எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

லீலா - 16

Shambhavi

Moderator

தூத்துக்குடியில் இருந்த மருத்துவமனைக்கு மாற்றல் வந்திருந்தது சதாசிவத்திற்கு.

அவர் வேலையில் இருந்த அதே மருத்துவமனை தான். அவரின் மனநிலையை மாற்ற வேண்டி அவரின் நிர்வாகம் எடுத்த ஒரு முயற்சி.

மதுவை அதுவரை ஜானகியும் ரம்யாவும் தான் கவனித்தனர்.

லீலாவோடு அவர் இருந்த மூன்றாம் எண் வீடு பூட்டப்பட்டது.

இரண்டாம் வீட்டுக்காரர்களும் கோபியின் வீட்டாரும் தான் அத்தனை பயந்து செத்தனர்.

துர்மரணம். அதுவும் கை பிள்ளையை, காதல் கணவனை விட்டுச்சென்றிருந்த பெண்ணின் மனம் முழுக்க இங்குதான் இருக்கும், அவள் ஆத்மாவும் இங்குதான் வலம் வரும் என்று ஆணித்தனமான நம்பினர் காலனி மக்கள்.

மதுவை தன்னோடு அழைத்துக்கொண்டார் சதாசிவம்.

கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் ஜானகி நாராயணனின் உதவிக்கு ஈடாகாது. அவர்கள் மனது போல் அவர்களின் செயல்கள்!

தூத்துக்குடியில் தன் வாழ்க்கையை லீலா இல்லாது மதுவோடு ஆரம்பித்திருந்தார், சதாசிவம்.

அன்றோடு லீலா மறைந்து நான்கு மாதங்கள் சென்றிருந்தது. தாயில்லாது பிள்ளை இருக்க பழகிக்கொள்ள கொண்டவள் இல்லாது தவித்து மருகினான், கணவன்.

காதலாய், மோகமாய், தாயாய், மகளாய், தோழியாய், ஆசானாய் சதாவைத் தாங்கிய அவன் லீலுவின் மறைவை அவனால் இன்னமும் ஏற்க முடியவில்லை.

செத்து தவித்தான் அனுதினமும்.

என்ன தான் மருத்துவனாய் இருந்தாலும் பிள்ளையின் அழுகைக்கும் சிணுங்கலுக்கும் காரணம் தெரியாது முழிக்கும் நேரம் கண்ணீரில் கரைந்தனர் தகப்பனும் மகளும்.

விஷயம் கேள்விப்பட்டு சதாசிவத்தின் வீட்டார் அவரை காண வர, யாரையும் அவர் பார்க்க அனுமதிக்கவில்லை.

பிள்ளையை கேட்டனர், மறுத்தார். தனியாய் சமாளித்தார் அனைத்தையும்.

லீலா இருப்பது போல் ஒரு உருவகத்தை ஏற்படுத்துக்கொண்டு வாழ்க்கையை மதுவிற்காக அவர் வாழ ஆரம்பித்த நேரம் செய்தி வந்தது ஜானகியிடமிருந்து.



“எங்கனால இங்க குடியிருக்க முடியாதுங்க. ராத்திரி ஆனா போதும் என்ன என்னமோ நடக்குது. உசிர கையில புடிச்சிட்டு எல்லாம் குடும்ப நடந்த முடியாதுங்க. நீங்க மொத அட்வான்ஸ் பணத்தத் தாங்க, நாங்க வீட்ட காலி பண்ணுறோம்”

நான்கு மாதத்தில் பதினோரு குடும்பத்தார் குமரன் காலனியின் முதல், இரண்டாம், ஆறாம் வீட்டிற்கு குடி வந்து, அரண்டு ஓடியிருந்தனர்.

காரணம், லீலா!

எப்போதெல்லாம் மதுவும் சதாவும் அவளின்றி தவிக்கின்றனரோ அப்போதெல்லாம் அந்த பரிதவித்த ஆத்மா தன் உக்கிரத்தை உயிர்விட்ட இடத்தில் காட்டியது.

சிதறி போனார்கள் அங்கிருந்தவர்கள்.

சொந்த வீடாய் போய்விட கோபியின் குடும்பம் பட்ட கஷ்டத்தை, ப்பாஹ் தேவைதான் என்றே தோன்றியது.

ஒரு கட்டத்தில் லீலாவின் ஆட்டம் தாங்காது குடும்பத்தோடு தொழிலை மாற்றிக்கொண்டு காரைக்குடிகே குடிபோய் விட்டது குடும்பம்.

ஜானகி, அதை சொல்லவும் மதுவை கேட்கவும் என்று அழைத்தவர் மொத்தமாய் மனபாரம் தாங்க சொல்லிவிட, சதாசிவத்தின் நிலை மோசமானது.

