எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மதியின் வேந்தன் - 26

subasini

Moderator
பகுதி - 26



காலம் நிற்காமல் ஓடும் போது நமது கடந்த காலம் பின்னோக்கிச் சென்று கால ஓட்டத்தில் மறந்து மறைந்துவிடும்.



தருண் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் போய்க் கொண்டு இருந்தது. கதிர்வேந்தனுடனான வியாபாரம் முன்னேறிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது.

அவர்கள் தொடங்கும் ப்ராஜெக்ட் அனைத்தும் நல்ல ரிசல்ட்டைத் தந்தது. கடந்து சென்ற நாட்கள் எல்லாம் தொழில் ரீதியாக எந்த மன வருத்தமும் வேதனையும் இல்லாமல் நிம்மதியாகச் சென்றது. ஆனால் சொந்த வாழ்க்கையில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று அறியாது திணறினான் தருண்.



வேறு பெண்ணைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வலியைத் தந்தது நீண்ட நெடியப் பத்து வருடக் காலக் காதலை மறந்து வேறொரு பெண்ணை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியுமா? என்ற கேள்வி அவன் மனதில் இருந்தது.



எல்லா வகையிலும் சிந்தித்துப் பார்த்தான்… அது தன்னால் முடியாது என்பது அவனுக்குக் கிடைத்த பதிலாக இருந்தது. என்ன செய்ய என்பது தெரியவில்லை இதற்கு முடிவு என்பதும் அவன் கையில் இல்லை. எல்லா மித்ராவின் கையில் உள்ளது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதனால் நடப்பது நடக்கட்டும் இப்படியே வாழ்ந்து விடலாம் என்று முடிவுக்கு வந்திருந்தான் தருண்.



அவன் நினைத்தால் மட்டும் போதுமா? அவளுடைய மகன் அப்படி விடுவானா ? மித்ரா மற்றும் தருண் அவரவர்கள் இடத்தில் சரியெனத் தோன்றியதால் இந்த முடிவுக்கு வந்திருந்தனர்.



ஆனால் குழந்தைக்கு அதெல்லாம் தேவையில்லை. சரியோ தவறோ அவன் மனம் தருணின் பின்னே தான் சென்றது.



தருணைக் காணாமல் அவன் அறைக்கு அப்பா என்று அழைத்தப்படிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தான் வேதாந்தன். இதைக் கவனித்த மித்ராவிற்கு எப்படி அவனைத் தடுக்க என்று தெரியவில்லை… அவனை அடித்துப்பார்த்தாள், மிரட்டி வைத்தாள்... அவள் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிப் போனது.



குழந்தை அப்பா என்று அழுது ஊரைக் கூட்டினான்…

அவன் இல்லாமல் சாப்பிட மற்றும் தூங்க மறுத்தான் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கோபம் வந்தது மித்ராவைத் தவிர…



குழந்தையைப் பார்த்துக் கொள்வதை விட அப்படி என்ன தொழில் பின்னே போவது என்று நினைத்தார் ராதிகா. அவன் வரட்டும் இன்றைக்கு என்று மனதில் நினைத்தாள் தருணின் அம்மா. அனைவருக்கும் குழந்தையின் ஏக்கம் பற்றி மட்டுமே சிந்தித்துப் பார்த்தனர். நடந்த எதுவும் யாருக்கும் தெரியவாய்ப்பில்லை.

இரவு நேரம் யாரையும் தூங்க விடாமல் அழது அடம் பிடிக்கும் வேதாந்தனைச் சமாதானம் பண்ண வீடே இரண்டாகியது.



வீட்டிற்குத் தாமதமாக வந்திருந்தான் தருண்.



தாடிக்குள்ளே ஒழிந்து இருக்கும் அவன் முகத்தில் அவ்வளவு களைப்பு இருந்தது. சரியான சாப்பாடும், தூக்கமும் இல்லாமல் மெலிந்து இருந்தான் தருண். அவனைப் பார்க்கவும் பாவமாக இருந்தது.



இப்போ பாவம் பார்த்தால் நினைத்த காரியம் நல்லவிதமாக நடக்காது என்று மனதில் எண்ணிய ராதிகா அதற்குச் செயல் வடிவம் கொடுத்தாள்.



தருணைக் கண்டதும் அழுது கொண்டே அப்பா என்று தாவினான் வேதாந்தன். இதைப் பார்த்த அனைவரும் குழந்தையின்‌ ஏக்கமும் தருண் மேல் அவனுக்கு இருக்கும் பாசமும் கண்டு சிலையென நின்றனர்.



மித்ராவிற்கு மேலும் மேலும் கோபமும் துக்கமும் கலந்து வந்தது.



