எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உறவாக வந்த உயிரே 27(இறுதி அத்தியாயம்)

S.Theeba

Moderator
அந்நேரம் கட்டிலில் தூக்கத்தில் இருந்த அபிராமி மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள். இன்னுமா தமிழ் வரவில்லை. சாப்பிட்டிருப்பாரா? என் நினைவு அவருக்கு இருக்குமா? அல்லது நான் கூறியதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற மனநிலையில் இருப்பாரோ? இப்போது நான் இங்கே வந்ததை அறிந்தால் அவர் என்ன மாதிரி உணர்வார்? இவ்வாறு பலதையும் யோசித்தபடி இரவு விளக்கின் மெல்லிய நீல நிற வெளிச்சத்தில் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தவள், மெல்ல எழுந்து அறையின் மற்றைய விளக்குகளை ஒளிர விட்டாள்.

அப்போதுதான் முன்னறையில் சோஃபாவில் முகத்தைத் கைகளில் புதைத்தபடி அமர்ந்திருந்த தமிழினியன் கண்களில் பட்டான். படபடக்கும் மனதுடன் அவன் அருகில் சென்றவள் அவனை மெல்ல அழைத்தாள். ஆனால் அவளது குரல் வெளியில் கேட்கவேயில்லை. தன் தொண்டையை மெதுவாகச் செருமினாள். அந்தச் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் அங்கும் அவள் கனவாகவே நிற்கிறாள் என் நினைத்து மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான். மெல்லத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன் கையை நீட்டி சோஃபாவில் இருந்தவனின் கைகளில் மெதுவாகக் கிள்ளினாள். அப்போதுதான் உணர்வுவரப் பெற்றவனுக்கு அபிராமி கனவாக அல்ல நிஜமாகவே அங்கே இருக்கின்றாள் என்ற உண்மை புரிந்தது. சந்தோசத்தில் தடுமாறியவன் பாய்ந்து சென்று தன்னவளை அள்ளி அணைத்தான். பல நூறு வருடங்கள் பிரிந்து சென்றவள் மீண்டும் வந்தது போலவே அவனுக்குத் தோன்றியது.

அவளுக்கும் அவனுக்கும் இடையில் காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக்கி அணைத்திருந்தான். அவனது இறுக்கமான அணைப்பு சற்று வலியைத் தந்தபோதும் அந்த வலியே ஒரு சுகத்தை தந்ததை அவள் பெண்மை உணர்ந்தது.

அந்த இறுகிய அணைப்பிலேயே சற்று நேரம் தன்னை மறந்து லயித்திருந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக அவளிடமிருந்து தன்னை சிரமப்பட்டு விடுவித்தான். அவள் மனநிலை எப்படி என்பதை அறியாமலேயே தான் அவசரப்பட்டு அணைத்ததை எண்ணி வெட்கியவன் அவளிடம்,
“சாரி, நான்.. நான்.. ஏதோ நினைவில் இப்படி நடந்திட்டேன்” என்று திக்கில் திணறி அவளிடம் மன்னிப்பை வேண்டினான். எதற்கு இப்போது மன்னிக்கச் சொல்கிறான். தன் மனைவியை அணைத்தால் யாராவது மன்னிப்பை வேண்டுவார்களா? என்று தனக்குள் செல்லக் கோபத்துடன் எண்ணினாள். ஆனாலும் அவள் மனம் சிறகின்றியே வானில் உல்லாசமாக வட்டமிட்டது. இந்த அணைப்பின் மூலம் அவன் கொண்ட தேசத்தில் துளியளவும் மாற்றமில்லை என்பதை உணரமுடிந்ததை எண்ணியே மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அவனோ தான் அமர்ந்திருந்த இடத்திலேயே மீண்டும் அமர்ந்து கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான். அவளோ அவன் அணைத்த கதகதப்பு இன்னும் உடலோடு இருக்க ஒரு சிலிர்ப்போடு நின்றிருந்தாள்.

அவளைக் கண்டதும் எவ்வளவு ஆனந்தம் தென்பட்டதோ அதற்கு எதிர்மாறான தோற்றம் அவன் வதனத்தில் தோன்றியது. அவன் முகத்தில் சந்தோஷம் மாறி சிறு இறுக்கம் தோன்றியது. இமைகள் இலேசாக இடுங்க அவளை ஆழ நோக்கினான். அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு வார்த்தைகள் இன்றி பூரணமாக விளங்கியது.