ஜானகியோடு சேர்ந்து அவர் பேச்சியை ஏதாவது செய்யும் முடிவில் இருந்த போது தடை வந்தது நாராயணனிடமிருந்து.

காலம் யாருக்கும் நிற்காது பறந்திருக்க, லீலாவின் நினைவுகளோடு நாராயணனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மதுவை வளர்த்திருந்தார், சதாசிவம்.

கனத்த மனதோடு அவர் சொல்லக் கேட்டிருந்த உண்மை முரளியை குறுக வைத்திருந்தது. அவனுக்கும் அந்த நிகழ்வு லேசாய் ஞாபகம் இருந்தது.

குட்டியாய் தங்கள் சகோதரியுடன் விளையாடும் பிள்ளையின் முகம் தெளிவில்லாது நினைவிருந்தாலும் மனதார அப்பிள்ளையிடம் இப்போது மானசீக மன்னிப்பை கேட்டான், முரளி மனோகரன்.

“லீலா’க்கா” என்று அழ ஆரம்பித்திருந்த ரம்யாவும்,

“ஸாரிக்கா” என்று கண்ணீர் துளிர்த்த சந்ருவும் மனபாரம் தாங்காது அழுது தங்கள் துக்கத்தை வெளியிட்டனர்.

சக்திக்கே சதாவைப் பார்க்க முடியவில்லை. காதல், அதை அணுஅணுவாய் புரிந்து வாழ்ந்து, அது கொடுத்த முத்தோடு இனிமையாய் வாழ்ந்தவர்கள் வாழ்க்கையை எப்படி இப்படி சீரழிக்க முடிந்தது என்ற கோபம் அவனிடம் இருந்தாலும் சதாவிற்காக அவன் மனது அடித்துக்கொண்டது.

மனைவி என்பதைத் தாண்டி லீலா அவரின் காதல் பெண்.

திருமணத்திற்கு முன்பே ஒரு மனிதனை நம்பி, அவரைக் கைப்பிடித்து வந்திருந்தவர் மீதான அசாத்திய நம்பிக்கையை பெற வேண்டும் என்றால் அவர்கள் வைத்திருந்த காதல் எத்தனை ஆழமானதாய் இருந்திருக்க வேண்டும்.

அதுவும் அவரின் ஆசைப் படிப்பையே சதாவிற்காகத் தூக்கிப் போட்டு வந்தவர் மீதான மரியாதை அவனிடம் பெறுகியது!

முரளி, “ஸாரி சார்” என்க,

“இப்போ போய் கம்பிளைண்ட் கொடுக்கலாமா தம்பி” என்றவர் கண்கள் சிவந்திருந்தன.

நாற்பதின் மத்தியில் இருந்தவர் முகத்தில் சாந்தம் இருந்தாலும் லீலாவைப் பற்றிய பேச்சால் அது அடித்து விரட்டப்பட்டிருந்தது.

இறுகிப் போய் நின்றிருந்தவர் நாராயணனைப் பார்க்க, “மது” என்க, உள்ளூர பதறியது அவருக்கு.

“புள்ள நல்லா இருக்கா தான? ஒன்னுமில்லையேப்பு”

சென்ற வருடம் தான் மது பெரிய மனிதி ஆகியிருந்தால். அக்கணத்தை மருத்துவராய் சதாசிவம் கடந்திருந்தாலும் தகப்பனாய் உயிரற்று மடிந்துவிட்டார் மனைவியின் துணையில்லாமல்.

பதினைந்து வயது மகளுக்கு விவரம் நன்கு தெரிந்திருந்தாலும் மனது கிடந்து படபடத்து துடித்ததே.

இரவிரவாய் வாய்விட்டு அழ முடியாது, மகளை தனியறையில் இருக்க வைத்தது அந்த தகப்பனை வெதும்பிப் போக வைத்திருந்தே.

“நா இல்லேனா மதுவ கையில வெச்சுக்க மாட்டீங்களா சிவா” என்று தினமும் காதில் கேட்ட மனைவியின் வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாது கழித்த பொழுதெல்லாம், கண்ணீர் நில்லாது வடிந்தது சதாசிவத்திற்கு.

“ஸார், ஃப்ளீஸ் சொல்லுங்க. மது நல்லாயிருக்காங்க தான?” சக்தியும் கேட்டான்.

என்ன இருந்தாலும் பெண் பிள்ளையைப் பெற்ற தகப்பன்களுக்கு இருக்கும் பயம் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும்!

கண்ணை மூடிக்கொண்டு நெடுமூச்செடுத்தவர், “முந்தா நாள் ஸ்பெஷல் க்ளால், சாயந்திரம் ஆறு மணிவர ஸ்கூல் அப்போ…” என்றவர் கையைப் பிடித்துக்கொண்டார் நாராயணன்.

