எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எலிப்பொறி (சிறுவர் சிறுகதை)

"தாத்தா.... தாத்தா.... ஒரு கதை சொல்லுங்க ப்ளீஸ்...." என தாத்தா வேலாயுதத்தின் கழுத்தை செல்லமாகக் கட்டிக் கொண்டாள் சுட்டிப் பெண் யாழ்குழலி.

"ஹேய்.... யாழ் குட்டி.... இன்னும் தூங்கலயா....? மணி பத்தாகுது பாரு...."
"ம்கூம்... இன்னிக்கு உங்க கதைய கேக்காம தூங்க மாட்டேன்...." அடம் பிடித்தாள் அந்த குட்டி தேவதை.

"ஆகா.... அப்படியா....?"
"ம்ம்... அப்படித்தான்.... "கண்களால் சிரித்தாள் யாழ்குழலி.
"சரி... ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்..." என்பதற்குள் அவர் வாயை மூடினாள் சட்டென.

" தாத்தா... தினமும் இப்படி ராஜா கதை சொல்லியே அம்மா போர் அடிக்கறாங்க.... என் வயசுக்கு ஏத்த மாதிரி முயல், சிங்கம், கரடி, நாய்... இப்படின்னு எதுனா சொல்லுங்களேன்...."

"ம்ம்... அதுவும் சரிதான் செல்லம்...." என சற்றே யோசித்த தாத்தா வேலாயுதம், "யாழ்க்குட்டி.... நீ எலி கதை கேட்டிருக்கியா....?"
"ம்ம்.... எலின்னா Rat தான....?" என ஏதோ பெரிதாகக் கண்டு பிடித்தது போல் அகல்விழி விரிய கேட்டாள்.

"அட.... தமிழ் வார்த்தைகள கூட ஆங்கிலத்துல மொழிபெயர்த்தா தான் இன்றைய குழந்தைகளுக்கு புரியுற அவலம் வந்துடுச்சே.... " எனக் கலங்கியவரைத் தோளில் தட்டி, "என்ன தாத்தா.... நான் சொன்னது எதுனா தப்பா....?" கேட்டாள்.

"இல்ல... பட்டுக்குட்டி.... அது Rat தான் ...."
"ஹப்பாடா.... இன்னிக்கு தான் எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு கதை கேக்கப் போறேன்.... சொல்லுங்க தாத்தா... லவ் யு தாத்தா... " என அவர் கன்னத்தில் பிஞ்சு இதழ் பதித்தாள்.

அப்போது ஏதோ "கரக் ... கரக் .... " என சத்தம் கேட்க திடுக்கிட்ட யாழ்குழலி, " தாத்தா... தாத்தா....பேய் ... பேய் ... " என்றாள்.

"செல்லம்.... பயப்படாதம்மா... பேயில்ல அது.... வா, காட்டுறேன்.... " என எந்த அரவமும் இல்லாமல் சத்தம் கேட்ட சமையலறை பக்கமிருந்த அந்த பண்டக அறை (Store room)க்கு அழைத்துச் சென்றார் வேலாயுதம். தற்போது அந்த சத்தம் கூடுதலாய்க் கேட்க, குழந்தையின் முகத்தில் அச்சத்தின் உச்சம் தெரிந்தது.
"பயப்படாத...." என்றபடி அந்த இருட்டறையை வெளிச்சமாக்கினார் சுவரில் இருந்த சொடுக்கியைத் (Switch ) தட்டியபடி.

விருட்டென ஒடியது ஒரு பெரிய எலி வெளிச்சத்தைக் கண்டதும் அந்த கதவிடுக்கிலிருந்து. "பாத்தியா யாழ்க்குட்டி.... இப்ப அந்த சத்தம் நின்னுடிச்சி.... அங்க பாரு...." என பொக்கைவாயால் சிரித்தார்.

"ஹை.... ஆமாம் தாத்தா... " என எலி கரண்டிய அந்த பழைய நாற்காலியையே பார்த்துக் கொண்டிருந்தவளை தன்னறைக்கு அழைத்து வந்தார் வேலாயுதம்.