"உன்னிடம் நான் முக்கியமான விஷயமாக பேசவேண்டும். இப்போது உன்னால் முடியுமா? இரவு ரொம்ப நேரமாகிவிட்டது. அதுதான் கேட்கிறேன். அல்லது தூக்கம் வந்தால் போய் தூங்கு. காலையில் பேசுவோம்" என்றான்.
அவளுக்கு அவன் என்ன பேசப் போகின்றான் என்பது தெரிந்த போதும் அவனது மனப்பாரத்தை தீர்க்கவும் அதற்கான விளக்கத்தை அவன் பெறவும் தன் பக்க நியாயத்தைத் தான் எடுத்துக் கூறவும் நிச்சயம் அவன் பேச வேண்டும் என்பது புரிந்தது. எனவே
“இல்லை நான் இப்போதுதான் தூங்கி எழுந்தேன். இனித் தூக்கம் வராது. உங்களுக்குத் தூக்கம் வந்தால் நீங்கள் படுங்கள். இல்லாவிட்டால்… நீங்கள் சொல்லுங்கள்” என்றவள் அவன் அமர்ந்திருந்த சோஃபாவில் சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டாள்.

சில கணங்கள் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தவன், நிமிர்ந்து
"நான் நேற்று சொன்னதை வைத்து நீ என்னை தவறாகப் புரிந்து கொண்டு விட்டாயோ என்று தோன்றுகின்றது. நான்… நான் காயத்திரி மீது வைத்திருப்பது ஆழமான அன்புதான். அது நட்பு கலந்த பாசம் மட்டுமே. இன்னும் சொல்லப் போனால் எனக்கு நிறுவும் ககாயத்திரியும் ஒன்றுதான். அது காதல் அல்ல. அவள் நலனில் எனக்கு அக்கறை இருக்கு. சாவித்திரிக்கு இப்படி ஒரு நிலை வந்தால்… அப்படி வரக்கூடாது… அவளைத் தவிக்கவிட்டு சந்தோசமாக என்னால் வாழ முடியுமா? அதேபோலத் தான் காயத்திரியை இப்படித் தவிக்க விட்டு என்னால் முடியல. அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவே எண்ணினேன். அப்புறம் அவள் குழந்தை வினு… இல்லை.. என் வினு மீது எனக்கு அளவுகடந்த பாசத்தை வைத்துவிட்டேன். அவனும் என்மீது பாசத்தைப் பொழிகின்றான். என்னைத் தன் தந்தையாகவே எண்ணியே அக் குழந்தை வாழ்கின்றான். அந்தப் பிஞ்சுக் குழந்தையிடம் நான் உன் அப்பா இல்லை என்று சொல்லி அதன் மனதை நோகடிக்க என்னால் முடியவில்லை. எப்போதும் முடியாது. அவன் அப்பா என்று அழைக்கும் போது என் உலகமே மறந்துவிடும். எப்படி அப்படியான பாசம் எனக்குள் உண்டானது என்று புரியவில்லை. ஆனால், அவன் என்னை அப்பா என்று அழைப்பதை நீ எப்படி ஏற்பாயோ என்பது மட்டுமே என் கலக்கம். உனக்குப் பிடிக்காவிட்டால் அதை எப்படி ஏற்று என்ன செய்வது என்றுகூட என்னால் யோசிக்க முடியவில்லை. ஆனால்… ஆனால் நீ… அதைத் தவறாகப் புரிந்து கொண்டு, என் அன்பைப் புரிந்து கொள்ளாமல் வழங்கும் என்னைவிட்டு போவதாக எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டாயே ..." அவன் குரல் கம்மியது.

அபிராமிக்குத் தான் செய்த தவறு எவ்வளவு பெரியது என்பது புரிந்தது. என் தமிழ் நான் எழுதி வைத்துவிட்டுச் சென்ற அந்தக் கடிதத்தால் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார். அவரை நான் புரிந்து கொள்ளவில்லை என்றல்லவா எண்ணியிருக்கார். அவரை நான் முழுமையாக புரிந்து கொண்டதால் தானே அப்படி ஒரு முடிவை எடுத்தேன். எப்படி இவருக்கு வார்த்தைகளால் புரிய வைப்பது என்று எண்ணியபடி அவனது கையை ஆறுதலாகப் பற்றிக் கொண்டாள்.

பற்றிய அவளது கையை இன்னும் இறுக்கமாகப் பற்றியவன் மீண்டும் தொடர்ந்தான். "எனக்கு நீ, என்னை விட்டு போனதும் செத்துவிடலாம் போலத் தோன்றியது...” என்று கூறும்போதே அவன் கண்கள் கலங்கியது.

அவனது கலக்கத்தைப் பொறுக்க முடியாதவள் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து தன் தலையை அவள் தோள் மீது சாய்த்துக் கொண்டாள். அச் செய்கை எப்போதும் நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்று உணர்த்துவது போல் இருந்தது. அதில் சற்று தேறுதல் அடைந்தவன் அவளது தோள்களைச் சுற்றி இடது கரத்தால் அணைத்தான். வலது கரத்தால் அவளது ஒரு கையைப் பற்றிப் பிடித்தபடி தொடர்ந்து பேசினான்.

