எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 14

subasini

Moderator
பகுதி - 14



காலைக் கதிரின் வெளிச்சம் தன் முகத்தில் படவும் கண்களைத் திறந்தான் கதிர் வேந்தன்.



கண் திறந்ததும் தன் முன்னே தேனீர்க் கோப்பையோடு நிற்கும் மனைவியைத்தான் பார்த்தான்.



அவளிடம் இருந்து டீக் கோப்பை வாங்கியவன் அவள் கண்களைப் பார்த்து “இன்னைக்கு நான் வெளியூர்ப் போறேன்… வேலை விஷயமாக, வர்றதுக்கு நாட்கள் ஆகும் அது வரைக்கும் உனக்கு டைம் தரேன், பொறுமையா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு” என்றான்.



“என்ன முடிவைச் சொல்லணும்” என்றாள்.



“விவாகரத்து வேணுமா வேண்டாமா என்று தான்”.



“வாழ்க்கை ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள முடிக்கிற எண்ணத்தோடு ஏன் பேசுறீங்க”



“காதலே இல்லாத இந்த வாழ்க்கையை எங்கே ஆரம்பிக்கிறது, இந்தத் திருமணப் பந்தம் கடைசி வரை நாம் சேர்ந்துப் பயணிப்போம் என்று எனக்குத் தோன்றவில்லை”



“காதல் இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா?… ஏன் இப்படி எல்லாம் பேசி என் மனசு நோகடிக்கிறீங்க”… என்று கண்களில் நீரோடு நின்றாள் மதுமிதா.



“காதலா?… அதுவும் உனக்கா?… இந்தப் பெண் பித்தனிடமா? உனக்குக் காதல்” என்று சத்தமாகச் சிரித்தான்.



“நம்பும் படியான எதாவது பேசு, இப்படியெல்லாம் பொய்யா எந்த விஷயமும் பேசி என்னை ஏமாத்தாதே, உன்னை நம்புற எந்த எண்ணமும் எனக்கு இல்லை” என்று அவள் கையில் டீக் கப்பைக் கொடுத்த கதிர்வேந்தன் எழுந்துக் குளியல் அறைக்குச் சென்றான்.



“அன்றைக்கு ஏன் அப்படி எல்லாம் பேசினேன் என்று உங்களுக்கு நான் தெளிவாகக் கூறுகிறேன்... கொஞ்சம் பொறுமையாக என் பேச்சைக் கேளுங்கள்” என்று குளியல் அறையின் கதவின் முன்னே நின்று அவனிடம் கெஞ்சினாள் மதுமிதா.



குளித்துவிட்டு வெளியே வந்தவன் தலையைத் துவட்டியபடியே “நீ அன்றைக்குச் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன்... பிடிக்காத ஒரு திருமணப் பந்தத்தில் உன்னைப் பிடித்துக் கட்டி வைத்து வேதனைப்படுத்த என்னால் முடியாது, என் காதல் மனமும் அதைச் சம்மதிக்காது” என்றான் கதிர் வேந்தன்.



“பிடிக்காத திருமணப் பந்தம் என்று நான் சொன்னேனா… நீங்களா ஒன்றைக் கற்பனைப் பண்ணி, இப்படி எல்லாம் முடிவெடுக்காதீங்க… நீங்க பண்றது ரொம்பத் தப்பு”… என்றாள் வேதனையோடு.



“எதும்மா, தப்பு நீ ஏன் சொல்ல மாட்டாய்?” என்றவன்



மெல்ல அவள் அருகில் வந்து “நான் தாலிக் கட்டினது தப்பாவே இருக்கட்டும், உன் கழுத்தில் தாலிக் கட்டினேனா, அதற்காவது ஒரு முடிவைச்சொல்லிட்டுப் போயிருக்கலாம், இல்லை தாலியைக் கழற்றி என் முகத்தில் எறிந்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் நீ என்ன பண்ணினே, எங்கே போனாய் என்று யாரிடமும் சொல்லவில்லை.

