காலையிலேயே கவின் இல்லம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அன்று தீபாவளி. காலையிலேயே எழுந்து குளித்து, சாமிகும்பிட்டு, புத்தாடை அணிந்து, காலை உணவாக இட்லி, தோசை, பூரி, கறிக்குழம்பு, பாஸ்தா, கேசரி என விருந்தாகவே சமைத்திருந்தார் கார்த்திகா.
அனைத்தையும் ஒருகை பார்த்துவிட்டு, ஆளுக்கொரு வெடியை வைத்துவிட்டு, தொலைக்காட்சி பெட்டியில் ஐக்கியமாகினாள் பிரணவிகா. சாத்விகா அம்மாவுக்கு உதவியாக அடுக்களையை ஒதுக்கி வைத்துவிட்டு வர, கவின் வந்துவிட்டார்.
“வேலை எல்லாம் முடிஞ்சதா கார்த்தி? கிளம்பலாமா?” எனக்கேட்க,
“எங்கப்பா?” எனக்கேட்டாள் பிரணவிகா.
“அத்தை வீட்டுக்கு.. ஷரா குட்டியோட முதல் தீபாவளில.. இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் லஞ்ச் அங்க தான்” என அவள் தலையில் பெரிய இடியை தூக்கிப் போட்டார். அதில் அதிர்ந்தவள்,
“நான்லாம் வரமாட்டேன். போறதா இருந்தா நீங்க போங்க உங்க தங்கச்சி வீட்டுக்கு. கார்த்திம்மா நீ உன் கையால பிரியாணி செய்ம்மா” என்றாள் பிரணவிகா.
கார்த்திகா “அப்போ நாங்க இங்கயே இருக்கோம். நீங்க மட்டும் வேணா போய்ட்டு வாங்க”
“கார்த்தி!” எனக் கடுமையாகக் கூறியவர் “கிளம்புங்க எல்லாரும். அத்தான் அல்ரெடி இரண்டு கால் பண்ணிட்டாங்க” எனக்கூறினாள் கவின்.
“அய்யோ அப்பா! எனக்கு நிஜமா முடியல. நான் வரல”
“ஏன்?” எனக்கேட்ட தடுமாறிவிட்டாள். எப்படி கூறுவாள் அங்கு அவன் இருப்பானென? அவன் வீட்டில் அவன் இல்லாமல் யார் இருப்பார்? அவன் செய்த காரியத்தால் அவனருகில் செல்லவே பதறும்போது, அவளாகவே அவனிருக்கும் இடத்திற்கு சென்று, விஷேச நாளின் சந்தோஷத்தைக் கெடுக்க விருப்பமில்லை அவளுக்கு.
“இல்லப்பா! எனக்கு டயர்டா இருக்கு.. அதான் நான் வரல..”
“அங்க போய் நீயா வேலை பார்க்கப் போற? இங்க உட்கார்ந்து இருக்குற போல அங்க வந்து உட்காரு இல்ல.. அங்க ரூமா இல்ல அங்க வந்து ரெஸ்ட் எடு. கிளம்பு” எனக் கண்டிப்பாகக் கூற, வேறு வழி இல்லாமல் கவின் பின்னால் வந்தனர் ராகவேந்திரா இல்லத்திற்கு.
கார்த்திகாவுக்கும் இங்கு வர விருப்பமில்லை ஆனால் கவினின் வற்புறுத்தலால் தான் தன் மகள்களையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். கல்பனாவுக்கும் கார்த்திகாவுக்கும் ஒத்துப்போகும் ஆனால் கவிதாவின் குணம் யாருக்கும் ஒத்துவராது.
ராகவேந்திரா இல்லமே விழாக்கோலமாக இருந்தது. இதற்கு முன் இவ்வாறெல்லாம் இங்கு வருவது குறைவு தான். விராஜூடன் சேர்ந்து பிரணிவிகாவும், சாத்விகாவும் மட்டுமே அவ்வபோது வருவார்கள், ஆனால் நிஹாரிகா வந்தபிறகு தான் கவினின் குடும்பத்தினர் இங்கு அடிக்கடி வருகின்றனர்.