"என்னம்மா யாழ்.... ஏதோ பலத்த யோசனை....?"
"இல்ல தாத்தா... இந்தம்மாவுக்கு எலி தான் இப்படி சத்தம் போடுதுன்னு தெரியுமில்ல....? பின்ன ஏன் பேய்ன்னு சொல்லி ஏமாத்தி இருக்காங்க என்னை இதுவரை...!?" என அனிச்ச மலர் முகம் வாடிட , "ச்ச ச ....அம்மா சும்மா சொல்லிருப்பாங்கடா... இதுக்கெல்லாமா வருத்தப்படுறது...? சரி வா நாம கதைக்கு போவோம்....!" என்றது தான் தாமதம் அவள் பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

"ம்ம்... சொல்லுங்க தாத்தா... "
" ஒரு ஊர்ல நம்ம வீடு மாதிரியே ஒரு வீடு இருந்துச்சாம்...." என்றதும்
"ம்ம்.... அப்படியா ?" என்றாள் ஆர்வம் பொங்க,
"ம்ம்... ஆமாம்... சொல்லும் போது கவனமா கேட்கணும்.... சரியா...?" எனத் தொடர்ந்தார் கதையை தாத்தா.

"அந்த வீட்டுல ஒரு எலி இருந்துச்சாம்....!"
"இப்ப நாம பாத்தமே அதே மாதிரி எலியா தாத்தா....?"
"ஆமாம் பட்டுக்குட்டி....!"
"ஐ .... சூப்பர்.... சொல்லுங்க...." எனக் குதூகலமானாள். அவர் சொல்லச் சொல்ல மெல்ல மெல்ல தன் கற்பனை உலகுக்கு தேர் ஏறினாள் யாழ்குழலி.

அந்த நடுத்தர கிராமத்து வீட்டின் பின்னிருந்த பழைய உபயோகமில்லா பழுது பார்க்குமிடத்தில் ஒரு பூனை தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அந்த பாழடைந்த இடம் ரொம்ப பிடித்திருக்க பல ஆண்டுகளாய் அங்கேயே இருந்தது.

மகிழ்ச்சியாய்ப் போய்க் கொண்டிருந்த தருணத்தில் தான் புதிதாய் எலியொன்று வந்தது அந்த வீட்டு பண்டக அறையில் கிடைக்கும் உணவிற்குப் போட்டியாய்.

பொறுத்துப் பார்த்த பூனை அன்று, "டேய் எலி .... இங்க எதுக்குடா வந்த....? தேவையில்லாம என் சாப்பாட்டுக்கு போட்டி போடுற....? இதல்லாம் நல்லதுக்கில்ல.... ஒழுங்கு மரியாதயா அதோ தெரியற வயக்காட்டு பக்கமா போயிடு.... புரிஞ்சிதா....?"

" என்ன உனக்கு தான் இந்த வீடுன்னு எழுதி வச்சிருக்கா...? வீட்டு சொந்தக்காரரே ஒண்ணும் சொல்லல .... நீ எதுக்கு இப்படிக் கிடந்து கூவுற மாமே.... காலம் மாறிப்போச்சு.... நான் ஏன் உன்னப் பாத்து பயப்படணும்....? பூனையப் பாத்து பயந்ததெல்லாம் என் பாட்டன் காலத்துலயே போயிடுச்சி.... இப்ப மட்டும் கேட்க, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா....?" என்றதும் பூனைக்கு கோபம் தலைக்கேறியது.

"டேய்... எவ்ளோ திமிருடா உனக்கு ... என் கிட்டயே எகத்தாளமா பேசுற....?" முறைக்க, இதை ஏதும் மதியாமல் விருட்டென ஒடியது அந்த எலி கருவாட்டு வாசனையை முகர்ந்தபடி.

இப்படியே புகைந்து கொண்டிருந்த சண்டை ஒரு நாள் முற்றி அடிதடியாகியது.
எலி, "பூனையே..... உனக்கு இப்ப என்ன தான் பிரச்சினை....? நான் இங்க வந்ததே உயிருக்கு பயந்து தான் .... உன் சாப்பாட்டுக்கு போட்டியா இல்ல... சரியா..?" எனக் கண் கலங்கிட, "என்ன சொல்ற....?" கேட்டது பூனை நெகிழ்வானக் குரலில்.

