எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 15

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 15


பிரமாண்டமான பெரிய வணிகவளாகம். மேல்தட்டு மக்கள் புழக்கம் அதிகம் இருக்குமிடம். கண்ணாடியினால் ஆன கடைகள், வண்ண வண்ண விளக்குகள் என்று அந்த வணிகவளாகம் சும்மாவே அழகாக இருக்கும் ஆனால் இன்று மேலும் அழகாக இருந்தது. அந்த வணிகவளாகத்தின் லாபியில் அழகாகச் சிவப்பு வண்ண பலூன்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.


தன் நண்பர்களுக்கு உணவுவிடுதியில் பிறந்த நாளுக்கான விருந்தை கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு தனியாக வணிக வளாகத்திற்குள் வந்த பிரணவிகாவின் கண்கள் அந்த அலங்காரத்தில் சற்று ஆச்சரியமாக விரிந்தது. அதன் அழகை ரசித்துக் கொண்டே உள்ளே செல்ல, அங்குள்ள சிறிய மேடையில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இளைஞர்கள் மேடையில் ஆடிக் கொண்டிருந்தனர்.


அங்கு பொதுமக்களும் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பிரணவிகாவும் நின்று பார்த்தாள். சற்று நேரத்தில் மேடையில் ஆடிய இளைஞர்கள் கீழே இறங்கி ஆட, அவர்களுடன் மேலும் சிலரும் இணைந்து ஆடினர்.


ஆடிக்கொண்டிருந்த இளைஞர்கள் யார் கண்ணையும் கவராத வண்ணம், பொதுமக்களுடன் சேர்ந்து ஆடுவது போலவே கைகளைப் பிடித்து ஆடிக்கொண்டே ஓரம்கட்டிவிட்டினர். கடைசியாக அவள் மட்டும் நடுவில் நிற்க, அவளைச் சுற்றி அனைத்து இளைஞர்களும் ஆட, சற்று மிரட்சியாக இருந்தாலும் அந்தக் கற்பனை நிகழ்வைப் பிரமிப்பாக இரசித்துக் கொண்டிருந்தாள்.


தீடீரென அவள் முன் பிரசன்னமானான் சூர்யான்ஷ் கையில் அழகிய பூங்கொத்துடன். வெள்ளை நிற கோர்ட்சூட்டில் அழகாக, மயக்கும் புன்னகையுடன் அவளை நோக்கி வந்தவன், அவள் முன் ஒருகாலை மண்டியிட்டுப் பூங்கொத்தை நீட்டி,


“வில் யூ மேரி மீ மை டியர் பியூட்டி குயின்” எனக் கேட்க, அவன் கூறிய பியூட்டி குயினிலேயே அவன் தான் இத்தனை நாளும் அவளுடன் கண்ணாமூச்சி ஆடியவன் என்பதை கண்டுகொண்டவள் முகம் பூரித்து நின்றாள்.


“ஆன்ஸர் மீ டார்லிங். வில் யூ மேரி மீ” என அவன் திரும்பக் கேட்க, அந்த பேதைப் பெண்ணிற்கோ சிந்திப்பதற்கான கால அவகாசமே அவன் கொடுக்கவில்லை.


அவள் கண்ணில் உள்ள அந்த மயக்கம் மூளைக்கு சென்று அது சிந்திக்க ஆரம்பித்தால் அவனுக்குப் பாதகமான முடிவு வந்துவிடுமோ எனச் சூட்சமமாக எண்ணியவன், அவள் மயக்கத்தை தெளிய விடும் முன் அவளிடம் சம்மதம் கேட்டு நிற்க, அவன் என்ன நடக்க வேண்டுமென ஆசைப்பட்டானோ அது தான் நடந்தது.


பேதையவளின் தலை சம்மதமாக அசைய, அவள் கைகள் தானாக அந்தப் பூங்கொத்தை கைப்பற்றியது. அவன் வதனம் வெற்றிப் புன்னகையை சிந்த, கண்களிளோ இறையை வேட்டையாடும் குரூரமான பார்வை.


சுற்றி நின்ற அனைவரும் கைத்தட்ட, இருவரின் தலைக்கு மேலும் தொங்கிய எண்ணிலடங்கா சிவப்பு பலூன்களை அடக்கிய இராட்சத பையின் கட்டு அவிழப்பட்டு இருவரின் மீதும் கொட்டி, அவ்விடமே பலூன்களால் சூழ ஆரம்பித்தது.


