எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 24

subasini

Moderator
பகுதி - 24



தன் முன் கைகள் பிசையத் தடுமாறி நின்று கொண்டிருந்த மித்ராவைக் கண்டதும் அவன் இதழில் புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது…



"உனக்கு என்ன தான் பிரச்சனை மித்ரா" என்று சலிப்போடு கேட்டான் அவளிடம்…



“நீங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியணும்… உங்களுக்குன்னு ஒரு திருமணமானால்… என் மகன் வாழ்க்கையில் இன்னிக்கு நீங்க தரும் அன்பும் பாசமும் அப்போது குறைவாகலாம்… இல்லை உங்கள் மனைவிக்கு அது பிடிக்காமல் போகலாம்… இப்படிப் பல பிரச்சினைகள் அதற்குப் பின்னே இருக்கு… எதிர்காலத்தில் நீங்களும் அவனும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகவே தான், நான் உங்களிடம் இப்பொழுதுப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்”… என்றாள்.



அவன் மனதில் இருக்கும் காதலி அவள் தான் என்ற எண்ணம் ஆழமாகப் பதியவில்லை…



பெண்ணவள் மனதில் சிறு வயதிலேயே பதிந்த விஷயம் அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் … அவள் பெயர் மீரா என்பதும் …அந்த மீரா யார் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.

இப்பொழுது அவன் காட்டும் நெருக்கமும் மகனின் மேல் காட்டும் அக்கறையும் தன் மேல் இருக்கும் பரிதாபத்தினால் உண்டானது என்பது அவள் எண்ணமாக இருந்தது. அதனால் அவனுடைய வாழ்க்கைத் தன்னால் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்தாள் மித்ரா.



அத்தை மகனுக்குத் தன் மேலிருக்கும் இரக்கம் காரணமாகத் தன் காதலைத் தியாகம் செய்து... தனக்கு வாழ்க்கைத் தர முயலுகிறான் என்று சிந்தித்தாள்.. அவனின் செய்கையும் அப்படித்தான் இருந்தது இவ்வளவு வருடங்கள் இல்லாமல், இப்பொழுது மட்டுமே அவனுடைய பார்வைத் தன் மேல் படுவதற்குக் காரணம் இரக்கமாக இருக்கலாம் என்று நினைத்தாள்.



“ஏன் டி … உன் ரூம்ல வச்சு என்ன சொன்னேன்… என்ன பண்ணினேன் என்று இன்னும் உனக்குப் புரியவில்லையா? அந்த அளவுக்கு மட்டித் தற்குறியா நீ?” என்று கேட்டான் தருண்.

பின்னர்



“என் மனதில் என்ன இருக்கிறது என்று மிகவும் தெளிவாக உனக்குப் புரியும்படி உன் அறையிலேயே நான் பேசி விட்டேன்... செய்து விட்டேன் என்று நினைக்கிறேன் …ஒரு விஷயத்தை ஒரே நாளில் பேசித் தீர்க்க முடியும் என்பது முடியாத காரியம்… நீ பொறுமையாக இரு… இன்னும் நமக்குக் காலம் இருக்கு… மெதுவாகப் பேசித் தீர்த்துக்கலாம்.. இல்லை என்றால் புரிந்துக் கொள்ளலாம்… இப்போ நீ போ” என்று தன்மையாகக் கூறினான் தருண்.



“உங்க காதலி எங்கே இருக்கிறாள் என்று கூறாமல் நான் இங்கிருந்துப் போக மாட்டேன்” என்று பிடிவாதமாக நின்றாள் மித்ரா.



அவளின் பிடிவாதம் காணும் பொழுது இரண்டு வருடங்களுக்கு முன் பிடிவாதத்தோடு எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் மித்ராவை நினைவு கூர்ந்தான் தருண்.



“காதலியா… ம்ம் சரிதான்… ரொம்ப அழகாக இருக்கு உன்னோட புரிதல்… மித்ரா என்னைக் கோபப்படுத்தாதே நீ போ... பையன் தூங்கறான், தேவையில்லாமல் அவனை எழுப்பி விட்டு அழுக வைக்காதே… எனக்குக் கோபம் வரும்” என்று அவளிடம் பேசுவதற்கு விருப்பமில்லை என்பதை மறைமுகமாகக் கூறினான் தருண்.



