எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 26

S.Theeba

Moderator
காயத்திரியை சந்தித்து விட்டு தன் பெற்றோரின் வீட்டிற்கு வந்தவள் சற்றும் தாமதிக்காமல் உடனேயே தன் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானாள். அவளுக்கு இந்த நொடியே தன் தமிழைப் பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கமே அதிகளவில் இருந்தது. பரபரப்பாகத் தான் கொண்டு வந்த பெட்டியை எடுத்து உடைகளை அடுக்கினாள்.

அவளது இந்தத் திடீர் புறப்பாடு குமாருக்கும் சரோஜாவிற்கும் தான் ஏமாற்றத்தையும்ம் உவகையையும் ஒருசேர உண்டாக்கியது. காலையில்தான் வந்த மகள் சில நாட்களாவது தங்களுடன் தங்கியிருப்பாள் என்று ஆனந்தப்பட்டிருந்தனர். திருமணமாகிச் சென்ற பின்னர் முதல் தடவையாகத் தன் பிறந்த வீட்டில் தங்கிச் செல்லவென வந்த செல்ல மகள் ஒரு நாள் கூட முழுமையாகத் தங்காது உடனேயே புறப்படுவது ஏமாற்றத்தைத் தந்தது.
ஆனால் வெளியில் இருந்து வந்ததும் நான் என் வீட்டிற்குப் போகப் போகின்றேன் என மகள் சொல்லவும் கோபத்துக்குப் பதில் நிறைவான மகிழ்ச்சியையே பெற்றோர் உணர்ந்தனர். அந்த வீட்டுடன் கொஞ்ச நாட்களிலேயே எவ்வளவு ஒன்றிப் போயிருந்தால் என் வீடு என்று உரிமையுடன் பேசுகின்றாள். அந்த உரிமையுணர்வு தோன்ற அவளது புகுந்த வீட்டினர் எவ்வளவு கரிசனையோடு தங்கள் மகளை நடத்துகின்றனர் என்ற பூரிப்பும் உண்டானது.
திடீரென நினைவு வந்தவராக “ஏன்டி மாப்பிள்ளை சிறிலங்கா போறதால் அவர் வரும் வரை நம்ம வீட்டில் தங்கப் போறதாய்தானே சொன்னாய். அவரும் டிக்கெட் போட்டாச்சு இரண்டு நாளில் பயணம் என்றாரே. அப்புறம் ஏன்டி இன்று இப்படி அவசரமாய் புறப்படுறாய்?” என்று கேட்டார் சரோஜா.
“இரண்டு நாளில் பயணம்… டிக்கெட் போட்டாச்சு என்று அவர் எப்போ உங்களுக்கு சொன்னார்மா?”
“அட சொல்ல மறந்திட்டேன்டி.. நீயும் நளாயினியும் வெளியே போய் கொஞ்ச நேரத்திலேயே மாப்பிள்ளை வந்திருந்தார். கொஞ்ச நேரம் இருந்தவர் அவசரமாய் புறப்பட்டு போயிட்டார். நீ வெளியில் போயிருக்கிறார் என்றதும் உன்கிட்ட அப்புறமாக பேசுறதாய் சொன்னார்” என்றார் சரோஜா.
அவர் வந்தாரா? என்னைத் தேடித்தான் வந்திருக்கிறார் என்று எண்ணிய அவளது மனம் ஆகாயத்தில் மிதந்தது. என்னை ஒருநாள்கூட பிரிந்திருக்க முடியாமல் தானே இங்கே தேடி வந்திருக்கிறார் என்ற நினைப்பு அவளைத் திக்குமுக்காடச் செய்தது.
தாய் கேட்ட கேள்வி நினைவு வரவும்
“அவர் போறதுக்கு இன்னும் இரண்டு நாள் ஆகும்ல.. அதுவரை இங்கே இருந்து நான் என்ன செய்ய. அவர் சிறிலங்கா புறப்படும்போது அவர் பயணத்துக்கு ரெடி பண்ணுற வேலை நிறைய இருக்கு. திங்ஸ் எல்லாம் ஃபாக் பண்ணனும். அவர் புறப்படும்போது அருகில் நான் இருக்கணும். அதுதான் இப்போவே உடனேயே நான் எங்க வீட்டுக்குப் புறப்படுறன்.”
“சரிடியம்மா… உன்னை நாங்க தடுக்கல. நீ தாராளமாய் உன் வீட்டுக்குப் போ. புருஷன் நினைவில் எங்களை முழுசா மறந்திடாமல் அப்பப்போ எங்களையும் நினைவில் வச்சுக்கோ” என்றார் சரோஜா.
“பாருங்கப்பா இந்த அம்மாவ. நான் உங்களையெல்லாம் மறப்பனோ?”
“ஏன் சரோ, என் பிள்ளையைக் கலாய்க்கிறாயா? என் குட்டிமா யாரை மறந்தாலும் எப்பவும் இந்த அப்பாவை மறக்க மாட்டாள். அப்படித்தானே குட்டிமா?” என்றார் குமார்.
ஓடிவந்து தன் தந்தையைக் கட்டியணைத்தவள்
“என் அப்பாவுக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே.. என் ஃபெர்ஸ்ட் லவ்வரே என் அப்பாதான்”
“ஆமா ஆமா நீ சொல்றதை நம்பிட்டோம்…” என்று சிரித்தாள் நளாயினி.
“நம்புறதுக்கு என்னவாம்…?”
“எங்கே சொல்லு பார்ப்போம்… உன் இனியனும் அப்பாவுக்கு அப்புறம் தானா உனக்கு…?”
“அது… அது…”
“என்ன பதிலைக் காணோம்.. இழுக்கிறாய். அப்பா இவளை நம்பாதிங்கப்பா”
“அக்கா நீ சொல்லு.. உனக்கு அத்தானா அப்பாவாக ஃபெர்ஸ்ட்?”
“அது… அப்பாதான்”
“பொய் சொல்லாதக்கா”
“விடுங்கடி… எல்லாப் பெண்களுக்கும் இப்படித்தான். கல்யாணம் ஆகிட்டா புருஷனுக்கு அப்புறம்தான் யாராயினும். அதுக்காக அப்பா, அம்மாவை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்களுக்கென தனித்துவமான அன்பைக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். கல்யாணம் ஆகிட்டா ஒரு பெண்ணுக்குக் கணவர்தான் உலகம். அந்த உலகத்தையே சுத்தி தன் வாழ்க்கையை அமைச்சுக்கிறாள். கணவனை மிஞ்சிய அன்பை யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அது அநதக் கணவர்களின் அன்பைப் பொறுத்தே. இதெல்லாம் சந்தோசமான அன்புப் பரிமாற்றம்” என்றார் சரோஜா.

