எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 2

subasini

Moderator
பகுதி - 2



முகூர்த்தக்கால் நடும் விழா…



வீட்டில் உள்ள அனைவரும் சூரிய உதயத்திற்கு முன்னே தயாராகி நின்றிருந்தனர்…



ரேணுகாவின் ‌‌திருமணத்திற்கான முகூர்த்தக்கால் நடும் விழா…



திருமணப் பெண்ணான ரேணுகா மாம்பழக் கலரில் மெரூன் வண்ணத்தில் பாடர் வைத்த புடவை அணிந்து மிகவும் அழகாக இருந்தாள்…



ஆனால் அவள் முகத்திலோ மிகவும் பதட்டமும் பயமும் இருந்தது.



தன்னுடைய தோழியின் வருகைக்காக அவள் மிகவும் ஆவலுடன் டென்ஷனாகக் காத்திருந்தாள். ஒரு வருடத்திற்குப் பிறகு சந்திக்கும் தோழி மதுமிதா…



அவள் வரவிற்குச் சந்தோஷம் இருந்தாலும் அவள் கூறியச் செய்தியைக் கேட்டு மனதில் பயம் பந்து உருண்டது வயிற்றில் …



இனி இந்த வீட்டில் என்னென்ன பிரச்சனைகள் நிகழும் என்றும் , தன் மாமன் மகன் கதிர்வேந்தன் இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்வான் என்பதும் அவளின் அதிகபட்சப் பயமாக இருந்தது.



அவனுடனானத் திருமணத்தை அவன் காதலுக்காக நிறுத்தியதும் , அவனைப் பிடிக்கவில்லை என்று கூறியதும் , ஆனால் அதில் சிறு குளறுப் படிச் செய்ததால் , அவனுக்கு அது பெரிய அவமானமாகியது , இந்த நிகழ்வினால் இன்று வரை தன் உடன் பிறந்தவனின் பாராமுகத்தைச் சகித்துக் கொண்டு வருகிறாள் ரேணுகா .



வேதனையோடு அதைக் கடந்தும் வருகிறாள். ஒரு நல்லதைச் செய்யப் போக அது தனக்கும் சேர்ந்து கெடுதலாக மாறியது தான் வேதனையைத் தந்தது.



ஆனாலும் கதிர்வேந்தன் அதைப் புரிந்துக் கொண்டதால் பிரச்சனைப் பெரிய அளவில் போகாமல் குடும்பத்தினுள்ளேயே அதைச் சரி செய்தனர்.



என்ன இருந்த போதும் தன்னுடைய தோழியைக் கதிர் வேந்தன் காதலிக்கிறான் என்று அறிந்ததும் , தன் தோழியைக் காணவும் பேசவும் முயற்சிச் செய்திருந்தாள் ரேணுகா . கதிரின் காதல் தனக்குத் தெரிய வருவதற்குள் தங்கள் ஊரை விட்டுக் காலிச் செய்திருந்தாள் , அவள் தோழி மது மிதா…



அவள் தந்தையின் மறைவிற்குப் பின், ஊரை விட்டுச் சென்றது மட்டும் இல்லாமல், புதிய அலைப்பேசி எண்ணை மாற்றி, தனக்குத் தராமல் சென்றிருக்கிறாள். இதெல்லாம் பல முறை அவளைப் பழைய எண்ணில் அழைத்துத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதில் ரேணுகாவே புரிந்து கொண்ட விஷயங்கள்.



தங்கள் பள்ளி ஆசிரியரைக் காணச் சென்றபோது, மதுமிதாவின் அலைபேசி எண் அவரிடம் இருந்து ரேணுகாவிற்குக் கிடைத்தது.



அவளுக்கு அழைத்துத் தன் திருமணத்திற்கு வருமாறு வற்புறுத்தியதும் அவள் சம்மதித்தாள்.



அவள் தன் திருமணத்திற்கு வந்தால் அவளைப் பார்த்துக் கதிர்வேந்தன், தன் காதலைக் கூறி அவளைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைப்பான் என்ற நம்பிக்கையில் அவளை வரவைத்தாள்.