பிள்ளையின் செயலில் ராதிகா ஒரு முடிவுக்கு வந்தார். நேராக மகன் அருகில் வந்தவர் ஓங்கி அவன் கன்னத்தில் அடித்தார்.



இதை யாருமே எதிர்பார்க்கவில்லை பாலமுருகன் தான் “எதற்கு வீட்டிற்க வரும் மகனை இப்போது அடிக்கிறாய் ராதிகா. அவனே களைத்துப் போய் வருகிறான்” என்று கேட்டார்.



அவரைப் பார்த்து “பின்னே என்ன அண்ணா … அவன் இல்லாமல் பையன் சாப்பிட மாட்டேங்கிறான் .. தூங்காமல் அழறான்… இந்த மாதிரிப் பழக்கி விட்டுட்டான் … அப்போ அவன் தானே குழந்தையை மனசுல வச்சுட்டு அவனுடைய வேலைகளை மாற்றி வைக்கணும்... குழந்தைக்கு என்ன தெரியும் இன்னைக்கு முழுதும் குழந்தைத் தூங்கவும் இல்லை சாப்பிடுவும் இல்லை…உடம்புக்கு ஏதாவது குழந்தைக்கு வந்தால் என்ன பண்ண யோசிச்சிங்களா… அப்பாவாகப் பொறுப்பில்லாமல் அவனின் இந்தச் செயலைப் பார்க்கும் போது எனக்குக் கோபம் தானே வரும்” என்ற ராதிகாவின் வார்த்தைகளைக் கேட்டுப் பானுமதியும் பாலமுருகனும் மித்ராவைத்தான் பார்த்தனர்.



ராதிகாவோ தன்னுடைய மருமகளாக மித்ராவை ஏற்றுக் கொண்டார் என்று மறைமுகமாகச் சம்மதித்து இருந்தார்.



இதை அறிந்த மித்ரா அதிர்ச்சியானாள், அவள் முன்னிறுத்திய கேள்விகள் அனைத்தும் அங்கே ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாள் ராதிகா, தன் வார்த்தைகளில் …

நடக்கும் சூழ்நிலையில் எதுவும் பேசாது மௌனமாக இருந்தான் தருண்‌.



“உன்னைப் பார்த்துத்தான் கேட்டுட்டு இருக்கேன் தருண்... குழந்தை உன்னை விட்டு இருக்க மாட்டேங்கிறான்… அப்போ நீ தானே சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்… அப்படி என்ன தொழிலில் பணம் சம்பாதிக்கும்‌ வெறி, குழந்தையை விட்டுட்டு நீ யாருக்காகச் சம்பாதிக்கிற” என்று கேட்டார் ராதிகா.



“குழந்தையை மீறிக் காசு பணம் சம்பாதித்து என்ன பண்ணப் போற நீ” என்றும் கேட்டார்.



அவனுக்குப் பதில் இல்லை அவன் மட்டும் மனதில் நினைத்தால் போதுமா? மெல்லக் கண்களை உயர்த்தி மித்ராவைப் பார்த்தவன், பின் குழந்தையைச் சமாதானம் செய்ய வெளியே சென்றான்.

அவனின் நிலையும் கண்டு அனைவருக்கும் சொல்லில் அடங்கா வேதனையைத் தந்தது. முகம் முழுவதும் தாடியோடு மெலிந்து, கேசங்களை வெட்டாமல் அடையாளமே மாறியிருந்ததான்.

குழந்தைக்கு அடையாளம் தெரியாது போயிருக்கும்.. ஆனால் தருணின் மனமும் பாசமும் உணர்ந்தக் குழந்தை அவனைச் சரியாக அடையாளம் கண்டு அவனிடமும் சென்றதுத் தான் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.



பிள்ளையும் அப்பாவும் வெளியே சென்றதும் ராதிகா நேராகத் தன் அண்ணனிடம் வந்து “என் பையனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தருவீங்களா அண்ணா… நானே பெண் கேட்கிறேன், என் பையனை இப்படிப் பார்க்க என்னால முடியாது… வேதாந்தைப் பிரிந்து என்னாலும் இருக்க முடியாது… என் மகனாலும் இருக்க முடியாது… முடிவு உங்க கையில் தான், ஆனால் நல்ல முடிவாக இருக்க வேண்டும்” என்று ராதிகா நேரடியாகவே பெண் கேட்டார்ப் பாலமுருகனிடம்.



ராதிகாவின் இந்தச் செயலை எதிர் பார்க்காத மித்ரா, பதில் ஏதும் சொல்லாமல் கண்களில் நீரோடு வேகமாகத் தன்னறைக்குச் சென்று படுக்கையில் விழுந்து அழுதாள்.