இன்றும் விருந்திற்கு அவர்களை எல்லாம் அழைத்திருக்க, கவின் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் தன் அத்தானின் வார்த்தைக்காக. மேலும் பேத்தியை வேறு தேடுவதால், இதன் மூலமாகப் பேத்தியையும் பார்க்க வந்துவிட்டனர்.
உள்ளே வரும்போதே ஹாலில் உள்ள ஷோபாவில் அமர்ந்திருந்தார் கவிதா. இவர்கள் வந்ததை கண்டும் காணததுமாக அமர்ந்து இருக்க, நிஹாரிகா தான் அந்தப்பக்கமாக வந்தவள், இவர்களை வரவேற்க அந்தச் சத்தத்தில் அடுக்களையிலிருந்து வந்த கல்பனா அனைவரையும் வரவேற்றார். இடைப்பட்ட நேரத்தில் கவிதா அவர் அறைக்குச் சென்றுவிட, இவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பிரணவிகா “அக்ஷூ குட்டி எங்கக்கா?” எனக் கேட்க,
நிஹாரிகா “ரூம்ல தூங்குறா பிரணி.. உன் அத்தான் காவலுக்கு உட்கார்ந்து இருக்கார்” எனக்கூற,
பிரணவிகா “நாங்க போய் பார்க்கட்டா?”
நிஹாரிகா “சரி.. போய் பார்த்துக்கோ.. உன் மாம்ஸ்ஸ அனுப்பிவிடு..”
பிரணவிகா “சாத்வி வாடி..” என அழைத்துக்கொண்டு செல்ல,
நிஹாரிகா “எழுப்பிறாதீங்க.. அவளா எழும்பட்டும்.. அரை தூக்கத்துல எழுந்தா அழுதுட்டே இருப்பா”
பிரணவிகா “அக்கா! குட்டி இங்க வந்து இரண்டு வாரம் தான் ஆகுது.. இதுக்கு முன்னாடி நான் தான வச்சிருந்தேன். எனக்குத் தெரியாதா அவளப்பத்தி” எனக்கூற, சிரித்துக் கொண்டவள்,
“மன்னிச்சுடும்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன். போமா.. போய் அவர வரச்சொல்லு. பாப்பா எழும்பவும் தூக்கிட்டு வா” எனக்கூறிவிட்டு, குடும்பத்துடன் பேச அமர்ந்துவிட்டாள் நிஹாரிகா.
பரமேஸ்வரி பாட்டி “கொழுப்பேறினவ வா’னு ஒரு வார்த்தைக் கேட்டாளா பாரு.. யாரோ மாதிரி பெத்த தாய பார்த்துட்டு போறா” எனக் கவிதா “வாங்க” எனக்கூட அழைக்காமல் சென்றதைப் பற்றிக் கூற,
கவின் “அம்மா தெரிஞ்ச விஷயம் தானே! அவ குணமே அது தான”
பாட்டி “ஆனாலும் இம்புட்டு ஆவாது அந்தச் சிறுக்கிக்கு.. கடைக்குட்டினு ஊட்டி ஊட்டி வளர்த்ததுக்கு என்னமா பதிலுக்குப் பண்றா பாரு”
கார்த்திகா “இதுக்கு தான் வரலனு சொன்னேன் கேட்டிங்களா?” எனக் கவினை கண்டனமாகப் பார்க்க,
கல்பனா “கார்த்தீ! அப்போ என் வீட்டுக்கு வரமாட்டியா? இது என் வீடும் தான? இப்போ உன் மக வீடும் தான? அவ ஒருத்திக்காக இங்க வராமலேயே இருக்க முடியுமா?”
நிஹாரிகா “அதான.. அவங்களுக்காக என் வீட்டுக்கும் வர மாட்டிங்களாம்மா?”
கார்த்திகா “உங்களுக்காகத் தான அவங்க என்ன பண்ணினாலும் பரவாயில்லனு இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தோஷ் ராகவேந்திராவும், விராஜ்ஜூம் கட்சி ஆட்களுடன் பேசிவிட்டு வந்துவிட, விமலேஷூம், ஷிம்ரித் யாதவும் அவரவர் அறையிலிருந்து வந்துவிட பேச்சு விறுவிறுப்பாகச் சென்றது.
