எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 25

S.Theeba

Moderator
அபிராமி எனக்கு வேறு வழி தெரியாமல் தான் உங்களிடம் இதைக் கேட்கிறேன் என காயத்திரி கூறவும் இவளுக்கோ மூச்சு முட்டியது. ஏனென்று தெரியாமல் மனம் படபடத்தது. காயத்திரியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என் வீட்டிலும் எனக்கு யாருமேயில்லை. என் அம்மா, அப்பா நான் இறந்துவிட்டதாகவே சொல்லால் மட்டுமல்ல செயலாலும் உணர்த்திவிட்டனர். நான் அநாதையாக நின்றபோது எனக்கு அம்மாவாக அப்பாவாக அண்ணனாக உற்ற நண்பனாக நின்றது இனியனே. எனக்கு இப்போது அவன் மட்டும் தான் உறவு. அவன் எனக்கு அப்பாவுக்கு சமனானவன். அப்படியென்றால் நீங்களும் எனக்கு அம்மாவுக்கு சமமானவர். அதனால் தான் உங்களிடம் இதைக் கேட்கிறேன்.

இங்கே வினுவை ஒரு மொன்டசறியில் சேர்த்திருக்கேன். அங்கேயே ஒரு சில்ரன்ஸ் ஹோம் இருக்குது. பேசிவிட்டேன்… அவங்க நல்ல கெயார் எடுத்து பார்த்துக்குவாங்களாம். ஆனால் வினு பலநாள் இனியனும் நானும் சென்று பார்க்காவிட்டால் யாரும் இல்லாமல் ஏங்கிப் போயிடுவான். அதனால் நான்.. நான் அவுஸ்திரேலியா போய் செட்டிலாகி அங்கே எல்லாம் ஓகேயானவுடனேயே வினுவை வந்து கூட்டிப் போயிடுவேன். அவனைப் பிரிந்தும் பல நாட்கள் என்னால் வாழ முடியாது. அதுவரைக்கும் வினுவை… சன்டே மட்டும் அவனை கூட்டி வந்து உங்ககூட வைத்திருக்க முடியுமா? பிளீஸ்.. சன்டே மட்டும் தான்… மன்டே கொண்டு போய் விட்டுடலாம்" என்று கண்ணில் ஒரு கெஞ்சுதலோடும் தவிப்போடும் கேட்டாள் காயத்திரி.

அபிராமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் பேச வந்தது என்ன? காயத்திரி கேட்பது என்ன? அதிலும் ஒரு குழந்தையை அநாதை போல ஹொஸ்டலில் தங்க வைக்க யோசித்திருக்கிறாள் என்றால், அவள் எவ்வளவு தனிமையாக உணர்ந்திருக்கிறாள். அதைவிட தன் உலகம் என்று எண்ணி வாழும் குழந்தையை பிரிந்து போய் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எண்ணி எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாள். இவ்வளவு செல்வாக்கோடு இருக்கும் பெற்றோர் இத்தனை வருடங்களில் மகள் மீது துளியளவுகூட பாசம் பொங்கித் தேடி வரவில்லையே. என்ன மனிதர்கள் இவர்கள் என்று ஆற்றாமையோடு எண்ணிக் கொண்டாள். ஆனால், அவள் இவ்வாறு பலதையும் மனதில் எண்ணிப் புலம்புவதை அறியாதவளோ, அவள் மௌனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டாள். பதட்டத்துடன்
"ப்ளீஸ் அபிராமி… என்னை மன்னித்து விடும்மா. நான் தப்பாக கேட்டுவிட்டேனா? உங்களுக்கு கஷ்டம் என்றால் வேண்டாம்மா... எனக்குப் புரிகின்றது. ஒரு சிறு குழந்தையின் பொறுப்பு என்பது எவ்வளவு சிக்கல் என்று. நான் வேற ஏற்பாடு செய்யுறேன்மா" என்றாள்.
அபிராமி உரிமையுடன் பொய்க் கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்தாள். அவளது கோபப் பார்வையின் அர்த்தம் புரியாமல் காயத்திரி விழித்துக் கொண்டு நின்றாள்.
"நான் கஷ்டம் என்று உங்களிடம் சொன்னேனா? ஒரு குழந்தையைப் பார்த்துக்க யாருக்காவது பிடிக்காமல் போகுமா?
ஆனால், உங்கள் மீது நான் ரொம்பவும் கோபத்துடன் இருக்கிறேன்” என்றாள்.
“எதற்கு கோபம்?”
“கொஞ்சம் முன்னர்தான் சொன்னிங்க… ‘இனியன் எனக்கு அப்பா மாதிரி நீங்க அம்மா மாதிரி' என்று. ஆனால், அதை மனதார உணர்ந்திருந்தால் எப்படி உங்களால் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க முடியும்” என்று கோபத்துடன் கேட்டாள்.
இப்போதும் அவளது கோபத்துக்கான காரணம் மற்றவளுக்கோ புரியவில்லை.
“நிச்சயமாக அபிராமி நான் அதை உணர்ந்து தான் சொன்னேன். எனக்கு என் நண்பர்கள் மட்டுமே இப்போது இருக்கும் உறவு. எப்போதுமே என் நண்பர்கள் தான் எனக்கு முக்கியமானவர்கள். அதிலும் இனியன் என் அப்பா அம்மா எல்லாமுமேயாக இருக்கிறான். அவன் மட்டுமே இப்போது எனக்கு இருக்கும் நம்பிக்கை. அவனின் சரிபாதியான நீங்களும் என் வாழ்வின் ஓர் அங்கமே. அதை நான் முழுவதுமாக உணர்ந்துதான் சொல்கிறேன்”
“அப்படி உணர்ந்திருந்தால், அந்த நினைப்பு கொஞ்சமாவது இருந்திருந்தால் எப்படி உங்களால் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க முடியும். எங்களை நம்பலைதானே. வினுவை எங்களிடம் தர விரும்பாமல் அவனைக் கொண்டு போய் ஹொஸ்டலில் விட முடிவெடுத்திருக்கிங்களே.”
“அப்படி நம்பிக்கை வைக்காமல் இல்லை. நீங்கள் புதிதாக கல்யாணம் ஆனவர்கள். வாழ்க்கையை ஜாலியாக வாழனும். இந்த நேரத்தில் என் சுயநலத்திற்காக குழந்தையை உங்களோடு வைத்திருக்க சொல்வது சரியல்ல. அதுதான்…”
என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பே “ஒரு குழந்தையை பார்த்துக்கிறது கஸ்டம் என்று யாராவது சொல்வாங்களா? அதிலும் எனக்கு குழந்தை என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதைப்பற்றி நீங்க.யோசிக்கவே தேவையில்லை. ஆனால்…”
“ஆனால் என்ன பிரச்சினை அபிராமி. இனியன் வீட்டில் ஏதாவது சொல்வார்களோ என்று யோசிக்கிறிங்களா? ஒருநாள் தானே… நான் அம்மா, அப்பாகிட்ட பேசுறன்”