பலூன்களுக்கு மத்தியில் அவள் கையைப் பற்றியவன், அவள் விரலில் வைர மோதிரம் அணிவித்துவிட்டு, முத்தமிட வர அனிச்சையாகக் கையை இழுத்துக்கொண்டாள்.


கற்பனைக்கனவின் மயக்கத்தால் அவனிடம் சம்மதம் கூறியவளால், அவன் முத்தத்தை ஏற்கமுடியவில்லை. ஏனென அப்போதே சிந்தித்திருந்தால் பின்னாளில் அவளுக்கு நேரவிருக்கும் அவமானத்திலிருந்து தப்பியிருப்பாளோ என்னவோ! ஆனால் சிந்திக்க மறந்தாள் பேதை.


அனைவரின் முன்னிலையில் அவன் செய்த காரியம் அவளை ஒரு கதாநாயகியாக, இளவரசியாக, ஏன் ராணியாகவே உணரவைத்தது. அவள் கற்பனை நாயகன் என்னென்ன அவளுக்குச் செய்ய வேண்டுமென நினைத்தாளோ அது அத்தனைக்கும் மேலாக ஒருவன் வந்து நிஜத்தில் செய்யும்போது மறுக்கத்தான் முடியுமா!


அவன் கைபிடியில் அவளை அங்குள்ள ஒரு கடைக்கு (காஃபி ஷாப்) சென்றான்.


“பியூட்டி குயின். நீ என்னை ஏத்துக்கிட்டதை இன்னமும் என்னால நம்ப முடியல. ஒருமாதிரி பறக்குற மாதிரி இருக்குது”


“என்னாலயும் இப்போ நடந்தத நம்ப முடியல. என் வாழ்க்கையில இப்படியெல்லாம் எனக்கு நடக்கனும்னு எனக்கு அதீத ஆசை இருந்தது. அதெல்லாம் இப்போ நிறைவேறின சந்தோஷம் என் கழுத்த முட்டுற வரை இருக்கு. எப்படி இதெல்லாம்..”


“உன்னை முதன் முதலா அந்த மால்ல பார்த்ததிலிருந்து என்னமோ பண்ணிட்ட பியூட்டி குயின். அப்போல இருந்து இப்போ வரை உன் பின்னாலயே தான் திரியுறேன். உனக்கு பொக்கே அனுப்ப, பூ அனுப்ப, சாக்லெட்ஸ் அனுப்ப, கிஃப்ட்ஸ் அனுப்பனு தினமும் உன் முன்னால வந்து வந்து நின்னேன்.. ஆனா என்னால என்னை வெளிப்படுத்திக்க முடியல.. எங்க நீ என்னை ரிஜெக்ட் பண்ணிடுவியோனு பயம்”


“உண்மைக்குமே நான் உங்கள ரிஜெக்ட் தான் பண்ணிருக்கனும்”


“வாட்” என அதிர்ந்து எழுந்து நின்றே விட்டான்.


“ஷாக் ஆகாதீங்க. உட்காருங்க. ஆமா நிஜமா அன்னைக்கு மால்ல நீங்க என்கிட்ட இத கேட்டு இருந்தீங்கனா நான் நோ தான் சொல்லிருப்பேன். ஏன்னா உங்களுக்கும் எங்களுக்கும் ஆகாது”


“வாட் நமக்கு என்ன பிரச்சனை?” எனத் தெரியாதவாறே கேட்டான்.


“நான் யாருனு இன்னும் உங்களுக்குத் தெரியாதா?”


“நீ என்னோட பியூட்டி குயின்”


“நான் என் ஃபேமிலிய கேட்டேன்”


“நான் உன்னைத் தான் பியூட்டி குயின் லவ் பண்றேன். நீ யார் என்னனு தெரிஞ்சு, நம்மளுக்கு ஒத்துப்போகுமா, இல்லையானு ஆராய்ந்து வந்த லவ் இல்ல.. பார்த்ததும் பச்சக்குனு நீ எனக்குள்ள வந்துட்ட.. சோ நீ யாரா வேணாலும் இரு.. ஆனா நீ தான் என் லைஃப்”


“நான் உங்க பிஸ்னஸ் எதிரி வீட்டு பொண்ணு” எனக்கூற, திரும்பவும் அதிர்ந்து எழுந்து நின்றான். இல்லை இல்லை அதிர்வது போல நடித்துக் கொண்டு நின்றான். அவனுக்கா அவள் யாரெனத் தெரியாது! எல்லாம் தெரிந்து கட்டம் கட்டித்தானே இந்த வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.


“வாட்.. யார் வீட்டு பொண்ணு நீ?”