வேகமாகத் தன் கையில் இருக்கும் கத்தியை எடுத்தவள், அதைக் கையின் மணிக்கட்டில் வைத்து “இப்ப நீங்க எல்லா உண்மையும் சொல்லவில்லை என்றால், நான் என் கைகளை அறுத்துக்கொள்வேன்” என்று அவனை மிரட்டினாள் மித்ரா.



அவளுக்கு என்ன ஆனாலும் இன்று எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்… அதே நேரம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு உடனே அவளுக்குத் தேவைப்பட்டது.



அதனால் அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தாள்.



“சும்மா விளையாட்டுக் காட்டாமல் போ மித்ரா” என்று அவன் அதைப் பெரிய விஷயமாக நினைக்காமல் திரும்பி வேதாந்தின் மேல் போர்வையைப் போர்த்தி விட்டவன்... படுக்கையில் அமர்ந்துத் தன் மடிக்கணினியை எடுத்து வேலைச் செய்யத் தொடங்கினான்.



அவனின் இந்த அலட்சியம் அவள் மனதினுள் மிகப்பெரிய கோபத்தையும், இயலாமையும் உண்டுப் பண்ணியது.



தன் வார்த்தைக்கும், கோபத்திற்கும் சிறிதளவுக் கூட மதிப்புத் தராதத் தருணின் அலட்சியம் அவளைச் சீண்டி விட்டது.



வேகமாக “மாமா” என்று அழைத்தவள், கைகளில் மெலிசாகக் கீறினாள் … மெல்லத் தான் கீறினாள் ஆனால் கத்தி நல்ல பதமாக இருந்ததால் காயம் கொஞ்சம் ஆழமாகியது…



அதைப் பார்த்தும் தன் மடிக்கணினி வேகமாகக் கீழே வைத்தவன் கோபத்தில் “மீரா” என்று தன்னை மறந்துக் கத்திய படி எழுந்தான் …



“பைத்தியமாடி நீ… இப்படிப் பண்ணிட்டு இருக்கிறாய்” …என்று அவள் கைகளில் இருக்கும் கத்தியை வாங்கித் தூர வீசியவன்… அவள் கைகளைப் பிடித்து அங்கே இருக்கும் சோபாவில் அமர வைத்தான்…



மென்மையான அவள் கரங்களில் வழியும் இரத்தத்தைத் துடைத்து விடுவதிலேயே குறியாக இருந்தவன் முகத்தில் உண்டான வேதனையை அவள் உணரவில்லை... தன் சுயம் இழந்து இருந்தாள்…



அவனின் மீரா என்ற வார்த்தையில் அதிர்ச்சி அடைந்து உறைந்து நின்றவள். அவன் செய்வது எதையும் கவனிக்காமல் மனதினுள்ளிலேயே பயணிக்கத் தொடங்கினாள்…

தன் திருமணம் முடிந்தப் பின் தன்னைக் காண வந்து அண்ணனின் வார்த்தைகள் முழுவதும் இப்பொழுது அவள் காதுகளில் எதிரொலித்தது…



“வாய்க்கு வந்தது பேசாதே… உனக்கு இன்னும் புரியவில்லை…

மித்துமா நீ எவ்வளவு பெரிய தப்புச் செஞ்சிருக்கங்கிறது… நீ கண்டிப்பா ஒரு நாள் தெரிந்துக் கொள்ளவாய்… அப்போ காலம் கடந்திருக்கும்… அன்றைக்கும் நீ தான் ரொம்பவும் வருத்தப்படுவாய்… அதைச் சரி செய்ய முடியவில்லை என்கிற வலி உனக்கு வேண்டாம் என்று தான் இந்தக் காதல் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் நீ அதைக் கேட்கவும் இல்லை, புரிந்துக் கொள்ளவும் இல்லை” என்ற அண்ணனின் வார்த்தைகள் இப்பொழுதுத் தன் முன் எதிரொலித்துக் கொண்டிருந்தது…



அன்றைக்கும் தருணுக்காகத்தான் கதிர்வேந்தன் தன்னிடம் வந்து பேசி இருக்கிறான் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தது மித்ராவிற்கு.