எல்லோருமே சந்தோசமாக உரையாடியபடி அபிராமி புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அவளை அழைத்துச் சென்று விடுவதாக குமார் கூறியபோதும் அதனை மறுத்துவிட்டு வாடகைக் காரை ஒழுங்குபடுத்திப் புறப்பட்டாள்.

சில மணி நேரத்திலேயே தன் புகுந்த வீடு வந்து சேர்ந்தாள் அபிராமி. அவளைக் கண்டதும் நிலாவுக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது. எப்போது வருவாள் என ஏங்கிக் கொண்டு இருந்தவர் திடீரென அவள் வந்து இறங்கவும் சந்தோஷத்துடன் வரவேற்றார். அவளது வீட்டினரின் நலன் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார். சாவித்தியும் ஓடிவந்து தன் அண்ணியைக் கட்டியணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

தன் மாமியார், நாத்தனாருடன் உரையாடிக் கொண்டிருந்த போதும் பெண்ணவளின் மனமும் கண்களும் பரிதவிப்புடன் தன்னவனைத் தேடியது. வீட்டில் தமிழினியனைக் காணவில்லை. அமுதத்திற்குச் சென்றவன் இன்னும் வரவில்லை போல என்று எண்ணியவள் வழமை போன்று அவன் வரும்வரை காத்திருந்தாள்.