எங்க இருக்க என்ன பண்ணுற எதுவுமே தெரியாமல் ஒரு பைத்தியக்காரனை மாதிரி நான் உன்னைத் தேடிட்டு இருக்கேன். உனக்குத் தெரியுமா? ” என்று கேட்டான்.



“நீ எங்கே இருக்கே என்பது எனக்குத் தெரியக் கூடாது என்ற, உன் எண்ணமே எனக்குச் சொல்லுது... நாம் பிரிந்து விடலாம் என்று. எனக்கு மட்டும் காதல் இருந்து என்ன பண்ண” என்றான் வேந்தன்.

“பின்னர் எதற்காகத் திரும்பவும் என் கழுத்தில் தாலிக் கட்டினீங்க, வந்தவழியில் நான் திரும்பிப் போயிருப்பேனே” என்றாள் மதுமதிக்குக் கண்ணீரோடும் வார்த்தையில் கோபமுமாக.



“நான் இரவு பகலாகத் தேடிய என் மனைவி கண் முன்னே நிற்க எப்படிப் போக விடுவேன், என் மனதில் இருந்த காதலை நம்பி மீண்டும் செய்தத் தவறையே திரும்பவும் செய்து விட்டேன்”என்றான் கதிர் வேந்தன்.



தாலிக் கட்டியதையே தவறு என்று நினைக்கும் அவன் எண்ணங்கள் உண்டாகிய வலியைத் தாங்க முடியாமல் துடித்தாள் மதுமிதா.



“ஒரு கை ஓசை எழுப்பாது. அதே போலத் தான் நான் மட்டுமே நினைத்து இந்தத் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியாது. என் மனைவியின் துணையும் வேணும்.அதாவது மதுமிதா உங்களோட ஒத்துழைப்பைத் தான் நான் சொல்லறேன்” என்றவன் தன் பயணப் பெட்டியைத் திறந்துத் தனக்கான எல்லாம் எடுத்து வைத்தான்.



கணவனிடம் எப்படித் தன் காதலைப் புரிய வைக்க என்று தடுமாறிப் போனாள் மதுமிதா.



தன் கையளவு இதயத்தில் கடலளவுக் காதலை எப்படி உணர வைப்பாள்.



அலையைப் போல அவனை மீண்டும் மீண்டும் தீண்டித் தீண்டிச் சென்றால் தான் உணரமுடியும் என்பதைப் புரிய அவன் அருகில் வந்து நின்றாள்.



என்ன என்பது போல் விழி உயர்த்தி அவளையே பார்த்தவன், “ உன் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியும்‌ அதனால் பயம் வேண்டாம்” என்று அவளைக் கடந்து போகும்போது அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள், அவன் கண்களில் ஊடுவருவகப் பார்த்தவாறே

“உங்களுடைய காதலைப் போன்ற எல்லாம் என் காதல் உயர்ந்தது இல்லை, உங்களைப் போன்ற பெருந்தன்மையும் எனக்கில்லை… எனக்கான காதல் எனக்கு வேண்டும் அதை நான் எடுத்துக் கொள்வேன்” என்றவள் எக்கி அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தாள்.



அவன் இதழில் இருந்து தன் இதழ்களைப் பிரித்து அவன் விழிகளைப் பார்த்தவளிடம் “ இரண்டு உடல் சேருவதற்கு இப்போது நடந்த எல்லாமே போதும், ஆனால் மனசு சேருவதற்குக் காமம் தேவை இல்லை, காதல் மட்டுமே வேண்டும். உன்னிடம் எனக்கான காதலை நான் இப்பொழுது வரை உணரவே இல்லை அப்பறம் எப்படி மனம் பொருந்தி நான் இந்தத் திருமண வாழ்க்கையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.



அவன் பேசியது கேட்டது அவளது காதல் இதயம் சில்லுசில்லாகச் சிதறிவிட்டது. இனி அவனிடம் எப்படி நெருங்குவாள். கண்கள் கலங்க அமைதியாக நின்றாள்.