ஆனால் மதுமிதா வரும்பொழுது எல்லோருக்கும் அதிர்ச்சி இருக்கிறது என்று கூறியிருந்தாள். என்னவென்று தன்னிடம் மட்டுமே பகிர்ந்து இருந்தாள் மதுமிதா …



உன் மாமன் மகனிடம் கூட, நீ சொல்ல வேண்டாம் என்று சொன்னதினால் பொறுமையாக அவள் வரவிற்காகக் காத்திருக்கிறாள் ரேணுகா.



அதனால் தான் இவ்வளவு பதட்டமும் பயமும் அவள் முகத்தில்.



இன்றைய நாளில் பெரிய அதிர்ச்சியாக , தன்னுடைய மாமாவும் அத்தையும் புரிந்துக்கொள்வார்கள் என்று அவளுக்கு மனதில் தைரியம் இருந்தது.



இப்பொழுதுச் சரியாகவில்லை என்றால் இனி எப்பொழுதுமே அது சரி ஆகாது என்பது அவள் எண்ணமாக இருந்தது.



நல்ல நாளில் எல்லோருடைய மனமும் சாந்தமாக இருக்கும் , அதனால் சிலவற்றை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவள் மனதில் இருந்தது.



தன் அண்ணனும் மாமன் மகன் கதிர்வேந்தனின் வருவதற்காகக் காத்திருந்தனர்.



முகூர்த்தக்கால் நடுவதற்கான எல்லாப் பணியும் தொடங்கியது. அவள் மற்றும் அத்தைப் பானுமதியும், தன்னுடைய தாய் ராதிகாவும் தயாராகி வந்தனர்.



அவர்களைப் பார்த்திருந்த மாமன் பால முருகன் " எல்லாம் தயாராகி விட்டதா ? பானு " என்று தன் மனைவியிடம் கேட்டார்



"எல்லாம் சரியா இருக்குங்க ,



ராதிகா நீ ஒரு தடவை எல்லாம் சரியாக இருக்கிறதா ? என்று பார்த்துவிடு, ஏதாவது நான் மறந்துட்டேனா " என்று தன் மைத்துனியிடம் பானுமதிக் கேட்டார் .



"எல்லாம் சரியா இருக்கு அண்ணி " என்று ராதிகா , தன் மகளைப் பார்த்தார்,



" பார்த்தவருக்கு என்ன ரேணு முகம் எல்லாம் ரொம்பப் பதட்டமா இருக்க… ஏன் என்ன விஷயம்?" என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.



" எதும் இல்ல … எதுவுமே இல்லையே , நான் நல்லாத்தான் இருக்கேன், கதிர் மாமாவும் அண்ணனும் இன்னும் காணோம், அதுதான் யோசிச்சிட்டு இருந்தேன்"

என்று கூறினாள் ரேணுகா.



"நான் பேசிட்டேன் அவங்க வந்துட்டு இருக்காங்களாம் , இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாங்க" என்றாள் பானுமதி.



" நீ முகத்தை நன்றாக வச்சுக்கோ கல்யாணப் பொண்ணு முகம் பளிச்சுன்னு இருக்க வேண்டாமா? ,அழகா இருக்க முகத்தில் மட்டும், ஏன் ஒரு பயம் இருந்துட்டே இருக்கு உனக்கு , கல்யாணம்னா அப்படித்தான் இருக்கும்" என்று அவளைக் கேலிச் செய்தாள் பானுமதி .



"அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தை" என்ற அவள் 'மனதில் நீங்க என்னை எதுவும் சொல்லாம இருக்கணும், என் ஃப்ரெண்ட் வந்ததுக்கப்புறம் , ஆண்டவா , நீ தான் எல்லாமே நல்லபடியா முடிச்சுத் தரணும் , இன்னைக்கு மட்டும் ரெண்டுச் சம்பவம் இருக்கு , ரெண்டுமே நல்லபடியா முடியனும்' என்று இறைவனை வேண்டினாள் ரேணுகா .



ஒன்று தன் தோழிக்காகவும் மற்றொன்று, தன் அண்ணனுக்காகவும் இருந்தது அவளுடைய வேண்டுதல்.



வாசலின் முன் எல்லாரும் வந்து நின்று, முகூர்த்தக் கால் நடுவதற்காக, எல்லாமே தயார் செய்து கொண்டு இருக்கும் பொழுது , கதிர்வேந்தனும் தருணும் காரில் வந்து இறங்கினர்.