விராஜ்ஜூக்கு வந்ததிலிருந்து அவனவளைக் காண துடித்தது. ஆனாலும் உடனே செல்ல முடியாமல் கொஞ்ச நேரம் பெரியவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் மெல்ல எழுந்து சென்றான்.
நேராக ஷிம்ரித்தின் அறைக்குச் செல்ல, அங்குப் படுக்கையின் நடுவில் அஃஷரா குட்டி உறங்க, அவளுக்கு இருபுறமும் சாத்விகாவும், பிரணவிகாவும் படுத்துக் கொண்டு அக்காமகள் தூங்கும் அழகை இரசித்துக் கொண்டிருந்தனர்.
“ஹாய்” எனச் சத்தமாக அழைக்க, இருவரின் உஷ்ணப்பார்வையில், அடுத்து வார்த்தை வராமல் அவன் முழிக்க,
“உஷ்.. மெதுவா பேசு” எனச் சைகை மொழியில் பிரணவிகா கூற, அவனோ பூனை நடை நடந்து சாத்விகா அருகில் வந்தவன். அவள் கையைப் பிடித்து எழுப்ப, அவளோ வரமாட்டேன் என வீம்பு பிடித்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அவனின் “ஹாய்” என்ற சத்தத்திற்கே உறக்கம் கலைந்த அஃஷரா குட்டியோ, மெல்ல மெல்ல நெளிந்து, அவள் குண்டுக் கண்களை மூடி மூடித் திறந்து வெளிச்சத்திற்கு பழகி, நன்றாகக் கண்விழித்து பார்க்க அங்கோ அவளுக்குப் பிடித்தமான அவளின் சித்தி, அதில் குழந்தை முகம் பூவாய் மலர, தன் பொக்கை வாயைத் திறந்து சிரிக்க, அள்ளித் தன் மார்போடு அணைத்திருந்தாள் பிரணவிகா.
அதற்குள் சாத்விகா, விராஜ் ஊடல் நடக்க, “நான் கீழ போறேன்.. நீங்க சட்டு புட்டுனு சமாதானம் ஆகுங்க” எனக்கூறியவள், அஃஷராவுடன் கீழே சென்றுவிட,
கார்த்திகா “சாத்வி எங்க டி?”
பிரணவிகா “ரெஸ்ட் ரூம் போயிருக்கா” எனக்கூற, கல்பனாவுடன் பேச்சில் இணைந்தவர் சாத்விகாவை மறந்தே போனார்.
பெரியவர்கள் அவர்களுக்குள் பேச, ஷிம்ரித், நிஹாரிகாவுடன் அஃஷராவை வைத்துக் கொண்டு பிரணவிகாவும் ஐக்கியமாகிவிட, சாத்விகாவும், விராஜூம் அங்குள்ள ஒரு பால்கெனியில் நின்றிருந்தனர்.
விராஜ் “இன்னும் எத்தனை நாள் என்கிட்ட பேசாம இருக்க போற?” அவளிடம் பதிலில்லை.
“நம்ம லவ் பண்றோம்டி அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா?” எனக்கேட்க, அவளோ காது கேளாதவள் போல் நிற்க, இவன் பேசியது அனைத்தையும் கேட்டது கவிதாவின் காதுகள்.
இன்று தீபாவளி தினம் அதனால் கோர்ட்டும் இல்லாததால், அவள் அலுவலகத்திற்கும் விடுமுறை அளித்திருந்ததால் வீட்டில் இருந்தார். கவின் குடும்பம் இன்று இங்கு வருமென அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவர்களைக் கண்டதும் முதலில் அதிர்ச்சி, பின் கார்த்திகாவை பார்த்ததும் தன் அண்ணன் கவின் மேலும், தாய் பரமேஷ்வரி மேலும் எரிச்சல் வர, அவ்விடத்தை விட்டுத் தன்னுடைய அறைக்கு வந்துவிட்டார்.
அவருக்குத் தெரிந்து போனது இன்று அவர்கள் இங்குத் தான் இருக்க போகின்றனர் என. ஆதலால் எவ்வளவு நேரம் தான் அறைக்குள்ளே இருப்பதென, அவளிடம் வேலைக்கு இருக்கும் ஒரு முஸ்லீம் ஜூனியரை அழைத்து, ஆபிஸூக்கு வருமாறு அழைத்தவர், வேலையாவது பார்க்கலாமெனக் கிளம்பி வெளியில் வர, பால்கெனியில் தன் மகனின் பேச்சு சத்தத்தில் அதிர்ந்து நின்றார்.