“எய்யா, புள்ள இப்போ எங்கன?”

“எங்க அம்மாவோட வீட்டில இருக்கா” என்றவர் முகத்தில் இரத்த பசை இல்லை.

“கெமிஸ்ட்ரி ஸார் கூப்டாருனு லேப்கு போயிருக்க. அங்க அந்த பொறுக்கி” என்று சொல்ல முடியாது ஆத்திரம் பொங்கியது அவருக்கு.

ரம்யா, “ஒன்னுமில்லையே’ண்ணா?”

“மேல கை வெச்சிட்டான். மதுவே சமாளிச்சுட்டா தான், ஆனா பேபி ரொம்ப பயந்துட்டா” என்க, கண்ணோறம் துளி கசிவு.

ஜானகி, “பெத்த வயிறு என்ற பாடுபடும். எம்புட்டு தவிக்கும். அதான் அத்தன வருஷ ஆத்திரத்த எல்லாம் சேர்த்து வெச்சு உசிரேடுத்துட்டா மவராசி” ஆவேஷம் வந்தவர் போல் பேசியவருக்கு அடங்க முடியாத கோபம்.

“எங்கையால அவ சங்கறுக்க முடியலையே. பாவிமவ, அவளே காவு வாங்கிட்டா. மதுபுள்ள புளுவா துடிச்சிருப்பாளே, புள்ளைய அந்த நெலையில காண முடியாமத் தான் லீலா சடவாயிருப்பா” தன்போல் அவர் பேச, அதுதான் உண்மை என்பது அங்கிருந்தோருக்குப் புரிந்தது.

முரளிக்கு அங்கு நிற்கவே முடியவில்லை. எத்தனை பெரும் பாவத்தை அவன் அப்பத்தாவும் அம்மாவும் செய்திருக்கின்றனர் என்று நினைக்க, அருவருத்துப் போனான்.

ரம்யா, “நான் தான் அந்த பேச்சியம்மா கேட்டாங்கனு எழுதிக் கொடுத்தேன். அக்கா எங்க மேல எல்லாம் கோபமா இருப்பாங்க.. ஸாரி லீலாக்கா” என்று விசும்ப,

“உனக்கு ஒன்னும் தெரியாது. ஆனா இனி தெரியாதவங்க யார் வந்து கேட்டாலும் உதவி செய்யாத.. ம்மா” என்று ஸ்பூர்த்தி சொல்ல, அதிர்ந்தனர் அனைவரும்.

அவள் அழகாய் சதாவைப் பார்த்து சிரித்த அழகில், லீலாவின் குறும்பு சிரிப்பு மறைந்திருப்பதைக் கண்டார் மனிதர்.

சதாசிவம், “இங்க வாங்க பேபி” என்றவர் அழைக்க,

“நோ. கால் மீ ஸ்பூர்த்தி, சிவா” என்றதில் தாவிக்கொண்டு பிள்ளையை அணைத்துக்கொண்டார், சதாசிவம்.

“ஸ்பூர்த்தி.. ஸ்பூர்த்தி.. காட் ப்ளஸ் யூடா கண்ணா” என்ன பேச என்று தெரியாது அவர் குழந்தையை வாழ்த்த,

“நீ நல்லா சாப்பிடு சிவா. லுக்கிங் டூ ஓல்ட். நா எப்பவும் உங்க கூட தான் இருக்கேன். நோ ஒரிஸ்” என்க, கடவுளை மீறிய சக்தி இல்லை என்று நம்பிய சக்தி கூட மகளின் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்தான்.

ரம்யா மகளையே பார்த்திருக்க, “உன் பொண்ண நா ஒன்னும் பண்ணல ரம்யா. பயப்படாத” என்ற குழந்தை நாராயணனிடம்,

“ஐயா” என்க, உடைந்து அழுதுவிட்டார் மனிதர்.

“சிவாயநம, அய்யேன பார்க்க சாமி வந்துட்டீங்களா?” என்க,

“அழுவாதீங்க ஐயா. நீங்க தானே இவங்க மொத்த பலமும். ஏ வேல இன்னும் முடியலை, சிலது மிச்சமிருக்கு. நா இல்லேங்கர முதல்ல மறங்க, நா உங்க எல்லார் கூடவும் தான் இருக்கேன்” என்றபடி பிள்ளை சந்ருவிடம் சென்று அவன் காலோடு அமர்ந்துவிட்டது.

சக்தி, “ஸ்பூர்த்தி’ம்மா” என்று பிள்ளையைத் தூக்க,

“ப்பா, ஆம் ஹங்க்ரி (Hungry)” என்று கண்ணை தேய்த்தால்.

_வருவாள் 👣
 
Top