“என் இக்கட்டை உன்னிடம் சொல்லி அதற்கான தீர்வைத் தான் கேட்டேன். நீ என்னைப் பிரிந்து போக முடிவெடுத்தால், அதனை நான் ஏற்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன்… ஆனால் நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று இந்த ஒரு நாளே எனக்கு உணர்த்தி விட்டது. அபிம்மா… நீ என் உயிர். உயிர் உடலை விட்டுப் போனால் உடல் என்ன செய்யும். நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணுறேன் என்று வார்த்தைகளால் விவரித்துவிட முடியாதுடி. ஐ லவ் யூ அபிம்மா. ஐ லவ் யூ டி." வார்த்தைகளில் காதல் நிறைய கண்களில் கண்ணீர் தளம்ப அவளின் கன்னங்களை பற்றி உதடு துடிக்க நின்றான். அவன் காதலில் உருகி நின்ற பேதையவளுக்கு அவன் கலங்கிய கண்கள் அவனது காதலின் ஆழத்தை எடுத்துரைத்தது. அவன் கலக்கத்தைப் போக்க எண்ணியவள்,
"அச்சச்சோ.. ஏனப்பா என்னைக் காதலிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமா இருக்கா? இப்படி கண்ணீர் வடிக்கிறிங்க. இது தெரியாமல் நான் சாதாரணமாக காதலித்து விட்டேனே."
"ஆமாண்டி என் அபிக்குட்டி" என்றவன் தன் தவிக்கும் உதடுகளால் அவள் உதடுகளை சிறைபிடித்தான். எவ்வளவு நேரம் அந்த முத்தம் நீடித்தது என இருவருக்கும் தெரியவில்லை. அவள் உதடுகளை பிரிய மனமின்றி பிரிந்தவன் அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டே பேசினான். "அபிம்மா.. வினு என்னை அப்பா என்று அழைப்பதில் உனக்கு எந்தக் கஷ்டமும் இல்லையே. வினுவையும் காயத்திரியையும் நாமதான் பார்த்துக்க வேண்டும். அவங்களுக்கு நம்மை விட்டால் வேறு யாரும் இல்லை" என்று தவிப்போடு கேட்டான்.

அப்போது தான் இன்று காயத்திரி வீட்டிற்குச் சென்றதையும் அவளது வேண்டுகோளையும் அபிராமி தன்னவனிடம் கூறினாள். அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியானது.
"காயத்திரி பாவம். இனியாவது அவள் தனக்கான வாழ்க்கையை வாழட்டும். அவளுக்கு சின்ன வயதில் இருந்தே வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தது. அவள் வாழ்க்கை எங்கேயோ திசை மாறிப் போச்சு. இனிவரும் காலங்களிலாவது அவளுக்கு சந்தோஷம் கிடைக்கணும். அபிம்மா வினுவை நம்மகூட வைத்திருக்க உனக்கு சம்மதமா "
"என்னப்பா இப்படி கேட்கிறிங்க. ஒரு குழந்தையை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? அதிலும் அவன் என்னவருக்கு பிடித்தவன் என்று சொல்லும்போது நான் நூறு மடங்கு அதிகமாக அவன்மீது பாசத்தையும் பரிவையும் காட்டமாட்டேனா. ஆனால்..”
“என்ன ஆனால்…”
“காயத்திரி அவுஸ்திரேலியா போறது நல்ல விஷயம்தான். ஆனால் அவங்களை அப்படியே விடுறது சரியில்லை. நாமளே அவங்களுக்கு ஒரு துணையைத் தேடனும். வினுவைக் காலம் முழுதும் நாமளே பார்த்துக்கலாம். அவன் நமக்கு முதல் குழந்தையாக எப்பவும் இருக்கணும். காயத்திரியிடம் அடிக்கடி கூட்டிப் போய் வருவோம்”
அவன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான்.
“நான் சொன்னதில் ஏதும் தப்பாயில்லைதானே. ஏனப்பா அப்படிப் பார்க்கிறிங்க?”

"அபிக்குட்டி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பாடா... நான் என்ன நினைத்தேனோ அதை உன் வார்த்தைகளால் கேட்கிறேன். எனக்கு இப்போதான் ரொம்ப நிம்மதியாக இருக்கு. இதை முதலிலேயே பேசியிருக்க வேஸ்டா போயிருக்காதே. ச்சா.. பெரிய தப்பு பண்ணிட்டன்."
"இப்போ என்ன வேஸ்டா போச்சு.. புரியல."
"உனக்குப் புரியாதுதான். எவ்வளவு நாள்... போதும்டா சாமி. டேய் இனியா இனியும் பேசிக்கொண்டிருந்து டைமை வேஸ்ட் பண்ணாதடா மடையா" என்று தனக்குத் தானே கூறியவன் அதற்குப் பிறகு தானும் பேசவில்லை. அவளையும் பேசவிடவில்லை.

❣️சுபம்❣️

காயத்திரி மறுவாரமே அவுஸ்திரேலியா பயணமானாள். வினு தன் அப்பாவுடனும் புது அம்மாவுடனும் சந்தோஷமாகத் தன் அம்மாவை வழியனுப்பினான். காயத்திரி கலங்கும் விழிகளுடனும் மனதில் புதுத் தெம்புடனும் தன் எதிர்காலக் கனவுகளைத் தேடிப் பயணமானாள்.
 
Top