“நான் அதற்கெல்லாம் யோசிக்கவில்லை. எங்க அத்தை, மாமாவுக்கும் குழந்தைகள் என்றால் பிடிக்கும். அதுவும் உங்க குழந்தை என்றால் இரட்டிப்பு சந்தோஷத்தோடு தாங்களே பார்த்துப்பாங்க. நீங்கள் எப்படி தனியாக.. எப்படி அவுஸ்திரேலியா போய் இருப்பீங்க என்றுதான் யோசித்தேன். அத்தோடு வினு இல்லாமல் உங்களால் எப்படி முடியும்?"
"ரொம்ப கஷ்டம்தான். பட், இப்பவே அவனைக் கூட்டிக் கொண்டு போனால் அவன் ரொம்பவும் கஷ்டப்படுவான். புது இடம், புது மனிதர்கள். அப்புறம் நான் வேர்க் போற ரைமில் அவனை கெயார் சென்டர் எங்காவது தான் விட்டுப் போகணும். அவனுக்கு அது பழக்கம் தான். பட், அதைவிட அவன் இங்கே இருந்தால்... இனியனோடு வீக்லி ஒன்ஸ் ஸ்ரே பண்ணுவான். அவனும் ரொம்ப சந்தோஷமா இருப்பான். நானும் அவனை பிரிந்திருக்கும் வேதனையைத் தவிர அவனைப் பற்றி வேறு எதற்குமே கவலைப்படத் தேவையில்லை. என்னைவிட நீங்களும் இனியனும் என் வினுவை சந்தோசமாக பார்த்துப்பிங்க என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. வினுவும் இனியனுடன் என்றால் என்னைப் பிரிந்திருக்கும் கவலை இன்றி இருப்பான். அப்புறமா நான் கூட்டிப் போனாலும் ஏக்கம் கொஞ்சம் குறையும். அதுதான் இங்கே சேர்க்க நினைத்தேன். அப்புறம் அவுஸ்திரேலியாவில் நான் தனியாக இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே பெங்களூரில் தனியாகத்தான் இருந்தேன். சோ, என்னைப் பற்றி எந்தக் கவலையும் தேவையில்லை... அபிராமி... நான் திருப்பிக் கேட்பதால் கோபப்படக்கூடாது. உங்களுக்கு வினுவை உங்ககூட வைத்திருக்க எந்தப் பிரச்சினையும் இல்லை தானே? அவனை ஹொஸ்டலில் சேர்ப்பதுதான் நல்லது…"
"என்ன காயத்திரி நீங்க இப்படிக் கேட்குறிங்க. அவனைக் ஹொஸ்டலில் விட நானும் சம்மதிக்க மாட்டேன். அவரும் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார். எங்க கூடவே அவன் இருப்பான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுபற்றி நீங்க அவர்கிட்ட பேசுங்க. அவரும் ரொம்ப சந்தோஷப்படுவார்."
"கண்டிப்பா இனியன் ரொம்ப ஹப்பியா ஃபீல் பண்ணுவான். அப்புறம் இப்போதான் எனக்கு நிம்மதியாய் இருக்கு.” என்றவள் திடீரென நினைவு வந்தவளாய்
“ஆமா அபிராமி நீங்க திடீரென என்னை காண வந்ததுக்கு எதாவது காரணம் இருக்கா? என்கிட்ட ஏதோ பேசணும் என்று சொன்னிங்க. நானும் அதைப்பற்றிக் கேட்காமல் என் தேவை முடிந்தால் சரியென்று உங்களைப் பேச விடாமல் நானே பேசுறன். சொல்லுங்க அபிராமி. என்ன விஷயம்?"
காயத்திரி கேட்டதும் அபிராமிக்கு தான் பேச வந்ததே நினைவு வந்தது. இனி எப்படி காயத்திரியிடம் தான் நினைத்ததை பேச முடியும். தான் அப்படி நினைத்ததை அறிந்தாலே காயத்திரி யின் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று புரிந்தது.
தட்டுத் தடுமாறியவள் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர் பேசினாள்.
"நானும் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். நிறைய நாளாக அது முடியாமல் போய் விட்டது. பக்கத்து வீட்டில்தான் என் அக்காவின் ப்ரண்ட் இருக்காங்க. அங்கே வந்தப்ப உங்க வீடு பக்கத்தில்தானே பார்த்துப் பேசிவிட்டு போவோம் என்று தான் வந்தன். வினுவையும் பார்க்கணும் என்று ஆசையா வந்தன். அவர் தூங்கட்டும். பிறகு அவரைப் பார்க்கிறேன். ஓகே காயத்திரி, நீங்க அவர் கிட்ட பேசுங்க. நான் அப்புறமாக வாறன். அக்கா வெயிட் பண்ணுவாங்க. பை சீயூ." என்று விடைபெற்று வெளியே வந்தாள் அபிராமி.

அவளது மனமோ ரொம்ப லேசாகி காற்றில் பறப்பது போன்ற உணர்வு தோன்றியது. உடனேயே தன் தமிழைப் பார்க்க வேண்டும் என்றானது அவளுக்கு. அக்காவிடம் சென்றவள் உடனே வீட்டிற்கு போவோம் என்று அழைத்தாள். பயத்துடன் அவள் முகத்தை பார்த்த நளாயினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அபிராமியின் முகத்தில் தெரியும் சந்தோசமும் நிம்மதியும் குழப்பத்தை உருவாக்கியது.

வீட்டிற்கு வந்ததுமே அபிராமி தன் புகுந்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி விட்டாள். கேள்வியாய் நோக்கிய தமக்கையிடம் "அக்கா, பயந்திட்டிங்களா.. எல்லாம் நல்ல செய்திதான்" என்று கூறியவள், காயத்திரி பேசிய விடயங்களைக் கூறினாள். சந்தோசத்தில் தன் தங்கையைக் கட்டியணைத்த நளாயினி "எப்பவும் இதே சந்தோசம் உன் முகத்தில் நிலைத்திருக்கணும்" என்று வாழ்த்தினாள்.
 
Top