மெல்ல நிகழ் காலத்திற்கு வந்தவள்…. தன் முன் அமர்ந்திருக்கும் தருணின் முகத்தைப் பார்த்தாள்… அதில் அவள் கைகளில் உண்டான காயத்தைக் கண்டு,அவன் விழிகள் சிவந்து இருந்தது. எவ்வளவு வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் முகமே சொல்லியது. இவ்வளவு அன்பும் காதலும் மனதில் வைத்துக் கொண்டு, எப்படி இத்தனை வருஷம் தன்னிடம் கூறாமல் மறைத்து வைத்திருந்தான் என்ற கேள்வியும் பிறந்தது.



நான் வேறு ஒருவனைத் திருமணம் செய்து சென்ற போது எப்படி அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டார் என்ற எண்ணம் உண்டான பொழுதே தன் உயிர் உடலை விட்டுப் பிரிந்துச் சென்றால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தாள் மித்ரா. அன்று அவனின் வேதனையை இன்று உணர்ந்தாள் தருணின் மீரா.



அமைதியாக அவள் கைகளில் வழியும் இரத்தத்தைத் துடைத்தவன் அதன் ஆழத்தைப் பார்த்தான் காயம் ஆழமாக இருக்கிறதா என்று பார்த்தான். அவ்வளவு ஆழமாக இல்லை என்ற போதும் மனதில் ஒரு பயம், அதனால் அவள் முகத்தைப் பார்த்து “வா மித்ரா டாக்டரைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்” என்று அழைத்தான் தருண்.



“இந்தக் காயம் செப்டிக் ஆகாமல் பார்த்துக்கணும் என்றால், நம் போய் ஒரு டிடி இன்ஜெக்ஷன் எடுக்கணும்… அதற்கு ஹாஸ்பிடல் தான் போகணும்… வா நாம இரண்டு பேரும் போகலாம்... கீழே இருக்கும் சமைக்கும் அக்காவிடம் பையனை விட்டுவிட்டுச் செல்லலாம்” என்றான் தருண்.



“என் காயத்திற்கு மருந்து இருக்கட்டும் உங்கள் ஏமாற்றத்திற்கும் வேதனைக்கும் மருந்து இருக்கா” என்று நேரடியாக அவனைப் பார்த்துக் கேட்டாள் மித்ரா.



“என்ன உளறிட்டு இருக்கிறாய்… வா, போகலாம்” என்று எழுந்து நின்றான் அவள் முகம் பார்த்து.



“நான் உளரவில்லை… நீங்கள்தான் நடிக்கிறீங்க” என்று கூறினாள் மித்ரா



"எப்படி உங்களால முடியுது இப்படியெல்லாம்" என்றவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



அவள் முகம் பார்க்காமல் திரும்பி நின்றவன் தன் முகத்தைத் துடைத்து மெதுவாகத் தலை முடியைக் கோதிவிட்டுத் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டிருந்தான் தருண்.



தன் வேதனைகளை உள்ளுக்குள்ளே வைத்துக் கட்டுப்படுத்தும் அவனின் செயலில் மேலும் கோபம் வந்தது மித்ராவிற்கு.



வேகமாக அவன் முன்னே வந்து நின்றவள் “எதற்கு எல்லாமே மறைச்சு மறைச்சு வைக்கிறீங்க” என்றாள் மித்ரா.



“இப்போ உனக்கு என்ன தாண்டி வேணும்… உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்… முதல்ல அதைச் சொல்லித்தொலை… எதுவாக இருந்தாலும் நேரடியாகக் கேளு… மனசுக்குள்ளே ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசி என் உயிரை வாங்காதே” என்றான் தருண்.