“ஷரா காஸ்மெடிக்ஸ் எங்க அத்தை, மாமாவோடது தான்” எனக்கூற, பொத்தென இருக்கையில் அமர்ந்தான். இப்போது தான் அவளைப் பற்றித் தெரிவது போல அழகாக நடித்தான்.


“அதான் நீங்க முதல் தடவை என்கிட்ட பேசும்போது கூட, அப்படி பேசினேன். அதான் சொன்னேன் அன்னைக்கு சொல்லிருந்தா நோ சொல்லிருப்பேன்னு”


“இப்போ உனக்கு என்னைக் கல்யாணம் கட்டிக்க ஓ.கே தான?” எனக்கேட்க, வெட்கத்துடன் தலைகவிழ்ந்தாள்.


“இது போதும். எனக்கு என் பியூட்டி குயினோட சம்மதம் மட்டும் போதும். யார் வந்தாலும் என்னால சமாளிக்க முடியும். உங்க அப்பா, அம்மா கிட்ட நானே வந்து பேசுறேன்”


“அய்யோ வேணாம்” எனப் பதற,


“ஏன் டார்லிங்?”


“இல்ல இது என்னோட ஃபைனல் இயர். இத முடிச்சுட்டு தான் கல்யாணம்”


“ஏன் கல்யாணம் பண்ணிட்டு படிக்கலாமே?”


“இல்ல.. அது.. அது வந்து கல்யாணம் பண்ணினா.. ஃபோகஸ் இருக்காது படிப்புல..” என இழுக்க,


“அப்போ எதுல ஃபோகஸ் இருக்குமாம்?” என விஷமமாகக் கேட்க, சட்டென அவள் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது.


“அச்சோ சும்மா இருங்க. நான் படிச்சு முடிச்ச பிறகு.. கல்யாணம் பண்ணலாம். அப்போ வீட்டுல வந்து பொண்ணு கேளுங்க”


“அதுவரை என்னால தாங்க முடியாதே! என்னோட பியூட்டி குயின் தினமும் என்னைத் தூங்க விடாம இம்சை பண்ணுதே!” இப்போதும் அவளிடம் வெட்கம் மட்டுமே!


“சரி அத எப்போனு அப்புறம் முடிவு பண்ணலாம். அதுவரை நம்ம லவ் பண்ணலாம்” எனக்கூற, அப்போதும் வெட்கத்துடன் கூடிய சிரிப்பு தான்.


“அச்சோ நான் ஆள் மாத்தி காதல சொல்லிட்டேனா?” எனச் சந்தேகமாகக் கேட்க, அவள் கேள்வியாக அவனை நோக்கினாள்.


“பின்ன நிமிஷத்துல பத்தாயிரம் வாலா வெடிச்ச போல பேசுற என் பியூட்டி குயின் இன்னைக்கு பேச்சு மறந்து உட்கார்ந்து இருக்கே”


“நீங்க என்னை ரொம்ப கிண்டல் பண்றீங்க.. நான் கிளம்புறேன்” என எழுந்து செல்லப் போக, அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்தான். எதிரில் அமர்ந்த போதே அவளுக்கு வார்த்தை பஞ்சமாகிவிட, அருகில் அமர்ந்தால்.. மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்தது. இது வெட்கத்திலாலா இல்லை ஒவ்வாமையாலா? மெல்ல அவனிடமிருந்து எழுந்து மீண்டும் எதிரில் அமர்ந்தாள்.


“என்னாச்சு டார்லிங்?” என அவன் கேட்க,


“இல்ல ஒன்னுமில்ல. எனக்கு எதோ மாதிரி இருக்கு..” எனப் பதிலளிக்க, அப்போது சரியாக அவளது அலைபேசி சத்தமிட்டது. எடுத்து பார்க்க சாத்விகா தான் அழைத்திருந்தாள்.


சாத்விகா “பிரணி நான் மால் பார்க்கிங்ல நிக்கிறேன். சீக்கிரம் வா. அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க எனக்கு” எனக்கூற,


“இதோ கிளம்பிட்டேன். வந்துருறேன்.. வெயிட் பண்ணு” எனக்கூறி, அழைப்பை நிறுத்தியவள், அவனிடம்


“அம்மா கூப்பிடுறாங்க.. நான் வீட்டுக்குக் கிளம்பிறேன்.. அப்புறம் பார்க்கலாம்” என்றவள், அவனிடமிருந்து விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினாள், செல்லும் அவளையே யோசனையாகப் பார்த்தான்.


