எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 09

Shambhavi

Moderator
எதற்காக பேச்சிக்கு லீலாவின் மேல் அத்தனை வஞ்சம் என்று தான் தெரியவில்லை. தன் ஆஸ்தான பெண் (ஜானகி) தன்னையும் தன் பெயர்த்தியையும் கவனிக்காது நேற்று வந்தவளை தாங்குது பேச்சிக்கு தாங்கவில்லை.

அறுபதின் கடைசியில் இருந்தவரின் கணவனை அப்போது தான் இழந்திருக்க, துணைக்கு யாருமில்லை என்ற எண்ணம். அழுத்தமாக மாறியிருந்த சமயம். அதுவும் லீலாவின் பேச்சோ, அழகோ, பண்போ எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை.

அவளின் உரிமை கலந்த பண்பு எரிச்சலூட்டியது. தன் மகளிடமும் பெயரப்பிள்ளைகளிடமும் சிரித்து பேசுபவளைக் கண்டாலே பிடிக்காது போனது.

"பேச்சியம்மா" என்று வந்து நிற்கும் ரம்யாவும் சந்ருவும் கூட, "லீலா அக்கா" என்ற அவள் பின் அழைவது அவருக்கு எரிந்தது.

நிரஞ்சன் கூட பேச்சியிடம் நில்லாமல் லீலாவின் வீட்டிலேயே இருந்தது காந்தியது அவருக்கு.

காரணமே இல்லாமல் சிலரை நமக்கு பிடித்து விடும். அதே போல் தான் காரணம் அற்று சிலரை அறவே பிடிக்காது. அவரிடம் எத்தனை நற்பண்புகள் இருந்தாலும் ஏன் அவர் நமக்கே ஏதாவது உதவி செய்திருந்தாலும் கூட பிடிக்காது போயிருக்கும்.

அந்த காரணமே அற்ற பிடித்தமின்மை தான் பேச்சிக்கு லீலாவின் மீது. அதில் அவரின் அந்த உரிமையுணர்வும் சேர்ந்து கொண்டு இன்னும் அவரின் மனதளவில் ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருந்தது.

நமக்கே நமக்காக ஒரு பொருள் வேண்டும் என்ற நினைத்து, அதை படாத பாடுபட்டு அடைந்த பின் அந்த பொருளை உதாசீனம் படுத்திவிடுவோமே அந்த நிலையிலில் தான் இருந்தார் பேச்சி.

ஆனால் ஒரு சிறு திருத்தமாக, பொருளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் பொருளை அபகரித்தவரை தான் பேச்சி ஆட்டம் காண செய்திருந்தார் அவரின் நஞ்சான நாக்கின் பேச்சால்.

அவருக்கு ஜானகி, அவரின் பெயரக் குழந்தைகள் எல்லாருமே தன்னை சுற்றிய இருக்க வேண்டும். தன் பாட்டையே பாட வேண்டும் என்று அனைவரும் தன்னை தான் பேசி தன்னையே கொண்டாட வேண்டும் என்ற நினைப்பு.

கொஞ்சம் கொஞ்சமாக அது அவரின் மனதை சூழ்ந்து அந்த சூழல் எதிர்மறையாக அவரை நினைக்க வைக்க, விளைவாக அந்த எண்ணம் பேச்சியை முற்றும் முழுதாக மாற்றி இருந்தது.

நிறை குறை எல்லாம் மனிதர்களிடம் இயப்பான விஷயங்கள் தான். ஆனால் அந்த நிறை குறைகளின் அளவிட்டை வைத்து தான் ஒருவரின் தரம் இங்கு பேசப்படுகிறது. அதுவும் அடுத்தவருக்கு அந்த குறையோ நிறையோ சாதகமாக பட்டால் தான் அதுவுமே தூக்கிப் பேசப்படும்.

அப்படி பேசப்படும் மொழிக்கு வரைமுறை என்று உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் அதுவுமே மாறுபட்ட ஒன்றாகத் தானே இருக்கும்.

வேண்டியவரிடம் ஒரு பேச்சு, வேண்டாதவரிடம் ஒரு பேச்சு என்று மாற்றி மாற்றி பேசப்படும் அப்பேச்சால் ஒன்று அந்த பேசப்படும் நபர் வீழ்வார் இல்லை வெல்வார்!