இரவு உணவுக்கும் அவன் வரவில்லை. அவளைச் சாப்பிட அழைத்த நிலாவிடம் தனக்கு பசிக்கவில்லை என்று கூறிவிட்டாள். ஆனால் நிலா அவளை அப்படியே விடவில்லை. அவளது மனதைப் படித்தவராக,
“அபிராமி, நீ இனியனுக்காகக் காத்திருந்து அப்புறம் சாப்பிடலாம் என்று நினைக்கிறாய் போல. ஆனால் அவன் கொஞ்ச நேரம் முன்னதான் ஹோல் பண்ணினான். வர லேட் ஆகுமாம். வெளியில் சாப்பாடு ஓடர் பண்ணி சாப்பிடுறானாம். அவன் வரும்போது வரட்டும். அவனுக்காகக் காத்திருக்காம நீ வந்து சாப்பிடம்மா” என்று சொன்னவர், கையோடு அவளை அழைத்துக்கொண்டு சென்று உணவைத் தானே பரிமாறினார். தான் போட்டுச் சாப்பிடுவதாக அபிராமி சொன்ன போதும் இன்று தானே அவளுக்குப் பரிமாற வேண்டும் என்று பிடிவாதத்துடன்இருந்தார். அவர் வைத்த இட்லியில் ஒன்றுகூட அவள் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. கஷ்டப்பட்டு ஒரு இட்லியைச் சாப்பிட்டவள் போதும் என்று எழுந்து விட்டாள். சிறிது நேரம் தோட்டத்தில் உலாவியவள் மனது நிலை கொள்ளாமல் தவிக்கவும் தங்கள் அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அப்பொழுதுதான் அருகில் இருந்த சிறிய மேஜையில் கசக்கியபடி கிடந்த காகிதம் கண்ணில் பட்டது. யோசனையுடன் அதனை எடுத்துப் பார்த்தவளுக்கு அதில் தெரிந்த தனது எழுத்துக்களைப் பார்த்ததுமே தான் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம் என்பது புரிந்தது. அது கசங்கி இருந்த விதத்திலேயே அதனை தமிழினியன் வாசித்திருக்கிறான் என்பது புரியவும் மனம் பதைபதைக்க கட்டிலில் இருந்து எழுந்தே விட்டாள்.

தான் செய்து விட்டுச் சென்ற முட்டாள்தனம் இப்பொழுதுதான் அவளுக்கு முழுமையாகப் புரிந்தது. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி பால்கனிக்குச் சென்றவள் தோட்டத்தை வெறித்தபடி நின்றாள். அவளது மனமோ பல்வேறு திசைகளிலும் சுற்றிச் சுழன்று தடுமாறி நின்றது.

இந்தக் கடிதத்தை வாசித்ததும் தமிழ் என்ன நினைத்திருப்பார். நான் காயத்திரியுடனான அவனது அன்பைத் தவறாகப் புரிந்து விட்டேன் என்று நினைத்திருப்பானோ? அதைவிட அவன் என்ன முடிவெடுத்திருப்பான்? என் எழுதியிருந்தபடி பிரிய எண்ணியிருப்பானா? அதைச் சொல்லத்தான் அம்மா வீட்டிற்குப் தேடி வந்திருப்பானோ? நினைக்கவே மனம் பதறியது. அதிகரித்த இதயத் துடிப்பை சமப்படுத்த கீழே அமர்ந்தவள் கண்களை மூடி மூச்சை சீராக விட்டாள். சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்துஅறைக்குள் வந்தாள். ஓரிடத்தில் நிலையாக நிற்கவோ இருக்கவோ முடியாமல் அறையை பலவாட்டி நடந்தே சோர்ந்தாள்.