"ஆமாம்... நீ சொன்னியே வயக்காடு, அது வானம் பாத்த பூமி .... மழையில்லாம போனதால விவசாயி பட்டினிக் கிடக்கான்... அதன் விளைவா எங்களுக்கும் தானியமெல்லாம் கிடைக்கல.... போதா குறைக்கு, பட்டினில அவங்க எங்களப் பிடிச்சு திங்க ஆம்பிச்சிட்டாங்க.... அதனாலத் தான் ... "

"அச்சச்சோ... அப்படியா சங்கதி.... சரி விடு ,நீயும் இனி இங்கயே தங்கிக்கோ.... ஆனா என் குட்டிகள்ட மட்டும் எச்சரிக்கையா இரு... அதோ அந்த செவலப் பய மட்டும் கொஞ்சம் முரடன்.... மத்த மூணு பேரும் நல்லவங்க தான்.." என்று புதிதாய் தாமசம் வந்த எலியை அறிமுகப் படுத்தியது பூனை வாஞ்சையுடன்.

செவலை மட்டும், "இந்த அம்மாவுக்கு புத்தியே இல்ல.... போயும் போயும் எலியோட சகவாசம் வச்சிருக்காங்க....க்கும்...." முறுக்கிக் கொண்டது.

எலியும் பூனைகளும் கூட்டாய் சேர்ந்து உணவுப் பொருட்களை உண்டு காலத்தைக் கழித்தன.
அப்படித் தான் ஒரு அடைமழை இரவில் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தாய்ப் பூனை, "செவலை.... இந்த எலி பய எங்கடா போனான்....? ரொம்ப நேரமா ஆளையே காணோம்..."
"ம்ம்... இங்க சாப்பாடு நல்லா இல்லன்னு பெரிய ஓட்டலுக்கு போயிருக்கும்.... ஹாஹ்ஹா...." கேலியாகச் சொல்ல, தாயிடம் பலமான முறைப்பைப் பார்த்ததும் துடுக்கான வாயை மூடிக் கொண்டது.

" ஏன் தான் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கரிசனமோ அவன் மேல .... அடச்சே.... இரு இரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவன அப்படியே அடிச்சி சாப்பிட்டுடறேன்...." மனதிற்குள் கருவிக்கொண்டது செவலை.

கொஞ்ச நேரம் பொறுத்த தாய்ப் பூனை, "சரி.... நீங்க நாலு பேரும் அமைதியா சேட்டைப் பண்ணாம தூங்குங்க... நான் இதோ வந்திடறேன்...." என மழையைப் பொருட்படுத்தாமல் வெளியே கிளம்பியது எலியைத் தேட.

"ம்மா... எங்கப் போறீங்க இந்த நேரத்துல...?"
"எலிப்பய எங்கப் போனான்னு தெரியல.... அதான்...."
"ம்ம்.... அது வசமா வீட்டு சமையலறைல வச்சிருந்த எலிப்பொறியில மாட்டிக்கிடுச்சி.... விடுங்க இம்சை ஒழிஞ்சது...." என்றது தான் தாமதம் "பளார்" என மூக்கில் பலத்தக் குத்து செவலைக்கு.

"ஏன்டா.... உங்கப்பன் மாதிரியே உன் புத்தியும் இப்படி கோக்கு மாக்காக இருக்கு.... அந்தாளு தான் எப்ப பாத்தாலும் எலி நம்ம எதிரிங்க.... அதக் கொல்லணும்னு வீராப்பா திரிவாரு.... இப்ப நீ கிளம்பிட்டியா...?"

"இல்லம்மா.... அது... அது...."
"டேய் செவல.... எலி நமக்கு உணவு ... அவ்வளவு தான்... எதிரிலாம் கிடையாது....புரிஞ்சிதா....? எனக்கு அவன் எதிரி இல்ல... " விருட்டெனக் கிளம்பியது எலியைக் காண.

மெல்ல பூனை நடை நடந்து சமையலறைக்குள் புகுந்ததும், எலிப்பொறியில் சிக்கிய எலியின் பரிதாப முகம் கண்டிட வருத்தம் கூடியது தாய்ப்பூனைக்கு.

" நாம தான் வேளா வேளைக்கு அழகா பங்குப்போட்டு சாப்பிட்டிருக்கோம்ல.... அப்புறம் ஏன்டா இப்படி....?" கேட்க,
"ரொம்ப பசிச்சது.... அதான் வேற வழி தெரியல...." அழத் தொடங்கியது எலி.