அவனுக்கும் அவளது விலகல் அப்பட்டமாகத் தெரிந்தது. அவள் ஏதோ ஒரு மயக்கத்தில் அவனுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டாள் ஆனாலும் அவள் அவனிடம் காட்டும் விலகல் அவனுக்கு நல்லதல்ல என்பது மட்டும் அவனுக்குப் புரிய, அவளை மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவனும் கிளம்பிவிட்டான்.


*******


ராகவேந்திரா வீட்டில் பிரணவிகா, சாத்விகாவின் பிறந்த நாள் விழா தயாராகிக் கொண்டிருந்தனர். விஹான் தன் அன்னையிடம் கூறி, இன்றே தன்னவளை தனக்கு உரிமையானவளாக மாற்ற நினைக்க,


சந்தோஷ் “கவிதாவுக்கு இப்போதைக்கு விஷயம் தெரிய வேணாம். இன்னைக்கு அவங்க வீட்டுல விஷேசம். அது முடியட்டும். நல்ல விஷயம் நடக்கும்போது பிரச்சனை எதுவும் வேண்டாம். நாளைப்பின்ன பொறுமையா உங்கம்மா கிட்ட நானே பேசுறேன்” எனக்கூறிவிட, வேறு வலி இல்லாமல் அமைதியாக இருந்தான்.


அனைவரும் கவின் இல்லத்துக்குக் கிளம்ப தயாராகினர் கவிதாவைத் தவிற. வெறும் பிறந்த நாள் விழாவுக்காகக் கூட அவர்கள் வீட்டுக்கு வர விரும்பாத கவிதாவின் மனநிலையை பார்த்தவர்களுக்கு இவர் எப்படி திருமணத்திற்கு சம்மதம் கூறுவார் என்ற கலக்கம் வந்தது.


அன்றைய விஷேசத்திற்காக ஷிம்ரித்தும் வந்திருக்க, வீட்டில் கவிதாவை தவிற மற்ற அனைவருக்கும் விஷயம் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைவருக்குமே அதில் சம்மதம் தான். ஆனால் கவிதாவின் இந்தக் குணம் தான் அனைவரின் மனதிலும் உறுத்தலாக இருந்தது.


விஹானுக்கு பிரணவிகாவிற்கு எதாவது வாங்கி கொடுக்க நினைத்தவன், கடைக்குக் கிளம்பினான். “நான் எதாவது கிஃப்ட் வாங்கிட்டு நேரா அங்க வரேன். நீங்க எல்லாரும் கிளம்பி வாங்க பெரியம்மா” என கல்பனாவிடம் கூற, அவனைப் பார்த்த கல்பனாவுக்கு ஏதோ மனம் தவறாக அடித்துக் கொண்டது.


“எதுனாலும் ஏத்துக்கனும் விஹான். வீட்டோட ஒத்துமை எப்பவும் குறைய கூடாது. உங்கம்மா ஆடுவா.. நீ தான் பொறுமையா உங்கம்மா கிட்ட சம்மதம் வாங்கனும். சண்டை எதுவும் வந்துட கூடாது விஹான்” எனக்கூற,


“சரி பெரியம்மா. நான் பொறுமையா இருப்பேன். அண்ணி நம்ம வீட்டுக்கு வந்தது போல முறையா, மரியாதையா, எல்லார் சம்மதமும் வாங்கி பிரணிய நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வருவேன் பெரியம்மா” என வாக்கு கொடுத்துவிட்டு சென்றான் பிற்காலத்தில் வருவதை சிந்திக்காமல்.


வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராக வந்தது ஒரு பெரிய நகைக்கடைக்கு. அங்கு அவளுக்குப் பொருத்தமான நகைகளைப் பார்த்தான். கடைசியாக அவன் கண்ணில் சிக்கியது மெல்லிய தங்க சங்கிலியில் இரண்டு இதயம் பின்னி இருப்பது போலவும், அதில் ஒரு இதயம் முழுவதும் வைரக்கற்கள் பதித்து இருப்பது போலவும் இருந்த அழகிய சங்கிலி.


அதைப் பார்த்ததும் அவனுக்குப் பிடித்துவிட்டது. நிச்சியம் அவளுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் அதைச் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு தன்னவளைக் காண புறப்பட்டான். பாவம் அவன் அறியவில்லை அந்தப் பரிசை அவன் அவளுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் கொடுக்கப் போவதில்லையென.


ஆசையாக வாங்கிய பரிசை ஏன் விஹான் கொடுக்கவில்லை? அதன் பின்னால் என்ன சதி வேலை நடந்தது? பொறுத்திருந்து பார்க்கலாம்.
 
Top