அவர்களைப் பார்த்தக் கதிரின் தந்தை பால முருகன் " ஏன் லேட்டு, கடைசி நேரத்தில் தான் வருவீங்களோ! வி ஐ பி மாதிரி, நீங்க தானே எல்லாமே எடுத்துச் செய்யணும்" என்று அவர்களைத் திட்டினார்...



அவருடைய திட்டுகளை எல்லாம் வாங்கியவாறே, தருணை முறைத்தான் கதிர்வேந்தன் 'நான் சொன்னேன்ல' என்ற மாதிரி இருந்தது அவனுடைய பார்வை .



கதிரின் பார்வையைத் தவிர்த்தவன் மாமியிடம் சென்று "மாமி நான் ஏதாவது உதவிச் செய்யணுமா ? உங்களுக்கு" என்று கேட்டான் தருண் .



"எல்லாமே ரெடிப்பா உங்களுக்காகத் தான் வெயிட்டிங்... கெஸ்ட் வந்துட்டாங்க , இந்தப் பூஜை முடிச்சதுமே மார்னிங் டிபன் சாப்பிட்டு எல்லாருமே கிளம்பிடுவாங்க " என்று தருணிடம் கூறினார் அவன் அத்தை .



" சரிங்க மாமி " என்றவன் பூஜையைத் தொடங்கியதும் எல்லாருமே பூஜையில் கலந்து கொள்ளத் தொடங்கினர்.



பூஜையும் இனிதே தொடங்கிப் பந்தக்கால் நடவும், வீட்டில் திருமணம் கலைக் கட்டியது.



ரேணுகாவிற்கு நேரம் செல்லச்செல்லக் கை , கால்கள் நடுங்கத் தொடங்கியது, தன் தோழியை இன்னும் காணவில்லை என்று அவள் வாசலைப் பார்த்துக் கொண்டே இருந்தாள், 'இவள் ஏன் இன்னும் காணோம்' என்று சிந்தித்துக் கொண்டே அவள் நடந்து சென்றாள்.



அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிர் வேந்தனுக்கு ஏதோ மனதில் தட்டியது " ரேணுகா,ஏதாவது வேணுமா? இல்ல யாராவது வராங்களா? " என்று சரியாக அவளிடம் கேட்டான்.



அவனுடைய கேள்வியைக் கேட்டதுமே பதட்டத்தில் 'ஆமா ஆமா' என்றவள், பின்னர் இல்லை என்றால்,



" ஆமாவா! இல்லையா! சரியாகச் சொல்லு " என்றான் கதிர்.



"கல்யாணம் தான் ஆகுது அதுக்காக இப்படியா ! " என்று அவளைக் கேலிச் செய்தான்.



' அடேய் ஏன்டா ! என்று மனதில்

இவனும் , இவன் காதலியும் பண்ற வேலையில் எனக்குக் கல்யாணம் என்று வைப்பே வர மாட்டேங்குது, அவள் வேற அதிர்ச்சியைத் தரேன் என்கிறாள், அவள் வந்தால் இவன் எப்படி ரியாக்ட் ஆவான் , இவங்க ரெண்டுப் பேரையும் சேர்த்தி வைப்பதற்குள், யப்பா, சாமி எனக்குக் கல்யாணம் என்கிற உணர்வே காணமல் போய்விடும் போலையே ஆண்டவா ' என்று மனதினுள் புலம்பிக் கொண்டு இருந்தாள் ரேணுகா.



ரேணுகாவின் புலம்பல் கேட்ட ஆண்டவனோ இனிமேல் தான் உன்னோட கல்யாணம் கலைக்கட்டுப் போகுது என்று மனதில் நினைத்துச் சிரித்தார் .



முகூர்த்தக் கால் நட்டவுடன் வீட்டில் உள்ள அனைவரும் வந்து விருந்தினர்களைக் கவனிப்பதிலேயே நேரம் சரியாக இருந்தது.



வந்து விருந்தினர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது .



அருகில் இருக்கிறவர் எல்லோரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர்



குடும்ப நபர்கள் மட்டுமே வீட்டில் எஞ்சி இருந்த நேரம் எல்லா வேலையும் முடிந்தது, என்று சற்று ஓய்வாக இருந்தனர் பானுமதியும் ராதிகாவும் .



அப்பொழுது வீட்டிற்கு முன் வாடகைக் கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது .



ரேணுகாவிற்கு மயக்கம் வருவது போல் தோன்றியது. அவள் நின்ற இடத்தில் தனக்கு அருகில் இருக்கும் மேசையைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.



'என்ன ஆகப்போகுதோ ஆண்டவா? எனக்கு நிறையச் சக்தியைக் கொடு ? என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் தன் அண்ணனைப் பார்த்துக்கொண்டே …



தருண் ரேணுகாவின் மேல் இருந்த கோபத்தில், 'எதற்கு இப்படிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்' என்று முறைத்து வைத்தான் அவளை.



" யாரோ வந்திருக்காங்கப் பாரு, பூஜை முடிஞ்சிடுச்சே, யாராக இருக்கும், நம்ம வீட்டுக்குக் கெஸ்ட் வராங்க போல" என்று ராதிகாவிடம் பேசிக்கொண்டே எட்டிப் பார்த்தார் பானுமதி.



வருவது மதுமிதாவாக இருந்தது .



" அட நம்ம மது " என்று பானுமதி உரைக்கக் கூறினார்.



தன் தாயின் வார்த்தைகளைக் கேட்ட அதிர்ச்சியில் கதிர்வேந்தன்

வேகமாக முன்னறைக்கு வந்தான் .



வந்தவன் தன்னவளே அதிர்ச்சியாகப் பார்த்தான்…



"மதுமிதா"



அழகாகப் புடவைக் கட்டி, தனக்குத் திருமணம் ஆனதற்கு அடையாளமாக, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தாள். அவளுடன் கைக்குழந்தையோடு வந்திருந்திருந்தாள் மித்ரா.



வந்தவர்களைக் கண்டதும் வீட்டில் இருக்கிற அனைவருக்கும் அதிர்ச்சி என்றால், பானுமதிக்குத் தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது . அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.



மதுமிதாவின் உடன் வந்தது கதிர்வேந்தனின் தங்கை மித்ரா …



காதல் திருமணம் செய்து ஓடிப் போன மகள், தங்கள் முன்னே வருவதைக் கண்டு அதிர்ந்து நின்றார் , பானுமதி .



அங்கே வந்த மதுமிதாவிடம் இருந்த கவனம் எல்லோருக்கும் மித்ராவிடம் போனது, யாரும் யாரோடவும் பேசவில்லை, அங்கே ஒரு மயான அமைதி நிலவியது. இந்த மௌனத்தை உடைப்பது அந்தச் சிறு பாலகனின் செயலாக இருந்தது.



புதிய இடமும் , புதிய ஆட்களும் கண்டு பயந்தக் குழந்தை அழுதான் .



அழும் அவன் குரலில் எல்லாரும் அவனே பார்த்திருந்தனர் , அவன் அச்சு அசல் கதிர்வேந்தனின் சிறு வயது குழந்தைப் பருவம் போலவே இருந்தான். இதைப் பார்த்ததும் பானுமதிக்குப் பிடிபட்டது அது யாருடைய குழந்தை என்று , பாலமுருகனும் தன் மகளே பார்த்துக் கொண்டிருந்தார். தன் உயிரைக் கொடுத்து , வளர்த்தப் பின் அவள் மேல் உயிரையே வைத்திருந்தார். அவளுக்காக அவர் செய்யாதது எதுவுமே இல்லை .



தங்கள் வீட்டில் இளவரசி போல் வளர்ந்தப் பிள்ளை , இன்று ஒரு குழந்தையோடு தங்கள் வீட்டில் முன் நிற்கிறது , சிறுவயதிலேயே தாயாகிய தன் மகளே பார்த்து அவர் கண்கள், ரத்தமெனச் சிவந்து கண்ணீர் வழிந்தது.



ஆண்மகனாக இருந்தபோதும் மகளின் நிலையைக் கண்டு அவருக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. தலையில் பூவில்லாமல் நெற்றியில் ஒரு சிறிய கரும்பொட்டு ஒன்றை வைத்துக்கொண்டு , அவள் நின்ற நிலையே அவள் என்னவாகியிருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது , ஒரு தந்தையாக அவருக்கு.



தன் மகளின் நிலையைக் கண்டு அவருடைய மார்பின் ஓரம் , ஒரு வலியும் வேதனையும் பிறந்தது.



வீடே மிகவும் துயரத்தில் ஆழ்ந்தது .