"சரி... சரி... கவலப் படாத.... தப்பிக்க வழி கிடைக்குதான்னு பாப்போம்...." என சுற்று முற்றும் பார்க்க அந்த துடைப்பம் கண்ணில் பட, மெல்ல அதைக் கவ்விக் கொண்டு வந்து எலிப்பொறியின் வாயை நெம்பியது பூனை.

அது சற்றே அசைந்து கொடுக்க ஆனந்தம் கூடிய பூனை லாவகமாக இழுக்க, " பட்... பட்." என இறுக்கமாகப் பூட்டிக் கொண்டது.
"அடச்சே.." தலையிலடித்துக் கொண்ட பூனை, வேறு எதையாவது எடுக்கலாம் என சுற்றி முற்றிப் பார்க்க, அங்கே நாற்காலி, பிளாஸ்டிக் வாலி, ஷூ என எல்லாமும் குதறிப் போடப் பட்டிருந்தன.

சற்றே யோசித்த பூனை, "டேய்... இதெல்லாத்தையும் நீ தான் இப்படி கண்டபடி கடிச்சி வச்சிருக்கியா...?"
"ஆமாம் பூனை.... என் பல் ரொம்ப வேகமா வளர்வதால இப்படி பண்ணினா தான் பாதிப்பு வராம இருக்கும்.... இல்லன்னா பல் நீளமா வளர்ந்து சாக வேண்டியது தான் சாப்பிட முடியாம.... " சோகமாகச் சொல்ல,

"அட... அருமைடா.... நல்ல யோசனை.... அப்படின்னா இப்பவும் அதையே செய்..."
"என்ன சொல்ற...? புரியல..."
"அடேய் முட்டாள்.... ஒரு ஆபத்து வந்ததும் மூளை மழுங்கிடும்னு இந்த மனிதர்கள் பேசுறதக் கேட்டிருக்கேன்... அதன்படி தான் நீயும் இப்படிக் கேள்வி கேட்கற..."
புரியாமல் எலி விழிக்க, "டேய் எலி.... அதோ தெரியுதே அது தேக்கு நாற்காலி.... அவ்வளவு பலமான நாற்காலியையே நீ இப்படி கரண்டி வச்சிருக்க.... இதோ இப்ப நீ மாட்டி இருக்கற சாதா பலகைல செய்யப்பட்ட எலிப்பொறி எம்மாத்திரம்... கடி.... நல்லா ஆன மட்டும் கடிச்சி கரண்டுடா...."

"என்ன சொல்ற.... முடியுமா என்னால....?"
"டேய் எலி... தன்னம்பிக்கை தான் நம்மோட பலமே .... அது இருந்தா போதும் தானா வாழ வழிப் பிறக்கும்....சரியா....?" என்றது பூனை.

அப்போது, ஏதோ வெளிச்சம் தெரிய பதறி ஓடி ஒளிந்துக் கொண்டது பூனை அருகே இருந்த பழைய மரக்கட்டிலுக்கு பின்.

சற்று நேரத்தில் ஜன்னல் வெளிச்சம் அணைய எலியிடம் வந்த பூனை, "ம்ம்... ஆரம்பி.... நல்லா கரண்டு.... விடியறதுக்குல்ல தப்பிச்சாகணும்..." என்றிட எலி கரண்டத் தொடங்கியது மிகுந்த நடுக்கத்துடன். ஆனால் தைரியம் வரவில்லை. மீண்டும் சோர்ந்து போனது.

"பூனை.... என்னால முடியல... பேசாம நீ வாழ்விடம் போயிடு .... எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்லு.... இனி நான் உயிர் வாழறது ரொம்பக் கஷ்டம் ...." எனக் குலுங்கிக் குலுங்கி அழுதது.

"அடப்போடா முட்டாள்... வல்லவனுக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்டா.... உனக்கு உன் பல்லு தான் ஆயுதம் ... ஏன்டா புரிஞ்சிக்க மாட்ற....?"