அதிகப்படியாகப் பேசி விட்டோம் என்று உணர்ந்தக் கதிர்வேந்தன் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான். அவளைக் காயப்படுத்த வேண்டும் என்று தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தி விட்டோம் என்று தோன்றியது அவனுக்கு. ஆனால் அவனுடைய ஆண்மனது அவளிடம் போய் மன்னிப்புக் கேட்கத் தடுத்தது. எதுவும் சொல்லாமல் தன்னுடைய பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டு தன் தாயைக் காண வந்தான்.



"எவ்வளவு நாள்டா ஆகும்? நீ திரும்பி வருவதற்கு" என்று கேட்டாள் பானுமதி.



"எப்படியும் ஒரு மாசம் ஆகும் அம்மா" என்றான் கதிர்வேந்தன்



“திருமணமான அடுத்த நாளே இப்படி ஊருக்குப் போறேன் என்று நின்று கொண்டு இருக்கியே, உனக்கே இது நல்லா இருக்கா? உன் மனைவிக்கு எவ்வளவு சங்கடமா இருக்கும் என்று யோசிக்கவே இல்லையா டா, உங்களுக்குள்ளே நிறையப் பிரச்சனைகள் இருக்கு, இந்த நேரத்துல நீ வெளியூர்ப் போவது சரி வருமா என்று யோசிச்சியா” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார் பானுமதி.



அதெல்லாம் அவளிடம் சொல்லிவிட்டேன், புரிஞ்சுக்கொள்வாள்" என்றான் கதிர்வேந்தன்.



அப்பொழுது முகம்‌வாட அங்கே வந்த மதுமிதாவைப் பார்த்தப் பானுமதி

"என்னம்மா ஒரு மாதிரி இருக்க" என்று கேட்டார்.



"ஒன்றும் இல்லை அத்தை" என்று அவனையே பார்த்தாள்.



அவளின் வேதனை நிறைந்த முகத்தைக் கண்டு மனதினுள் அவளைச் சமாதானப்படுத்த காதல் அவனை உந்தியது ஆனாலும் அவள் மேல் இருக்கும் எல்லையற்றக் கோபம் அவனைத் தடுத்து நிறுத்தியது.





பெண்ணவளுக்கோ அவனுக்கு எப்படித் தன் காதலை உணர வைப்பது என்பதில் மிகவும் குழப்பமாக இருந்தது வார்த்தைகள் தாண்டி உணர்வுகள் மட்டுமே காதலைக் கொண்டு சேர்த்தும் என்பதை நம்பினால் அவள். அதனால் தான் அவனிடம் தன் காதலை முத்தத்தின் மூலம் உணர வைத்தாள். உணர வேண்டியவனோ அதை வேறு மாதிரிப் பேசி அவளைக் காயப்படுத்தி விட்டான். இந்தக் காயம் அவளைக் காலம் காலமாக வாட்டி வதைக்காதோ. எப்படி அவனை நெருங்குவாள். அந்தப் பயமே அவளைக் கொன்றது.



காதலில் ஊடலும் மோதலும் என்றும் நிரந்தரமானவை என்பது காலம் அவர்களின் உணர வைக்கும்.



மித்ராவுக்கு இன்று தான் கல்லூரியின் முதல் நாள் அவளைக் கொண்டு போய் விடுவதற்குத் தருண் ரெடியாகி வந்தான்.



ஒரு தயக்கத்தோடும் பயத்தோடுமே மித்ரா இறங்கி வந்தாள்.



எந்தவிதமான ஒப்பனையும் இல்லாமல் கல்லூரிப் பெண்களுக்கு உரியத் துள்ளல் அவளிடம் சிறிதும் இல்லை. முகத்தில் ஒரு சோகம் இளையோட அங்கே வந்திருந்தாள்.