“நானா மனசுக்குள்ள ஒன்று வச்சு வெளியில் ஒன்று சொல்லிட்டு இருக்கேன்... போய்க் கண்ணாடியைப் பாருங்கள்... அது யாருன்னு உங்களுக்கே தெரியும்” என்றால் மித்ரா.



“எதையும் நேரடியாகக் கேட்டுப் பழக்கம் இல்லையா? உனக்கு” என்று அவளிடம் எகிறினான் தருண்.



“என்னிடம் நீங்க எல்லாம் நேரடியாகப் பேசி இருந்தால்… நானும் இப்படி மறைமுகமாக எதையும் கேட்டுப் போராடிக் கொண்டும் இருக்க மாட்டேன்” என்றாள் மித்ரா.



“மித்ரா உன் எல்லையைத் தாண்டிப் பேசுகிறாய்” என்றான் தருண்…



வேகமாக அவன் அருகில் வந்து "மித்ரா இல்லை மாமா... சின்னத் திருத்தம் மீரா” என்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள் மித்ரா.



அதில் கண் மூடித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன்… "ம்ம் சரி மீரா"… என்று கண் திறந்து அவளைப் பார்த்த அவன் பார்வையில் தாரைத் தாரையாகக் கண்ணீர் விட்டாள் மித்ரா.



"ஏன் இப்படிப் பண்ணறீங்க மாமா"… என்று அவன் கைகளைப் பிடித்து அழுதவளின் செயலில் அவளை அணைத்து அவள் நெற்றியில் மெல்ல இதழ்ப் பதித்து ஆறுதல் படுத்திய தருண்... "விடு மித்ரா... கடந்து வந்து பாதையில் திரும்பச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை… எதற்கு இப்படி அழறாய்… நீ‌ அழுத வரைக்கும் போதும்.. உன் கண்ணில் இருந்து இனி‌க் கண்ணீரே வரவே கூடாது" என்றவன் அவள் கண்களைத் துடைத்து விட்டான்.



"எப்படி அழுகாமல் இருப்பது மாமா என்னோட பாவத்தின் கணக்கு ஏறிட்டே போகுது… நான் எப்படி இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியும்... பெற்றவங்களுக்கு நல்ல மகளாக இல்லை அண்ணனைப் பாசத்தை உணராத தங்கையாக யாரோ ஒருத்தனைக் காதலிச்சு வாழ்க்கையில் ஏமாந்து … ஒரு குழந்தைக்கு அம்மாவாகி... குழந்தைக்கு அப்பா இல்லாமல் தவிக்க விட்டு… எதற்கு என்னுடைய இந்தப் பிறப்பு… உங்களுடைய காதலை உயிரோடு கொன்றப் பாவமும் என் மேல் இருக்கு…எதற்கு இந்தப் பிறப்பு என்று தெரியவில்லை" என்று அழுதாள் மித்ரா.



"என்னால் யாருமே சந்தோஷமாக இல்லை, யாரையும் என்னால் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிவதும் இல்லை, நான் எதுக்கு உயிரோடு வாழ வேண்டும்" என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதாள் மித்ரா.



காதல் என்றால் என்ன என்று தெரியாமலேயே, அண்ணன் என்னைத் தடுக்கிறான் என்ற கோபத்திலேயே அவனைக் காதலிக்கச் சம்மதம் சொல்லிவிட்டு, அவனைக் கல்யாணம் செய்து கொண்டு நான் பட்ட வேதனையும் அவமானமும் கொஞ்சநஞ்சம் அல்ல" என்ற அழுதவளின்‌ கண்ணீரைக் கண்டு கல் தூண் போல நின்றான் தருண்.



அவளின் வேதனையைக் கேட்டு அவன் மனம் துடிக்கும் வலியை யாரிடம் சொல்லுவான் கண்கள் சிவக்க நின்றிருந்தான்... பெண்ணவள் புலம்பும் வார்த்தைகளை எல்லாம் கேட்டுத் தன்னுடைத் தவறுக்கு அவள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள் என்று வருந்தினான் தருண்.