அவளின் செய்கையை உணர்த்தியது அவள் பதிலை. அனைவரையும் எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளியது. தான் என்ன செய்ய வேண்டும் இப்போது என்று தலையில் கைவைத்து அமர்ந்தார் பாலமுருகன்.



அப்போது மெல்ல அவர் அருகே வந்த மதுமிதா “எல்லாம் சரியாகும் மாமா நீங்க வருத்தப்படாதீங்க… ராதிகா அம்மா கேட்கிறது சரிதான் மித்ராவுக்கு வாழ்க்கை வேண்டும்… வேதாந்தும் தருணைப் பிரிந்து இருக்கவும் மாட்டான், அதனால் அவங்க இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வது தான் சரி, இரண்டு பேருக்குமே வாழ்க்கை வேணும், அவங்க இரண்டு பேரும் சேர்ந்தால் நல்லாத்தான் இருக்கும்… யோசிங்கள்” என்றாள் மதுமிதா.



அப்பொழுது அவளைப் பார்த்தப் பாலமுருகன் “எனக்கு இதில் எந்த எதிர்ப்பும் கிடையாது மது… மித்ரா, தானே முடிவுச் செய்யணும்… அவள் இப்போ அழுது கொண்டு போவதைப் பார்த்தாலே தெரியவில்லையா… அவள் என்ன பதில் கூறுவாள் என்று” என்று எதிர் கேள்விக் கேட்டார் மருமகளிடம்… என்ன செய்ய என்று தெரியாமல் பெரியவர்கள் அனைவரும் திணறிக் கொண்டிருக்கும் போது கதிர்வேந்தனோ தன் தாயிடம் வந்து… “அம்மா அவளிடம், அப்பாவைப் போய்ப் பேசச் சொல்லுங்க, கண்டிப்பாக அப்பா கேட்டால் மாட்டேன் என்று சொல்லாமல் இந்தக் கல்யாணத்துக்கு அவள் சம்மதிப்பாள்” என்றான் கதிர்வேந்தன்.



எதுவும் புரியாமல் மகன் முகத்தைப் பார்த்தப் பாலமுருகனிடம் “இதெல்லாம் எல்லாம் நல்லாப் பாருங்க… யோசிக்கவே மாட்டீங்களாப்பா, இப்போ நீங்க சொல்றதைக் கேக்குற நிலையில் தான் மித்ரா இருக்காள், நீங்க என்ன சொன்னாலும் தட்ட மாட்டாள், பாசமாகப் போய்க் கேளுங்கள் “என்றான் கதிர்வேந்தன்.



“பிடிக்காத ஒரு விஷயத்துக்கு அவளை வற்புறுத்துவது தவறில்லையா?” என்று தன் மனைவியிடம் கேட்டார்ப் பாலமுருகன்.



“பிடித்தது மட்டும் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தால்… வாழ்க்கையில் எந்த விஷயமும் செய்ய முடியாமல் போய்விடும்… முதலில் பிடிக்காமல் இருக்கும் விஷயங்கள் தான் போகப் போகப் பிடித்ததாக மாறும். இதுதான் வாழ்க்கையின் நியதி, அதை முதலில் புரிந்து கொள்ளச் சொல்லுங்கம்மா அப்பாவிடம், வயசாகிருச்சு என்றால் அவர் சிந்திக்க மாட்டாரா? வயசான அறிவு கம்மியாகும் போல, சரிதான்” என்று தந்தையைத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கேலிச் செய்தான் கதிர்வேந்தன்.



மகனின் வார்த்தைகளைக் கேட்டுக் கோபம் கொண்ட பாலமுருகன் பானுமதியைப் பார்த்து "உன் மகனைச் சும்மா இருக்கச் சொல்லு… நான் போய் என் மகளிடம் சம்மதத்தை வாங்கிட்டு வரேன்… என் திறமையை இப்போது பாருங்கள்” என்று நேராகத் தன் மகளைக் காண மேலே சென்றார்.



இவை அனைத்தும் நடு இரவில் நடந்து கொண்டிருந்தது. நடப்பதெல்லாம் குட்டி வேதாந்தின் கைக் காரியமாய் இருந்தது.



நேராக மித்ராவின் அறைக்கு வந்தவர் மித்ராவைப் பார்த்தார்.



அங்கே அழுது கொண்டிருந்த மகளின் அருகே சென்றவர் “மித்துமா” என்று மெல்ல அழைத்தார். தந்தையின் குரலைக் கேட்டுப் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் மித்ரா.