பேச்சியின் நாக்கு சுழன்டு அடிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒரு வரைமுறையோடு பேசிக்கொண்டிருந்தவரின் பேச்சு மொழி, மற்றவர் காதுகளையே கூசச் செய்யும் அளவிற்கு மாற்றம் பெற்றிருந்தது லீலா சற்று ஒதுக்கம் காட்ட ஆரம்பித்த போது.

சதா, "நிரஞ்சன் வீட்டுக்கு நீ போகறதில்லை போல? ஏன் டா" என்று பலவாறு அப்போது கேட்ட மனிதன், அதன் பின்பு அந்த தன்மையை கடைப்பிடித்திருக்கலாம்!

"எனக்கு அங்க பிடிக்கல சிவா" என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திவிடுவார்.

அழுத்தம். பேச்சியின் பேச்சை கேட்க ஆரம்பித்ததும் லீலாவை தாக்கியது.

முயன்று வெளியே வந்துவிடுவார். மற்ற ஆட்களிடமும் பேச்சை குறைத்து, வீட்டுக் கைதியின் நிலையில் இருந்தவரிடம் என்ன ஏதென்று வழிய வந்து ஜானகியும் ராதிகவும் பேச, அது இன்னும் பேச்சியை உசுப்பியிருந்தது.

அவர்கள் ஒவ்வொரு முறையும் லீலாவின் வீட்டிற்கு வந்து சென்ற பின்பான பேச்சியின் பேச்சு அத்தனை நாராசமாய் இருக்கும். அதுவும் திண்ணையில் அமர்ந்து கொண்டு, கோபியோ ராதிகாவோ இல்லாத நேரத்தில் அக்கம் பக்கம் உள்ளவர்களை திரட்டி அவர் சாடையாக பேசுபவை எல்லாம் அத்தனை விஷமான சொற்கள்.

"வீட்டாளு வெளிய இப்படி போனாக்கா.. இவளுங்க அப்படியே சிங்காரிச்சுட்டு இங்க வந்தரது.. இனி வெலக்கமாத்தத் தான் எடுக்கனும்" வெற்றிலையைப் போட்டபடி நான்கு வீட்டு பெண்களிடம் அவர் ஓயாத பேச்சு அதுவாகத் தான் இருந்தது.

மெல்ல மெல்ல அந்த ஒற்றை பேச்சு, இணைத்து பேச்சுவது போல் மாற்றம் வர ஆரம்பித்திருந்தது லீலாவிடம் இருந்த கோபியின் எதார்த்தமான பேச்சின் விளைவாக.

"ஒரு கூச்ச நாச்சம் வேண்டாமா? இது என்ன பொழப்பு இங்கயே என் மருமவனே இருக்கம் போது வாரது?"

அந்த பேச்சைக் கேட்க கேட்க, மனதில் இல்லாத தோன்றாத ஒரு எண்ணம் கூட தோன்று படியாக தான் அமைந்தது அங்கிருந்தவர்களிடம். அதற்கு ராதிகாவும் விதிவிலக்கல்ல.

எறும்பு ஊற ஊற கல்லும் தேயுமாம்! அதுபோல் தான் பேச்சியின் பேச்சைக் கேட்டுக் கேட்டே லீலாவின் மீதான ஒரு வித சந்தேகம் துளிர் விட ஆரம்பித்திருந்தது ராதிகாவிடத்தில்.

திண்ணை பேச்சு மெல்ல பரவ ஆரம்பித்து அந்த காலனிக்கே பேசு பொருளாக மாற ஆரம்பித்திருந்தது.

இதில் லீலாவிற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் மிகவும் அதிகம். பிறந்த வீட்டில் இன்னும் சேர்க்காதது, அக்கம் பக்கத்தினரின் பேச்சு, சதாசிவத்தின் நேரமின்மை என அனைத்தும் அவரை பலமாய் தாக்க ஆரம்பித்திருந்தது.

வேலை வேலை என்று மூன்று மருத்துவமனைகளில் நேரம் காலம் பார்க்காமல் சதாசிவம் மருத்துவம் பார்க்க ஆரம்பித்திருக்க, வீட்டின் நினைப்பே இல்லாது காசின் பின்னையே ஓட ஆரம்பித்திருந்தார்.