தன் காதலை அவளிடம் சொல்லி இருக்க வேண்டுமோ…‌ படிக்கும்‌ வயதில் தேவை இல்லாமல் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற தன் எண்ணத்தை மண் அள்ளிப் போட்டு அவளைக் காதலிப்பதாகக் கூறி, கூட்டிப் போய்க் கல்யாணம் செய்து கொண்ட அவள் கணவன் என்னும் அந்த மனிதன் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.



அவன் ஒழுங்காக வாழ்ந்திருந்தால், தன் மாமன் மகள் நன்றாக இருக்கின்றாள் என்ற நிம்மதித் தனக்குக் கிடைத்து இருக்கும், அதுவும் இல்லாமல் போனது இன்று என்று உள்ளுக்குள்ளே மருகினான் தருண்.



தன் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் தன் தவறாகவே புலம்பிக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளை எப்படிச் சமாதானம் செய்ய என்று திணறினான் தருண்… அவளின் வலியும் வேதனையும் அவனால் உணர முடிந்தது அவள் மனதில் இருக்கும் பயமும் புரிந்தது.



"நீ இப்போ பேசுவதும் புலம்புவதும் அழுவதெல்லாம் கடந்து காலத்தில் முடிந்துப் போன விஷயத்திற்கு மித்ரா.. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மட்டுமே சிந்தித்துச் செயல்படு" என்றான் தருண்.



அவன் சொல்வது எதுவுமே காதில் வாங்காமல் மித்ரா அவள் பாட்டுக்கு அழுதுப் புலம்ப… அவளின் இந்த அழுகையும் அவள் புலம்பலும் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க இயலாமல் தருணுக்குக் கோபம் வந்தது.



"இப்போ நீ கொஞ்சம் அழுகிறது நிறுத்தறியே இல்லையா" என்று உச்சித்தாயலில் கத்தினான்.



அவனின் கோபமான வார்த்தைகளைக் கேட்டுச் சற்றென்று மௌனமானாள் மித்ரா. தருணின் குரலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்து சினுங்கினான். வேகமாக அவன் அருகில் வந்தவன் "ஒன்னும் இல்லை தங்கம், நீ தூங்கு" என்று மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். இவை அனைத்துமே பார்த்துக் கொண்டிருந்த மித்ரா.



ஆனால் அவள் கண்களில் இருந்து வழியும் நீர் மட்டும் நிற்கவேயில்லை இவனின் இந்த அன்பிற்கும் காதலுக்கும் என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்ற எண்ணமே அவள் மனதில் இருந்தது. அவனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் மித்ரா.



"இனி உங்கள் வாழ்க்கையில் நாங்கள் குறுக்கே வரவே மாட்டோம் மாமா… என் குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையைப் பாருங்கள்" என்றாள் மித்ரா …



சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் அவளின் செய்கையில் ஆத்திரம் அவன் கண்ணை மறைத்தது …



"என்னடி, சொல்லிட்டே இருக்கேன் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, என் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறாய்" என்று அவள் கன்னத்தில் ஓங்கியொரு அறை விட்டான் தருண் …

அதே வேகத்தில் அவள் அருகில் குனிந்தவன்… "உனக்கு என்ன பைத்தியமா, வேறு பெண்ணைக் கல்யாணம் செய்வது என்றால், இந்நேரம் நான் செய்திருக்க மாட்டேனா… எல்லாம் தெரிந்தபின்னும் இந்த மாதிரிப் பேசாதே … என்னுடைய காதல் ஒரு தடவைத் தான், அதுவும் முடிந்துவிட்டது. முடிந்ததாகவே இருக்கட்டும்… உனக்கு என்னைத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்றால் உன் வேலையைப் பார்த்துப் போய்க் கொண்டேயிரு… நான் யாரைக் கல்யாணம் செய்யணும் என்பதெல்லாம் என்னுடைய முடிவு, அதை நீ சொல்லாதே அதில் முடிவு எடுக்கிற உரிமையும் உனக்கு இல்லை"… என்று முகத்தில் அடித்தார் போல் கூறினான் தருண்.