"இல்ல பூனை... எனக்கு நம்பிக்கை இல்ல...என் விதி முடிஞ்சிடுச்சி, நீயாவது போய் குட்டிங்களோட நல்லா வாழு...." கண்ணீர் விட,
"அடிச்சேன்னா பாரு .... இந்த மாதிரி "என்னால முடியாது..." ன்னு எதிர்மறை எண்ணத்த அடியோட தவிர்த்து " முடியும்"னு நம்பினாத் தான் நல்லா வாழ முடியும்..."

"என்னமோ நீ சொல்ற... ஆனா, எனக்கு தான் நம்பிக்கயே வரமாட்டுது..."
"சரி... உனக்கு நம்ம வாழ்விடத்துக்கு பின்னால இருக்கற அல்லிக்குளம் தெரியுமா....?"

"ஏன் தெரியாம... நல்லா தெரியுமே.... நிறைய அல்லிப் பூக்கள் பூத்திருக்கும்... தவளைங்க நிறைய பாட்டு பாடும் நிலா வெளிச்சத்துல ... பார்க்கவே ரொம்ப ரம்மியமா இருக்குமே..."

"நல்ல கலாரசிகன்டா நீ.... அப்புறம் ஏன்டா இப்படி நம்பிக்கை இல்லாம பேசுற...?"
"ம்ம்... ஆமாம் இப்ப எதுக்கு அல்லிக் குளத்தப் பத்தி கேட்ட...?"

" சொல்றேன்... அந்த குளத்துல ஒரு தவளை ரொம்ப நாளா இருக்கு.... சில மாசங்களுக்கு முன்ன தண்ணி வரண்டதால இங்க வீட்டுப் பக்கமா வந்துச்சு... ஜன்னல்ல உக்கார்ந்திருந்த அது ஒரு குவளைல தண்ணியப் பாத்ததும் பேரானந்தம்.... "தொபுக்கடீர்னு " ஏதும் யோசிக்காம குதிச்சிடுச்சி.... கொஞ்ச நேரம் சந்தோசமா நீந்திட்டு அப்படியே தூங்கிடுச்சி.... சட்டுன்னு எழுந்ததும் தான் ஞாபகம் வந்துச்சு, "இப்ப எப்படி வெளியப் போறது...?" ன்னு ...."

"ஐய்யய்யோ.... அப்புறம் என்னாச்சு...?"
"ம்ம்... சொல்றேன்.... கொஞ்ச நேரம் இங்கும் அங்கும் நீந்திட சற்றே நுரையா வர ஆரம்பித்து... ஏதும் புரியாம உத்துப் பாத்ததும் தான் தெரிந்தது அது வெறும் தண்ணி இல்ல... மோர்ன்னு...உடனே பலமான மட்டும் நீந்தரத விடாம சுத்தி சுத்தி வந்துச்சு... இப்படியே ரொம்ப நேரமா நீந்த, ஏதோ ஒரு கெட்டியான படிமம் (வெண்ணெய்) ஒன்று உருவாக... அதன் மேலே ஏறி அமர்ந்தது..."

"அப்புறம்...?"
"என்ன அப்புறம்....ன்னு கேட்கற....? இதோ பாரு உயிரோட தான் இருக்கேன்... அது மேல ஏறி லாவகமா தப்பிச்சிட்டேன்....என்னால முடியும்... இத்தா தண்டியா இருக்க, உன்னால முடியாதா எலிப் பயலே...?!" என்றது அதே தவளை.

"அட... அப்படியா.... கேட்க நல்லா இருக்கே...."
"போதும்... பல்ல இளிக்காம பூனை சொன்ன வேலையப் பாரு ... இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் உதிச்சிடுவான்.... ம்ம்... சீக்கிரம்...." தவளை அதட்ட, எலி வேக வேகமாய்க் கடிக்கத் தொடங்கியது. அரை மணிக்கூறில் எலிப்பொறியின் ஒரு பக்க சுவரில் பெரிய ஓட்டை.
"டேய்... வேலைல உன் உருவத்தையே மறந்துட்டியா....? போதும்டா அந்த ஓட்டை வழியா வெளிய வந்திடு...." என்றது தான் தாமதம் ,குதூகலமாய்த் தப்பித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடி வந்தது எலி.

மறுநாள் காலையில் வந்து பார்த்த வீட்டு சொந்தக்காரருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது எலிப்பொறியின் நிலையைப் பார்த்ததும்.