தன் மகன் தான் பேசுகிறான் அதுவும் தன் அண்ணன் மகளுடன் காதல் வசனம் பேசுகிறான். தனக்கு பிடிக்காத கார்த்திகாவின் வயிற்றில் உருவான குழந்தையுடன் காதல் வசனம் பேசுகிறான் என்பதே மிளகாயை அறைத்துப் பூசியது போலக் காந்தியது.
‘அந்த வாயாடி தான் இவனோடவே சுத்துவா.. இவன மடக்கிருவாளோனு அவகிட்ட அவ்ளோ வெறுப்பா, பேசி அவளை அன்னைக்கு அசிங்கப் படுத்தினேன்.. ஆனா இந்த ஊமச்சி என்ன வேலை பார்த்திருக்கா..
ஊமை ஊரக் கெடுக்கும், பெருச்சாலி பேரக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க.. நான் எப்படி இவள விட்டேன்? அன்னைக்கு அவள அசிங்கப்படுத்தி பேசின மாதிரி இவளையும் பேசியிருந்துருக்கனுமோ?’ என மனதில் நினைத்தவர் இன்று இவளை அவமானப்படுத்திவிடும் நோக்கத்தில் ஓரடி எடுத்து வைக்க,
சாத்விகா “லவ்.. பொல்லாத லவ்.. அன்னைக்கு தெரியாத்தனமா சரினு சொல்லி லவ் பண்ணிட்டேன்.. இன்னைக்கு ஏன் பண்ணினேனு நினைக்குறேன்” எனக்கூறியதை கேட்டு அம்மா, மகன் இருவரும் அதிர்ந்து நின்றனர்.
விராஜ் “சாத்வி! என்ன பேசுறனு தெரிஞ்சு தான் பேசுறியா?”
“ஆமா தெரிஞ்சு தான் பேசுறேன். நீங்க எனக்கு வேண்டாம். நான் சொன்னதை கேட்காத நீங்க எனக்கு வேண்டாம்” எனக்கூற,
‘எவ்வளவு நெஞ்சழுத்தம் இந்த ஊமைச்சிக்கு.. இவ பேச்ச என் புள்ள கேட்கனுமா? அப்படி ஒன்னும் அவசியமில்லடி.. நீ என்னடி என்புள்ளைய வேணாம்னு சொல்றது.. நான் முடிவே பண்ணிட்டேண்டி நீ என்புள்ளைக்கு வேணாம்னு.. இப்பவே என்புள்ள உன் பேச்சு கேட்கனுமோ’ என வன்மமாய் நினைத்தவள், மீண்டும் அவர்களை நோக்கி நகர,
“என்னால இனி படிக்க முடியாது” என விராஜ் கூறிய வார்த்தையில், தூக்கிய கால்கள் அந்தரத்தில் நிற்க, அதிர்ச்சியில் சிலையாகி நின்றார் கவிதா.
“படிக்காத நீ எனக்கு வேண்டாம்”
“முடிவா கேட்குறேன்.. என்னதான் சொல்ற நீ?” என அவன் பல்லைக் கடித்து கேட்க,
“கடைசியா சொல்றேன்.. நீயும் உன் காதை நல்லா தொறந்து வச்சி கேளு.. இந்தா பாரு இந்தத் தடவையும் உனக்கு அரியர் எக்ஸாம் பீஸ் கட்டி ஹால் டிக்கெட் வரைக்கும் வாங்கிட்டு வந்துட்டேன். ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுத போற.. நல்லா எழுதி பாஸ் பண்ற.. உங்க பிஸ்னஸ்ல எதாவது ஒரு பிஸ்னஸ்ஸ டேக்கோவர் பன்ற.. கரெக்ட்டா சொல்லனும்னா விஹான் அத்தான போல நீ வந்தா.. நம்ம கல்யாணம் நடக்கும். இல்லனா பிரேக்கப் தான். இந்த அரசியல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து எல்லாத்தையும் விட்டொழிச்சுட்டு நான் மட்டும் வேணும்னு வா.. இந்த சாத்வி உனக்காகக் காத்திருப்பா.. இல்ல இந்த சாத்வி உனக்கில்ல” எனக்கூறி, திரும்பிக்கொள்ள,
அதிர்ந்து நின்ற கவிதாக்கு மனம் குளுகுளுவென இருந்தது. ‘வாவ்.. வாவ்.. பரவாயில்லடி ஊமையா இருந்தாலும் காரியகார ஊமைதாண்டி நீ.. கமுக்கமா என்ன எல்லாம் பன்ற. இத்தனை வருஷத்துல நான் சொல்லிச் சொல்லிச் சலிச்சு போன விஷயத்தைச் செய்யச் சொல்ற.. சூப்பர்..