எல்லாத்துக்கும் மேலே மிகவும் அதிர்ச்சியானது தருண் மட்டும்தான். தன் மாமன் மகளை மனதில் சிறுவயதிலிருந்தே மனதில் வைத்து வளர்ந்தவன் ... அவள் வேறு ஒருவனைக் காதலித்துத் திருமணம் செய்து சென்றபோதும் கூடத் தன் காதலை வெளிக் காட்டாதவன் ... இன்று கைம்பெண்ணாகத் தன்முன் வந்து நிற்கும் அவளின் நிலையைக் கண்டு சொல்லொன்னாத் துயரத்தில் தவித்தான் .



ஊமைக் கண்டக் கனவாக, யாரிடமும் பகிராதவனின் காதல் செத்துவிட்டது என்று நினைத்திருந்தான் .



இன்று அவள் நிற்கும் நிலைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதின் ஓரம் வேகமும் ஆவலும் பிறந்தது . மறைந்த காதல் மெல்ல மெல்லப் பாலைவனத்திற்குக் கிட்டிய நீர் போலப் பூக்க ஆரம்பித்தது .



அந்த நொடியில் தருண் மனநிலை இவ்வாறு இருக்க , கதிர்வேந்தனோ, அதிர்ச்சியோடு கண்கள் சிவக்க , தன் தங்கையைப் பார்த்துச் சிலை என நின்று இருந்தான்...



தன்னை ஏமாற்றிய தங்கை அது மட்டுமே அவன் மனதில், அவளை மனதார நம்பினான் , நம்பிய தன் முதுகில் குத்தி விட்டதாக எண்ணி, அவளை வெறுத்தான் அவள் அண்ணன்...



முன்னில் நிற்பது தன் காதலியும், தங்கையும். என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. இவை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரேணுகாவிற்குக் கை, கால்கள் நடுங்கத் தொடங்கியது .



வீட்டில் இருக்கும் அனைவரையும் பார்த்தாள் ரேணுகா, அனைவரும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களாக இருந்தனர்...



இந்த நிலையில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தாள் ரேணுகா. வேகமாகத் தன் தோழியிடம் வந்து அவளை அணைத்துப் படி " வா மதுமிதா , உன்னைத் தான் நான் எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் ,எப்படி இருக்க ? " என்றாள்.



" நான் நல்லா இருக்கேன் ரேணு, நீ எப்படி இருக்க என்றவளிடம் பதில் சொல்லாமல் மெதுவாகப் பின்னால் நின்று கொண்டு இருந்த மித்ராவை, கண்கள் கலங்கப் பார்த்தாள் ரேணுகா.



மித்ராவோ கண்களில் நீர் வழிய , தன் பெற்றோரையும் ,பெற்றோர்களுக்குப் பின்னால் நிற்கும் தன் சகோதரனையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ... அவளுக்கு நன்றாகத் தெரியும், தன் அண்ணனை ஏமாற்றி விட்டோம் என்று , அந்த ஏமாற்றத்திற்கும் அந்தத் தவறுக்கான மன்னிப்பையும் எவ்வாறு கேட்பது என்று தெரியாமல் , தவித்துப்படி அண்ணனிடமே இருந்தது அவள் பார்வை.





ரேணுகாவின் செயலில் முதலில் நிகழ்காலத்திற்கு வந்தது ராதிகா மட்டுமே. வேகமாகத் தன் மருமகளைப் பார்த்துட்டு "மித்துமா எப்படிடா, இருக்க" என்று வாரி அணைத்துக்கொண்டாள் ராதிகா.



"ஏண்டி, உனக்கு இந்தக் கோலம், உனக்கு என்னடி ஆச்சு ஏன் இப்படிப் பண்ணினாய்" என்று அவளை அனைத்து நெற்றியில் முத்தம் வைத்து , தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் ராதிகா.



ராதிகாவிற்குத் தெரியுமே இளம் கைம்பெனாக வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று , தன் மருமகளைத் தன்னைப் போலக் கைக்குழந்தையோடு நிற்பதைப் பார்த்து உயிரே போய்விடும் அளவிற்கு வேதனைக்கு உள்ளானாள் ராதிகா.