"அடச்சே.... " என கன்னத்தில் கை வைத்து சோகமாக கீழே அமர்ந்தார் எலி கிடைக்காத வெறுப்பில்.

பூனை, தவளை இருவரிடமும் "நன்றி" பாராட்டியது எலி தன் உயிரைக் காப்பாற்றியதற்கு.
"இப்படி தன்னம்பிக்கை மட்டும் தான்மா எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நமக்கு வெளிச்சம் தரும்....வெற்றி தரும்....என்ன யாழ்குழலி.... கதை பிடிச்சிருக்கா.... இப்ப போய் தூங்கலாமா....?!"

"ம்ம்... சூப்பர் தாத்தா...." என மீண்டும் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டவளை அழைக்க அம்மா வந்தாள்.

"குழலி... என்னடி இன்னும் தூங்காம தாத்தாவ தொந்தரவு பண்ணிட்டிருக்கற....?"
"இல்லம்மா.... கதை கேட்டிட்டிருந்தேன்...."

"சரி... சரி... வா போய் தூங்கலாம்..."
"அம்மா... போம்மா உன் பேச்சு கா ..."
"எதுக்குடி தங்கம்...?"

" கரக்... கரக்... ன்னு வர்ற சத்தம் எலி தான ...ஏன் பேய்ன்னு சொல்லி ஏமாத்துன....? அதுக்கு தான்..." என்றிட அசடு வழிந்த அம்மா, "அது... உன்ன தூங்க வைக்க சும்மா சொன்னேன்டி பட்டுக்குட்டி.... பேய்ன்னு ஒண்ணு இல்லவே இல்லடி... போதுமா தெய்வமே..."

"ம்ம்.... அந்த பயமிருக்கட்டும்..." என்றபடி குட்டி தேவதை முறைத்ததும்
சிரிப்பலை ஓய சிறிது நேரமானது.
விடியற்காலையில் எழுந்த யாழ்குழலி மீண்டும் அதே " கரக்... கரக்...." சத்தம் கேட்க அத்திசையில் போனவள் அதிர்ந்தாள். அங்கே எலிப்பொறிக்குள் எலியொன்று கரண்டிக் கொண்டிருக்க,

"அடப்பாவி.... திருட்டுப் பயலா நீ.... தாத்தா சொன்னக் கதைய நீயும் கேட்டிட்டிருந்தியா.... அதான் இதக் கடிச்சிட்டிருக்கியா....?" என தன் பிஞ்சு விரலால் விரட்டிக் கொண்டிருந்தாள்.

எதோ சத்தம் கேட்க, மெல்ல அந்த பண்டக அறைக்குள் போனவள் வெளியே வந்து, "சரி... சரி.... இதான் கடைசி எச்சரிக்கை.... இனிமே சமையலறை பக்கம் வரவே கூடாது...." என்றபடி எலிப்பொறியைத் திறந்துவிட்டாள்.

சிறிது தூரம் ஓடிய அந்த எலி, சற்று நின்று பார்த்து விட்டு பண்டக அறைக்குள் ஓடியது.
இதைப் பார்த்த அம்மா, "ஏய்... என்னடி பண்ற இங்க ... எதுக்குடி திறந்து விட்ட ...அது பண்ற அட்டகாசத்த விட நீ தான்டி ரொம்பப் பண்ற...?" என முறைக்க,

"சாரிம்மா...." என்றவள் அம்மாவை அழைத்துக் கொண்டு பண்டக அறைக்குள் நுழைந்து அதைக் காட்டினாள்.
அதிர்ந்த அம்மா, ஏதும் பேசாமல் யாழ்குழலியை வாரியணைத்து முத்தமிட்டாள்.

"குட்டில்லாம் பாவம் தானம்மா....அதான் எலிய திறந்து விட்டேன்....சாரிம்மா...." என்றவள் விழிகள் பனித்திருந்தன.
அந்த நாற்காலிக்கருகில் 6 கண் திறக்கா எலிக்குட்டிகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. தாய் எலி ரெண்டு எலிக் குட்டிகளை வாயில் கவ்விக் கொண்டு வேறிடம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.( நிறைந்தது)

யாழ்க்கோ லெனின்
நெய்வேலி 
Last edited by a moderator:
Top