அவள் அருகில் வந்த அமர்ந்தவர் அவள் தலையும் மெல்ல வருடியபடியே “எதுக்குமா இப்படி அழுகிற… வாழ்க்கையில் இனிமேல் நீ இப்படி அழக் கூடாது” என்று அவள் கண்களைத் துடித்து விட்டவர்… “அப்பா சொல்வதைக் கேட்பியா?” என்று கேட்டார்ப் பாலமுருகன்.



தன் தந்தை என்ன கேட்க வருகிறார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது மித்ராவிற்கு, அவருடைய வார்த்தைகளைத் தன்னால் தட்ட முடியாது என்பதும் தெரிந்தது.



ஆனாலும் அமைதியாகவே இருந்தால் மித்ரா. அவள் கண்களைத் துடித்து விட்டவர் அவள் கைகள் இரண்டையும் தன் கைகளுக்குள் வைத்து அவள் கண்களைப் பார்த்து “மித்துமா அப்பாக்காக நீ தருணைக் கல்யாணம் பண்ணிப்பியா? என்னுடைய ஆசை இது தான்… நீயும் அவனும் கணவன் மனைவியாக இருக்கணும் என்கிறது பார்க்கத்தான் ஆசை… வேதாந்துக்கும் அப்பா வேணுமில்லையா… இப்படி அவனை அப்பா இல்லாமல் வளர்க்க வேண்டாம். என்னுடைய காலத்துக்கு அப்புறம் உனக்குனு ஒருத்தன் வேணும், அது தருணாக இருக்கணும் என்கிறது தான் என் ஆசை. சின்ன வயசுல இருந்தே என் மனதிலும் அம்மா மனசிலும் உன்னுடைய கணவனாகத் தருணைத் தான் நினைத்திருந்தோம். ஆனால் விதிச் செய்து சதி. சரி முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும், இனிவரும் வாழ்க்கை நாம் நினைச்ச மாதிரி வாழலாம் இல்லையா”… என்று மகளுக்கு ஆறுதல் செய்தபடியே தன்னுடைய ஆசையையும் கூறினார்ப் பாலமுருகன்.

தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியானாள் அனைவருக்கும் தன்னைத் தருணுக்குக் கல்யாணம் செய்து வைப்பது தான் மனதின் எண்ணமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.



தருணுடைய பல வருட காதலை ஒன்றுமில்லாமல் ஆக்கியத் தன்மேல் கோபம் வந்தது மித்திராவிற்கு. எல்லாமே தன்னுடைய மனம்... தன்னுடைய ஆசை... தன்னுடைய சந்தோஷம் என்று சுயநலமாக இருக்காமல், குடும்பத்துக்காக யோசிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தாள் மித்ரா.



அதனால் தன் தந்தையிடம் "சரி நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று சம்மதித்தாள். மகளின் சம்மதம் கேட்டு மனதில் சந்தோஷம் வந்தது பாலமுருகனுக்கு.



“சரி நீ தூங்கு... மத்ததெல்லாம் காலையில் பேசிக் கொள்ளலாம்”… என்று மகளை உறங்க வைத்தவர் கீழே இறங்கி வந்தார்.



மேலே சென்ற பாலமுருகன் இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லை என்றதும் அனைவருக்கும் மனதில் ஒரு பயம் வந்தது. எங்கே மித்ரா, கல்யாணத்திற்குச் சம்மதிக்க மாட்டாளோ என்று ஆளாளுக்கு யோசித்துக் கொண்டிருந்தனர். எதைப் பற்றியும் கவலை இல்லாமல் தருண் வெளியே தன் மகனை உறங்க வைத்துக் கொண்டிருந்தான்.



நடந்து கொண்டே தோளில் போட்டு அவனைத் தட்டித் தட்டி உறங்க வைத்துக் கொண்டிருந்தான். குழந்தையும் அவன் தோளில் வந்து சேர்ந்ததும் தன் தந்தையின் கைகளில் என்ற மன நிம்மதியில் உறக்கத்திற்குச் சென்றான் குட்டி வேதாந்தன்.



உறங்கிய குழந்தையோடு உள்ளே வந்தான் தருண். உள்ளே வரவும் அதே நேரம் மேலே இருந்து கீழே இறங்கி வந்தார் பாலமுருகன். இரவு நேரத்தில் யாரும் தூங்காமல் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தருணுக்கு, உங்களுக்கு என்னதான் வேணும் என்று கேள்விக் கேட்க வரும் முன்னே பாலமுருகன் தன் மனைவியைப் பார்த்து “அவள் திருமணத்திற்குச் சம்மதித்து விட்டாள்”என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

அப்போது கதிர்வேந்தன் தன் தாயிடம் “நான் சொன்னேன் தானே, அப்பா போய்க் கேட்டால், கண்டிப்பாக அவள் சம்மதிப்பாள் என்று, இனி என்ன… நடக்கப் போகும் காரியத்தைப் பற்றி யோசிங்கள்" என்றான்.