வேகமாக அவளை வீட்டிற்குள் அழைத்து வந்தவர் , தன் அண்ணனிடம் "எவ்வளவு நேரம் தான் இப்படியே பார்த்துகிட்டு இருப்பீங்க? உள்ளே கூப்பிடுங்க அண்ணா" என்று மித்ராவிற்காக வாதாடினாள் ராதிகா.



தன் மகளின் அவல நிலைப் புரிந்ததும் , பெற்றவர்களுக்கு அவள் செய்தத் தவறெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதனால் அவளை வாரி அணைக்கவே செய்தனர்.



பிள்ளைகள் தவறு செய்வதும் , பெற்றவர்கள் அதை மன்னிப்பதும் இயற்கைத் தானே.



பெற்றோர்களோடும் அத்தை ராதிகாவோடும் நின்று அழுது கொண்டிருந்த மித்ரா. இந்தச் சூழ்நிலையில் வார்த்தைகள் இல்லாத ஊமையாக அழுதாள் மித்ரா. பெற்றவகளுக்கு அவமானத்தை ஏற்புடுத்தியதற்கு. அவர்களை வேதனையில் தள்ளிவிட்டு முட்டாள் தனமான முடிவை எடுத்து, தன் வாழ்க்கையை இருளில் தள்ளித் தனி மரமாக நிற்கும் தன் நிலை, இப்படி எல்லாத்திற்கும் சேர்த்தி வைத்து அழுதாள் மித்ரா.



கல்யாண வீட்டில் நிலை மாறித் துன்பத்தின் பிடியில் சென்றதைக் கண்டதும், " மித்து அழாதே , குட்டிப்பையன் பாரு அழறான், முதலில் கண்ணைத் தொட " என்று அதட்டவும் அமைதியானாள் மித்ரா.



வீட்டின் நிலை அப்படியே தலைகீழாக மாறியிருந்தது, சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நல்ல விஷயம் நடக்க இருந்த வீட்டில், எதிர் பார்க்காத ஒரு சோகம் இழையோடியது…அனைவரின் மனதிலும் தங்கள் வீட்டின் ராணியாக வலம் வந்த குழந்தைப்பிள்ளை, கையில் பிள்ளையோடு தனி மரமாக நிற்கும் காட்சி மனதை உயிரோடு கிழிப்பதாக‌ இருந்தது.



இந்த நிலை எதனால் என்று சிந்தனை வராமல் இல்லை , அதைச் சொல்லும் சூழ்நிலை இதுவல்ல என்று அனைவருக்கும் புரிந்தது.



சூழ்நிலையைக் கையில் எடுத்த தருண்.



"வாம்மா மதுமிதா , எப்படி இருக்க? " என்று வினவினான். "பார்த்தியா அவங்க வீட்டுப் பொண்ணைக் கூட்டி வந்து உன்னை, யாராவது சாப்பிடு என்று சொன்னாங்களா ? " என்றவன் வருடங்களுக்குப் பிறகு, தன் தங்கையைப் பார்த்துக் கண்களால் அவளை அழைத்துக் கவனிக்கச் சொன்னான்.



அப்பொழுது , தான் அவளைக் கவனித்தனர் வீட்டின் பெரியவர்கள்.



பானுமதியோ வேகமாக மதுமிதாவின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டு " எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கத் தெரியுமா! மது நீ, உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை" என்று கண்ணீர் வடித்தவரின் கண்களைத் தன் மென் கரங்களில் துடித்தாள் மதுமிதா.



"எதுக்கு ஆன்டி , நன்றியெல்லாம் சொல்லி என்னைத் தள்ளி நிறுத்தி வைக்கறீங்க, இதெல்லாம் என் கடமையாகப் பார்க்கிறேன்" என்றவள் "நீங்கள் அழாதீங்க எல்லாம் சரியாகும்" என்று அவரை அணைத்தாள்…



இந்த அணைப்பு மனதளவில் துவண்டுப் போன தாய்க்குத் தேவையானதாக இருந்தது.



"நீ வாம்மா " என்று அவளை அழைத்து வந்து அமரச் செய்தவர், அவளிடம் தன் மகளைப் பற்றிய கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார் , பானுமதி.



அவரின் வினாவிற்கான அனைத்து விடைகளயும் சாய்ஸில் விட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியது கதிரின் பார்வை.



ஆம் நடப்பதை அனைத்தும் ஒரு பார்வையாளராகப் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தான் கதிர் வேந்தன்.