பகிர்தல். உணவு மட்டும் அன்று நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம் நம்பிக்கைக்கு உரிய நபரோ துணையிடமோ நாம் பகிர பகிர மனம் தன்னையறியாமல் ஒரு நிறைவையும் இலகு தன்மையையும் உணரும்.

அந்த பண்புபை திடீர் என்று இழந்தாலோ அல்லது பகிராமலேயே விட்டுவிட்டால் தான் அந்த அழுத்தம் மென்மேலும் சேர்ந்து மன அழுத்தத்தைத் தூண்டி விடும்.

அந்த பகிர்தலையும் லீலா விட்டிருந்தார் சதாசிவத்தின் வேலை பழு காரணமாக.

தன் துக்கத்தைக் கேட்க ஆளில்லை என்ற நினைப்பும் இணைப்பாக சேர்ந்துவிட்டது அவரிடம்.

ஏன்? எதற்கு? என்று கேள்விகள் அணிவகுத்து நின்றாலும் அவரால் தாளமுடியவில்லை.

பேச்சு தானே என்று எளிதாக நாம் சொன்னாலும், அந்த பேச்சினாலேயே தான் லீலாவிற்கு இந்த நிலையே வந்தது என்பது தான் நிதர்சன உண்மை.

பேச்சியின் மனநிலையை புரிந்து கொள்ள தான் அங்கு ஆட்கள் இல்லை. இதற்கிடையில் தான் நாராயணனின் குடும்பம் தங்களின் பூர்வீக கிராமத்திற்கு செல்ல நேர்ந்தது.

ஜானகி இருந்திருந்தாலாவது ஒரு அளவிற்கு கண்டு கொண்டிருப்பார். ஆனால் அவரும் இல்லாதது தான் சோகமே.

அழுத்தங்கள் தாங்காது பேச்சியிடமே ஒரு நாள் கேட்டே விட்டார் லீலா.

"என் மேல உங்களுக்கு அப்படி என்ன பேச்சியம்மா கோபம்? கோபி அண்ணாவோட என்னைய இணச்சு பேசுறீங்க? என்ன பேச்சு இதுயெல்லாம். ரொம்ப தப்பு பேச்சியம்மா.. இனி இந்த பேச்சு எல்லாம் வேண்டாம்" என்று சற்று அழுத்தமாகவும் கோபத்துடனும் சொல்லிச் சென்ற லீலாவின் பேச்சை கோபியும் கேட்டு அதிர்ந்துவிட்டார்.

'என்ன பேச்சு இது? அதைவிட தன்னையே இவர் இப்படி பேசுகிறாறே' என்ற கோபம் எழ, பேச்சியிடம் சண்டை போட்டு அவரை காரைக்குடிக்கே அனுப்பி வைத்துவிட்டார் கோபி.

எந்த பிரச்சனைக்கு அவர் முற்றுபுள்ளை வைத்தாரோ அங்கு தான் அதற்காக காற்புள்ளி வைத்து அதை மேலும் தொடர்ந்தார் பேச்சி.

பேசியே பழக்கப்பட்டவருக்கு பேசாமலா இருக்க முடியும்.

பிசிஓ போன் போட்டு ராதிகாவிடம் கோபியை பார்த்துக்கொள்ளும் படி சொல்ல ஆரம்பிக்க, அவரின் சகாக்களுடன் அதே பேச்சு வளர, ராதிகாவின் மனதும் முற்றும் மாறியிருந்தது.

"என்ன தான் சொல்லு, லீலா பேச வந்தாலும் இந்த மனுசனும்ல சிரிச்சு சிரிச்சு பேச ஆரம்பிச்சுட்டாரு.. எல்லாம் என் மக வாங்கியாந்த வரம்" இருந்த கடுப்பில் அவர் திரித்த கதை, தொடர்கதையானது.

அதற்கு மேலும் வழு சேர்ப்பது போலவே ராதிகா வீட்டின் பின் பக்க வீட்டில் குடி வந்து சேர்ந்தான், ரகு!

_வருவாள் 👣
 
Top