கோபம் வந்தது தருணுக்கு… "முழு மனதோடு சம்மதிக்காமல், அவளை ஏன் இப்படி எல்லாரும் சேர்ந்து இவ்வளவு ஃபோர்ஸ் பண்ணுறீங்க" என்று கேட்டான் தருண்.



இதைக் கேட்ட உடனே கோபம் வந்தது கதிர்வேந்தனுக்கு.



"ஆளாளுக்கு ஏதாவது பேசி ஒரு நல்ல காரியத்தைத் தடுத்து நிறுத்தாதீங்க, நீ ஒன்று நினைத்து…அவள் ஒரு விஷயம் செய்து என்று மாறி மாறிப் பேசிட்டு உங்க கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுட்டே இருக்காதீங்க. தருண் இங்கே பாரு... பெரியவங்க ஒரு முடிவு எடுத்து அது சரியாகத்தான் இருக்கும்… நீ அமைதியாக இரு … வாழ்க்கை அது போறப் போக்குல வாழ்ந்துப் பழகுங்க, எல்லாமே நம்மளுக்குத் தகுந்த மாதிரி நடக்கணும் என்று எதிர்பார்க்கக் கூடாது. நடப்பதை நமக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரைக் கூறினான்.

கதிர்வேந்தன் கூறியது சரியெனத் தோன்றியது தருணுக்கு “என்னவோ பண்ணுங்க உங்க இஷ்டம் போல… இதுல நான் எதுவுமே தலையிட மாட்டேன்” என்றான் தருண்.



“ நீ தலை ஒன்னும் விட வேண்டாம் நாங்கள் தாலிக் கட்டச் சொல்லும்போது அவள் கழுத்துல… நீ தாலியைக் கட்டினால் மட்டும் போதும்…” என்று கூறியக் கதிர்வேந்தனை முறைத்துப் பார்த்துவிட்டுக் குழந்தையோடு தன்னறைக்குச் சென்றான் தருண்.



உள்ளமோ அமைதியாக இருந்தது. எப்படி அவள் சம்மதித்தாள் என்ற கேள்வியை அவன் மூளையைக் குடைந்து கொண்டிருந்தது. எது எப்படியோ நான் வேண்டாமென்றாலும் அவள் வேண்டாமென்றாலும் இந்தக் கல்யாணம் நடக்கப்போவது உறுதி… இது பெரியவர்கள் முடிவு என்று புரிந்து கொண்டான். சரி இப்படி என்றாலும் இப்படி அவளோடு தன்னுடைய கல்யாணம் என்பது மட்டுமே அவன் ஆறுதலாக இருந்தது.



காதலித்த பெண் மனைவியாக வருகிறாள். போதும் இதற்கு மேல் எனக்கு எந்த ஆசையும் இல்லை என்று தன் மகனின் நெற்றியில் முத்தம் வைத்தவன்... அவனைப் படுக்க வைத்து அவன் அருகில் தானும் படுத்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிள்ளையின் வாசம் நுகர்ந்தவனுக்கு மனம் நிறைந்திருந்தது.



எவ்வளவு நாட்கள் இவனைப் பார்க்காமல் இவனருகே இல்லாமல்... எவ்வளவு கொடுமையான தினங்கள் என்று நினைத்தவனின் கண்கள் லேசாகக் கலங்கியது. தன் வாழ்க்கையில் இந்தப் பிஞ்சுக் குழந்தை இல்லை என்று நினைத்து இருந்தவனுக்கு தெய்வம் தந்தச் சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டான்.



மித்ரா, தன்னைக் காதலித்தாலும் சரி காதலிக்கவில்லை என்றாலும் சரி, மனைவி என்ற பெயரில் தன்னுடன் இருக்கட்டும் என்று நிலைக்கு வந்திருந்தான் .



குழந்தை மட்டுமே அவனுடைய சிந்தனையாகிப் போனது. மீண்டும் மீண்டும் தன் காதலை அடி ஆழத்தைத் தோண்டிப் புதைந்திருந்தான் தருண்.



அவன் காதலை வெளிக்கொண்டு வரும் திடம் மித்ராவிடம் இருக்குமா ஒரு மனைவியாக வரும் காலங்களில் பார்க்கலாம்.



தொடரும்…
 
Top