அவன் வாழ்க்கையில் தனக்கு உரிமை இல்லை என்ற அவனின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் வேதனையும் ஏமாற்றமும் ஒன்றாகவே தோன்றியது மித்ராவிற்கு.



"உங்களுக்குப் பெண் பார்ப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா மாமா" என்று அடி வாங்கிய கன்னத்தில் கை வைத்தபடியே அவன் முகம் பார்த்துக் கேட்டாள் மித்ரா….



"எந்த உரிமையில் எனக்குப் பெண்பார்ப்பாய்" என்று கேட்டான் தருண்.



அதற்கான பதில் தான் அவளிடம் இல்லை வேகமாக "நீங்க என்ன சொன்னாலும் சரி, உங்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பது தான், என் கடமையாக நான் பார்க்கிறேன்" என்றாள் மித்ரா.



"நான் கல்யாணம் செய்தாக வேண்டும் உனக்கு அப்படித்தானே… என்று கேட்டான் .



"ஆமாம் நீங்க ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, அவளோடு வாழ்வதை நான் பார்க்க வேண்டும், அது மட்டுமே எனக்குப் போதும்" என்றாள் மித்ரா



"அது மட்டும் போதுமா உனக்கு" என்றவன். "நான் வேறு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்துவதை உன்னால் பார்க்க முடியுமா? என்று கேட்டவன் குரலில் என்ன இருந்தது என்று தெரியவில்லை மித்ராவிற்கு… அவன் வார்த்தைகள் மனதில் உண்டாகிய வலி முகத்தில் படற, விழி விரித்து அவனையே பார்த்தவளிடம், "இங்கே பார் மித்ரா, நான் தெளிவாகச் சொல்லிட்டேன். என்னுடைய திருமணம் எனக்கு நடக்கணும் என்று இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும். நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம், எனக்குக் கல்யாணம் செய்து வைக்க எங்க அம்மா இருக்காங்க. நான்‌‌ யாரைக் காட்டுகிறேனோ, அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் மனசு எங்க அம்மாவிற்கு இருக்கு" என்றான் தருண்.



"உன் வேலையைப் பார்த்துக் கொண்டு நீ இங்கிருந்துக் கிளம்பு” என்று முகத்தில் அடித்த மாதிரி மீண்டும் கூறினான். அவனின் செய்கையில் பலமாக அடி வாங்கினாள் மித்ரா…



உனக்கு வேணா, பைத்தியமாக இருக்கலாம்... சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு, நான் அப்படி இல்லை... எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நீ என் ரூமில் இருந்துவெளியே போ" … என்று வாசல் கதவினைப் பார்த்துச் சைகைச் செய்தான்.



அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே வந்தவளுக்கு இதற்கு என்னதான் முடிவு என்று தெரியவில்லை.



அவள் அறைக்கு வந்து அமர்ந்ததும்… நடந்தது எல்லாம் அசைபோட்டவள் மனதில் பயமும் வேதனையும் ஏமாற்றும் கலந்து அவளை வாட்டியது.



இன்றைய நாளில்.. அவனின் அணைப்பில் கட்டுண்டு …‌அவன் தந்த ஆழ்ந்த முத்தத்தில் சிக்கிச் சிவந்து… அவனுக்காகக் கையைக் கீறிக் கொண்டு… அவனோட காதல் தான், தான் என்ற உண்மையை அறிந்து… அவனின் கோபத்தின் உச்சத்தில் அவனிடம் அடி வாங்கி மீண்டும் அவனிடமே போ என்று விரட்டும் மானகெட்ட மனதைக் கட்டுப் படுத்த முடியாமல் தவித்தாள் மித்ரா.



இந்த மாற்றம் எதனால் என்று யோசித்தாள்…

தனக்கு அவன் மேல் விருப்பங்கள் இருந்தாலும் அவன் தூய்மையான உள்ளத்திற்கு, நான் தகுதி இல்லாதவள்… அவனுக்கு நான் வேண்டாம் என்று தீர்மானமாக இருந்தாள் மித்ரா.



அதையெல்லாம் உடைப்பது தானே விதி…



தொடரும்…
 
Top