இப்போதைக்கு உன்னை ஒன்னும் பண்ண மாட்டேண்டி.. நீ சொன்னதெல்லாம் முதல்ல நடக்கட்டும்.. அப்புறம் உன்னை எப்படி அவன் வாழ்க்கையில இருந்து துறத்தி விடுறேனு பாரு.. ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னும் பண்ண மாட்டேன்.
அந்தக் கண்றாவி காதலால இந்தத் தறுதலை திருந்தி வந்தா நல்லது தான. அதுவரைக்கும் உங்க காதல கண்டுக்க மாட்டேன். அவன் மட்டும் நீ சொன்ன மாதிரி.. எனக்குப் பிடிச்ச மாதிரி மாறட்டும் அப்புறம் வச்சிக்குறேன். அதுவரைக்கும் எஞ்சாய் பண்ணு’ என வன்மமாக நினைத்து அவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார்.
கவிதாவுக்கு கார்த்திகாவை மிகவும் பிடிக்கும் ஒரு காலத்தில். கார்த்திகாவின் அழகு பிடிக்கும். அவளின் நடனம் பிடிக்கும். அவளின் அன்பான குணம் பிடிக்கும். தன் அண்ணன் மனைவி மஞ்சரியை பிடிக்காவிட்டாலும், அவளுடன் அடிக்கடி வீட்டிற்கு வரும் கார்த்திகாவை அதிகமாகப் பிடிக்கும் கவிதாவுக்கு.
கார்த்திகா வந்தால் அன்பாக வரவேற்று கவனித்து, பாசமாக இருந்தவர் தான். தன் அண்ணன் மனைவி மஞ்சரி அவளுடைய அண்ணன் சூர்யகுமாரை எம்.எல்.ஏவாக ஆக்குவதற்காக, கார்த்திகாவின் அப்பாவித் தனத்தை பயன்படுத்தி, ஒரு பெரும்புள்ளியின் காமப்பசிக்கு இறையாக்கிவிட, குற்றுயிராக வந்த கார்த்திகாவைப் பார்க்கும்போது மனம் வருந்திக் கண்ணீர் விட்டவர் தான்.
ஆனால் அதே கார்த்திகா தனக்கு அண்ணியாக வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவரால். வீட்டில் இவர் எவ்வளவோ கூறியும் யாரும் கேட்காது கவின், கார்த்திகாவின் திருமணத்தை நடத்தி வைக்க, அனைவரின் மேலும் வன்மத்தை வளர்த்துக் கொண்டார். யாருடனும் பேசுவது கிடையாது, மதிப்பது கிடையாது.
கெட்டு போனதால் தன் அண்ணனுக்கு மனைவியாகவே வரக் கூடாது என நினைத்தவள், அவளின் கருவில் உண்டான மகள்களைத் தனக்கு மருமகளாக ஆக்குவாரா?
ஆனால் அவரின் இரு புதல்வர்களும் கார்த்திகாவின் மகள்களை மனதில் வைத்துக் கொண்டு அவர்களின் பின்னால் சுத்த, இவரோ கார்த்திகாவுடன் சேர்த்து அவரின் மகள்களையும் வெறுக்கிறார். அவமானப்படுத்துகிறார்.
கார்த்திகாவை கண்டாலே அவமானப்படுத்தினார். அவரின் குழந்தைகள் தன் அண்ணனின் குழந்தைகளாகவே இருந்தாலும் அவரால் அவர்களை மருமகளாக ஏற்க முடியாதுபோக, “அத்தை” எனத் தத்தி தத்தி நடத்து வரும் பிஞ்சுக் குழந்தைகளைக்கூட தீண்டத்தகாதவர்களாக எண்ணி ஒதுக்கித் தள்ளினார்.