நடந்து நடந்து கால்கள் சோரவும் கட்டிலில் சென்று அமர்ந்தவள் சிறிது நேரத்தில் தன்னை மீறி சரிந்து உறங்கிப் போனாள்.

தமிழினியன் வரும்போது இரவு வெகு நேரமாகிவிட்டது. அமுதத்தில் இன்று வேலை அவனை நெட்டித் தள்ளிவிட்டது. கடைக்கு வரவழைக்கப்பட்ட பொருட்களை சரி பார்ப்பதும் அவற்றைப் பிரித்து அடுக்குவதுமாக இன்று வேலை அதிகமாகிவிட்டது. குறிப்பிட்ட சில ஊழியர்களை மட்டும் வைத்துக் கொண்டு வேலைகளை முடித்தான். அவர்களுக்கு வேண்டிய உணவை வரவழைத்தவன் தான் உண்ண விரும்பாது தவிர்த்து விட்டான். வேலைக்கென நிறுத்தி வைத்திருந்தவர்களை பாதுகாப்பாக அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டே புறப்பட்டான். அதனால் அவன் வர நநள்ளிரவைத் தாண்டிவிட்டது. வீட்டில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் அவர்கள் தூக்கத்தைக் கெடுக்காமல் உள்ளே சென்றான்.

காவலாளி கேட்டைத் திறந்துவிட உள்ளே வந்தவன் தன்னிடமிருந்த சாவி மூலம் வீட்டைக் திறந்து மெதுவாக உள்ளே வந்தான். வீடே வெறிச்சோடி இருப்பதுபோல் அவன் மனம் எண்ணியது. என் அபி இல்லாத வீடு எனக்கு சிறைச்சாலைதான் என்று எண்ணியவன் பசித்த தன் வயிற்றிற்கு வஞ்சகம் செய்தான். சாப்பாட்டறைக்குச் சென்றவன் தண்ணீரை மட்டும் அருந்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றான். அறைக்குள் செல்லவே அவனுக்குப் பிடிக்கவில்லை. தன் ரசனைக்கேற்ப பார்த்துப் பார்த்து அழகுபடுத்திய தன் அறைக்குள் நுழைவது இன்று சிறைச்சாலைக்குள் நுழைவது போன்ற உணர்வைத் தருவதை அறிந்தான். உள்ளே நுழைவதற்கே வெறுப்பாக இருந்தது.

உடல் சோர்வு அவனைப் படுக்கைக்கு அழைக்க கதவைத் திறந்து அறை லைட்டைப் போட்டான். ஓய்வுக்குக் கெஞ்சிய கால்களைச் சிரமத்துடன் அசைத்து கட்டிலுக்கு அருகே சென்றான்.

கட்டிலில் அவனதுஅபி படுத்திருப்பது போலத் தோன்றியது. இது என்ன உணர்வு… இன்று காலையில் இருந்து எங்கு பார்த்தாலும் அபி நிற்பது போலவும் இருப்பது போன்ற உணர்வுமே தோன்றியது. ஆசை கொண்ட தன் மனதிற்கு எங்கு பார்த்தாலும் அபியாகத் தோன்றுகின்றதே. தன் மனதை தட்டி அடக்கினான். அவள் இங்கு எங்கே இருக்கப் போகிறாள். என் மனதைக் கொள்ளை கொண்ட ராட்சசி என்னை உயிரோடு கொன்றுவிட்டு என்னைவிட்டுப் போய்விட்டாளே என்று வேதனையுடன் கண்களை மூடினான்.

கட்டிலுக்குச் சென்றாள் அவள் வாசமும் நினைவும் தன்னைப் பாடாய் படுத்தும் என்று தோன்றவும் தான் வழமையாகப் படுக்கும் சோஃபாவில் சென்று அமர்ந்தான். தலை வலிப்பது போல இருக்கவும் நெற்றியைத் தேய்த்துவிட்டபடி கண் மூடி அமர்ந்திருந்தான்.
 
Top