தருணுடன் செல்வதற்கு ஒரு தயக்கம் அவளிடம் இருந்தது. வெளியூர்ச் செல்லத் தயாராகி நின்றிருந்த கதிர்வேந்தனிடம் வந்தாள் மித்ரா. அவனைப் பார்த்து "அண்ணா இன்று எனக்குக் கல்லூரியின் முதல் நாள், நீங்க என்ன ஆசிர்வதிக்கணும்" என்று அவன் எதிர்பாராத நேரம் அவன் காலில் விழுந்தாள்.



தங்கையின் இந்தச் செயலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை கதிர் வேந்தன். அவள் மேல் அவனுக்கு இருந்த வருத்தமும் சூரியனைக் கண்டப் பனிபோல் மறைந்தது.



வேகமாக அவளை எழுப்பி விட்டவன் "வாழ்க்கையில் உனக்குத் கிடைத்திருக்கும் இரண்டாவது சந்தர்ப்பம். உன்னோட வாழ்க்கை இனிமேலாவது நல்லா இருக்கணும்னு என்பதுமட்டுமே இந்த அண்ணனோட ஆசை. நன்றாகப் படி... உனக்கு என்ன வேண்டும் என்றாலும் யோசிக்காமல் அண்ணாவிடம் கேளு... உன் மேல் கோபம் இருந்தது தான் அது கடந்த காலம்... இப்போது இருப்பது என் மித்துக்குட்டியின் கதிர் அண்ணா மட்டுமே". என்று அவளை அணைத்தவன் "எல்லாம் சரியாகும்" என்றான் கதிர்வேந்தன்.



அனைவரிடமிம் கூறிவிட்டு வேகமாக வெளியே வந்தான். தங்கையின் நினைப்பிலேயே வெளியே வந்தவனுக்கு அப்பொழுதுத் தான் தன் மனைவியிடம் விடைப் பெறவில்லை என்பது புரிந்தது. சிறிது நேரம் நின்றவன். மனசு கேட்காமல் திரும்பியவன், மனைவியைத்தான் பார்த்தான்... அங்கே தன்னிடம் விடைப் பெற்றுச் செல்வானோ! இல்லை கோபத்தோடு போயிருவானோ! என்ற குழப்பத்திலேயே கண்களில் நீரோடு அவனே பார்த்துக் கொண்டிருந்தாள் அதைக் கண்டதும் அவனுடைய மனம் இலக்கியது கோபம் மறைந்து அவளைப் பார்த்துப் "போயிட்டு வரேன்" என்று தலையை அசைத்து விடைபெற்று, தன் காரில் ஏறிச் சென்றான்.



கணவன் சென்றதே பார்த்தவளுக்குத் திரும்பி நின்றுத் தன்னிடம் சொல்லிட்டுச் சென்ற செயலில் ஒரு நம்பிக்கைப் பிறந்தது. தன் காதலை அவன் உணரும் முதல் படியாக மனதில் நம்பிக்கை வளர்த்துக் கொண்டாள் மதுமிதா.



தன் அண்ணன் தன்னிடம் பேசியதை மிகவும் சந்தோஷமாக இருந்தது மித்ராவிற்கு, அவள் மீண்டும் தன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில், ஒரு நல்ல தொடக்கமாக அவள் நினைத்தாள். அதனால் மிகவும் ஆனந்தத்தோடு கல்லூரிக்குச் செல்ல அனைவரிடமும் விடைப் பெற்று நடந்தாள்.



அவளைப் பின்தொடர்ந்து தருணும் சென்றான். அவளைக் காரின் முன்னிறிக்கையில் கதவைத் திறந்து விட்டு அமர வைத்தவன், கல்லூரியை நோக்கிக் காரை வேகமாக ஓட்டினான்.