அவன் கவனம் முழுவதும் மதுமிதாவிடம் தான் இருந்தது, அவன் ஆராய்ச்சிப் பார்வையில் தடுமாறத் தொடங்கினாள் அவனின் அவள்.



அவள் ஆடையின் நேர்த்தி, நெற்றியில் வீற்றிருக்கும் திலகமும் , திருமதியான மதி நான் என்று, சொல்லாமல் சொல்லியது. அவளை உச்சி முதல் கால் நுனி வரை விழிகளில் அளந்துக்கொண்டிருக்கும், அவன் பார்வையின் வட்டத்தில் இருந்து அவளால் ‌மறையவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தினறினாள்.



தன் தோழியின் நிலையை உணர்ந்த ரேணுகா, அவளின் அருகில் சென்று அமர்ந்து அவன் பார்வை‌ வட்டத்தில் இருந்து அவளைக் காத்து நின்றாள்.



மழையிடமிருந்து மண்ணைக் காக்கும் குடையென நின்றாள் ரேணுகா…

மாமன் மகளின் சிறுபிள்ளைத் தனத்தில் அவளை முறைத்தவன், மெல்ல எழுந்து வந்து தன் தாயிடம் " இரண்டு பேரும் ரொம்பத் தூரம் இருந்து வந்து இருக்காங்கச் சாப்பிட்டாங்களா ? கேளுங்க ம்மா" என்றான்.



பானுமதியைப் பார்த்து "சாப்பிட‌ வைத்துத் தான் கூட்டி வந்தேன் ஆன்டி , சிடிவேஷன் எப்படி இருக்கும் தெரியாது ? அதனால் " என்று இழுத்தவளை முறைத்தவன்…



" எங்களை வேண்டாம் என்று விட்டுப்போனது நீங்க தான் , நாங்க இல்லை,அதே போல் எங்களிடம் வந்தால் துரத்தி விட நாங்கள் கல் நெஞ்சம் படைத்தவங்களும் இல்லை, பாசமும் நேசமும் மனதின் ஆழத்தில் எப்பொழுது இருந்துட்டே இருக்கும்" என்று திரும்பி நின்றுச் சொன்னவன் , வேகமாகத் தன் அறையை நோக்கிச் செல்ல‌ முயலவும் , "சரி ஆன்டி நான் கிளம்பிறேன " என்றவள் சோஃபாவில் இருந்து எழுந்த நின்றாள் மதுமிதா.



" அம்மா ரேணுவின் கல்யாணம் முடியும் வரைக்கும் அவளுக்கு மணப்பெண்‌தோழியாக இருக்கச் சொல்லுங்க, அவளுக்கு இருக்கும் ஒரே தோழி இவங்கள் தான் , இவங்க இல்லாமல் எப்படி? " என்றான் கதிர்…



அவன் இந்த வார்த்தைகள் கேட்டு மனதளவில் தைரியமாக இருந்தவள் கண்கள் கலங்கியது…



மதுமிதா மனதில் ரேணுவிற்கும் கதிரவேந்தனுக்கும் தான் கல்யாணம் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்… ரேணுகாவின் மனதில் காதலனாக வீற்றிருக்கும் கதிர் , தன் கணவன் கதிர் வேந்தன் என்று தவறாகப் புரிந்து கொண்டு இருந்தாள்…



அவன் கட்டிய தாலியைத் தாங்கியிருக்கும் அவள் நெஞ்சத்தில் கல்யேற்றியது போல் பாரமானது…



ரேணுகாவும் "ஆமாம் மது ப்ளீஸ்" என்று கேட்டதும் தட்ட முடியாமல் தினறினாள் மதுமிதா.



தன் நிலையை நினைத்து மதுமிதாவின் கண் சட்டென்று கலங்கிச் சிவந்ததை‌க் கண்டு கொண்டான் கதிர் வேந்தன்...



நடக்கும் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் கதிரின் தங்கை மித்ரா இல்லை…



இருவருக்கமான இந்தப் பனிப்போர் யார் கண்களுக்குத் தட்டுப் படவில்லை…



தன் கணவனின்‌, திருமணத்தில் மணப்பெண் தோழியாக, தன் நிலையை நினைத்துத் துயரத்தில் நின்றாள் மதுமிதா…





தொடரும்…
 
Top