குழந்தைகளும் விவரம் புரியும் நேரம் தானகவே ஒதுங்கிவிட்டனர். ஆனால் சிறு குழந்தைகளுக்குள் எந்தப் பாகுபாடும் இல்லையே அதனால் விராஜ், பிரணவிகா, சாத்விகாவின் பழக்கம் அதிகமானது இவருக்குத் தெரியவில்லை. தெரிவதற்கு அவர்களைக் கவனித்திருந்தால் தானே!
வருடங்கள் கடந்து விராஜ் கல்லூரி படிக்கும்போது தான் பிரணவிகாவும், விராஜூம் சகஜமாகப் பழகுவதை பார்த்தவர் ஆத்திரத்தில் பிரணவிகாவை தனியாக அழைத்து,
“ஏய் இந்தா பாரு என் மகன் கூட உனக்கு என்ன பேச்சு?” எனக்கேட்க அவளோ துடுக்காக,
“என் பிரண்ட் நான் பேசுறேன்”
“திமிர பாரு.. அப்படியே ஆத்தாள மாதிரி. இனி அவன் கூட பேசின.. கொன்றுவேன்”
“இத அவன சொல்லச் சொல்லுங்க”
“மரியாத இல்லாம என் மகன அவன் இவனு சொல்லுவ?” என அவள் காதைப் பிடித்துத் திருக,
“விடுங்க என்னை..” எனக் கத்தினாள்.
“இங்க பாரு உன் ஆத்தா என் அண்ணன மயக்கின மாதிரி நீ என் புள்ளைய மயக்கப் பார்க்குறியா?”
“ச்சீ.. அசிங்கமா பேசாதீங்க எங்கம்மாவ பத்தி.. அவ்வளவு தான் சொல்லுவேன்”
“அவ அசிங்கம் பிடிச்சவ தான.. எவன்கிட்டயோ கெட்டு போய்ட்டு, எங்கண்ணன கட்டிக்கிட்டா கருமம். நீ என் புள்ளைய வளைச்சு போட்டுக் கட்டிக்க பார்க்குறியோ?” எனப் பதினாறு வயது சின்னப் பெண்ணிடம் பேசும் முறையற்று பேச,
“உங்க புள்ள என் பிரண்ட் மட்டும் தான். எனக்கு ஒன்னும் உங்க புள்ளைய வளச்சு போட்டு கட்டிக்கனும்னு இல்ல.. நல்லா கேட்டுக்கோங்க.. நான் உங்களுக்கு மருமகளா என்னைக்கும் வரமாட்டேன். என் அம்மாவ இப்படி தரைகுறைவா பேசின உங்களோட புள்ளைய எல்லாம் கட்டிக்க மாட்டேன்.. ஏன் உங்க புள்ள கூடப் பேசக் கூட மாட்டேன்” என அழுதுகொண்டே சென்றவள், விராஜ்ஜிடம் பேசுவதை கூட நிறுத்திவிட்டாள்.
அவன் தான் விடாமல் அவள் பின்னால் அலைந்து, திரிந்து அவளின் நட்பை மீட்டெடுத்தான். பின்னாளில் சாத்விகா, விராஜ் காதலுக்கு கூடப் பிரணவிகா ஆதரவு அளிக்கவில்லை ஆனால் அவர்களின் உண்மையான காதலுக்கு முன்னால் அவளின் எதிர்ப்பு வழுவிழந்து போனது.
அன்று கவிதா பேசியது பசுமரத்தாணி போல அவள் மனதில் பதிந்து போனது தான் விஹானை அவள் காதல் என்னும் வட்டத்திற்குள் கொண்டுவராததற்கான முதல் காரணம்.
அம்மா ஒரு புறமும், தன்னை எதிரியாக நினைக்கும் ஒருவரும் சேர்ந்து விஹானின் காதலுக்கு சமாதி கட்ட நினைக்க, இவர்களை எல்லாம் தாண்டி எப்படி கைப்பிடிக்கப் போகிறான். பொருத்திருந்து பார்ப்போம்.