம பார்க்கவே முடியாது.

அனாவசியமா பேசாதிங்க என தினேஷ் கத்த,

டேய் அப்பாகிட்ட ஏண்டா இப்பெடியெல்லாம் பேசிக்கிட்டு இருக்க என சுஜாதா இடையில் வந்தாள்.

எல்லாம் உன்ன சொல்லணும் சுஜாதா, அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்ததே நீதான்.

கேட்டா சின்ன பையன் மாறிடுவான்னு என்ன எதுவும் பேச விடாம பண்ணிட்ட, இன்னைக்கு அவன் நாம சொல்ற எதையும் கேக்க மாட்டேங்கறான்.

எல்லாம் நம்ம தலையெழுத்து.

அப்பா ப்ளீஸ் ராத்திரி நேரம், எல்லாருக்கும் கேட்கப் போகுது. போதுப்பா என அகல்யா சொல்ல,

இப்படி எல்லாம் நினைச்சு நினைச்சு தான், இவனை எதுவும் கேக்காம விட்டு இன்னைக்கு இவன் இப்படி ஆயிட்டான்.

ஆரம்பத்திலேயே ஏதாவது பண்ணி இருக்கணும். அவனே மாறிடுவான்னு நினைச்சது நம்ம தப்புதான்.

எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை வாங்கிக் கொடுத்தாலும், ஒரு வாரம் கூட போறதில்ல, கேட்டா எனக்கு பிடிக்கலை.

அவனுக்கு என்னதான் பிடிக்குமுன்னு இன்னும் நமக்கு தெரியலை.

அப்பா விடுங்கப்பா எதாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம், அவன் சாப்பிட்டானான்னு கூட தெரியலை.

நீதான் அவனைப் பத்தி இவ்வளவு கவலைப்படற, அவன் உன்னைப் பத்தி என்னைக்கும் கவலைப்பட்டதில்ல அகல்யா.

என்னைக்கும் அவனுக்கு அவனோட ஆசைகள் தான் முக்கியம், யாரைப்பத்தியும் யோசிக்கறதே இல்லை.

நாம நான் அப்படித்தான், உங்களைப் பத்தி நான் ஏன் யோசிக்கணும், நீங்க அப்படி என்ன எனக்கு பண்ணிட்டிங்க.

எனக்குன்னு என்ன இருக்கு இந்த வீட்டில, ஏதாவது சேர்த்து வச்சிருக்கிங்களா.

எதுவும் இல்லை. கடன் மட்டும் தான் இருக்கு, சொந்தமா வீடு கூட இல்லை, ஏதோ வேலை வாங்கித் தந்தேன்னு சொலிறிங்களே, அப்படி என்னதான் வாங்கிக் கொடுத்திங்க.

கேவலம் வெறும், பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பளத்துக்கு, இதுக்கெல்லாம் என்னால போக முடியாது.

என்னால யார்க்கிட்டையும் கைகட்டி நின்னு வேலைப் பார்க்க முடியாது.

பின்ன என்னதாண்ட பண்ணப் போற?

என்னமோ பண்ணுவேன், அதெல்லாம் நீங்க ஏன் கேக்கறிங்க. கேக்கவும் கூடாது.

அப்பா கேக்காம வேற யார் கேப்பாங்க தினேஷ், ஏண்டா இப்படியெல்லாம் பேசற என அகல்யா வர,

நீ கொஞ்சம் பேசாம போறியா, உன்ன மாதிரி என்னால இந்த குடும்பத்துக்கு உழைச்சுக் கொட்ட முடியாது. நீ மட்டும் அடிமையாயிரு, என்னை இவங்களுக்கு அடிமையாக்கதே.

என்ன பேச்சு இது, இது நம்ம குடும்பம் நாம செய்யாம யார் செய்வா?

அதான் என்னால முடியாதுன்னு சொல்றேன், நான் வேலைக்குப் போக மாட்டேன், எனக்கு சொந்தமா தொழில் செய்யணும்.

சரிடா நீ சொன்ன மாதிரி சொந்தமா தொழில் பண்ணு, அதுக்கு கொஞ்ச நாள் வேலைக்குப் போ, அந்த பணத்தை வச்சி தொழில் ஆரம்பி.

நீ எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம், உன்ன நீ பார்த்துக்கிட்டா அதுவே எங்களுக்கு போதும்.

அதான் நானும் சொல்றேன், என்னப் பாத்துக்க எனக்கு தெரியும்,

நீங்க யாரும் சொல்லணும் என்ற அவசியம் இல்ல.

பார்த்தியா அகல்யா எப்படி பேசறான்னு, இவனுக்கு நல்லது சொன்னா உன்னையே எதிர்த்து பேசறான், அவனுக்காக நீ யோசிக்கற.

அவன் பேச்சு எப்படி இருக்குன்னு.

அப்பா விடுங்க, அவன் சின்ன பையன் அவனுக்கு பேச தெரியலை.

இவனா சின்ன பையன் இருபத்திநாலு வயசு ஆகுது. இன்னும் தண்டசோறு திண்ணுக்கிட்டு திரியறான்.

இந்த வயசுலேயே சிகரெட், தண்ணி இப்படியெல்லாம். இதெல்லாம் பத்தாதுன்னு இப்ப புதுசா கஞ்சா வேற அடிக்கறானாம்.

இவன் கூட சுத்தற ஒண்ணு கூட உருப்படி இல்ல, எல்லார் மேலயும் நாலு கேஸ் ஐந்து கேஸ் என இருக்கு.

இவன் என்னைக்கு கம்பி எண்ணப் போறான்னு தெரியலை.