அந்தக் கார்ப் பயணம் அமைதியாக இருந்தது. தன் அண்ணனிடம் கூட மன்னிப்புக் கேட்டுப் பேசிய மித்ராவிற்குத் தருணிடம் எங்கே எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று தெரியவே இல்லை... அவளும் அவனிடம் கேட்கவில்லை, அவனும் அவளிடம் சொல்லவில்லை, கல்லூரிக்குக் கொண்டு போய் விடுவதைப் பற்றி. ஆனால் அந்த நிகழ்வு அதுவே நடந்தேறியது. அவள் சொல்லாமலும் அவன் கேட்காமலும்.



இனிவரும் வாழ்க்கையில் அவர்களுக்கிடையே நடக்கும் எல்லாம், இதே போன்று தான் நடக்கும் என்பதில் ஐயமில்லை. அவள் எதுவும் சொல்லவும் மாட்டாள் அவன் எதுவும் அவளிடம் கேட்கவும் மாட்டான்.



தன்னுடைய சிந்தனையிலேயே இருந்தவளுக்குக் கல்லூரி வந்து சேர்ந்தது உணரவில்லை. ஏன் இப்படி அமர்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று அவளைத் திரும்பிப் பார்த்தத் தருணுக்குப் புரிந்தது.

கடந்தக்காலத்தை நினைத்து வேதனையில் தவிக்கிறாள். அப்படியே ஐந்து நிமிடம் காத்திருந்தவன், பின் மெல்ல ஹாரன் அடித்தான். அந்த ஹாரன் ஒலியில் சட்டு என்று நிகழ்காலத்திற்கு வந்தாள்.



அப்பொழுதுதான் அவளுக்குத் தருணுடன் கல்லூரிக்கு வந்தது நினைவு வர, திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். அவனோ அவள் மதிமுகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் முகத்தில் இருக்கும் அமைதியும் அந்தப் பார்வையில் இருப்பதும் புரியவில்லை மித்ராவிற்கு. ஆனால் அவனிடம் பேசுவோ அவனிடம் நெருங்கவோ பயம் மட்டுமே மனதில் இருந்தது.

அந்தப் பயம் எதனால் என்று அவளுக்குப் புரியவில்லை. இவனிடம் நாம் ஏன் இப்படிப் பயப்படுகிறோம், பதட்டம் அடைகிறோம் என்று அவள் சிந்திக்கவும் இல்லை.



மெல்லக்காரின் கதவைத் திறந்துக் கல்லூரிக்குச் சென்றாள்.



செல்லும் மித்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தான் தருண். அவளை எப்படித் தன்னவளாக்குவது என்பது மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணமாக இருந்தது.



தன் துயரத்திலிருந்து அவளை வெளிவரச் செய்வதற்கு, என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவனுக்குத் தெரியவில்லை.



பேசிப் புரிய வைக்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ, காதல் என்ற வார்த்தையைக் கொண்டு மதுரமாக ஆரம்பிக்கவோ எதுவுமே முடியாத சூழலில் அவன் நின்று கொண்டிருந்தான்.



அவனுக்கு அவன் காதலுக்கும் எந்த ஒரு சந்தர்ப்பமும் வழியும் இல்லாமல் ஒரு மூலையில் நிற்க வைத்திருந்தது இந்தக் கடவுள்.





காத்திருக்கும் ஒவ்வொரு தருணமும்

காதலின்றி என்னைக் கடந்த செல்கிறது…



காதலில் காத்திருப்பதெல்லாம்

சுகத்தைத் தருமென்றால்

ஆயுசு முழுவதும் காத்திருக்கலாம்…



என் காத்திருப்போ…

அவள் பிள்ளைக்குத் தந்தையாக

என் மரணம் வரை வாழ்வதற்கு…



அவன் கைப்பிடித்து நடந்து செல்ல…

நோகும் மனதிற்கு மருந்தாகும்

அவன் பிஞ்சு விரல்கள்….



அவள் பிள்ளைக்கு என்

மகனென்ற மகுடம்

அவள் கழுத்தில் நான் கட்டும்

மங்களநாண்…

எனக்கும் அவனுக்காமான

தொப்புள் கொடி உறவாக

என்றும் நம் வாழ்வில்….



தொடரும்...
 
Top