அதைப்பத்தியெல்லாம் நீங்க கவலைப் பட வேண்டாம், எனக்கு என்ன பண்ணனும் என நல்லாவே தெரியும்.

நல்லா தெரியும் போ, உன்னால எங்களுக்கு மனக்கஷ்டம் மட்டும்தான்.

இன்னொரு பொம்பளைப் புள்ளையை பெத்திருந்தா கூட நாங்க நிம்மதியா இருந்திருப்போம்.

பெத்திருக்க வேண்டியதுதான, அவளை மாதிரி நானும் ஏமாளித்தான் இருக்கணும்.

எனக்கு சம்பாதிக்கற வழி தெரியும், உங்களை மாதிரியில்ல.

இவ்வளவு பேசற நீங்க, பெத்த பொண்ணு சம்பாத்தியத்துல உட்காந்து சாப்பிடக் கூடாது. சம்பாதிக்க துப்பில்லை, என்ன கேள்வி கேக்க வந்துட்டிங்க.

மகாதேவன் கோபத்தில் கை ஓங்க, அதை கையைப் பிடித்து தள்ளி விட்டான். மகாதேவன் நிலை தடுமாறி கீழே விழப் போக,

அகல்யா அவரைப் பிடித்து விட்டாள்.

இன்னொருக்கா எங்கிட்ட இந்த மாதிரி நடந்துகிட்டா என்ன நடக்குமுன்னே தெரியாது. அப்பான்னு கூட பார்க்க மாட்டேன் என சொல்லும் போதே ஒரு கை அவன் கன்னத்தில் அறைய,

அகல்யா ஆக்ரோஷமாய் அவன் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

என்ன தைரியம் உனக்கு அப்பா தள்ளி விடற, கேக்க யாருமில்லைன்னு நினைச்சியா, என்ன சொன்ன

என்ன நடக்குமுன்னு தெரியாதா, என்னடா பண்ணுவ.

பெத்த அம்மா அப்பாவுக்கு ஒரு வேளை சோறு போட வழியில்ல, நீ எல்லாம் குரல் ஒசத்தி பேசற.

வெட்கமா இல்ல, இந்த குடும்பத்துக்குல்ல இருக்கறவரைக்கும் தான் உனக்கு மரியாதை, வெளிய போய் பாரு உன்ன நாய் கூட மதிக்காது.

சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும். பெத்தவங்க அருமை அப்பதான் தெரியும்.

அடிச்சிட்டல்ல என்ன? அதுவும் இவங்களுக்காக?

ஆமாண்டா என அப்பா அம்மாதான் முக்கியம், இன்னொரு தடவை இந்த மாதிரி நீ நடந்துகிட்டா நானே போலிஸ் ஸ்டேஷன் போய், நீ பண்ற அத்தனை வேலையையும் சொல்லிடுவேன்.

புரியலை அதாவது நீயும் உன்னோட பிரண்ட்சும் சேர்ந்து போதைப் பொருள் வித்துட்டு திரியறிங்களே அதைதான்.

தினேஷ் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டான். சுஜாதாவும், மகாதேவனும் என்ன சொல்வது என தெரியாமல் அகல்யாவைப் பார்க்க,

அப்புறம் இந்த மாதிரி பேச்செல்லாம் பேச முடியாது. காலத்துக்கும் ஜெயில்ல தான் இருக்கணும்.

தினேஷ் எதுவும் பேசாமல் வெளியில் போனான்.

எங்கடா போற, என சுஜாதா கேட்க.

நான் இனிமே இங்க வரமாட்டேன். நீங்களும் என்னத் தேடி வராதிங்க என சொல்லிவிட்டு வெளியே செல்ல,

அகல்யா என்னடி இதெல்லாம்.

அம்மா ரெண்டு நாள் சுத்திட்டு இங்கதான் வருவான் பாரு, போகட்டும் விடு, இவனுக்கெல்லாம் வெளிய போனா தான் நம்ம அருமை தெரியும்.

மகாதேவன் எதுவும் பேசாமல் உட்காந்திருந்தார்.

அப்பா ரொம்ப டைம் ஆச்சு போய் படுங்க.

இல்லம்மா, எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, எத்தனை பேச்சு பேசிட்டான். என்ன சேர்த்து வச்சேன்னு கேக்கறான்.

நானும் உங்கம்மாவும் படிக்கலை, அதனால என்ன ஆனாலும் சரி உங்களுக்கு நல்ல படிப்பை கொடுக்கணும்ன்னு தான் நாங்க பிடிவாதமா இருந்தோம்.

என்னோட சம்பாதித்தியம் அனைத்தையும் உங்க படிப்புக்கு தான் செலவு பண்ணினோம்.

எப்படியெல்லாம் பேசறான் பாரு.

எனக்கு தெரியும் பா, நீங்க வேலை பார்த்தா பழைய கம்பெனியில வேலையை ரிசைன் பண்ணி, அந்த பிஎப் பணத்துல தான் தினேஷ்க்கு காலேஜ் பீஸ் கட்டினிங்க.

அவன் ஆசைப்பட்டான்னு நம்ம தகுதிக்கும் அதிகமான படிப்பை அவனைப் படிக்க வச்சிங்க. இன்னைக்கு நீங்க பழைய கம்பெனியில மட்டும் வேலை செய்திருந்தா,

நம்ம குடும்பம் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காது.

உண்மைதான்ம்மா, ஆம்பளைப் புள்ள நம்மள அவந்தான் பாத்துக்கப் போறான்னு, நல்ல வேலையை விட்டது என் தப்புதான்.
 
Top